Thursday, August 26, 2010

கேரக்டர் - ராஜா மாமா...

ராஜா மாமாவை முதன் முதலில் சந்தித்தது செண்ட்ரல் ஸ்டேஷனில். பெங்களூர் எக்ஸ்ப்ரஸில் இடம் பிடிப்பதற்காக சீக்கிரம் வந்து அமர்ந்திருக்கையில் ஜன்னல் வழியாக அவர் பார்த்து விட்டார். எதிரில் சீட்டும் காலியிருந்ததால் அவரும் அதே பெட்டியில் பயணிக்க, ஏறி சீட்டுக்கு வருவதற்குள், அவர் என்ன கேட்டாலும் வேண்டாமென்று சொல்லி விடுங்கள் என்ற கட்டளை பிறந்தது தங்ஸிடமிருந்து.

கொஞ்சமாய்க் கூட்டம் சேர சல சலப்பில் ஏன் என்று விசாரித்ததற்கு அவர் வெளியே போனால் அதிகபட்சம் ஒரு இளநீர் மட்டும் சாப்பிடுவாராம். மற்றபடி, டீ, காஃபி, கோக் எதுவானாலும் சம்மதமில்லை. பிள்ளைகளை வேண்டுமா எனக் கேட்டு வேண்டுமென்றால் வாங்கியும் கொடுத்து வீட்டில் போய் லெக்சர் கொடுப்பாராம். உடலுக்குக் கெடுதி, காசுக்கு தண்டம் என்று.

நல்ல வெள்ளை நிறம். பஞ்சக்கச்ச மல் வேட்டி, கதர் சட்டைக்குள், காடா குதிரை வண்டிக்கார பனியன். ஒரு சின்ன சூட்கேசுடன் வந்திருந்தார். பேச்சில் அவ்வளவு நிதானம். அதிராத பேச்சு. சிரிப்பிலும் அளவான சிரிப்பு. அரக்கோணம் வரவும் முதல் டெஸ்ட் ஆரம்பித்தது. காஃபி வேண்டுமென்றால் சாப்பிடுங்கள். கூல்ட்ரிங்க் வேண்டுமென்றாலும் என்று.

சமர்த்தாக, இல்லை கொண்டு வந்த தண்ணீர் இருக்கிறது என்று சொன்னாலும், பங்காருப்பேட்டை மசால்வடை குறித்த கவலை அரித்தது. வழக்கம் போல் புத்தகத்தை வைத்துக் கொண்டு தொடர்ந்தது பயணம். வீடு போய் சேர்ந்து அவரும் ஊருக்குக் கிளம்பிய மறுநாள், அவரிடம் இருந்து ‘மஞ்சி பில்லகாய’ (நல்ல பையன்) சர்டிஃபிகேட் வாங்கிய முதல் ஆளாகிப் போனேன்.

அடுத்த சில மாதங்களில் ஒரு அதிர்ச்சித் தகவல் வந்து அவர்கள் ஊருக்குச் செல்லும் போது மனதில் விசுவரூபமாய் ஆகிப்போனார். ஒரு ரிட்டையர்ட் பஞ்சாயத்து ஆஃபீசரைக் கத்தியால் குத்துமளவுக்கு அவர் என்ன வில்லனா என்ற கேள்விக் குறி மனதை அரித்தது. ரணபூமியது. வெட்டும் குத்தும்  வெடிகுண்டும் சகஜமென்றாலும் எங்களுக்குப் புதிது.

மாலை சாய வந்தவர்கள், ஏதோ மனுவைப் படித்துப் பார்க்கச் சொல்லி, அவர் வெளிச்சத்துக்கு கையை உயர்த்திப் பிடித்துப் படிக்க, குத்தி இழுத்து விட்டார்கள். சரிந்த குடலை, உள்ளே தள்ளி, தானே துண்டால் வயிற்றை இருகக்கட்டி, அரசு மருத்துவ மனையில் போய் சேர்ந்ததும், போலீஸ் எவ்வளவு கேட்டும் குத்தியது யார் எனத் தெரியாது என்று சொன்னபோது குழப்பமாய்த்தான் இருந்தது. அறுவை சிகிச்சை முடிந்து வீடு வந்தபோது கேட்டதற்கு அவரிடமிருந்து வந்த பதில் அவர் மீதான மரியாதையைப் பன்மடங்கு உயர்த்தியது.

