Saturday, October 2, 2010

கேரக்டர் - ரமணி..


ரமணி..ரமணியை முதன் முதலில் பார்த்ததே ஒரு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவில். பார்த்ததுமே பிடித்துப் போனது. காரணம், ஜெய்சங்கர் மாதிரி அலை அலையான கிராப்பும், டையும். நேரில் பார்த்தது அவர் கலியாணத்தில். சரியான உயரம், அம்மாவைப் போல் நல்ல நிறம், வாய் கொள்ளாச் சிரிப்பு, அலைபாயும் கண்கள், வெடுக் வெடுக்கென்று காகம் போல் தலை திருப்பிப் பார்க்கும் மேனரிசம். 

திருமணம் ஆனகையோடு பூனாவுக்கு மாற்றல் வாங்கியிருப்பதைச் சொல்லி குஜராத்தை விட பூனா அருகில் என்ற சமாதானத்தோடு புதுக்குடித்தனம் போன மணப்பெண்னிடமிருந்து வந்த முதல் கடிதம் வீடெங்கும் சிரிப்பலையை உண்டாக்கியது. ‘சரியான கஞ்சனப்பா. ரெண்டு பேருக்கு 4 கத்திரிக்கா போதும், கைப்பிடி வெண்டைக்காய் போதும்னு குத்து மதிப்பா வாங்கறதாவது பரவால்லைப்பா. மனுஷன், கடை கடையா ஏறி இறங்கி எந்தக் கடையில் கடுகு காரமா இருக்குன்னு தரம் பார்த்து வாங்கறார்’ என்று வந்த கடிதம் தந்த சிரிப்பு அது.

அரிசிப்பஞ்சம் இருந்த காலம் அது. மைத்துனனிடம் சொல்லி, ஹோல்டால் முழுதும் ஒரு மூட்டை அரிசி நிரப்பி, பொங்கல் சீர் செய்ய பூனேக்கு போனார்கள், பெண்வீட்டார். ஊர் சுற்றும் சாக்கில் மருமகனோடு போய் மார்க்கட்டில் பேரம், விலை என்று அலைந்து களைத்த பெரியவர், ‘அஞ்சு பைசா குறைவுன்னு இந்த அலைச்சல் தேவையா மாப்ள? எத்தனை எனர்ஜி வேஸ்ட்’ என்று சொன்னபோது கிடைத்த ஞான வசனம் இது.

“மாமா! பஸ்ல போறோம். ஒரு ரூபா டிக்கட். தொன்னுத்தஞ்சு பைசாதான் இருக்குன்னா கண்டக்டர் விடுவானோ. தொன்னுத்தஞ்சு பைசாக்கு அங்க மதிப்பில்லை. இல்லாத அஞ்சு பைசாதான் பெருசு”.

மாப்பிள்ளை சிக்கனக்காரர் என்று கொண்டாடுவதா? கஞ்சனென்று வருந்துவதா? ஒரு முறை அவரின் பெற்றோருடன் ஹைதையில் பஸ் ஏற, அந்தப் பெண் டிக்கட் எடுத்திருக்கிறார். மாமியாருக்கு கோபம். அவன் வேற எடுத்திருப்பான். நீ எதுக்கு அதிகப்பிரசங்கியாட்டம் வாங்கற என்றவருக்கு மருமகள் பதில் சொல்லவில்லையாம். இறங்கியபின், மருமகள் சொன்னபடி அவர் அம்மா மகனிடம் விசாரித்தாராம்.

‘ஹி ஹி! நான் நேக்கு வாங்கிட்டேனே. இவள் எனக்கும் சேர்த்து வாங்கிட்டாளா? ஒரு டிக்கட் காசு போச்சா’ என்று பதற, மருமகளின் பார்வையை சந்திக்க முடியாமல்,  ‘இவன் இன்னும் மாறாம அப்படியே இருக்கான். நீயாவது மாத்தப்படாதா?’ என்ற முனகலே பதிலாயிற்றாம்.

 குன்னூரில் இருந்தபோது, ஏதோ டெஸ்ட் எடுக்க உதவ, பாய்ச்சர் இன்ஸ்டிட்யூட்டில் பணி புரியும் பக்கத்து வீட்டுக்காரர்,  இவரை டெஸ்டுக்கு அழைத்துக்கொண்டு போய் பட்ட பாடு இருக்கிறதே. சொல்லத் தரமன்று.

