Wednesday, August 5, 2009

இதென்னங்க நியாயம் - 1

அந்த பிரபல தொலைக்காட்சி தாண்டி போறப்ப பார்த்தாலே பத்திகிட்டு வரும். ஊருல இருக்கிற உருப்படாத சாமியார், வைத்தியர், ஜெம்மாலஜி, பேராலஜின்னு அத்தன டுபாக்கூருங்களுக்குன்னே இருக்கிற ஊடகம் அது. சமீபத்துல ராஜவைத்தியர் கைதுன்னு படிச்ச செய்தியும் அதுக்கு அந்தாளோட பதிலும் பாமரனான எனக்கே கொலை வெறிய தூண்டிடிச்சி. இந்தாளு நிகழ்ச்சியை பார்த்து வயிறு வலிக்க சிரிச்ச காலமுண்டு.

ஆங்கில மருத்துவர்லாம் ஒரு சட்டை பேண்டுன்னு வருவாங்க. நம்ம நாட்டு வைத்தியர், ஆயுர்வேத வைத்தியர்லாம் முழு சூட்டு, டையின்னு அலம்பல் தான். பந்தாவா சுழல் நாற்காலில உக்காந்திருப்பாரு. ஊருல ஒரு சாமி விடாம படம் மாட்டி இருப்பாரு சுவர் முழுதும். ஆளைப் பார்த்தா பழம் நீயப்பா பக்திப் பழம் நீயப்பான்னு ஔவையார் பாடி இருப்பாங்க. அகலமா அப்பாவியா ஒரு தங்கமணி உக்காந்திருக்க மஞ்சத் தண்ணி தெளிச்சி மால போட்ட ஆடு மாதிரியே ஓமக்குச்சி ரங்கமணி பக்கத்துல நிப்பாரு.

ரொம்ப அமைதியான குரல்ல லோகத்தில இருக்கிற நல்ல வார்த்தையெல்லாம் சொல்லி என்னமோ எடுத்த பிறவி சேவை செய்யவேங்குற‌ மாதிரி சுய தம்பட்டம் அடிச்சிகிட்டு இப்ப இவங்கள கேப்போம்னு சொல்லி நீங்க சொல்லுங்கம்மான்னு தங்கமணிய பார்த்தாரு. அது திரு திருன்னு முழுச்சிகிட்டு ஸ்டார்ட் சொல்லிட்டாங்களா இல்லையான்னு குழம்பி ஊரு பேரு எல்லாம் சொல்லி இவரு என் முறைப் பையந்தாங்க. மூஊஊஊணு வருசம் காதலிச்சி கலியாணம் கட்டிகிட்டோம். கலியாணம் ஆகி 6 மாசம் ஆகியும் உண்டாகலைன்னு ஊர்ல எல்லாரும் கச முசன்னு பேச ஆரம்பிச்சாங்க (என்னா அநியாயங்க இது?)எங்க மாமியாரும், அவங்க எனக்கு அத்தை முறைதான், ஒரே திட்டுவாங்க.மலடிய கொண்டாந்து கட்டி வெச்சேன்னு.

பாக்காத மந்திரிகம், சோசியம், வைத்தியமில்லிங்க. வேண்டாத சாமி இல்லிங்க. மாசத்துல பாதி நாள் விரதமிருப்பேன் (ஆள பார்த்தாலே தெரியுதேன்னு அலறணும் போல வந்துச்சி). இவங்களுக்கு வேற தினம் கொடசல் குடுப்பாங்க. வேற பொண்ண கட்டிக்கடான்னு(சொல்லும்போதே அழுதாங்க‌). வைத்தியரு, அய்யாவ பார்த்து நீங்க சொல்லுங்க அப்புறம் என்ன நடந்துச்சின்னாரு. ரங்கமணி, நான் சண்ட போடுவங்க, எனக்கு இவதான் பொண்டாட்டின்னு, சொத்து கிடையாதுன்னு எல்லாம் மிரட்டுவாங்க. எதும் வேணாம் எனக்கு இவ போதும்னு சொன்னேன்னாரு. (அதுக்குள்ள அம்மணி தண்ணிய குடிச்சி தயாராய்டுச்சி). உடனே வைத்தியரு இங்க பாய்ந்து நீங்க சொல்லுங்கம்மா. அப்புறம் என்னாச்சின்னாரு. டவுனில போய் இங்கிலீசு வைத்தியமெல்லாம் பார்த்தங்க. நெறய காசு போச்சி. அல்லா டெஸ்டும் பண்ணி பார்த்து உனக்கு புள்ள பொறக்காதுன்னுட்டாங்க. நானே இவரு கிட்ட‌ ரெண்டாம் கலியாணம் பண்ணிக்கிங்கன்னு சொல்லி அழுவேன். இவரு எனக்கு புள்ள இல்லாட்டி போவுதுடி. நீ போதும்னு அழுதாரு. (ரெண்டு பேரும் கண்ண கசக்குனாங்க).

