சென்னை வியாசர்பாடி ஜீவாவிலிருந்து பெரம்பூர் வரை ரயில் பாதையோடு வரும் பெருவீதியது. இரண்டுக்கும் நடுவே அடர்ந்த புதரும், அதனடி நீரும், விஞ்ஞான அதிசயமாக தவளையும் கொசுவும் ஒன்றாய் இனவிருத்தி செய்யும் இடம். அதனை ஒட்டியதோர் அகலமான நடைபாதை. அதன் கீழ் பெருங்கால்வாய். இரவில் திறந்திருக்கும் ஒரு சில மூடிகளைத் தள்ளிக் கடக்கையிலேயே கொதிகலத்தின் சூட்டோடு, நாற்றமும் முகத்திலறையும்.
அந்தப் பாதையின் ஒரு முன்னூறு மீட்டர் தூரத்தில் ஓர் உலகம். தினமும் மாலை ஏழிலிருந்து எட்டேகால் வரை நான் அலுவலகத்திலிருந்து திரும்பும் பல சமயங்களில் என் மனதில் பெரும் தாக்கத்தையும், பல கேள்விகளையும் எழுப்பும் ஓர் உலகம். அதிலும் புதன் கிழமை எனக்கு பெரும் நரகம் அக்காட்சிகள்.
ஆம்! தெலுங்கு பேசும் குறவர்கள் என நினைக்கிறேன். என்ன வேலை செய்கிறார்கள். என்ன பிழைப்பு. எதுவும் தெரியாது. சில நாட்கள் கட்டு கட்டாய் புற்கள் இருக்க துடைப்பம் செய்வார்கள். சில நாட்களில் ஒட்டடைக்குச்சிகள் கட்டுவார்கள். பெரும்பாலும் நான் காண்கையில் ஒரு சின்ன குண்டானில் இரண்டு அரைச்செங்கல் அடுப்பில் சமையல். காகிதம் மடித்து கல்லால் தட்டி மசாலா பொடிப்பார்கள். எப்போதாவது பிடிபட்ட பூனையோ, கால்வாய்களில் கிடைக்கும் கருத்த மீனோ ஒரு சில குடும்பங்கள் கூடி நறுக்கிக் கொண்டிருக்கும். ஒரே ஒரு நசுங்கிய அலுமினயத் தட்டில்தான் அனைவருக்கும் சாப்பாடு.
முப்பது குடும்பங்கள் இருக்கலாம். ஒரு பார்வையற்ற மூதாட்டி குத்துக்காலிட்டு, பழைய புல்புல்தாராவில் இசைக்கும் ‘ப்யார் க்யாதோ டர்னா க்யா’வும், ஒன்பது அல்லது பத்து வயதான சிறுமி உச்சக் குரலில் சுருதி தப்பி தன் தம்பி தங்கைகளுக்கு ஒரு இத்துப்பொன ஆர்மோனியத்துடன் சொல்லிக் கொடுக்கும் ‘ஏடு கொண்டல சாமி எக்கடுன்னாவையாவும்’ தாண்டிவருவதென்பது பெரும் ப்ரயத்தனம். பசிக்கு அழும் ஒரு வயதுக் குழந்தையை ‘ஸம்பேஸ்தா’ என்று பளிச்சென அறையும் அக்குழந்தையின் தாய்க்கு வயது 15 இருந்தால் அதிகம். ஒன்றல்ல இரண்டல்ல அத்தனைக் குடும்பத்திலும் இத்தகைய குழந்தைத் தாய்கள் குழந்தைகளுடன்.
அழுக்கு லுங்கியும் அதைவிட அழுக்கான சட்டையும் தாடியும் தலைமுடியும் கொண்ட கணவன்மார். தவறாமல் ஒரு செல்ஃபோன். எப்படி சிம்கார்ட் கிடைக்கும்? எந்த முகவரி அத்தாட்சி கொடுத்திருப்பார்கள்? எங்கே சார்ஜ் செய்வார்கள் என்ற குறுக்குக் கேள்வி குடைந்தாலும், சில நாய்கள் குடித்துவிட்டு தட்டில் அன்னமிட்டு, குழம்பு ஊற்றி நீட்டும் மனைவியை ஒரு கையில் தட்டை வாங்கியபடி மறுகையால் ‘முக்கலெக்கடவே லஞ்சா!’ என அறைகையில் எட்டி மிதிக்கத் தோன்றும்.
