Saturday, September 12, 2009

தொலைந்து போனவர்கள் - 4

பாண்டி பஜார் வளையல் கடையில் வளையல் வாங்கப் போனேன். மச்சான் இது எவ்வளவு என்று  கடை ஆள் குரல் கொடுக்க உள்ளிருந்து ஒரு தலை எட்டிப் பார்த்து என்ன போட்டிருக்கு என்கிறது. ’ருங்டுக்’ என்கிறான் இவன். மொழி பெயர்த்து டஜன் 65 ரூபாய் என்றான். போன முறை ஐம்பதுக்கு தந்தாய் என்றேன். திரும்ப மச்சான் ’குர்டு’ ங்கிறாங்க என்கிறான். அந்தாளு அது ’துன்சி ’ என்கிறார். இவனும் இதும் ’துன்சி’ தான் ’சுரிபெ’ இல்லை என்றான். சரி கொடு என்றதும், மெதுவாய் சிரித்து என்ன பாஷை இது என்றேன். மலாயா தமிழ் சார் என்றான். கண்ணா, 20 வருசம் முன்னாடியே நாமளும் பேசின பாஷை தான். சுரிபெ என்றால் பெரிசு, துன்சி என்றால் சின்னது என்று. நானும் தலைகீழாய் நின்று பார்த்து விட்டேன், நம்பர் மட்டும் புரியுதில்லை. டுங் என்று ரெண்டு எழுத்து போட்டு 1300 ரூபாய் என்று எப்படி மொழி பெயர்க்கிறீர்கள் என்றேன்.  விவரமான ஆளுங்க சார் நீங்க என்ற பாராட்டோடு கேனையனாய் வெளியே வந்தேன். மண்டைக்கு மேல் சுருள் சுருளாக. அட முடி இல்லைங்க. ஃப்ளாஷ்பேக்.

ஏழாவது வகுப்புப் படிக்கும்போது என் கணக்கு நோட்டை வாங்கிக் கொண்டு சென்ற என் வகுப்பு மாணவி இரண்டு நாள் பள்ளிக்கு வரவில்லை. வீட்டுப் பாடம் சேர்ந்து விட, வாங்கப் போனபோது எப்பொழுதுமில்லாமல் அவள் அம்மா மறித்துக் கேட்டார்கள். என் கணக்கு நோட்டு வாங்கிக் கொண்டு வந்திச்சி. வீட்டுப் பாடம் எழுதணும். பள்ளிக்கு வரவில்லை அதனால் வாங்கிக் கொண்டு போக வந்தேன் என்றேன். உள்ளே கூட அழைக்காமல், கடவடைத்து பிறகு தானே கொண்டு வந்து தந்தார்கள். உர்ரென வந்து அம்மாவிடம் புலம்பிய போது சிரித்துக் கொண்டே சொன்னார்கள். அவள் பெரிய மனுஷி ஆயிட்டா. நீ அங்க போகக் கூடாதென்று.

டேய் மூக்கா. ப்ளீஸ் அப்பா வந்துடுவாங்கடா. தம்பியக் காணோம். ஓடிப்போய் தேங்காய் சில்லு வாங்கிட்டு வாடா. சமையல் முடியலன்னா தட்டு பறக்கும் என்பாள் கௌரி அக்கா. வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தால் தேங்க்ஸ்டா மூக்கா என்று மூக்கைத் திருகுவாள் அலற அலற.  திருமணமாகி முதல் முறை வந்த போது பார்த்தும் பாராமல், எப்படி இருக்கிறாய் என்ற போது யாரோவானாள்.

தயிர்க்காரன், பால்காரனென்று வீதியில் பேரம் பேசி வாங்கும் பக்கத்து வீட்டு மாமி, மாமாவின் நண்பரோ வெளியாட்களோ வந்தால், கதவு மறைவில் நின்று பதில் சொல்லும்.  எட்டு மணிக்கு சாப்பிட்ட ஃபாரக்ஸ் உதட்டைச் சப்பிக்கொண்டு அழகாய்ச் சிரிக்கும் குழந்தை கூட தூக்கப் போனால் அலறும். கண்ணகியின் மறு வாரிசென புளகித்துப்போய் ஆம்பிளப் பசங்கள பார்த்தா அழுவான்னு அலட்டும் அவள் அம்மா.

