Friday, January 22, 2010

உணர்வு மறக்கும் உறவுகள்.

ஆறேழு மாதமிருக்கும். ஒரு நாள் உரக்க என் பெயர் கூறி அழைத்தவாறே என் அறைக்குள் வந்தார் அந்த நப்ர். உன்னை இப்படி பார்க்கவே சந்தோஷமா இருக்குடா என்ற ஆத்மார்த்த சிரிப்புடன் கை கொடுத்தார். நீர்க்காவி வேட்டி. தோளில் மூக்குப் பொடி கறையுடன் ஒரு காசித் துண்டு. அழுக்கான சட்டை. கையில் ஒரு துணிப்பை.

ஆடை மட்டுமே அழுக்கு. நெடுநெடுவென்ற உடல்வாகு. மெலிந்த தேகம். மணக்கும் திருநீற்றுடன் 20வயது வாலிபனின் துடிப்போடு இருந்தவருக்கு வயது 80க்கு சமீபம் அல்லது கூட இருக்கலாம்.

தும்பைப்பூ வேட்டியும், ஆர்மிக்காரன் மடிப்பில் மடிப்பு கலையாத ஸ்லாக் ஷர்ட்டும், காலரில் அழுக்குப் படாமல் கைக்குட்டை வைத்தபடி கும்பகோணம் வெற்றிலையும், மூக்குப் பொடி வாசனையும், சித்தநாதன் விபூதியுமாய் மணந்தவரா இவர்?

மைப் பேனா தாண்டி, பால்பென் வந்த காலத்திலும் கட்டைப் பேனாவில் மைப்புட்டிக்குள் விட்டு தோய்த்து காலிக்ராஃப் மாதிரி  எழுதும் அச்சடித்த எழுத்துக்களின் சொந்தக்காரர். ஒரு அடித்தல், திருத்தல், பிழையிருக்காது.

ரிடையரானபின் வேறு ஊரில் இருந்தவர் மகனின் வற்புறுத்தலால் மகனுடன் வந்து விட்டதாகவும், மனு எழுதிக் கொடுப்பது, பத்திரிகையாரிசியருக்கு கடிதம், கன்ஸ்யூமர் கோர்ட் விவகாரங்கள் என்று சோம்பலின்றி உழைப்பதாகச் சொன்னார்.

யாராவது தெரிஞ்சவங்க இருக்க மாட்டாங்களான்னு வந்தேன். நீயே இருக்க. சிரமம் பார்க்காமல் இதெல்லாம் கொஞ்சம் அட்டெஸ்ட் பண்ணிக் கொடுடா என்று 50-60 காகிதங்களை நீட்டினார். மகன் எப்படி பொறுப்பின்றி வீட்டு வரி, தண்ணீர் வரியெல்லாம் கட்டாமல், இன்கம்டாக்ஸ் ரீஃபண்ட் கேட்காமல் இருக்கிறான் என்று செல்லமான வாஞ்சையுடன் கடிந்து கொண்டார். அதற்காகத்தான் இவ்வளவும் என்றார்.  எல்லாம் முடிந்து ஆசி கூறி கிளம்பியவரில் தந்தைக்கான ஒரு கர்வமிருந்தது.

இன்று டாய்லெட் சென்று வருகையில் காரிடாரில் மீண்டும் அவர். அருகில் சென்று வணக்கம் கூறியதும் வாடா என்றவரின் குரலில் நடுக்கம். கண்ணில் நீர் கோர்க்க, உதடு துடிக்க, போன 8ம் தேதி சூசைட் பண்ணிண்டிருப்பேண்டா. அரை மணி யோசிச்சேன். இருந்தவரைக்கும் யாருக்கும் கஷ்டம் கொடுக்கலை. செத்துப் போய் போலீஸ் கேசுன்னு என்னால எதுக்கு கஷ்டம்னு இருந்துட்டேன் என்றபோது அதிர்ந்து போனேன்.

எம் பையன் கழுத்தப் பிடிச்சி வெளிய தள்ளிட்டாம்பா. நான் இருக்கிறது இடைஞ்சலா இருக்காம். வயசான காலத்தில ஒரு மூலையில இல்லாம, எப்போப் பாரு எழுதறேன், படிக்கறேன்னு வீடு முழுக்க பேப்பர். இறைஞ்சி கிடக்காம். ஊர சுத்திண்டு வரன்னு சண்டை போட்டான். வீடு போறலை, மாடிக்கு ஏன் போறன்னு எல்லாம் சண்டை போட்டான்.