ஆம்! தெரியுமென்றால் அடையாளம் காட்டச் சொல்லுவார்கள். குத்தியவன் யாரோ சொல்லி, கூலிக்கு வந்து குத்தியவன். காட்டிக் கொடுத்தால் குடும்பமே அழியும் எனத் தெரியும். ஏவியன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்பார்கள். பாவம் அந்த ஏழைக் கூலிக்காரன் குடும்பம் வீதிக்கு வரும். அவ்வளவுதானே. இப்போது எனக்கென்ன ஆகி விட்டது என்பவரை வியக்காமல் என்ன செய்ய?

அந்த ஆந்திர வெயிலில் ஃபேன் போடாமல் வியர்க்க வியர்க்க இருப்பார். சொல்லும் காரணம் அலாதியாக இருக்கும். இயற்கை தந்த வரம் வியர்வை. உடலுக்கு ஏர் கண்டிஷன். அதனுடன் உடல் கழிவும் வெளியேறுவதை, ஃபேனோ, ஏசியோ போட்டு வெளியேறாமல் செய்வதை விட இரண்டு மூன்று முறை குளிப்பது ஆரோக்கியம் என்பார்.

இரண்டு மூன்று கம்பெனிகளின் பங்குதாரர், ஒரு கோலமாவுச் சுரங்கத்தின் சொந்தக்காரர், அடிக்கடி சொல்லும் வார்த்தை ‘மனமேமி சவுக்காருலமா செப்பு நாயனா’ (நாம என்ன பணக்காரர்களா? சொல்லுப்பா). காசைச் செலவு செய்யலாம். வீணடிக்கக் கூடாது என்பதன் முழு உதாரணம் அவர்.

வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி கிடையாது. பிள்ளைகள் பொது அறிவுக்கு என்று பிட் போட்டதும், 2ரூ ஹிந்து பேப்பர் வாங்கினால், நாள் முழுதும் படித்தாலும் படிக்க முடியாது. சினிமாப் பாட்டு பார்க்கிறதுக்கு இது சாக்கா என்று அறவே மறுத்தவர். பயணத்துக்கு ஒரு ஜீப் உண்டு. பெயரளவில் கட்டை சீட்களும், தார்ப்பாலினும் மட்டும். எஞ்சின் மட்டும் பக்காவாக இருக்கும்.

வெயிலில் கட்டி வந்தாலும், காலை அகட்டி அகட்டியாவது வேலை வேலையென்று போவார். வீட்டில் இருந்தால் வலி இருக்காதா என்ன என்று எதிர் கேள்வி வரும்.

அடுத்த ஓரிரு வருடங்களில் வந்த செய்தி இன்னும் கதி கலங்க வைத்தது. ஒரு கேஸ் விஷயமாக, அந்த மானிலத் தலைநகரின் பிரசித்தி பெற்ற ஹோட்டலில் தங்கியிருந்து, சாப்பாட்டுக்கு பிறகு, ஹாலில் பேப்பர் படிக்க என்று போனவரை, சினிமாவில் வருவது போல் ஆட்டோவில் வந்து வட்டம் கட்டி, எஞ்சினை உயர்த்தி சப்தம் கேட்காமல், ஹாக்கி மட்டை, கம்பி என்று அடித்துப் போட்டுவிட்டு போய் விட்டார்களாம்.

மயங்கிக் கிடந்தவரை நிர்வாகம், நகரின் பெரிய ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து, வீட்டுக்கு தகவலனுப்பி, உறவினர் போய் சேர, மனுஷன் சொன்ன முதல் வார்த்தை எல்லாரும் கையில் மிளகாய்ப் பொடி வைத்திருங்கள் என்பது. கை, கால், விலா எலும்புகள் நொறுங்கிக் கிடக்க, மல்டிபிள் சர்ஜரி செய்ய வேண்டும் என்ற டாக்டரிடம், புத்தூர் கட்டில் சரியாகிவிடும் என்று டரியலாக்கி சொந்த ரிஸ்கில், இரண்டாம் வகுப்பில் சென்னை வந்தவரை என்ன சொல்ல?