ஒடிசலான உருவம். வெயிலில் அலைந்து அலைந்து கருத்துச் சுருங்கிய சருமம். தலையில் முண்டாசு. வெள்ளைக் காடாக்குள் வைத்துக் கட்டி ஒரு தோளில் தொங்கும் பாரம். இரண்டடிக்கு இரண்டடியில் பிடி வைத்த ஒரு மரப்பெட்டி மறுகையில். வாலிபத்தில் கால் வைத்து மீசை வரைந்தாற்போல் பேரனும் இதே கோலத்தில். அடிக்கிற வெயிலில் அலைந்து, சலித்து “தல்லி! ஸல்லகா மஞ்சி நீள்ளு ஈ ரா” என்ற குரல் வந்ததும் அத்தனை தடையும் உடைத்து பெண்கள் சூழ்ந்து கொள்வார்கள். அவர்தான் வளையல் தாத்தாவும் அவர் பேரனும்.

தண்ணீர் குடித்து, முகம் கழுவி, முண்டாசு பிரித்து உதறி துணி மூட்டை அவிழ்ப்பார். அவசரமின்றி மொத்தம் எடுத்து அடுக்குவார் கட்டி வந்த துணியில். அவரவர் விருப்பத்துக்கு வளையல் காட்டுவார். கண் பார்வையிலேயே இது சின்னதும்மா. உன் கைக்கு சரி வராது. இது பெரிசு. வேற பாரு என்பார். பேரனும் கடை திறந்து வைத்திருப்பான். தலை வெளுத்தவரெல்லாம் அவ்வா, மற்றவரெல்லாம் அக்கா. விரல் குவித்துப் பிடித்து வளையல் சொருகி பெரும்பாலும் சரியாக இருக்கும். சிலருக்கு ’சவக்காரம் தே ரா’ என்று, கையை நனைத்து சோப்பைக் குழைத்துப் பூசி வளையல் போடுவார்.சிலருக்கு வெறும் கையில் வைத்துப் பிடித்து விட்டு சொடுக்கெடுத்து போடுவார்கள். சிலருக்கு ”நூன”( எண்ணெய்) என்று மஸாஜ் செய்து போடும்போது என்ன மாயமோ, விறைத்திருந்த கை நெகிழ்ந்து தடையின்றி வளையல் ஏறும். பெரிய மனுஷியான வகுப்புப் பெண், புது மணப்பெண் கௌரியக்கா, கதவுக்குப் பின்னால் ஒளியும் மாமி என எல்லாரும் தயக்கமின்றி  கை நீட்டுவார்கள்.

ஒன்றொன்றாய் அவரவர் வாங்க, மதியம் வந்துவிடும். தவறாமல் லட்சுமிப் பாட்டி சாதம் பிசைந்து, பலா இலை கழுவி எடுத்துக் கொண்டு மெதுவாய் வரும். நிதானமாய் உண்டு முடித்து “தேவுடு நின்னு சல்லகா சூஸ்தாடம்மா” என்கையில் கண்கள் பனிக்கும். ஒருவரும் பேரம் பேசி நான் பார்த்தில்லை.  வீதி முழுதுமே அங்கு வந்து விடுவார்கள். ஏக்கமாய் பார்க்கும் வேலை செய்யும் சிறுமிகளுக்கும் சும்மாவே 2 வளையலாவது போட்டு விடுவார் தாத்தா. வியாபாரம் முடிந்ததும், கலியாணம், சீமந்தம், வளைகாப்பு என்று விசேஷமிருப்பவர்கள் வெற்றிலை பாக்கில் பத்திரிகை வைத்து அழைப்பார்கள். நல்ல டிசைனில் கொண்டு வர வேண்டும். இத்தனை பேர் வருவார்கள். எல்லா அளவிலும் கொண்டு வர வேண்டுமென்று கேட்பார்கள். இவர்களும் தவறாமல் வந்துவிடுவார்கள்.

வளையல் அடுக்கி காசு வாங்கியதும், ஒரு தட்டு வாங்கி, பைக்குள் கசங்கிய வெற்றிலை பாக்கில் காசு வைத்து ஆசிர்வாதம் செய்வார். அதும், வளைகாப்பில் பெண்கள் காலில் விழுமுன்னரே பதறி பாதியில் தடுத்து ‘ஒத்துரா சிட்டி தல்லி’ என்று உச்சி முகரும்போது அங்கே வியாபாரி இல்லை, ஜாதி இல்லை, பொருளாதார ஏற்றத் தாழ்வில்லை . நேசம் நேசம் நேசம் மட்டுமே. ஆண்களைக் கண்டால் அழும் குட்டிப் பெண் கூட மடியில் அமர்ந்து முகம் பார்த்து வளையல் போட்டுக் கொள்ளும்.