கட்டின வேட்டி, பனியனோடு வெளியே தள்ளிவிட்டான். காசு, என் பேங்க் பாஸ்புக், எல்லாம் எடுத்துக்கறேன். மாத்து துணி கூட இல்லாம எங்கடா போவேன்னு கேட்டா உள்ள வந்தா பெல்டால அடிப்பேன்னு பேரனை கூப்பிட்டு பெல்ட் கொண்டுவான்னு சொன்னாண்டா என்று கதறிவிட்டார்.

என் உயரத்துக்கு குறுகி, தோளில் சாய்ந்து கதறுபவரை என்ன சொல்லி நான் தேற்ற? ஏதும் பேசாமல் முதுகை நீவி விட்டபடி குரல் உடைய அழாதீங்க சார். புரிஞ்சிப்பாங்க என்ற போது மெதுவே தலை தூக்கி, போடா! அவன் புரிஞ்சிண்டு என்னாகப் போறது. என் வலி புரிஞ்சதே உனக்கு. உன் ஆறுதல் போறும் போடா.

நான் திரும்ப ஊருக்கு போறேன். வைஃப் பிள்ளையோடதான் இருப்பேன்னுட்டா. நான் 4 பேருக்கு சமைப்பேன். சாமி, பட்டா தர அலைய விடறான் சாமின்னு யாரோ வருவான். என் காலம் போய்டும். திரும்ப உன்னைப் பார்ப்பேனோ தெரியாது. 

தலையில் அடிபட்டு, சித்த சுவாதீனமில்லாத மகள் இருக்கிறாள். பென்ஷனுக்கு நாமினேஷன் கொடுத்துட்டேன். புக்குல எண்ட்ரி போடுன்னா, அந்த நேரம் வரும்போதுதான் மெடிகல் செக்கப் பண்ணி போடுவானாம். டிபார்ட்மெண்ட் ஆஃப் பென்ஷன், ரயில்வே போர்ட், ப்ரெசிடெண்ட்னு எழுதி கிழிக்க மாட்டேன்?

வயசான காலத்தில என்னமா அல்லாட விடறானுங்கடா. எப்பவாவது பேச தோணினா பேசறேன், செல் நம்பர் கொடு என்று வாங்கிக் கொண்டு நடந்தவரின் நடையில் அந்த மிடுக்கும் கர்வமும் காணவில்லை. தன்னம்பிக்கை மட்டும் குறையவேயில்லை.

நேசம் எப்போதும்
வலிதாங்கியே வருகிறது
பிரசவம் போல.


74 comments:

ஈரோடு கதிர் said...

எப்படியாகினும்
வாழ்க்கையை
வாழ்ந்துதானே
ஆனனும்...

கனமான இடுகை

வெற்றி said...

வாழ்வின் கோரமான நாட்களை அவர் விரைவில் கடந்து விட வேண்டும்..

இந்த பதிவுக்குலாம் மைனஸ் வோட்டு போட்ட புண்ணியவான் யாருங்க?

அந்த பெரியவரோட மகனா இருக்குமோ?

பா.ராஜாராம் said...

கலங்கிப் போய் விட்டேன் பாலா சார்.

என்ன எழவுடா மனிதன் வாழ்வுன்னு வருது.இதை வாசித்துக் கொண்டிருக்கும் போது தண்டோரா மணிஜி அழை பேசினார்.அவரிடமும் இந்த இடுகை குறித்து பேசினேன்.கலங்கிப் போகிற யாருக்கும் ஒரு குரல் ஆறுதல் இருக்கத்தானே செய்கிறது.

அந்தப் பெரியவருக்கு உங்கள் குரல் ஆறுதல் போல,மணிஜி குரல் என்னையும் சாந்தப் படுத்துகிறது.

எதையாவது,யாரையாவது பற்றிக் கொள்ளத் தானே வேண்டியது இருக்கிறது,கலங்கிப் போகிறபோதெல்லாம் பாலா சார்.

ரோஸ்விக் said...

கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தான் வந்து பார்த்தேன். என்னடா இன்னும் ஒன்னும் அண்ணே எழுதலையேன்னு நினைச்சேன்.

இப்ப வந்து பார்த்த... சில பின்னூட்டங்களோட இருக்கு.

