Saturday, October 30, 2010

வாழ நினைத்தால் வாழலாம்...

வாடுற மல்லி தரையில
ஊதுற பீடி கடையில

காய் கறிங்க தெருவுல
காலணியெல்லாம் குளுகுளு கடையில

மூலக் குத்துன்னு சாமி வெளியில
மூத்திரம் போற இடம் நடுவூட்டுல

காதம் இருக்க கண்ணுக்கு ஷேடு போட்டு கந்தம்பேரனாடாம்பாரு பெருசு அப்ப
கவிதா மவன் மாமான்னா எந்த கவிதான்னு கேக்குறான் தாய்மாமன் இப்ப

செங்கல்லு வெல எங்கயோ
செல்ஃபோன் மாத்திரம் ஒன்னு வாங்கினா ரெண்டு

அரிசி பருப்பு வெல ஆகாசத்துல
அளகான டிவி பொட்டி அடிமாட்டு விலையில

கடனாளியாயிட்டமுன்னு கயித்துல தொங்கினது ஒரு காலம்
க்ரெடிட் ரேட்டிங் எகிறிப் போச்சுன்னு காலரைத் தூக்கி விட்டுக்குறது இக்காலம்

கோவில் தரிசனம் கோடி புண்ணியமாம்
செல்ஃபோன் டவர் தரிசனத்துக்கு என்ன பெலன்னு யாரு சொல்வா?

பொச்சு நாக்குட்டிய தவறாம வாக்கிங்கு
பெத்த புள்ள கையில ரிமோட்டோட சிட்டிங்கு

ரெகமண்டேசன் லெட்டரு, ப்ளாக்குல டிக்கட்டு வாங்கி பெருமாளுக்கு நேர்த்தி
பெத்த தாய் தகப்பன சுமையின்னு இல்லத்துல சேர்த்தி

மின்சாரம் சிக்கனம்னு கோடியா செலவு பண்ணி வெளம்பரம்
ஊட்டுக்கு ஊடு ஓசில அரசு தொலைக்காட்சிப் பொட்டி

பேசாதிருன்னு சொல்லிட்டு போச்சு பெருசு
பேசிட்டே இருன்னு விளம்பரம்போடுது அரசு

செவிட்டு மிசின வெக்கணுமேடான்னு வெக்கப்பட்டது அப்போ
கருவண்டு மிசின காதில மாட்டாதவன் மனுசனேயில்லை இப்போ

ஃபிட்டிங் சரியில்லைன்னு ஃபிட்ஸ் வந்தா மாதிரி டெய்லரை கிழிச்சது அப்போ
தொள தொளன்னு  வாங்கி ஆல்ட்ரேசன் பண்ணி லூஸ் ஃபிட்டிங்னு ஃபேசனாச்சு இப்போ

சுத்தி சுத்தி வந்து அந்த சீலைய காண்பி, இந்த வேட்டியக் காண்பின்னு சொல்லுவாரு மொதலாளி அப்ப
சுத்திலும் காமெரா வச்சு  வாங்கவந்தவன் திருடுறானான்னு நோட்டம் விடுறாரு இப்ப

சொகமா இருக்கியளான்னு சாரிக்கிறது போச்சே
எனக்கு சக்கரை உனக்கு ப்ரசரான்னு அலட்டிக்கறதாச்சே

ஆனா ஒன்னுடே.. சுகமெல்லாம் குறைஞ்சாலும்
இப்படி நாப்பொழைப்பு பொழைக்க சாவுற வயசு மட்டும் கூடிப்போச்சு மாத்திரை மருந்து புண்ணியத்துல..

(பொறுப்பி: மொத ரெண்டு பொலம்பலுக்கு சொந்தக்காரரு பழமைபேசி. மிச்சம் நீ பொலம்பு பார்க்கலாம்னு ஏத்திவிட்டாரு..அவ்வ்வ்)

~~~~~~~~~~~~~~

Thursday, October 28, 2010

ஃபாரின் ரிட்டன் பதிவரின் பரபரப்பு பேட்டி


(பதிவர் சிங்கம், சமூக ஆர்வலர், தில்லு தொர எங்கள் அண்ணன் கதிர் வெற்றிகரமாக கொழும்பு சென்று வந்திருக்கிறார். இது பற்றி அவருக்கே தெரியாமல் நடந்த உரையாடலைப் பகிர்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். உரையாடலில் பங்கேற்பவர்கள் பழமை, ஆரூரன், பாலாசி அப்புறம்.. அப்புறம்..நானில்லாமலா?)

வா.பா.:வணக்கம் மேயர் சார் 

கதிர்: ‘ஆய் போவான்’


ஆருரன்: அட! அதுக்கென்னங் சொல்லிகிட்டு. போய்ட்டு வாங்க.


வா. பா: அட இது அது இல்லீங்க மொதலாளீ. சிங்களத்துல வணக்கம் சொல்றாராமா. 

ஆருரன்: அட கண்றாவியே.

வா.பா. சரிங் சார். உங்களுக்கு ரெண்டு நாட்டுக்கு போக வாய்ப்பு கிடைச்சது. அந்த இன்னோரு நாட்டுக்கு ஏன் போக விருப்பமில்லைன்னு தெரியும். இதுதான் உங்க முதல் வெளிநாட்டு பயணமா?

கதிர்: இந்த வில்லங்கம்தானே வேணாங்கறது. ஆமாங்க! இதான் முதல் பயணம்.

வா.பா.:ச்சும்மா தில்லா சிங்கம் மாதிரி போய்ட்டு வந்திருகீங்க. பாராட்டுகள்.

பாலாசி: இங்காருங்க. நீங்க திரும்ப திரும்ப ஏன் சிங்கம் சிங்கம்னு சொல்றீங்கன்னு புரியுது. பின்பக்கம் மட்டும் முடியிருக்குன்னு எங்க மேயரை கிண்டல் பண்றது நல்லால்ல.

பழமை: சரிங் மாப்பு! மீனம்பாக்கம் விமான நிலையத்துல காபி சாப்பிட்டீங்களா?

கதிர்: அட இல்லைங்களே ஏன்?

பாலாசி: அந்த காபிக் கடை பொண்ணு உங்களுக்கும் கலியாணமாயிருச்சான்னு பழமை பேசிச்சான்னு ஒரு பொறாமைதான் வேற என்ன?

பழமை: இஃகி இஃகி.

கதிர்: இல்லைங்க. அந்த விடியகாத்தால அம்பது வயசிருக்கும் ஒரு அம்முணி, தரைய தொடைச்சிகிட்டிருந்தது வந்து ‘அண்ணே! கொஞ்சம் நவுந்து நில்லுன்னிச்சி’ அவ்வ்வ்

ஆரூரன்: ஏன்? நான் அண்ணனா? யூத்துன்னு சண்டைக்கு போலாம்ல. எங்கள மட்டும் கலாய்க்கிறீங்க

வா.பா: நல்லா குடுக்குறாருப்பா அகுடியா. அது காதுல ‘ஊத்து’ன்னு விழப்போய் பினாயில் தண்ணிய ஊத்தவா?

பாலாசி: அத விடுங்க! விமானத்துல பறந்த முதல் அனுபவம் எப்படி இருந்திச்சி.

கதிர்: அட! அந்த கண்றாவிய ஏன் கேக்குற. நம்ம ஊர் பொருட்காட்சில ஜயண்ட்வீல்ல சுத்தினாலே கொஞ்ச நேரம் வானத்தில இருந்திருக்கலாம். இங்க புறப்படப் போகுது பெல்ட கட்டுன்னாங்க. அதுங்கூட மல்லுக் கட்றப்பவே எறங்கப் போறோம் திரும்பக் கட்டுங்கறாங்க.

பாலாசி: அய்ய! அப்படின்னா உண்டிவில்ல கல்ல வச்சி எறிஞ்சாமாதிரின்னு சொல்லுங்க. அந்த சித்த நேரத்துல டீ வேணும், தண்ணி வேணும்னு கஸ்ஸ்ஸ்ஸிஞ்சீங்களா?

கதிர்: அதெல்லாம் உன்ன மாதிரி சில்லுவண்டு பண்றவேல. நான் பெல்ட் எப்படி கட்றதுன்னு மல்லுக்கட்றதுக்குள்ள ஊரு வந்திருச்சிங்கறேன்.

ஆரூரன்: நாட்டாமை! எனக்கு கம்ப ராமாயணத்துல
'முறை திறம்பு அரக்கன் மா நகர்
ஆண்டு உறைந்து அடங்கினை;  இந்த பாட்டு கவனம் வருதுங்க.


கதிர்: அடியே! காலைல நாலு மணிக்கு முழிப்பு வந்து டீ குடிக்க போனா நாய் தொறத்தும்னு பயந்து அஞ்சரை வரைக்கும், கண்டதையும் படிச்சி இடுகை தேத்தினா இதுவும் கவனம் வரும். இன்னும் என்னல்லாமோ வரும். அடிங்..

பாலாசி:அட! இதானா விஷயம். நாங்கூட மொதலாளி செந்தமிழ் மாநாட்டுக்கப்புறம் தமிழ்க்கடல்ல முங்கி முத்தெடுக்குறாருன்னுல்ல நினைச்சிட்டேன்.

வா.பா. அட சிங்கத்த பேச விடுங்கப்பா. நீங்க சொல்லுங்கண்ணே. கொழும்புல வரவேற்க யாரு வந்திருந்தாங்க.

கதிர்: ராஜபக்ஸே

வா.பா: என்னாது? இதெல்லாம் ஓவர் பீலா.

கதிர்: அட வெளிய வந்ததில இருந்து எங்க போனாலும் கையை கூப்பிக்கிட்டு அந்தாளு ஃப்ளெக்ஸ் பேனர்னு சொல்ல வந்தங்க. ஹி ஹி..

பழமை: அங்க உங்க அனுபவத்த சொல்லுங் மாப்பு.

கதிர்: ஹி ஹி. என்ன பாத்தா எப்புடி தெரியுது. அத வச்சி நாலு இடுகை தேத்தமாட்டமா.

பழமை: அடங்கொன்னியா!ச்சேரி ச்சேரி. அங்கால சனங்களோட கதைக்கிறதில உங்களுக்கு ஒன்னும் பிரச்சனையில்லைதானே.

கதிர்: அதெல்லாம் ஒன்னுமில்லீங்.

வா.பா. தோடா! யாரோ  ‘கதிரை’ ரெண்டு போடுங்கோன்னா அய்யாங் நானில்லைன்னு கட்டில் கீழ போய் ஒளிஞ்சிகிட்டு, அப்புறம் கதிரைன்னா நாற்காலின்னு சமாதானப் படுத்தி வெளிய கொண்டு வரதுக்குள்ள மூச்சு முட்டிப்போச்சுன்னு கேள்வி. பந்தாவப் பாரு.

பழமை: ஊரெல்லாம் வடிவாப்பார்த்து கெனக்க படமெல்லாம் புடிச்சீங்களா?

கதிர்: அட நீங்க வேற. வானம்பாடி பஞ்சாப்ல படம் புடிச்சி மாட்டினா மாதிரி நான் மாட்டவா? மரம் மட்டைய புடிக்கிறதுன்னாலும் காக்கா குருவி இல்லாத மாதர பார்த்துதான் புடிச்சேன். அப்புறம் சிங்களக் காக்காவ புடிச்சான்னு வில்லங்கம் வந்தா?

ஆரூரன்: அது சரிதாங் மாப்பு. அப்புறம் நாட்டாமையவே கைய புடிச்சி இளுத்தியான்னு ஒரு நாட்டாமை வந்தா வில்லங்கம்தானுங்களே. சரி! எந்தெந்த ஊருக்கெல்லாம் போனீங்க.

பாலாசி: என்னது? ஊருக்கெல்லாம் வேற போனாரா? ரயில்ல போகலையே?

கதிர்: ஏன் ராசா?


பாலாசி: இல்லீங். ரயில்ல ஏறினமா, படுத்தமா, இறங்கி போனமான்னு இல்லாம வடக்கால படுத்தேன், கிழக்கால போச்சுது, மேக்கால இறங்கினாலும் மனசு குபேர மூலைன்னு நினைக்குதுன்னு வாஸ்து கவிதை எழுதுனீங்கன்னா பின்னூட்டம் போடணும்ல. அதான். 


ஆரூரன்: நீங்க சொல்லுங்க. அந்தூருல யாரும் நாட்டாமைக்கு கூப்புட்டாங்களா?

கதிர்: அட ஆமாங். சொம்பு எங்கீங்னு கேட்டனுங். சொம்பெல்லாம் கெடயாதாமா. யாழ்ப்பாணம் தேங்கா குடுவைதான்னாங்க. நாட்டாமையே இல்லாம வேணும்னாலும் தீர்ப்பு சொல்லலாம் நசுங்குன சொம்பில்லாம சொல்லுற தீர்ப்பு செல்லாதுன்னு சொல்லிபோட்டனுங் கறாரா.

ஆரூரன்: அப்புடி போடு. அதான் நாட்டாம. அது சரிங் மாப்பு! ஃபேஸ் ஃப்ரெஸ்ஸா இருந்தாலும் கண்ணுல ஒரு பீதி தெரியுதே ஏன்?

வா.பா.: அதொண்ணுமில்லீங் மொதலாளி. புரட்டாசி முச்சூடும் கறி திங்காம காயப் போட்டதுல அவுங்கூட்டு கோழிக்கெல்லாம் கொண்டாட்டமா போயிடுச்சாம். ஐப்பசி வரட்டும்டி இருக்குன்னு இருந்தாரு. அது இந்த பயணத்தால தப்பிச்சிருச்சி. இப்புடி முழிச்சா வேப்பிலை அடிச்சி கெடாவே வெட்டுவாங்கன்னு சீன் போடுது பயபுள்ள.

கதிர்: ஏண்டி பேசமாட்டீங்க. ஊட்டுக்கு வந்ததும் வராததுமா பாப்பா வந்து அப்பா தமிழ் சொல்லிக் குடுங்கப்பான்னு அதிசயமா கேட்டதும் ஆடிப்போனது எனக்குல்ல தெரியும். ச்செரி ச்செரி. எனக்கு ஒரே ஜெட்லாக்கா இருக்கு. நான் ரெஸ்ட் எடுக்கப் போறேன். (நாள பின்ன அந்த மாப்புக்கு மட்டும் ஜெட்லாக் வருது. இந்த மாப்புக்கு வரலைன்னு மட்டமா நினைச்சிறப்படாதில்ல)

வா.பா: சரிங். நீங்க ரெஸ்ட் எடுங்க. ஆனா ஒரு விஷயம். இன்னும் எத்தன நாட்டுக்கு போனாலும் சரி. சூட்கேசுல ஒட்டின ஒரு ஸ்டிக்கர் கூட பிய்க்காம சூட்கேசே மறையற வரைக்கும் அப்படியே வச்சிருந்து டமிலர் பண்பாட்டைக் காப்பாத்தணும் சரியா?

பாலாசி: அண்ணா! ‘நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் இப்போது நாடு கடந்தும்’னு மாத்தணுங்ணா.

வா.பா: கூடிய சீக்கிரம் கோபால் பல்பொடியாக வாழ்த்துகள்

பழமை: அதென்னங் பாலாண்ணே.

வா.பா.:ஒன்னுமில்லிங்க. சிங்கப்பூர் மலேசியா போய்ட்டு வந்தார்னா, கோபால் பல்பொடி மாதிரியே இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் பிரசித்தி பெற்றன்னு சொல்லலாம்ல.

பழமை: அஃகக்ஃகா


ஆரூரன்: ச்சேரி. அப்ப நீங்கள்ளாம் கெளம்புங்கண்ணா. நானு இப்புடியே இவர ஒரு வாக்கிங் கூட்டிட்டு போய்ட்டு ஈரோடு கதிரை ‘பீரோடு கதிர்’ ஆக்கி ஊட்ல உட்டுட்டு போறேன்.

பழமை, வா.பா. பாலாசி: வாரமுங். வணக்கம்.

கதிர்: ‘ஆய் போவான்’!!!!!!
~~~~/\~~~~

Wednesday, October 27, 2010

கேரக்டர் - ஜனா..

ஜனாவை எனக்கு நேரடியாகப் பரிச்சயமாகுமுன் ஜனாவின் புகழ் அலுவலகமெங்கும் கொடிகட்டிப் பறந்துக் கொண்டிருந்தது. மூத்த அதிகாரியின் ப்யூன் என்ற பந்தாவில் எமர்ஜன்ஸி பிரியடில் அடையாள அட்டையில்லாமல் அய்யாவை காரிலேற்றி அனுப்பிவிட்டு வர, கை மறித்தது செக்யூரிட்டி. சேதுபதி I.P.S. ரேஞ்சுக்கு இந்த அதிகாரியின் ப்யூன் என்று தெனாவட்டாக பதில் வர அடையாள அட்டை கேட்டாராம் செக்யூரிட்டி. வீர பாண்டியக் கட்டபொம்மன் மாதிரி யாரிடம் கேட்கிறாய் ஐ.டி.கார்ட் என்று எகிறிய மறு நொடி பொளிச்சென்று ஒன்று போட்டு செக்யூரிட்டி ரூமில் முழங்கால் கட்டி உட்கார வைத்துவிட்டார்களாம். பிறகு யார் மூலமோ ஐ.டி. கார்ட் கொண்டு வரச்சொல்லி மீண்டு வந்த கதை ஒரு காவியம்.