இவையொன்றும் அறியாமல் அசந்து தூங்கும் பெருசுகள். கொஞ்சம் வசதியுள்ளவர்கள் எப்படியோ நான்கு கம்பி நடுவில் நட்டு கட்டி வைக்கும் கொசுவலைகள் அல்லது சீலைத் தடுப்புகள். கும்பலாய் அழுக்காய் விளையாடும் குழந்தைகள். வெள்ளிக் கிழமைகளில் இரந்து கொண்டுவந்த நீரில் குளியல். எதிர்ப்புறமிருக்கும் தூங்கு மூஞ்சி மரத்தடியில் படுக்கக்கூடாது என்ற விஞ்ஞானம் மறைந்த ‘முசலோள்ளு மாட்ட’(மூத்தோர் சொல்) அறிந்தவர்களுக்கு கால்வாய் மூடியருகில் உறங்கக் கூடாது என்ற மெய்ஞ்ஞானம் சொல்வது யார்?
குல்ஃபி ஐஸ் விற்பவன் தவலையை உலுக்கி, கரைந்த ஐஸ் நீரை கீழே ஊற்ற விடாமல் உப்பு கலந்திருந்தாலும் ‘அன்னையா! தீண்ட்லோ பொய்’ (அண்ணா! இதிலே ஊற்றுங்கள்) என்று குழம்பு வைத்த சட்டியை தூக்கிக் கொண்டு வந்து கெஞ்சும் குழந்தைகள். சில நேரம் இரக்கமற்ற இயற்கை இவர்கள் சமைக்கும் நேரம் மழையாய் வருகையில் உழைத்த காசுக்கு வாங்கிய அரிசி நனையாமல் சுற்றியெடுத்து, ஜீவா இரயில் நிலைய நடைமேடையில் அழும் குழந்தைகளோடு அடைக்கலம் புகும் இந்தக் குடும்பங்கள்.
இரக்கம் இத்துப் போன இப்பூமியிலும் ஒரு சில நல்ல உள்ளங்கள் இவர்களுக்காய், இச்சமயங்களில் இட்டிலி பொட்டலம் கொண்டுவருமென்ற நம்பிக்கையில் காத்திருக்கும். ஒரு குடும்பத்தின் மொத்த உடமைகளையும் ஓரிரு சிமெண்ட் பைக்குள் அடக்கி விடுவார்கள். காலையில் விடிவதற்குள் இடம் சுத்தமாகிவிடும். ஆம்! படு சுத்தமாகிவிடும். சமைத்ததோ, உறங்கியதோ, குடித்துவிட்டு கக்கியதோ ஒரு அடையாளமும் இருக்காது. எதிர்ப்புறம் கைக்குழந்தைக்காரக் குழந்தைகள் ஒரு சிலர் மட்டும் சோள ரொட்டி சுட்டு அடுக்கிக் கொண்டிருப்பார்கள் ஒரு அழுக்குத் துணியில். பதினாறாய் மடித்து மெத்தென ஒரு மார்க்கமாய்க் கட்டிய தூளியில் கருவிலிருப்பதாய் முடங்கி உறங்கும் பிஞ்சு.
சனி ஞாயிறுகளில் கள்ள இரயிலோ, நல்ல இரயிலோ ஏறி ஊருக்குச் சென்றுவிடுவார்கள் போலும். அந்த நேரம், அதிலும் ஞாயிறுகளின் மாலைகளில், உண்டோ இல்லையோ அது ஒரு புறமிருந்தாலும் இருக்கிறதென நம்பி குழந்தைகளுடன் இவர்கள் வசிக்கும் இடத்தில், சூனியம் வைப்பவர்கள், கழிப்பு எடுப்பவர்கள், நகையும் நட்டுமாய் வந்திருந்து இந்த எழவெடுத்து படையலுக்கு வைத்த பிரியாணியும், கறிக்குழம்பும் அதே இடத்தில் தின்று கழித்து, குடித்து, குட்டிச்சாத்தான் பொம்மை, மயிர்க்குப்பை, கோழிரத்தம், இத்தியாதி கழிசடைகளை விட்டுப் போகும். இந்த வீடுள்ள நாய்களுக்குத் தெரியுமா? இந்தக் கழிசடைகளை சுத்தம் செய்து இங்கே உண்டு உறங்க வானம்பார்த்த குடிகள் வருமென்று?
