Monday, November 23, 2009

ஆங்கிலம் படுத்தும் பாடு.

மத்திய அரசு அலுவலகங்களில் இந்த ஆங்கிலம் படுத்தும் பாடு இருக்கிறதே. வெள்ளைக்காரன் போகும்போது விட்டுச் சென்றது ஆங்கிலமும் பந்தாவும். வெள்ளைக்காரனுக்கு பந்தா இருக்கிறதோ இல்லையோ. நம்மாளுங்க அத வெச்சிக்கிட்டு படுத்துற பாடு இருக்கே. பெரும்பாலும் வி.எஸ். ராகவன் மாதிரி தமிழ்ல சொல்லி திரும்ப இங்கிலீஷ்ல தப்பா சொல்லின்னு அது பெரிய கூத்து.

ஒரு முறை நம்ம ஆய்பீசர் கூப்பிட்டு யாருக்கோ கடன் பிடித்தம் செய்து அனுப்பிய 27 காசோலைகள் குறித்த தகவல் கேட்டு வந்த கடிதத்தைக் கொடுத்து, உடனடியாக பதில் அனுப்பச் சொன்னார். தேடிப் பார்த்ததில் 3 காசோலைகள் மாற்றப்பட்டிருந்தது.

மிகுதியான 24 காசோலைகள் விபரம் போதவில்லை எனத் திரும்பி விட்டிருந்தன. அதற்கானத் தொகைக்கு ஒரு காசோலை எழுதி, விபரங்கள் கொடுத்து இதனுடன் 24 காசோலைக்கான தொகை இணைக்கப் பட்டுள்ளது என்று ஒரு கடிதம் தயார் செய்து கொண்டு போனேன்.

இந்த எழவு எழுத ஆக்ஸ்ஃபோர்டிலா படித்திருக்க வேண்டும்? வாங்கிப் படித்தவர் துடித்துப் போனார். அய்யோஓஓஒ என்றலறி யாருப்பா எழுதினா என்றார். நாந்தான் என்றேன். க்ராமரே காணோமே என்றார். அவனுக்கு க்ராமர் தேவையில்லை சார், காசோலைதான் தேவை. அது புரியும் என்றேன்.

ஹாரிபிள் ஐ சே. ஈஸ் இட் இங்கிலீஷ்? என்றார். தெரியல சார். தமிழ் இல்லை. அது தெரியும். ஏன்னா நான் 11ம் வகுப்பு வரைக்கும் தமிழ்ல தான் படிச்சேன். இந்த எழுத்தெல்லாம் இங்க வந்து ஃபைல்ல பார்த்து எழுதினது தான். இப்படியே 25 வருஷம் தள்ளிட்டேன். இனிமே எங்க போய் நான் இங்கிலீஷ் படிக்க என்றேன்.

ட்ரொயிங் என்று பெல்லடித்து ஸ்டெனோவைக் கூப்பிட்டு டிக்டேஷன் கொடுத்தார். அவனும் டைப் செய்து கொண்டுவந்தான். கையெழுத்து கிறுக்கி, இப்போ பாரு. இப்படி எழுதணும் என்றார். வாங்கிப் படித்தேன். எப்புடி இருக்கு என்றார் பெருமையாக. சார். எனக்குதான் இங்கிலீஷ் தெரியாதே. க்ராமர் இருக்கா இல்லையா தெரியலை. ஆனா தகவல் தப்பு. நான் 3 காசோலை மாத்தியாச்சு, 24 காசோலைக்கான தொகை இணைத்திருக்குன்னு எழுதுனேன். இதில 23 காசோலை மாத்தியாச்சி 3 காசோலைக்கான தொகை இணைத்திருக்குன்னு இருக்குன்னேன்.

தட் இடியட் ஸ்டெனோ என்று திட்டியபடி, திரும்ப டிக்டேஷன் கொடுத்து, திரும்ப கையெழுத்து கிறுக்கி, நீட்டி இப்பொழுது பார் என்றார். நம்ப மாட்டீர்கள். ஒரு வார்த்தை மாறாமல் நான் முதலில் எழுதியதுதான். விதியேடா என்று நகர்ந்தேன். என்னய்யா ஒண்ணும் சொல்லாம போற என்றார். நான் ஆஃபீஸ் காபியை ஒரு ஜெராக்ஸ் எடுத்து, என் கடிதத்துடன் சேர்த்து ஏன் சார், நான் எழுதி கொண்டு வந்ததை திரும்ப டிக்டேஷன் கொடுத்தா க்ராமர் வந்துடுமா? என்ற படி வெளியே வந்தேன்.

