Friday, August 21, 2009

ஞானக் கிணற்றிலோர் அஞ்ஞானக் குழி..

(இந்த இடுகை யாரையும் புண்படுத்தவோ, அவர்களின் நம்பிக்கையைகொச்சைப் படுத்தவோஎழுதப்படவில்லை. மிகச் சிறுவயதிலிருந்துகிட்டத்தட்ட 40 ஆண்டுகள் பார்த்து அனுபவித்தவலிகளின் வெளிப்பாடு. குற்றஉணர்ச்சியைக் காசாக்கும் கேவலம் தந்த வலி. கடமையை காசால்அடிக்கும்கயமைத்தனத்தைப் பார்த்த வலி. கை பிடித்து வழி நடத்தும் புனிதத்தொழிலை காசுக்குவிற்கும் அவலத்தினை அனுபவித்து எனக்குள் புதைத்தவலி. நான் நாத்திகன் அல்ல. இந்த வலிதாங்காமல் என்னதான் இது எனத்தேடித் தேடிப் படித்து, பலரைக் கேட்டறிந்த பின் இந்தக்கயமையை தாங்காதவலிகள். )

யாகத்துக்கு கறுப்புப் பூனை தேடிய சாமியார் கதை தெரியும் தானே. (தெரியலைன்னா அதில ஒரு இடுகை போடுவோம்ல )

இன்றைக்கு நாம் செய்யும் சடங்குகளும் இப்படித்தான் ஆகிவிட்டது. சென்னையைச் சுற்றிலும் புற்றீசல் போல் பெருகிவரும் புறநகர்க் குடியிருப்புக்களிலும், நகருக்குள்ளேயும் (எத்தனை கோடி விலை) சமீபத்தில் கார்ப்போரேட் பாணியில் பெருகி வருபவை ஞான வாபி எனும் நீத்தார் கடன் செய்யும் மையங்கள். கொடுமை என்ன தெரியுமா. ஞான வாபி என்னும் வட சொல்லுக்கு அறிவுக் கிணறு, ஞானக் கிணறு என்று பொருள். இங்கு வருபவர்களின் அஞ்ஞானத்தைக் காசாக்கும் மையம் இது. ஆம். அடுக்குமாடிக் குடியிருப்பில் வசதிக் குறைவு, தனி வீடாயினும் நீத்தார் கடன் என்பது ஒரு அசுப காரியம் என்ற எண்ணப் போக்கில், காசு கொடுத்து விட்டால் எல்லாமும் கிடைக்கும். பிக்னிக் மாதிரி போய் நடத்திவிட்டு வரலாம் என்ற சுகம் தேடும் போக்கும் காரணமான படியால், இது ஒரு தவிர்க்க முடியாத சமாசாரமாகி விட்டது. புரோகிதத்தில் வரும், மிதமிஞ்சிய, வரி என்ற பேச்சுக்கே இடமில்லாத வருமானம், நமக்கே இப்படி ஒரு இடம் சொந்தமாகிவிட்டால், தின வாடகை, இதர வாடகை என்று கொழிக்கலாம் என்ற பேராசையால் காசுக்கு ஏத்த படி காரியம் என்ற நிலை வந்தாகி விட்டது.

பொய்யில்லை நண்பர்காள். முழுதாக மொட்டையடிக்கப் படும் NRI களும் கார்பொரேட் அதிகாரிகளையும் பார்க்கப் பாவமாய் இருக்கும். வயதான தாயோ தந்தையோ இறந்த பிறகு கெஞ்சிக் கூத்தாடி லீவ் எடுத்து, வயதான காலத்தில் தாம் பராமரிக்கவில்லை என்ற‌ அடைத்து வைத்திருந்த தான் ஆடாவிட்டாலும் பாசத்தால் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி பலிகடாவாக மாறியவர்கள் இவர்கள். தகனம் முடிந்தவுடன் ( இதற்கு வரும் புரோகிதர் வேறு. கொஞ்சம் மட்டம்) சுபகாரியங்கள் ஸ்பெஷலிஸ்ட் அப்புறம்தான் வருவார். தனக்கு இதில் எதுவுமே விருப்பமில்லாதது போல் சாஸ்திரம் சொல்றத நான் சொல்றேன். மத்தது உங்கள் வசதிக்கு எப்படி பண்ணலாம் என்பதும் சாஸ்திரத்தில் இருப்பது போல் சொல்றேன். அப்புறம் உங்கள் இஷ்டம் என ஆரம்பிக்கும்போதே இந்தக்காலத்தில இப்படியும் ஒரு தெய்வம் உண்டுமா என கட்டிப் பிடித்து அழத் தோன்றும்.

