Tuesday, April 13, 2010

கேரக்டர் - வாசு

வாசு வாய்விட்டு சிரித்து பார்த்தது ரொம்பக் குறைவு. ஆனால் கண்ணில் குறும்பு கொப்பளிக்க வாயோரம் லேசாக சுழித்து வாசு ஏதாவது சொன்னால் சுற்றியிருப்பவர்கள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிப்பார்கள். ஜெமினி ஸ்டுடியோவின் இரட்டைக் குழந்தைகள் வைத்திருக்குமே ட்ரம்பட். அதே மாதிரி ‘V'  ஸ்டைலாகப் போட்டு  எழுதும் ‘V.V.Moorthy' என்ற கையெழுத்தே வெகு அழகாய் ஒரு ஓவியம் போலிருக்கும்.

ஐந்தடி ஆறங்குல உயரம் இருக்கலாம், மாநிறத்துக்கும் கொஞ்சம் குறைவு, தீர்க்கமான நாசி, துளைக்கும் கண்கள், தூக்கி வாரிய தலைமுடி, கணீரென்ற குரலில் அப்படி ஒரு மென்மையான பேச்சு எப்படி சாத்தியம் என்றே புரிந்ததில்லை இன்றுவரை.

எட்டு முழ குண்டஞ்சி வேஷ்டி, வெள்ளை ஸ்லாக் சட்டை, ஜிப்பா மாதிரி நான்கு லாக்கர்ட் பட்டன் வைத்தது (வெள்ளியில செயின் கோர்த்து ஒரு செட் வாங்கணும்). காலரில் அழுக்குப் படாமல் ஒரு வெள்ளைக் கைக்குட்டை, சட்டைப் பையில் ஒரு கைக்குட்டை, புத்தக வடிவில் ஒரு வெள்ளி பொடி டப்பி, உள் பாக்கட்டில் கொஞ்சம் காசு. மேல் பாக்கட்டில் ராணுவத்தான் ரிப்பன் மாதிரி, சிவப்பு, கருப்பு, நீல ஃபவுண்டன் பேனா. இடது கையில் கால் தடுக்காமல் வேட்டி நுனியைப் பிடித்தபடி, லாடம் அடித்த கான்பூர் தோல் செருப்பு அல்லது ஏரோப்ளேன் டயர் செருப்பு அணிந்து அலுவலகம் கிளம்பினால் அப்படி ஒரு கம்பீரம். அக்கம் பக்கம் பராக்கு பாராமலே சுற்றிலும் உள்வாங்கும் நேர்கொண்ட பார்வை.

எது செய்தாலும் நேர்த்தி, நிதானம், ஒரு முழுமை. அதுதான் வாசு. சம்ஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி, தமிழ், கொறச்சு மலையாளமும் கூடி ஆயாளு சம்சாரிக்கும். காலையில் குளித்துவிட்டு ஸ்லோக புத்தகம் படிக்கும்போதும், விடுமுறை நாட்களில் பைபிள் அல்லது குர் ஆன் படிக்கும்போதும் ஒரு சின்ன மாறுபாடு கண்டதில்லை. எல்லாமும் ஒரே அலமாரியில் துளி தூசில்லாமல் இருக்கும்.

கோவிலுக்கென்று போனதோ, அல்லது வீட்டிலோ கூட ஸ்வாமிக்கு பூஜையென்று கண்டதில்லை. பண்டிகை நாட்கள் தவிர. காலை மாலை சந்தியாவந்தனம் மட்டும் தவம் போல் செய்வார்.

