Sunday, August 16, 2009

மனம் விரும்புதே உன்னை உன்னை - 1

போன மாதம் தேனி போக மதுரையில் இறங்கி ரயில் நிலைய ஓய்வறையில் குளித்து பெட்டியை கெடாசிட்டு பொறுப்பான ஆளிடம் பஸ் நிலையம் எங்கேன்னு கேட்ட போது எனக்குத் தெரியல. இப்படி ஒரு சோதன காத்துக் கிடக்குன்னு. தனியார் பஸ் சீக்கிரம் போகும்னு சொன்னாங்கன்னு போனா நிறைய பஸ் நின்னிச்சி. சரி ஒரு மணி நேரப் பயணமாச்சே, எந்த பஸ்னு கேக்கலாம், அப்படியே ஒரு தின இதழ் வாங்கலாம்னு போய் இருந்த தினமலரை வேண்டா வெறுப்பா வாங்கினப்பதான் அதுங்கள பார்த்தேன்.

கருகருன்னு மினுக்க மினுக்க கண்ணாடி உடையில ஒன்னு என்னைப் பார் என் அழகைப்பார்னு இழுக்க பக்கத்துலயே ரோஜா நிறத்துல ஒன்னு மினுக்குது. சின்ன வயசுல சென்னைல பார்த்தது. அப்புறம் கண்ணுல காணுறதே இல்லை. இதுங்கள மதுரையில பார்ப்பேன்னு நினைச்சது கூட இல்லை. அதும் அப்போ பார்த்த மாதிரியே அதே அழகு. கொஞ்ச வருசம் குறைஞ்ச வருசமில்லிங்க. சின்ன வயசுல இருந்து இதுங்க கூட பழகமாட்டமான்னு ஏங்கின ஏக்கம். மத்தவங்களுக்காக பயந்து பயந்து பெத்தவங்களுக்காக பயந்து உள்ள போட்டு பூட்டி வெச்ச ஆசைங்க அது. சுத்தி ஆளுங்க இருக்கிறதோ பஸ் நிலையம்னோ, வயசோ எதுவும் உறைக்கல. கை கால்லாம் டோப் அடிக்கிறவன் அதுக்கில்லாம தவிக்கிறா மாதிரி உதறுது. மனசு கிடந்து துடிக்குது. வெளியூருடா. யாருக்கும் தெரியப் போறதில்ல. எத்தனை நாள் ஏக்கம். தீத்துக்கோன்னு. மனசு பேசினா ரெண்டு குரல்ல பேசும்தானே. பேசுச்சி. மவனே. காலங்கார்த்தால உன் வயசு ஆளுங்க பண்ணுற வேலையாடா? வெக்கமா இல்லை. அவ்வளவு புலனடக்கம் இல்லாம போச்சா. தூத்தெறின்னு துப்புது. அது கெடக்குது. இப்பொ விட்டா திரும்ப வாய்ப்பு கிடைக்குமா தெரியாது. விடாதன்னு எதிர்க்குரல். தவிச்சி போனேன். நல்ல காலம் தேனி தேனின்னு ஒரு பஸ் கிளம்ப ஓடிப்போய் ஏறிட்டேன். மனசு மட்டும் இன்னும் அங்கயே சுத்துது.

அஞ்சாப்பு படிக்கிற வரைக்கும் இதெல்லாம் நமக்கு தெரியாதுங்க. வீட்டு எதிரில பள்ளிக்கோடம். பள்ளிக்கோடம் விட்டா வீடு. வீட்டுப் பாடம். ஆறுல இருந்து ஏழு வரைக்கும் அக்காவுக்கு பாட்டு சொல்லிக்குடுக்க வாத்தி வருவாங்க. அக்காவ விட நாந்தேன் அக்கறையா கேக்குறது. அப்புறம் சாப்பாடு தூக்கம்னு போய்டும். அப்பாக்கு முடியலன்னு அலுவலகத்துக்கு பக்கதுல வீடு பார்த்தாங்க. சென்னை மாநகருக்குள்ள வந்துட்டம். குடி வந்த அடுத்த நாளே கிரகம் புடிச்சிட்டுது. அதுவும் ஒரு பேப்பர் வாங்க போய்தான் இதுங்கள முதல்ல பார்த்தேன். முதல் பார்வையிலயே மனசுக்குள்ள வந்து உக்காந்துடிச்சிங்க. பார்த்த விழி பார்த்த படின்னு திரும்ப திரும்ப பார்த்துக்கிட்டே வீடு வந்தேன்.