ரெண்டு விலையுயர்ந்த கண்ணாடி டிஷ் கையில் கொடுத்து சேம்பிள் கேட்டிருக்கிறார்கள். நண்பர் இவரை அனுப்பிவிட்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டு, சற்று கழித்து லேபில் போய் கேட்க ஆளைக் காணோம். மாலையில் வீட்டுக்கு வந்து,  ‘அம்மா! அந்த சாம்பிள் டிஷ்ஷாவது வாங்கிக் கொடுங்கம்மா. இல்லையென்றால் என் சம்பளத்தில் பிடித்துவிடுவார்கள்’ என்று அழமாட்டாக் குறையாகக் கெஞ்ச, சேம்பிள் கொடுக்காமல், எஸ்ஸாகி சினிமாவுக்கு போய்விட்டு வந்தவரிடம், கெஞ்சிக் கூத்தாடி பேண்ட் பாக்கட்டிலிருந்த டிஷ்ஷை வாங்கி கொடுப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

அது ஊட்டியோ, ஜம்முவோ மனைவியோடு வந்து மனைவியோடு ஊருக்குப் போன வரலாறே இல்லை. ரிசர்வேஷன் வேஸ்ட். நாலு ரயில் மாறிப்போனா என்னாயிடும் என்று அன்ரிசர்வ்டில்தான் பயணிப்பார் தனியாக.

நாளை என்ன சமையல் என்று கேட்க வேண்டும். கத்தரிக்காய் சாம்பார், வாழைக்காய் கறி, பூண்டு ரஸம் என்று சொரிந்து சொரிந்து யோசித்து சொல்லுவார். திரும்பவும் காலையிலும் கேட்க வேண்டும். வாழைக்காய் கூட்டு, கத்தரிக்காய் கறி, சீரக ரஸமென்று மாறும். 

பீமன் மாதிரி ரமணி. போஜனப் ப்ரியன்.  எத்தனை முறை வந்தாலும், அதே வீடானாலும், ‘ஏண்டி! கெழக்கு எது?’ என்று கேட்டு திசை பார்த்துதான் சாப்பிட அமர்வார். உப்பு போதவில்லை என்றால் சேர்த்து சாப்பிடுவது சகஜம். மனுஷனுக்கு புளிப்பு போதவில்லை என்றால், பொறுமையாக, வென்னீரில் கொஞ்சம் புளி கரைத்து சேர்த்துக் கொண்டு சாப்பிடுவார். அதிகமானால் வென்னீர் விட்டு இளக்கிக் கொள்வார். கறி ப்ரமாதம். சாம்பார் ஃபஷ்ட்க்ளாஸ். ரஸம் ஏ ஒன் என்ற சிலாகிப்புக்குக் குறைவிருக்காது. யார் சமையல் என்று கேட்டு,  ‘நண்ணா இருந்தது! அன்னதாதா சுகீ பவா’ என்று வாழ்த்தவும் செய்வார்.

சரி! சிக்கனமாக இருப்பதில் தவறில்லைதான். மனுஷனுக்கு தமிழ்நாடும், ஆந்திராவும் பிடிக்காது. பெரும்பாலும் வடமாநிலம்தான். காரணம் என்ன தெரியுமா? சோம்பேறி. வேலையில் நாட்டமில்லை. வட நாடு என்றால் சூப்பரிண்டண்டிடம் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டால், இவர் முடிக்காமல் இழுத்தடிக்கும் வேலையை முடித்துவிடுவார். 

சில நாட்களில் மட்டம் போடுவாராம். ஏன் முடியலையா என்ற மனைவியின் கேள்விக்கு, ‘பக்கத்து சீட்டுக்காரி சனியன் 2 நாள் லீவு போட்டுட்டாள். அவள் வேலையும் எனக்கு சேரும். அதுக்கு வேற தனியா காசு கொடுக்கணும் தண்டம்’ என்று சம்பளமில்லாத விடுப்பானாலும் எடுப்பார். 