மூக்குப் பொடி போட்டு உதறிப் பார்த்ததில்லை. கைக்குட்டையில் துடைத்து, மூக்கின் கீழ் வைத்து இடம் வலமாக இரண்டு தீட்டு தீட்டுவார். சட்டையிலோ, வேட்டியிலோ சிந்தினதேயில்லை. மூக்குப் பொடி கைக்குட்டையைத் தானேதான் துவைப்பார். உடுத்தும் துணியில் துளி அழுக்கில்லை, தினம் ஒரு வேட்டி சட்டை எதுக்கு சலவைக்குக் கேடு என்ற தங்கமணியின் தாக்குதலுக்கு எதிர்த் தாக்குதலும் வந்ததேயில்லை.

முனை மழுங்கிய ஹாக்ஸா ப்ளேட் காயலான் கடையில் வாங்கி இரண்டாக உடைத்து, தரையில் மணல் தூவித் தீட்டி, சந்தனக்கல்லின் பின்புறம் விளக்கெண்ணெய் விட்டு இன்னும் கூர் பிடித்து செய்யும் கத்திக்கு முன் சாணை பிடிப்பவன் ஒன்றுமில்லாமல் போவான்.

மைதா மாவு வாங்கி மயில்துத்தம் தூவி பசை செய்து, புத்தக பைண்டிங் செய்தால் புத்தகம் உளுத்துப் போனாலும் அட்டையை எதுவும் துளைத்துப் பார்த்ததில்லை. தன் பிள்ளைகளுக்கேயன்றி, மாமா எனக்கு மாமா என்று வரும் குழந்தைகளின் புத்தகங்களுக்கும் பைண்டிங் செய்து கொடுத்து தங்கமணியின் கத்தலை புறந்தள்ளி அவர்களுக்குக் கொடுக்கும் போது   ‘அய்! நல்லாருக்கு மாமாவில்’ விகசிக்கும் போது அவ்வளவு அழகாயிருப்பார் வாசு.

ஆஃபீஸில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை தரப்படும் உலர்ந்த மரப்பிசினி, பச்சை, நீலம், சிவப்பு, கருநீலம், கருப்பு பேனா மை மாத்திரைகளை மற்றவர் குப்பையில் போடும்போது இவர் வீட்டுக்கு கொண்டு வருவார். தேங்காய் மூடி தேய்த்து தேய்த்து வழ வழவென்று வைத்திருப்பார். விளிம்பு கூட தேய்த்து சீராக இருக்கும். அதில் பிசினை வென்னீரில் ஊறவைத்து, இங்க் மாத்திரையை பொடித்துக் கலந்து வெயிலில் காயவைத்தால் தோலைப் புண்ணாக்காத சாந்து ரெடி. தேவையான போது ஒரு விரலை நீரில் நனைத்துக் குழைத்து சாந்தாக்கி இட்டுக் கொள்ளமுடியும்.

மாங்கு மாங்கென்று சந்தனம் அரைத்து, வெண்கல உருளியின் அடிப்புறம் தடவிக் காயவைத்து, மூன்று செங்கல் மேல் வைத்து அடியில் ஒரு விளக்கில் புத்தம்புது விளக்கெண்ணெய் விட்டு பஞ்சுத்திரி விளக்கேற்றி அதன் சூட்டிலும் கரியிலும் சந்தனம் கருகியிருக்க, கையை சோப்பு போட்டு கழுவி, கரித்த சந்தனப் பொடியை சுத்தமான காகிதத்தில் உதிர்த்து, சுத்தமான பித்தளைக் கிண்ணத்தில் போட்டு விளக்கெண்ணெயில் குழைத்துச் செய்யும் கண்மையில் கண்கள் குளிர்ந்து போகும்.