புது பள்ளிக்கோடம். புது சினேகம். நம்பகமா ஒரு நண்பன் கிடைச்ச பொறவு மெதுவா ஒரு நாள் என் ஏக்கத்த சொன்னேன். இப்பிடி பார்த்தேனடா. யாரு என்னான்னு தெரியலடான்னு. அவனுக்கு நல்ல பழக்கமாம். கருப்பா இருந்திச்சின்னு சொன்னேன்ல. அது மூணு பேராம். சின்னது கொஞசம் நிறமாம். ஆனா நச்சு புடிச்சதாம். பெருசு முரடாம். நடுவாச்சிதான் சூப்பராம். சினிமால எல்லம் வந்திருக்குடான்னு ஏத்தி விட்டான். ரோசு கதையே வேறயாம். அதுமாதிரி வரவே வராதாம். இப்போல்லாம் சகட்டு மேனிக்கு நம்ம பொண்ணு பர்ஸ்ல இருந்து 100ரூ எடுத்துக்கறேன்னு லவட்டிட்டு போகுது. அப்போ கைக்காசுன்னா என்னான்னே தெரியாது. அவந்தான் சொன்னான். கைக்காசு இல்லாம செலவுக்கு எப்டிடான்னு.

தயங்கி தயங்கி தாங்க மாட்டாம ஒரு நாள் அம்மாட்ட சொல்லிட்டேன். அவ்வளவுதான். படிக்கிற வயசில இதெல்லாம் என்னான்னு சாமியாடிட்டாங்க. அப்பாட்ட வேற சொல்லி கந்தலாக்கிட்டாங்க. எட்டாக்கனின்னு மனசொடிஞ்சி போனாலும் அடைந்தால் மகாதேவி ரேஞ்சுக்கு மனசுல வைராக்கியம் விழுந்துடிச்சி. மனசு ஏங்கின ஏக்கத்துக்கு வடிகால் மாமன் மூலமா கிடைச்சது. பஸ் ஏத்திவிட பையைத்தூக்கிட்டு வந்தேன்னு நாலணா குடுத்தாங்க. மூச்சிறைக்க நண்பன் வீட்டுக்கு போய், தோடா செலவுக்கு காசு வாடான்னு கூட்டிக்கிட்டு போய் இதுங்களையும் கூட்டிக்கிட்டு நம்ம வீதில போனா மாட்டிபோம்னு வேற வழியா சுத்திகிட்டு போயும் போறாத காலம் அப்பாவோட நண்பர் பார்த்துட்டாரு போல. போட்டு குடுத்துட்டாரு. இந்த வயசிலே இப்படி நாசமா போறான்னு.

சாயந்திரம் வீதில விளையாடிட்டிருக்க அப்பா அலுவலகத்தில இருந்து வரும்போதே, உள்ள வாடான்னு சொன்ன விதம் டவுசர் லேசா ஈரமானா மாதிரியே பீலிங்கு. மானமே போச்சு. எப்படி இப்படி? இதுக்கெல்லாம் ஏது காசுன்னு. மாமான்னு முனகி முடியமுன்னாடியே உந்தம்பிக்கு அறிவிருக்கான்னு எகிற, அம்மாக்கு தம்பிய சொல்லிட்டாங்கன்னும் சேர்த்து வந்த கோவத்தில பின்னிட்டாங்க. படிக்கிற வயசில இதெல்லாம் எதுக்குன்னு அட்வைஸ் வேற.

அப்புறம் வளர்ந்து சம்பாதிக்க ஆரம்பிச்சும் இந்த ஏக்கம் இருந்து அரிச்சிக்கிட்டே இருக்கும். ஆனாலும் யாராவது பார்த்து பத்த வெச்சிட்டா அசிங்கம்னு இப்படியே வாழ்க்கை ஓடிப்போச்சு. அப்பப்போ நினைவு வந்தாலும் கூச்சம். எப்படி இவ்வளவு வளர்ந்த மனுசன் பண்ணுற வேலையான்னு விடுறது. அதுக்கு வந்த சோதனைதான் இது.(திரும்ப முதல் இரண்டு பேராவ படிங்க. சலிச்சிக்காம).

