Tuesday, April 27, 2010

பதிவராமை..தலைப்ப மாத்திச் சொல்லு...

(டிஸ்கி: ஆஃபீசுல ஆணி அதிகமில்ல. இருந்தாலும் அடிக்கிற வெயில்ல புடுங்கற மூடு இல்ல. சொந்தமா யோசிக்க பொறுமையில்ல. சுத்தி வந்தப்ப நினைச்சத போடுறது தப்பில்ல. சோ.. ஸ்டார்ட் த மீஜிக்)
கதிர்: வலைமனை:- மாறுதல்--ம்கும். ரெண்டு மூணுதடவை டெம்ப்ளேட்டு அப்பப்ப ப்ரொஃபைல் ஃபோட்டோதான் மாறுச்சு. என்னதான் சீறுனாலும் எவனாவது மாறினானா?

அறிமுகம்: நிஜமாய் வாழ கனவைத் தின்னு: தினம் பாதி தலகாணி தின்னா உடம்பு என்னத்துக்காறது.

ப்ரொஃபைல்: ஏனுங்க இப்ப இருக்கிற ஃபோட்டோ எதுனாச்சும் கலியாணத்துல எடுத்ததா? மாப்புள பயல பார்த்து எங்களல்லாம் பார்த்து கூட திருந்தாம இப்பிடி இளிச்சிக்கிட்டு அடிமையாவுறியேன்னு அந்த பரிதாப லுக்கு என்னா லுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பழமைபேசி: வலைமனை: ‘மணி’யின்பக்கம். அது அப்ப. இப்ப அமெரிக்காவ விட தேசாய் கிட்ட துட்டு அதிகம்.

ப்ரொஃபைல்: எத்தன நாளுதான் பின்னாடி கைய கட்டிகிட்டு புள்ளைங்கள விளையாட விடாம சறுக்கு மரத்த மறிப்பீங்க. தள்ளி நில்லுங்க சித்த.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரபாகர்: வலைமனை:  ‘வாழ்க்கை வாழ்வதற்கே.’ பாவி மனுசா இடுகைக்கு இடுகை ஒன்னொன்னா தற்கொலை பண்ணிக்க வெச்சி சாவடிச்சிட்டு பேரு வைக்கிறாரு பேரு

எப்புடி எப்புடி? ‘நிறைய படித்து குறைவாய் எழுதி ’. இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியல. வலை மனை அறிமுகமே ஒன்னரை முழத்துக்கு எழுதிட்டு இது வேற.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாலாசி: வலைமனை: சி@பாலாசி. இங்க பாரு ராசா. இப்புடி இருந்தா எல்லாம் பார்த்துட்டு போய்ட்டே இருப்பாய்ங்க. லுக்கு வேணும்மா லுக்கு. லுக்@பாலாசின்னு வைய்யி. ஆனிமாசம் கலியாணம் (கடோசி முகூர்த்தம். அப்பதான் அடங்குவ)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரோஸ்விக்: வலைமனை: திசைகாட்டி . ஒன்னுமே எழுதாம எல்லா பக்கமும் காட்டிக்கிட்டு ஒரு கம்பம். அது மேல ஒரு சேவல் கூட இல்ல. என்னா டகல்பாஜி வேலையிது?

வலைஅறிமுகம்:.... ‘தாங்கிக் கொள்ளுங்கள் தங்க மனதுடன்’. வடிவேலுவ உரசினா மாதிரி செங்கல வெச்சி தேய்க்கவா. நல்லா கெளப்புறாய்ங்கப்பா பீதிய.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நசரேயன்: வலைமனை: என் கனவில் தென்பட்டது. கனவுலகூட தென்பட்டதுதானா. சிக்கினதுன்னு மாத்திபாருங்க. துண்டுக்கு வேலை வரும்.

