’70களில் டிரான்ஸிஸ்டர் ரேடியோக்கள் சாமானிய மக்களுக்கு சாத்தியமான காலம். வி.ஜி.பி.சகோதரர்கள் தவணை முறையை அறிமுகப் படுத்திய காலம். ஞாயிற்றுக் கிழமை பாப்பா மலருக்கும், ஒலிச்சித்திரத்துக்கும், ஹமீதின் கட்டிவைக்கும் குரலுக்கு டிக்டிக் கடிகார சத்தத்தோடு இதயம் துடிக்க போர்ன்விடா க்விஸ்ஸூக்கு காத்திருந்த காலம், ஹார்லிக்ஸ் சுசித்ராவின் குடும்பத்துக்கும் காத்திருந்த காலம். காலை 7.15 செய்தி முடிந்ததும் 15 நிமிடம் ஒலிக்கும் ரஸிகரஞ்சனிக்கும் இரவு வர்த்தக ஒலிபரப்பில் தேன்கிண்ணத்துக்கும் ஏங்கிய காலம்.
எல்லா ஏக்கமும் யார் வீட்டிலாவது கேட்காதா என்று ஏங்கி மாடிப் படியில், அவர்கள் வீட்டு அண்மையில் என்று காத்திருந்து கேட்டுத் தீர்த்த காலம். முதலில் படிப்பு கெட்டுவிடும் என்ற சாக்கு, பிறகு வாங்க முடியாத நிலமை என்று ஏதோ காரணங்களால் ட்ரான்ஸிஸ்டர் என் வாழ்க்கையில் வரமாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தது.
பிறகு தொலைக்காட்சி பரவலாகிவிட 82ல் டிவி வந்து புகுந்து கொண்டது. அதற்குப் பிறகு மார்கட்டில் கேஸட் ப்ளேயர், ஸ்டீரியோ ரெகார்டர் என்றெல்லாம் வர, மெதுவாக வாக்மென் தனியிடம் பிடித்தது. தூர்தர்ஷன் உபயத்தால், சினிமாப் பாடல், கர்நாடக இசை என்று ஆரம்பித்து ஹிந்துஸ்தானி இசை, எந்த மொழியானாலும் நாட்டுப் புறப் பாடல்கள், கவ்வாலி, சூஃபி என்று என் இசை வேட்கை திக்கு திசை தெரியாமல் பரந்து விரிந்தது.
ஸ்டீரியோ சக்திக்கு மீறியதாகவும், இருந்த ஒரே சோனி வாக்மேன் விலை அதிகமாகவும் பட்டதால் அவ்வப்போது அடக்கி அடக்கி முடியாமல், பர்மா பஜாரில் காசுக்கேத்த பணியாரம் மாதிரி நம்ம பட்ஜட்டுக்குள் கிடைப்பதாக அறிந்ததும் அடங்க மாட்டேன் என்று மனது படுத்திய பாட்டில் வாக்மேன் வாங்கியே தீருவது என்று முடிவுக்கு வந்தாயிற்று.
ஃபேன் வாங்கவே பி.எச்.டி. ரேஞ்சுக்கு தயாரானவன், பர்மா பஜாரின் பம்மாத்து வேலைகளுக்கு ஏமாறுவேனா என்ன? அடித்துப் பிடித்து ஏதோ ஒரு அரியர்ஸ் தொகை 400ரூ கைக்கு வர அதை வாக்மேனாக மாற்றும் வசந்த நாள் ஒன்றைக் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்.
Enter the Dragon, 36th chamber of shaolin எல்லாம் பார்த்த சூட்டில் கராத்தே வகுப்புக்கு போய் மணிக்கட்டில் காப்பு காய்த்த, என்னை விட ஓங்குதாங்கான ஒரு நண்பனையும் சேர்த்துக் கொண்டு பாரீஸ் கார்னருக்கு பயணப் பட்டோம்.
மேல் சட்டையில் ரூ 250, டிக்கட் பாக்கட்டில் ஒரு 50, ஹிப் பாக்கட்டில் ஒரு 50 நண்பனிடம் மீதி 50 என்று பதுக்கி பர்மா பஜார் பரிச்சயமுள்ளவர்களிடம் விசாரித்து அட்டு, அசி என்ற இரண்டு முக்கியமான மந்திர உச்சாடனம் கற்று, வாங்குவதாக முடிவு செய்தாலே ஒழிய பொருளைக் கையில் வாங்கக் கூடாது என்ற கீதோபதேசமும் பெற்று களமிறங்கினோம். நண்பன் தொலைவாகவும் இல்லாமல், ஒன்றாகவும் இல்லாமல் வர வேண்டியது. இக்கட்டு நிலையில் காப்பாற்ற வேண்டும் என்ற முஸ்தீபோடு பீதியும் ஆசையுமாய் நுழைந்தோம்.
கும்பலில் ஒரு குரல், டெக்கு பாக்குறீங்களா சார் (ம்கும். வாக்மேனுக்கே நாக்கு தள்ளுது டெக்கு வேறயா?) என்றதை சட்டை செய்யாமல், ஒரு கண் கடை அலமாரிகளில், ஒரு கண் கடைக்காரரில் என்று நம்ம ரேஞ்சுக்கு நல்லவராக ஒரு கடையில் நிதானித்தோம். வாங்க தம்பி என்ன வேணும், வாக்மேன் பாக்கறீங்களா? (வானம்பாடி! எப்புடீடா நீ எங்க போனாலும் வசதியா கேக்குறாங்க?) என்றார்.