பின்பொரு நாள் கேட்டேன் என்ன நடந்ததென்று. 'உதார் உட்டு பார்த்தேன். பளிச்சுன்னு கை நீட்டிட்டான். திருப்பி குடுத்திருந்தேன்னா மூணு நாளைக்கு மயக்கமாயிருப்பான். யூனிபார்மாச்சே. வேலைக்கு ஒலையாயிடும்னு பொத்திக்கினு உக்காந்துட்டேன்' என்று சிரித்தார்


ஜனா! எனக்கு ஜனாவை நினைக்கும்போதெல்லாம் ஏனோ காண்டாமிருகம் கவனம் வரும். குள்ள உருவம். வளைந்த குட்டைக் கால்களும் தடித்த உடல்வாகும், கைகளும். அகலமான மிகவும் முற்றிய முகம். அடர்ந்த கோரைத் தலைமுடி எண்ணை மினுக்க வகிடெடுத்து வாரியிருப்பார். உணர்ச்சியை சற்றும் வெளிக்காட்டா முகம்.  இப்படி ஒரு முரட்டு உருவத்துக்குள் அமைதியான ஒரு மனிதன்.


உதட்டோரம் ஒரு ஏளன வளைவு. மார்லன் ப்ராண்டோ மாதிரி பல்லைக் கடித்தபடி உதடசையும் பேச்சு. சிரிப்போ, கோபமோ, சாதாரணமாய் பேசுவதோ ஒரே த்வனியில் இருக்கும். ஏற்ற இறக்கம் இல்லாமல் ஒரு குரல். ஆறாவது படித்திருந்தாலும் ஆங்கிலம் படிக்க எழுதக் கடினம். எப்படியோ எழுத்தராகிவிட்டாலும், சீனியர்களுக்கு உதவியாக எடு பிடி வேலை செய்து ஒப்பேத்தி விடுவார்.

தருமன் இவரை வைத்துவிட்டுத்தான் செத்துப் போனான் என்று நினைக்கிறேன். அசராமல் பந்தயம் கட்டித் தோற்றாலும், 'ஜூதுல இன்னிக்கு உட்டா நாளைக்கு புடிச்சுதான் ஆவணும்' என்ற முது மொழியை கடைப் பிடிப்பவர்.

'யோவ்! அனியாயத்துக்கு தோத்துப் போறல்ல? விட்டு ஒழிய்யா' என்றால் 'தலைவரே! எங்க தொலைச்சமோ அங்க தேடணும் தலைவரே! என்று தத்துவத்தில் அடிப்பார். தருமன் என்றது சூதுக்கு மட்டுமல்ல. கடன் வாங்குவதிலும் கொடுப்பதிலும் அப்படி ஒரு நேர்மை. மூணாம் தேதி தந்துவிடுகிறேன் என்று மூணு பைசா வட்டிக்கு ஒருவரிடம் வாங்கினால், கறாராக தேதி தவறாமல் இன்னொருவரிடம் மூணு பைசா வட்டிக்கு வாங்கி இவர் கடனை பைசல் செய்து விடுவார். அடுத்த மாதம் இவரிடம் வாங்கி அவரிடம் கொடுத்து விடுவார்.

ஆடி மாசம் வந்துவிட்டதே என்று புது மாப்பிள்ளைகளை விட அதிகம் நொந்து போவார். பின்னே! ஒரு கலியாணமும் நடக்காவிடில் ஓட்டலில் ரூம் எடுத்தல்லவா சீட்டு ஆட முடியும். தெரிந்தவர் தெரியாதவர் என்ற பட்சபாதமே கிடையாது. யாராவது ஒருவர் 'ஜனா! சாயந்திரம் செங்கல்பட்டுல ஒரு ஃப்ரண்டு கல்யாணம்' என்றால் போதும்.  'போலாம் தலைவரே 'என்று கிளம்பி விடுவார். வேண்டுமென்றே உனக்கு அவரைத் தெரியுமா என்றால் வரும் பதிலில் இருக்கும் உண்மை அசரவைக்கும்.

'எவம்பா கல்யாணத்துக்கு போறான்? யார்னா ஒர்த்தருக்கு தெர்ஞ்சா போறாது. நாம இன்னா அங்க போய் உக்காந்து சோறா துன்னுட்டு வரபோறோம். ஒரு ரூம் புட்சமா, கட்டை போட்டோமா, சத்திரம் காலி பண்ண சொல்ல போங்கப்பான்னு சொல்ற வரைக்கும் ஒரு ஜாலி. கல்யாணத்துக்குப் போய் சீட்டுல உக்காந்தவன் எவனாவது முகூர்த்த நேரத்துலயாவது நிறுத்தியிருக்கானா சொல்லு' எனச் சிரிப்பார்.

உள்ளூர் கலியாணத்தில் காசு தோத்துவிட்டால், கடைய மூடாத. தோ வரேன் என்று ஆட்டோ எடுத்துக் கொண்டு அதி்காலை ரெண்டானாலும் மூன்றானாலும் கடன் கொடுப்பவனை எழுப்பி வாங்கிக் கொண்டு வருவார். வந்து உதிர்க்கும் தத்துவம் ஆளைப் புரட்டிப் போடும்.

'அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகணும், இல்ல ரேசன் வாங்க கடைசி நாள்னு கேட்டா அம்பது ரூபா குடுக்கமாட்டானுவ. இதே ஜூதுக்குன்னு போய் நூறு ரூபாய் கேட்டா சில்லற இல்ல ஜனா! ஐன்னூறா வச்சிக்கன்னு குடுப்பானுங்க...நுப்பது உள்ளோ..நுப்பது..அம்பது உள்ளோ' என்று அசராமல் பந்தயம் பிடிப்பார். எப்போதாவது அதிர்ஷ்டம் ஜனா மேல் காதல் கொள்ளும். அதீதக் காதல். எதிராளிகள் எவனுக்கும் டீக் குடிக்க கூட ஒரு ரூபாய் விட்டு வைக்காது.

கலைச்சிடலாமாப்பா. அப்புறம் ஜனா கெல்ச்சினு ஓடிட்டான்னு பேசக் கூடாது என்று முறையாகக் கேட்டு அங்கே இங்கே ஒளித்து வைத்திருந்த அத்தனை காசையும் எடுத்துப் போட்டு அடுக்கி, எண்ணி, என் முதல் இவ்வளவு. கெல்ப்பு இவ்வளவு என்று கணக்குச் சொல்லி, தோற்றவர் விட்ட தொகைக்கேற்ப, ஐம்பது, நூறு என்று கொடுத்துவிடுவார்.

'ஊட்டுக்கு போனா எப்புடி இருக்குமோ என்னமோ? சாப்பாட்டுக்கு கொழம்புக்குன்னு எதிர்பார்த்துருப்பாங்க. அந்த பாவம் நமக்கு ஏன்'  என்று எளிதாய்ச் சொல்லிவிட்டு போவார். நேற்று அப்படி ஐம்பது ரூபாய் வாங்கிப் போனவன் அடுத்த நாள் ஐந்நூறு ரூபாய்க்கு இவர் வீட்டுடிவியை அடமானமாகக்  கொண்டு போவான். அடுத்த நாள் ஆட்டத்தில் அவன் வீட்டு கேஸ் ஸ்டவ்வை இவரிடம் தோத்திருப்பான்.  'அவன் செஞ்சதுக்கு எடுத்துனு வந்திருக்கலாம். சாப்பாடாச்சேப்பா. பட்டினி போட்ட பாவம் என்னாத்துக்கு நமக்கு. நாளைக்கு கண்டிசனா குடுத்துடணும்னு சொல்லிட்டு விட்டுட்டு வந்துட்டேன்' என்பார்.

இப்படி சூதே கதியென்றிருப்பவன் வேலை யார் செய்வது என்கிறீர்களா. பெண்டிங்கே இருக்காது. ஒரு நண்பனிடம் மாதம் ஐந்நூறு ரூபாய் என்று பேசி வேலையை பக்காவாக முடித்து வைத்திருப்பார். புதியதாக எந்த சூப்பிரண்டண்ட் வந்தாலும் தனக்கு எழுதப் படிக்க கஷ்டம் என்பதைக் கூறி வேலையில் குறையில்லாமல் பார்த்துக் கொள்வேன் என்றும் கூறிவிடுவார்.

போதாத காலம், ரிட்டையர் ஆக 3 வருடங்கள் இருக்க ரேட் செக்கிங் செக்‌ஷனில் மாற்றப்பட்டார். அங்கேயும் பழைய ஏற்பாட்டில் ஒரு நண்பன் வேலையை முடித்து கொடுப்பார். இவர் கையெழுத்து மட்டும் போடுவதாக ஓடியது. புதிதாக வந்த ஒரு சூப்பிரண்டண்ட் பிடிவாதமாக இவரே செய்தாக வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாக்கியதாக கேள்வி.

இது நடந்து சில வாரங்களுக்குப் பிறகு சந்திக்க நேர்ந்தது. வழக்கமான குசல விசாரிப்போடு இப்போது எந்த செக்‌ஷனில் வேலை என்ற கேள்விக்கு மேற்சொன்ன விளக்கத்துடன் வாய் கொள்ளாச் சிரிப்புடன் ஜனா சொன்னார்:

'எவ்ளோ தன்மையா சொன்னேன் தலைவரே. எனக்கு இங்கிலீசெல்லாம் வராது. கணக்கு கூட கூட்ட கழிக்க தெரியும். பெருக்கல் எல்லாம் கஷ்டம்னா அத்தினி பேரு முன்னாடி கேவலமா பேசிட்டான். பார்த்தேன். முன்னூறு ரூபாய் கட்டி யூனியன்ல ஆஃபீஸ் பேரர் ஆய்ட்டேன். மாசம் ரெண்டு நாள் ஸ்பெஷல் கேசுவல் லீவு. அதில்லாம தர்ணா போராட்டம்னு எதுனா இருக்கும். வருவேன், கையெழுத்து போட்டு யூனியன் ஆஃபீஸ் போய்டுவேன். இப்போ என் வேலைய அந்தாளு செஞ்சினிருக்கான். எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் மிச்சம்' எனச் சிரித்தார்.

இப்படியே எதையும் தாங்கி கவலையில்லாமல் ஒருவன் வாழ்ந்துவிட முடியுமா என்ன? கை மீறிய கடன், பிஸினஸ் செய்யப் போகிறேன் என்று முரண்டு பிடித்த மகன் என்று எவ்வளவோ சொல்லியும் விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டார். வந்த தொகையை கடன் போக மகனிடம் கொடுத்து விட்டார். வேறென்ன நடக்கும்? வழமை போல் பெற்றோர் மடிவற்றிய மாடானார்கள்.

கடைசியாகப் பார்த்த போது 'எவ்ளோ சொன்ன தலைவரே. கொஞ்சம் உனக்குன்னு வச்சிக்கடான்னு. கேக்காத போய்ட்டேன் தலைவரே. மொத்தம் உருவிக்கினு வெரட்டிட்டான் என்று அழுதார். பின்சின் (Pension) வருது. சின்னதா ஒரு வீடு வாடகைக்கு புடிச்சிகினு வந்துட்டேன். கடன் இல்ல...' என்று முதன்முறையாக தளர்ந்து போய் அழுதது அந்த காண்டாமிருகம்.

__/\__

Monday, October 25, 2010

‘அசி’ - ஓர் ஆத்மானுபவம்.

ஒரு கவிதை என்பது படிப்பவர்களால் அவர்கள் நோக்கில் உணரப்படுவது என்பது உண்மை. பல நேரங்களில் சமர்த்துக் குழந்தையாய் மனதில் சம்மணமிட்டு அமரும் கவிதைகள். சில நேரம் குழந்தைபோல் அழகாய்ப் போக்குக் காட்டும். பிடிபட்ட நொடியில் மனம் முழுதும் நிரம்பும் அதன் சுகம் ஒரு சிறு புன்னகையாய் விகசிக்கும். கலகலப்ரியாவின் கவிதைகள் பல நேரம் எனக்கு பிடிபட்டுவிடும். சில நேரங்களில் வார்த்தைப் பயன்பாடு அல்லது உருவகம் குறித்த விளக்கம் கேட்க வைத்திருக்கிறது. 

அவரின் சமீபத்திய ‘அசி’ என்ற கவிதையில் வார்த்தையழகு தாண்டி பொதிந்திருக்கும் கரு ஒரு வரியில் அல்லது வார்த்தையில் ஒளிந்துகொண்டு ஆட்டம் காட்டியபடியே இருந்தது. இதைப் புரிந்துகொண்டேயாகவேண்டும் என்ற தவிப்பில் அவரிடம் விளக்கம் கேட்டுப் பெற்றபோது, ஒளிந்திருந்த கரு சிரித்தது..காதலைப் போலவே..குருடன் நீயென்று..புரிந்த பிறகு எனக்கு அஷ்டபதியின் ராதை, ப்ரேமையின் சொரூபமான கண்ணன் இந்தக் கவிதைக்குள்ளிருந்து சிரிக்கிறான். நான் அடைந்த இன்பத்தைப் பகிர்ந்து கொள்ள ஆசை..

 ப்ரியாவின் கவிதை இங்கே.

 கவிதை தரும் உணர்ச்சி இது:

விடாமல் மனக்கதவைத்தட்டி உட்புகப் பார்க்கிற ப்ரேமை நிராகரிக்கப் படுகிறது. ஏதோ ஒரு வழியில் (சாளரம்)  புகப் பார்க்கிறது. அதன் குரலுக்கு செவிசாய்க்காமல் தலையணையடைத்திருக்க, அறிவிப்பின்றி தடாலடியாக மனதிற்குள் புகுந்து அசைக்கப் பார்க்கிறது..விதிர்த்துத் தவித்து என்னவிது என அறிதலில் நீளும் கை நோக்கி எள்ளிச் சிரிக்கிறது..கனவில் வெண்கொக்கின் நிறம் கூட அறியமாட்டாதவள் நீ! என்னை உணர்வாயோவென்கிறது. உணர்ந்தவள் எள்ளுகிறாள்..ஆம்! நான் குருடியெனில் உனக்கும் குருடென்றல்லவா பெயர்.. குருடு குருடறியுமாதலால் நீ நானாகிறாய்..அன்பே கடவுள்..நானே கடவுள்..

இந்தப் புரிதலோடு மீண்டும் படிக்கையில் ‘குருடு குருடறியாதோ தத் த்வம் அஸி’யில் மூழ்கித் திளைக்கிறது மனசு. கண்ணன் மீதான ப்ரேமையே ராதை. ராதையே கண்ணன் என்று கொண்டாடும் ஜெயதேவரின் அஷ்டபதி சொன்ன பெரிய விஷயத்தை இரண்டு வரியில் அடக்கி அகத்தியனாய் நிற்கிறது இது.  ஒரு நொடியில் ஆட்கொண்டு உடல் சிலிர்க்கப் பரவசப்படுத்தும் உணர்வல்லவா ப்ரேமை, காதல், அன்பு. புதிதாக வந்ததெனத் தோன்றுமா எவர்க்கும். தன்னுள்ளிருந்ததைக் கண்டு கொண்ட பரவசானுபவமல்லவா அது. ‘தத் த்வம் அஸி’

அத்தகையதோர் உணர்வைத் தரும் கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றியம்மா.

__/\__

Saturday, October 23, 2010

மாத்தி யோசிங்கப்பு...

ஹி..ஹி..ஒன்னொன்னா படிங்க. இந்த ரெண்டு வரி படிச்சதும் உங்க மனசுல இது எதைப் பத்தின்னு ஒரு  ஊகம் வருதில்ல?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
லேடி டாக்டர்: ஏம்மா? ஒரு காலேஜ் கேர்ல் இவ்வளவு அஜாக்கிரதயாவா இருப்ப? இப்ப வந்து அழுதா?

பெண்: ப்ளீஸ் டாக்டர். யூ ஹேவ் டு ஹெல்ப் மீ..அவ்வ்வ்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சதீஷ்:ப்ரபா? பக்கத்துல யாரும் இல்லையே! நல்லா கேட்டுக்க. பக்காவா ப்ளான் பண்ணியிருக்கு. சொதப்பிடாத. சரியா ராத்திரி 11.55க்கு வீட்டு வாசல்ல நம்ம ஃப்ரண்ட்ஸ் கூட வந்துடுவேன்.