வலை அறிமுகம்: .... ‘நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் வரை உயரும்’. ஏன் நாசால பேசி ராக்கட் உடாமலே சந்திரன் செவ்வாய்க்கெல்லாம் போய்க்கலாம்னு லீஸ் போட்டுடீங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தினேஷ்: வலைமனை: ‘முகிலனின் பிதற்றல்கள்’ முகிலன்: ஏங்க? எல்லாம் பெரியவங்க! தினம் இவ்வளவு பேரு வந்து போறீங்க. அப்பா பேரு சொல்லி பசங்க பொட்டி கடையில ஆட்டைய போட்டா அது அழகு. எம்பேர வெச்சிகிட்டு எங்கப்பா பிதற்றினா எடுத்து சொல்லாம அருமை அருமைன்னு பின்னூட்டம் போடுறீங்களே! வெக்கமாயில்ல. அவ்வ்வ்வ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மணிஜி: வலைமனை: மணிஜீ (எ) தண்டோரா: அண்ணே! என்னா இந்த வெயில் காலத்துல மார்கழிமாச பனில நனைஞ்சா மாதிரி கொஞ்ச நாளா சொத்து சொத்துனு கேக்குது. வார இழுத்து புடிச்சி காச்சுங்கண்ணே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
TVR: வலைமனை: தமிழா தமிழா... ஆரம்பிச்சப்போ பெருமையா இருந்திருக்கும். இப்போ கொஞ்சம் சலிச்சிண்டு சொல்றாமாதிரி ஆக்கிப்புட்டானுவ இந்த அரசியல் வியாதிங்க.

அறிமுகம்:  ‘ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்’
ஒன்று எங்கள் ஜாதி : பதிவர் ஜாதி
ஒன்று எங்கள் நீதி : கவுஜக்கு எதிர் கவுஜ இடுகைக்கு எதிர் இடுகை
நம்மால் முடியாதது யாராலும் முடியாது: ஐ. நான் சொல்லமாட்டனே.
யாராலும் முடியாதது நம்மால் முடியும்: பின்னூட்டமும் காசு வாங்காம ஓட்டும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதுசரி: வலைமனை: முரண் தொடை : தமிழ்பட வில்லன் மாதிரி கன் நீட்டிகிட்டே இருக்குபாஸ். புல்லட்தான் எப்பவோ ஒன்னு வருது. LMGயாவது போடுங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ப்ரியா: வலைமனை: கலகலப்ரியா.. நீ மட்டுமா நாங்களுந்தான். ரெம்ப நாளாச்சி கலகலப்பே காணோம்.

அறிமுகம்: லக்கலக்கலக்கலக்க..ம்கும். அப்புடியாவது ஒன்னு ரெண்டு போட்டா தேவலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வானம்பாடிகள்: வலைமனை:  ‘பாமரன் பக்கங்கள்’. இப்புடியே சொல்லிட்டு திரியற வானம்பாடி! என்னைக்கோ உன்ன சூப்பு வச்சிறப்போறாங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(டிஸ்கிக்கி: மக்கா. அல்லாத்தையும் புடிச்சி எழுதிட்டேன். இனிமே மொக்க தேத்த வழியில்ல. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி புதுசா ஏதாவது வழி பண்ணுங்க. புண்ணியமா போவும். ச்ச்ச்ச்செரியா?)
~~~~~~~~~~~~~~~~~

Sunday, April 25, 2010

நறுக்குன்னு நாலு வார்த்த V4.6

இந்திய மருத்துவ கவுன்ஸில் இயக்குனர் 2 கோடி லஞ்சம் வாங்கும்போது பிடி பட்டார்..செய்தி.

ஓ. இத வச்சித்தான் வளரும் நாடுன்னு சொல்றாய்ங்களோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மருத்துவ கவுன்ஸில் இயக்குனர் வீட்டில் ரொக்கப் பணம் 1800 கோடி சிக்கியது.

பாப்ரே பாப். சேட்டு பேர கெடுத்துட்டானே. வட்டி போச்சே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இயக்குனர் வீட்டில் 1500 கிலோ தங்கம் பறிமுதல்.

ஊட்ல எல்லாம் துணிக்கு பதில் நகையாத்தான் போடுவாங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முக்கிய தலைவர்களின் டெலிபோன் ஒட்டுக் கேட்கப் பட்டது.

அங்க கூடவா போன் பேசுவாய்ங்க. அய்யே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இனி உங்களை வள்ளல் கருணாநிதி என்றழைப்பதில் பெருமை கொள்கிறோம். மாற்றுத் திறனாளிகள் வாரியத்துக்கு 45 லட்சம் வழங்கியதற்கு பத்திரிகையாளர் பாராட்டு... செய்தி

இதத்தான் குடுத்த காசுக்கு மேலயே கூவறதுங்கறதோ!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் திருத்தியமைப்பு: ஆலோசகராக கனிமொழி எம்.பி. நியமனம் 

வாட் பத்திரிகையாள்ஸ்! இப்ப என்ன சொல்லி அழைப்பதில் பெருமை கொள்ளுவீங்க?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஐபிஎல் சூதாட்டத்தில் 27 வீரகளுக்கு தொடர்பு.