பிறந்த ஊரில் (அப்படி ஒன்று இல்லாமலா போய்விடும்?) பிழைக்க வழியின்றி எந்த நம்பிக்கை இவர்களுக்கு வாழ வழி சொல்கிறது? எப்படிப் பார்த்தாலும் ஒப்பீட்டுக்கு வழியேயின்றி உறங்க ஓர் கூரையும், உண்ண ஓர் இடமும், ஒதுங்க மறைவும் இருந்தும் அமைதி தொலைத்த வாழ்வும், ரோகமும் எப்படி நமக்குப் பெரிதாய்த் தோன்றுகிறது. இவர்கள் ஏழைகளா? பெருந்தனக்காரர்களா?
நிற்க! புதன் கிழமை நரகம் எனக்கு எனக் குறிப்பிட்டது இவர்களைத் தாண்டி ஒரு ஒரு ஐம்பது சதுரடிக்குள் தவறாமல் கட்டப் பட்டிருக்கும் எருதுகள். ஏதோ ஒரு கிராமத்தில், ஏதோ ஒரு குடும்பத்துக்கு உழைத்து ஓடாய்த் தேய்ந்து, கடனுக்கோ, கலியாணத்துக்கோ காசாகி, தரகனிடம் கைமாறி, மைல் கணக்கில் நடந்து வந்து அடுத்த நாள் வெட்டுப்பட காத்திருக்கும் ஜீவன்கள்.
பிரித்துப் போட்ட புற்களை மேய்ந்தபடி நிற்கும் இவைகளின் கண்ணில் தெரியும் சோகம் என் கற்பனையா? மிருகங்களுக்கு உள்ளுணர்வு அதிகமாமே? இல்லாவிடினும் தன் வாழ்வின் கடைசி நாள் என்ற உணர்வு தோன்றாமலா போய்விடும்? இதோ இவகைகளை வாரா வாரம் வாங்கி வந்து அடிக்குக் கொடுத்து, குடித்து உருள்கிறார்களே நான்கைந்து பேர்.
சக்கியடிப்பவனுக்கான சாப விமோசனம் இவர்களுக்கு உண்டா? இதோ இப்போது தூங்கிவிடுவார்கள் அல்லது மயங்கிவிடுவார்கள். புல்தின்ற இவைகளுக்கு இந்த வெக்கையில் தாகமெடுக்காதா? காலையில் விடியுமுன் காசு பார்க்கும் அவசரத்தில் ஓட்டிச் செல்வார்களே. அப்போது ஏதும் கொடுப்பார்களா இவைகளுக்கு? ஒரு நாளும் அம்மா என்ற குரல் இவைகளிடம் கேட்டதில்லை. ஒரு பெருஞ்சோகம் சூழ்ந்திருப்பதாய்த் தோன்றும்.
இன்று ஒரு கூழைக் காளை பார்வையில் கொன்றது என்னை! வெள்ளைக் காளை. துளி அழுக்கில்லை. கண்ணைச் சுற்றி மட்டும் மையெழுதினாற்போல் ஒரு கருப்பு. பசுவின் சாயலில் அழகானதோர் முகம். கடந்து வருகையில் ஓரிரு நிமிடம் நான் நிற்க, அது புல்லுண்பதையும் நிறுத்திப் பார்த்த பார்வை இதயத்தின் உள்வரை ஊடுருவி வலித்தது. நாளை காலை அலுவலகம் செல்கையில் ஏதோ ஒரு மூன்று சக்கர வண்டியில் தோலிழந்து போகும் இதைக் கடக்கலாம். இன்னோர் வண்டியில் போகும் தோலில் ஒன்று இதனோடதாயிருக்கலாம். ஆட்டுத் தொட்டி தொடங்கி படாளம் வீதிகளில் அடிக்கொரு கடைவாசலில் ‘சுவையான சூடான பீஃப் பிரியாணியில்’ துண்டாயிருக்கலாம்.
வாழ்க்கை எது? அந்தக் குறவர்களைப் போல் எளிமையாய் வாழ்வதா? இல்லை இந்த அடிமாடுகளாய் செத்தும் உணவாய் வாழ்வதா? அதுவுமின்றி இதுவுமின்றி பலரும் கடந்து போகும் ஒன்றை உள்வாங்கி கலங்குவதோடு உருப்படியாய் எதுவும் செய்ய முடியாமல், முயலாமல் இப்படி இருப்பதா? எது?
