Monday, November 16, 2009

பொட்டித் தட்டப் போன கதை -1.

 (டிஸ்கி:ஒரு கவர்ன்மெட் ஆஃபீஸ்ல கணினிமயமாக்குறது எவ்வளவு கொடுமைன்னு புரிய வைக்கும் முயற்சி. பிடிக்கலைன்னா பேசித் தீத்துக்கலாம். சரியா!)

அழுக்கடைந்த கோப்புக்களும், தொட்டால் உடையும் பக்கங்களுடனான சட்டப் புத்தகங்களும், நாக்குத் துருத்திக் கொண்டு தலை நிமிராமல் பக்கம் பக்கமாய் எழுதும் குறிப்புக்களும் உலகமென்றிருந்த ஒரு நாள் எல்லாம் மாறிப் போனது.

துப்பறியும் சாம்பு படித்திருக்கிறீர்களா? அந்த அப்புராணி மனுஷன் தும்மினதெல்லாம் துப்பு, இருமினதெல்லாம் இன்ஃபர்மேஷன் என்று இன்ஸ்பெக்டர் கோபாலன் செயலாற்றித் துப்புத் துலக்கி சாம்புவை மெச்சிக்கொள்ளும் போது அந்த மனுஷன்...அட வாங்கி படிச்சி பாருங்க சார்.

இப்பொ நான் சொல்ல வந்தது எம்பொழப்ப. எப்புடி இருந்த நான் இப்படி ஆய்ட்டேன்னு புலம்ப வைக்கும் மாற்றம். நானும் பொட்டி தட்டியா சொந்தச் செலவில சூனியம் வச்சுகிட்ட மாற்றம். எங்க? ஜூனியர் பொட்டி தட்டிங்கல்லாம் ஜோரா ஒரு வாட்டி கை தட்டுங்கோ!ம்ம்ம்ம்ம். அது!

ஒரு திங்க‌ட்கிழ‌மை என் அதிகாரி அறையில் க‌ருப்பாய் கேபிள் டிவி வ‌ய‌ர் தொங்கிக் கொண்டிருக்க‌, என்ன‌ இது என்றேன். தெரிய‌ல‌ங்க‌ என்று அவ‌ர் வேலையில் மூழ்கிவிட்டார். நாம‌ அப்ப‌டி பொறுப்பில்லாம‌ இருந்துட‌ முடியுமா? எங்க‌யோ விசாரிச்சி க‌ண்டு பிடிச்சி, இரைக்க‌ இரைக்க‌ ஓடி வ‌ந்து, கால‌ரா வ‌ந்துட்டுதாம்னு அந்த‌ கால‌த்துல‌ அல‌றுவாங்க‌ளே, அப்புடி வ‌ந்து சாஆஆஆஆர், க‌ம்ப்யூட்ட‌ர் வ‌ருதாம் சார்னு க‌ல‌ங்கிப் போய் சொல்றேன். அட‌ வ‌ர‌ட்டுங்க‌. க‌ம்ப்யூட்ட‌ர் இன்னா க‌ட‌வுளா? கைல‌ எழுத‌ற‌துக்கு ப‌தில் க‌ம்ப்யூட்ட‌ர் இவ்ளோதானேன்னு சொன்னாரு.

ஓரிரு நாட்க‌ள்ள‌ ஒரு டிவி பொட்டி, ஒரு ப்ரீஃப்கேஸ் பொட்டி, அப்புற‌ம் ஒண்ணு வ‌ந்திச்சி. அந்த‌ அப்புற‌ம் ஒண்ணு எங்க‌ளுக்கு வ‌ர‌லை. திடீர்னு பார்த்தா ப‌க்க‌த்து செக்ஷ‌ன் ஜூனிய‌ர் ப‌ய‌ அல‌ப்ப‌றை ப‌ண்றான். அவ‌ரு க‌ம்பீட‌ர் க‌னெக்ஷ‌ன் குடுத்து,ஆன் ப‌ண்ணா என்ன‌மோ எழுத்தெல்லாம் வ‌ந்து C:\>னு வ‌ந்து நிக்க‌ அவ‌ன் என்ன‌மோ டைப் ப‌ண்றான். அதுல‌ என்ன‌மோ வ‌ருது.