அடங்கொன்னியா! சூதாடினா வீரன் பட்டம் தராய்ங்களாம்டா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
துருவித் துருவிக் கேட்கும் கேள்விகளுக்கு காலம் பதில் சொல்லும் என்கிறார் நித்தியானந்தா.

முக்காலமும் அறிந்தவர்னு காட்டிக்கிறாரோ!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெங்காயம், காரமில்லாத உணவு கேட்டார் நித்தியானந்தர்.

எது கேட்டாலும் குடுப்பீங்களாய்யா? லேகியம்?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிடுக்கிப் பிடி கேள்விகளுக்கு தூக்கம் வருது என்று பதில் சொல்கிறார் நித்தி.

கேள்வியக் கேளு தூக்கம் வரட்டும்னு சொல்லுவாரு. கேளுங்கப்பா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பதில் சிக்கல்: நவீன் சாவ்லா?

ஓட்டு காசு அன்னியச் செலாவணில கேப்பாய்ங்கன்னா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
80 வயது கணவனை விவாகரத்து செய்யும் 12 வயது மனைவி.

திருடுனா கை வெட்ற நாடு இல்ல அது?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நித்யானந்தாவுக்கு உண்மை கண்டறியும் சோதனை!

அதுக்குதானே ஆஸ்ரமம் வெச்சான் அந்தாளு. மொத்தப் பேரும் போய் சிஷ்யனாய்ட்டீங்களா என்னா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரஞ்சிதாவை விசாரிக்க மாட்டோம். செய்தி

விருது விழா எதும் வருதுங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விடுதலைப்புலி தலைவர்களை நாடு கடத்தினோம்: மலேசிய அமைச்சர் திடுக்கிடும் தகவல்

ஓ. தேர்தல் முடிஞ்சி அறுவடைக் காலமோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பொருளாதார மந்திரியானார் ராஜபக்சே சகோதரர்

அதாஞ்சரி. வந்தது போனதுக்கு கணக்கு வேணாமா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அமிதாப்புடன் சென்றால் எட்டப்பன் பழி வந்தே தீரும்

அப்ப தனியா போறீங்களா? என்னமோ எட்டப்பன்னா எட்டிக்காய் மாதிரி என்னா சீனு?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்திய திரையுலகம் ராஜபக்சே கையால் விருது பெறுவதா? பழ.நெடுமாறன் கண்டனம்

அட அவன் எத்தி விட்டாலே பொறுக்கிட்டு வருவாய்ங்கய்யா. 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கைது செய்யப்பட்ட தமிழர்களை மலேசியாவிலேயே தங்கவைக்க இந்திய அரசு வற்புறுத்த வேண்டும்! திருமா

அடுத்த ஊர்க்காரனுக்கு அட்வைசு சொல்றதுல நம்மள அடிச்சிக்க ஆளில்ல. ஏன் நீ கூப்டுக்கன்னா என்ன பண்றது தெருமா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Friday, April 23, 2010

கேரக்டர் - சுந்தரம்

இந்த டாய்லட்ல ஆம்பிளைங்கன்னு அடையாளத்துக்கு ஒரு உருவம் போட்டிருக்கும் பார்த்திருப்பீங்களே. வெறப்பா தோளும் கையுமா.அப்புடி ஒரு உருவம் நெசமாவே நடந்து வந்தா எப்படியிருக்கும்? அதும் ஒரு லயமா தோளக் குலுக்கி, தலைய வெட்டி, கோழி நடக்குறப்ப கழுத்து முன்னுக்கும் பின்னுக்கும் போகுமே அப்புடி ஒரு வெட்டு, க்கும்னு ஒரு சவுண்டுனு நடப்பாரு. இவருதாங்க நம்ம சுந்தரம்.