ப்ரபா:அய்யோ! நினைச்சாலே பக் பக்னு இருக்கு சதீஷ்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அக்கா: இங்க பாரு சுதா. மூணு மணிக்கெல்லாம் சாதம் பண்ணி அந்த பொடியை நான் சொன்னாமாதிரி மிக்ஸ் பண்ணி வச்சிடு. அப்புறம் பாரேன், உம் புருசன் உன் பின்னாடியே அலைவான்.

சுதா: அக்கா! நம்பலாம்ல? ஒன்னும் எக்கு தப்பா ஆயிடாதே. பயம்மாயிருக்குக்கா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முனியன்: ராசப்பா! சாமான்லாம் பக்காவா ரெடிபண்ணிட்டியா? இன்னைக்கு விட்டா கஷ்டம். தூக்கிறணும்டா.

ராசப்பன்: எல்லாம் பக்காவா ரெடி! தலைய படக்குன்னு அழுத்தி புடிச்சி கழுத்துல ஒரு இழு. ஒரு சத்தம் வராது.மேட்டர் க்ளோஸ். நீ சரக்கோட மண்டபத்துல காத்திரு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விஜய்: ப்ளீஸ் டாக்டர்! கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுங்க.

டாக்டர்: இங்க பாருங்க மிஸ்டர் விஜய். மேக்ஸிமம் கன்ஸிடர் பண்ணியாச்சின்னு சொல்லிட்டிருக்கேன். திரும்பத் திரும்ப 35லட்சம்னா கஷ்டம்னா என்ன பண்ண. யூ ஹாவ் டு டிசைட்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மகள்:அம்மா! முட்டாள்தனமா இன்னும் கலாச்சாரம் மண்ணாங்கட்டின்னு பேசிட்டிருக்காதீங்க ப்ளீஸ். இதால உங்க கலாச்சாரம் ஒன்னும் நாசமா போயிடாது’

அம்மா:’இங்க பாருடி! இதுக்கு நாங்க ஒத்துகிட்டு நாளைக்கு வீதில நடமாட முடியாது. எங்க விருப்பப்படிதான் உன் கல்யாணம் நடக்கும்.’
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
 ம்ம். படிச்சிட்டீங்களா. அங்கன பக்கத்துல கண்ணாடி இருந்தா முகத்த ஒரு வாட்டி பாத்துக்கிட்டு இந்தப் படத்தை கிளிக்குங்க..


____/\____

Tuesday, October 19, 2010

பாராக் கதைகள் - நம்பிக்கை

கலியாணத்துக்கே உண்டான கலகலப்புடன் இருந்தது அந்த மண்டபம். சிரிப்பும்,பேச்சுமாய் மகிழ்ச்சியான சூழல் மாறி மெது மெதுவே கிசு கிசுப்பும் அமைதியும் படரத் தொடங்கியது. ஆசீர்வாதத்துக்கு கொண்டுவந்த தாலியைக் காணவில்லை. தேடலுக்கும் வேண்டுகோளுக்குப் பிறகும் கிடைக்காததால் எல்லாரையும் பரிசோதிப்பது என்று முடிவானது. எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் உட்கார்ந்திருந்தவரை அழைத்தபோது

‘யோவ்! என்னைப் பார்த்தா வரிசையில நிக்கச் சொல்ற. உன் ஜூஜூபி தாலி எனக்கு எதுக்குய்யா. நான் யார் தெரியுமா? ......... டெக்ஸ்டைல்ஸ் ஓனர்’ என்றார்.

மெதுவான புன்சிரிப்புடன் அந்த இளைஞன்

‘உங்களுக்கு தெரியாததா முதலாளி. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆஃபீசரானாலும் சரி, உங்களை மாதிரி பெரிய வியாபாரியானாலும் சரி, எங்களை மாதிரி அன்னாடங்காச்சியா இருந்தாலும் சரி, கையில வேற பை இருந்தா புடுங்கி வச்சிகிட்டு டோக்கன் குடுத்துதானே உங்க கடைக்குள்ள அனுப்பறீங்க? எங்கள வச்சி பிழைக்கிற நீங்களே எங்களை நம்ப மாட்டிங்கறீஙளேன்னு நாங்க கேக்குறமா? சந்தேகத்துக்கு முன்னாடி முதலாளி என்ன கூலிக்காரன் என்னங்க? வாங்க செக் பண்ணனும் என்றான்.

~~~~~~~~~~~~~~~~~~~

நகரத்தின் மிகப்பெரிய ஹோட்டலின் மேல்மாடி தனி ஸ்யூட்டில் மதுவருந்தியபடி அமர்ந்திருந்தனர் ஆளும்கட்சி, எதிர்கட்சித் தலைவரும், அந்த மிகப் பெரிய தொழிலதிபரும். சமீபத்தில் லைசன்சுக்கு விட்ட கல்குவாரியில் கொஞ்சம் வைரமும் கிடைப்பதால் மூச்சுக்காட்டாமல் ஆட்டையைப் போட பேரம் முடிந்த சந்தோஷத்தைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

‘ஏன் தலைவரே! என்னைக்குனாச்சும் ஜனங்களுக்கு ரோசம் வந்து, உங்களை நம்பித் தேர்ந்தெடுக்குறோம். எங்களுக்காடா துரோகம் பண்றீங்கன்னு பொங்கிட்டா நம்ம கதி..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்’ என்று சிரித்தது எதிர்கட்சி.

‘அடப் போய்யா! முதல் தேர்தல்ல இருந்து இன்னைவரைக்கும் நம்மள நம்பித் தேர்ந்தெடுக்குறவன நாம நம்பாம விரல்ல மை தடவித்தானே அனுப்புறோம். அதுக்கே ரோஷம் வரலை. இதுக்கெல்லாமா ரோஷப்படுவானுங்க. அடுத்த ரவுண்டு ஊத்துய்யா’ என்று சிரித்தது ஆளும்கட்சி.

~~~~~~~~~~~~~~~~~~~~~

அலுவலகத்திலிருந்து வந்து ப்ரீஃப் கேஸ் ஒரு புறம், ஷூ சாக்ஸ் மறுபுறம் என்று வீசிவிட்டு அமர்ந்தான் ராஜு. கடும் கோபத்திலிருப்பதை அறிந்த அவன் மனைவி அமைதியாக டீ கொண்டு வந்து வைத்துவிட்டு அமர்ந்தாள்.

‘சே! எத்தனை வருஷப் பழக்கம் எனக்கும் ஆனந்துக்கும். ஒரு அவசரத்துக்கு இருவத்தஞ்சாயிரம் கேட்டால், நம்பிக்கையில்லாம ப்ரோநோட் எழுதி கையெழுத்து கேக்குறான். இவனெல்லாம் நண்பனா?’ என்று வெடித்தான் ராஜு.

‘விடுங்க! நான் உங்க மனைவிதானே. உங்களை நம்பி வாழ வந்தவள்தானே. நீங்க கூடத்தான் வாராவாரம் செலவுக்கு என்ன வேணுமோ கொடுத்துட்டு கப்போர்டைப் பூட்டி சாவியை கொண்டு போறீங்க. எதிர்பாராத செலவுக்கு காசு கேட்டா அன்னைக்குதானே முன்னூறு கொடுத்தேன். என்ன செலவுன்னு கணக்கு கேக்குறீங்க. நீங்கல்லாம் ஒரு புருசனான்னு நான் கேட்டனா’ என்றாள் அவன் மனைவி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Sunday, October 17, 2010

ராஜி-2


பூக்களைச் சீராகக் கட்டிமுடித்த ராஜி, கோமதியை அழைத்தாள்.

‘மச மசன்னு நிக்காம எல்லாரையும் கிளம்பச் சொல்லுடி. வண்டி சொல்லியிருந்ததெல்லாம் வந்தாச்சோ? முருகன கூப்புடு. சாமானெல்லாம் ஏத்தி வைக்கச் சொல்லு. அசமஞ்சமாட்டம் அவன் பண்ணுவான்னு இருக்காம, ஒருத்தர் லிஸ்ட் எழுதுங்கோ’

உத்தரவுகள் உட்கார்ந்த இடத்திலிருந்து பறந்தன. பல முறை பார்த்ததுதான். ஆனாலும் விசுவுக்கு பிரமிப்பாகவும், புதுமையாகவும் இருந்தது. பண்டிகையோ, சாதாரண விருந்தாளியோ, கல்யாணமோ யாருக்கும் கவலையில்லை. ராஜி சொல்வதைச் செய்தால் போதும். கனகச்சிதமாக குறைவின்றி நிறைவேறும்.

ஒரு வழியாக அனைவரையும் அனுப்பிவிட்டு கிளம்பினார்கள். மண்டபத்துக்கு வந்து சேர்ந்ததும் சிரித்த முகத்துடன் சூழ்ந்து கொண்டனர் பெண்வீட்டார். பார்த்து இறங்குங்கோ பாட்டி என்று கார் கதவைத் திறக்க வந்தார் பெண்ணின் தாயார்.

‘ஏண்டிம்மா! கோலத்துக்கு செம்மண் பூச வேண்டாமோ? காண்ட்ராக்டுக்கு குடுத்தேளா?’ என்றாள் ராஜி.

‘மன்னிச்சிக்கோங்கோ பாட்டி. இதோ!’ என்று அடுத்த சில நொடிகளில் செம்மண் பூசியான பிறகு, ‘ஹாரத்தி எடுத்து அவாளையெல்லாம் அழைச்சிண்டு போடிம்மா!’ என்றாள் ராஜி.

கடைசியாக இறங்கி மண்டபத்தைச் சுற்றிவந்தாள். மேடையில் கோலம் சின்னது, அது இதுவென சிறு சிறு குறைகளைச் சுட்டியபடி சுற்றிவந்தாள். ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்த விசுவுக்கு புதிதாய் இருந்தது. ஒரு ரவுண்டு அடித்து முடித்து

‘என்னடா பார்க்கிறாய்!’ என்றபடி அருகில் இருந்த நாற்காலியில் கூனோடு அமர்ந்தாள் ராஜி.

‘இல்லை ராஜி! சம்பந்தி ஜம்பம் பிரமாதமா பண்றியே! இதெல்லாம் நோக்கு எப்படி முடியறதுன்னு பார்க்கிறேன்’ என்றார் விசு.

‘பாட்டி! நானே காஃபி போட்டு கொண்டு வந்திருக்கேன் தனியா உங்களுக்காக. எடுத்துக்கணும்’ என்று பவ்யமாய் வந்து நின்ற பெண்ணின் தாயாரிடம் ஒன்றும் பேசாமல் காஃபியை வாங்கிக் குடித்தாள். என்ன வருமோ என்ற கலவரம் முகத்தில் தெரிந்தது பெண்ணின் அம்மாவுக்கு. ஒன்றும் சொல்லாமல் காஃபியைக் குடித்தபிறகு டம்ப்ளரைக் கொடுத்தவளிடம்

‘பாட்டி! ராத்திரிக்கு பலகாரமா? என்ன வேணும் சொல்லுங்கோ. ஆத்தில பண்ணி கொண்டு வந்துடறேன்’ என்றாள்.

‘ரண்டு வாழைப்பழம் போறும். நோக்கு தலைக்கு மேல வேலையிருக்கும். அவசரம், மறந்துபோச்சின்னு சொல்லாம குறையில்லாம பண்ணும்மா. போ!, என்றாள் ராஜி.

தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ரூமுக்குப் போய் ஒவ்வொன்றாய்ச் சரிபார்த்து, மெதுவாய் சமையற்கட்டுக்குப் போனாள். ராஜியைப் பார்த்ததும் ஓடிவந்தார் சமையல்காரர்.

‘பாட்டிக்கு ராத்திரிக்கு என்ன வேணும். பூவாட்டம் இட்லி, உப்புமா, கேசரி என்ன வேணுமோ சொல்லுங்கோ’ என்றார்.

‘ஒன்னும் வேணாண்டாப்பா. அது ஆச்சு கொள்ளைகாலம். ராத்திரி ரண்டு வாழைப்பழம்தான். சும்மா பார்க்கவந்தேன். சமையல் அருமையா இருக்கணும். பார்த்துக்கோ. மனசு வச்சி பண்ணா நன்னா வரும்’ என்று நகர்ந்தாள்.

‘நீங்கதான் மாப்பிள்ளையோட பாட்டியா?’ என்று கேட்டபடி வந்தாள் ஒரு பெண்மணி.

‘கொள்ளுப்பாட்டி. நீ யாரும்மா?’ என்றாள் ராஜி.

‘கல்யாண பொண்ணோட ஒன்னுவிட்ட அத்தை முறை மாமி! எங்கண்ணா கெட்டிக்காரன். நல்ல இடமாத்தான் பார்த்திருக்கான் பொண்ணுக்கு. அவனுக்கு ஒரு தங்கையிருக்கா. அவளுக்கு காயத்ரியை அவ பிள்ளைக்கு பண்ணிக்கணும்னு ஆசை.  என்னதான் தங்கைன்னாலும், முறைப்பையன்னு பொண்ணைத் தள்ளி விடமுடியாயிதில்லையா. சின்ன வயசுல இருந்தே அவனுக்குதான் அவள்னு பேசிண்டத வச்சிண்டு தன் பிள்ளைக்குத்தான் குடுக்கணும்னு சண்டையெல்லாம் போட்டா முடியுமா? அந்தப் பையனும் காயு காயுன்னு காயத்ரி மேல அன்பா இருப்பான். எங்க போனாலும் ஒன்னாத்தான் போயிண்டு வருவா. பசங்க ஆசைப்படறதுன்னு பண்ணிட முடியுமோ. பொண்ணைப் பெத்தவன்னு கடமையிருக்காயில்லையா. அவள் சண்டை போட்டுண்டு போய்ட்டா. கலியாணத்துக்கு கூட வரலை. ரெண்டு மூணு வரன் பார்த்து அப்புறம் அவாளுக்கு விஷயம் தெரிஞ்சி வேணாம்னுட்டா.’

‘என் பிள்ளை பேங்க்ல ஆஃபிசராயிருக்கான். கை நிறைய சம்பளம். ஜாதகம் நன்னா பொருந்தியிருந்தது. ஒறவுல வேணாங்கான்னு சொன்னா புரிஞ்சிக்கணுமா இல்லையா. பைத்தியம் மாதிரி ஒறவே வேண்டாம்னு போயும், அவளாலதான் கல்யாணம் தடையாறதுன்னு அண்ணாக்கு கோவம். என்னமோ, நீங்க நல்ல மனுஷாளா இருக்கக் கொண்டு கல்யாணம் ஜாம் ஜாம்னு நடக்கறது. காயு ரொம்ப அதிர்ஷ்டசாலி. அப்புறம் வந்து...வந்து..ஒங்களுக்கே தெரிஞ்சிருக்கும்னு சொல்லிட்டேன். யாருக்கும் இதெல்லாம் நான் சொன்னேன்னு தெரிய வேண்டாம். நான் வரேன் பாட்டி’ என்று போனாள்.

மாப்பிள்ளை அழைப்பு ஆரம்பிக்க சுரத்தில்லாமல் அமர்ந்திருந்த ராஜியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் விசு.

‘என்னக்கா? டல்லாருக்க. உடம்பு முடியலையா. ராத்திரி ஆத்துக்கு போய்க்கலாமா. கார்த்தால கிளம்பி வந்தாப் போச்சு’ என்றார்.

‘அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். கொஞ்சம் அசதி. அவ்வளவுதான். நீங்கள்ளாம் சாப்பிடப் போங்கோ. நான் ரூம்ல போய் கொஞ்சம் கட்டையைச் சாய்க்கிறேன்’ என்று போனாள்.

சாப்பாட்டுக் களேபரமெல்லாம் முடிந்து, அறையிலும் ஹாலிலுமாய் கிடைத்த இடத்தில் அவரவர் படுத்திருந்தனர். அரவமடங்கி மெதுவாக பெண்ணின் பெற்றோர் வந்தார்கள். புரண்டு புரண்டு படுத்தபடியிருந்த ராஜியிடம் மெதுவாக வந்து அமர்ந்தாள் பெண்ணின் தாயார்.

‘தூங்கலையா பாட்டி?’ என்றாள்

‘ம்ம்! புது இடம்னா தூக்கம் பிடிக்காதுடியம்மா. நீ தூங்கு போ’ என்றவளிடம் தயங்கித் தயங்கி ‘பாட்டி, ஒரு நிமிஷம் தனியா வரேளா. அவர் ஏதோ பேசணுமாம்’ என்றாள்.

சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள் ராஜி.

‘வரச்சொல்லும்மா. தனியா என்ன? எதுவானாலும் தெளிவா பேசிட்டா கஷ்டமில்லை. விசு! க்ருஷ்ணாவை கூட்டிண்டு வா’ என்று கணீரென்று வந்த குரலுக்கு படுத்திருந்தவர்கள் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தனர்.

பதறியபடி வந்த பெண்ணின் தந்தையிடம், காயத்ரியையும் கூப்பிடுங்கோ என்றாள் ராஜி.