வைத்தியரய்யா, வேணாம்! வேணாம்! அழுதுருவேன் மாதிரி பார்த்தாரு. அப்புறம் ஓரமா ஒரு காமிராவ பார்த்து முடிச்சிருவமான்னு கேக்குறா மாதிரி பார்த்தாரு. அப்புறம் சரி சொல்லுங்கன்னு கதை கேட்டாரு. தங்கமணி தொடர்ந்துச்சி . ஒரு விசேசத்துக்கு போனப்ப ஒரு அக்காதான் வைத்தியரைய்யா பத்தி சொன்னாங்க. நம்பிக்கை இல்லாம தான் வந்து பார்த்தேன். ஐயாவ பார்த்ததுமே ஒரு நம்பிக்கை வந்துச்சி. எல்லாம் பொறுமையா கேட்டு கவலப் படாதீங்க. உங்களுக்கு குழந்தை பிறக்கும். நான் இருக்கேன்னு நம்பிக்கையா சொன்னாரு. ஒரு மாசத்துக்கு மருந்து சாப்ட சொன்னாரு. அந்த மாசமே கர்ப்பமாய்ட்டேன்னு சொன்னாங்க. (வைத்தியர் சிரிச்சாரு பாருங்க சிரிப்பு.அப்போ தெரியல. இப்போ செய்திய பார்த்ததும் வடிவேலு மாதிரி மனசுக்குள்ள ஹய்யோ ஹய்யோன்னு சொல்லி இருப்பான்னு தோணுது). உடனே வந்து ஐயாவ பார்த்து இப்பிடி நல்ல சமாசாரம்னு சொன்னேன். தொடர்ந்து மருந்து சாப்டுங்கன்னு மருந்து குடுத்து நல்ல படியா புள்ள பொறந்துச்சி.வைத்தியர் கேட்டாரு உடனே. என்னா குழந்தைன்னு? (அதான் தெரியுமேடா. இவ்ளோ சொன்னவங்க இத சொல்லாமலா இருப்பாங்க?). ஆம்பிளை புள்ளங்க. (ஆம்பிளை புள்ள பிறக்க நான் கேரண்டின்னு சொல்றாரு போல).

ரங்கமணிய பார்த்து கேட்டாரு அப்பாவியா. நீங்க என்ன சொல்ல விரும்பறீங்கன்னு. பாவம். எப்படி எல்லாம் சொல்லி குடுத்தானே தெரியல. ரோபோ மாதிரி விரைச்சிகிட்டு ஐயாக்குதான் நன்றி சொல்லணும். அவரால்தான் எனக்கு ஒரு வாரிசு வந்ததுங்க. இப்போ சந்தோசமா இருக்கோம்னு சொன்னாரு. அடப்பாவின்னு தூக்கி போட்டுச்சி. என்னா பேசறன்னு தெரியுதாய்யான்னு கத்தணும் போல வந்துச்சி. உடனே அடுத்த கேஸ். கொஞ்சம் மாறுதலோட. அது அத்தை மகன்னா இது மாமா மவன்னு. மத்த படி குழந்தை பிறந்ததெல்லாம் வைத்தியராலதான். எல்லாம் ஆம்பிள புள்ள.

இப்பிடியே ஓடிடுமா? யாருக்கு என்னா மருந்து கொடுத்தானோ ? விபரம் தெரியல. அந்தாளு புகார் குடுத்தாரு. இத்தன லட்சம் மோசடின்னு. பக்குன்னு ஆகிபோச்சு. லட்சக் கணக்கில மோசடி பண்ணியா சாமியாரு மாதிரி பேசுனான்னு. விளக்கம் குடுத்தான் பாருங்க போலீசுக்கு. இவரு ராஜ வைத்தியராம். வைத்தியத்துல குறை இல்லையாம். மருந்து 10 சதம் தானாம். நம்பிக்கைதான் 90 சதமாம். நம்பிக்கை இல்லைன்னா மருந்து வேலை செய்யாதாம். யோக்கியன்னா முதல்ல இத சொல்லி 90 சதம் தீத்துட்டு வாங்க 10சதம் மருந்து தரேன்னு சொல்லணுமா இல்லையா?