(சக்கியடிப்பவன்=சிறைச்சாலையில் தூக்குத் தண்டனைக் கைதி நிற்கும் பலகையை இழுப்பவன். )
59 comments:
வடை எனக்கு..ஹா..ஹா
இருங்க..படிச்சுட்டு வரேன்..
வாழ்க்கை எது? அந்தக் குறவர்களைப் போல் எளிமையாய் வாழ்வதா? இல்லை இந்த அடிமாடுகளாய் செத்தும் உணவாய் வாழ்வதா? அதுவுமின்றி இதுவுமின்றி பலரும் கடந்து போகும் ஒன்றை உள்வாங்கி கலங்குவதோடு உருப்படியாய் எதுவும் செய்ய முடியாமல், முயலாமல் இப்படி இருப்பதா? எது?
//
இதுமட்டும் அறிந்துகொண்டால்.. உலகிலே சண்டை சச்சரவு, இருக்காதே பாஸ்...
நவீன நாகரீக மனிதர்களை விட..குறவர்களின் வாழ்க்கை எவ்வளவோ மேன்மையானது..
அதுக்கு ஈடு இணையே கிடையாதுங்க பாலாண்ணே...
வெகுளியாய் இருந்து எளிமை காப்பவன் பாக்கியவான்....
ரொம்ப நாளா.. இதுபோல் ஒன்னு எழுத மாட்டீங்களான்னு நினைச்சிட்டிருந்தேன்
மிக நேர்த்தியாக பதிவு செய்தமைக்கு ஒரு வணக்கம்
பேராசையும், பொறாமையும் அற்றதுதான் அது.
kalanga viakkum, pathivu saar. vaalkkai ethu ? ithuku vidai theriyaamalthan naam irukkirom
வாழ்க்கை எது , அவர்கள் ஏழைகளா பெருந்தனக்காரர்களா , அவர்களுக்கு சந்தோசம் என்று ஓன்று இருக்கும் தானே.. . ரொம்ப மனதைப் பாதிக்கிற பதிவு.
ஆஹா அருமை!
இத பத்தி எனக்கு தோணுறத நான் தனியா ஒரு இடுகை போட்டு சொல்லுறேங்க..
எனக்கும் நம்ம பட்டா சொன்ன மாதிரி.. நாம் வாழும் வாழ்வை விட அவர்கள் எவ்வளவோ மேல் என்றுதான் தோன்றுகிறது..
ஆனால் லாரிகளில் கட்டி எடுத்துப் போகும் மாடுகளைப் பார்க்கும்போது ஒரு விவசாயி மகனான எனக்கு கண்ணில் ரத்தம் வரும்...
நீண்ட நாளைக்கப்புறம் என்னை வெகுநேரம் கட்டிபோட்ட பதிவு இதுதான்..
உங்களுக்கு என் வந்தனங்கள்...
ஓடும் நீரின் மேற்பரப்பு போல் மேலெழுந்த வாரியாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கைச் சூழலில், தாண்டிச் செல்லும் தருணங்களில், கண்ணில் படும் காட்சிகளால் பாதிப்படைவதும், அதன் பொருட்டு தன் வருத்தத்தையும், இயலாமையும் நினைவு கூர்ந்து அதை பகிர்ந்ததும் பாராட்டுக்குரியன.
வாசிப்பாளனை கைபிடித்து நிகழ்வு தளத்திற்கு அழைத்துச் சென்று காட்டிய உங்கள் எழுத்து நடையை ரசிப்பதா? விளிம்பு நிலை மனிதர்களின் நிலைமைகளை எண்ணி செத்துப் போன மானுடத்தை உயிர்ப்பிக்க எங்காவது வேண்டுவதா? என்ன செய்வதென்று தெரியவில்லை.
இயலாமைகள் இயல்பாய் மாறிய சூழ்நிலையில், இரக்கம் கூட இரந்துதான் பெறவேண்டியுள்ளது.
மிக நேர்த்தியான, மனதை அசைத்துப் பார்க்கும் பதிவு.
