இந்த டி.வி.காரங்க சுத்த மோசம். ஓர வஞ்சனை பண்ணுவாங்க. அதென்னங்க தமிழ் புத்தாண்டுன்னா மட்டும் பஞ்சாங்க பலன், பல்லி விழுந்த பலன், புத்தாண்டு பலன்னு ராசிக்கல்லு மோதிரம் கட்டை விரலுக்கு கூட போட்டுகிட்டு ஒரு சேனல் விடாம ஜோசியம் சொல்றானுங்க. ஆங்கிலப் புத்தாண்டு மட்டும் என்னா பண்ணிச்சி. அதான் நம்ம சேனல்ல நான் சொல்லிக்கிறேன். ராசிக்கல்லு மோதிரமெல்லாம் இல்லிங்கோ.
"பாரப்பா போனதப்பா ஒன்பதாண்டு
படுத்துமப்பா வரப்போற பத்தாமாண்டு
சூதானமா இருந்தாலே சுகம்தானப்பா
சுருட்டன்னே எத்தனை பேர் இருக்கானப்பா"
படுத்துமப்பா வரப்போற பத்தாமாண்டு
சூதானமா இருந்தாலே சுகம்தானப்பா
சுருட்டன்னே எத்தனை பேர் இருக்கானப்பா"
குடும்பஸ்த சித்தர் 250 வருசத்துக்கு முன்னாடி எழுதி வெச்ச பாட்டு
பொதுப்பலன்: சந்திர கிரகணம் வேற வரதால ஒரு கட்டிங்குக்கு பேஸ்மென்ட் வீக்காற கேஸெல்லாம் உசாரா இருக்கணும். வைகுண்ட ஏகாதசி வந்துட்டதால, கிரகணத்துனால கோவில் தொறக்காட்டியும் வருமானத்துக்கு குறையில்லை. முன்ன பின்ன அட்ஜஸ்ட் பண்ணி கலக்ஷன் கட்டலாம். அவங்க அவங்க கட்டம் சரியா இருந்தா இருக்குற ஏரியாக்கு ஏத்தபடி புது வருச கலெக்ஷன் சிறப்பா இருக்கும்.
பதினோரு மணிக்கு மேல வெளிய போகாம இருக்கிறது நல்லது. அப்புடியே போறதுன்னாலும் அவுங்கவுங்க வீட்டில ஒரு நாலு ரவுண்டு நடந்து தள்ளாடாம இருக்கிறமான்னு முடிவு பண்ணிக்கணும். வழக்கத்த விட அதிகமா பேஸ்ட் வச்சி எகிறுல ரத்தம் வந்தாலும் பரவால்லன்னு தேய்ச்சி, குடல கழுவிட்டு போறது நல்லது. இல்லைன்னா ஊதுறப்ப நாறி அந்த கடுப்பில ஜட்டியோட உக்கார வேண்டிய அபாயம் ஏற்படலாம்.
ச்ச்ச்சும்மா டமாசுக்குன்னு சுத்த போறதுன்னாலும் சட்ட பாக்கட்ல ஒரு 50ரூ வெச்சிகிட்டு போறது நல்லது. வாச்சு, மோதிரம், மைனர் செயினு, ப்ரேஸ்லெட்லாம் அவிழ்த்து வெச்சிட்டு போறது உத்தமம். அந்த 50ரூ உங்க செலவுக்கு இல்லைங்கறத மறக்காம இருக்கணும். வழியில மறிச்சி என்ன வெச்சிருக்க எடுன்னு கேக்குறப்ப ஒன்னுமில்லாட்டி, நீயெல்லாம் ஏன்டா வெளிய சுத்துறன்னு கீறாம இருக்குறதுக்கு.
5ரூபாய்க்கு ஆட்டுகால் சூப்பு, கோழிக்கால் சூப்பு, நூடில்சுன்னு முளைக்கிற கடையில ராத்திரி குளிருக்குன்னு ஒரு கட்டு கட்டாத இருந்தா ஆரோக்கிய விரயத்துல இருந்து தப்பலாம். வைகுண்ட ஏகாதசி, கிரகணம்னு விக்காத போன அயிட்டம்லாம் வெந்தப்புறம் தெரியாதுன்னு கலப்படம் நடக்கலாம்.
