Thursday, August 27, 2009

திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால்..

நண்பர் கதிரின் சரி...யார் நிறுத்துவது... என்ற இடுகையில் சொல்லி இருந்தார்:

"300 ரூபாய் கையூட்டை பிடிக்க 1200 ரூபாய் செலவா என்று என்னிடம் ஒரு குறுநகை வந்தது. “புகார் கொடுக்கும் ஒரு குடிமகனுக்கு நாங்கள் இருக்கிறோம் என்ற பெரிய நம்பிக்கையை கொடுப்பதுதான் எங்கள் கடமை. கையூட்டு என்பது பணத்தின் அளவில் இல்லை, 300 ரூபாய் என்பது கையூட்டாக வாங்குபவனுக்கு ஒரு வேளை சாப்பாட்டிற்கான பணமாக இருக்கலாம், ஆனால் அந்த கூலித் தொழிலாளிக்கு பத்து நாள் சாப்பாடு, அதாவது அவனுடைய பத்து நாள் உணவையே இன்னொருவன் திருடுகிறான்” என்று அவர் சொன்னது தான் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது."

படிப்பதற்கு மிகவும் அழகாக நம்பிக்கையூட்டுவதாக இருப்பினும் இது உண்மையல்ல. இது எந்த விதத்திலும் குடிமகனுக்கோ, ஊழலை ஒழிப்பதற்கோ உதவாது எனக் கூறினால் என்னை அடிக்க வருவீர்கள். உண்மை இதுதான். அந்த அதிகாரியே கொஞ்சம் மனம் திறந்தால் இப்படித்தான் புலம்பி இருப்பார். காரணம், அந்த‌க் குடிமகனுக்கு எதற்காக லஞ்சம் கோரப்பட்டதோ அது உடனே முடிந்துவிடும் என்பதில்லை. மாட்டிய ஊழியர், சக ஊழியருக்காக இல்லா விடினும், இந்த ஆள் வில்லங்கமான ஆள் என்று என்னவெல்லாம் முட்டுக்கட்டை இருக்கக் கூடுமோ தேடுவார். குடிமகன் சாட்சி, சம்மன் என்று அலைய வேண்டும். மாட்டிக் கொண்ட ஊழியரைப் பொறுத்தவரை இரண்டு கட்டமாக நடவடிக்கை இருக்கக் கூடும். ஒன்று நிர்வாகம் சார்ந்த ஒழுங்கு மற்றும் முறையீட்டுச் சட்டத்தின் கீழ். மற்றது காவல்துறை நடவடிக்கை மூலமாக நீதிமன்ற வழக்கும் தீர்ப்பும்.

முதல் வழியின் மூலம் இவ்வளவு சிறிய குற்றத்தை எளிதில் மறைக்கவோ, நிர்வாக முறைகேடு சுட்டியோ தப்ப முடியும். தொழிற்சங்கம், ரெகமென்டேஷன் மூலம் சிறிய தண்டனையோடு தப்ப முடியும். நீதி மன்ற கேஸ்களில் நல்ல வக்கீல் போதும்.

ஒரு உதாரணம் சொல்கிறேன். உண்மையில் நடந்த சம்பவம். அவர் ஒரு பொறியியல் அதிகாரி. மத்திய அரசுப் பணியைச் சார்ந்தவர். ஒரு உதிரி பாகத்தைப் பெற டெண்டர் விடப்பட்டு முறைப்படி ஆர்டர் கொடுக்கப்பட்டு, அந்த பாகத்தை சப்ளை செய்யும் கம்பெனியுடன் கூட்டுச் சதி செய்து, பொருள் வந்ததாகவும், பயன் படுத்தப் பட்டதாகவும் ஆவணத்தில் மடும் பதியப்பட்டு கம்பெனிக்குப் பணம் பட்டுவாடா செய்து கம்பெனியிடமிருந்து பணமாகப் பெற்றுக் கொண்டார். கம்பெனிக்கு சப்ளை செய்யாமலே கமிஷன் தொகை கிடைத்தது என்பது புகார்.