அஞ்சடி ரெண்டங்குலம் இருப்பாரு. சம்மந்தமே இல்லாம அகலமான முதுகு, நீளமா கையி. சிவப்புன்னு சொல்லுற நிறம். மொத மொத அவர பார்த்ததே டாய்லட்ல. இருக்குறது ரண்டு வாஷ் பேசின், ஒன்னுல குழாயில்ல, இருந்த ஒன்ன முழுசா தொறந்தாரு. வெயிட் லிஃப்டர் ஒரு பந்தாவா குனிஞ்சி பின்னாடி ஆட்டி ஆட்டி கம்பிய புடிச்சிகிட்டு தலைய தூக்கி பார்ப்பாரே. அப்புடி இவரும் சாவதானமா அட்ஜஸ்ட் பண்ணி நின்னு கன்னாடி பார்த்தாரு. வலப்பக்கம், இடப்பக்கம், கொஞ்சமா குனிஞ்சி, அப்புறம் மேலாலன்னு பார்த்தாரு.

பாக்கட்டுள்ள கடுதாசில மடிச்ச ஒரு சாம்பிள் சோப் எடுத்து செட் பண்ணாரு. நாறுனாலும் பரவால்லடே! என்னா ப்ளானுன்னு பார்க்காம போறதில்லைன்னு நின்னுட்டேன். ஒரு பத்து நிமிஷம் முகத்த கழுவறதும், சோப்பு அப்புறதும் திரும்ப கழுவறதும்னு போச்சு. கைக்குட்டைய எடுத்து முகம் தொடைச்சாரு. சரி முடிச்சிட்டாருன்னு நான் ரெடியானேன். பின்னாடி கைய விட்டு சீப்பு எடுத்தாரு. கழுவுனாரு. திருப்பி கழுவினாரு. உதறினாரு. திரும்ப கழுவினாரு. கர்சீப்ல துடைச்சாரு. தலைய சீவோ சீவுன்னு சீவினாரு.

திரும்ப கழுவி, திரும்ப உதறி ஒரு வழியா பாக்கட்டுக்குள்ள அனுப்புனாரு. அப்பாடா முடிச்சான்னு நினைச்சேன். ம்ஹூம். சோப்ப எடுத்து உதறி, அதே வெண்ணெய் பேப்பர்ல மடிச்சி பாக்கட்டுள்ள போட்டாரு. கை கழுவினாரு. உதறினாரு. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா. ஆச்சுடான்னு நினைச்சேன். ம்ஹூம். திரும்ப குழாய் கீழ கைய வெச்சு கட்டை விரல் நகத்தால மத்த விரல் நகம், மத்த விரல் நகத்தால கட்டை விரல் நகம்னு கழுவினாரு.

மொத்தமா ஒரு 20 நிமிசம் போயிருக்கும். பிரிய மனமில்லாம கண்ணாடிய பார்த்தபடியே போனாரு. யாருன்னு பார்த்தா புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கிறாருன்னாங்க. பயபுள்ளைக்கு ஏதோ ஃபோபியா போலயே. ஆளு ராசா மாதிரி இருக்கானேன்னு நினைச்சிட்டே வேலைய பார்க்க போனேன்.

மதியம் சாப்பாட்டுக்கு கை கழுவ போனா ஒரு ரகளையே நடக்குது. ஒரு பத்து பேருகிட்ட சாப்பாட்டு டப்பா, கை கழுவ நின்னுட்டிருக்க நம்ம ஐய்யா நகம் கழுவிட்டிருக்காரு. யாரு சொன்னாலும் சட்ட பண்ணல. பதில் சொன்னா சண்ட போடலாம். ஒன்னுமே பேசாம நடத்திட்டிருக்கிறவன என்ன பண்ண?

அப்புறம் ஐய்யா இருந்தா வேற குழாய் தேடி போக ஆரம்பிச்சிட்டாங்க. ஊட்டுல பெருசுங்க இருக்கே. புள்ள இப்புடி இருக்கானேன்னு பார்க்கமாட்டாங்க? அத உட்டு போட்டு ஒரு ஏமாளிப் பொண்ண புடிச்சி கட்டிவச்சிட்டாங்க. பயபுள்ள இன்னும் பாலிஷ், இன்னும் பளபளன்னு ஆய்ட்டாரு. ஒரு நாள் ஆபீஸ் வந்தவரு கையெழுத்தும் போட்டுட்டு பாலீஷ் பண்ண போனாரு. ரொம்ப கோவமா அதிகாரிட்ட வந்து எனக்கு லீவ் வேணும்னாரு.