ச‌ரி ந‌ம‌க்கு நாமே திட்ட‌த்தில‌ ஆர‌ம்பிச்சிருவோம்னு எல்லாத்தையும் பொட்டியில‌ இருந்து எடுத்து வெச்சா, அந்த‌ ஒண்ண‌ காணோம்.அதெப்புடி ந‌ம்ம‌ ஜூனிய‌ர்கிட்ட‌ போய் அந்த‌ ஒண்ணு ஏன் த‌ர‌லைன்னு கேக்க‌ற‌து. அப்புடியே நோட்ட‌ம் விட்டா UPSனு இருக்க‌ நேர‌ போய் ந‌ம்ம‌ மூத்த‌ அதிகாரி கிட்ட‌ சார் எங்க‌ளுக்கு அப்ஸ் குடுக்க‌ல‌ சார்னேன்.

ம‌னுஷ‌ன் ஆடிப் போய், என்னாய்யா கேக்க‌ற‌ன்னு ப‌ரிதாப‌மா கேக்க‌, ப‌க்க‌த்து செக்ஷ‌ன்ல‌ அப்ஸ் குடுத்திருக்கீங்க‌. அவ‌ன் அத‌ ப‌வ‌ர்ல‌ க‌னெக்ட் ப‌ண்ணி க‌ம்பீட‌ர‌ அதுல‌ சொருகிட்டு C:\> காட்டுறான். நான் காட்ட‌ வேணாமா? என‌க்கு அப்ஸ் வேணும்னேன்.ய‌ப்பா சாமி, நீ போடா நான் த‌ரேன்னு அனுப்பி விட்டு பின்னாடியே அப்ஸ் அனுப்பி விட்டாரு. அப்புற‌ம் பார்த்தா அது பேரு U.P.S. பாருங்க‌ ட‌க்னு எப்புடி புடிச்சிகிட்டேன்.

அப்புற‌ம் ப‌ரிட்சையில‌ ப‌டிக்காத‌ போய்ட்டு ப‌க்க‌த்து ஆளு என்னா எழுத‌றான்னு ஒரு க‌ண்ணு அலையுமே. அப்புடிதான் நான் ப‌க்க‌த்து அல‌ப்ப‌றைய‌ பார்க்குற‌து. ம‌றுநாள் ஒரு அட்டைய‌ சொருவினான், கொஞ்ச‌ நேர‌த்துல‌ கியா கியானு ச‌வுன்ட் வ‌ர‌ பூன‌ விளையாட்டு விளையாடுறான். என்னாதுடான்னு அந்த‌ க‌வ‌ரை எடுத்தா, தொடாத‌, அப்புற‌ம் ஃப்ளாப்பி ப‌டிக்காதுன்னான்.

ங்கொய்யாலே இவ்வ‌ள‌வுதானான்னு, நேர‌ ரிச்சி ஸ்ட்ரீட் போய்ட்டு ப‌ந்தாவா, ஒரு ஃப்ளாப்பின்னேன். கேவ‌ல‌மா பார்த்துட்டு, ஒண்ணெல்லாம் அந்த‌ பொட்டி க‌டையில‌ போய் கேளுன்னான். என‌க்கு தேவை ஃப்ளாப்பி. அது பொட்டி க‌டைன்னா என்ன‌ போச்சுன்னு போய் அங்க‌யும் ஒரு ஃப்ளாப்பின்னேன்.

அவ‌ன் 3.5" ஆ 5.25"(பிழை சுட்டியமைக்கு நன்றி சீனா சார்) ஆன்னான். அட‌ எஞ்சாமி, இதுல‌ இப்புடி வேற‌ ஒரு உள்குத்து இருக்கோ?ன்னு திகைச்சி, ம்ம்ம்..வ‌ந்து வ‌ந்து ரெண்டும் காமி , நான் பார்க்குறேன்னு பார்த்தா ஒன்னு பெருசு, இன்னொன்னு சின்ன‌து. காசு குடுத்து வாங்க‌றோம், பெருசாவே வாங்கிக்க‌லாமேன்னு இது எவ்வ‌ள‌வுன்னா 12 ரூன்னான். சின்ன‌து 20ரூன்னான்.

என்னா எழ‌வுடா, பெருசுன்னு அத‌ கேட்டா விலை க‌ம்மி, சின்ன‌துன்னு பார்த்தா விலை ஜாஸ்தி. ச‌ரி அதில‌ ஒன்னு இதில‌ ஒன்னுன்னு வாங்கிட்டா, நாம‌ கேனையாகாம‌ இருக்க‌லாம்ல‌ன்னு வாங்கிட்டு வ‌ந்து, ஃபளாப்பிய‌ சுத்தி முத்தி பார்த்தா ஒன்னும் காணோம். ந‌ல்ல‌ கால‌ம் ச‌ரியா போட்டாதான் உள்ள‌ போறா மாதிரி வெச்சிருந்த‌தால‌, நாலு ப‌க்க‌மும் ட்ரை ப‌ண்ண‌தில‌ ஒரு ப‌க்க‌ம் ச‌ரியா போச்சி. ஆனா C:\> வ‌ராம‌ அப்புடியே மினுக் மினுக்னு நிக்குது.