பேனாப் பிரியர். கிட்டத்தட்ட நூறு பேனாக்களை இரண்டு சாக்லேட் டப்பாவில் அடுக்கியிருப்பார். ஞாயிறு காலை சாப்பாட்டிற்குப் பின்பு, வென்னீர் வைத்து போன வாரம் கொண்டு போன பேனாக்களைச் சுத்தம் செய்து அடுத்த வாரத்துக்கான பேனாக்களைத் தெரிவு செய்து மை நிரப்பி, சவரம் செய்த ப்ளேடில் நிப்புகளை ஃபைன் ட்யூன் செய்து, பிடித்தமாதிரி எழுதவிட்டு எடுத்து வைத்த பின் சின்னதாய் ஒரு தூக்கம் போடுவார். மாமா பட்டையடிக்குது மாமாக்கும், மாமா கிறுக்குது மாமாக்கும் நிப்பின் பிளப்பில் ப்ளேடை விட்டு என்ன மாயம் செய்வாரோ தெரியாது, சொன்னபடி கேட்கும் பேனாக்கள். எத்தனை நாள் கழித்து எழுதினாலும், வெயில் காலத்திலும் கூட உதறி எழுத அவசியமே இராது.

உருட்டு ரூலரில் எதிர்ப்பக்கம் கோடு போடுதல்  மிகக்கடினம்.  நோட்டுப் புத்தகங்களிலாவது கோடு கோணலாயிருக்கும். இவரிடம் ஆனதேயில்லை. அதிலும் மயிரிழை உருட்டி டபுள்லைன் போடும் அழகே அழகு. அலுவலகத்தில் மேகசின் க்ளப் நடத்தினாலும், புதுப்புத்தகம் தான் படித்த பிறகு என்ற வழக்கம் இருந்ததேயில்லை. வீட்டில் யாரும் தொடவும் கூடாது. கலைமகள், மஞ்சரி மட்டும் தனக்கு ஒரு ஏடு தனியாக வாங்கி முதலில் படிப்பார். தினத்தந்தி யாராவது பிரித்துப் படித்துவிட்டால், இன்னொரு பேப்பர் வாங்கித்தான் முதலில் படிப்பார். 

கந்தசாமி கோவில் அருகில் இருக்கும் நாட்டு மருந்துக் கடைகளில் தேடித் தேடி மருந்து சாமான் வாங்கி வீட்டில் வந்து தானே காய வைத்து, சுத்தம் செய்து உரலில் இடித்து வஸ்த்ரகாயம் (மெல்லிய சல்லாத்துணியில் சலிப்பது) செய்து, நெய்விட்டோ அல்லது வெல்லம் சேர்த்து இடித்தோ செய்யும் ஸ்யவனப்ராசம் சிறு பிள்ளைகளிடையே வெகு பிரசித்தம்.

புத்தகம் முனை மடிப்பது, புத்தகத்தில் கோடிழுப்பது, எச்சில் தொட்டுப் புரட்டுவது, பத்திரிகைகளை ஆளுக்கொரு பக்கம் பிரித்துப் படிப்பது, சாப்பிடும்போது இறைப்பது ஆகியவை பொறுக்கமாட்டார். விழும் ஒற்றை அறையில் நாள் முழுக்க எரியும்.

கர்நாடக சங்கீதத்தில் கொள்ளைப் பிரியம். பிள்ளைகள் படிப்புக் கெட்டுவிடுமென்று ரேடியோ வாங்காமல் இருந்தது மட்டும் ஒரு குறை. மூக்குப் பொடியோ, விதியோ நுரையீரலில் நீர் சேர்ந்து ஃப்ளூரசியாகி ஐந்தடி நடந்தால் இடுப்பைப் பிடித்துக் கொண்டு மூச்சு வாங்கிப் பின் நடந்தபோதும் அந்த கம்பீரம் மட்டும் குறைந்ததே இல்லை.

ஒரு வெள்ளிக் கிழமை இரவில் மூச்சுத் திணறி, ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன பிறகு, பயப்படாம போப்பா. தம்பி தனியா இருப்பான் பார்த்துக்கோ என்றவர், அதிக ரத்த அழுத்ததால் நாளம் வெடித்து இறந்த பிறகும், அரை மணியில் ரிக்‌ஷாவில் உட்கார்ந்தபடியே கம்பீரமாகத்தான் வந்திறங்கினார்.