படிச்சதும் கலக்கம் தான் மிஞ்சுது. ரத்த உறவுகளே உசிர மதிக்காதபோது... மத்த உறவுகள் மசிரக்கூட மதிக்காது. ரொம்ப கஷ்டம்னே. :-(

அவர் உடல் நலத்துடன் வாழ என் வாழ்த்துகள்.

"உணர்வு மறக்கும் உறவுகள்" ம்ம்ம்... நல்ல தலைப்பு. நான் பயன்படுத்தியது போல.

Unknown said...

கலங்க வைக்கும் பதிவு...

அவர் ஊரிலேயே இருந்திருக்கலாம் போல..

நசரேயன் said...

கலங்க வச்சிட்டீங்க

செ.சரவணக்குமார் said...

//நேசம் எப்போதும்
வலிதாங்கியே வருகிறது
பிரசவம் போல.//

இந்த வரிகள் வாழ்வின் நிதர்சனத்தைச் சொல்கின்றன. மறக்க முடியாத இடுகை சார்.

Chitra said...

நெஞ்சம் கலங்க வச்சிட்டீங்க..... பெல்டால அடிக்க வர போனது எல்லாம், எந்த கதையில் சேர்ப்பது? இன்னும் இந்தியாவில் அப்படி இல்லை, இப்படி இல்லை என்று உண்மைகளை மறைத்து பெருமை பேசுவதை விட, பிரச்சினைகளை அடையாளம் கண்டு கொண்டு ஒரு ஆரோக்கிய மாற்றத்துக்கு வழி செய்ய வேண்டும்.

Romeoboy said...

கேடுகெட்ட உலகம் அட இது... அப்பனையே துரத்திவிடும் அந்த பரதேசியை அவன் மகன் அவனை துரத்திவிடும் நாள் வெகு துரம் இல்லை.

cheena (சீனா) said...

அன்பின் பாலா

என்ன எழுதுவது எனத் தெரியவில்லை - புரியவில்லை. ஆழமான கிணற்றைப் பார்த்தால் என்ன தோன்றுமோ - ஒரு பயம் - அது போல் உணர்கிறேன்.

எல்லாரும் வாழ்கிறார்களே என்று நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது உண்மைதான்

உணர்வு மறக்கும் உறவுகள் - என்ன செய்வது - இன்றைய தலைமுறை உணர நாள் பிடிக்கும்.

மனம் வலிக்கிறது பாலா

balavasakan said...

நேசம் எப்போதும்
வலிதாங்கியே வருகிறது
பிரசவம் போல.

உண்மைதான் சார்.... என்ன செய்வது..?

ஆரூரன் விசுவநாதன் said...

கலங்க வைத்துவிட்டது உங்கள் இடுகை.. இறப்பிலும் தொல்லை தரக்கூடாது என்ற அவர் உள்ளம் வணங்கதக்கது.

புலவன் புலிகேசி said...

இன்று பல முதியோரின் நிலை இதுதான். தன்னம்பிக்கை உள்ளவர்கள் குறைவே. அவரது தன்னம்பிக்கைக்கு ஒரு சிரம் தாழ்ந்த வணக்கம். அவரின் பிள்ளைக்கு என் கண்டனம். பின்னால் அவனும் அவன் பிள்ளையால் இதே நிலைக்கு தள்ளப்படுவான்.

Paleo God said...

உணர்வு மரத்த உரவுகள், அதுவும் பெற்ற பிள்ளை, பெல்ட் கொண்டுவரச்சொன்னது ..:(

பழமைபேசி said...

ப்ச்

sathishsangkavi.blogspot.com said...

//நேசம் எப்போதும்
வலிதாங்கியே வருகிறது
பிரசவம் போல.//

உண்மை தலைவரே...

பதிவு கண்கலங்க வைக்கிறது...

மாதேவி said...

மனத்தைக் கலக்கும் இடுகை.

மணிஜி said...

பாலா சார். உங்கள் கைகளை கண்ணில் ஒற்றிக்கொள்கிறேன்.

மணிஜி said...

இந்த இடுகைக்கு மைனஸ் ஓட்டு போட்ட மகாத்மா யாரோ?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான இடுகை.. அவரின் இடத்தில் நம்மைப் பொருத்திப் பார்த்தால் எப்படி இருக்கும்? எங்களுக்கும் படிப்பினை தான் இந்த இடுகை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

:-((

பின்னோக்கி said...