வேற‌ விதி. அவன் கிட்ட‌யே கேட்டேன். ஏன்யா உன் மிசின்ல‌ ஃப்ளாப்பி போட்டா பூன‌ வ‌ருது. எம்மிசின்ல‌ வ‌ர‌லையேன்னு. அதுக்கு, என்னொட‌து ஸ்டேன்ட் அலோன், உன்னோட‌து நோடுன்னுட்ட்டு போய்ட்டான். க‌டுப்பாயிடிச்சி. அதெப்புடி அவ‌னுக்கு ஒன்னு எங்களுக்கு ஒரு மாதிரின்னு கேவ‌ல‌மா போச்சி. நேரா பொறுப்பான‌ அதிகாரி கிட்ட‌ போனேன்.

சார், அதென்னா சார் அவ‌னுக்கு ஒரு மாதிரி மிசினு, எங்க‌ளுக்கு ஒரு மாதிரி மிசினுன்னு கேட்டேன். அவ‌ரு எல்லாம் ஒரே மாதிரிதான். இதில‌ என்னா வேற‌ வேற‌ன்னாரு. முன்ன‌ பின்ன‌ செத்தா சுடுகாடு தெரியும்பாங்க‌. ப‌ய‌ புள்ள‌ சொன்ன‌ ஸ்டேன்ட் அலோனுங்க‌ற‌து ம‌ற‌ந்து போச்சி. புகார‌ குடுத்துட்டு ஜ‌கா வாங்க‌ முடியுமா? ட‌க்குன்னு சொன்னேன், அவ‌ன் ஆன் ப‌ண்ணா மானிட‌ர்ல‌ முத‌ல்ல‌ ஒரு ஸ்டார் வ‌ருது. என‌க்கு வ‌ருதில்ல‌. அப்புற‌ம் அவ‌னோட‌ மிசின்ல‌ டூஸ் 6.22னு வ‌ந்து C:\> வ‌ருது. என‌க்கு அப்புடியே நிக்குதுன்னேன்.

அடிச்சாரு பெல்லு. கூப்புடுய்யா அவ‌ன‌ன்னு கூப்பிட்டு, சின்ன‌ பொறுப்ப‌திகாரிய‌ கூப்புட்டு, என்னாய்யா பார்க்க‌ரீங்க‌. இவ‌ன் ஒரு த‌ற்குறி (அப்புடி போடுன்னு யாருய்யா க‌த்துற‌து. அப்புடி சொல்ல‌ல‌. ஹி ஈஸ் ந்யூ டு க‌ம்ப்யூட்ட‌ர்) ஆனாலும் ஹி குட் ஃபைன்ட் அவுட். டென்ட‌ர்ல‌ என‌ர்ஜி ஸ்டார் க‌ம்ப்ளைய‌ன்ட்னு போட்டு வாங்கின‌தாச்சே. அவ‌ன் சில‌து அப்ப‌டி இல்லாம‌ ப‌ண்ணி இருக்கான் பாருன்னாங்க‌.

அதே மூச்சுல அலப்பறகிட்ட‌, ஏன்யா? உன‌க்கெப்ப‌டி ஸ்டேன்ட‌லோன் பி.சி.(ஆங் அதான் சார் அதான் சார்னு ம‌ன‌சுக்குள்ள‌ நான்) அன்ட் நாம‌ டாஸ் 6.0 (ஓஓஓ. அது டாஸோ. இது தெரியாம‌ நான் டூஸ்னு சொல்லிட்ட‌னே. சை)வாங்கினோம். உன‌க்கெப்ப‌டி 6.22. ஒரு டிஸ்க் காபி (இதென்னாடா எழ‌வு) அடிச்சி குடுன்னுட்டாரு.

சின்னவரு, என்ன‌ த‌னியா ஓர‌ம் க‌ட்டி கூட்டிகிட்டு போய், எதாவ‌து இருந்தா இனிமே என் கிட்ட‌ சொல்லு. அவ‌ர்கிட்ட‌ போய் சொல்லி வாங்கி க‌ட்ட‌ விடாத‌ன்னு சொல்லிட்டு பார்த்தா, 12 PCல 8க்கு என‌ர்ஜி ஸ்டார் இல்ல‌. கேக்க‌ணுமா, ஹி ஹேஸ் டன் எ மார்வலஸ் ஜாப்னு மெச்சிகிட்டாங்க. அந்த ஜோர்லயே எனக்கும் என்னா எழவுக்குன்னே தெரியாம ஒரு ஸ்டேன்டலோன் குடுத்தாவணும்னேன். பின்ன பூன விளையாட்டு விளையடுறது எப்படி?