புண்ணாக்கு போலீசு நடக்கறப்போ விட்டுட்டு இப்போ சீல் வெச்சிட்டு 7 செக்க்ஷன்ல கேசு பொடுறாங்களாம்.

தெரியாமத் தான் கேக்குறேன்:ஒரு குற்றம்னா குற்றத்துக்கு துணை போனவனையும் புடிக்கிறாங்களா இல்லையா? இந்த வைத்தியன் என்ன தானேவா வீடு வீடா போய் விளம்பரம் பண்ணாரு. காசு கிடைச்சா போதும்னு தொலைக்காட்சி ஊடகம் செய்தவிளம்பரம் முக்கிய காரணமா இல்லையா? இந்த இடத்துல கஞ்சா கிடைக்கும், இந்த இடத்துல போனா உல்லாசமா இருக்கலாம்னு விளம்பரம் குடுத்தா விடுவானா? இதும் அப்படித்தானே? அந்த தொலைக்காட்சி நிறுவனத்தை எப்படி விட்டு வைக்கிறான்?

பி.கு.:இப்பவும் ஒரு பரதேசி வைத்தியன் அங்க புற்று நோயை உண்டாக்கும் கிருமிக்கு மருந்து தரேன்னு விளம்பரம் பண்றானுங்கோவ். கிருமியால புத்துநோய் வருதுன்னு புதுசா கண்டு பிடிச்சிட்டாங்களா தெரியலை. இவன் எப்போ மாட்டப் போறானோ!

13 comments:

யாசவி said...

Hilarious and set thinking too :-)

இராகவன் நைஜிரியா said...

தில்லானா மோகனாம்பாள் படத்தில் கடைசியில் நாகேஷ் சொல்வது போல்..

முன்னமே எதிர்ப்பார்த்தேன்... ரொம்ப லேட்...

இராகவன் நைஜிரியா said...

ராஜ வைத்தியம் என்று சொல்லிக் கொண்டு, ஊரில் உள்ள அனைத்து வியாதிகளையும் சரி பண்ணுவதாக பசப்பிக் கொண்டு, எல்லோரையும் மிக நன்றாக ஏமாற்றிக் கொண்டு இருந்தார். பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.

வானம்பாடிகள் said...

Welcome yasavi

வானம்பாடிகள் said...

வாங்க ராகவன் சார். வல்லாரை எப்போ மாட்டுமோ தெரியல.

கலகலப்ரியா said...
This comment has been removed by the author.
வானம்பாடிகள் said...

வாங்க கலகலப்ரியா.

Azhagan said...

All these quacks claim they can cure all the diseases in the world including AIDS. In fact there is a law which states nobody can claim to cure these diseases(a list of diseases). But as in all other aspects of life, in our country, the law is very rarely enforced. Poor public will be victim to these quacks for ever, unless the administration wakes up.

nila said...

ஏமாறும் இளிச்சவாயன்கள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் ஒயபோவதில்லை... இதற்கு ஊடகங்களும் உறுதுணை.. வெட்கக்கேடு

Maheswaran Nallasamy said...

இன்னொருத்தன் பஞ்சமுக அனுமார் டாலர்-ன்னு வியாபாரம் பண்ணுறான் அதே டிவி-ல. பில்லி, சூனியம், காத்து, கருப்பு எல்லாம் போயிருமாம். கொய்யால .. அதுக்கு உத்திரவாதம் வேற. இதெல்லாம் பீடி, சிகரட், தண்ணி விளம்பரம் விட மோசமான ஒன்னு. ராஜபக்சே-க்கு கூட ஒரு பஞ்சமுக அனுமார் டாலர் அனுப்ப சொல்லலாம். ஏகப்பட்ட திருஷ்டி. பிரபல வார பத்திரிகை கூட இதே மாதிரி ஒரு சாமியார் பத்தி ரெண்டு பக்கம் விளம்பரம் தரான். அவன் மட்டும் இதேமாதிரி ஒரு நாள் சிக்கட்டும் ஒரு நாள், லீவ் போட்டு போயி அடிக்கணுமின்னு இருக்கேன். ராஸ்கல்.

வானம்பாடிகள் said...

Welcome Azhagan.

வானம்பாடிகள் said...

நன்றி நிலா.

வானம்பாடிகள் said...

வாங்க மகேஸ். இன்னோரு டுபாக்கூரு வல்லாரத் தோட்டத்தை யானை மேலயும், ஒட்டகத்து மேலயும் ராஜா மேக் அப் ல சுத்தி வருது.