போதும்டா சாமி. ரிட்டையர் ஆன அடுத்த நிமிஷம் வானத்துக்கு டிக்கெட் வாங்கிட வேணும்.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

எப்படியாகினும்
வாழ்க்கையை
வாழ்ந்துதானே
ஆனனும்...

கனமான இடுகை//

கனத்த மனது

vasu balaji said...

வெற்றி said...

வாழ்வின் கோரமான நாட்களை அவர் விரைவில் கடந்து விட வேண்டும்..//

ஆமாங்க.

க.பாலாசி said...

மிகக்கொடுமையான செயல் இது. இதுபோல் நிறைய... அவருக்கான ஆறுதல் எவர்சொல்லியும் நீங்காது...

S.A. நவாஸுதீன் said...

ரொம்பவே பயமா இருக்கு. வாழ்க்கைப் புத்தகத்தில் இந்தமாதிரி பக்கங்கள் யாருக்குமே இருக்கக் கூடாது.

ரொம்ப கஷ்டமா இருக்கு பாலா சார். இருந்தாலும் அந்த பெல்ட்டுக்கு கொஞ்ச நாள் கழிச்சி அதே வீட்டில் வேலை வரலாம்.

vasu balaji said...

பா.ராஜாராம் said...

கலங்கிப் போய் விட்டேன் பாலா சார்.

என்ன எழவுடா மனிதன் வாழ்வுன்னு வருது.இதை வாசித்துக் கொண்டிருக்கும் போது தண்டோரா மணிஜி அழை பேசினார்.அவரிடமும் இந்த இடுகை குறித்து பேசினேன்.கலங்கிப் போகிற யாருக்கும் ஒரு குரல் ஆறுதல் இருக்கத்தானே செய்கிறது.

அந்தப் பெரியவருக்கு உங்கள் குரல் ஆறுதல் போல,மணிஜி குரல் என்னையும் சாந்தப் படுத்துகிறது.

எதையாவது,யாரையாவது பற்றிக் கொள்ளத் தானே வேண்டியது இருக்கிறது,கலங்கிப் போகிறபோதெல்லாம் பாலா சார்.//

ஆம்! பா.ரா. ஜீவனற்ற விழிகளில் அந்த அவமானம் ரொம்ப நாள் என்னைத் துரத்தும்:(

vasu balaji said...

ரோஸ்விக் said...

கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தான் வந்து பார்த்தேன். என்னடா இன்னும் ஒன்னும் அண்ணே எழுதலையேன்னு நினைச்சேன்.

இப்ப வந்து பார்த்த... சில பின்னூட்டங்களோட இருக்கு.

படிச்சதும் கலக்கம் தான் மிஞ்சுது. ரத்த உறவுகளே உசிர மதிக்காதபோது... மத்த உறவுகள் மசிரக்கூட மதிக்காது. ரொம்ப கஷ்டம்னே. :-(

அவர் உடல் நலத்துடன் வாழ என் வாழ்த்துகள்.

"உணர்வு மறக்கும் உறவுகள்" ம்ம்ம்... நல்ல தலைப்பு. நான் பயன்படுத்தியது போல.//

நன்றி ரோஸ்விக்

vasu balaji said...

கிரி said...

:-(//

:(

vasu balaji said...

முகிலன் said...

கலங்க வைக்கும் பதிவு...

அவர் ஊரிலேயே இருந்திருக்கலாம் போல..//

ஆமாம். இந்த வலியில்லாமல் இருந்திருக்கலாம்.

vasu balaji said...

நசரேயன் said...

கலங்க வச்சிட்டீங்க//

கலங்க வைத்துவிட்டார் அவர்

vasu balaji said...

செ.சரவணக்குமார் said...

//நேசம் எப்போதும்
வலிதாங்கியே வருகிறது
பிரசவம் போல.//

இந்த வரிகள் வாழ்வின் நிதர்சனத்தைச் சொல்கின்றன. மறக்க முடியாத இடுகை சார்.//

நன்றி சரவணக்குமார்

vasu balaji said...

Chitra said...

