Sunday, May 3, 2009

முத்துக் குளிக்க வாரீகளா

என்னடா திடீர்னு முத்துக் குளிக்கக் கூப்பிடரான்னு பார்க்கரீங்களா? தமிழ்க் கடல்ல தாங்க. பரிட்சைனு ஒரு நெருக்கடிக்காக படிச்சது கொஞ்சம். பரவசமா படிச்சது கொஞ்சம்னு கலந்தாங்கட்டியாத்தான் நாம தமிழ் படிச்சது. வலைமனைல தமிழ் அகராதி தேடினப்போ, தமிழ் இலக்கணம் தேடினப்போ கிடைச்சதெல்லாம் யாழ்ப்பாண தமிழறிஞர்களோட உழைப்பும், நூல்களும். நாம ஒண்ணுமேவா பண்ணலைன்னு இருந்தது. வலை மேயுரப்போ கண்ணில பட்டது தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.

சுமார் ஒரு வருடத்துக்கு முன்னாடி கலகலப்ரியா இந்த சுட்டிய கொடுத்தப்போ நூல்நிலையம் பகுதி கட்டுமானத்தில இருந்தது. அப்புறம் பார்க்கலை. இப்போ பார்க்கிறப்போ பிரமிப்பா இருக்கு. ஆத்திச் சூடி, கொன்றைவேந்தன், மூதுரைன்னு தலைப்பெல்லாம் பார்த்து உள்ளே பார்க்கிறப்போ சின்ன வயசு நினைவெல்லாம் வந்து மனசு நிறைவா இருந்தது. ஐந்தரை வயதில ஆறு வயதுன்னு சொல்லி பள்ளியில சேர்க்க கூட்டிண்டு போக கிட்ட கிட்ட ஒரு வாரம் நினைச்சப்போல்லாம் பரிட்சை. அட பாடத்தில இல்லங்க. வலது கையால உச்சந்தலைல கை படிய இடது காதைத் தொடத்தான். எட்டி எட்டி புடிச்சாலும் எட்டுதில்ல. தலைமை ஆசிரியர் கிட்ட புள்ள இரண்டாம் வகுப்பு பாடம் வரைக்கும் கரைச்சி குடிச்சது. ஆத்திச் சூடி, கொன்றைவேந்தன்லாம் மனப்பாடம், இருபது வாய்ப்பாடு, கூட்டல், கழித்தல்,பெருக்கல், வகுத்தல், தேர்க் கூட்டல்லாம் தெரியும்னு ராமானுஜம் அளவுக்கு அளந்தடிச்சதெல்லாம் கவனம் வந்தது. எனக்குதான் கவன பிசகா, இல்ல அவங்க ஏத்தி விட்டாங்களானு குழப்பம். ஏன்னா ஆத்திச் சூடி சொல்லு, கொன்றை வேந்தன் சொல்லுன்னு எல்லாம் கேட்ட கவனம் இல்ல. அறம் செய்ய விரும்பு சொல்லு, ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் சொல்லுன்னு தான் பழக்கம். அப்புறம் தொலைக்காட்சில நன்னன் அய்யா முதியோர்கல்வி நிகழ்ச்சில தமிழ் கத்துக் கொடுத்தப்போ பிரமிப்பா இருந்திச்சி. இப்படி எல்லாம் ஏன் நமக்கு சொல்லித் தரலைன்னு. அதன் பிறகு கதை, கட்டுரைன்னு என்னல்லாமோ படிச்சாலும் அடிப்படையில தமிழ் கொஞ்சம் சந்தேகமாதான் இருக்கும். நம்மள மாதிரி நிறைய பேர் இருக்கலாமில்லையா. அவங்களுக்காகத் தான் இந்த அழைப்பு.

தமிழ் இணையப் பல்கலைக் கழகம். இந்த வலைமனை பார்த்ததும் மத்த பல்கலைக் கழகங்களை விட நேர்த்தியா குழந்தையில இருந்து பட்டப் படிப்பு வரை பாடங்கள், நூல்கள், அகராதி, கலைச் சொற்கள், பாடத் திட்டம், பாட நூல்கள், பயணியர் தமிழ், குழந்தைகள் (ஏன் நமக்குக் கூட) வார்த்தை அமைக்க விளையாட்டு http://tamilvu.org/courses/ship/index.htm என்று எல்லா வகையிலும் மிகச் சிறப்பாக தள அமைப்பு கொண்டிருக்கிறது தெரியும். நூலகம் சுட்டினால் எத்துணை பெரிய பொக்கிஷம், எத்தனை உழைப்பு என்று தெரியும். இணைய வகுப்பறை சுட்டிப் பாருங்களேன். நன்னன் ஐயா, நம் வீட்டில இருக்கிற பணிமுடித்த ஒரு தாத்தா மாதிரி தமிழை எவ்வளவு எளிமையாசொல்லித்தராங்கன்னு. அது ஒரு அனுபவம். முக்கியமா இதைப் பார்த்ததும் புலம் பெயர்ந்து வேலை நிமித்தம் இருக்கும் தமிழன்பர்களுக்கும், அவர்கள் குழந்தைகளுக்கும் எவ்வளவு பயன் பாடா இருக்கும் எனத் தோன்றியது. ஆசிரியரைத்தேடி அலையாமல், வீட்டில் குழந்தைகளே படிக்கும் அளவுக்கு எளிமையாய் கொஞ்சமே கொஞ்சம் வழிநட‌த்தலுடன் தமிழ் கற்க முடியும். கணக்குத் தொடங்கு, கடவுச் சொல் கொடுன்னு எல்லாம் படுத்தாம சுலபமாக பார்க்க படிக்க முடியும். அட படிச்சா என்னனு நினைக்கிறவங்களுக்கு பெரும்பாலான நாட்டில தொடர்பு மையம், பரிட்சை மையம், இணைய வழியில் தேர்வு, எழுத்துத் தேர்வு போன்ற வசதிகள் இருக்கு. சுவடிக் காட்சியகம் பார்க்கிறப்போ பிரமிப்பா இருக்கும். கண்டிப்பா நாம் அனைவரும் ஆதரித்து பயனடைய வேண்டிய ஒரு வசதி இது.

வலைமனைக்கு (இது சரியான்னு தெரியல) இங்கே சுட்டவும்:http://tamilvu.org/coresite/html/cwhomepg.htm

மறக்காம அவங்களுக்கு பின்னூட்டம் போடுங்க. வளர்ச்சிக்கு உதவும்.

1 comment:

பழமைபேசி said...

ஆமாங்கண்ணே... இதெல்லாம் நாம அடிக்கடி புழங்குற இடங்கள்தான்... தகவலுக்கு நன்றி!