பிற்பாடு எங்கோ படித்தேன். கி.ரா. என்று கவனம். இந்தத் தொழிலுக்கு வருமுன்னர் தொழில் கற்றுக் கொடுக்கும் முதியவருடன் (தந்தை அல்லது பாட்டன்) குல சாமி கோவிலில் சத்தியம் செய்வார்களாம். நான் மணக்கும் பெண்ணைத் தவிர அனைவரையும் தாயாய், சகோதரியாய் நினைப்பேன் என்று.  அதனால் தானோ அத்தனை பெண்களும் கூச்சமின்றி கை பிடிக்க விட்டு வளையல் போட அனுமதித்தார்கள்? இவர்களை மட்டுமா தொலைத்து விட்டோம்? சிணுங்கிச் சிரிக்கும் கண்ணாடி வளையல் இசையும் சேர்த்தே தொலைத்துவிட்டோம்.

25 comments:

துபாய் ராஜா said...

நெகிழ்ச்சியான பதிவு.

அருமை ஐயா.

அன்புடன் அருணா said...

நிஜம்தான் சிணுங்கிச் சிரிக்கும் கண்ணாடி வளையல் இசை கேட்டுத்தான் எவ்வ்ளோ நாளாச்சு????..நல்லா எழுதிருக்கீங்க!பூங்கொத்து

பிரியமுடன்...வசந்த் said...

// இவர்களை மட்டுமா தொலைத்து விட்டோம்? சிணுங்கிச் சிரிக்கும் கண்ணாடி வளையல் இசையும் சேர்த்தே தொலைத்துவிட்டோம்.//

இப்போவெல்லாம் இது மாதிரி வளையல்காரர்களை பார்க்க முடிவதில்லையே.........

அப்பாவி முரு said...

ரெண்டாயிர வருச பழக்கத்தையெல்லாம் விட்டு வெளியே வந்து பல ஆண்டுகள் ஆச்சு...

அகல் விளக்கு said...

//இவர்களை மட்டுமா தொலைத்து விட்டோம்? சிணுங்கிச் சிரிக்கும் கண்ணாடி வளையல் இசையும் சேர்த்தே தொலைத்துவிட்டோம்.//

பின்னிட்டிங்க சார்...

நான் வளையல்காரர்களை பார்த்து பல வருடங்களாகிவிட்டது.

கடைசியாக என் சகோதரியின் வளைகாப்பிற்கு தேடித் தேடி ஒரு வளையல்கார அம்மாவை கூட்டி வந்ததோடு சரி. இப்பொழுதெல்லாம் நம் நினைவில் வளையலும் இல்லை வளையல்காரர்களும் இல்லை. வருந்தத்தக்க செய்தி...

இராகவன் நைஜிரியா said...

இப்போது வளையல்காரர்களை பார்ப்பது அபூர்வமாகத் தான் இருக்கின்றது. தொலைந்து போனவர்களில் இவர்களும் அபூர்வமானவர்கள்தான்.

ஊர்சுற்றி said...

அருமையான இடுகை. தூர்தர்ஷனில் 'தொலைந்து போனவர்கள்' என்று ஒரு தொடர் பல வருடங்களுக்கு முன் ஒளிபரப்பானது.... உங்களுக்குத் தெரியுமா? தலைப்பு அதை ஞாபகப்படுத்துகிறது.

வானம்பாடிகள் said...

துபாய் ராஜா
/நெகிழ்ச்சியான பதிவு.

அருமை ஐயா./

நன்றிங்க ராஜா.

வானம்பாடிகள் said...

அன்புடன் அருணா
/நல்லா எழுதிருக்கீங்க!பூங்கொத்து/

வாங்க அருணா. வருகைக்கும் பூங்கொத்துக்கும் நன்றி.

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த்
/இப்போவெல்லாம் இது மாதிரி வளையல்காரர்களை பார்க்க முடிவதில்லையே........./

ஆமாங்க வசந்த். தேடினாலும் எவ்வளவு காசு குடுத்தாலும் வரமாட்டாங்க.

பழமைபேசி said...

வளையல் வாங்கலையோ வளையல்?! கண்ணாடி வளையல், இரப்பர் வளையல், அன்னக்கிளி வளையல்.... வளையல் வாங்களையோ வளையலூ?!

பழமைபேசி said...

வளையல் வாங்கலையோ வளையல்?! கண்ணாடி வளையல், இரப்பர் வளையல், அன்னக்கிளி வளையல்.... வளையல் வாங்கலையோ வளையலூ?!