அம்மா அப்பாவை வயதான காலத்தில் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என புராணத்திலிருந்து ஒன்றிரண்டு பிட்டுக்களுடன் தொடங்கும் மூளைச்சலவை. செய்ய வேண்டிய காரியங்கள், அதற்குண்டான விளக்கங்கள் எல்லாம் சொல்லி ஒரு ஆழம் பார்த்தல் நடைபெறும். பார்ட்டி கண் கலங்க கேட்டுக் கொண்டு சரி சரி என்று மண்டையாட்டினால் ஒரு விதம், சொறிந்து கொண்டு மதில்மேல் பூனை என்றால் ஒரு மாதிரி, சட்டு புட்டுன்னு சொல்லித் தொலை மாதிரி இருந்தால் அதற்கு வேறு மாதிரி என்று தேர்ந்த சேல்ஸ்மேன் மாதிரி பேச எந்த பிஸினஸ் ஸ்கூலிலும் சொல்லித் தர முடியாது.

கடைசியில் வரும் பகற்கொள்ளைதான் இந்த இடுகைக்கு கரு. பத்து நாள் காரியம் முடிந்த பிறகு இறந்தவரின் ஆத்மா சாந்தி அடைய பல தானங்கள் சொல்லி இருக்கு. எல்லாம் பண்ணனும்னு இல்லை. முக்கியமான தானங்கள் பண்ணத்தான் வேண்டும். மற்றது வசதிப்படி பண்ணா நல்லது என்று இழுக்கும் போதே முதல் வகை கண்ணைக் கசக்கிக் கொண்டு, காசு பத்தி பிரச்சனையே இல்லை. அம்மா/அப்பா ஆத்மாக்கு குறை இல்லாம முறைப்படி என்ன பண்ணனுமோ அதான் முக்கியம் என வலையில் விழும். இந்த காலத்தில இவ்வளவு சிரத்தையா பண்றவங்க ரொம்ப கம்மி. செலவுதான் பார்ப்பாங்க என்று போட்ட போடில் ஐயா மட்டையாய் ரெடியா இருப்பார். என் தலை உன்கிட்ட. அடிச்சிக்கோ வசதிப்படி என்று. ரொம்ப அழகாக, சரி நான் என்னன்ன வாங்கணும்னு லிஸ்ட் தரேன் வாங்கிட்டு சொல்லு என்பார்.

சுகவாசியா இருந்து பழகியாகிவிட்டது . இதுக்கெல்லாம் யாரு அலையுறது? அதும், மாடு, செருப்பு, கைத்தடி, சொம்பு என்று என்னல்லாமோ இருக்கும். அலறி அடிச்சி அதெல்லாம் எனக்கு தெரியாது. நீங்களே பார்த்துக்குங்க. எவ்வளவு ஆகும்னு சொல்லுங்க. பணம் தறேன் என்று வகையாய் மாட்டிக் கொள்ளும். ரொம்ப பிகு பண்ணிக்கொண்டு குத்து மதிப்பாக ஒரு தொகை வாங்கிக் கொண்டு பில் அப்புறம் தரேன் பார்த்துக்கலாம் என்று சொல்லி ஒரு ஃபோன் பறக்கும். அது அது அவங்க வீட்டில கொடுத்துடுவாங்க பெரிய சாமான்லாம். கையோட குடுக்கறது அங்க வந்துடும் என்று சொல்லி விடுவார். கட்டில், மெத்தை, பீரோ (டி. வி, ட்விடி ப்ளேயர், டிஷ் கனெக்ஷன்லாம் என்ன பாவம் பண்ணிச்சோ) எல்லாம் அங்கே வந்து நிற்கும். சொம்பு, கைத்தடி, தட்டு, குடை, வெள்ளி, தங்கக் காசு மட்டும் தானே கொண்டு வருவார்கள்.

