Wednesday, July 29, 2009

ஆத்தா மனமிறங்கு

ஆடி பிறந்ததடி
அடிமனசு தவிக்குதடி
அந்த நாள் நினைப்பினிலே
அடி வயிறு கலங்குதடி..

கஞ்சி குடிச்சாலும்
கந்தையுடுத்தாலும்
பொன்னாத்தா உனக்கு
பொங்க வெக்க மறந்ததுண்டா?

வேப்பிலையுடை உடுத்தி
வேல் அலகு தான்குத்தி
வெறுங்காலில் தீமிதித்து
வெண்பொங்கல் தான் படைச்சோம்.

தமிழ்காத்த மறவனவன்
தயவில் இருக்கையிலே
தப்புனதே இல்லையடி
தாயுனக்கு பொங்கலிட‌

உண்ண உணவில்ல‌
உறங்கிடக் கூரையில்ல‌
உடுக்க மறைவில்ல‌
உனக்கெங்க பொங்க வைக்க‌?

பாவிச் சிங்களவன்
பாசாங்குதான் நம்பி
பாரெல்லாம் அவன் பக்கம்
பாவமெமக்காரிருக்கா?

மகிசாசுர வதம் செய்த‌
மாரியாத்தா உனக்கு
மகிந்த வதம் செய்ய‌
மனமில்லயே தாயி.

அம்மான்னு அலறுனப்போ
ஆதரவாய் ஏன் வரல?
அழிச்சதெல்லாம் போதாதா
அம்மையாய் ஏன் வார?

உனக்கும் பயமாடி
உருப்படாத சிங்களவன்
உன்னையும் துகிலுரிச்சி
உள்ளார வைப்பான்னு?

அதனால் தானோ
அப்பாவி எங்களையே
அலக்கழிக்க மனம்கொண்டு
அம்மையாய் நீ வார?

வெட்ட வெளியினிலே
வேப்பிலைக்கு வழியுண்டா
மானம் போய் நிக்குறப்போ
மஞ்சளுக்கு வழியுண்டா

சுற்றமெல்லாம் போய்
சுடுகாடாய் இருக்குதடி
சுத்த பத்தமாய் இருக்க‌
சுருக்கமாய் வழிசொல்லு.

நாலும் தெரிஞ்சவ நீ
நானென்ன சொல்லுறது
நாங்க இருந்தாத்தான்
நீ சாமி தெரிஞ்சிக்க!
***

11 comments:

யூர்கன் க்ருகியர் said...

அங்கே மக்கள் வீழ ,,, இங்க சாமிக்கு விழா எடுக்கும் "மனிதாபிமானிகள்கள்"தானே நம் தமிழ்நாட்டு மக்கள்.

Unknown said...

///அம்மான்னு அலறுனப்போ
ஆதரவாய் ஏன் வரல?
அழிச்சதெல்லாம் போதாதா
அம்மையாய் ஏன் வார?///

வார்த்தை வர்ல

Unknown said...

அருமை....!! அருமை...!! இது ஒருவகை கிராமியப்புற பாடலைச் சேர்ந்ததா.....??

கலகலப்ரியா said...

என்ன.. வைரமுத்து நெடி பலமா வீசுது.. அந்தய்யா கவிதைய உல்டா பண்ணி போட்டீங்களா.. ஆனாலும் பரவால்ல நல்லாத்தான் இருக்கு.. பேஷா ஓட்டு போடலாம்.. ஆனா தமிழ் இஷ்ஷ் காணோம்.. நடத்துங்க சார்..

vasu balaji said...

வாங்க யூர்கன், கீத். நன்றி.

vasu balaji said...

/ லவ்டேல் மேடி said...

அருமை....!! அருமை...!! இது ஒருவகை கிராமியப்புற பாடலைச் சேர்ந்ததா.....??/

தெரியலைங்க. அச்சம்தவிர்ப்போம்ல மஹேஸின் இடுகையில் பார்த்த வைரமுத்துவின் கவிதையின் தாக்கம். பாராட்டுக்கு நன்றி.

vasu balaji said...

/ கலகலப்ரியா said...

என்ன.. வைரமுத்து நெடி பலமா வீசுது.. அந்தய்யா கவிதைய உல்டா பண்ணி போட்டீங்களா.. ஆனாலும் பரவால்ல நல்லாத்தான் இருக்கு.. பேஷா ஓட்டு போடலாம்.. ஆனா தமிழ் இஷ்ஷ் காணோம்.. நடத்துங்க சார்../

அய்யோ பெரிய பாராட்டுங்க இது. இத படிச்சி வைரமுத்துவின் கவிதை மாதிரி இருக்குன்னு அடையாளம் தெரியுதா. உல்டால்லாம் இல்லைங்க. நேற்றைய செய்தி. 5000 பேருக்கு முகாமில் அவங்க இருக்கிற நிலமைல அம்மை நோய்னு. சாமி மேல கோவம். அவ்வளவுதான்.
பாராட்டுக்கு நன்றி.

sakthi said...

சொல்ல வார்த்தையில்லை பாலா

Maheswaran Nallasamy said...

கலக்குங்க..ஆத்தா-ன்னு சொன்னது ஜெயலலிதா-வ இல்லயே.

vasu balaji said...

நன்றி மஹேஸ்.

vasu balaji said...

நன்றி சக்தி.