கூட்டுச் சதி/மோசடி என்பதால் காவல் துறைக்கு சென்றது வழக்கு. விசாரணையில் ஆவணங்கள் தெளிவாக இருந்தாலும் புகார் உண்மை எனத் தெரிகிறது. விசாரணையில் உதிரி பாகம் ஒன்று பொருத்தப் பட்டால், பழுதடைந்த பாகம் கணக்கில் வர வேண்டுமே எங்கே என்று கேட்கப் பட்டதற்கு ,அது பழுதல்ல; அது உடையும் தன்மை உள்ளது. எனவே பொருத்தப் படும்போதெல்லாம் பழைய பாகம் இருக்க வேண்டும் எனக் கூற முடியாது என்பது பதில். அது நியாயமானாலும், மிக மிகக் குறைந்த அளவே பழைய பாகங்கள் கணக்கில் வந்தன. ஆனாலும் ஐயமின்றி இதில் உண்மை இல்லை என நிரூபிக்க முடியாமல் போனது.


புகாரின் மறுபாதியான பணம் பெற்றுக் கொண்டதற்கான புகாருக்கு, அதிகாரியின் வீடு சோதிக்கப்பட்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு மிக நேர்த்தியாக அவர் வேலைக்கு சேர்ந்தது முதல் சம்பளம் போன்ற ஊதியங்கள் எல்லாம் கணக்கில் கொண்டு வரப்பட்டு, அவர் குடும்பத்துக்கு எவ்வளவு செலவிட்டிருக்கக் கூடும் என்றும் தாராளமாக கணக்கிடப்பட்டு வருவாய்க்கு மேல் இவ்வளவு பணம் என வழக்கு பதியப்பட்டது.

அதிகாரி தரப்பில் மிகத் திறமையான வழக்கறிஞர். அதிகாரிக்கு வெளியூரில் வேலை நிமித்தம் செல்ல நேரிடின் பயணப்படி வழங்கப்படும். அது கூடுதல் வருமானமாக இருக்கக் கூடாது என்பது வழிமுறையாய் இருப்பினும் அதுவும் ஒரு வருமானம். என் கட்சிக்காரர் மிக எளிமையானவர். புலால் உண்பவரல்லர். ஒழுக்கமானவர் என்பதால் எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. காலை சிற்றுண்டி, மதியம் எளிமையான அளவான சைவச் சாப்பாடு, இரவு சிற்றுண்டி என்ற உணவுப் பழக்கம் உள்ளவர். தங்குமிடம் அலுவலகமே கொடுப்பதால் பயணப் படியில் சேமிப்பு சாத்தியம். இது கணக்கில் கொண்டு வரப்பட வேண்டும் என்று வருமானத்தைப் பெருக்கினார். செலவினத்திலும் அரசுத் தரப்பில் எங்கெல்லாம் தாராளம் காட்டினார்களோ அங்கெல்லாம் குறைத்து சில செலவினங்களை நியாயமாகக் கூட்டி மிக நேர்த்தியாக வரவு செலவு கணக்கு தயாரித்ததில் விழுந்த துண்டு எவ்வளவு தெரியுமா? வெறும் 6 ஆயிரம் ரூபாய்.

தன் மைத்துனி திருமணத்துக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவியதாகவும் அந்தப் பணம் பல வருடங்கள் கழித்து திரும்பக் கொடுக்கப்பட்டதாகவும் அந்தந்தக் காலக்கட்டத்தில் கணக்கு காட்டப்பட்டது. தகுந்த ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் சந்தேகத்துக்கான பலன் குற்றவாளிக்கு வழங்கப்பட்டு கேஸ் தள்ளுபடி செய்யப்பட்டது. எல்லாமே இப்படியா எனக் கேட்பவருக்கு பதில் மிகப் பெரும்பாலும் இப்படித்தான் என்பதுதான் உண்மை. மிக்ச் சிறிய மீன் அகப்படும். சொன்னாற்போல் ஆன செலவுக்கு சம்பந்தமே இல்லை.