ம்ம்ம். அது ஒரு க‌னாக்கால‌ம். இப்போ மாதிரியா. ஆன் ப‌ண்ணி விட்டா இட்லி க்ரைன்ட‌ர் மாதிரி ஊஊஊஊம்னு அரைச்சி த‌ள்ளி 10 நிமிஷ‌ம் க‌ழிச்சி விண்டோஸ்னு வ‌ந்து அப்புற‌ம் 5 நிமிஷ‌ம் க‌ழிச்சி பாஸ்வேர்ட் கேட்டு அப்புற‌ம் 5 நிமிஷ‌ம் க‌ழிச்சி அது லோடாவ‌ல‌, இது டெர்மினேட‌ட்னு வேல‌ வாங்கி டெஸ்க்டாப் வ‌ர‌துக்குள்ள‌ க‌ண்ண‌ க‌ட்டுதே. போட்ட‌மா? உசுக்குன்னு வ‌ந்து C:\>னு நிக்கும்.

அடுத்த நாள் அந்த கருப்பு வயர கனெக்ஷன் குடுத்து, ஆன் பண்ணா F:\>னு வந்திச்சி. சர்வர்(ஹோட்டல்ல தானடா இருப்பாங்க),மெமரி (மிசினுக்கு கூடவா),ஃபார்மட்டிங், கனெக்டிவிடி, பூட்னு அவங்களுக்குள்ள கெட்ட வார்த்தைல திட்டிக்கிறத பார்த்து மலைச்சி போய் மெது மெதுவா தெரிஞ்சிகிட்டது பெரிய ராமாயணம்.

ஆனாலும் F:\> வந்தாலும் ஃப்ளாப்பி போட்டா பூன விளையாட்டு வரலை. நெஞ்சு பொறுக்குதில்லையேன்னு அலப்பறைகிட்ட போய், இங்க பாரு புது ஃப்ளாப்பி. எனக்கு பூன விளையாட்டு வரமாட்டங்குது. ஒன்னு வர வை, இல்லன்னா உன் ஃப்ளாப்பி குடு இத வச்சிக்கோன்னு மிரட்டுனேன்.

விதிய‌டான்னு கேம்ஸ் காபி ப‌ண்ணி குடுத்து எப்புடி A:\> கு போய் என்னா த‌ட்டினா கேம் வ‌ரும்னு சொல்லி குடுத்தான். 2 நாள்ள‌ ப்ரோக்ராமர் வ‌ந்து, ப்ரொக்ராம்ல எப்புடி வர்க் பண்றதுன்னு சொல்லி குடுத்தாரு. அப்புறம் ஒரு மாதிரியா ஃப்ளாப்பி படிக்க மாட்றான், பூட் ஆக மாட்றான், ஃப்ளாப்பில இருந்து பூட் பண்றதுன்னு எல்லா கெட்ட வார்த்தையும் கத்துகிட்டேன்.

குட்டி பசங்கல்லாம் தண்ணி ரெடியா வெச்சிக்கிங்கப்பா. நம்ம நெட்வர்க் கன்ஃபிகரேஷன் கேட்டு மயங்கிட போறீங்க. சர்வருக்கு நாவல் நெட்வேர் 4.0. ஹார்ட் டிஸ்க் 10 எம்.பி. (அப்புறம் 20 ஆக்கினது 2 டிஸ்க் போட்டு) மெமரி 4 எம்பி (அப்புறம் 8 ஆக்கினது) ஸ்டேன்டலோன்ல 1 எம் பி மெமரி, 5 எம் பி ஹார்ட் டிஸ்க். நெட் வர்க் ஹேங்க் ஆனா வயர ஆட்டி விட்டா போதும்.

ங்கொய்யால. அமெரிக்காகாரன் எதுனா தப்பு பண்ணிட்டு ஊப்ஸ்னு ஒரு சவுண்டு குடுப்பான் பாரு. அத வச்சிட்டான் பேரு. தப்பு தப்பா ப்ரோக்ராம் பண்றதுக்கு பேரு ஊப்ஸ் ப்ரோக்ராமிங்னு. எல்லாம் குட்டிச் செவுரா போச்சி.

Post a Comment