என்ன அர்ஜண்ட்? கையெழுத்து போட்டாச்சில்ல. மதியமா போ அரை நாள் லீவ் போட்டுன்னா, கோவமா இல்ல நான் போணும்னு அடம் புடிச்சாரு. என்னய்யா அப்புடி அவசரம்? வேலைய பாருன்னாங்க. இல்ல எம் பொண்டாட்டி பனியனுக்குள்ள மிளகாய்த்தூள் கொட்டி வச்சிட்டா. அவங்க அப்பன் ஊட்டுக்கு கூட்டிட்டு போய் நாயம் கேக்கணும்னு பிடிவாதம் புடிச்சாரு.

ஒழிஞ்சி போன்னு அனுப்பி விட்டாங்க. போனவன் ரெண்டு நாள் கழிச்சி வந்தான் இளிச்சிகிட்டே. என்ன நடந்துச்சின்னா அன்னைக்கு வெள்ளிக்கிழமை. அந்தம்மா குளிச்சி முடிச்சி சமைச்சிட்டிருக்க அய்யா குளிச்சிட்டு ட்ரெஸ் பண்ணிட்டிருக்காரு. தலை சரியா துவட்டலைன்னு தங்கமணி சொல்லிச்சாம். துவட்டிவிடுன்னு வழிஞ்சதுல பனியன்ல அந்தம்மா பூசியிருந்த மஞ்சள் அப்பியிருக்கும் போல. ஆபீஸ் கிளம்பி வர, வியர்வைல நனைஞ்சி  பனியன்ல சரியா அலசாத சோப்பும் மஞ்சளும் சேர்ந்து சிவப்பா தெரிஞ்சது போல.

இவரு லீவ் போட்டு வீட்ல போய் என்ன ஏதுன்னே கேக்காம ரெண்டு அப்பு அப்பி, பஸ் புடிச்சி மாமனார் ஊருக்கு இழுத்துட்டு போக சாயுங்காலம் ஆகிப்போச்சி. அழுது வீங்கின முகமும், அசுர பார்வையில மாப்பிள்ளையும் பார்த்து அரண்டு போய்ட்டாங்களாம். இவரு பராசக்தி ரேஞ்சுக்கு வசனம் பேசி, அனுமார் மாரைப் பிளந்து உள்ள சீதா ராமனைக் காட்டினா மாதிரி சட்டையை பட்டன் தெறிக்க பிச்சி காட்டினா மஞ்ச மஞ்சளா இருக்கு.

மாமனார் தலையில அடிச்சிகிட்டு, மாக்கான்னாலும் மாப்பிள்ளையாச்சேன்னு விருந்து போட்டு அனுப்பியிருக்காரு. ஹி ஹி. நாந்தான் தப்பா நினைச்சிட்டேன்னு வந்து எல்லார்ட்டையும் வழிஞ்சாரு. கடவுள் ஏங்கறவங்களுக்கு குழந்தையில்லாம சாவடிக்கறதும், இந்த மாதிரி ஏப்பராசிங்களுக்கு இந்தா புடின்னு கொடுக்கறதும் சகஜம்தானே. குழந்தை பிறந்துச்சி. ஆம்பிள்ளை சிங்கம்னு போய் பார்த்துட்டு வந்து, லீவ் போட்டு பேரு வைக்க, புண்ணியா வசனம்னு போனாரு.

போய் பார்த்தா பழைய சீலைய தூளியா கட்டி போட்டிருந்தாங்களாம். அப்புடித்தான் எல்லா வீட்டிலையும் நடக்கும், தொட்டில் இல்லைன்னா. பார்த்த மாத்திரத்துல இவருக்கு வந்திச்சி கோவம். விசுக்குன்னு கடைவீதிக்கு போய் காடாத்துணி வாங்கிட்டு வீட்டுக்குள்ள வந்து, எம்புள்ளைய பழைய சீலையில போடுவியா? இந்தா புதுத்துணி.  இதுல போடுன்னு தகறாரு. பண்ணியிருக்காரு. அவங்க பதறிப்போய், அடக் கடவுளே பொறந்த குழந்தைக்கு புது காடா துணில தொட்டில் போடக்கூடாதுப்பான்னா மாமனார ஒரு அப்பு, பொண்டாட்டிய ஒரு அப்புன்னு அப்பி, அப்புறம் அங்க இருந்தவங்க புடிச்சி உலுக்கி, பன்னாடையே, இறந்து போன குழந்தையதாண்டா அப்புடி தூளிமாதிரி கட்டி கொண்டு போவாங்கன்னு சொன்னா அப்புறம் புரிஞ்சது அய்யாக்கு.