செல்ஃபோன் வெச்சிருக்கிறவங்க எல்லாம் உசாரா இருக்கணும். குறுந்தகவல் கணக்கில்லாம அனுப்பிட்டு வட போச்சேன்னு அழுது புண்ணியமில்லை. முகம் தெரியாத ஆளுங்க கிட்டல்லாம் யேப்பி ந்யூ இயர்ன்னு கை நீட்ட வேணாம். முக்கியமா பெண்கள் உசாரா இருக்கணும். போன வருசம் நடந்ததெல்லாம் நினைவில இருக்கணும்.
கர்ம பலன்: விலை வாசி பிச்சிகிட்டு ஏறும். அனியாயத்துக்கு லாபமடிக்க பாக்குறானுங்கன்னு புலம்பிக்கிட்டே எல்லாம் வாங்கணும். வயத்த கட்டி வாய கட்டி சேர்த்து வச்ச காசெல்லாம் ரூ 50000 3 வருசத்துக்கு கட்டினா போதும். மாசா மாசம் 10000ரூக்கு போஸ்ட் பேய்ட் செக் குடுத்துடுவோம்னு சொல்ற கம்பெனில போடுறது, 1.5 லட்ச ரூ காந்த சக்தி பெட் வாங்கினா கான்ஸர் கூட காணாம போயிடும், 80 வயசானாலும் அதுல படுத்தா ஆந்திரா கவர்னர் மாதிரி உற்சாகம் வரும்னு எல்லாம் ஏமாறாம உசாரா இருக்கணும். சேர்த்து வச்ச காசெல்லாம் கொட்டிக் கொடுக்கன்னே தி.நகர்ல இருக்கிற கடைகள மறக்காம இருக்கணும்.
உத்தியோகஸ்தர்களுக்கு: எப்பவும் போல இந்த வருடமும் ஆடித் தள்ளுபடி, பொங்கல் சிறப்புத் தள்ளுபடி, அட்சய த்ருதியை, ரம்பா துவாதசின்னு புதுசு புதுசா வர செலவினங்களுக்கு சிக்கனமா சேர்த்து வைங்க. இல்லாட்டி துப்பு கெட்ட மனுசான்னு தங்கமணி துப்பறத தாங்க வேண்டி வரலாம். பக்கத்து வீட்ல எல்லாம் ப்ளாஸ்மா டிவி இருக்கு நம்ம வீட்டில எல்சிடி டிவி கூட இல்லன்னா எப்படின்னு புதுப் பிரச்சன வரலாம். ஒன்னாந்தேதி ஸ்பூன் கூட வாங்கலைன்னா குடும்பம் விளங்காதுன்னு புதுவருசத்தன்னிக்கு திட்டு வாங்காம உசாரா இருக்கப் பாருங்க. நிஜம்மாவே காசில்லைன்னா யாருக்கும் தெரியாம வெங்காயத்த நறுக்கி கம்முகட்டுக்குள்ள வெச்சிகிட்டு ஜுரம் வந்தா மாதிரி அனத்திக்கிட்டு படுத்து கிடக்கிறது நல்லது.
மாணவர்களுக்கு: ஃப்ரெண்ட்ஸ் கூட ஜாலியா கொண்டாடுறேன்னு முதல் நாளே போலீஸ் ஸ்டேஷன் போகிற துர்பலன் சம்பவிக்கலாம். கட்டம் சரியில்லாதவங்களுக்கு கதிர் இடுகையில எழுதினா மாதிரி கபால மோட்சம், குறிப்பா பெண்களுக்கு ஈவ் டீசிங் போன்ற கண்டங்கள் இருக்கிறதால ஊட்டோட இருக்கிறது நல்லது.
