Thursday, August 6, 2009

குடைச்சல் குடுக்க வாரீகளா !

வாளின் முனையை விட பேனாவின் முனைக்கு வலிமை அதிகம் என்று சொல்லுவது யாருக்கு மிகப் பொருத்தம் என்று கேட்டால் பத்திரிகையாளருக்கு என்று தானே சொல்லுவீர்கள். என்னைக் கேட்டால் இல்லை என்பேன். இதன் முழுவீச்சைப் புரிந்துகொண்டு சரியாகப் பயன்படுத்துபவர்கள் அரசு ஊழியர்கள். மலைபோல் தடை இருந்தாலும் மணலாய் நொறுக்கவும் மணல் போல் உறுத்தலை மலையாக்கவும் அவர்களால் முடியும்.

எப்படி இவங்களால முடியுது? காரணம் இது தான். கேள்வின்னு ஒன்னு இருக்கிற வரை எந்த குழப்பமும் ஏற்படுத்த முடியும். குடைச்சல் குடுக்கன்னே கேள்வி கேக்க முடியும். அது ஏன் தேவைன்னு யாரும் கேட்க முன்வருவதில்லை. அதுவுமன்றி நீதிமன்றங்கள் கூட யார் பொறுப்பு என சுட்டி அதற்கான தண்டனைகள் கொடுப்பதில்லை. அதிக பட்சம் தீர்ப்பில் கண்டனம் செய்யக் கூடும்.

இவனுங்கள கேப்பாரே இல்லையே எனப் புலம்ப வைத்த தருணங்கள் எத்தனை?

1. வாரிசு சான்றிதழ் கேட்டு அலையோ அலைன்னு அலயுறேன். இதோ அதோன்னு இழுக்கடிக்கிக்கிறான்

2.வங்கிக் கணக்கு முடிக்க எல்லா ஆவணமும் கொடுத்து மாசம் மூணாச்சி. இன்னும் தந்த பாடில்லை.

3. அலுவலக பரீட்சை எழுதினேன். நல்லாதான் பண்ணேன். தேர்ச்சியடையல. ஆளப் புடிச்சவன்லாம் பாசாயிட்டான்.
இப்படி எத்தனை?

பார்த்துடலாம் ஒரு கை என்று துணிபவரா நீங்கள்? நல்லது. எப்படியோ காரியம் முடியணும். இப்போ முறைச்சா வேலை நடக்காது என்ற யதார்த்த வாதியா? நீங்களும் குறைந்த பட்சம் குடைச்சலாவது கொடுத்து கொலை வெறிய தணிச்சிக்கலாம். பத்தே ரூபாய் செலவில்.

தகவலுக்கான உரிமைச் சட்டம்
உங்களுக்கெனவே இருக்கிறது. எந்த நிறுவனமாயினும் இதற்காக ஒரு அதிகாரி நியமிக்கப் பட்டிருப்பார். அந்த நிறுவனத்தின் வலைத் தளத்தில் முழு விபரமும் அளிக்கப் படவேண்டும். மிக ரகசியம் என வரையரைக்கப் பட்டவை தவிர எல்லாத் தகவலும் பெறமுடியும். எதற்காகத் தேவை என்ற விளக்கம் கூட அளிக்கத் தேவையில்லை. தபால் நிலையத்தில் 10ரூ போஸ்டல் ஆர்டர் இணைத்து உங்களுக்குத் தேவையான தகவல் எதுவெனினும் கேட்கலாம். விண்ணப்பிக்கப் பட்ட தேதியிலிருந்து ஒரு மாதத்துக்குள் உங்களைத் தகவல் வந்தடையும். அதைவிட எந்த வடிவில் தேவை என்பதையும் நீங்களே தேர்ந்தெடுக்கலாம். குறுந்தகடு, ஜெராக்ஸ், ஃபேக்ஸ், இமெயில், பென் ட்ரைவ் எதாயினும் சரி. அதற்குண்டான‌ கட்டணம் வசூலிக்கப் படலாம். ஆவணங்களை நேரடியாக நீங்களே பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். நிறுவனத்தின் சட்ட விதிகள் , படிவங்கள் போன்ற ஆவணங்களுக்குண்டான தொகை இணையத்தில் குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில் அதனை மட்டுமே செலுத்தினால் போதும். சரியான பதில் வரவில்லை, அல்லது தாமதம் எனும் பட்சத்தில் மேல் முறையீடு செய்யலாம்.

அட போய்யா. இருக்கிற சட்டமெல்லாம் மதிக்காதவனுவ இதுக்கா மசியப் போறானுவன்னு நினைக்காதீங்க மக்கா. யார் காரணமோ அவருக்குத் தண்டனை அளிக்கப்பட்டு சம்பளத்தில் இருந்து கழிச்சிடுவாங்க. அதனாலேயே அலறி அடிச்சி உங்க தகவல் உங்களை வந்தடையும்.

அலுவலகப் பரிட்சை. நண்பர்களெல்லாம் சேர்ந்து படிக்கப் போறம்னு சொல்லிட்டு ரூம் போட்டு கும்மி அடிச்சிட்டு மூஞ்ச தொங்கப் போட்டுகிட்டு வந்து நல்லாதாண்டி எழுதினேன். கவுத்துட்டானுங்கன்னு தங்கமணி கிட்ட கதை விட முடியாது.