அதை விட வேடிக்கை என்னவெனில், நீதிமன்றத்தில் ஜெயித்தாலும் நிர்வாகத்தினர் கோடாரிக் காம்புகளை நீக்கவென்றே ஒரு சட்டம் இருக்கிறது. அதிகாரிகள் மட்டத்தில் 50 வயதானவர்களின் பணித்தேவை பரிசீலிக்கப்பட்டு தேவையில்லை எனில் நீக்கப்படலாம். ஒருமாத சம்பளம் நோடீசுக்கு பதிலாக வழங்கப் பட வேண்டும் என்பது. அந்த விதியின் படி பணிநீக்கம் செய்யப்பட்டது. அலுவலக நேரம் முடிய அழைக்கப்பட்டு, நோட்டீஸ் சம்பளம் செக் வழங்கப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்ட ஆணை கொடுக்கப்பட்டது. சிரித்தபடி எதிர்பார்த்தாற்போல் வாங்கிக் கொண்டு சென்றார். மத்தியப் பணியாளர் ஆயத்தில் வழக்குப் போட்டார். தனக்கு இன்கிரிமென்ட் வழங்கப் படவில்லை (வெறும் ரூ 100. காரணம் இவருடைய பணி ஆவணங்கள் காவல் துறையிடமிருந்து வந்திருக்கவில்லை). எனவே சட்டப்படி கொடுக்கப்பட்ட நோட்டீஸ் சம்பளம் முழுமையானதல்ல. சட்டப் படி பணமாகத் தந்திருக்கப்பட வேண்டும். செக்காக வழங்கப்பட்டது. இது வரை தன் பணி குறித்து எந்தவித அதிருப்தியும் தெரிவிக்கப் படவில்லை என்பது காரணங்கள்.

அத்தனைக் காரணங்களும் ஏற்கப்பட்டு பணிநீக்கம் செய்யப் பட்டது செல்லாது எனத் தீர்ப்பாகியது. வெற்று கவுரவத்துக்கு உயர்நீதி மன்றம் உச்சநீதி மன்றம் எனப் போனதில் வருடங்கள் கடந்து, பணிமூப்படைந்த பின்னர்தான் உச்சநீதி மன்றத் தீர்ப்பு வந்தது. பணி நீக்கம் செல்லாது என்பதோடு, இடைக்காலம் முழுதும் பணியிலிருந்ததாகக் கருதி முழு சம்பளம் பதவி உயர்வு எல்லாம் அளிக்கப்படவேண்டுமென்று.

இதுதான் யதார்த்தம். புகார் கொடுத்தவர் அடைந்த பலன் என்ன? அது போகட்டும் இப்படி வழி இருப்பது என்ன பயத்தைத் தோற்றுவிக்கும். "திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால்" என பிகிலடிக்க வேண்டியதுதான். ஊழல்தடுப்பு அதிகாரியைப் பொறுத்த வரை அவர் கடமை கேஸ் பதிவு செய்து கோர்டில் சமர்ப்பிப்பது வரை. அப்புறம் சட்டம் ஒரு இருட்டறைதான். பெரிய மீன் கதை..சரி சரி இதுவே இழுவை. தப்பிச்சிப் போங்க.

12 comments:

இது நம்ம ஆளு said...

"திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால்.."

அப்புறம் சட்டம் ஒரு இருட்டறைதான். பெரிய மீன் கதை..சரி சரி இதுவே இழுவை. தப்பிச்சிப் போங்க.

உண்மை !

ஈரோடு கதிர் said...

//ஊழல்தடுப்பு அதிகாரியைப் பொறுத்த வரை அவர் கடமை கேஸ் பதிவு செய்து கோர்டில் சமர்ப்பிப்பது வரை. அப்புறம் சட்டம் ஒரு இருட்டறைதான்.//

அறையும் உண்மை

உங்கள் இடுகையில் உள்ள கசப்பான உண்மைகளை ஏற்றுக்கொள்கிறேன்.

vasu balaji said...

/இது நம்ம ஆளு said...

உண்மை !//

வாங்க. நன்றி!

vasu balaji said...

/கதிர் - ஈரோடு said...