நானும் இது போல குறவர்களை புரசை, சூளை சந்திப்புகளில் பார்த்ததுண்டு.. அவர்களைப் பற்றி எனக்கு எழுந்த கேள்விகள் பல இந்தப் பதிவில்..
அக்மார்க் பதிவு.
நானும் இது போல குறவர்களை பார்த்ததுண்டு.
மிக நேர்த்தியாக பதிவு.
நிஜமாவே இடுகை கலங்கடிக்கிறது. நானும் பல வருடம் பெரம்பூருக்கும் ஜீவாவுக்கும் இடையே பயணித்தவன் என்ற முறையில் கட்டுரையோடு நெருங்கிவிட்டேன்.
நிதர்சனம் தலைவரே..பல்லாவரம் கண்டோண்ட்மெண்ட் அருகிலும் இருக்கிறார்கள்
ஒவ்வொரு வரியும் நிதரிசனம்!
//காலையில் விடிவதற்குள் இடம் சுத்தமாகிவிடும். ஆம்! படு சுத்தமாகிவிடும். சமைத்ததோ, உறங்கியதோ, குடித்துவிட்டு கக்கியதோ ஒரு அடையாளமும் இருக்காது//
அழுக்கானவர்கள் என்று பலரும் நினைத்து ஒதுக்கும் இவர்களின் தூய்மை மெய்சிலிர்க்க வைக்கிறது, கொஞ்சம் வெட்கப் பாடவும்வைக்கிறது!
உங்கள் பதிவு நன்றாக உள்ளது.
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி
Link:www.secondpen.com/tamil/what is jaiku?
பாலா அண்ணே,
இதிகாசங்கள் இப்படியான நிஜ சம்பவங்களாலும் நிறைக்கப்படலாம்.
நிதர்சனம் அண்ணா...
நீண்ட நாள் கழித்து அழுத்தமாக வாசித்தேன்....
பாலா..என்னத்தைச் சொல்ல...அந்த வாயில்லா ஜீவன்களின் கண்கள் பேசுமே...அதைக் காணச் சகிக்காமல்..நாமும் கடந்துக் கொண்டுதான் இருக்கிறோம்..
வாழ்க்கை எது? அந்தக் குறவர்களைப் போல் எளிமையாய் வாழ்வதா? இல்லை இந்த அடிமாடுகளாய் செத்தும் உணவாய் வாழ்வதா? அதுவுமின்றி இதுவுமின்றி பலரும் கடந்து போகும் ஒன்றை உள்வாங்கி கலங்குவதோடு உருப்படியாய் எதுவும் செய்ய முடியாமல், முயலாமல் இப்படி இருப்பதா? எது
அது தெரியாது.. ஆனால் இந்தப் பதிவு அந்த இடத்திற்கே கூட்டிப் போய் விட்டது
நிஜமாவே பதிவு கலங்கவைத்துவிட்டது...
உங்களிடம் சந்தோசமாய் பேசிவிட்டு இடுகையிட்டதை அறிந்து அவசரமாய் படிக்க, என்னை அப்படியே கட்டிப்போட்டு மனதை இறுக்கி.... சொல்ல வார்த்தைகள் இல்லை அய்யா! ஆறும் ஐந்தும் நானும் .... உள்ள விஷயங்களுக்கேற்ற தலைப்பு... உங்களின் இடுகைகளில் மிகச் சிறந்தவைகளில் இதுவும் ஒன்று என்பேன்...
இந்த இடுகைக்காக என் ஆசானுக்கு பனித்த கண்களுடன் இந்த சிஷ்யனின் நன்றி...
பிரபாகர்...
ஆமான் சார்! பல நேரம் இது மாதிரி மனிதர்களைப் பார்க்கும் பொது எப்போது எல்லோருக்கும் ஒரு நல்வாழ்வு கிடைக்கும்னு தோன்றும்.
நமது வருமானத்திற்குள் நமது அன்றாட வாழ்கையை ஓட்டி கொள்ள நினைப்பவர்கள் எங்கிருந்தாலும் சந்தோஷமாக வாழ்வார். இதுக்கும் மேல வேற ஒரு வாழ்கையை பிடிக்கணும்னு ஓட ஆரம்பிச்சா காலம் பூர நிம்மதியில்லாம ஓடிகிட்டு இருப்போம். வாழ்கை ஒரு போராட்டம் தான் சார். போராடி தான் ஆவணும்.