மூன்று வருடத்துக்கு ஒரு முறை மாற்றல் தவறாது என்பதால், இரண்டு வருடத்திலேயே தேடி யாரும் போகாத ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் கேட்டு விடுவார்.  அதற்கு சொல்லும் காரணம் அபாரமாய் இருக்கும். ‘அவனே போட்டா ஏதாவது தண்ணியில்லாத காட்டுக்கு போடுவான். நாமளா பார்த்து கேட்டுண்டா நல்லது. எப்புடி இருக்குமோ என்னமோன்னு திகைப்பிருக்காது பாரு’ என்பார்.

மாற்றலின் போது ஒரு முறை 4 மணிக்கு கிளம்பி 6 மணிக்கு ரயில் பிடிக்க வேண்டிய கட்டாயம். டிஃபனும் சாப்பாடும் ஹோட்டலிலா. வேஸ்ட் என்று பிடிவாதமாக காலைச் சமையலுக்கு வேண்டியதை விட்டு மற்றவற்றை கட்டச் சொல்லி, ஒன்பது மணிக்கு சாப்பிட்ட பிறகு லாரியை அழைத்து வருகிறேன் என்று போனவரை ஆளைக் காணோமாம்.

டிபார்ட்மெண்ட் லாரியாதலால் அவன் நேரத்துக்கு வந்து, அம்மணி இந்தாளை நம்பினால் கஷ்டம் என்று எல்லாவற்றையும் ஏற்றி பார்ஸல் ஆஃபீஸில் புக் செய்துவிட்டு வீடு வர மணி ஒன்று ஆகிவிட்டதாம். பூட்டியிருந்த வீட்டின் முன், கடுங்கோபத்துடன் நின்று கொண்டு, ‘பொறுப்பிருக்கா? எங்க போய் தொலைஞ்ச. எப்போ பார்ஸல் அனுப்பி, எப்போ கிளம்பறது? லாரிக்காரனும் வந்த பாட்டைக் காணோம்’ என்று எகிறி, பூட்டைத் திறந்தபின்  ‘ஹி ஹி! நீயே அனுப்பிட்டியா? பேஷ் பேஷ்!!’ என்ற சிலாகிப்போடு ஒரு வழியாய் ட்ரெய்ன் பிடித்தார்களாம்.

லாரி கூட்டி வரப் போகிறேன் என்று போகும் வழியில் மார்னிங்ஷோ பார்த்துவிட்டு அரக்க பறக்கப் போய், லாரி போயாகி விட்டது என்றதும் போட்ட சீன் அதுவென்றால், ட்ரெய்ன் ஏறி அமர்ந்ததும் ‘ஸ்ஸ்ஸ்ஸப்பா! ஒவ்வொரு வாட்டியும் ட்ரான்ஸ்ஃபர்னா இந்த சாமான் சட்டி தூக்கறது பெரும்பாடு’ என்று சலித்துக் கொண்டது மெகா சீனா இல்லையா?

மனுசனுக்கு சாவென்றால் பயம். வஞ்சனையே இல்லாமல், மாமனார், மாமியார், தாய், தந்தை ஒருத்தர் சாவுக்கும் பிணம் எடுக்கும் வரை போனதேயில்லை. சாப்பிட உட்கார சாஸ்திரம் பார்க்கும் மனுஷனுக்கு இதற்கு மட்டும் சாஸ்திரம் உதவாது.  

காரியம் பண்ணும்போது புரோகிதர், கெஞ்சிக் கூத்தாடி, ‘இங்க பாருப்பா! குறைஞ்ச பட்சம் சங்கல்பம், எங்கப்பாக்கு, எங்கம்மாக்குன்னு வர மந்த்ரங்களெல்லாமாவது நீதான் சொல்லியாகணும்’ என்று மல்லுக் கட்டியும், மந்திரம் சொல்லாமல் வடிவேலு மாதிரி சொல்லியாச்சு சொல்லியாச்சு என்று சொல்லியே கடுப்பேத்தினாராம்.