பக்கத்து வீட்டுக்காரரு உங்க கூட தானே வேலை செய்யிறாரு. ஜூனியர் வேற. அவருக்கெப்படி உத்தியோக உயர்வு உங்களுக்கில்லைன்னா, அவன் சரியான காக்கா. அதிகாரி வீட்டு நாக்குட்டிக்கு குளிப்பாட்டுவான். நாம யாருன்னு சவடால் அடிக்க முடியாது.

தங்கமணிக்கு தெரியாம கடன சம்பளத்துல அடைச்சிட்டு பில்லு தப்பா போட்டுட்டான். அடுத்த மாசம் சேர்த்து குடுப்பாங்கன்னு அடுத்த மாசம் புதுக் கடன் வாங்கி அட்ஜஸ்ட் பண்ண முடியாது.

தங்கமணி ஒரு மனு குடுத்தா பரிட்சை எழுதாத கதை, பணிக் குறைபாட்டில் பதவி உயர்வு ஊத்திக்கிட்டது, வாங்கின சம்பளம்னு எல்லாம் வெளிவரும்.

உள்ளுக்குள்ளே குமுறிக்கிட்டு இருக்கீங்களே. குடைச்சல் குடுத்து பாருங்களேன். உங்க வங்கியில் உங்கள் கடந்த 3 வருட ட்ரான்ஸாக்க்ஷன் கேட்டு பாருங்க. உங்க அலுவலகத்தில் உங்களோட பிறந்த நாள் என்னான்னு கேட்டு பாருங்க. எனக்கு எங்க மச்சம் இருக்குன்னு கேட்டு பாருங்க. எல்லாம் சொல்லி ஆவணும்.

இப்படிக் கேட்க ஆரம்பிச்சாலே அனாவசியமான தாமதங்கள், வேண்டாத கேள்விகள் ஏன் கையூட்டு கூட நாளடைவில் காணாமல் போகும்.

இன்னுமா நம்ப மாட்டீங்க? மத்திய அரசின் பெரிய அங்கமான துறையில் பணி புரியும் சக அதிகாரி. கிட்டத்தட்ட 25 வருடங்களாக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பல அலுவலகங்களில் பணியாற்றியவர். வேலை வேலை என்றே இருந்துவிட்டார், தன்னுடைய விடுப்புக் கணக்கை விசாரிக்காமல். திடீரென விழித்துக் கொண்டு பார்த்த போது கிடைத்த பதில் முன்பு பணி புரிந்த இடத்திலிருந்து வரவில்லை. பொறுப்பான அலுவலகத்தில் கேட்ட பொழுது எங்கெல்லாம் இருந்தாரோ அங்கெல்லாம் கேட்டிருக்கிறோம், வரவில்லை என பதில் வந்தது. எல்லா கடித விபரங்களும் கொண்டு நேரிடையாக கேட்ட பொழுதும் வந்த பாடில்லை. தன்னிடமுள்ள தகவல்களை எல்லாம் கொடுத்து இப்படியாவது சரி செய்யுங்கள் என்றார். ஹி ஹி. முடியாதுங்களே. அங்க இருந்து வரணும். இது தான் பதில். ஒரே ஒரு பத்து ரூபாய் செலுத்தி, இங்கெல்லாம் பணி புரிந்திருக்கிறேன். என்னுடைய விடுப்புக் கணக்கை ஒவ்வொரு அலுவலகக் கோட்டம் வாரியாக தெரியப் படுத்தவும் என்ற மனுவுடன் பொறுப்பான அதிகாரிக்கு இந்தச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். 15 நாட்களில் அனைத்து இடங்களிலிருந்தும் தகவல் கொடுக்கப் பட்டது. அலுவலக நடைமுறையில் நடக்காத வேலை கூட இப்படி கேட்பதன் மூலம் நடக்கும் என்கிற நிலைமை. பாம்புக்கு ராஜா மூங்கித்தடிங்கிற சொலவடை சரிதானே?

முழுவிவரங்களுக்கு இங்கே சுட்டவும்:http://cic.gov.in/

5 comments:

இராகவன் நைஜிரியா said...

இது வரைக்கு நான் எவ்வளவு பின்னூட்டம் போட்டு இருக்கேன்.. (எல்லா வலைப் பதிவர்களையும் சேர்த்து) என்ற கணக்கு வேண்டும். எங்கு கிடைக்கும்?

சும்மா .. ஒரு ஜாலிக்கு... கோபப் பட்டுவிடாதீங்க...

இராகவன் நைஜிரியா said...

நல்ல விசயத்தை சொல்லியிருக்கீங்க. பாராட்டுகள். விரைவில் பாதி அரசு அலுவலகங்கள், இந்த தகவல்கள் எல்லாம் மிக ரகசியம் என வரையறுக்கப் பட்டவை என்று சொல்லிவிடுவார்கள்.

அக்பர் said...

உபயோகமான தகவல். நிறைய இடங்களில் அலைய வைத்து விடுகிறார்கள்.

வானம்பாடிகள் said...

/இந்த தகவல்கள் எல்லாம் மிக ரகசியம் என வரையறுக்கப் பட்டவை என்று சொல்லிவிடுவார்கள்./

அது தான் இல்லை. சட்டத்திலேயே எவையெல்லாம் கொடுக்கப் படவேண்டும் என்று சொல்லி விட்டார்கள். தக்க காரணமின்றி மறுத்தால் தலைமை அதிகாரிக்குத் தான் ஆப்பு. அதனாலேயே சாதகமாக நடந்துவிடுகிறது. பின்னூட்டத்துக்கு நன்றி.

வானம்பாடிகள் said...

வாங்க அக்பர். நன்றி.