தங்கமணி புள்ளைய பாப்பாளா இந்த புண்ணாக்க பாப்பாளா? தன்னை கவனிக்கறதே இல்லைன்னு ஒரு மனக் குறை. அது வியாதியாகி சண்டை. எங்க தன்னோட சண்டை போட்டு கோவத்துல புள்ளைய கொன்னுடுவாளோன்னு சந்தேகம். வேலைக்கு கிளம்பறது சர்ப்ரைஸா போய் செக் பண்றது. லீவ் போட்டு போய் செக் பண்றதுன்னு வங்கொடுமையாகிப் போச்சு. அப்பவும் யாருக்கும் இவன டாக்டர் கிட்ட கொண்டு போகணும்னு தோணலை.

ஆஃபீஸ்லயும் காலைல வருவாரு. கோல்ஃப் ப்ளேயர் குழிகிட்ட பால் நின்னா சுத்தி சுத்தி குறி பார்க்குறா மாதிரி டேபிளை சுத்தி சுத்தி வச்சிட்டு போனது அப்புடியே இருக்கான்னு பார்ப்பாரு. அரை மணிநேரம் இப்படிப் போகும். அப்புறம் சமாதானமாகி, எல்லாம் எண்ணி சரி பார்த்து, காஃபி வர குடிச்சிட்டு தூங்கிடுவாரு. பன்னிரண்டரைக்கு எழுந்து முகம் கழுவிட்டு சாப்பிட்டு வந்து அரட்டை அடிச்சி, ரெண்டு ரெண்டரைக்கு டீ வர குடிச்சிட்டு தூங்கிடுவாரு.

நாலரை மணிக்கு எழுந்து முகம் கழுவி, ஃபைலெல்லாம் அடுக்கி, திரும்ப கோல்ஃப் ப்ளேயர் மாதிரி சர்வே பார்த்துட்டு வீட்டுக்கு கிளம்பிடுவாரு. என்ன ? வேலையெல்லாம் அப்படியே நிக்குது? இப்படியெல்லாம் தூங்கக்கூடாதுன்னா, ஒரு மாதிரி சிரிச்சபடி வைஃப் மருந்து வச்சிட்டா. அது ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கும்போது மயக்கமா இருக்குன்னு சொல்லுவாரு.

ஹி ஹி. இப்புடியே கிட்ட கிட்ட அதே சீட்ல 15 வருஷம் ஓட்டிட்டாருங்கோவ். இவரு கொடுமை தாளாம பொண்டாட்டி டைவர்ஸ் பண்ணிடிச்சி. இப்பவும் வீட்டுல இருக்கிறவங்க இவருக்கு ஒரு வைத்தியம் பார்க்கலாம்னு நினைக்கல போல. எவ்வளவு சுத்தமா கழுவிட்டிருந்தாரோ இப்போ நேர் மாறா, குளிக்காம, சில நேரம் பத்து நாள் ஒரே ட்ரெஸ்ஸோடன்னு வராரு. தூங்குறாரு. சில நேரம் ஏதோ ஒன்னு ரெண்டு வேல குடுத்தா பார்ப்பாரு.

என்னத்த சொல்ல? சில நேரம் பாவமா இருக்கும். டாக்டர பாருப்பான்னு ஒரு வாட்டி ஆலோசனை சொன்னேன். நான் என்ன மெண்டலா சார்னாரு. இல்லப்பா நாந்தான்னு விட்டுட்டேன்.

Thursday, April 22, 2010

நறுக்குன்னு நாலு வார்த்த V 4.5

ந‌ளி‌னி அறை‌யி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் ‌திடீ‌ர் சோதனை: செல்போன் பறிமுதல்

post planned or pre planned sorry paid sir?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கைக்கு செல்லும் அகதிகள் குறித்து சர்வே?