மனுசனுக்கு உடம்புக்கு வந்து விட்டால்  மனைவியை விட மருந்துக் கடைக்காரன் பாடு திண்டாட்டம். டாக்டர் பத்து மாத்திரை எழுதினால் சீட்டைக் கொண்டு போய் நீட்டி, இது எதற்கு என்று கேட்டு, டாக்டர் சரியான நோவுக்குதான் மாத்திரை கொடுத்திருக்கிறாரா என்று உறுதி செய்து கொள்வார்.  பிறகு ரெண்டே ரெண்டு மாத்திரை கேட்பார். இல்லைங்க ஒரு கோர்ஸ் முழுசா எடுக்கணும் என்றால், இந்த மருந்து கேக்கலைன்னா அவர் மாத்தி எழுதி குடுப்பார். நீ திரும்ப எடுத்துப்பியா என்று டரியலாக்குவார். ரெண்டு மூன்று மாத்திரைகள் என்றால் எது, எதற்கு என்று கேட்டு, வலி மாத்திரை வேணாம். கொஞ்ச நேரம்தான் வலி தெரியாது. எதுக்கு வேஷ்ட் என்பார்.

ஆண்டிபயாடிக் எழுதிவிட்டால் போச்சு. என்னதிது ஒரு மாத்திரை இவ்ளோ காஸ்ட்லி. சீப்பா இல்லையா? ரெண்டு மாத்திரையா போட்டுக்கலாம் இல்லையா? அதைக் கொடு என்று மல்லுக் கட்டுவார். மாத்திரைன்னா அளவா இருக்க வேணாமா, சோழி சோழியா இவ்ளோஓஒ பெருசு பண்ணா எப்புடி முழுங்கறது என்ற கேள்விக்கு மருந்து கடைக்காரன் என்ன சொல்ல முடியும். 

ஆனாலும் ஒன்று. மனுஷன் நேத்து ஒரு மாதிரி. இன்னைக்கு ஒரு மாதிரி என்ற பேச்சுக்கே இடமில்லை இவரிடம்.  ஆயிற்று எழுபது வயது. கொஞ்சமும் மாறாமல் அன்றைக்கு இருந்தாற்போலவே இன்னும் இருக்கிறார். இப்போதெல்லாம் கடைக்குப் போகாவிட்டாலும், மாரி முத்து கடைல கேட்டியா? எவ்ளோ சொன்னான். செட்டியார் கடையில சல்லிசா இருக்குமே? அங்க கேட்டியோன்னோ என்று மனைவியிடம்  ‘Mock பேரம்’  டிவி பார்த்தபடியே தொடர்கிறதாம். 
*****

65 comments:

கலகலப்ரியா said...

lol... i can see him...

bandhu said...

I will never miss your posts! you have an amazing sense of humor! Just Great!

Unknown said...

சார் பழமையார் வந்து போன பிறகு பெஞ்சுல இடமிருக்கானு பார்க்கிறேன் சார். அவருக்கு முன்னாடி வந்தா கோவிச்சுப்பார்.

vasu balaji said...

அவர் அப்போவே இடுகை போட்டுட்டு போய்ட்டாரே:))

ராஜ நடராஜன் said...

எப்ப வந்தாலும் கடை கூட்டமாவே இருக்குதே:)

அது சரி(18185106603874041862) said...

இந்த கேரக்டர் சீரிஸ் நல்லாருக்கு...என்னவோ நீங்க பக்கத்துல உக்காந்து பேசற மாதிரி நேரேஷன்...

பட், ரமணியோட ஐடியா சரி தான். பத்து மாத்திரை வாங்கி அது வொர்க்கவுட் ஆகாட்டி, வேஸ்ட்டா தான் போகும் :))

vasu balaji said...

@ராஜ நடராஜன்

வாங்கண்ணா:))

பழமைபேசி said...

அண்ணே, மற்றுமொரு கல்....


இரத்தினக்கல்......



மகுடத்துலதான்!


@@Sethu

வந்துட்டுப் போயிட்டு, பேச்சப்பாருங்க பேச்சை.... இஃகி!

Unknown said...

சூப்பர் சார். சிரிப்பு தாங்கல. கலக்கல்.
பழமையும் கூலாகியிருப்பார் இப்ப.

என் wife கிட்ட இத காமிச்சா, அட இத எதுக்கு படிக்கணும். அதான் தினமும் பார்கிறோமே என்று சொல்லிட்டாங்கனா, மானம் போயிரும் சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

SUUUper bala

பவள சங்கரி said...