ஒரு வேனில் இதெல்லாம் நிற்கும் ஞான வாபியின் முன். எல்லாம் பழைய ஐட்டங்கள். ஏன் என்று கேட்கக் கூச்சம். அந்தக் கேள்விக்கே இடம் வைக்க மாட்டார்கள். புதுசு அங்க இங்கன்னு தூக்கிக் கொண்டு அலைஞ்சா டெலிவரிசார்ஜ் எங்கயோ போயிடும்.(அடங்கொய்யா? என்னா அக்கறை). இங்க பாவனையா தாரை வார்த்து கொடுத்தால் போதும். இவர் போன் நம்பர் தருவார். பொருள் வந்துடுச்சன்னு கேட்டுக்கலாம் என்ற பிட்டுக்கு அப்புறமும் சந்தேகப் பட முடியுமா? பாவம் தானம் என்று வாங்கியவருக்கு ரூ 200 அல்லது அதிக பட்சம் ரூ 500 போனால் அதிகம். அந்த ஒரே வேனைக் காட்டி ஐந்தாறு அப்பா அம்மா ஆத்மாவை சாந்தி அடைய வைப்பதை யாரு பார்க்கப் போறாங்க. எனக்குத்தான் மண்டைக் குடைச்சல். ஐயோ பாவிகளா என்று அலறத் தோன்றும்.

இதெல்லாமாவது உள்குத்து. அப்புராணிங்களுக்கு புரியாது. பாவம் பால் வத்திப் போன பசு மாடு. தானம் கொடுக்கிறேன் பேர் வழி என்று, ஆயிரக்கணக்கில் கணக்கெழுதி நிற்கும் மாடுகளில் ஒன்றிடம் கொண்டு போய் கயிற்றைக் கையில் பிடித்துக் கொடுக்க வைத்து சூடு வேறு போடுவார்கள். மாட்டுக் காரனுக்கு பால் வற்றியும் சம்பாதித்துக் கொடுக்கும் அந்த வாயில்லா ஜீவன். ஒரு தானத்துக்கு அவனுக்கும் ரூ 200 கிடைக்கும். சூடாவது போடமாட்டேன் என்று சொல்லித் தொலைங்களேன்னு வருமா இல்லையா ? தாய்ப் பால் குடித்ததை விட ஆவின் பால் குடித்துத் தானே வளர்ந்தோம் என்று நினைப்பாவது இருந்தால் உறுத்தும்.

இவ்வளவுதான் பட்ஜெட் என்பவருக்கோ, லிஸ்ட் குடுங்க நான் பார்த்துக்கறேன் என்பவருக்கோ அதற்கேற்றார் போல் காரியம் செய்து வைப்பார்கள். (பின்ன இதே மாதிரி இன்னோரு பிசுனாரி கேஸ் நடத்தி வைத்தால் தானே வருமானம்). முதலாமவருக்கு 3 மணி நேரம் பிடித்தால் இவர்களுக்கு பாதி நேரம்தான்.

அப்புறமும் மத்திய கைலாஷில் பணம் கட்டினால் வருடா வருடம் திதியன்று தவராமல் திவசம் செய்து ப்ராசாதம் அனுப்பிடுவாங்க. ரெகமண்டேஷன் வேணுமென்றெல்லாம் காசு பார்க்க வழி உண்டு. என் கோரிக்கை இதுதான்.

யார் நம்பிக்கைக்கும் யாரும் தடை போட முடியாது. வசதி இருக்கிறதா யோசியுங்கள். சுத்த ஃப்ராடு. நான் ஏமாற மாட்டேன் என்பவர்களும் யோசியுங்கள். பிள்ளைகளால் கைவிடப்பட்டு, அல்லது யாரும் இன்றி கவுரவமாக உழைத்துப் பிழைக்கும் முதியவர்களை தத்தெடுத்துக் கொள்ள முடியும். Helpage India இதற்கான திட்டம் வைத்திருக்கிறது. ஒரு பாட்டியையோ தாத்தாவையோ ஒரு வருடத்திற்கு தத்தெடுக்க வெறும் ரூ 6000 தான். வசதிக்கு தகுந்தபடி உதவ முடியும். இறந்த ஆத்மா வாழ்த்துகிறதா என்பது தெரியாது. இருக்கும் ஜீவன் நிச்சயம் வாழ்த்தும். மனமிருப்பவர்கள் பாருங்களேன் : http://www.helpageindia.org/

30 comments:

janaki said...

idhai ellam kooda dhanamaga kodukkirargla enna haioo haioo

sarath said...

இந்த மக்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது. புரோகிதர் கேட்டா எதுவும் செய்வாங்க.

கதிர் - ஈரோடு said...

//சுகவாசியா இருந்து பழகியாகிவிட்டது . இதுக்கெல்லாம் யாரு அலையுறது? //

அய்யா....
இதுதான் பல பேருக்கு வசதியாக மாறிவிட்டது...

