Saturday, May 23, 2009

சுரணை கெட்ட தமிழனுக்கு மீண்டும் ஒரு செருப்படி

சுரணை கெட்ட தமிழனென்று மீண்டும் ஒரு முறை செருப்படி கொடுத்திருக்கிறார் சொக்கு. இறையாண்மை பேர் சொல்லி காட்டின ஆளையெல்லாம் கைது செய்து நீதி மன்றத்தில் அடி வாங்கியும் சுரணை கெட்டவர் தாமே நாம். இறையாண்மைக்கு எதிராக என்று குற்றம் சாட்டப் பட்டவர்கள் கேட்ட கேள்வி காவிரி நீர் பிரச்சினை, முல்லைப் பெரியார் பிரச்சினையில் இறையாண்மை எங்கே போனது என்று. அதற்குப் பதிலாக, பரிசாக இறையாண்மையை மதிக்காத கர்நாடகாவின் எஸ். எம். கிருஷ்ணா வெளியுறவுத்துறை அமைச்சர். கேரளத்தின் அந்தோணி பாதுகாப்புத் துறை அமைச்சர். ஆரம்பம் முதலே இன அழிப்பின் ஆலோசகரான ஒத்தப்பால இரட்டையர்கள் துணைக்கு. இனி ஈழத் தமிழர்களுக்கு விடிந்துவிடும்.

குற்றச்சாட்டே இல்லாதவர்களுக்குத் தான் மந்திரிப் பதவி என்று ஞானோதயம் வந்தது போல் தமிழக அமைச்சர்கள் குறித்து கருத்து பரப்பப் பட்டாலும், வதந்தி என்று சமாதானம் சொல்லிக்கொண்டு மானம் கெட்டு கொடுத்ததைக் கொடு என்று நிற்கப் போகிறோமா? தியாகம் செய்தேன் என்று சொல்பவர்க்கு மீண்டும் ஒரு முறை தியாகம் செய்வது பெரிய விடயமில்லை. ஒரு வேளை எதிர்த்தால் ஆட்சி கவிழ்க்கப் படும் என பயமிருக்கத் தேவையுமில்லை. ஈன நாடகத்தின் கதா பாத்திரமான கறை துடைக்கவும் ஒரு வாய்ப்பு.

பிரபாகரன் குறித்த பொய் பரப்பி எவ்வளவு மோசமாக ஓர் அரசு செயல் பட முடியுமோ அவ்வளவும் செய்யும் பக்ஸே இந்த உண்மையைக் கூட இந்தியாவுக்குச் சொல்லாமல் ஏமாற்ற முடியுமானால் நாளை என்னதான் செய்ய மாட்டான். அல்லது தெரிந்தேதான் இந்த பொய்களுக்கு நாங்களும் துணை போகிறோம் என்ற நிலைப்பாடானால் இவர்கள் தமிழர்களுக்கு என்ன நன்மை செய்து விடப் போகிறார்கள்?

கலைஞரும், மற்ற தலைவர்களும் ஈழத் தமிழ்நாடு குறித்தெல்லாம் கவலைப் பட அவசியமில்லை. ஒன்றாய்க் கூடி ஓர் குரலாய் கேட்க வேண்டிய தருணம் இது. அகில உலகமும் இறுதிக் கட்ட போர் என்ற நிலையில் எச்சரிக்கை, கோரிக்கை என்று வாயளவிலாவது அறிக்கை விட்ட தருணத்தில் ஒரு தொலைபேசி அழைப்பில் போர் நிறுத்தம் செய்யும் திறன் பெற்ற பிரணாப் என்ன செய்தார். பிரபாகரன் மரண நாடக சாக்கில் நடந்தேறிய கொலைகளுக்கு மற்ற நாடுகள் படும் அக்கறை கூட நமக்கேன் இல்லாமல் போனது? அவசரம் அவசரமாக கொண்டாட்டத்தில் பங்கேற்க இரண்டு வெறி நாய்கள் பரிசு கொண்டு போவானேன்? கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்பது போல் கம்பி வேலிக்குள் அடைந்து சிதைந்த குடும்பங்களும், மருந்துக்கு வழியின்றி அவலத்தில் நிற்பவர்களுக்கும் அரசியல் தீர்வு எந்த விதத்தில் பயனளிக்கும். பயம் மட்டுமே சூழ்ந்த மனங்களுக்கு இதில் முடிவெடுக்க எப்படி இயலும்? எல்லாம் விட ஒரு குற்றவாளியும், அவனுக்குத் துணை இருந்தவனும் கூடி முன் வைக்கும் தீர்வு எப்படி நியாயமானதாக இருக்க முடியும்?