நெஞ்சம் கலங்க வச்சிட்டீங்க..... பெல்டால அடிக்க வர போனது எல்லாம், எந்த கதையில் சேர்ப்பது? இன்னும் இந்தியாவில் அப்படி இல்லை, இப்படி இல்லை என்று உண்மைகளை மறைத்து பெருமை பேசுவதை விட, பிரச்சினைகளை அடையாளம் கண்டு கொண்டு ஒரு ஆரோக்கிய மாற்றத்துக்கு வழி செய்ய வேண்டும்.//

:(. நன்றிங்க சித்ரா

vasu balaji said...

||| Romeo ||| said...

கேடுகெட்ட உலகம் அட இது... அப்பனையே துரத்திவிடும் அந்த பரதேசியை அவன் மகன் அவனை துரத்திவிடும் நாள் வெகு துரம் இல்லை.//

இந்தக் கொடுமை தொடர வேண்டாமே. அதை விட இப்படி செய்யாமல் இருப்பது ரொம்ப வலிக்கும்.

vasu balaji said...

cheena (சீனா) said...

அன்பின் பாலா

என்ன எழுதுவது எனத் தெரியவில்லை - புரியவில்லை. ஆழமான கிணற்றைப் பார்த்தால் என்ன தோன்றுமோ - ஒரு பயம் - அது போல் உணர்கிறேன்.

எல்லாரும் வாழ்கிறார்களே என்று நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது உண்மைதான்

உணர்வு மறக்கும் உறவுகள் - என்ன செய்வது - இன்றைய தலைமுறை உணர நாள் பிடிக்கும்.

மனம் வலிக்கிறது பாலா//

நன்றி சீனா.

vasu balaji said...

Balavasakan said...

நேசம் எப்போதும்
வலிதாங்கியே வருகிறது
பிரசவம் போல.

உண்மைதான் சார்.... என்ன செய்வது..?//

:(.

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

கலங்க வைத்துவிட்டது உங்கள் இடுகை.. இறப்பிலும் தொல்லை தரக்கூடாது என்ற அவர் உள்ளம் வணங்கதக்கது.//

அந்த வயதில், அந்த தெளிவு உண்மையில் அபாரம்.

vasu balaji said...

புலவன் புலிகேசி said...

இன்று பல முதியோரின் நிலை இதுதான். தன்னம்பிக்கை உள்ளவர்கள் குறைவே. அவரது தன்னம்பிக்கைக்கு ஒரு சிரம் தாழ்ந்த வணக்கம். அவரின் பிள்ளைக்கு என் கண்டனம். பின்னால் அவனும் அவன் பிள்ளையால் இதே நிலைக்கு தள்ளப்படுவான்.//

அதனால் என்னவாகிவிடப் போகிறது:(

vasu balaji said...

பலா பட்டறை said...

உணர்வு மரத்த உரவுகள், அதுவும் பெற்ற பிள்ளை, பெல்ட் கொண்டுவரச்சொன்னது ..:(//

கண்மறைத்த கோபம். :(

vasu balaji said...

பழமைபேசி said...

ப்ச்//

ம்ம்

vasu balaji said...

Sangkavi said...

//நேசம் எப்போதும்
வலிதாங்கியே வருகிறது
பிரசவம் போல.//

உண்மை தலைவரே...

பதிவு கண்கலங்க வைக்கிறது..//

நன்றி சங்கவி

vasu balaji said...

மாதேவி said...

மனத்தைக் கலக்கும் இடுகை.//

ம்ம்

vasu balaji said...

தண்டோரா ...... said...

பாலா சார். உங்கள் கைகளை கண்ணில் ஒற்றிக்கொள்கிறேன்.//

பா.ரா. சொன்னது சரி. உங்கள் குரலில் நேசம் தெரியும் மணிஜி!

vasu balaji said...

தண்டோரா ...... said...

இந்த இடுகைக்கு மைனஸ் ஓட்டு போட்ட மகாத்மா யாரோ?//

இடுகைக்கு எங்க போடுறாங்க. புது இடுகைன்னா குத்துன்னு குத்துறது.:))

vasu balaji said...

ச.செந்தில்வேலன் said...

அருமையான இடுகை.. அவரின் இடத்தில் நம்மைப் பொருத்திப் பார்த்தால் எப்படி இருக்கும்? எங்களுக்கும் படிப்பினை தான் இந்த இடுகை.//

:(..:)

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

:-((

ம்ம்

vasu balaji said...

பின்னோக்கி said...