காய்த்ரியும், க்ருஷ்ணாவும் வந்து சேர ‘ம். இப்போ சொல்லுங்கோ. என்ன சொல்லணும்?’ என்றாள்

பாவமாக தொண்டையடைக்க ‘மாமி. மறைக்கணும்னு இல்லை. என் தங்கைக்கு தன் பிள்ளைக்கு காயத்ரியைப் பண்ணிக்கணும்னு ஆசை. நான் வெளி சம்பந்தம் பார்க்கறது அவளுக்கு பிடிக்கலை. ரெண்டு மூணு இடம் பெண்ணைப் பார்த்துட்டு போய் என்னாச்சோ பதிலே சொல்லலை. எப்படியோ என் தங்கைதான் காரணம்னு தெரியவந்தது. தெய்வாதீனமா, இந்தச் சம்பந்தம் தடையில்லாம நடந்தது. அவளுக்குச் சொல்லலை. நான் முன்னாடியே உங்களுக்கும் சொல்லியிருக்கணும். தயவுபண்ணி, மாப்பிள்ளை அழைப்பெல்லாம் ஆற வரைக்கும் காத்துண்டிருந்து சொல்றான்னு நினைக்க வேண்டாம்....’

பேசவிடாமல் கை உயர்த்தி நிறுத்தினாள் ராஜி. ’

‘இதெல்லாம் சொல்ல வேண்டாம். வாழப்போறவள் அவள். அவள் விருப்பத்துக்கு மாறா உங்க அந்தஸ்து, இதர லௌகீகம்னு வேற மாப்பிள்ளைன்னு முடிவு பண்ணேளா? என்றாள்.

‘அவளுக்கே அதில் விருப்பமில்லை பாட்டி. நீங்களே அவளைக் கேட்டுக்கலாம்’ என்று சொல்வதற்குள் பொங்கிவந்தது அழுகை.

ராஜி, க்ருஷ்ணாவைப் பார்த்தாள்.

க்ருஷ்ணா ‘ராஜி! கார்த்தால ஆறுக்கு முகூர்த்தம். அந்தப் புகைல சும்மாவே கண்ணுல தண்ணியா கொட்டும். தூங்கலைன்னா இன்னும் கஷ்டம். நான் தூங்கப் போகட்டுமா?’ என்றான்.

ராஜி, காயத்ரியைப் பார்த்தாள். கடுகடுவென்று நின்றுக் கொண்டிருந்தவள் ‘இப்ப என்ன பாட்டி? எனக்கு உங்க பேரனைத்தான் பிடிச்சிருக்கு. எனக்கு வாழ்க்கை குடுங்கோன்னு நாங்கள்ளாம் உங்க கால்ல விழணுமா? அப்படி எதிர்பார்த்தா சாரி! எனக்கு அப்படி ஒரு கலியாணம் அவசியமில்லை..’

படபடவென பொறிந்து தள்ளியவளை ’காயத்ரி! என்னம்மா இது’ என்று பதறியபடி தடுக்கப் பாய்ந்தார் பெண்ணின் அப்பா.

ராஜி ‘நீ சும்மா இருப்பா. நான் பேசிக்கறேன் அவள் கிட்டே. இங்க பாரு காயத்ரி. ஒரு வேளை அப்படி கண்ணைக் கசக்கிண்டு அழுதிருந்தா என்ன ஆயிருக்குமோ தெரியாது. இப்போ நீ பேசின பாரு, ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நான் எங்கப்பாட்ட பேசின மாதிரி இருக்கு. ப்ச்! என்ன! கொஞ்சம் அனாவசியமா வார்த்தையைக் கொட்டுற. என் பேரனைப் பார்த்தியோ! கார்த்தால ஆறு மணிக்கு முகூர்த்தம்னு எவ்ளோ தீர்மானமா சொன்னான். அவன் என் பேரன்!’ என்று சிரித்தாள்.

‘அப்போ நான் மட்டும் யாராம்?’ என்றாள் காயத்ரி

‘இப்படி பேசறவ எதுக்கு ஊரைக் கூட்டணும்னு அதுக்கும் கத்தாதே. இதை மறைச்சு வச்சு என்னாகப் போறது. சில நல்ல ஜென்மங்கள் இதை புரளி கிளப்பிண்டு, வந்திருக்கறவா வாய்க்கு அவல் கொடுத்துண்டிருக்கும் மெல்ல. இப்போ அதுக்கு வேலையில்லை பாரு. சம்மந்தி! சும்மா பொம்மனாட்டியாட்டம் அழாம போய் தூங்கும். கார்த்தால வேணப்பட்ட வேலையிருக்கு’ என்றாள் ராஜி.

‘ராஜி! நீ மடின்னு யாரையும் தொடவிடமாட்டியா? எனக்கு இப்போ உன்னை இறுக்கிக் கட்டிக்கணும்னு இருக்கே. சாரி! கொஞ்ச நேரத்துல விடிஞ்சிடும். அப்புறம் நீ குளிச்சி திரும்ப மடியாகிப்பியாம் என்ன?’ என்று இறுகக் கட்டிக் கொண்டாள் காயத்ரி.

‘மட்டு மரியாதையில்லாத கழுதை. சொல்லச் சொல்லக் கட்டினுடுத்து. ஆத்துக்கு வாடி! அந்தக் கையை முறிக்கிறேன்’ என்று பதிலுக்கு இறுகக் கட்டிக் கொண்டு சிரித்த ராஜியில், பல வருஷங்களுக்கு முன் சிரிப்பும் துள்ளலுமாய் பாண்டியாடிய ராஜி தெரிந்தாள் விசுவுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Thursday, October 14, 2010

ராஜி -1


ஹாலில் நட்டநடுவில் சாய்மானமின்றி ஒரு கால் மேல் மற்றொரு காலிட்டு அமர்ந்திருந்தாள் ராஜி அத்தை. பெண்களுக்கு மாத்திரமேயான வரமது. நழுவும் முக்காட்டை முன்னுக்கு இழுத்துவிட்டபடி, ஒரு பெரிய தாம்பாளம் நிறைய மல்லி மொட்டுக்களைத் தொடுத்து சரமாக்கிக் கொண்டிருந்தாள். இரண்டிரண்டாக தலையும் வாலுமாய் மொட்டடுக்கி சுற்றிச் சுற்றி நாலு ஜோடி வைத்து, பொட்டல நூலால் ரெண்டு எட்டு போட்டிழுத்தால் ஒரு மொட்டு உதிராது. அதெப்படி கணக்குத் தெரியுமோ, சீராக முக்காலடிக்கு ஒன்று என்று பதினைந்துக்கும் மேல் கட்டி அடுக்கியிருந்தாள்.

கலகலவென்றிருந்தது வீடு. ராஜியின் தம்பி விசுவின் பேரனுக்கு கலியாணம். பக்கத்தில் சோஃபாவில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த விசு


‘பூக்காரனண்ட சொல்லி வாங்கியிருக்கலாமேக்கா. இடுப்பொடிய எதுக்கு நீ உட்கார்ந்து பண்ணிண்டிருக்க? போதும்! இத்தன பொம்மநாட்டிக இருக்கா. ஆரானா வராளா ஒத்தாசைக்கு. கோமுவை கூப்பிட்டு மிச்சத்தைக் கட்டச் சொல்லு’ என்றார்.

‘அசடு மாதிரி பேசாதே கோந்தை.ஆசை ஆசையா வச்சிண்டு, அழகாருக்கா அத்தை? தாங்க்ஸ்னு சந்தோஷமா காமிச்சிட்டு போற சந்தோஷத்துக்கு முன்னாடி, இதெல்லாம் கஷ்டமாடா? மாத்ரையெல்லாம் எடுத்து வச்சிண்டியோ? சலவக்காரனண்ட குடுத்து விசிறி மடிப்பா அங்கவஸ்த்ரம் இஸ்திரி பண்ணி வச்சிருந்தேன். மறக்காம எடுத்துக்கோ. நாளைக்கு சபையில ஜம்முன்னு ராஜா மாதிரி அதப் போட்டுண்டு உக்காந்திருக்கறப்போ நேக்கு அப்பா தெரியணும்’ என்றபடி தொடர்ந்தாள்.

வாஞ்சையாய்ச் சிரித்த விசுவின் மனது ஒரு கணம் பிரமித்தது. எப்படி முடிகிறது இவளால், இத்தனை காலம் சென்றும் அப்பாவை நேசிக்க? வீம்பைத் தவிர அந்த மனிதரிடம் என்ன இருந்தது? ஒரு வேளை அந்த மனிதர் மற்றவர்களைப் போலிருந்தால் அக்கா இப்படி இருந்திருக்க வேண்டாமோ? தொடர்ச்சியாக வந்து விழுந்த எண்ணங்கள் அயர்ச்சியைத் தர, ரிமோட்டை எடுத்து டி.வி.யை அணைத்து நினைவில் முழுகிப் போனார்.

ராஜிக்கு பத்து வயசு. விசுவுக்கு ஏழு. உலகமே அக்காதான். மற்ற பிள்ளைகள் கோலி, கிட்டிப் புள்,பம்பரம் என்று விளையாட விசு அக்கா மற்றும் தோழிகளோடு பாண்டியும், பல்லாங்குழியும் ஆடுவான். அதிகாலையில், அப்பா சந்தியாவந்தனம் முடித்து, கணேரென்ற குரலில் ருத்ரம் சமகம என்று பூஜையறையில் சொல்லிக் கொண்டிருக்க, ஹாலில், சுருதிப்பெட்டி அடித்தபடி, அக்கா கீதம் வர்ணம் என்று சாதகம் செய்வதை பார்த்தபடியிருப்பான்.

‘ஆம்பளைப் பிள்ளையா லட்சணமா, அப்பாவோட ஸ்லோகம் சொல்லத் தோண்றதா பாரு. அக்கா அக்கான்னு அவ பாவாடையை பிடிச்சுண்டு அலையறது. மூணு நாலு வருஷத்தில அவ புக்காம் போனாத்தான் இது உருப்படும்’ என்று பெருமையாய் சலித்தபடி போகும் அம்மாவின் வார்த்தைக்கு அர்த்தம் சீக்கிரமே புரிந்தது.

‘மாசிப் பூணூல் பாசிப் படரும்பாளே,  விசுவுக்கும் ஏழு வயசு.
ஆச்சு ராஜி கல்யாணத்தோட பூணூல் போட்டுட்டா என் கடமை முடிஞ்சது’ என்று ஒரு நாள் மதிய தூக்கம் முடிந்து எழுந்து, பூணூல் திரித்தபடி திண்ணையில் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டதும் பகீரென்றானது விசுவுக்கு.

கொல்லையில், பசுமாட்டுக்கு புல் போட்டு, தொழுவத்தைக் கூட்டிக் கொண்டிருந்த ராஜியிடம் ஓடி வந்தான்.

‘ராஜி! நோக்கு கல்யாணமா? நேக்கு பூணூலா? அப்பா சொல்லிண்டிருக்காளே. அப்போ ஸ்கூல் போமுடியாதாடி? நீ அத்திம்பேராத்துக்கு போய்டுவியாம். நான் வேத பாடசாலைக்குப் போணுமாம். அம்பி சொல்றான். நீ போகாதே ராஜி. நாம படிக்கலாம் ராஜி’ என்று உதடு விம்ம நின்றதை பேரப் பிள்ளைகளுக்குச் சொல்லி இப்போதும் சிரிப்பாள் ராஜி.

கனவு போல் இருக்கும் விசுவுக்கு இப்போதும். திப்பிராஜபுரத்திலிருந்து யார் யாரோ வருவதும் போவதுமாய் இருந்து ஒரு நாள் ராஜி துளசி மாடத்தின் பின் ரகசியமாய் விசுவின் கை பிடித்து அழுதாள்.

‘விசு! நேக்கு கலியாணமாம். நீ என் கூட வந்துடுவியோன்னோ. நான் அம்மாட்ட கேக்கறேன். அப்பா அம்மாவோடதான் இருப்பேன்னா உன்னோட டூ’ என்று அழுதாள்.

கிராமமாதலால் சுற்றி சுற்றி அக்ரஹாரத்தில் உறவுகள் வீட்டில் தினமும் பொங்கியிடுவதிலும், விருந்து கேளிக்கையிலும் திருமணநாளும் பூணூலும் வந்தேவிட்டது. கலியாணம் முடிந்து, 13 வயது அனந்தராமன் ‘டீ ராஜி! நான் எங்காத்துக்கு போய்ட்டு வரேன். விசு! தீர்த்தம் கொண்டு வாடா என்றபோது கோவம் வந்தது. வேண்டா வெறுப்பாய் கொண்டு வந்தபோது, வருஷப் பிறப்புக்கு வந்துவிடுவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். அக்கா வெட்கப்பட்டுக் கொண்டு ம்... ம்... என்று தலையாட்டிக் கொண்டு ரொம்ப அழகாய் இருந்தாள்.

எல்லாரும் கிளம்பிப் போய் வீடு சகஜ நிலைக்குத் திரும்பியது. அடுத்த நாள் பள்ளிக்குக் கிளம்பியபோது விழுந்தது இடி. ராஜி! நீ ஸ்கூலுக்கு போவேண்டாம். விசு நீ கிளம்பு என்றாள் அம்மா!

‘அக்கா வரலைன்னா நானும் போமாட்டேன்’ என்றவனின் முதுகில் பளாரென அறை விழுந்தது.

’அவளுக்கு கலியாணமாயிடுத்து. நீ அடுத்த வருஷம் வேத பாடசாலைக்கு போகணும். அதுக்குள்ள ரெண்டு அட்சரம் கத்துக்கோ’ என்று தரதரவென இழுத்துப் போய், சுப்ரமணியம் வாத்தியாரிடம் ஒப்படைத்தாள் அம்மா.

வாழ்க்கை சுவாரசியமற்றுப் போனது விசுவுக்கு. திடீரென ஒரு நாள் பள்ளியிலிருந்து வரும்போது வீட்டில் கூட்டமும், பெண்டுகள் அழுதுகொண்டே போவதுமாய் இருந்தது. ஓடிப்போய் பார்த்தான். அப்பா திண்ணையில் முழங்காலைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார். பையை திண்ணையில் எறிந்துவிட்டு ஓடினான் விசு. 



‘ஒன்ன மோசம் பண்ணிட்டு போய்ட்டானேடி, அல்பாயுசுல. பொண்ணாறதுக்குள்ள வைதவ்யம் வாய்க்குமாடி நோக்கு’ என்று ஆளாளுக்கு கட்டிப் பிடித்து அழுகையில் மலங்க மலங்க உட்கார்ந்திருந்த ராஜி மனசுக்குள் உறைந்து போனாள்.

‘அம்மா! வேண்டாம்மா, என் ஜடைம்மா’ என்று அழுதவளை கட்டிக் கொண்டு கதறக் கதற மொட்டையும், காவியுமாய் மூலையில் முடக்கியபோது அப்பா பிடிக்காமல் போனார். ஆவணிஅவிட்டத்துக்கு வேத பாட சாலைக்குப் போவதாக அப்பா சொன்னதைச் சொல்லி ராஜியிடம் அழுதான் விசு.

‘நீ படிடா! நன்னாப் படி. நான் இருக்கேன் நோக்கு. டாக்டருக்குப் படிடா’ என்றாள் ராஜி

அப்பாவிடம் போனாள். கோந்தைய வேத பாடசாலைக்கு அனுப்ப வேணாம். அவன் டாக்டருக்குப் படிக்கப் போறான் என்றாள். ராஜியில்லை அவள். ராஜியின் குரலல்ல அது. அப்பாவிடம் தொண்டையே வராது அவளுக்கு. வெண்கலக் குரலில் அவள் சொன்ன உறுதியில் உறைந்து போனார் அப்பா. அன்று இரவு ராஜியைக் கட்டிக் கொண்டு அழுதாள் அம்மா.

அப்பாவுடனான பேச்சு என்பதே குறைந்து போனது ராஜிக்கு. அக்காவின் வாக்கைச் சிரமேற்கொண்டு படித்து டாக்டரானான் விசு. என்னவானால் என்ன? ராஜிக்கு கோந்தை அவந்தான். படிப்பு முடிந்து வீடு திரும்பி,

‘ராஜி! நீதான் ஹெல்ப் பண்ணனும் ராஜி. மேல் படிப்புக்கு லண்டன்ல இடம் கிடைச்சிருக்கு ராஜி. அப்பா ஒத்துக்க மாட்டார். எப்படியாவது ஒத்துக்க வைக்கணும் ராஜி. உன்னைத்தான் நம்பியிருக்கேன்’ என்றான்.

‘நீ ஆகவேண்டியதைப் பார். நான் பேசறேன் அப்பாவிடம்’ என்றவள் மீண்டும் வென்றாள்.

‘நாசமாப் போச்சு குடும்பம். கால காலமா வேத சம்ரக்ஷணை பண்ண குடும்பம் என்னோட போயுடுத்து. பண்ண பாவம் போறாதுன்னு கடல் தாண்டி வேற போயாகணுமாம். நான்னாருக்கு பொம்மனாட்டி ராஜ்ய பாரம்’ என்று எகிறினார் அப்பா.