அறையும் உண்மை

உங்கள் இடுகையில் உள்ள கசப்பான உண்மைகளை ஏற்றுக்கொள்கிறேன்.//

நன்றி கதிர். ஓர் நேர்மையான அரசு ஊழியனாக/அதிகாரியாக எவ்வளவு அழுத்தம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவா நெடுநாட்களாக உறுத்திக் கொண்டே இருக்கிறது. அனைவரின் கிண்டலுக்கும் அருவருப்புக்கும் ஆளாகும் பாவப்பட்ட இனம் அது. அதன் மறுபக்கம் யாரும் அறியாதது. பார்க்கலாம்.

இராகவன் நைஜிரியா said...

அண்ணே திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது சரிதான்.

பல இடங்களில் நம் மக்களின் அலட்சிய போக்கும் காரணமாகுதுண்ணே. சிரமம் பார்க்காம நாமே போய் பார்த்தா பல இடங்களில் காரியம் முடிந்துவிடும். செய்ய மனதில்லை. காசைத் தூக்கிப் போட்டா வேலை நடந்துவிடும் என்று நினைக்க ஆரம்பித்து விட்டனர். மேலும், இது லஞ்சம் கொடுப்பது என்பது மக்கள் மனதில் சாதாரணமான விசயமாக நினைக்கின்றார்கள்.

லஞ்சம் வாங்க அதிகாரியாக இருந்தால், இந்த மனுஷன் லஞ்சத்தை வாங்கிக்கொண்டு காரியத்தை முடிச்சுக் கொடுக்காம ஏன் தான் உயிரை எடுக்கிறார் என்று திட்டுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இங்கு திருந்த வேண்டியது லஞ்சம் வாங்குபவர்கள் மட்டுமல்ல கொடுப்பவர்களும்தான்.

க.பாலாசி said...

தாங்கள் கூறியது, கதிர் அய்யா கூறியது இரண்டையும் படித்துவிட்டேன். இவையிரண்டையும் சீர்தூக்கிப்பார்க்கும் ஞானம் இல்லையென்றாலும் என்னுடைய ஒரு கருத்தை சொல்ல விரும்புகிறேன்.என்னவென்றால்....

ஒருமுறை ஒரு ஊழியன் இவ்வாறான லஞ்ச குற்றச்சாட்டில் உட்படுவானாயின், அவன் இந்த சமுதாயத்தால் அடையாளம் காணப்படுகிறான். இவன் இப்படிப்பட்டவன் என்பதை இந்த சமுதாயம் உணர்கிறது. இதுவே லஞ்ச ஒழிப்புத்துறையின் செயல்களுக்கு கிடைக்கும் வெற்றிதான், புகார் தெரிவிப்பவனுக்கும் அது வெற்றிதான். அவன் வேண்டுமானால் சட்டத்தின் பிடியிலிருந்தோ அல்லது அதிலுள்ள ஓட்டைகளின் வழியாகவோ தப்பித்துவிட்டாலும், அவன்மீது படிந்த கறை எப்போதுமே நீங்காது. மறுமுறை அவனை அந்த இடத்தில் வைத்து அழகுப்பார்த்தாலும் அது ஒரு ஏளனப்பார்வையாகவே இருக்கும். இப்படி மனரீதியாக அவன் அவமானப்படுவதால் மறுமுறை கையூட்டு பெற அவன் கை இயல்பாகவே கூசத்தான் செய்யும் (செய்யவேண்டும்) அவன் (சாதாரண) மனிதனாக இருக்கும்பட்சத்தில். இதற்கு அரசியல்வாதிகள் விதிவிலக்கு. ஏனென்றால் அவர்களுக்கு 6க்கு அரைமுழம் கம்மி. அப்படி இல்லையென்றால் சட்டத்தின் ஓட்டையில் புகுந்து வெயிவரும் இவ்வாறான ஆட்களின் தலையை மட்டும் வெட்டிவிடவேண்டும்.

