Friday, November 13, 2009

பூவும் தலையும்!!!






உன் மடி சாய்ந்து
விரல் கோர்த்து
நீ மௌனமாய் இருக்கையில்
ஓராயிரம் அர்த்தம் தெரிகிறது!
ஊடலுடன் மௌனமாயிருக்கையிலோ
ஒன்றுமே புரியாமல் தவிக்கிறேன்!

*
முந்தானை முடிச்சு!
உன்னுடன் நடந்த ஓர் நாள்
சரிந்த முந்தானையை
சட்டெனச் சரி செய்ய‌
என் முகமுரசிப் போனதில்
என் மூச்செடுத்து
உன் வாசம் நிரப்பிப் போனது
உன் முந்தானை..
சீராய்த் துடித்த என் இதயம்
அது முதல் நீயாய்த் துடித்தது!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தலை:
 
ஒரு வழியாய் லாக் ஆஃப் செய்து மணி பார்த்தாள் திவ்யா. அதிகாலை இரண்டு ஆகிவிட்டிருந்தது. ஆன் சைட் ப்ரோஜெக்ட் ஹெட்டைத் திட்டிக் கொண்டே ரிசப்ஷனுக்கு ஃபோன் செய்து கார் வந்துவிட்டதா என உறுதி செய்து கொண்டாள். மதியமே மழை பின்னி எடுத்தது கவனம் வர கலவரமாய் போர்டிகோ சேர எப்பொழுதும் வரும் டிரைவர் வரவில்லை. புதிதாய் யாரோ ஒருவன். பார்த்த மாத்திரத்தில் மனதில் நெருடல்.

வேறு வழியில்லை, போயாக வேண்டும். அட்ரஸ் தெரியுமா? அவர் வரலைங்களா என்றபடி ஏறி அமர்ந்தாள். அவருக்கு உடம்பு சரியில்லைங்க. மெயின்ரோடு வந்த பிறகு வழி சொல்லுங்க என்றவாறு காரை ஸ்டார்ட் செய்தான். மழை மிகவும் அதிகமாக இருந்தது. வீதிகளில் அங்கங்கே வெள்ளக் காடு. பயந்தபடியே அமர்ந்திருக்க அவர்கள் அவென்யூவிற்கு செல்லும் பிரதான வீதி வந்தது. அடுத்த‌ லெஃப்டில‌ போங்க‌ என்றாள்.

திடீரென‌ ப‌க் ப‌க் என‌த் திண‌றிய‌ கார் தானே நின்ற‌தா, ட்ரைவ‌ர் நிறுத்திவிட்டானா என்ற‌ ச‌ந்தேக‌த்துடன் இருக்க, அம்மா வண்டி போகாதும்மா. பக்கங்களா? நான் துணைக்கு வந்து விட்டு வருகிறேன். நடந்துதான்  போக வேண்டும் என்றபோது திட்டமிட்டே செய்திருக்கிறான் என்ற பயம் உறுதியானது. ஒன்றும் வேண்டாம், நானே போகிறேன் என்றவள், ஒரு முறை கணவனுக்கு ஃபோன் செய்தாள். எடுத்த பாடில்லை.

இறங்கி கடவுளை வேண்டிய படி கனத்த மழையில் நடக்கத் தொடங்கினாள். சிறிது தூரம் சென்ற பிறகு யாரோ தொடர்ந்து வருவதைப் போல் உணர்ந்து திரும்பிப் பார்க்க, ஒருவன் ரெயின் கோட்டுடன் தொடர்வது தெரிய வேகமாக நடக்கத் தொடங்கினாள். அவனும் வேகமாகத் துரத்தத் தொடங்கினான்.

பயத்தில், மழையிலும் கூட வியர்ப்பதும், பட படப்பாவதும் உணர்ந்து ஓடத் தொடங்கினாள். அவனும் துரத்துவது தண்ணீரில் எழும்பும் கால்தட ஒலியில் தெரிய, வேகத்தை அதிகரித்தாள். கத்தினால் கூட கேட்காத படி மழை அடித்துப் பெய்தது. இன்னும் இரண்டு வீதி கடந்தால் அவர்கள் அவெனியூ. வாழ்க்கையில் முன்னெப்பொழுதும் ஓடாத வேகத்தில் ஓடியவள், வீதி முனைக்கு வர திகைத்துப் போனாள்.

வீதியில் ஒரு விளக்கும் இல்லை. அந்த அதிர்ச்சி தந்த சோர்வில், துரத்தி வந்தவன் நெருங்கியே விட்டான். ஒரே பாய்ச்சலில் மீண்டும் ஓடத் தொடங்கினாள் திவ்யா. ஆறாவது வீடு, வாட்ச்மேன் கதவை வேறு லாக் செய்திருப்பான். மழையில் தூங்குகிறானோ என்னவோ என மனம் தறிகெட்டோட தன் தோள் மீது துரத்தியவன் கை விழுவதை உணர்ந்தாள்.

அடுத்த கணம் மற்றொருகை அவள் வாயைப் பொத்த, திகைத்த சில நொடியில் ஒரே தாவலில் திமிற, மழையில் அவன் பிடி வழுக்க , காப்பாத்துங்க என்று அலறியபடி ஒரே தாவாக தன் வீட்டுக் கதவருகே வந்து விட்டாள். அம்மா என்ற அலறலுடன் துரத்தி வந்தவன் விழவும், வீதியில் விளக்கு எரியவும், வாட்ச்மேன் கதவைத் திறந்து என்னாம்மா என்று ஓடி வரவும் ஒரு சேர நிகழ்ந்தது.

வெளிச்சத்தில் பார்த்த போது துரத்தி வந்தவன் ஒரு குழியில் காலை வைத்துவிட்டான் போலும். கால் நொடித்து விழுந்ததில் பாதம் ட்விஸ்ட் ஆகி ஏறக்குறைய முதுகு பக்கம் திரும்பி இருந்தது. நீங்க போங்கம்மா, நாங்க இவனைப் பார்த்துக்கிறோம் என்ற வாச்மேனுக்கு நன்றி சொல்லி தளர்வாய் நடந்தாள் திவ்யா.

நச் போட்டிக்கு தான் எழுதிய கதையை ஒரு முறை படித்தபின் தன் வலைப்பூவில் வெளியிட்டான் ரகு

(பொறுப்பி: இத விட ஜெனூயினா ட்விஸ்ட்டும் திருப்பமா எப்புடி கத எழுதுறது)
Post a Comment