இதில் டிக்டேஷன் கொடுக்கிற அழகிருக்கே. இதப் பாருங்க புரியும்:

ம்ம். டிக்டேஷன் எடுத்துக்கப்பா. ஆஃபீஸ் அட்ரஸ் போட்டுக்க. (ஸ்டெனோக்கு தெரியாது பாரு)

ஃபைல் நம்பர் இது போட்டுக்க (அவரு சட்டையே பண்ண மாட்டாரு)

டி.ஓ.ப்பா. (சரி. சார்)

அவுங்க பேரு வந்து வந்து வந்து (5 நிமிஷம் யோசித்து) ஆர்த்தி சக்சேனா. மிசசு அவுங்க. மை டியர் போடுறதா, டியர் ஸ்ரீமதி போடுறதா.ம்ம்ம்....ம்ம்ம்ம்... சரி டியர் ஆர்த்தி போடு...இரு இரு.....அவுங்க எனக்கு சீனியரு...டியர் மிசஸ் ஆர்த்தி போடலாமா ஆர்த்தி சக்சேனா போடலாமா?ம்ம்ம்....இன்னாய்யா ஸ்டெனோ நீ. எல்லாம் நான் சொல்லணுமா?

சரி..டியர் மிசஸ் ஆர்த்தி சக்சேனா போடு (சார். மிஸஸ் சக்சேனா போட்டா போதும் சார், போன முறை அப்படித்தான் போட சொன்னீங்க)

சரி போடு... போட்டியா.. இன்னா எழுதுன படி ( எழுதினதே டியர் மிஸச் சக்சேனா தான். இதுக்கு 30 நிமிஷமாகியிருக்கும்)

போட்டியா. சரி சப்ஜெக்ட் இதுல இருக்கிறதே போட்டுக்க. ரெப்ரென்ஸ் இந்த லெட்டர் போட்டுக்க.

இப்போ மேட்டர். கைண்ட்லி ரெஃபர் டு தி லெட்டர்..இல்ல வேணாம் ப்ளீஸ் கனெக்ட் தி லெட்டர் சைடட்..சரியா வரல போலயே. எங்க படி...

இதுக்கும் மேல அப்புடியே சொன்னா P.C.ய உடைச்சிட்டு அடிக்க வருவீங்க. நிப்பாட்டிக்கிறேன்.கிட்டத் தட்ட ஒரு இரண்டு மணி நேரமாகி இருக்கும். சீக்கிரம் ட்ராஃப்ட் அடிச்சி எட்தாப்பா. (சார். லஞ்ச் டைம் வந்துடிச்சி. சாப்புடுங்க. நானும் சாப்பிட்டு கொண்டுவரேன்)

மூன்று மணி வாக்கில் ட்ராஃப்ட் வரும். கடைசி பெல் அடித்த பிறகும் விடை எழுதும் மாணவன் போல் அப்ரூவ் செய்து, சீக்கிரம் ஃபேர் காபி கொண்டு வா என்பார்.

(ஒரு மணி நேரம் கழித்து வரும் ஸ்டெனோவிடம்) ஒரு ஃபேர்காபி எடுத்துனு வர இவ்ளோ நேரமா?

எங்க சார். யூபிஎஸ் இல்ல. இங்க அப்ரூவல் வாங்க கொண்டு வரதுக்குள்ள கரண்ட் போச்சி. வந்ததும் எல்லாம் திரும்ப டைப் பண்ணி கொண்டு வந்தேன்.

எதுனா ஒண்ணு சொல்லுவ. உடனே ப்யூன் கிட்ட குடுத்து ஸ்பீட் போஸ்ட்ல அனுப்ப சொல்லு.

(அரை மணி கழித்து) ஏம்பா அனுப்பிட்டியா? கான்ஃபிடென்ஷியல்னு போட்டியா?

அய்யய்யோ இல்லை சார். இருங்க இன்னோரு காபி கொண்டு வரேன். அதுல சைன் பண்ணுங்க. அதுக்குள்ள ப்யூன் செல்லுக்கு ஃபோன் பண்ணி போஸ்ட்ல குடுக்க வேணாம், நான் வரேன்னு சொல்லிடுங்க என்று ஏக குளறுபடிகளுக்கப்புறம் போகும் அந்த லெட்டர் இப்படி இருக்கும்:

Kindly refer to the letter cited above. In this connection your attention is invited to detailed instructions already funished in this office letters of xx/xx/xxxx and xx/xx/xxxx. Since the matter is delayed for more than 15 months, and the information is required to be submitted long back , immediate reply is requested.

                                                                                                   yours sincerely

ஏங்க. இத போஸ்டர் அடிச்சி ஒட்டினா கூட யாருக்காவது புரியும்? இதில கான்ஃபிடென்ஷியல் வேற.

(டிஸ்கி: ஓஹோ. இவன் அடிச்ச கூத்த யாரோ அடிச்சா மாதிரி சொல்றான் பாருன்னு வடிவேலு சீன் மாதிரி சொல்ல வேணாம். இடுகை போடுறவன் இதுக்கா ஸ்டெனோ தேட போறேன்? இஃகி இஃகி)
-------------
Post a Comment