வாழ்வின் எல்லா அங்கங்களையும் (சிரிப்பு,நடப்பு, இன்பம், துன்பம்) நல்லா எழுதுறீங்க. நன்றி.
முகல் ஈ ஆஜம் பாடல்... பியார் கியா தொ டர்னா... அந்தப் படம் எடுத்து ஐம்பது வருடம் ஆனதைக் கொண்டாடுகிறார்களாம்... சிம்கார்ட், அட்ரஸ் சந்தேகங்கள் நியாயமானவை. அடிமாடு மேட்டர் மனதைப் பிழிந்தது.
கூர்ந்து கவனித்திருக்கிறீர்கள் ஐயா! அதனால் உங்கள் கூடவேயிருந்து காட்சிகளோடு ஐக்கியமாக முடிகிறது; சற்றே மனம் கனக்கிறது என்பதும் உண்மையே!
//ஆனால் லாரிகளில் கட்டி எடுத்துப் போகும் மாடுகளைப் பார்க்கும்போது ஒரு விவசாயி மகனான எனக்கு கண்ணில் ரத்தம் வரும்...//
மாசற்ற *ஜோதி*...
Kattip poDum eluthu. Ennai Jeeva railway stationukke iluththuchendru vitteerkal.
கீரிம்ஸ் ரோட்டை ஒவ்வொரு முறை கடக்கும் போதும் BSNL அலுவலகத்திற்கு முன் பிளாட் பாமில் வாழும் இத்தகைய மக்கள கடக்கும் போது சே என்ன வாழ்க்கைடா இது என்று தோண்றும்.
//வாழ்க்கை எது? அந்தக் குறவர்களைப் போல் எளிமையாய் வாழ்வதா? இல்லை இந்த அடிமாடுகளாய் செத்தும் உணவாய் வாழ்வதா? அதுவுமின்றி இதுவுமின்றி பலரும் கடந்து போகும் ஒன்றை உள்வாங்கி கலங்குவதோடு உருப்படியாய் எதுவும் செய்ய முடியாமல், முயலாமல் இப்படி இருப்பதா? எது?//
நீங்கள் எழுப்பும் ஒவ்வொரு கேள்விக்கும் , பதில் தேடும் மனநிலையில் இருக்கிறேன் நான். சிந்திக்க வைக்கிற எழுத்துக்கு நன்றிகள் பல ...
வாழ்க்கை எது?. எங்கே, எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறோம். தெரியவில்லையே?
இத்தனை அக்கறையோடு ஒரு பதிவை வெகு நாட்கள் கழித்துப் படிக்கிறேன். வாழ்வின் பாதையில் குறுக்கிடும் சம்பவங்கள் வெகு நாட்கள் மனதில் தங்குவதில்லை. அடிமட்டத்தில் அவஸ்தைப்படும் மனித இனம், அடிமாடிகளாகப் போகும் மற்றோரு இனம். கண்முன் நகர்ந்த சஞ்சலச் சித்திரம்.
Hi Bala,
I have been a regular reader of your writings.
You have done a very good job of 'recording' the life of a group of people that we take for granted in our day-to-day life.
(Sorry for typing in English, i have not figured out yet to do comments in Tamil).
Thanks
Arul
நீங்கள் சொல்லும் மக்களின் வாழ்க்கையை நானும் பார்த்திருக்கிறேன்.... அழகாக பதிவு செய்துள்ளீர்கள்...
ம்ம்ம்
நானும் வேலைக்கு செல்லும் போது பார்த்து பரிதாப பட்டு , ஒன்றும் செய்யாமல், என்ன செய்வதென்றும் தெரியாமல் பார்த்தபடியே அலட்சியமாக சென்ற காட்சி...
// எப்படிப் பார்த்தாலும் ஒப்பீட்டுக்கு வழியேயின்றி உறங்க ஓர் கூரையும், உண்ண ஓர் இடமும், ஒதுங்க மறைவும் இருந்தும் அமைதி தொலைத்த வாழ்வும், ரோகமும் எப்படி நமக்குப் பெரிதாய்த் தோன்றுகிறது. இவர்கள் ஏழைகளா? பெருந்தனக்காரர்களா?//
அருமை. வாழ்த்துக்கள். அவரவர் மனமே சாட்சி...
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சார்... ஆரூர் அழகா சொல்லி இருக்காங்க...