வழக்கம் போல சூப்பர் கேரக்டர் சார்....... இது போல கஞ்சாம்பட்டிகள் கண்டிப்பா திருந்துறது சிரமம் தான். இரதத்திலேயே ஊறிப்போய் கிடப்பாய்ங்க்.............

எல் கே said...

எல்லாம் சரி அது என்ன சாவுக்கு பயம்

பிரபாகர் said...

இப்படியும் சுவராஸ்யமான (நமக்கு, சம்மந்தப்பட்டவர்கள் பாவம்) மனிதர்கள் இருப்பதால் தான் வாழ்க்கை இனிமையாய் இருக்கிறது!...

பிரபாகர்...

காமராஜ் said...

//ராஜ நடராஜன் said...

எப்ப வந்தாலும் கடை கூட்டமாவே இருக்குதே:)//

அதானே நடுக்கூர் சாமத்திலும் அஞ்சாறு பேர் முன்னாடி நிக்கிறாங்க சார்.

பாலாண்ணா...அழகு.

க ரா said...

அருமை சார்...அவரோடு இருந்தவர்கள் பாவம்தான் :)

ரிஷபன் said...

ரமணி மாதிரி எல்லா ஊர்லயும் இருக்காங்க.. ஆனா ரசிக்கிற மாதிரி பதிவு போட நீங்க மட்டும்தான்..

ஸ்ரீராம். said...

வழக்கம் போலவே அருமை. கடுகு எந்தக் கடைல காரம் அதிகம்னு பார்த்துதான் வாங்குவார்...! ஹா....ஹா...

நசரேயன் said...

மணி அண்ணன் சொன்னதை மறுபடி சொல்லிகிறேன்

பழமைபேசி said...

@நசரேயன்

இஃகி

vinthaimanithan said...

மாந்தோப்புக் கிளியே படம் பாத்துருக்கியளா? அதுல இதே மாதிரி ஒரு கேரக்டர்... ஊறுகாய மோந்து பாத்துட்டே முழுச் சாப்பாட்டையும் முடிச்சிடும் :)

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்..ரசனையான இடுகைதான்

settaikkaran said...

ஐயா, மிஸ்டர் ரமணி தேன் நிலவுக்காவது செலவைப் பார்க்காமல் மனைவியையும் அழைத்துக்கொண்டு தானே போனார்? :-)

பத்மா said...

வானம்பாடி சார் ,என்னவோ எனக்கு இந்த கேரக்டேர் எழுதும் போது மட்டும் ஒரு சலிப்பு உங்கள் மனதில் ஓடிக் கொண்டு இருந்திருக்க வேண்டும் என தோணுகிறது.
இம்மாதிரி உள்ளவர்களைப் பார்த்து பரிதாபப் படத்தான் வேண்டும்..

அருமையான சித்திரம்

velji said...

good illustration!

நர்சிம் said...

நன்றி ஸார். இரண்டு மூன்று ஷார்ட் ஸ்டோரிஸ் இருக்கு இதுக்குள்ள.

Unknown said...

இப்பவும் மாறாம இருக்காரே...அந்த நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு :))

Unknown said...

இந்த மாதிரி ஒரு கேரக்டரை நானும் சந்தித்து இருக்கிறேன்.. சிக்கனம், கஞ்சத்தனம் இரண்டுக்கும் வித்தியாசம் இல்லாமல் நடந்து கொள்வார்,,அவர் பாடுபட்டு சேர்த்த சொத்தை அவருக்குப் பின் பையன் குடித்தே அழித்தான் ...

மாதேவி said...

அப்பாடியோ :))

Unknown said...

நர்சிம் சொன்னதை ரிப்பீட்டிக்கிறேன்.

ஈரோடு கதிர் said...

||அலை அலையான கிராப்பும்||

புடிக்காதா பின்ன!

ஈரோடு கதிர் said...

||மெகா சீனா இல்லையா?||

நம்ம பிளாக்கர்ஸ்ஸ விட பெரிய சீனாவாயில்ல இருக்கு

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அது சரி..உங்க கேரக்டர் எல்லாரும் வித்யாசமாய் இருக்காங்களே...வித்யாசமான கேரக்டரா தான் போடறீங்களோ?

vasu balaji said...