ஒரு பெட்ஷீட்டில் மெதுவே நகர்த்தி மூலைக்கு ஒருவராய்ப் பிடித்து, அவர் தம்பி வீட்டுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்குள், பயந்தது நாங்கள்தான். என்ன ஆயிற்று என்று கேட்டபோது, விஷயம் சொல்லி, பைத்தியக் காரர்கள், அவர்கள் தேடி வந்த பத்திரம் என் பனியனுக்குள். நான் குப்புறப் படுத்துவிட்டேன். இந்தக் கையில் இத்தனை அடி, முதுகில் இத்தனை, காலில் இத்தனை என்று சொல்லும்போது அவர் வயது அறுபதுக்கும் மேல்.

பயம் வந்தால் வலி தெரியும், வலி தாளாமல் மயங்கவோ, பணியவோ கூடும் என நினைவை திசை மாற்ற அடியை எண்ண ஆரம்பித்தாராம். ப்ராணன் போனால் வருமா? பொருள் போனால் சம்பாதிக்கலாம் என்ற மகனுக்கு சொன்ன பதில் இது. நகை கேட்டால் கொடுத்து விடுவாய். வீட்டுப் பெண்களைக் கெடுத்துக் கொன்றால் வேறு பெண் கட்டலாம் என்பாயா?

ஒரு விஷயம் நியாயம் என்றால் உயிர் என்ன உயிர் என்று அத்தனை வலியிலும் பேசுபவரை என்ன சொல்ல? இத்தனை அடியும், இறந்து போன ஒரு எம்.எல்.ஏ நண்பன் இவரை ட்ரஸ்டியாகப் போட்டு ஏழைச் சிறுவர்களுக்கான ஒரு அமைப்பையும், திருமணமின்றி சேர்ந்து 40 வருடம் வாழ்ந்த பெண்ணுக்கு கொடுத்த சொத்துக்கு ஆட்டையைப் போடவும் உறவினர் செய்த சதி.

மூன்றே மாதத்தில் புத்தூர்கட்டு வைத்தியத்தில் தானே நடக்க ஆரம்பித்தது வைத்தியத்தினால் அல்ல. மன உறுதியும், இயற்கையாய் வாழ்ந்த ஆரோக்கியமும் மட்டுமே.

எண்பது வயதுக்கு சற்றேறக் குறைய இருக்கும். மகன்கள் இருவரும் மிக உயர்ந்த பதவிகளில். ஜீப்புக்கு ஸ்பேர்ஸ் கிடைப்பதில்லை என்பதால், மகன்களின் வற்புறுத்தலில் க்வாலிசுக்கு மாறினாலும், அடிப்படை வசதிகள் மட்டுமே.

இன்னமும் இரண்டாம் வகுப்பில் பயணமும்(முதல் வகுப்பில் போனாலும் அதே நேரத்துக்குதானே போகும்?) ‘மனமேமி சவுகாருலமாவும்’ மாறவே இல்லை.