’அவன் படிச்சிட்டு வரட்டும். ஒங்க வேதத்துல அதுக்கும் பரிகாரம் இருக்கு பார்த்து வைங்கோ’ என்று நிறுத்தி நிதானமாக உறுதியாய்ச் சொன்னாள்.

‘நேக்கு அவன் கொள்ளி போடப்பிடாது. எக்கேடு கெட்டுப் போகட்டும்’ என்றார். அம்மா முந்தானையால் முகத்தை மூடியபடி அழுதாள்.

‘நேக்கு? நேக்கு யாருப்பா போடுவா? நோக்கு பிள்ளை கொள்ளிப் போடப்படாதுன்னு  பிடிவாதமா சொல்ல முடியறது. நேக்கு யாரு கொள்ளி போடணும்னு நீ சொல்ல முடியுமாப்பா? தோ! சந்தியாவந்தனம் பண்ண ஆத்துக்கு போனான் என் ஆம்படையான். வெள்ளம் கொண்டு போயிடுத்து. யாரு போட்டா கொள்ளி. தேகம் கூட கிடைக்கல. இத்தன வருஷம் வேத சம்ரக்ஷணைல த்வேஷம்தான் கத்துண்டதுன்னா, அந்த வேதம் நாசமா போகட்டும்.  ஆம்பளப் பையனா பொறந்துட்டான். இல்லைன்னா என்ன மாதிரி ஒரு மொட்டச்சியா வீட்டோட இருக்கலாம்பா. விதிச்ச வரைக்கும் வீடு, இல்லைன்னா வீதின்னு. அவன் படிக்கப் போறான் அவ்வளவுதான்’ என்றாள்.

அன்றோடு பேச்சு அறுந்ததோடன்றி ஆசைப்படியே விசு கொள்ளி வைக்க முடியாத படிக்கு, அவன் படிப்பு முடியுமுன்னரே போய்ச் சேர்ந்தார். படிப்பு முடிந்து திரும்பி, சென்னையில் ப்ராக்டிஸ் ஆரம்பித்தான் விசு. அன்று வந்தவள்தான் ராஜி. இன்று வரை அவளின் ராஜ்ஜியம்தான். அவளைச் சுற்றியேதான் இந்தக் குடும்பம். என்றைக்காவது அவள் கொஞ்ச நேரம் சுணங்கியிருந்தால் வீடு சகிக்காது. அன்பால் கட்டியிருந்தாள் அனைவரையும். இதோ, விசுவின் பேரன் க்ருஷ்ணாவுக்கு கலியாணமும் அவள் டைரக்‌ஷனில்தான்.

தொடரும்...

Sunday, October 10, 2010

மத்தாப் பூ...


ஒரு ஜோக் உங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். கார்ப்பரேஷன்ல இருந்து ஒருத்தரு நெடுஞ்சாலையில் ஒரு ஒரு குழியா ஓரமா தோண்டிட்டு போய்ட்டிருந்தாராம். பின்னாடியே ஒருத்தரு அந்த மண்ணைத் தள்ளி மூடிட்டு போய்ட்டேயிருந்தாராம். கேள்வி கேக்கன்னே பொறந்த நம்மள மாதிரி ஒரு கேசு கேட்டுச்சாம். ஏன்யா? அந்தாளு அவ்ளோ கஷ்டப்பட்டு தோண்டுறாரு. நீ மூடிட்டே போய்க்கிருக்கியேன்னு. இவரு சொன்னாராம். நானும் கார்ப்பரேஷன் ஆளுதாங்க. அவருக்கு தோண்டற வேலை. எனக்கு மூடுற வேலை. நடுவுல மரக்கன்னு நடுறவரு இன்னைக்கு லீவுன்னு. 

இந்த படத்தைப் பாருங்க. பார்க்க படிக்க சிரிப்பா இருக்கலாம். ஆனா, அதுதான் டூட்டின்னு ஆனப்புறம் சரி மழை பெய்யுது இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோன்னா சொல்ல முடியும்? ஆனாலும் தண்ணீர் சேமிப்புன்னு கெடந்து அடிச்சிகிட்டு இப்படி வேஸ்ட் பண்றது நியாயமேயில்லை.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அக்டோபர் வந்தாச்சு. மத்திய, மாநில அரசு, கம்பெனிகள் இன்ன பிற நிறுவனங்களில் போனஸ் வரும் நேரம். ஆட்டயப் போட தயாராகிவிட்டார்கள் வியாபாரிகள். பூண்டு கிலோ 200ரூ. அரிசி, பருப்பு கதை கேட்கவே வேண்டாம். சர்க்கரை இறக்குமதி செய்தாக வேண்டும். ஆனால் விளம்பரங்கள் பிரமிப்பாயிருக்கின்றன. 3 வைர வளையல் ஒன்று ரூ 42,000 மட்ட்ட்ட்டுமே என்று வாங்கினால் ஒரு வளையல் ஃப்ரீ. எலக்ட்ரானிக் பொருட்கள் கூறு கட்டி விற்பனைக்குத் தயாராயிருக்கிறது. பண்டிகை காலத்தையொட்டி சேதாரம் 8% மட்டுமாம். மற்ற நாட்களில் 11-13% சேதாரம் பண்டிகையில் மட்டும் எப்படி 8 சதவீதமாக குறைகிறது. பொழைச்சிப் போகட்டும் என்று தர்மம் செய்கிறார்களா என்ன?












~~~~~~~~~~~~~~~~~~~~~~
அமெரிக்காவில் மிசோரியைச் சேர்ந்த எர்னஸ்ட் புல்லன் என்ற 57 வயதானவருக்கு சுரண்டல் லாட்டரிப் பைத்தியமாம். ஆக்ஸ்ட் மாதம் ரூ5 கோடியும் செப்டம்பர் மாதம் ரூ10 கோடியும் பரிசாகக் கிடைத்ததாம். எட்டு வருடம் முன்பும் இப்படி கிடைத்ததாம். இதனாலெல்லாம் என் கனவு நனவாகிவிட்டதாகச் சொல்லமாட்டேன். தொடர்ந்து லாட்டரிச் சீட்டு வாங்குவேன் என்ற்கிறாராம். ஏன் சொல்லமாட்டாரு. ஒரு நம்பருல வடை போனவனக் கேட்டா தெரியும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இயற்கையின் கணக்கே தனி. பிறக்கும்போதே முன்னிரு கால்கள் மட்டுமே இருந்த பன்றிக்குட்டி தானே முன்னிரு கால்களால் மட்டுமே தலைகீழாக நடக்கப் பழகிக் கொண்டதாம். இதை வித்தைக் காட்டி மனுசப் பய காசு தேத்துறானாம். இனிமே யாரையும் பன்னின்னெல்லாம் பட்டுன்னு வஞ்சிரப்படாது. வேணும்னா மனுசான்னு கெட்ட வார்த்தையில திட்டிக்கலாம். 



~~~~~~~~~~~~~~~~~~~~
திருச்சூரின் வறுமைப் பகுதியிலிருந்து வந்த பெருந்தனக்காரன் இவன். பார்வையாளர்கள், ஜட்ஜஸ் அத்தனைப் பேரையும் தன் சுட்டித்தனத்தால் கவர்ந்தவன். பேசும்போது ஒரு குரலும் பாடுகையில் எங்கிருந்தோ தேவகானமாக்கும் குரலுமாய் கலக்குகிறான் பொடியன். பெரிய பாடகர்களே பாடலின் இடையே வரும் கமகத்தை கரோக்கில் விட்டு பாட இந்த விசுக்கான் அநாயாசமாகப் பாடிப் போகிறது. 



~~~~~~~~~~~~~~~~~~~~~~~
எதற்கோ தேடப்போய் இந்தியன் காஃபி ஹவுசைத் தேடி கொடுத்தது கூகிள். எழுபதுகளில் இந்தியன் காஃபி ஹவுசை விட்டால் காஃபிக் கொட்டைக்கு கதியில்லை. ரேஷன் கார்டு மாதிரி கார்ட் வாங்க வேண்டும். ப்ளாண்டேஷன் ஏ, பி, ரொபஸ்டா, அராபிக்கா, பீபெரின்னு இருக்கும். பீபெரி டிகாக்‌ஷன் காஃபி அவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்காதுன்னு ரொபஸ்டா மிக்ஸ் பண்ணுவாங்க. பீபரிக்கு ஏக டிமாண்ட். தினமும் மதியம் பள்ளி விட்டு வரும்போது கேட்டுட்டு வரணும்.

அப்பாக்கு காஃபி பௌடர்லாம் வாங்கினா பிடிக்காது. பச்சைக் காஃபிக் கொட்டையை காலையில வாணலியில் வறுக்கணும். அருமையா ஒரு வாசனை வரும். சரியா அப்போ இறக்கிடணும். இல்லைன்னா ஹூம்ம்ம்னு ஒரு சவுண்ட் வரும் அப்பாகிட்ட இருந்து. 

அதை  ஆற வைத்து, கையால் பொடி பண்ணும் மிஷின் இருந்தது. அதில் ஃபில்டர் பதமா அரைத்துக் கொடுத்தப்புறம் கள்ளிச் சொட்டாய் டிகாக்‌ஷன். எருமைப்பால் காஃபி. பித்தளை டபரா செட்டில். சர்...சர்னு நாலு ஆத்து ஆத்தி, டம்ப்ளரைப் பிடிக்க முடியாமல் டவலால் பிடித்து தூக்கி ஒரு வாயாக சாப்பிடுவதே ஒரு அனுபவம். 

அந்த அரைக்கிற மிஷின் ப்ளேட் மொக்கையாகி மூர்மார்க்கட்டெல்லாம் அலைஞ்சும் கிடைக்காம அப்புறம் விதியேடான்னு பொடிக்கு மாறினது.இப்ப என்னடான்னா 40% காஃபி 60% சிக்கரின்னு விக்கிறானுவ. அப்புறம் அதுக்கு காஃபின்னு எப்படி பேரு.?
~~~~~~~~~~~~~~~~~~~~~~

Friday, October 8, 2010

ங்கொய்யா டிவியில் ‘போட்டிக்கு பேட்டி’...



(இந்த படம் காட்டதான் முடியும்..ஓட்ட முடியாது. ஹி ஹி)

வலையுலக வரலாற்றில் முதல் முறையாக, ங்கொய்யா டிவியில் கிரகணம் பிக்சர்ஸ் வழங்கும், சமூக ஆர்வலர் கதிர் (வலிக்காத மாதிரியே) நடிக்கும் ‘போட்டிக்கு பேட்டி’ நிகழ்ச்சி!! தூண்டுகோல்: தளபதி நசரேயன் ..உலகெங்கும்  ஒரே நேரத்தில் எல்லா கணினியிலும் ரிலீசாகும் முதல் தமிழ் பேட்டி!! காணத்தவராதீர்கள்..

வா.பா. வணக்கம் வலையுலக நண்பர்களே. முந்தா நாள் ஜெயா டிவியில் காலை மலர் நிகழ்ச்சியில் அட்டகாசமான பேட்டியளித்து நேற்று பிறந்தநாள் கொண்டாடிய திரு.கதிர், ஈரோடு கதிர், சமூக ஆர்வலர், மாப்பு என்று பலருக்கும் அறிமுகமான பி.ப. திரு கதிர் அவர்கள் தனது பேட்டி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார். அவர் என்ன சொல்றார்னு பார்ப்போம். வணக்கம் கதிர் அவர்களே.

கதிர்: வணக்கம்.

வா.பா. வணக்கம்னு சொன்னா போதும். எலக்‌ஷன்ல நிக்கிறவரு மாதிரி கூப்புன கை கூப்புன படியே இருந்தா எப்புடி. முதலில் பிறந்த நாள் வாழ்த்துகள். ஒரு வயசு கூடி இருக்கு. எப்படி ஃபீல் பண்றீங்க.

கதிர்: இப்படியெல்லாம் அலும்பு பண்ணுவீங்கன்னுதானே உசாரா பென்சமின் பட்டன் படம் பார்த்தேன்னு போட்டேன். ஒரு வயசு இளைஞனா ஆனா மாதிரிதான் ஃபீல் பண்றேன். ஆமாம். நீங்க மட்டும்தான் பேட்டி எடுப்பீங்களா?

வா.பா. இல்லைங்க பரவை முனியம்மாவும் பங்கேற்கிற மாதிரி இருந்தது. அவசரமா ஒரு ஷூட்டிங்னு போய்ட்டாங்க. தேவைன்னா டெலிகான்ஃபரன்ஸிங்ல கேப்பாங்க. சரியா.

கதிர்:ரொம்பத் தேவை. கேளுங்க

வா.பா: செந்தமிழ் மாநாட்டுலயே உங்க பேச்சைக் கேக்கணும்னு ரொம்ப ஆர்வமா இருந்தது வலையுலகம். அங்க ஏற்பாடு சொதப்பி பேச முடியாம போயிருச்சி. அந்த கடுப்பிலதான் நீங்க அம்மா கட்சிக்கு மாறி ஜெயா டி.வில பேட்டி குடுத்தீங்களா?

கதிர்:இப்புடியெல்லாம் கெளப்புவீங்கன்னு தெரிஞ்சிதான் நான் ஊட்டுல சோனி டிவி இருந்தாலும் ஆஃபீசுல கலைஞர் டி.வில என் பேட்டி பார்த்தேன். யார்ட்ட. ஹெ.

வா.பா: ஆமாம். ஈரோட்டில கரண்ட் இருக்காது 8-10னு சொன்னீங்க. அப்புறம் எப்படி சரியாச்சி.

கதிர்:அது ரொம்ப சுவாரசியங்க. ஒரு நாள் ‘மனுசன் கண்டு புடிச்ச கரண்ட மனுசன் ஆசையா தொட்டு பார்க்க முடியல, ஆனா கரண்டுல காக்கா ஊஞ்சலாடுதேன்னு’ ஒரு பஸ் போட்டேன். கண்ணு பட்டு ஒரு காக்கா கரண்ட்ல அடிபட்டு செத்து போச்சாம். அதோட சாபம்னு அந்தியூர் சந்தையில சோசியம் சொன்னுச்சு. அவங்க சொன்னா மாதிரியே போன ஞாயித்துகிழமை சைலண்டா எஸ்ஸாயி, காக்காத்தா கோவில்ல காக்கா பிரியாணி போட்டேன். கரண்ட் வந்துடுச்சி. அதான் பஸ்ஸே தூக்கிட்டேன் இப்போ.

வா.பா.: ரொம்ப சிலிர்ப்பான அனுபவங்க. அப்புறம் அந்த பேட்டில ஒரு ஆச்சரியமான விஷயம், உங்க ஷூ மினு மினுன்னு மின்னிச்சே. சென்னை தூசுல ஒரு ஷூ பாலிஷ் போட்டு மறு ஷூ போடுறதுக்குள்ள ஒரு இஞ்சுக்கு மூடிக்குமே. நீங்க கூட அடிக்கடி தூசு வந்துடுச்சோன்னு பார்த்துகிட்டே இருந்தீங்க. ஷூட்டிங் ரூம்ல இன்ஸ்டா ஷைன் போட்டீங்களா?

கதிர்: (யோவ்! மூக்குதான் காக்கா மாதிரி இருக்குன்னு பார்த்தா முழி கழுகால்லயா இருக்கு. ஆத்தாடி) ஹி ஹி. ஆமாங்க. முடி கலைஞ்சுடுச்சான்னு பார்த்துகிட்டேங்க அப்பப்ப. லுக்கு முக்கியமில்லையா?

வா.பா.
:யப்பா! தாங்கல சாமி! அந்த பேட்டில நாற்பது நிமிஷம் அந்த சோஃபால முகம் சிரிச்சா மாதிரி இருந்தாலும், சலூன்ல முடி வெட்ட சேர் மேல பலகை போட்டு உக்கார வச்ச பையன் மாதிரி கவட்டிக்குள்ள கைய இடுக்கிக்கிட்டு வெறச்சா மாதிரி இருந்தீங்களே, ஏன் அப்படி?

கதிர்: அது ஃபேசு ஸ்ட்ராங்கு. போஸ்ச்சரு வீக்கு. ஹி ஹி.

வா.பா.:அப்புறங்க, போனமாசம் அந்த மாப்புவ மூணே மூணு கேள்வி கேட்டாங்க. உங்கள நோண்டி நொங்கெடுத்தாங்களே ஏன்?

கதிர்:
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்னு விட்டுட்டாங்களோ?

வா.பா:பேட்டில உங்க படிப்பு எல்லாம் கிராமப்புறத்துல, அரசு பள்ளிலன்னு சொல்லியிருந்தீங்க. அது எங்கன்னாலும் ஆங்கிலம், தமிழ், கணிதம், விஞ்ஞானம், சமூகப்பாடம்னு அஞ்சு பாடம் இருந்தாலும் அதெப்படி சமூகத்துல மட்டும் ஆர்வம் அதிகமாகி சமூக ஆர்வலர்னு பட்டம் வாங்கினீங்க?