/////பெரும்பாலும் நான் காண்கையில் ஒரு சின்ன குண்டானில் இரண்டு அரைச்செங்கல் அடுப்பில் சமையல். காகிதம் மடித்து கல்லால் தட்டி மசாலா பொடிப்பார்கள். எப்போதாவது பிடிபட்ட பூனையோ, கால்வாய்களில் கிடைக்கும் கருத்த மீனோ ஒரு சில குடும்பங்கள் கூடி நறுக்கிக் கொண்டிருக்கும். ஒரே ஒரு நசுங்கிய அலுமினயத் தட்டில்தான் அனைவருக்கும் சாப்பாடு. //////
வார்த்தைகள் உள்ளதை எட்டி உதைக்கிறது . இது போன்ற மக்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் . ஒரு காலத்தில் ஐந்தாண்டு திட்டம் என்ற பெயரில்
கண்களில் பட்டக் குடிசைகளை எல்லாம் இடித்துக் கொண்டிருந்தார்கள் இந்தியாவை முன்னேற்ற
போகிறோம் என்று சொல்லி .
அந்த ஐந்தாண்டு திட்டப் புத்தகம் இப்பொழுது தொலைந்துபோனதோ என்னவோ !
இருட்டிற்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் மக்களின் இயல்பு வாழ்கையை அனைவரும் உணரும் வகையில் வெளிச்சம் போட்டு காட்டி
இருக்கிறது உங்களின் எழுத்துக்கள் . வாழ்த்துக்கள் அய்யா . பகிர்வுக்கு நன்றி .
//
வாழ்க்கை எது? அந்தக் குறவர்களைப் போல் எளிமையாய் வாழ்வதா? இல்லை இந்த அடிமாடுகளாய் செத்தும் உணவாய் வாழ்வதா? அதுவுமின்றி இதுவுமின்றி பலரும் கடந்து போகும் ஒன்றை உள்வாங்கி கலங்குவதோடு உருப்படியாய் எதுவும் செய்ய முடியாமல், முயலாமல் இப்படி இருப்பதா? எது?
//
எல்லாரும் அடிமாடுகள் தான். எல்லாரும் எங்கோ போய்க் கொண்டிருக்கிறோம், எதன் மீதோ ஏறி. எனக்கான கத்தியும் வெட்டுபவனும் ஏற்கனவே காத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். நான் போய் சேர வேண்டியது தான் பாக்கி.
காதல், காமம், அன்பு, வெறுப்பு, பணம், காசு, அப்பன், அம்மை, தாத்தன் பேரன் பாட்டி மனைவி மகன் மகள் நட்பு எல்லாம் எந்த அர்த்தமும் இன்றி பொம்மை விளையாட்டாக மறக்கப்படும். எங்கோ புதைக்கப்பட்டவன் இன்றைக்கு பெட்ரோலாக உங்கள் வண்டியில் எரிந்துக் கொண்டிருக்கலாம். அந்த வரிசையில் நாளை எனக்காக ஒரு வண்டி.
//
பசிக்கு அழும் ஒரு வயதுக் குழந்தையை ‘ஸம்பேஸ்தா’ என்று பளிச்சென அறையும் அக்குழந்தையின் தாய்க்கு வயது 15 இருந்தால் அதிகம்.
//
எத்தனை சொன்னாலும் கண்ணெதிரே ஒன்றல்ல இரண்டு குழந்தைகளின் வாழ்க்கை அழிவதை பார்க்கும் போது வலிக்கத் தான் செய்கிறது.
பாலா சார் நீங்கள் அனுமதிப்பதாய் இருந்தால் இந்த இடுகை சார்ந்து ஒரு கவிதை எழுதிக் கொள்ளலாமா ?
உங்கள் பதில் அறிய பின்னூட்டங்களைத் தொடர்கிறேன்
பார்க்கிற இடங்களிலெல்லாம் பேருந்தை தவற விட்டுவிட்டு அவர்களை அவதானிக்க சில நிமிடம் ஒதுக்குவேன்.எந்த நேரம் பார்த்தாலும் இதையே எழுதுகிற சலிப்புவரும்.பசி.உலகத்தின் உன்னதமான புரட்சிக்காரன் சே தனது புரவியியைக்கொன்று தானே திண்ண சேதி படித்த போது பதறிப்போனேன்.survival. இதுபோன்றதொரு நாடோ டி பையனிடம் கேட்டேன். 'நடுப்பந்தியில் உட்கார்ந்து ஒரே ஒரு கவளம் சோறு தின்றுவிட்டால் போதும் என் ஜென்மம் சாபல்யமாகு'மென்றான்.அருமை,தாங்ஸ் பாலாண்ணா.