நல்ல இடுகை

நன்றி

யூர்கன் க்ருகியர் said...

இவ்விடுகைக்கு உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
என் மனமார்ந்த பாராட்டுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.!!!!!!!!!!!!

இருப்பவர்களை மகிழ்வித்தால் இறந்தவர்கள் வாழ்த்துவார்கள்.

வானம்பாடிகள் said...

/ janaki said...

idhai ellam kooda dhanamaga kodukkirargla enna haioo haioo/

ஆமாமுங்க.

வானம்பாடிகள் said...

/ sarath said...

இந்த மக்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது. புரோகிதர் கேட்டா எதுவும் செய்வாங்க./

செண்டிமெண்டல் ப்ளாக் மெயில். யாரையும் குத்தம் சொல்ல முடியாது.

வானம்பாடிகள் said...

/கதிர் - ஈரோடு said...
அய்யா....
இதுதான் பல பேருக்கு வசதியாக மாறிவிட்டது...

ஆம்.

/நல்ல இடுகை//

நன்றிங்கைய்யா.

வானம்பாடிகள் said...

/ யூர்கன் க்ருகியர் said...

இவ்விடுகைக்கு உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
என் மனமார்ந்த பாராட்டுகளை ஏற்றுக்கொள்ளுங்கள்.!!!!!!!!!!!!

இருப்பவர்களை மகிழ்வித்தால் இறந்தவர்கள் வாழ்த்துவார்கள்./

நன்றி யூர்கன்.

இராகவன் நைஜிரியா said...

சரியாகச் சொன்னீர்கள். அம்மா, அப்பா உயிரோடு இருக்கும் போது ஒரு வாய் சோறு போடாதவர்கள், அன்பாக ஒரு வார்த்தைப் பேசாதவர்கள் என்ன செய்து என்ன ஆகப் போகின்றது.

நீங்க சொன்ன மாதிரி, அவர் அவர்கள் சக்திக்கு ஏற்ற மாதிரி உயிரோடு இருப்பவர்களுக்கு செய்தாலே நல்லது.

உங்கள் இடுகைகளில் எது முதலிடம் என்று என்னிடம் யாராவது கேட்டால், இதற்குத்தான் நான் கொடுப்பேன்.

mukilan முகிலன் said...

சமுதாய போலி முகங்களின் அக முரணிகளைப் பணமாக்கும் இந்த ஈனத்தனமான முறைமை காலங்காலமாகத் தொடரும் அவலம்.
ஈழத்தின் அவலத்தைக் காணுற்ற பின்னும் இன்று ஈழத்தமிழர்களே கோயில்களில் படும்பாட்டை யாருக்குச் சொல்லி அழுவது! இவர்களது கடவுள்கள் பட்டுப் பீதாம்பரங்களுடன் மகிழ்வாக ஊர்வலம் வருகிறார்கள்...
இதைப்பார்த்து அனைவரும் போடுகிறார்கள் "அரோகரா"
இன்றைய தேவை : இன்னுமொரு 'பெரியார்'.

வானம்பாடிகள் said...

/இராகவன் நைஜிரியா said

உங்கள் இடுகைகளில் எது முதலிடம் என்று என்னிடம் யாராவது கேட்டால், இதற்குத்தான் நான் கொடுப்பேன்.//

நன்றி சார்!

வானம்பாடிகள் said...

/mukilan முகிலன் said...

சமுதாய போலி முகங்களின் அக முரணிகளைப் பணமாக்கும் இந்த ஈனத்தனமான முறைமை காலங்காலமாகத் தொடரும் அவலம். /

ஆம் ஐயா!இன்றைய தேவை மனிதம் .

RR said...

//வயதான காலத்தில் தாம் பராமரிக்கவில்லை என்ற‌ அடைத்து வைத்திருந்த தான் ஆடாவிட்டாலும் பாசத்தால் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி பலிகடாவாக மாறியவர்கள் இவர்கள்//
நாய் வளர்ப்பாங்க, பூனை வளர்ப்பாங்க அதன் பீயை கூட அல்லுவாங்க. பெத்து வளர்த்த அப்பா அம்மாவ உயிரோடு இருக்கும் போது பார்க்கமாட்டாங்க.
செத்து போனாப்புரம் செலவு பண்றது எவ்வளவு பெரிய சுயநலம்; தனது மனசாட்சி உறுத்தாம இருப்பதற்க்காக, சும்மா தானம், திதி என்று ஊற ஏமாத்தறது.
அவங்க செத்து போன அப்புறம் எத்தன பணம் செலவ பண்ணி என்ன ப்ரோய்ஜனம்.
---
--
---
இறந்த ஆத்மா சாந்தி அடைவதர்க்காக கயவர்களிடம் பணத்தை மூடத்தனத்துடன் வாரி இறைப்பதை விட, இருக்கும் ஜீவன்களுக்கு வழங்கினோம் என்றால் கண்டிப்பாக நம்மை வாழ்த்தும்.