கதிர்: (அடப்பாவிங்களா! இப்படியெல்லாமா புரிஞ்சுக்குவீங்க. சமாளிடா கதிரு). அது வந்துங்க நான் ஒன்னாப்பு படிக்கும்போதே கற்பனை கசிய ஆரம்பிச்சிடுச்சி. மத்த சப்ஜெக்ட்ல கதை விட முடியாது. சமூகப்பாடத்துல சொந்த சரக்கும் சேர்த்து அடிப்பேன். ஒன்னாப்புல இருந்து 12ம்பு வரைக்கும் சமூகப் பாடத்துல முதல் மாணவனானதால அந்தப் பட்டம். ஹி ஹி.

வா.பா: ஆமா! நீங்க ரெண்டாயிரத்து எட்டில இருந்து பதிவுலகுக்கு பரிச்சியம்னு சொல்லியும் பேட்டி எடுத்தவர் திரும்ப எத்தன வருஷமா எழுதுறீங்கன்னு கேட்டாரே. அப்ப என்ன நினைச்சீங்க.

கதிர்: எங்காளுங்க படிக்காமலே பின்னூட்டம் போடுவானுங்க. பதிவுலகம்னு சொன்ன தோஷமா. என்ன சொல்றேன்னு உள் வாங்காமலே இப்புடி கேக்கறாங்களே இவங்கன்னு தோணிச்சி.

வா.பா. ஆமாங்க. இன்னோரு ஆச்சரியம். முதல் பகுதி முடிஞ்சதும் வந்த விளம்பரத்துல ‘கும்மியடி பெண்ணே கும்மியடின்னு’ பாடிக்கிட்டு அனிதா குப்புசாமி எண்ணெய் வித்தாங்க. நான் கூட நினைச்சேன் பதிவர்னதும் கும்மி பொருத்தமா போட்டாங்களான்னு.

வா.பா. திரு ஈரோடு கதிர் அவர்கள் தன்னோட பேட்டி பத்தி மேலதிக விளக்கம் ரொம்ப சுவையா சொல்லிட்டிருக்காரு. ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்குப் பின் மீண்டும் சந்திப்போம் நேயர்களே.

(ஆரோக்கியமான பல்லுக்கு மெஸ்வாக் டூத் பேஸ்ட்..ஆலங்குச்சி சாற்றில்......)

வா.பா.:நேயர்களே. இடைவேளிக்கு முன்பு திரு கதிர் அவர்கள் தன்னுடைய பேட்டி அனுபவங்களை சொல்லிட்டிருந்தாரு. தொடர்வோம். கதிர்! அந்த பேட்டியில கண் தானம் பத்தி வெகு சிறப்பா சொல்லியிருந்தீங்க. இந்த கண்ணுல பூ விழாட்டி தானம் பண்ணலாம்னு ஏதோ சொன்னீங்க. அப்ப நீங்க சந்திக்கிறவங்கள எல்லாம் முதல்ல இது நல்ல கண்ணா இல்ல நொள்ளைக் கண்ணான்னுதான் பார்ப்பீங்களா?

கதிர்:ஹி ஹி. பேட்டி எடுத்த ரெண்டு பேத்தையுமே அப்படி பார்த்தேன். அந்த வெளிச்சத்துல கண்ண சுருக்கிட்டாங்க. சரியாத் தெரியல.

வா.பா: அப்புறம் கதிர், ரத்த தானம் பத்தி சொல்லும்போது, நிறைய பேரு தயங்குவாங்க. சேராதும்பாங்க. அதனால, அரசு மருத்துவமனைல போய் ரத்தம் கொடுத்துட்டு வந்தாதான் நாங்க அரேஞ்ச் பண்ணுவோம்னு சொன்னீங்க. இந்த ஐடியா எப்படி வந்தது.

கதிர்: ஆரம்பத்துல நாங்களும் யார் கேட்டாலும் ரத்தம் ஏற்பாடு பண்ணமுங்க. அப்புறம் பதிவுலகம் வந்தப்புறம்தான், இந்த நீ ஓட்டு போட்டா ஓட்டு, பின்னூட்டம் போட்டா பின்னூட்டம்னு ஒரு ஸ்கீம் இருக்கறதா தெரிய வந்துச்சி. அட இது நல்லாருக்கேன்னு முயற்சிபண்ணோம். அங்கயும் இந்த ஃபார்முலா சக்ஸ்ஸஸ் ஆயிடுச்சி. இத பத்தி நிறைய ஆராய்ச்சி பண்ணி, விசேசத்துக்கு மொய் எல்லாம் கணக்கு எழுதி வச்சி திரும்ப செய்யறதுங்கறது டமிலன் பண்பாடு. அது ரத்தத்துல ஊறின விஷயமாச்சே. அதனாலதான் ரத்ததானத்துக்கும் ஒர்கவுட் ஆகுதுன்னு கண்டு புடிச்சனுங்க.

வா.பா: அபாரங்க. முக்கியமா உங்க கிட்ட கேக்கணும்னு நினைச்சதுங்க. பேட்டி முழுசும், 97 ஜோடி கண் தானம், 37 வாட்டி ரத்த தானம், 4000 மரம், 11 ஆயிரம் மரம், 2 லட்சம் டன்னுன்னு ஒரே புள்ளி விபரமா கொட்டுனீங்க. யூத்து யூத்துன்னு வேற அலப்பறை தாங்கல. ஒரு வேளை டி.வி.க்கு வந்தாச்சி. அடுத்தது வெள்ளித் திரையில விஜயகாந்த் விட்ட இடத்த புடிக்கிற அகுடியா இருக்கா?

கதிர்:ஹி ஹி. கண்டு புடிச்சிட்டீங்களா?

வா.பா.
அப்புறம் அந்த ப்ளாஸ்டிக் கேரி பேக் பத்தி சொன்னீங்க. அது மேல உங்களுக்கு வெறுப்பு எப்படி ஏற்பட்டது? அங்க நீங்க என்னதான் கதை விட்டாலும், மொத நாள் சொல்லி சக்கரை வாங்க மறந்துட்டு, காலைல தூங்க விடாம விரட்டின வெறுப்புல தூங்கிட்டிருந்த நாயை ச்சூன்னு எழுப்பி விட்டு (அதை ஒரு இடுகையா தேத்தினதும் தெரியும்டி) அது தொறத்தினதுல ஓடி பை அறுந்து கொட்டி ஊட்டுல வாங்கிக் கட்டிக்கிட்டதுதானே உண்மையான காரணம்?

கதிர்:ஹி ஹி. அது மட்டுமில்லைங்க. ஒரு வாட்டி சோப்பு, ஷேவிங் ஐட்டமெல்லாம் வாங்கி பாத்ரூம்ல வச்சிட்டு கைமறதியா கேரி பேக்கை ஃப்ளஷ்ல போட்டுட்டேன். அது ஃப்ளஷ் பண்ணும்போதெல்லாம் உப்பி அடைச்சிகிட்டு 500 ரூபாய்க்கு ஆப்பு வச்சிடுச்சி. எடுத்த ஆளு, எந்த கூமுட்ட இத ஃப்ளஷ்ல போட்டுச்சின்னு திட்டிட்டான். அதான்.

வா.பா.
இந்த ப்ளாஸ்டிக் டம்ப்ளர் பத்தி சொல்றப்ப ரீ சைக்கிள் பண்ணமுடியாதுன்னீங்க. எவர்சில்வர் டம்ப்ளர் வச்சா ஆட்டய போட்டுட்டு போறாங்கன்னு தானே இது வந்துச்சு. பின்ன என்ன பண்ணலாங்கறீங்க.

கதிர்:
பேப்பர் கப் உபயோகிக்கலாமே.

வா.பா. அதுக்கு மரக்கூழ் வேணுமே. மரமும் வெட்ட கூடாதுங்கறீங்களே.

கதிர்: அது வந்து வந்து..ஐ நல்ல ஐடியா. ‘நட்டுக்குங்க! வெட்டிக்குங்க’ன்னு ஒரு இயக்கம் ஆரம்பிக்கலாமுங்க.

வா.பா: சரிங்க. இந்த வலைப்பூ பத்தி சொல்லும்போது தமிழ்ல எழுதறதப் பத்தி சொன்னீங்க. என்னமோ கருப்புன்னு உள்வாங்கி ப்ளாக்னு வெளிய துப்பின்னு வலை நண்பர்களுக்கு புரியறா மாதிரி சொல்லுங்களேன்.

கதிர்: ஒரு நாள் ஆஃபீஸ் போறேன்னு சொல்லிட்டு சீக்கிரம் கிளம்பிட்டேங்க. அரை மணில தங்க்ஸ் ஃபோன் பண்ணி ஏங்க டிஃபன் ஆறிப்போகுது எங்க தொலைஞ்சீங்கன்னு கத்துனாங்க. ஏம்மா ஆஃபீஸ் போறேன்னு சொல்லிட்டுதானம்மா வந்தேன்னேன். ஏங்க புரியறா மாதிரி ஆணி புடுங்க போறேன்னு சொல்லிட்டு போயிருக்கலாம்லங்கன்னு சொன்னாங்க.

இன்னோரு நாள் மக கூட லேப்டாப்ல விளையாண்டுக்கிட்டிருந்தேன். காலிங் பெல் அடிக்கவும் போய் பார்த்தா யாரோ அட்ரஸ் மாத்தி வந்துட்டாங்க. வந்ததும் மக கேட்டாங்க யாருப்பான்னு. யாருன்னு தெரியலைம்மான்னு சொன்னதும் டக்னு ஓ!  ‘அனானி’ யான்னுச்சு. இப்படி நாம சொல்ற விஷயத்த அவங்களுக்கு ஏத்தா மாதிரி புரிஞ்சிக்க வைக்கிறததான் அப்படி விளக்கினேன்.

வா.பா: அருமையா விம் போட்டு விளக்கிட்டீங்க. இந்த வலைப்பூ அறிமுகம்னு ஒன்னு பத்தி சொன்னீங்க. நிறைய பேர் வலைப்பூ ஆரம்பிக்கணும். வலையில பதிவேத்தணும்னு சொன்னீங்க. இந்தக் கொலை வெறிக்கு என்ன காரணம். அங்க நீங்க என்ன காரணம் சொன்னாலும் எனக்கென்னமோ ‘தான் கெட்ட குரங்கு வனத்தையும் கெடுத்துச்சாம்னு’ ஒரு சொலவடை கவனம் வருது. சரிதானா?

கதிர்:
ஏனுங்க ரெண்டாவது வெளம்பர இடைவேளை விடலையே.

வா.பா. என்னாங்க பதிவர் நீங்க. தமிழ் பதிவில கூகிள் அட் கூட வராது. ஒன்னு விட்டதே பெரிய காரியம். உங்க பேட்டி பற்றிய சுவையான தகவல்களை பகிர்ந்துகிட்டதுக்கு ங்கொய்யா டீவி சார்பிலும், வலைப்பூ நண்பர்கள் சார்பிலும் மிக்க நன்றி வணக்கம்.