பெண்களுக்கு: போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் புது புது சீரியலா வரும். அழுகைக்கு பஞ்சமே இல்ல. வெந்தது வேகாததுனு எதப்போட்டாலும் முனகினா அந்த சீரியல்ல கதாநாயகிக்கு அவ மாமியார் நாய் சாப்பிட்டு மிச்சம் வச்ச சோத்த போடுது. நான் அப்படியான்னா மொத்த குடும்பத்தாரின் அன்புக்கும் பாத்திரமாய்டுவீங்க. என்னதான் புருசன்காரன் இடுக்கி வச்சாலும் சிறுவாடு சேர்த்து, மப்பில வரப்ப மிச்சம் மீதி லவட்டி தேவையில்லாத பொருளெல்லாம் வாங்க நல்ல வாய்ப்பாக அமையும். கிரகங்கள் உச்சத்தில இருக்கிறவங்களுக்கு அக்கம் பக்கத்துல சீட்டு கட்டி அவன் எஸ்ஸாகி அய்யோ போச்சேன்னு வழக்கு சம்பந்தமா பிரச்சனை உருவாகலாம்.
வியாபாரிகளுக்கு: அமோகமான வருசமா அமையும். நீங்க வச்சதுதான் விலைங்கறதால 15ரூபாய்க்கு அரிசிய வித்துட்டு அதே விவசாயி 50ரூக்கு உங்க கிட்ட வாங்குவாரு. கலப்பட பொருள் வியாபாரம் அமோகமா இருக்கும். புதுசு புதுசா உடனடி உணவு எல்லாம் வர சாத்தியமிருப்பதால அரிசி, பருப்பு வியாபாரம் கொஞ்சம் தடுமாறலாம். வீட்டுக்கு தேவையில்லாத எலக்ட்ரானிக் சாமான் விக்கிறவங்களுக்கு அமோகமான வருசமா இது அமையும். செல்ஃபோன், கம்ப்யூட்டர் வியாபாரிகளுக்கு புது புது வெளிநாட்டுல விக்காம போன அயிட்டமெல்லாம் குவியுங்கறதால கொள்ளை லாபம் அடிக்கலாம். கவனிக்க வேண்டியவங்கள கவனிச்சா வரி கட்டுறதில இருந்து தப்பிக்கலாம்.
மருத்துவர்களுக்கு: புதுசு புதுசா நோய் உண்டாகும். இல்லாட்டியும் பழைய நோவுக்கே புது பேரு வச்சிடலாம். பரிசோதனைக் கூடத்தோட மருத்துவ மனை இருக்கிற வைத்தியருக்கு விபரீத ரோக யோகத்தால் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும். இந்த வருஷத்துக்குள்ளயே 3 மாடி கட்டலாம். தாது புஷ்டி லேகியம் விக்கிற வைத்தியர்கள் உசாரா இருக்கணும். மருந்து கடைக்காரர்களுக்கும் செல்வம் கொழிக்கும் வருடமாக இது அமையும்.
அரசியல்வாதிகளுக்கு: வாரிசுங்களுக்கு வழிகாட்டும் வருசமா அமையும். முன்னைய விட அதிகமா கொள்ளையடிக்க வேண்டி வரலாம். தேர்தல் விரயம் அதிகமாகும். ஜன்மஸ்தானத்துல மரணாதிபதி இருந்தால் ஒதுங்கி இருக்கிறது நல்லது. போட்ட காசு தேத்துமுன்ன இடைத் தேர்தல் வரலாம். களத்திர ஸ்தானம் வீக்கா இருக்கிறவங்க டி.வி.டி. டி.வில வந்து பதவி பறிபோகலாம். குறிப்பா நடிப்புத் துறையில இருக்கிறவங்கள சந்திக்கிறப்ப பீச், பார்க்குன்னு பொது இடத்தில சந்திக்கிறது நல்லது.
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாட்கள்: எல்லா நாட்களும் எல்லா மாசமும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வண்ணங்கள்: காக்கி, கருநீலம், வெள்ளை, சிவப்பு
ராசிக்கல்:பொங்'கல்'
மேலே குறிப்பிட்டுள்ளவை பொதுப்பலன்தான். அவர் அவர் ஜாதகத்தில் கிரகங்களின் இடத்துக்கேற்ப கூடவோ குறையவோ பலன்கள் உண்டாகும். வந்தது வரட்டும் விதின்னு இருக்கப் பாருங்க. கண்ட விளம்பரம் பார்த்து 3 கேள்விக்கு 1000ரூனு போய் ஏமாறாதீங்க.
எல்லோருக்கும் மேற்படி சங்கடங்கள் அற்ற இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.