போதும்டா சாமி. ரிட்டையர் ஆன அடுத்த நிமிஷம் வானத்துக்கு டிக்கெட் வாங்கிட வேணும்.//

ஏன். நல்லாத்தான் இருந்தார். இருப்பார். நடுவில் இது அவ்வளவுதானே.

vasu balaji said...

க.பாலாசி said...

மிகக்கொடுமையான செயல் இது. இதுபோல் நிறைய... அவருக்கான ஆறுதல் எவர்சொல்லியும் நீங்காது...//

ஆம் பாலாசி

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

ரொம்பவே பயமா இருக்கு. வாழ்க்கைப் புத்தகத்தில் இந்தமாதிரி பக்கங்கள் யாருக்குமே இருக்கக் கூடாது.

ரொம்ப கஷ்டமா இருக்கு பாலா சார். இருந்தாலும் அந்த பெல்ட்டுக்கு கொஞ்ச நாள் கழிச்சி அதே வீட்டில் வேலை வரலாம்.//

ம்ம்.

நாடோடி said...

முதுமை என்பது பெரியவருக்கு மட்டும் வருவது இல்லை. அவரது மகனுக்கும் விரைவில் வரும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்..

Unknown said...

மனதை உருக வைத்த பகிர்வு
என் வலைதளத்திற்கு அன்புடன் உங்களை வரவேற்கிறேன்
http://vittalankavithaigal.blogspot.com/

கலகலப்ரியா said...

ஆழமான உணர்வுகள் பின்னிய வார்த்தை வெளிப்பாடுகள்... மனதை எங்கேயோ நெருடிப் பிடித்துக் கொள்கிறது... அருமை சார்..

நிஜாம் கான் said...

பாவம் இது போல நிறைய அப்பாக்கள் தனக்கென்று எதுவுமே வைத்துக்கொள்ளாமல் மகன் மகன் என்று கொடுத்து விட்டு கடைசியில் நடுத்தெருவுக்கு வந்து விடுகிறார்கள். ஒரு விசு படம் ஞாபகம் வருகிறது பேர் தெரிஞ்சா சொல்லுங்கண்ணே!

MUTHU said...

மனத்தைக் கனமாக்கும் பதிவு

பனித்துளி சங்கர் said...

இப்படியும் சில மனிதர்கள் . சிந்திக்கத் தூண்டும் பதிவு வாழ்த்துக்கள் நண்பரே !

Menaga Sathia said...

கலங்க வைத்துவிட்டது உங்கள் இடுகை..

vasu balaji said...

நாடோடி said...

முதுமை என்பது பெரியவருக்கு மட்டும் வருவது இல்லை. அவரது மகனுக்கும் விரைவில் வரும் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்..//

ம்ம். ஆமாங்க. தனக்கு வராது மனப்பான்மைதான்.

vasu balaji said...

vittalan said...

மனதை உருக வைத்த பகிர்வு
என் வலைதளத்திற்கு அன்புடன் உங்களை வரவேற்கிறேன்
http://vittalankavithaigal.blogspot.com///

நன்றி விட்டலன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும். அவசியம் படிக்கிறேன்.

vasu balaji said...

கலகலப்ரியா said...

ஆழமான உணர்வுகள் பின்னிய வார்த்தை வெளிப்பாடுகள்... மனதை எங்கேயோ நெருடிப் பிடித்துக் கொள்கிறது... அருமை சார்..//

ரொம்ப நன்றியம்மா.

vasu balaji said...

இப்படிக்கு நிஜாம்.., said...

பாவம் இது போல நிறைய அப்பாக்கள் தனக்கென்று எதுவுமே வைத்துக்கொள்ளாமல் மகன் மகன் என்று கொடுத்து விட்டு கடைசியில் நடுத்தெருவுக்கு வந்து விடுகிறார்கள். ஒரு விசு படம் ஞாபகம் வருகிறது பேர் தெரிஞ்சா சொல்லுங்கண்ணே!//

ம்ம். தெரியலையே நிஜாம்.

vasu balaji said...

Tamilmoviecenter said...

மனத்தைக் கனமாக்கும் பதிவு

நன்றி

vasu balaji said...

சங்கர் said...

இப்படியும் சில மனிதர்கள் . சிந்திக்கத் தூண்டும் பதிவு வாழ்த்துக்கள் நண்பரே !//

இப்படித்தான் பல..

vasu balaji said...

Mrs.Menagasathia said...