கதிர்: யோவ். நானா பகிர்ந்துகிட்டேன். பாதிக்கு மேல நீங்களே சொல்லிட்டு என்னைய மாட்டி விடுறீங்களா. நாட்டாமைக்கே சொம்பா? நல்ல்ல்ல்லா இருங்கடி. வணக்கம்.  
~~~~~~~~~~~

Tuesday, October 5, 2010

நாமார்க்கும் குடியல்லோம்...

"செங்கண் திருமுகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவரெம்பாவாய்”
அந்த மார்கழிமாத ஒடுக்கும் குளிரிலும் பிசிறின்றி வெள்ளி மணியாய் ஒலிக்கிறது கோப்பெருந்தேவியின் குரல். அவளுக்கேயான பிரத்தியேக நேரம் அது. கண்ணனோடு மனதால் குறை சொல்லி, வாயால் பாடி ஆரத்தி எடுத்து சேவித்து எழுந்தாளானால், திரும்ப மாலை விளக்கேற்றும் வரை அவள் கடமைகளே அவளுக்கு ஆராதனை. ஒரு விரல் நுனி வெண்ணையும், பாலும் நைவேத்தியம் காட்டி, ஹாரத்தி எடுத்து, வணங்கி முடித்த பின் பூஜை மண்டபத்தில் எல்லாவற்றையும் சீராக்கி அடுக்களை புகுந்தாள்.

காஃபிக்கு வெந்நீர் வைத்தபடி, சன்னக் குரலில் ‘ஜகத்தோத்தாரண ஆடிசிதள யசோதா’ தவழத் துவங்கியது. மெல்லிய மயிலிறகால் வருடினாற்போல் சேஷனுக்கு உறக்கம் கலைந்தது. காதுக்குள் ரம்மியமாக வந்து கண்ணன் மனசை நிரப்பினான். உள்ளங்கையால் கண்களை வருடி, உள்ளங்கையில் பார்த்து க்ருஷ்ண க்ருஷ்ண என்று மெதுவே எழுந்து பாயைச் சுருட்டி வைத்தார். துண்டோடு, பாத்ரூமில் நுழைந்தாரென்றால் பல் விளக்கி, காலைக் கடன் முடித்து, குளித்து வெளியே வந்து, மடியுடுத்தி, திருமண் சாத்தி,  சந்தியாவந்தனம் முடிக்கவும், கோப்பு எனும் கோப்பெருந்தேவியின் கைப்பாகத்தில் மணக்க மணக்க  காஃபி தயாராயிருக்கும்.

கோப்புக்கு என்னமோ மனதில் குறை இன்னைக்கு என்று அநிச்சையாக உணர்ந்தார் சேஷன். இன்று ரொம்பவும் குழைந்து கண்ணனைச் சீராட்டிக் கொண்டிருக்கிறாள் பாட்டில் என்ற நினைப்பு தோன்றியது. அடுக்கடுக்காய் குழைவாய் வகை வகையாய் கண்ணனைப் பாடப் பாட, ஜபம் செய்ய விடாமல் மனது கொஞ்சம் அலைக்கழிந்தது. பாட்டென்றால் கொள்ளைப் பிரியம் கோப்புவுக்கு. மாமனாரிடம், மெட்ராஸில் அவளுக்குப் பாட்டுச் சொல்லித்தர ஏற்பாடு செய்வதாய் கொடுத்த வாக்குறுதியும், இரண்டாவது மாதமே கோப்பு பிள்ளையுண்டானதில் அது குறித்து மறந்தே போனதும் நினைவுக்கு வந்து தொலைத்தது.

வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும், எப்போதாவது ஓய்ந்திருக்கையில், ‘கோப்பு! ஜயதி ஜயதி பாரதமாதா பாடுடீ’ என்று கேட்டு, சிலிர்த்து, கண்ணோரம் கசியவிருக்கும் நீரை அடக்கி,  ‘மாமாக்கு உனக்கு பாட்டு கத்து குடுக்கறேன்னு வாக்கு குடுத்தேனேடி. பண்ண முடியலையே. குறையோடயே போய் சேர்ந்திருப்பார். இப்போ கத்துக்கறயா சொல்லு, விசாரிக்கட்டுமா?’ என்பார்.

‘நன்னாருக்குன்னா! கெடக்கறதெல்லம் கெடக்கட்டும் கெழவியத்தூக்கி மணையில வைன்னு இப்போ போய் பாட்டு கத்துக்கறதாம். ஆச்சு, நப்பின்னைக்கு ஆறு வயசாயிடும் இந்த அப்பசிக்கு. விஜய தசமிக்கு அவள சேர்த்துவிட்டு ஒங்க ஆசைப்படி அவளுக்கு சொல்லிக் கொடுங்கோ’ என்று எழுந்து போவாள். ஏனோ இன்று இவையெல்லாம் கவனம் வந்து ஜபம் செய்யவிடாமல் கோப்புவின் பாடல் மனதைப் புரட்டிப் போட்டது.

சந்தியாவந்தனம் முடித்து, பஞ்சபாத்திர தண்ணீரை துளசிக்கு வார்த்து, ஸூக்தம் சொல்லி, மந்த்ர புஷ்பம் சொல்லி முடித்து சேவித்து எழுந்தார். பொத்தென்று பேப்பர்க்காரன் வீசிய ஹிந்து ஹாலுக்குள் விழுந்தது.


‘கட்டேல போறவன்! எத்தனவாட்டி சொன்னாலும், க்ரில்லுல சொருக மாட்டான்’ என்றபடி பேப்பரை குனிந்து எடுத்தார். பித்தளை டபரா டம்ப்ளரில் மணக்க மணக்க காஃபியைக் கொண்டு வந்தாள் கோப்பு.

‘மொழக்க மொழக்க ஸ்லோகம் சொல்லி முடிச்சி, இப்படிச் சபிக்கணுமா அந்தப் பையனை. என்ன மனுஷனோ’ என்று நொடித்துக் கொண்டு நப்பின்னைக்கு குரல் கொடுத்தாள்.

மணி ஆறு. ஏழுக்கு கிளம்பினால்தான் ஆஃபீசுக்கு நேரத்துக்கு போகமுடியும். அவள் குளித்த பிறகு அவள் தம்பி ஸ்ரீதரன் ரெடியாக வேண்டும் காலேஜுக்கு. ஒரு கையில் காஃபியும் தரையில் விரித்த பேப்பருமாய் அடுத்த கட்ட தவத்திலிருந்தார் சேஷன். 


‘சனியனே! குளிக்காம தளிகையுள்ளில வராதேன்னு எத்தன வாட்டி சொல்லியிருக்கேன். புக்காத்தில, பொண்ண வளர்த்திருக்கா பாருன்னு நான்னா சீப்படப் போறேன்’ என்று சலித்துக் கொண்டால் கோப்பு. அதை சட்டை செய்யாமல் கிசு கிசு குரலில்  ‘அப்பாவை கேட்டியாம்மா?’ என்றாள் நப்பின்னை.

‘நீ சித்த ஹாலுக்கு போறியா? காஃபி கொண்டு தரேன். குடிச்சிட்டு குளிக்கிற வழியப்பாரு. நன்னா மாட்டிண்டு முழிக்கிறேன் உங்க ரெண்டு பேருட்டயும்’ என்று சலித்தபடி விரட்டினாள். உர்ரென்று ஹாலுக்கு வந்து உட்கார்ந்த மகளை ஒரு கண்ணால் பார்த்தபடி, ‘என்ன அவகிட்ட குசுகுசு? என்ன வேணும் நோக்கு?’ என்றார்.

ஒரு கண்ணால் பூஜை மண்டப கண்ணனுக்கு இறைஞ்சி, ‘ஏன்னா!கத்தாதேங்கோ. கோந்த ரொம்ப சிரமப் படறான்னா. வேற என்னன்னாலும் பரவால்லன்னா. பஸ்ல கண்ட காலியும் கயவாளித்தனம் பண்றாம்மா, கூசிப்போறதும்மான்னு அழற குழந்தைகிட்ட, பொறுத்துகோடின்னு அம்மாவா எப்படிச் சொல்றது? அவ ஆஃபீஸ்ல லோன் கிடைக்குமாம்னா. ஒரு ஸ்கூட்டி வாங்கிக்கறேம்மான்னு கெஞ்சறது குழந்தை. சரின்னு சொல்லுங்கோன்னா’ என்று தயங்கித் தயங்கிச் சொல்லி, மகளைப் பார்த்த பார்வையில், என்னால் முடிந்தது இவ்வளவுதான் என்ற கழிவிரக்கம் தெரிந்தது.
 

‘இங்க பாரு கோப்பு, நோக்குதான் லோகம் தெரியாது. இவள் எப்படித்தான் வேலைக்குப் போறாளோ தெரியலை. வண்டி இருந்தா மட்டும், கயவாளிக சும்மா இருக்காங்கறயா. விரட்டிண்டு போறதும், நாய் கத்தறா மாதிரி ஹாரன் வச்சிண்டு பக்கதுல வந்து பயமுறுத்தறதும், எத்தன குழந்தைகள் கீழ விழுந்து அடி பட்டுண்டு, நாராயணா! என்னால நினைச்சிக் கூட பார்க்க முடியலைடி.’

‘தோ! எழுந்து விறு விறுன்னு ரெடியாகி, அஞ்சு நிமிஷம் முன்னாடி கிளம்பினா டெர்மினஸ்க்கு போய்ட்டு உக்காந்துண்டு போலாமேடி. பகவானேன்னு வரன் குதிர்ந்து இவள ஒருத்தன் கையில புடிச்சி குடுத்தாச்சுன்னா அவன் பாடு அவள் பாடுன்னு, இன்னும் சித்த ஸ்லோகம் சொல்லிப்பேன், எங்கொழந்தைக்கு ஒன்னும் ஆகப்படாதுன்னு.’

‘அவளை மடமடன்னு குளிச்சிட்டு சாட்டு கெளம்பற வழியப்பார்க்கச் சொல்லு’ என்றார்.

சப்தம் கேட்டு விழித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் ஸ்ரீதரன்.

‘சார் வாளுக்கு, பைக் வேணுமோ? இப்போ அதானே ஃபேஷன். காலேஜ் சேர்ந்த கையோட புக் வாங்கியாறதோ இல்லையோ பைக் வாங்கியாகணுமே ’ என்றார். 

‘ம்க்கும்! கம்ப்யூட்டர் சயின்ஸில சேர்த்துட்டு லேப்டாப் வேணும்னு கேட்டா, மெடிகல் காலேஜ்ல சேர்ந்திருந்தா படிக்கிறதுக்கு தினம் ஒரு பிணம் வேணும்னு கேப்பியான்னு கேட்ட மனுஷன்கிட்ட பைக் வேணும்னு கேக்கற அளவுக்கு நானொண்ணும் லூசு இல்லை’, என்று பாத்ரூமுக்குள் நுழைந்தான் ஸ்ரீதர்.

ஹிந்துவை மனது ஒட்டாமல் புரட்டியபடி இருந்தவர், ‘தளிகையாயிடுத்துன்னா! சாப்பிட வரேளா என்றவளிடம் பதில் சொல்லாது, பேப்பரை மடித்து வைத்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தார். ஆஃபீஸில் இன்று டெண்டர் ஓப்பனிங். பெரிய டெண்டர். இன்னைக்குள் முடிச்சி அனுப்பிடணும். கையில் வைத்திருந்தால், காண்ட்ராக்டர் தொல்லை தாளாது. புதுசா வந்திருக்கிற அதிகாரி வேறு அவ்வளவு சரியில்லை என்று கேள்வி என்று மனதுக்குள் ஆஃபீஸ் வந்து உட்கார்ந்து கொண்டது.
 

ஆஃபீஸ் போய் சேர்ந்து, எல்லாம் தயார் படுத்திக் கொண்டு டெண்டர் பாக்ஸ் அருகே போனார். காத்திருந்த டெண்டரர்களிடம் சீல் உடைபடாமல் இருக்கிறது என்று சாட்சிக் கையெழுத்து வாங்கி, பெட்டியைத் திறந்து, வந்திருந்த டெண்டர்களை அள்ளிக் கொண்டு தன் இருக்கைக்கு வந்து, முறைப்படி ஒவ்வொன்றாகப் பிரிக்கத் தொடங்கினார். 

முதல் டெண்டரைப் பார்த்ததுமே சலிப்பு வந்தது. நாசமாப் போறவன். இந்த கோபால் ரெட்டிக்கு என்ன தெரியும்னு இந்த டெண்டரை கேக்கறான். ஜல்லி சப்ளை பண்ற கடங்காரனுக்கு ஆப்டிக் ஃபைபர் காண்ட்ராக்ட் எழவு எப்படி முடியும், என்று நினைத்தபடியே, ரேட்டைச் சுழித்து கையொப்பமிட்டபடி வந்தவரின் கண்ணில் அந்தப் பக்கத்தின் அடியில் கையொப்பமிடாதது கண்ணில் பட்டது.

அப்பாடா! தப்பிச்சேன். இல்லைன்னா எக்ஸ்பீரியன்ஸ் இல்லை, க்ரெடென்ஷியல் சரியில்லைன்னு எழுதப் போய், பணத்தால் அடிக்கப் பார்ப்பான். மேல இருக்கிறவன் ஒரு வேளை மடிஞ்சிட்டான்னா என் பாடுன்னா திண்டாட்டமாப் போகும். ஆச்சு! இன்னும் ரெண்டு வருஷம் தள்ளியாச்சின்னா, போதுண்டா சாமின்னு ரிடையராயிடலாம் என்ற நிம்மதிப் பெருமூச்சு நிலைக்கவில்லை.

சுருட்டு நாத்தமும், வியர்வை நாத்தமுமாய் ஒருத்தன் வந்து, ரெட்டிகாரு கார்ல இருக்குது சார். சார்னு கொஞ்சம் ரம்மன்னாரு சார் என்றான். கண்கள் சிவக்க அடித்தொண்டையில், ரெட்டியில்லை, என்னப்பன் நாராயணனே டெண்டர் போட்டிருந்தாலும், எனக்கு அவன்கிட்ட போக வேண்டிய அவசியமில்லைன்னு போய்ச் சொல்லு என்றார். சற்று நேரத்தில் ரெட்டியே இளித்துக் கொண்டு வந்தான். 


‘பாகுன்னாரா ஸாமி? ஏமண்டி பாப்பக்கு ஒக பண்டி கொனீய குடுது? பஸ்ஸுக்கு ஓடி போய் அந்த கும்பல்ல ஏறி அவஸ்தை பட்டதை பார்த்தேன் காலைல. அல்லாரும் பொறுக்கி பசங்க சாமி. ’

'இண்ட்லோ கம்ப்யூட்டர் கூட லேதுனு கேள்வி பட்டேன். '

'பையன் கம்ப்யூட்டர் இஞ்சினீரிங் சதுவுத்துன்னாடண்டா. மவுண்ட்ரோடுல ரெட்டி மோட்டார்ஸ் நம்மளதுதான் சாமி.'
'பாப்பாக்கு கூட்டினு போய் ஏ பண்டி காவாலோ செலக்ட் மட்டும் பண்ண சொல்லு.'
'நாளைக்கே டெலிவரி பண்ணிடலாம்.’
‘லேப்டாப் சாயந்திரம் நம்ம மேனேஜர் ஊட்டாண்ட கொண்டு வந்துடுவான்.’

'நீ ஒன்னும் செய்யொத்து சாமி. '

'ஆ, லஞ்சா கொடுக்கு மேனேஜர் சேசின பனி.'
'சரியா பார்க்காம டெண்டர் போட்டுட்டான்.'
'நேத்தே பார்ட்டில உங்க பாஸ் கிட்ட பேசியாச்சி. ஒன் அவர்ல அவர் ரூம்ல இருப்பேன்.'
'நீ ஒன்னும் எழுதாத டெண்டர் ஃபாரம் உள்ள அனுப்பினா போதும் 'என்றான். 

ரெட்டியை கண்ணுக்குள் பார்த்தபடி, ரெட்டி நோக்கு காண்ட்ராக்டும் தெரியலை. காண்டக்டும் சரியில்லை. மரியாதையா எழுந்து போறியா? விஜிலன்ஸுக்கு ஃபோன் பண்ணவா என்றபடி ஃபோனை அருகில் இழுத்தார்.
 

'புத்திலேனி வெதவா!  சம்பளம் தீஸ்கோனி ஏம் பதுகுதாவைய்யா. ச்ச்சாவு போ!'
'ரெட்டி எவரனி நீக்கு சூபிஸ்தானு'
என்று கருவியபடி வெளியே போனான் ரெட்டி. எதற்கும் இருக்கட்டும் என்று அவன் டெண்டர் ஃபார்மை ஒரு ஜெராக்ஸ் எடுத்து வைத்தார். ஆவணங்களைத் தயார் செய்து, ப்ரோஸீடிங் எழுதி, அதிகாரியின் ரூமுக்கு கொண்டு செல்லும்போது மணி ஒன்றாகி விட்டிருந்தது.  சாரி சார்! லஞ்ச் டைம். லாக் பண்ணி வச்சிட்டு போங்கோ என்று கொடுத்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தார்.

சேஷனை ஒரு கேலியான பார்வையோடு கடந்தான் ரெட்டி. சற்று நேரத்தில் அதிகாரியும் அவனும் வெளியே கிளம்பினர். ரெண்டரை மணியளவில் இரைதின்ற பாம்புபோல் வீங்கிய வயிற்றைத் தூக்க முடியாமல் சுமந்து கொண்டு அதிகாரியும் ரெட்டியும் மீண்டும் வந்தனர்.

அடுத்த கட்ட வேலையில் மும்முரமாயிருந்த சேஷனை, அதிகாரி அழைப்பதாகப் ப்யூன் வந்து சொன்னான். என்ன எழவெல்லாம் வந்து சேருமோ தெரியலையே க்ருஷ்ணா, என்றபடி அதிகாரியின் அறைக்குச் சென்றார் சேஷன். 

‘என்ன சேஷன் சார்? என்னமோ நீங்க ரொம்ப சின்சியர்னு கேள்வி பட்டிருந்தேன். சார் உங்க மேல ஒரு கம்ப்ளெயிண்ட் குடுத்திருக்காரு.'

'ரிடையர் ஆகப் போற நேரத்துல உங்க புத்தி இப்படி கெட்டு போகணுமா சார்?’ ‘நீ ஜல்லி சப்ளை பண்ற ஆளு, உனக்கும் இந்த டெண்டருக்கும் என்ன சம்மந்தம்?’

‘எக்ஸ்பீரியன்ஸ் இல்லைன்னு எழுதுவேன், க்ரெடென்ஷியல் இல்லைன்னு எழுதுவேன்.’
‘நான் எழுதறதுதான்.’
‘மேல இருக்கற மடப்பயலுக்கு எங்க என்ன பார்க்கணும்னு கூட தெரியாது. பணம் வாங்க மாட்டேன்.’
‘ஒரு ஸ்கூட்டியும் ஒரு லேப்டாப்பும் வாங்கி வீட்டுக்கு அனுப்புன்னு கேட்டிங்களாமே!’  
‘சேஷனாவது அப்படியெல்லாம் கேக்கறதாவதுன்னு திட்டிட்டேன். ’
‘சாப்பிட்டு வந்து, நீங்க குடுத்த பேப்பரை பார்த்தப்போதான் தெரிஞ்சது. எவ்வளவு கேவலமா நடந்துட்டிருக்கீங்கன்னு.’
‘மொட்டைக் கையெழுத்து போடுவேன்னு நினைச்சீங்களா?’
‘அதெப்புடி சார், கையெழுத்து போட்ட ஒரு டாகுமெண்ட்ல கையெழுத்து இல்லை, செல்லாதுன்னு எழுதி சார் டெண்டரை விட்டுட்டு மத்ததை ரெகமண்ட் பண்ணுவீங்க? ’
‘நான் உங்கள நம்பி கையெழுத்து போட்டிருந்தா என் வேலை போயிருக்குமா இல்லையா?’
‘இங்க பாருங்க, கையெழுத்து இருக்கா இல்லையா?’
‘ஏன் சுழிக்காம விட்டு, கையெழுத்து இல்லைன்னு நோட் எழுதுனீங்க?’

திகைத்துப் போனார் சேஷன். அவர் சர்வீஸில் இப்படி ஒரு ஆளைக் கண்டதில்லை. 

‘புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கிறேன்.'
'போங்க சார். கொண்டு போய் வேற மாத்தி எழுதி கொண்டு வாங்க.'
'இங்க பாருங்க கம்ப்ளெயிண்ட். '
'நீங்க அது சரியில்லை, இது சரியில்லைன்னு எழுதினா, எனக்கு வேற ப்ரூஃபே வேணாம். இந்த கம்ப்ளெயிண்ட்டே போதும். ஆக்‌ஷன் எடுக்க வேண்டி வரும் என்றார். '

நிற்க முடியாமல் உதறியது சேஷனுக்கு. 

'சார்! அதிகாரியாச்சேன்னு பார்க்கிறேன். என் லீவ் சர்வீஸ் இருக்காது உங்களுக்கு.'
'என்னையா மிரட்றீங்க? '
'ஏதோ ஒரு டவுட் வந்துதான், நான் இந்தாளு ஃபார்மை ஜெராக்ஸ் எடுத்து வச்சிருக்கேன். இப்போவே விஜிலன்சுக்கு கொடுக்கிறேன். ஆனதைப் பார்த்துக்குங்க' என்றார் சேஷன்.

'சாரி மிஸ்டர் சேஷன். இவ்வளவு மோசமா பிஹேவ் பண்ணுவீங்கன்னு நினைக்கலை.'

'ஐ ஹேவ் நோ அதர் கோ!'
'ஐ ஹேவ் டு ஸஸ்பெண்ட் யூ.'
'நீங்க இப்படியே வீட்டுக்கு போலாம். '
'உங்க டேபிள்ள உங்க பெர்சனல் திங்ஸ் இருந்தாச் சொல்லுங்க, ஐ வில் விட்னஸ் அண்ட் ஹேண்ட் ஓவர் டு யூ.'
'யூ ஷுட் நாட் டச் எனி அஃபிஷியல் டாகுமெண்ட்ஸ். '
'இந்தாங்க உங்க சஸ்பென்ஷன் ஆர்டர். '


'உட்கார்ந்து  நிதானமா சார்ஜ் ஷீட் படிச்சி பார்த்து அக்னாலட்ஜ் பண்ணுங்க.' 

'மீன் வைல் ஐல் கெட் யுவர் திங்ஸ்'
என்று வெளியே சென்றவன் ஜெராக்ஸ் காபி ஃபார்மை மட்டும் கொண்டு வந்தான். படிக்கப் படிக்க மயக்கம் வரும் போலிருந்தது சேஷனுக்கு. இத்தனை வருட சர்வீஸில் இப்படி ஒரு பேச்சு வாங்கியதில்லை. அதுவும் நேர்மையாய் இருந்தும் எவ்வளவு கேவலமாக பேசிவிட்டான். லஞ்சப் பேர்வழி என்ற பேர் போதாமல், ப்ளாக் மெயில் செய்ததாக வேறு ஜோடித்தால் என்ன செய்வது?

'ஓக்கே ரெட்டி. ஹியரீஸ் த ஜெராக்ஸ்.'

'உங்க கம்ப்ளெயிண்ட் மட்டும் இருக்கட்டும்.' 
'சாலா தேங்க்ஸண்டி. ஈவினிங் பார்ட்டில மீட் பண்ணுவோம் 'என்றான். ரெட்டி, 


'அய்காரு! இப்புடு சூச்சுகுன்னாவா?'
'செப்பின மாட்ட கேக்க மாட்டய்யா மீரு.'
'ஒக சின்ன தப்பு நடந்து போச்சின்னு வந்து கேட்டா சரினி சொல்லாம இப்புடி அசிங்கப்பட்டு நிக்கறியேய்யா. '
'உன்ன மாதிரி எவ்வளவு பேரை பார்த்திருப்பேன். பொழைக்க தெரிஞ்சிக்க ஸாமி' என்று கிளம்பினான்.


'அட, குடு சார் அந்த சார்ஜ் ஷீட்டை. என்னமோ மினிஸ்டர் கிட்ட இருந்து அப்ரிஸியேஷன் பண்ணி வந்தா மாதிரி இந்த டென்ஷன்லையும் அத படிச்சிக்கிட்டு' என்று வெடுக்கென பறித்துக் கொண்டு நடந்தான்.  

அதிகாரி, 'நீங்க அரை நாள் லீவ் போட்டுட்டு போங்க சேஷன். நான் வேலையை முடிச்சிடுறேன்'என்றார். 

சர்வமும் தளர்ந்து குறுகிப் போய் அமர்ந்திருந்தார் சேஷன். சுற்றி நடப்பதும் இருப்பதும் ஏதுமறியாமல் ஒரு வெறுமை. சம்மந்தமின்றி எங்கிருந்தோ மென்மையாக கோப்புவின் குரலில்  ‘ஜயதி ஜயதி பாரதமாதா’ கேட்டது.
~~~~~~~~~~~~~~~~~~

Saturday, October 2, 2010

கேரக்டர் - ரமணி..


