அகண்ட தீக்குளித்து
அன்றலர்ந்த அல்லியாய் வந்தபோது
தெளிந்தது சீதையின் கற்பல்ல
இராவணனின் சீலம்!
கையறு நிலையிலும்
கற்பை ஆயுதமாய்
கனவிலும் நினையாத
அவன் கண்ணியம்!
பின்னொரு நாள்
இனம் காப்பதாய்ச் சென்ற
இராமர்கள் கற்றுக் கொடுத்தது
கற்பழிப்பென்னும் ஆயுதம்!
மற்றுமொரு முறை
மறைந்தழித்துதவும்
மகோன்னத காதை
மனிதமழித்தது!
புத்தன் பூமியில்
புத்த பூமிகள் சேர்ந்து நடத்திய
யுத்த வேள்வியில் புத்தனுக்கு
ரத்த அபிஷேகம்!
பூஜைக்குப் பறிக்கப் பட்டவை
பூக்களல்ல எம் பிஞ்சுகள்
எரிந்தவை சந்தனமும் சவ்வாதுமல்ல
எம் மக்களின் உடல்கள்!
அபிமன்யுவையிழந்த
அர்ச்சுனனின் வீரமா களம் வென்றது?
கட்டை விரலழுத்திய
கண்ணனின் கள்ளம் தானே?
விதைக்கப்பட்ட எம் வீரர்களே
விளைந்து வாருங்கள்!
சலித்த எம் மனதிற்கு
சக்தி தாருங்கள்!
தொப்புள் கொடியுறவென்றழைத்து
தோள் கொடுக்காது
தொங்கிய தலையுடன்
தொழுது நிற்கிறோம்!
___/\___