ம்ம். என்னா ப்ராண்ட் இருக்கு? (யப்பா! என்னா பந்தா? 250ரூபாய்க்கு ஏதாவது கிடைக்குமான்னு கேட்டா இவரு ராஜபரம்பரை அந்தஸ்து போய்டும். தூ!). உங்களுக்கு எது வேணும் தம்பி, சோனி,JVC(இப்புடி ஒன்னு இருக்கா), சான்யோ(சோனியோட டூப்ளிகேட்டோ),ப்ளிப்ஸு, நேஷனல்(பானாசோனிக் இல்லையோ) என்றார். (படுபாவி சிக்க வச்சிட்டாண்டா லுக்கில் மனசைப் படிச்ச மனுஷன்) உங்களுக்கு என்னா விலையில பாக்கறீங்க என்றார். விலை பத்தி இல்ல(அடி செருப்பால!) நல்லாருக்கணும்.
நம்ம கடையில பொருளு சுத்தமா இருக்கும் தம்பி, ரிகார்டர், ரேடியோவோட வேணுமா, ரிகார்டர் மட்டும் போதுமா, ப்ளேயர் மட்டும் போதுமா? (அய்யோ! இப்படியெல்லாம் வேற இருக்கும்னு தெரியாம வந்துட்டனே!) என்றவரிடம் சோனி எவ்வளவு? என்றேன்.
ரூ750 ஆகும், ரேடியோ, மைக்கி, ரிகார்டிங்கி, ஷ்டீரியோ, வைடு எல்லாம் இருக்கும். சூப்பர் பீசு, குடுத்துடலாமா? என்றார். டப்பு லேதுன்னு சொல்லிடுவமா? அவ்வளவெல்லாம் வேணாங்க டேப் கேக்கறா மாதிரி போதும், ஸ்டீரியோ வேணும் அவ்வளவுதான் என்று சொல்லித் தயங்க பானாசோனிக் ரூ 350ல் தருவதாக சொன்னார்.
ரைட்டு! காசு போதும். பிடிச்சிருந்தா வாங்கிடலாம். விலை கேட்டு பார்த்துட்டு போவியா என்று அறை விழாது என்று தைரியம் வர பேரம் தொடங்கியது. 250ரூன்னா காட்டுங்க என்றேன். நீங்க பொருள பாருங்க தம்பி (தோடா! கைல வாங்கிட்டா வேணாம் என் கிட்ட காசில்லைன்னா என்ன பண்ணுவன்னு தெரியாது எங்களுக்கு?)என்றவரை இல்லைங்க நீங்க சொல்லுங்க என்று பிடிவாதம் பிடித்து, பிடித்திருந்தால் 300ரூக்கு பைசா குறையாது என்று டீல் போட்டு என் கனவு வாக்மேன் கைக்கு வந்தது.
டீல்னு ஆனப்புறம் பழகிட்டம்ல. தைரியமா அஸி பீசுங்களா (சத்தியமா தினம் வியாபாரம் பண்றவன் கூட அவ்வளவு சரளமா அஸி சொல்லி இருக்கமாட்டான்) என்று கேட்டே விட்டேன். சொன்ன கையோடு பின்புறம் பார்க்க Made as Japan என்றிருந்தது.
அதற்குள் அவர் என்னமோ பானாசோனிக் டீலர் மாதிரி பக்கா அஸிங்க என்றதும் சிக்கிட்டியேடான்னு மனசு நொந்து போனது. ஏங்க Made in போடாம Made asனு இருக்கு. எப்டிங்க அசிங்கறிங்க என்றேன். தம்பி, கம்பேனி பீஸ்னா டாக்ஸ், டூட்டி எல்லாம் வரும்னு இப்புடி போடுவாங்க என்று விட்ட கதையை நம்பத் தயாரில்லை என்றாலும் அடுத்த கட்டமான டெஸ்டிங்கில் இறங்கினேன்.
இத்துப்போன பேட்டரியில், தேய்ந்து போன டேப்பில் ஐம் எ டிஸ்கோ டேன்ஸர் கோரமாக கேட்டது. என்னாங்க இப்புடி என்றால், புது பேட்டரி போடுப்பா இல்லன்னா அடாப்டர் வாங்கிக்கறியா 50ரூ என்று கொசுறு வியாபாரம் தொடங்கி, ஒரு வழியாக அடாப்டருடன் சேர்த்து 350ரூ கொடுத்து வாக்மேனுக்கு சொந்தமாகிக் கொண்டேன்..
நல்லாருக்குமாங்க என்று ஏங்கி ஏங்கி கேட்டு 10 மீட்டர் வந்தும் ஏதோ ஒரு உறுத்தல் எதையோ மறந்தாற்போல. சட்டென்று கவனம் வர, திரும்ப கடைக்கு போய் ஏங்க கண்டிப்பா அட்டு பீஸ் இல்ல தானுங்களே(அப்பாடா அட்டு கூட நமக்கு தெரியும்னு காண்பிச்சிட்டோம்ல) எனக்கேட்க, அடிக்காத குறையாக யோவ் சொல்லிட்டே இருக்கேன் பக்கா பீசுன்னு சும்மா கேட்டுகிட்டு நடைய கட்டு என்றதும் சிட்டாக விட்டாச்சு ஜூட்டு.
வரும் வழியில் நடைபாதை கேசட் கடையில் கண் பட்டதும் பாய்ந்தோடி மீதமிருக்கும் 50ரூபாயில் எம்.எஸ்ஸின் அன்னாமாச்சார்யா கீர்த்தனைகள் (டூப்ளிகேட் 12ரூ, மஸ்த்கலந்தரில் மனதைத் திருடிய நஸ்ரத் ஃபடே அலி ஃகான் ஒரிஜினல் ரூ 35) வாங்கிக் கொண்டு வந்த போது உலகம் என் கையில்.