@கலகலப்ரியா

:D. ரொம்ப நன்றிம்மா

vasu balaji said...

@bandhu

Oh! Thank you:)

vasu balaji said...

@ராஜ நடராஜன்

=))

vasu balaji said...

@அது சரி(18185106603874041862)

ம்ம். நன்றி அதுசரி. ரமணிக்கு சப்போர்ட் வேறயா:))

vasu balaji said...

@பழமைபேசி

நன்றிங்க பழமை.

vasu balaji said...

@Sethu

ஓஹோ. சேம் ப்ளட்டா

vasu balaji said...

@T.V.ராதாகிருஷ்ணன்

நன்றி டி.வி.ஆர். சார்.

vasu balaji said...

@நித்திலம்-சிப்பிக்குள் முத்து

தப்புன்னு நினைச்சாத்தானுங்களே திருந்தறது.

vasu balaji said...

@LK

ஆஹா. அது அவங்களுக்கே தெரியாது:))

vasu balaji said...

@பிரபாகர்

ம்கும். அது சரி. நன்றி பிரபா.

vasu balaji said...

@காமராஜ்

ஹா ஹா. நன்றி காமராஜ்.

vasu balaji said...

@இராமசாமி கண்ணண்

நன்றி இராமசாமி கண்ணன்.

vasu balaji said...

@ரிஷபன்

நன்றி ரிஷபன்.

vasu balaji said...

@நசரேயன்

நான் தனியா உங்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன்.

vasu balaji said...

@விந்தைமனிதன்

இவ்ரு அந்த அளவுக்கு இல்லை. :)). நல்லகாலம்

vasu balaji said...

@ஆரூரன் விசுவநாதன்

ம்ம்ம். நன்றி ஆருரன்

vasu balaji said...

@சேட்டைக்காரன்

=)).

vasu balaji said...

@பத்மா

சரிதாங்க. நன்றி

vasu balaji said...

@velji

நன்றி வேல்ஜி

vasu balaji said...

@நர்சிம்

நன்றி நர்சிம்.

vasu balaji said...

@தஞ்சாவூரான்

நன்றிங்க தஞ்சாவூரான்

vasu balaji said...

@கே.ஆர்.பி.செந்தில்

நன்றி செந்தில்

vasu balaji said...

@மாதேவி
:)) நன்றிங்க மாதேவி

vasu balaji said...

@முகிலன்

நர்சிம்கு சொன்ன நன்றியை ரிப்பீட்டிக்கிறேன்

vasu balaji said...

@ஈரோடு கதிர்

ஆமாமா. பாம்பின்கால்.

ப்ளாக்கர்சீன்லாம் இது பக்கத்துல கூட வராதுங்கோ:))

vasu balaji said...

@ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி

ஹி ஹி. அப்படித்தான்:))

Unknown said...

"ஓஹோ. சேம் ப்ளட்டா"

அப்பிடியெல்லாம் இல்ல சார். ஆனா நான் முன்னாடி சொன்ன மாதிரி தான் ஆயிடுச்சு.

ஆகா மொத்தம் அத்திம்பேருக்கு வெச்சிட்டீங்க சின்ன ஆப்பு. பார்ப்போம். மேற்கொண்டு என்ன பண்றீங்கன்னு.

தாராபுரத்தான் said...

வணக்கமுங்க..

ஈ ரா said...

//ஹி ஹி! நான் நேக்கு வாங்கிட்டேனே. இவள் எனக்கும் சேர்த்து வாங்கிட்டாளா? ஒரு டிக்கட் காசு போச்சா’//

சிரிப்பை அடக்க முடியவில்லை..

'பரிவை' சே.குமார் said...

Super Ayya...

Ha.... ha... haaaa....

Anonymous said...

வணக்கம் சார்.உங்களின் ஆதரவிற்கும், கரம் நீட்டுதலுக்கும் நன்றி.

nellai அண்ணாச்சி said...

மனதை சந்தோசமாக்கும் அருமையான பதிவு

பொன்கார்த்திக் said...

:)