ரமணி..ரமணியை முதன் முதலில் பார்த்ததே ஒரு பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோவில். பார்த்ததுமே பிடித்துப் போனது. காரணம், ஜெய்சங்கர் மாதிரி அலை அலையான கிராப்பும், டையும். நேரில் பார்த்தது அவர் கலியாணத்தில். சரியான உயரம், அம்மாவைப் போல் நல்ல நிறம், வாய் கொள்ளாச் சிரிப்பு, அலைபாயும் கண்கள், வெடுக் வெடுக்கென்று காகம் போல் தலை திருப்பிப் பார்க்கும் மேனரிசம். 

திருமணம் ஆனகையோடு பூனாவுக்கு மாற்றல் வாங்கியிருப்பதைச் சொல்லி குஜராத்தை விட பூனா அருகில் என்ற சமாதானத்தோடு புதுக்குடித்தனம் போன மணப்பெண்னிடமிருந்து வந்த முதல் கடிதம் வீடெங்கும் சிரிப்பலையை உண்டாக்கியது. ‘சரியான கஞ்சனப்பா. ரெண்டு பேருக்கு 4 கத்திரிக்கா போதும், கைப்பிடி வெண்டைக்காய் போதும்னு குத்து மதிப்பா வாங்கறதாவது பரவால்லைப்பா. மனுஷன், கடை கடையா ஏறி இறங்கி எந்தக் கடையில் கடுகு காரமா இருக்குன்னு தரம் பார்த்து வாங்கறார்’ என்று வந்த கடிதம் தந்த சிரிப்பு அது.

அரிசிப்பஞ்சம் இருந்த காலம் அது. மைத்துனனிடம் சொல்லி, ஹோல்டால் முழுதும் ஒரு மூட்டை அரிசி நிரப்பி, பொங்கல் சீர் செய்ய பூனேக்கு போனார்கள், பெண்வீட்டார். ஊர் சுற்றும் சாக்கில் மருமகனோடு போய் மார்க்கட்டில் பேரம், விலை என்று அலைந்து களைத்த பெரியவர், ‘அஞ்சு பைசா குறைவுன்னு இந்த அலைச்சல் தேவையா மாப்ள? எத்தனை எனர்ஜி வேஸ்ட்’ என்று சொன்னபோது கிடைத்த ஞான வசனம் இது.

“மாமா! பஸ்ல போறோம். ஒரு ரூபா டிக்கட். தொன்னுத்தஞ்சு பைசாதான் இருக்குன்னா கண்டக்டர் விடுவானோ. தொன்னுத்தஞ்சு பைசாக்கு அங்க மதிப்பில்லை. இல்லாத அஞ்சு பைசாதான் பெருசு”.

மாப்பிள்ளை சிக்கனக்காரர் என்று கொண்டாடுவதா? கஞ்சனென்று வருந்துவதா? ஒரு முறை அவரின் பெற்றோருடன் ஹைதையில் பஸ் ஏற, அந்தப் பெண் டிக்கட் எடுத்திருக்கிறார். மாமியாருக்கு கோபம். அவன் வேற எடுத்திருப்பான். நீ எதுக்கு அதிகப்பிரசங்கியாட்டம் வாங்கற என்றவருக்கு மருமகள் பதில் சொல்லவில்லையாம். இறங்கியபின், மருமகள் சொன்னபடி அவர் அம்மா மகனிடம் விசாரித்தாராம்.

‘ஹி ஹி! நான் நேக்கு வாங்கிட்டேனே. இவள் எனக்கும் சேர்த்து வாங்கிட்டாளா? ஒரு டிக்கட் காசு போச்சா’ என்று பதற, மருமகளின் பார்வையை சந்திக்க முடியாமல்,  ‘இவன் இன்னும் மாறாம அப்படியே இருக்கான். நீயாவது மாத்தப்படாதா?’ என்ற முனகலே பதிலாயிற்றாம்.

 குன்னூரில் இருந்தபோது, ஏதோ டெஸ்ட் எடுக்க உதவ, பாய்ச்சர் இன்ஸ்டிட்யூட்டில் பணி புரியும் பக்கத்து வீட்டுக்காரர்,  இவரை டெஸ்டுக்கு அழைத்துக்கொண்டு போய் பட்ட பாடு இருக்கிறதே. சொல்லத் தரமன்று.

ரெண்டு விலையுயர்ந்த கண்ணாடி டிஷ் கையில் கொடுத்து சேம்பிள் கேட்டிருக்கிறார்கள். நண்பர் இவரை அனுப்பிவிட்டு தன் வேலையைப் பார்த்துக் கொண்டு, சற்று கழித்து லேபில் போய் கேட்க ஆளைக் காணோம். மாலையில் வீட்டுக்கு வந்து,  ‘அம்மா! அந்த சாம்பிள் டிஷ்ஷாவது வாங்கிக் கொடுங்கம்மா. இல்லையென்றால் என் சம்பளத்தில் பிடித்துவிடுவார்கள்’ என்று அழமாட்டாக் குறையாகக் கெஞ்ச, சேம்பிள் கொடுக்காமல், எஸ்ஸாகி சினிமாவுக்கு போய்விட்டு வந்தவரிடம், கெஞ்சிக் கூத்தாடி பேண்ட் பாக்கட்டிலிருந்த டிஷ்ஷை வாங்கி கொடுப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

அது ஊட்டியோ, ஜம்முவோ மனைவியோடு வந்து மனைவியோடு ஊருக்குப் போன வரலாறே இல்லை. ரிசர்வேஷன் வேஸ்ட். நாலு ரயில் மாறிப்போனா என்னாயிடும் என்று அன்ரிசர்வ்டில்தான் பயணிப்பார் தனியாக.

நாளை என்ன சமையல் என்று கேட்க வேண்டும். கத்தரிக்காய் சாம்பார், வாழைக்காய் கறி, பூண்டு ரஸம் என்று சொரிந்து சொரிந்து யோசித்து சொல்லுவார். திரும்பவும் காலையிலும் கேட்க வேண்டும். வாழைக்காய் கூட்டு, கத்தரிக்காய் கறி, சீரக ரஸமென்று மாறும். 

பீமன் மாதிரி ரமணி. போஜனப் ப்ரியன்.  எத்தனை முறை வந்தாலும், அதே வீடானாலும், ‘ஏண்டி! கெழக்கு எது?’ என்று கேட்டு திசை பார்த்துதான் சாப்பிட அமர்வார். உப்பு போதவில்லை என்றால் சேர்த்து சாப்பிடுவது சகஜம். மனுஷனுக்கு புளிப்பு போதவில்லை என்றால், பொறுமையாக, வென்னீரில் கொஞ்சம் புளி கரைத்து சேர்த்துக் கொண்டு சாப்பிடுவார். அதிகமானால் வென்னீர் விட்டு இளக்கிக் கொள்வார். கறி ப்ரமாதம். சாம்பார் ஃபஷ்ட்க்ளாஸ். ரஸம் ஏ ஒன் என்ற சிலாகிப்புக்குக் குறைவிருக்காது. யார் சமையல் என்று கேட்டு,  ‘நண்ணா இருந்தது! அன்னதாதா சுகீ பவா’ என்று வாழ்த்தவும் செய்வார்.

சரி! சிக்கனமாக இருப்பதில் தவறில்லைதான். மனுஷனுக்கு தமிழ்நாடும், ஆந்திராவும் பிடிக்காது. பெரும்பாலும் வடமாநிலம்தான். காரணம் என்ன தெரியுமா? சோம்பேறி. வேலையில் நாட்டமில்லை. வட நாடு என்றால் சூப்பரிண்டண்டிடம் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டால், இவர் முடிக்காமல் இழுத்தடிக்கும் வேலையை முடித்துவிடுவார். 

சில நாட்களில் மட்டம் போடுவாராம். ஏன் முடியலையா என்ற மனைவியின் கேள்விக்கு, ‘பக்கத்து சீட்டுக்காரி சனியன் 2 நாள் லீவு போட்டுட்டாள். அவள் வேலையும் எனக்கு சேரும். அதுக்கு வேற தனியா காசு கொடுக்கணும் தண்டம்’ என்று சம்பளமில்லாத விடுப்பானாலும் எடுப்பார். 

மூன்று வருடத்துக்கு ஒரு முறை மாற்றல் தவறாது என்பதால், இரண்டு வருடத்திலேயே தேடி யாரும் போகாத ஊருக்கு ட்ரான்ஸ்ஃபர் கேட்டு விடுவார்.  அதற்கு சொல்லும் காரணம் அபாரமாய் இருக்கும். ‘அவனே போட்டா ஏதாவது தண்ணியில்லாத காட்டுக்கு போடுவான். நாமளா பார்த்து கேட்டுண்டா நல்லது. எப்புடி இருக்குமோ என்னமோன்னு திகைப்பிருக்காது பாரு’ என்பார்.

மாற்றலின் போது ஒரு முறை 4 மணிக்கு கிளம்பி 6 மணிக்கு ரயில் பிடிக்க வேண்டிய கட்டாயம். டிஃபனும் சாப்பாடும் ஹோட்டலிலா. வேஸ்ட் என்று பிடிவாதமாக காலைச் சமையலுக்கு வேண்டியதை விட்டு மற்றவற்றை கட்டச் சொல்லி, ஒன்பது மணிக்கு சாப்பிட்ட பிறகு லாரியை அழைத்து வருகிறேன் என்று போனவரை ஆளைக் காணோமாம்.

டிபார்ட்மெண்ட் லாரியாதலால் அவன் நேரத்துக்கு வந்து, அம்மணி இந்தாளை நம்பினால் கஷ்டம் என்று எல்லாவற்றையும் ஏற்றி பார்ஸல் ஆஃபீஸில் புக் செய்துவிட்டு வீடு வர மணி ஒன்று ஆகிவிட்டதாம். பூட்டியிருந்த வீட்டின் முன், கடுங்கோபத்துடன் நின்று கொண்டு, ‘பொறுப்பிருக்கா? எங்க போய் தொலைஞ்ச. எப்போ பார்ஸல் அனுப்பி, எப்போ கிளம்பறது? லாரிக்காரனும் வந்த பாட்டைக் காணோம்’ என்று எகிறி, பூட்டைத் திறந்தபின்  ‘ஹி ஹி! நீயே அனுப்பிட்டியா? பேஷ் பேஷ்!!’ என்ற சிலாகிப்போடு ஒரு வழியாய் ட்ரெய்ன் பிடித்தார்களாம்.

லாரி கூட்டி வரப் போகிறேன் என்று போகும் வழியில் மார்னிங்ஷோ பார்த்துவிட்டு அரக்க பறக்கப் போய், லாரி போயாகி விட்டது என்றதும் போட்ட சீன் அதுவென்றால், ட்ரெய்ன் ஏறி அமர்ந்ததும் ‘ஸ்ஸ்ஸ்ஸப்பா! ஒவ்வொரு வாட்டியும் ட்ரான்ஸ்ஃபர்னா இந்த சாமான் சட்டி தூக்கறது பெரும்பாடு’ என்று சலித்துக் கொண்டது மெகா சீனா இல்லையா?

மனுசனுக்கு சாவென்றால் பயம். வஞ்சனையே இல்லாமல், மாமனார், மாமியார், தாய், தந்தை ஒருத்தர் சாவுக்கும் பிணம் எடுக்கும் வரை போனதேயில்லை. சாப்பிட உட்கார சாஸ்திரம் பார்க்கும் மனுஷனுக்கு இதற்கு மட்டும் சாஸ்திரம் உதவாது.  

காரியம் பண்ணும்போது புரோகிதர், கெஞ்சிக் கூத்தாடி, ‘இங்க பாருப்பா! குறைஞ்ச பட்சம் சங்கல்பம், எங்கப்பாக்கு, எங்கம்மாக்குன்னு வர மந்த்ரங்களெல்லாமாவது நீதான் சொல்லியாகணும்’ என்று மல்லுக் கட்டியும், மந்திரம் சொல்லாமல் வடிவேலு மாதிரி சொல்லியாச்சு சொல்லியாச்சு என்று சொல்லியே கடுப்பேத்தினாராம்.

மனுசனுக்கு உடம்புக்கு வந்து விட்டால்  மனைவியை விட மருந்துக் கடைக்காரன் பாடு திண்டாட்டம். டாக்டர் பத்து மாத்திரை எழுதினால் சீட்டைக் கொண்டு போய் நீட்டி, இது எதற்கு என்று கேட்டு, டாக்டர் சரியான நோவுக்குதான் மாத்திரை கொடுத்திருக்கிறாரா என்று உறுதி செய்து கொள்வார்.  பிறகு ரெண்டே ரெண்டு மாத்திரை கேட்பார். இல்லைங்க ஒரு கோர்ஸ் முழுசா எடுக்கணும் என்றால், இந்த மருந்து கேக்கலைன்னா அவர் மாத்தி எழுதி குடுப்பார். நீ திரும்ப எடுத்துப்பியா என்று டரியலாக்குவார். ரெண்டு மூன்று மாத்திரைகள் என்றால் எது, எதற்கு என்று கேட்டு, வலி மாத்திரை வேணாம். கொஞ்ச நேரம்தான் வலி தெரியாது. எதுக்கு வேஷ்ட் என்பார்.

ஆண்டிபயாடிக் எழுதிவிட்டால் போச்சு. என்னதிது ஒரு மாத்திரை இவ்ளோ காஸ்ட்லி. சீப்பா இல்லையா? ரெண்டு மாத்திரையா போட்டுக்கலாம் இல்லையா? அதைக் கொடு என்று மல்லுக் கட்டுவார். மாத்திரைன்னா அளவா இருக்க வேணாமா, சோழி சோழியா இவ்ளோஓஒ பெருசு பண்ணா எப்புடி முழுங்கறது என்ற கேள்விக்கு மருந்து கடைக்காரன் என்ன சொல்ல முடியும். 

ஆனாலும் ஒன்று. மனுஷன் நேத்து ஒரு மாதிரி. இன்னைக்கு ஒரு மாதிரி என்ற பேச்சுக்கே இடமில்லை இவரிடம்.  ஆயிற்று எழுபது வயது. கொஞ்சமும் மாறாமல் அன்றைக்கு இருந்தாற்போலவே இன்னும் இருக்கிறார். இப்போதெல்லாம் கடைக்குப் போகாவிட்டாலும், மாரி முத்து கடைல கேட்டியா? எவ்ளோ சொன்னான். செட்டியார் கடையில சல்லிசா இருக்குமே? அங்க கேட்டியோன்னோ என்று மனைவியிடம்  ‘Mock பேரம்’  டிவி பார்த்தபடியே தொடர்கிறதாம். 
*****