சொல்ல மறந்துவிட்டேனே. சுப்புப் பாட்டியின் பெரிய மகன் இவர்.
~~~~~~~~

38 comments:

கலகலப்ரியா said...

நல்லாருக்கு சார்...

சுப்புப்பாட்டி போஸ்ட்டுக்கு லிங்க் கொடுக்கலாமே...

நசரேயன் said...

நல்லா இருக்குண்ணே

நசரேயன் said...

//சுப்புப்பாட்டி போஸ்ட்டுக்கு லிங்க் கொடுக்கலாமே...
//

ஆமா .. ஆமா

vasu balaji said...

கலகலப்ரியா said...

நல்லாருக்கு சார்...

சுப்புப்பாட்டி போஸ்ட்டுக்கு லிங்க் கொடுக்கலாமே.../

நன்றிம்மா. கொடுத்துட்டேன். அப்படியே மஞ்சிபில்லக்காயக்கு அர்த்தமும்:)

vasu balaji said...

நசரேயன் said...

//சுப்புப்பாட்டி போஸ்ட்டுக்கு லிங்க் கொடுக்கலாமே...
//

ஆமா .. ஆமா//

கொடுத்துட்டேண்ணே.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

அருமை சார் ...,

''''கேரக்டர்''' ரசிகர் பேரவை
சென்னை

Unknown said...

மாமாவுக்கு ஒரு வணக்கம் சார். மனிதர்கள் எல்லோருமே ஓவ்வொரு வகையில் வேறு பட்டே இருப்பார்கள். அதை எவ்வாறு ஒருவர் எடுத்துக் கொள்கிறார் என்பதைப் பொருது வேறுபாடும்.

I have seen our older generation is very loyal to their boss or the person whom they respect more.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

சார் ,
ஒரு தொகுப்பா போடுங்களேன் .......

sriram said...

பாலாண்ணா..
கேரக்டர்கள் சுவாரசியம்.
உங்க எழுத்து அதை விட சுவாரசியம்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

க ரா said...

வழக்கம் போல அருமை :)

Chitra said...

ஆம்! தெரியுமென்றால் அடையாளம் காட்டச் சொல்லுவார்கள். குத்தியவன் யாரோ சொல்லி, கூலிக்கு வந்து குத்தியவன். காட்டிக் கொடுத்தால் குடும்பமே அழியும் எனத் தெரியும். ஏவியன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என்பார்கள். பாவம் அந்த ஏழைக் கூலிக்காரன் குடும்பம் வீதிக்கு வரும். அவ்வளவுதானே. இப்போது எனக்கென்ன ஆகி விட்டது என்பவரை வியக்காமல் என்ன செய்ய?

......இப்படியெல்லாம் சொல்ல ஒரு மனப்பக்குவமும் உயர்ந்த உள்ளமும் வேண்டும். ம்ம்ம்ம்.... அருமையான அறிமுகம்.

பவள சங்கரி said...

சுப்பு பாட்டிக்கு ஏத்த மகன். அருமையான கேரக்டர். கல்க்கிட்டீங்க சார்.

cheena (சீனா) said...

அன்பின் பாலா

கேரக்டர் எழுதுவது சற்றே கடினமான செயல். அத்னையும் ரசிக்கும் வண்ணம் எழுதி உள்ள திறமைக்கு பாராட்டுகள்

நல்வாழ்த்துகள் பாலா
நட்புடன் சீனா

Unknown said...

நல்லா இருக்கு சார். வெளிய இருந்து பாக்கும்போது இவரை மாதிரி ஆளுங்களை கஞ்சன்னு சொல்லிடுவோம்..

Jerry Eshananda said...

தொடர்கிறோம்....பாலாண்ணா....நிறைய கேரக்டர் அறிமுகம் பண்ணுங்க.

a said...

நல்லா இருக்கு பாலா சார் .........

சைவகொத்துப்பரோட்டா said...

வியக்க வைக்கிறார் ராஜா மாமா!!

settaikkaran said...

கேரக்டர்கள் பற்றி எழுதுவதில், ஐயாவுக்கு நிகர் ஐயாவே என்று மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறீர்கள் ஐயா. மாணவனாக இருந்து குறிப்புக்கள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். :-)

Mahi_Granny said...

i was impressed by subbu paatti when i read her. now her son. real deserving son . thanks sir

க.பாலாசி said...

யப்பா... பிரமிப்பா இருக்கு.. இவ்வளவு எளிமை, நேர்மையான மனிதரை காண்பதறிதுதான்.