வாசு! என் பாசமான அப்பா!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

52 comments:

Ramesh said...

நான் பெஸ்ட்

Ramesh said...

உருக்கமாக நல்லா சொல்லியிருக்கீங்க ...
அந்த கம்பீரம் மொழியாண்மை பிடிச்சிருக்கு
///செருப்பு அணிந்து அலுவலகம் கிளம்பினால் அப்படி ஒரு கம்பீரம். அக்கம் பக்கம் பராக்கு பாராமலே சுற்றிலும் உள்வாங்கும் நேர்கொண்ட பார்வை.///
அவ்வ்
///
புத்தகம் முனை மடிப்பது, புத்தகத்தில் கோடிழுப்பது, எச்சில் தொட்டுப் புரட்டுவது, பத்திரிகைகளை ஆளுக்கொரு பக்கம் பிரித்துப் படிப்பது, சாப்பிடும்போது இறைப்பது ஆகியவை பொறுக்கமாட்டார்///
என்னப்போன்றவர்
இப்பவும் அந்த கம்பீரத்துடன் அவர் புள்ள ஹாஹாஹ

T.V.ராதாகிருஷ்ணன் said...

பாலா...எங்க அப்பாவையும் கொஞ்சம் ஞாபகப்படுத்திட்டீங்க..:((

Ahamed irshad said...

அப்பா அப்பப்பா......

ஞாபகங்கள் அருமை...

ஈரோடு கதிர் said...

யாரோ என்னவோன்னு ஏனோதானோன்னு படிச்சேன்...

கடைசியில் உங்க அப்பான்னு தெரிஞ்சபோது... மனது கனத்து நெகிழ்ந்தது

பின்னோக்கி said...

சிறு வயதில் பரிட்சைக்கு முன், பேனாவை சுத்தம் செய்தது நியாபகத்திற்கு வருகிறது.

வழக்கம் போலவே மிக நுண்ணிய விவரிப்பு அவரைப் பற்றி.

கடைசி வரிகளில் அப்பா என்றதும், உங்கள் அப்பாவுக்கு மிக அழகான அஞ்சலியை செலுத்தியது புரிகிறது. அருமை.

யாசவி said...

soul touching :)

க.பாலாசி said...

ம்ம்... இந்த அளவுக்கு உங்கப்பாவ நீங்க கவனிச்சிருப்பீங்கன்னு அவருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல... எல்லாருக்குள்ளையும் அப்பாக்கள் என்னன்னமோ செஞ்சிகிட்டுதான் இருக்காங்க...

//புத்தகம் முனை மடிப்பது, புத்தகத்தில் கோடிழுப்பது, எச்சில் தொட்டுப் புரட்டுவது, பத்திரிகைகளை ஆளுக்கொரு பக்கம் பிரித்துப் படிப்பது, சாப்பிடும்போது இறைப்பது ஆகியவை பொறுக்கமாட்டார். விழும் ஒற்றை அறையில் நாள் முழுக்க எரியும்.//

எங்கப்பாவுக்கு இப்பவும்...பிடிக்காத செயல்கள்...

அப்பா = மகாத்மா.....

VISA said...

கடைசி வரியில் நெகிழ வைத்துவிட்டீர்கள்.
உங்கள் எழுத்து எனக்கு பிடித்திருக்கிறது.

ராஜ நடராஜன் said...

அப்பாவை இப்படியும் அறிமுகப்படுத்த முடியுமா?அழகு நடை.

பனித்துளி சங்கர் said...

அப்பாவின் ஞாபகங்களை மிகவும் அழகான நடையில் பகிர்ந்து இருக்கீங்க நன்றி !

நாடோடி said...

அப்பாவை ப‌ற்றி அருமையான‌ விள‌க்க‌ம்....க‌டைசி வ‌ரிக‌ள் நெகிழ்ச்சி

க ரா said...