கலங்க வைத்துவிட்டது உங்கள் இடுகை..//

ம்ம்

ஸ்ரீராம். said...

உணர்வுகள் மரத்தபின் அதை உறவுகள் என்று எப்படிச் சொல்வது? எனக்கும் இப்படி சில ஜென்மங்களைத் தெரியும். காலம் பதில் சொல்லும்.

இராகவன் நைஜிரியா said...

படிக்கும் போது வேதனைத்தான் மிஞ்சுகின்றது.

இது மாதிரி எல்லாமா பிள்ளைகள் இருப்பாங்க. பெத்து வளத்து ஆளாக்கியவரை பெல்ட்டால் அடிப்பேன் என்று சொல்வதற்கு எவ்வளவு கொடுரமான மனது இருக்க வேண்டும்.

பழுத்த மட்டயைப் பார்த்து இளிச்சதாம் குருத்து மட்டை.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

வாழ்க்கையில் எதைக் கொடுக்கிறோமோ, அதுதான் நமக்குக்கிடைக்கும்.பெற்றவரை பெல்ட்டால் அடிக்க வந்த மகனுக்கு எது காத்திருக்கிறதோ,அவருக்காக வருத்தப்படுங்கள் தோழர்களே! (அப்பாடி! வித்தியாசமா எழுதிட்டனா?)

அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்

Jerry Eshananda said...

பாலா அண்ணா வார்த்தைகள் இல்லை.வலிக்கிறது.

Radhakrishnan said...

மனம் கலங்கச் செய்த நிகழ்வும், அவரின் வாழ்வும், முதலில் படித்துவிட்ட பின் கடைசி மூன்று வரிகளில் கண்கள் நிலையாய் குத்திட்டு நின்றது. என்ன எழுதவென்றே தோணவில்லை.

ராஜ நடராஜன் said...

தலைப்போட ஆணி வேர் எங்கேன்னு தெரியவில்லையே?எங்கே,எப்படி,எப்பொழுது திசை மாறிப் போனோம்?

விவாகரத்து,முதியோர் இல்லம்,கூட இதுவும்.....

அன்புடன் அருணா said...

/நேசம் எப்போதும்
வலிதாங்கியே வருகிறது
பிரசவம் போல./
மனதைக் கலங்கடிக்கும் வார்த்தைகள்.

Youngcrap said...

Idhu ponra Nigaluvugalai padikkum poludhu "Vaalkai" meedhaana Nambikkaiyae kuraindhu poi vidugiradhu...

I really like ur writing...

பிரபாகர் said...

இவ்வளவு தாமதமாய் படித்ததற்காக என்னை கடிந்து கொள்கிறேன். சங்கு சுட்டாலும் என்பது தான் நினைவிற்கு வந்தது!

பெற்றவர்களை கவனியாத எவரையும் மனிதராகவே எண்ணக்கூடாதய்யா!

பிரபாகர்.

akkini77 said...

KAALAM ORU NAAL MAARUM. ATHAI AVAR

MAGAN MARANTHU VIDDAR POOLA.

கிச்சான் said...

"எம் பையன் கழுத்தப் பிடிச்சி வெளிய தள்ளிட்டாம்பா. நான் இருக்கிறது இடைஞ்சலா இருக்காம். வயசான காலத்தில ஒரு மூலையில இல்லாம, எப்போப் பாரு எழுதறேன், படிக்கறேன்னு வீடு முழுக்க பேப்பர். இறைஞ்சி கிடக்காம். ஊர சுத்திண்டு வரன்னு சண்டை போட்டான். வீடு போறலை, மாடிக்கு ஏன் போறன்னு எல்லாம் சண்டை போட்டான்.

கட்டின வேட்டி, பனியனோடு வெளியே தள்ளிவிட்டான். காசு, என் பேங்க் பாஸ்புக், எல்லாம் எடுத்துக்கறேன். மாத்து துணி கூட இல்லாம எங்கடா போவேன்னு கேட்டா உள்ள வந்தா பெல்டால அடிப்பேன்னு பேரனை கூப்பிட்டு பெல்ட் கொண்டுவான்னு சொன்னாண்டா என்று கதறிவிட்டார்."

இந்த மாதிரி பார்க்கிறப்பவும் . ..... படிக்கிறப்பவும் ..........
ரொம்ப வேதனையா இருக்கு !
மனித உறவுகளே வெறுத்து போகிறது தோழா