யார் எது சொன்னாலும் ஏற்க மறுக்கும் இலங்கை அதிபரும், மற்ற அமைச்சர்களும் இந்தியாவின் துணையோடு தான் இந்த வெற்றி சாத்தியம் என்று சொல்லிக் கொண்டு இப்போது இலங்கையின் ராணுவ நடவடிக்கைகள் விசாரணைக்கு வரும்போது போர்க் குற்றங்கள் நிரூபிக்கப் படும் என்பதில் சந்தேகமில்லை. அப்படி நடக்குமேயானால் அந்தக் கறை இந்தியாவின் மீதும் படியாமல் போக வாய்ப்பே இல்லை. ஒரே ஒரு வார்த்தை புலிகள் ஆயுதங்களைப் பயன் படுத்துவதில்லை என்ற நிலையில் போர் இடை நிறுத்தப் படவேண்டும் எனக் கூறி இருந்தால் அப்பாவி மக்கள் எத்தனை பேர் பிழைத்திருப்பார்கள்? இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்கப்பட்டு நடை முறைப் படுத்தப் படும் என இப்போது அறிவிக்கிறான் பக்ஸே. அப்படியானால் கைஎழுத்தான போது நடைமுறைப் படுத்தப் படவில்லை என்று தானே அர்த்தம். அப்படி எனில் ஒரு சாரார் மட்டும் பொறுப்பு என்று பொய்ச் சாக்கில் இன அழிப்பும் அதற்கு துணை போனதும் என்ன விதத்தில் சரியாகும்? இவர்களின் தலையீடில்லாமல் ஓர் ஒப்பந்தம் சாத்தியமானால் சரி. இல்லை எனில் தனித் தமிழ் ஈழம் மட்டுமே சரியான தீர்வாய் அமையும்.

இந்தத் தருணத்தில் இந்த குள்ள நரிகளின் தலையீடு இருக்குமானால் ஈழத் தமிழருக்கு ஒரு மண்ணும் கிடைக்காது. தமிழகத் தலைவர்களூம், தமிழுணர்வாளர்களும் ஒன்றாய் குரலெழுப்பி சொக்குவைச் சில கேள்விகள் கேட்டாக வேண்டும்:
1. முள்ளிவாய்க்காலில் மிகுந்திருந்தவர்கள் எல்லாருமே போராளிகளா? அவர்கள் என்ன ஆனார்கள்?
2. வெள்ளைக் கொடி ஏந்தி வந்த போராளிகளுக்கு என்ன நடந்தது?
3. சமாதானம் நாடிய போது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது?
4. உலக நாடுகளெல்லாம் எழுப்பும் கேள்விகூட ஏன் எழுப்பப் படவில்லை? இலங்கையின் கடைசி கட்ட நடவடிக்கைக்கு காங்கிரச் ஆட்சியின் ஆதரவு இருந்ததா/இருக்கிறதா?
5.தூக்கி எறியப்பட்ட ஓர் ஒப்பந்தம் இவ்வளவு இழப்புக்களுக்குப் பிறகும் எந்த மாற்றமும் இல்லாமல் நடைமுறைப்பட எப்படிச் சாத்தியம்?

இதெல்லாம் நமக்கெதற்கு? எங்களுக்கு மந்திரிப் பதவி, எதிர் கட்சிகளுக்கு எப்படிக் கவிழ்க்கலாம் என்ற குறிக்கோள் என்றிருப்போமேயானால், நான் என்ன செய்வது? அடிமைகள் நாம் என்று மிருகமாய்த் தான் வாழவேண்டும். தமிழன், மறவன், புறநானூறு, தொப்புள் கொடி என்றெல்லாம் அலட்டாமல் கால் நக்கிக் கொண்டு ஈனத் தமிழனாய் வாழலாம்.

2 comments:

பழமைபேசி said...

//ஒன்றாய்க் கூடி ஓர் குரலாய் கேட்க வேண்டிய தருணம் இது.//

இதுதான் வேணும்!

யூர்கன் க்ருகியர் said...

மறத்தமிழர்களை இந்திய சமூகம் தவறாக மரத்தமிழர்களாக புரிந்து கொண்டதோ ????