வானம்பாடிகள் said...

அப்பாவி முரு
/ரெண்டாயிர வருச பழக்கத்தையெல்லாம் விட்டு வெளியே வந்து பல ஆண்டுகள் ஆச்சு.../

பழக்கம் எப்படியோ ஒட்டிண்டிருக்கு முரு. பண்பைத் தான் தொலைச்சிட்டோம்.

வானம்பாடிகள் said...

அகல் விளக்கு
/பின்னிட்டிங்க சார்...

நான் வளையல்காரர்களை பார்த்து பல வருடங்களாகிவிட்டது.

கடைசியாக என் சகோதரியின் வளைகாப்பிற்கு தேடித் தேடி ஒரு வளையல்கார அம்மாவை கூட்டி வந்ததோடு சரி. இப்பொழுதெல்லாம் நம் நினைவில் வளையலும் இல்லை வளையல்காரர்களும் இல்லை. வருந்தத்தக்க செய்தி.../

நன்றிங்க.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா
/இப்போது வளையல்காரர்களை பார்ப்பது அபூர்வமாகத் தான் இருக்கின்றது. தொலைந்து போனவர்களில் இவர்களும் அபூர்வமானவர்கள்தான்./

ஆமாங்க சார்

வானம்பாடிகள் said...

ஊர்சுற்றி
/அருமையான இடுகை. தூர்தர்ஷனில் 'தொலைந்து போனவர்கள்' என்று ஒரு தொடர் பல வருடங்களுக்கு முன் ஒளிபரப்பானது.... உங்களுக்குத் தெரியுமா? தலைப்பு அதை ஞாபகப்படுத்துகிறது./

நன்றிங்க. ஹி ஹி. நான் தொலைக்காட்சியெல்லாம் பார்க்கிறதே இல்லைங்க. அதும் தூர்தர்ஷன் பசங்க இருக்கிற வீட்ல பார்க்க விட்ருவாங்களா.

வானம்பாடிகள் said...

பழமைபேசி

/வளையல் வாங்கலையோ வளையல்?! கண்ணாடி வளையல், இரப்பர் வளையல், அன்னக்கிளி வளையல்.... வளையல் வாங்களையோ வளையலூ?!//

ஆஹா. கவனம் வருதா? இதான் வேணும்.

Kiruthikan Kumarasamy said...

மன்னிக்க வேணும் பாலா... எனக்கு வேற வழி தெரியவில்லை. இன்னுமொரு தொடர் பதிவு.. கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்கள் http://kiruthikan.blogspot.com/2009/09/blog-post_12.html

வானம்பாடிகள் said...

Kiruthikan Kumarasamy
/மன்னிக்க வேணும் பாலா... எனக்கு வேற வழி தெரியவில்லை. இன்னுமொரு தொடர் பதிவு.. கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்கள் /

ஆஹா. இது வேறயா. பார்க்கலாம்.

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

அருமையான இடுகை.

வானம்பாடிகள் said...

செந்தில்வேலன்(09021262991581433028)

/அருமையான இடுகை./

நன்றிங்க செந்தில் வேலன்.

வித்யாஷ‌ங்கர் said...

greatloss-vidyashankar

வானம்பாடிகள் said...

வித்யாஷ‌ங்கர்
/greatloss-vidyashankar/
ஆமாங்க. நன்றிங்க பின்னூட்டத்துக்கும் வரவுக்கும்

வெ.இராதாகிருஷ்ணன் said...

மிகவும் அழகான எழுத்து நடை.

தொலைந்து போனவர்களை பின்புறமாகப் படித்துச் செல்கிறேன். இதைப் பற்றி சில வரிக் கவிதைகள் எழுதி இருக்கிறேன்.

மனித நேயமிக்க மனிதர்களைத் தொலைத்துவிட்டோம் எனும் விசயம் சொல்லும் அற்புத பதிவு. அருமை ஐயா.

வானம்பாடிகள் said...

வெ.இராதாகிருஷ்ணன்
/மிகவும் அழகான எழுத்து நடை.

தொலைந்து போனவர்களை பின்புறமாகப் படித்துச் செல்கிறேன். இதைப் பற்றி சில வரிக் கவிதைகள் எழுதி இருக்கிறேன்.

மனித நேயமிக்க மனிதர்களைத் தொலைத்துவிட்டோம் எனும் விசயம் சொல்லும் அற்புத பதிவு. அருமை ஐயா./

நன்றிங்க. நானும் உங்கள் படைப்புக்களை படித்துக் கொண்டிருக்கிறேன்.