என்ன சொல்றதுனே தெரியல பாலா சார்.;(
நேசமித்ரன் said...
//பாலா சார் நீங்கள் அனுமதிப்பதாய் இருந்தால் இந்த இடுகை சார்ந்து ஒரு கவிதை எழுதிக் கொள்ளலாமா ?
உங்கள் பதில் அறிய பின்னூட்டங்களைத் தொடர்கிறேன்//
கவிதைக்கு காத்திருக்கிறேன்:).
இந்தக் கட்டுரையை வாசிக்கும் போது, இப்படி மனிதர்கள் இந்தச் சமூகத்தில் இருக்கிறார்களா ?. அவர்கள் பூனையை சாப்பிடுவார்களா ?. இப்படிப் பட்டவர்களை, தெரிந்துகொள்ளாத அளவுக்கு வாழ்க்கை இருப்பது வரமா ? தெரியவில்லை.
அந்த மாட்டின் கண்களில் தெரியும் சோகம், பிரயோஜனமில்லாமல் போய்விட்டோமே என்ற எண்ணம் என்று நினைக்கிறேன் சார். சாவைப் பற்றிய கவலை இல்லை என்றே தோன்றுகிறது.
உலுக்கும் பதிவு.
Arumaiyana Pathivu...
//// சென்னை வியாசர்பாடி ஜீவாவிலிருந்து பெரம்பூர் வரை ரயில் பாதையோடு வரும் பெருவீதியது ////
மொதலாளி நீங்க நம்ப ஊரா ?!!
அழகான பதிவு சார்
நல்ல பதிவு சார்!
நிறைய கேள்விகள் பாலாண்ணா. பதில் எழுதத்தான் கை நடுங்கி வருது. (பதில் இருந்தாவுல வரும்.)
மிக நெகிழ்வான பதிவு.
நெகிழவைத்த பகிர்வு சார்..
இது போன்ற வலைப்பூக்களை மேலும் எதிர்பார்க்கிறேன்!
HATS OFF!
நிச்சியமாக அண்ணா. நானும் இரண்டு வருடங்கள் அந்த சாலையின் பின்புறமிருக்கிற இ.எஸ்.அய் குடியிருப்பில் தங்கி இருந்தேன் அண்ணா.உங்களின் எழுத்துகளின் மூலம் மீண்டுமொருமுறை அதை நேராக பார்த்த உணர்வு. வாழ்கையின் தேடலில் நான் இப்பொழுது ஆப்கானிஸ்தான் நாட்டிற்கே வந்துவிட்டேன். மனதை தொடும் எழுத்து.
ஆண்டாள்மகன்
////வாழ்க்கை எது? அந்தக் குறவர்களைப் போல் எளிமையாய் வாழ்வதா? இல்லை இந்த அடிமாடுகளாய் செத்தும் உணவாய் வாழ்வதா? அதுவுமின்றி இதுவுமின்றி பலரும் கடந்து போகும் ஒன்றை உள்வாங்கி கலங்குவதோடு உருப்படியாய் எதுவும் செய்ய முடியாமல், முயலாமல் இப்படி இருப்பதா? எது?///
மிக்க நன்றிசார் !
கிளம்பியாச்சு :)
வந்து அழைக்கிறேன்!
படிக்கும் போதே இரண்டு பகிர்வும்.... மனதை உறுத்துகிறது....
எழுத்து நடை கண்முன் காட்சியாய் விரிகிறது....
gud one. i like it.
Thanks
YJ
படிக்கும்பொழுது ஏற்படுகிற இந்த பெருமூச்சும், மனதை பிசையும் எண்ணங்களையும் என்ன செய்வது. அது என்னவோ தெரியல இந்த குறவர்களுக்கும், தொடர்வண்டி நிலையங்களுக்குமான தொடர்பு இருந்துகொண்டேயிருக்கிறது. எங்கள் வீட்டு பின்புறமும் இந்த காட்சிகளை கண்டிருக்கிறேன்...
Post a Comment