அருமையான் எழுத்து சார். கடைசில கலங்க வெச்சுடீங்க. ரொம்ப நன்றி.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

அருமை.

யூர்கன் க்ருகியர் said...

படித்ததும் ரொம்பவும் நெகிழ்ச்சியாய் இருந்தது.
சிறந்த இடுகை...

துபாய் ராஜா said...

வார்த்தைகளும், வர்ணனைகளும் அருமை சார்.கடைசியில் கலங்க வைத்து விட்டீர்கள்.

பிரபாகர் said...

அய்யா!

படிக்க ஆரம்பித்த சில நிமிடங்களில் இவர் உங்களுக்கு சம்மந்தப்பட்டவர் என எண்ணினேன்... ஒவ்வொரு வரியையும் படித்து லயித்து வந்தேன்... இறுதியில் மனம் கனத்துவிட்டது... என்ன ஒரு கேரக்டர்! உங்களின் பேச்சு, காணாமல் உணர்ந்திருக்கும் உங்களின் ஆளுமை, அன்பு எல்லாம் அவரிடமிருந்துதான் என இப்போது புரிகிறது அய்யா! நீங்கள் கொடுத்து வைத்தவர்...

பிரபாகர்.

"உழவன்" "Uzhavan" said...

அந்தக் கம்பீரமும் மிடுக்கும் உங்கள் எழுத்திலும் தெரிகிறது

பழமைபேசி said...

சாயுங்காலம் வந்து படிக்கணும்... எதோ சொந்த அனுபவம்னு மட்டும் தெரியுது...

மணிஜி said...

அம்மாவிடம் ஒரு கதை..முன்பு சொன்னீர்கள் பாலா சார். அதையும் பதிவு செய்யுங்கள்..அப்பா நெகிழ்வு பாலா..

கலகலப்ரியா said...

ம்ம்... luv him..

Unknown said...

//மயில்துத்தம் தூவி பசை செய்து, புத்தக பைண்டிங் செய்தால் புத்தகம் உளுத்துப் போனாலும் அட்டையை எதுவும் துளைத்துப் பார்த்ததில்லை\\

சின்ன வயது நினைவுகளை ஞாபகப்படுத்தியது.
நல்ல பதிவு

அன்புடன்
சந்துரு

பா.ராஜாராம் said...

யாசவி..

soul touching :)

ofcourse!பாலா சார்!

Unknown said...

காரெக்டர் - வாசு என்றது வாசு பாலாஜியின் வாசுவாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். போகப் போக வீட்டுக்குள் இருந்து பார்த்தது போல பல விவரணைகள் பார்த்ததும் புரிந்து கொண்டேன். அதனால், கடைசி வாக்கியம் அவ்வளவாக பாதிக்கவில்லை என்றாலும் முழுக்க முழுக்க நெகிழ்வான உணர்வு. இப்படி ஒரு அப்பா இல்லையே என ஏங்க வைத்துவிட்டீர்கள்.. :))

Sanjai Gandhi said...

வாசு ஐயா.. க்ரேட்

நேசமித்ரன். said...

நெகிழ வைத்து விட்டீர்கள் பாலா சார்

thiyaa said...

நான் வந்திட்டேன்
உங்கள் ஆக்கங்களை
உடம்புக்கு முடியாமல் இருந்த நாட்களில் கூட
தினமும் படித்தேன். பதில்தான் எழுத முடியாமல் போய்விட்டது.
இனி வரும் நாட்களில் மீண்டும் உங்களுடன் இணைந்திருக்கிறேன்.

நலம் விசாரித்த உங்களுக்கு மீண்டும் நன்றி.

சத்ரியன் said...

அப்பப்பா....!

Rekha raghavan said...

கடைசி வரிகளை படித்ததும் கண்களில் நீர் கட்டியது. அப்பாவுக்கு உள்ள திறமைகள் உங்களுக்குள்ளும் இருக்கு சார். மறக்கவே முடியாத பதிவு.

ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)

பத்மா said...

இதைவிட அப்பாக்கு பெருமை தர முடியுமா? அவரைப்போலவே இத்தனை நேர்த்தியோடு நீங்கள் எழுதுவதை பார்த்து இதழோரம் சிரித்துக்கொள்வார் .அது போதாதா?

இராகவன் நைஜிரியா said...

உங்க அப்பாவின் கம்பீரம் அழகு. அதை நீங்க சொன்ன விதம் சூப்பர்.

அமர பாரதி said...

அருமைய்யா அருமை. இப்படியொரு அப்பன் கிடைக்கறதுக்கு கொடுப்பினை வேணும்யா. என்ன புண்ணியம் செஞ்சியோ இப்படியொரு அப்பன் கிடைக்கறதுக்கு.

ஸ்ரீராம். said...

யதார்த்தமான வர்ணனைகள்..எல்லோரும் சொன்னது போல கடைசி வரி...என்ன சொல்ல..நல்ல அஞ்சலி

Chitra said...

மனதை நெகிழ வைத்த பதிவு.

தந்தை, தன் பிள்ளைகளின் வாழ்வின் ஏற்படுத்தி இருக்கும் influence - ஏனோ அவர் மறைவுக்கு பின் தான் முழுவதும் புரிகிறது.

....I miss my appa......

sriram said...

கடைசி வரி படிக்கும் வரை, நீண்ட பின்னூட்டம் போட வேண்டுமென்று நினைத்திருந்தேன், கடைசி வரி படித்த பின் எதுவும் எழுதத் தோன்றாமல் நிற்கும் நிலை கண்டேன்.
மனதை ஒருமுகப் படுத்தி இதனை எழுத முற்படுகிறேன்.

“அருமை”

என்றும் அன்புடன்\
பாஸ்டன் ஸ்ரீராம்

bandhu said...

Just great!

RRSLM said...

//யாரோ என்னவோன்னு ஏனோதானோன்னு படிச்சேன்...
கடைசியில் உங்க அப்பான்னு தெரிஞ்சபோது... மனது கனத்து நெகிழ்ந்தது//
இதுவேதான் என்னுடைய நிலைப்பாடும். கண்களில் நீர் எட்டி பார்த்தது.

அது சரி(18185106603874041862) said...

நினைவுகளின் கனத்தில் மெளனமாக போகிறேன்...

Mahi_Granny said...

really great. u r fortunate to hv a dad like him. everyone who reads this, will think of their dad atleast for a minute.

தாராபுரத்தான் said...

அவுங்கதான் நம்ம சொத்தே.. நல்லா பார்த்துங்க சார்.

Nathanjagk said...

இப்பத்தான் உங்களை வாசிக்கிறேன். உருக்கமான எழுத்து.
அனைவருக்கும் தங்கள் அப்பாவை நினைத்துக்​கொள்ள வாய்ப்பளிக்கும் எழுத்து.
அருமை!

balavasakan said...

நெஞ்சைதொட்டுவிட்டீர்கள் !!! புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்!!!

ராஜ நடராஜன் said...

உங்களுக்கு சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நிஜாம் கான் said...

அண்ணே! அப்பாவின் ஞாபகங்கள் அழகு. கொஞ்சம் கணமாத்தான் இருக்கு.. தொடருங்க அடுத்த கேரக்டர.

நிஜாம் கான் said...

பதிவுலகின் சமீபத்திய போபியா கதைகேளு தொடர்பதிவுக்கு உங்களயும், ராகவன் அண்ணனையும் அழைக்க முடிவு செஞ்சி வச்சிருக்கேன். தமிழ்வெளி நாளை இரவுக்குத் தான் இயங்கும் என்பதால் அதுவரை நிறுத்தி வச்சிருக்கேன். எப்பா அண்ணன நான் ஏற்கனவே புக் பண்ணிட்டேன். உங்களுக்கு வேனுமினா வேற ஆளத் தேடிக்குங்கபா...