//வெற்று கவுரவத்துக்கு உயர்நீதி மன்றம் உச்சநீதி மன்றம் எனப் போனதில் வருடங்கள் கடந்து, பணிமூப்படைந்த பின்னர்தான் உச்சநீதி மன்றத் தீர்ப்பு வந்தது. பணி நீக்கம் செல்லாது என்பதோடு, இடைக்காலம் முழுதும் பணியிலிருந்ததாகக் கருதி முழு சம்பளம் பதவி உயர்வு எல்லாம் அளிக்கப்படவேண்டுமென்று.//

பல அரசுத்துறை நிறுவனங்களில் இதுமட்டுமே செவ்வனே நடக்கிறது. இதில் வரட்டு கவுரவம் என்று மட்டுமில்லை, ஒரு ஃபார்மாலிட்டிக்காகவே செய்கிறார்கள். (அது நீதிமன்றத்தின் காலதாமதத்தினால் கூட இருக்கலாம்)

vasu balaji said...

/இராகவன் நைஜிரியா said...
இங்கு திருந்த வேண்டியது லஞ்சம் வாங்குபவர்கள் மட்டுமல்ல கொடுப்பவர்களும்தான்.//

ஆமாம் சார். வெள்ளிக்கிழமை நல்ல நாள்னு ரிஜிஸ்ட்ரார் ஆஃபீஸ்ல அலைமோதும் கூட்டம். அஃபீஸ் நேரம் தாண்டியும் பதியணும்னு நம்மாளே காச குடுப்பாங்க. செவ்வாய்க் கிழமை ஈ அடிச்சிட்டு உக்காருவானா? கடன் பத்திரம் பதியுறவன், வேற ஏதோ சர்டிஃபிகேட்னு வரவன் எல்லாருட்டையும் அவன் கேக்க ஆரம்பிச்சிடுறான்.

vasu balaji said...

க. பாலாஜி said...

/இவன் இப்படிப்பட்டவன் என்பதை இந்த சமுதாயம் உணர்கிறது. இதுவே லஞ்ச ஒழிப்புத்துறையின் செயல்களுக்கு கிடைக்கும் வெற்றிதான், புகார் தெரிவிப்பவனுக்கும் அது வெற்றிதான்./

மனப்பூர்வமா இத நம்புறீங்களா சார்? நடுரோடில ஓடி ஓடி லாரிக்காரன் கிட்ட லஞ்சம், டூ வீலர்காரனிடம் லஞ்சம், நடைபாதை வியாபாரியிடம் தண்டல் எல்லாம் சமுதாயத்தில் தான் நடக்கிறது. பெரும்பான்மையாகிவிட்ட படியால் எல்லாரும் தான் வாங்குறாங்க மனப்பான்மைதான் அதிகம்.

/ஒரு ஃபார்மாலிட்டிக்காகவே செய்கிறார்கள். /

பழிவாங்குவதற்காகவும்

நன்றி பாலாஜி

Maheswaran Nallasamy said...

அது சரி.. லஞ்சம் கொடுக்க கூடாது சொல்லுறவன் பொழைக்க தெரியாத ஆளு சார் நம்ம ஊருல. கையூட்டு கொடுத்து காரியம் முடிக்கிறவன் இங்கே திறமையான ஆளு. போலீஸ் ஸ்டேஷன்-ல கூட காசு கொடுக்க மாட்டேனு சொன்ன வெள்ளை பேப்பர் ஒரு ஐம்பது வாங்கி தான்னு சொல்லுறான். பின்னாடி அத அதே கடைல கொடுத்து காசா திரும்ப வருது அவங்க சட்டை பைக்கு."வாழ்க ஜனநாயகம்"

vasu balaji said...

Maheswaran Nallasamy said...
/பின்னாடி அத அதே கடைல கொடுத்து காசா திரும்ப வருது அவங்க சட்டை பைக்கு."வாழ்க ஜனநாயகம்"//

சரியா சொன்னீங்க

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

இதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வாதமே.திருடனாய்ப் பார்த்து திருந்துவதெல்லாம் நடக்காத காரியம் என்று தோன்றுகிறது.

vasu balaji said...

வாங்க ஸ்ரீ!.