பாலராஜன்கீதா said...

பாராட்டுகள்

வானம்பாடிகள் said...

/இறந்த ஆத்மா சாந்தி அடைவதர்க்காக கயவர்களிடம் பணத்தை மூடத்தனத்துடன் வாரி இறைப்பதை விட, இருக்கும் ஜீவன்களுக்கு வழங்கினோம் என்றால் கண்டிப்பாக நம்மை வாழ்த்தும்./

ஆமாமுங்க. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி

வானம்பாடிகள் said...

/ பாலராஜன்கீதா said...

பாராட்டுகள்/

நன்றிங்க.

பிரியமுடன்...வசந்த் said...

சிந்தனைகள் சிந்திக்கவைக்குது

சபாஷ்....

வானம்பாடிகள் said...

/ பிரியமுடன்...வசந்த் said...

சிந்தனைகள் சிந்திக்கவைக்குது

சபாஷ்..../

நன்றி வசந்த்!

Kiruthikan Kumarasamy said...

பாராட்டிப் பின்னூட்டம் போடும் இடுகை இதுவல்ல... சிரம் தாழ்ந்த வணக்கங்கள்... ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய சமூக அக்கறை மீதான மரியாதையால் விளைந்த வணக்கம் அது.. கூழைக் கும்பிடு அல்ல

sakthi said...

யாகத்துக்கு கறுப்புப் பூனை தேடிய சாமியார் கதை தெரியும் தானே.

தெரியலை

சீக்கிரமா போடுங்க அந்த இடுகையை

sakthi said...

வயதான தாயோ தந்தையோ இறந்த பிறகு கெஞ்சிக் கூத்தாடி லீவ் எடுத்து, வயதான காலத்தில் தாம் பராமரிக்கவில்லை என்ற‌ அடைத்து வைத்திருந்த தான் ஆடாவிட்டாலும் பாசத்தால் குற்றவுணர்ச்சிக்கு ஆளாகி பலிகடாவாக மாறியவர்கள் இவர்கள்.

சிந்திக்க வைக்கின்றீர்கள்

வானம்பாடிகள் said...

/ Kiruthikan Kumarasamy said...


நன்றி!

வானம்பாடிகள் said...

/ sakthi said...

யாகத்துக்கு கறுப்புப் பூனை தேடிய சாமியார் கதை தெரியும் தானே.

தெரியலை

சீக்கிரமா போடுங்க அந்த இடுகையை/
/சிந்திக்க வைக்கின்றீர்கள்/

சரிங்க. நன்றி சகோதரி.

சூர்யா ௧ண்ணன் said...

ஒரு சிறிய விருது உங்களுக்காக

http://suryakannan.blogspot.com/2009/08/blog-post.html

திவியரஞ்சினியன் said...

நல்ல கருத்தை பதிவிட்டுள்ளீர்கள். இறை நம்பிக்கை மிகுந்தவன் என்பதால் முதலில் சங்கடமாக இருந்தது தலைப்பு.ஆனால் பதிவின் கருத்து நூறுவீதம் நியாயமானது. சமயத்தை வியாபாரம் செய்யும் புரோகிதர்கள் இந்தப் பதிவை கட்டாயம் வாசிக்க வேண்டும்.அப்போதுதான் சுரணை வரும்.

வானம்பாடிகள் said...

/ திவியரஞ்சினியன் said...

நல்ல கருத்தை பதிவிட்டுள்ளீர்கள். //

நன்றிங்க.

கிருஷ்ணமூர்த்தி said...

உண்மை சுடும்!

கடைசிவரிகளை, முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன், உடன்படுகிறேன்.

வானம்பாடிகள் said...

/கிருஷ்ணமூர்த்தி said...

உண்மை சுடும்!

கடைசிவரிகளை, முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன், உடன்படுகிறேன்./

நன்றி சார்!

akm said...

very good article...

வானம்பாடிகள் said...

akm said...

/very good article../

Thank you sir