ரோஸ்விக் said...

ரொம்ப நெகிழ்வான பதிவு அண்ணே!

கம்பீரத்தானுக்கு என் இதய அஞ்சலிகள். :-(

vasu balaji said...

@@நன்றி றமேஸ்
@@நன்றி டி.வி.ஆர். சார்:)
@@நன்றிங்க இர்ஷாத்
@@நன்றி கதிர்.ம்ம்
@@நன்றி பின்னோக்கி
@@நன்றி யாசவி
@@நன்றி பாலாசி. ஆமாம்
@@நன்றி விசா
@@நன்றி நடராஜன்
@@நன்றி பின்னோக்கி
@@நன்றி பனித்துளி
@@நன்றி நாடோடி
@@நன்றி இராமசாமி கண்ணன்
@@நன்றி நண்டு@
@@நன்றி விசா
@@நன்றி யூர்கன்
@@நன்றி ராஜா
@@நன்றி பிரபா
@@நன்றி உழவன்
@@நன்றி பழமை
@@நன்றிங்க மணீஜி. எழுதுறேன்
@@நன்றி ப்ரியாம்மா. ம்ம்
@@நன்றிங்க தாமோதர் சந்துரு
@நன்றிங்க பா.ரா.
@@நன்றி முகிலன்
@@நன்றி சஞ்சய்
@@நன்றி நேசமித்திரன்
@@நன்றி. வாங்க தியா
@@நன்றி சத்திரியன்
@@நன்றி கல்யாணராமன் சார்
@@நன்றிங்க பத்மா
@@நன்றி ராகவண்ணா:)
@@ஆமாங்க அமரபாரதி
@@நன்றிங்க ஸ்ரீராம்
@@நன்றி சித்ரா
@@நன்றி ஸ்ரீராம் (பாஸ்டன்).ம்ம்
@@நன்றிங்க ரவி
@@நன்றிங்க RR
@@நன்றி அதுசரி.ம்:(
@@ty. mahi_granny
@@நன்றி ஜகநாதன்
@@நன்றி வாசு
@@நன்றி நிஜாம்.
@@நன்றி ரோஸ்விக்

vasu balaji said...

/ ராஜ நடராஜன் said...

உங்களுக்கு சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்./

உங்களுக்கும்:)

vasu balaji said...

மீ த 50:)). அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

prince said...

பழைய வாழ்கைய நியாபகபடுத்தி அழ வச்சிட்டீங்களே சார்!
இரவு எத்தனை மணியானாலும் கண்விழித்து காத்திருக்கும் அந்த கண்கள், அதற்காகவே விரைவாக பணிமுடித்து வீடு திரும்பும் என் மனமும்.என்னதான் துன்பம் என்றாலும் வெளிகாட்டி கொள்ளாத அந்த குணமும். என்ன தவம் செய்தேனோ அந்த தெய்வங்களுக்கு மகனாக பிறப்பதற்கு.

vasu balaji said...

ப்ரின்ஸ் said...

பழைய வாழ்கைய நியாபகபடுத்தி அழ வச்சிட்டீங்களே சார்!
இரவு எத்தனை மணியானாலும் கண்விழித்து காத்திருக்கும் அந்த கண்கள், அதற்காகவே விரைவாக பணிமுடித்து வீடு திரும்பும் என் மனமும்.என்னதான் துன்பம் என்றாலும் வெளிகாட்டி கொள்ளாத அந்த குணமும். என்ன தவம் செய்தேனோ அந்த தெய்வங்களுக்கு மகனாக பிறப்பதற்கு.//

ம்ம்

தமிழ் நாடன் said...

அடடா! அருமை உங்கள் மொழியாண்மை! மலைக்கவைக்கும் ஆளுமை உங்கள் தந்தையுடையது!