நீங்க பாட்டுக்கு கேவலமா ஊகம் பண்ணிக்க வேணாம். கருப்புன்னு சொன்னது கமருகட்டு. ரோசுன்னு சொன்னது தேன் முட்டாயி.



13 comments:

பழமைபேசி said...

//கருப்புன்னு சொன்னது கமருகட்டு. ரோசுன்னு சொன்னது தேன் முட்டாயி.
//

நாங்க இதை நம்பலைன்னு நினைச்சிக்க வேணாங்கண்ணே!

vasu balaji said...

அய்யோ நிசமாத்தான். இதெல்லாம் சென்னைப் பட்டணத்தில அரிதாகிப் போன விஷயம்.

கலகலப்ரியா said...

//எப்படி இவ்வளவு வளர்ந்த மனுசன் பண்ணுற வேலையான்னு//

ஆமாம் எம்பூட்டு ஒசரம் வளர்ந்துட்டு.. (இதெல்லாம் படிக்கணும்னு என் தலை எழுத்தூஊஊ)

vasu balaji said...

/கலகலப்ரியா said...

ஆமாம் எம்பூட்டு ஒசரம் வளர்ந்துட்டு.. (இதெல்லாம் படிக்கணும்னு என் தலை எழுத்தூஊஊ)/

:))))). அட நீங்க வேற. வளர்ரதுன்னு நெடுக்கால தானா? ஆளு வளர்ந்தாலும் மனசால பச்ச புள்ளதானுங்களே.

இராகவன் நைஜிரியா said...

சிறு வயது நினைவுகள், ஏக்கங்கள். அதைப் பார்த்தவுடன் இப்படி ஏங்கிப் போயிட்டீங்க..

போய் உடனே வாங்கி இருக்க வேண்டியதுதானே..

சென்னையில் இப்ப எல்லாம் கிடைப்பது பிட்சாவும், பர்கரும்தான்..

vasu balaji said...

/இராகவன் நைஜிரியா said

போய் உடனே வாங்கி இருக்க வேண்டியதுதானே..


வாங்க சார். ஆமாம். வாங்கினா சாப்பிடாம இருக்க முடியாது. அதும் தேன் மிட்டாய் சாப்பிடுற முறையே வேற. அவ்வளவு காலையில இத சாப்பிட கூச்சம். வாங்கி வச்சிக்கிட்டு சாப்பிடாம இருக்க நரகம். :)) அதான்!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஆனாலும் இது வேற மாதிரிதான் தெரியுது

vasu balaji said...

/ SUREஷ் (பழனியிலிருந்து) said...

ஆனாலும் இது வேற மாதிரிதான் தெரியுது/

அவ்வ்வ். அஞ்சாப்பு படிக்கிறப்ப அப்பா அம்மா கிட்ட வாங்கி கட்டிக்கிட்டது உட்பட எல்லாம் சொல்லியுமா?

இது நம்ம ஆளு said...

எப்படி இப்புடி
அருமை

Maheswaran Nallasamy said...

அதான் தேனி வர தாமதம் ஆச்சா அன்னைக்கு? அவ்வ்வ்வ்வ்வ்வ்..

யூர்கன் க்ருகியர் said...

உஸ்ஸ் ...அஹ்க !!
கடைசி பாராவை படிக்கும் வரை என்னுடைய பீலிங்கே வேற :)

ஒரு டவுட் : கமர்கட்டு என்பது ஜவ்வு மிட்டாயா ?

நான் பள்ளிகூடத்தில் படிக்கும்போது ஜவ்வு மிட்டாய் தான் பேவரைட் !

vasu balaji said...

/ Maheswaran Nallasamy said...

அதான் தேனி வர தாமதம் ஆச்சா அன்னைக்கு? அவ்வ்வ்வ்வ்வ்வ்../

அய்யோ இல்ல. ட்ரெயின் லேட்.=))

vasu balaji said...

/ஒரு டவுட் : கமர்கட்டு என்பது ஜவ்வு மிட்டாயா ?

நான் பள்ளிகூடத்தில் படிக்கும்போது ஜவ்வு மிட்டாய் தான் பேவரைட் !/

இல்லைங்க. இது வெல்லப் பாகு தேங்காய் எல்லாம் போட்டு பண்றது. கொஞ்சம் கடினமா, கொஞ்சம் மெத்துனு இருக்கும்.
ஜவ்வு மிட்டாய் இடுகை வெயிட்டிங்கு