vasan said...

கேர‌க்ட‌ர் & ரைட்ட‌ர், இர‌ண்டு பேருமே சூப்ப‌ர்.

Unknown said...

arumaiya irukku bala sir

பிரபாகர் said...

ராஜா மாமாவை இப்போதுதான் படித்தேன் அய்யா, வியப்பாய் இருக்கிறது. எவ்வளவு வசதியிருந்தும் எளிமையாய் இருப்பவர்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். எங்கள் ஊரில் பொட்டையன் தாத்தா என்பவர் நல்ல வசதி. இரண்டு வேஷ்டி, துண்டு ஒரு சட்டை மட்டும்தான் வைத்திருந்தார். உபயோகப்படுத்த முடியாத நிலைமைக்கு வந்தால் மாற்றுக்கு புதிதாய் வாங்குவார்...

பிரபாகர்...

பா.ராஜாராம் said...

பாலாண்ணா, அற்புதம்! வழக்கம் போலவே...

VELU.G said...

ரொம்ப அருமை

''கேரக்டர்'' ரசிகர் பேரவை
ஈரோடு

பத்மநாபன் said...

பாலா சார்...ராஜா மாமாவின் குணாதிசியஙகளை ஆழகாக சொல்லியுள்ளீர்கள்..சுப்பு பாட்டி உயிர்ப்பான குணாதிசியஙகள் உண்மையில் சிலிர்ப்படைய வைத்தது.

நேட்டிவிட்டிக்காகவும், ஒரு அழுத்ததிற்க்காகவும் அவர்கள் பேசும் மொழியையே கொண்டுவந்து விளக்கம் கொடுத்தது அழகாக இருந்தது.

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்லாருக்கு சார்...

அன்புடன் நான் said...

வியந்தேன் (அதிக சொற்கள் பயன்படுத்தினால் ராஜா மாமா திட்டகூடும்!)

sakthi said...

பாவம் அந்த ஏழைக் கூலிக்காரன் குடும்பம் வீதிக்கு வரும். அவ்வளவுதானே. இப்போது எனக்கென்ன ஆகி விட்டது என்பவரை வியக்காமல் என்ன செய்ய?

சொல்வதற்கு வார்த்தையில்ல பாலாண்ணா

பின்னோக்கி said...

சாவியோட கேரக்டர் தொடர் அளவுக்கு மிக அழகாக எழுதுகிறீர்கள். சூப்பர்.

Ravichandran Somu said...

ராஜா மாமா - நல்ல கேரக்டர்!

Excellent Sir!!

காமராஜ் said...

பாலாண்ணா கேரக்டர்,கேடில் விழுசெல்வம் ரெண்டுமே இப்பதான் படிக்க முடிந்தது.நல்லா இருக்குங்கண்ணா.

vasu balaji said...

@@நன்றி ஷங்கர்.
@@நன்றி சேது
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி இராமசாமி
@@நன்றிங்க சித்ரா
@@நன்றிங்க நித்திலம்
@@நன்றி சீனா சார்
@@நன்றி முகிலன்
@@நன்றி டி.வி.ஆர் சார்
@@நன்றி ஜெரி
@@நன்றி யோகேஷ்
@@நன்றி சைவகொத்து பரோட்டா

vasu balaji said...

சேட்டைக்காரன் said...

//கேரக்டர்கள் பற்றி எழுதுவதில், ஐயாவுக்கு நிகர் ஐயாவே என்று மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறீர்கள் ஐயா. மாணவனாக இருந்து குறிப்புக்கள் எடுத்துக் கொண்டிருக்கிறேன். :-)//

நன்றி! நானும் உங்கள் மாணவந்தான்:)

vasu balaji said...

@@நன்றி பாலாசி
@@நன்றி வாசன்
@@நன்றி செந்தில்
@@நன்றி பிரபா
@@நன்றி பா.ரா.
@@நன்றிங்க வேலு
@@நன்றிங்க பத்மநாபன்
@@நன்றிங்க வெறும்பய
@@நன்றி கருணாகரசு
@@நன்றிங்க சக்தி
@@நன்றி இரவிச்சந்திரன்
@@நன்றிங்க காமராஜ்:)

vasu balaji said...

பின்னோக்கி said...

//சாவியோட கேரக்டர் தொடர் அளவுக்கு மிக அழகாக எழுதுகிறீர்கள். சூப்பர்.//

அது கிட்ட நெருங்க முடியுமா? அதீதம். அன்புக்கு நன்றி. பெரிய அங்கீகாரம் இது.

ஈரோடு கதிர் said...

பரபரப்போடு வாசித்து முடிக்க

||முதல் வகுப்பில் போனாலும் அதே நேரத்துக்குதானே போகும்||

இந்த வரி என்னையறியாமல் என்னை புன்னகைக்க வைத்தது

மிக அழகான பகிர்வு

ஸ்ரீராம். said...

Liked very much...

இந்த கேரக்டர் பதிவுகள் உங்கள் விசேஷம்... ராஜா மாமா வித்யாசமான மனிதர்தான். அருமையான அறிமுகம்.