அட! இது வேறயா. நடத்துங்கடா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரபாகரன் தாயார் பற்றி பேச சுப்பிரமணியம் சாமிக்கு எந்த அருகதையும் இல்லை: திருமாவளவன்

ஏன்! அவன விட சூப்பரா உளர்ரீங்க பாஸ். டோண்ட் ஒர்ரி. ஓரம் கட்டிடலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ராஜபக்சேவுடன் நடிகர் அமிதாப்பச்சன் சந்திப்பு

தேங்க்ஸ் சொல்லவா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பா‌ர்வ‌தி அ‌ம்மா‌ள் ‌திரு‌ப்‌பி அனு‌ப்ப‌ப்ப‌ட்டது ஏ‌ன்? வைகோ

ரொம்ப முக்கியம். உங்க முட்டாள்தனத்தாலன்னு தெரியுமுங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இனி யாரும் என்னை கைது செய்ய முடியாது:சீமான்

ஐய். இருக்கீங்களா பாஸ். என்னா சவுண்டுடா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஆஆமீய்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போலீசார் என் தோள் பட்டையை பிடித்து கையை முறுக்கினர்:வைகோ

க்ரிப்பு வேணாமா? 10 மணிநேரம் அந்தம்மா எவ்வளவு வலி தாங்கியிருக்கும் பாஸ்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பெங்களூர் கொண்டு வரப்பட்ட நித்யானந்தா சிறையில் அடைப்பு

டேய் உசாரு. கதவைத் திறந்து வை! காத்து வரட்டும்னு சொன்னா திரும்ப ஏமாறாதீங்க
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கலைஞர் தலைமையில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பாராட்டு விழா

தலைமையேற்றதுக்கு எப்போ பாராட்டு விழா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோவில் நிலங்களை குடியிருப்போருக்கு சொந்தமாக்கக்கூடாது: பாஜக

அதானே! அப்புறம் நிர்வாகம் எப்படி ஆட்டைய போடுறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நடிகை ரஞ்சிதாவுக்கு போலீசார் வலை

நித்தியானந்தா தியானத்துல கண்டறிஞ்சி சொல்ல மாட்டாருங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அழகிரி ஏன் மக்களவைக்கு வருவதில்லை? எதிர்கட்சிகள் கேள்வியால் கூச்சல்,குழப்பம்

என்ன கேட்டாலும் ஏக் காவ்ன் மே ஏக் கிசான் ரகுதாதாதான் சொல்லுவாரு. பர்ர்ர்ர்ர்ர்வால்லயா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை!?

சன் டிவிக்காரன் சொல்லலையா பாஸ். நக்கீரன் வீடியோல என்னமோல்லாம் சொன்னாய்ங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Wednesday, April 21, 2010

வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே..




சிறிது நாட்கள் முன்பாக இந்தக் காணொளிக்கான சுட்டி எனக்கு மின்னஞ்சலில் வந்தது. பார்த்துப் பரவசப்பட்டுப் போனேன். நண்பர்களுக்கு பகிர்ந்தேன். அதற்குள் அது நீக்கப்பட்டிருந்தது. மீண்டும் ஒரு சுட்டியில் இது கவனத்துக்கு வந்தது. தேடித் தேடி கண்டுபிடித்தும் விட்டேன்.

தமிழுக்கு அமுதென்று பேர். செந்தமிழ்நாடெனும் போதினிலே என்றெல்லாம் சிலாகிக்கப்படும் மொழியின் அற்புதம் கண்டேன். எத்துணை அழகான தமிழில் எவ்வளவு உணர்வுபூர்வமாக கேட்போர் உருகும் வண்ணம் பேசுகிறார் திரு சுகி சிவம். கட்டிப் போடுகிறது தமிழ். உள்ளுணர்வு வரை போய் உலுக்கி எடுக்கிறது. 

என்னதான் காசுக்குப் பேசினாலும் இப்படியும் பேசமுடியுமா? மொழியின் அழகால் விஷம் ஊட்டும் அழகே அழகு. பெயரிலேயே சுகி! சுகித்திருப்பவர் என்றும் ஒரு அர்த்தம் உண்டல்லவா? யாரோ அழைத்து ஈழத்தைச் சுற்றிக்காட்டியிருக்கிறார்கள். முக்கியமாக யாழ்ப்பாணம் போனாராம். அவர்கள் சொல்லச் சொன்னதாகச் சொல்லி வேண்டுகிறார். சொல்லாததையும் சொல்லி வியக்க வைக்கிறார்.

தானே எழுதினாரோ, எழுதிக் கொடுத்ததைப் படித்தாரோ தெரியாது. என்ன ஒரு சிந்தனை? என்ன ஒரு தெளிவு? சுகி சிவம் ஐய்யா! மனிதனுக்கு மறதி வரம்தான். ஆனால் இது மறக்ககூடிய வலியில்லை ஐயா! ஊடகத்தைப் பாருங்கள். அத்தனை உயிர்கள் போனபோது ஒரு செய்தியும் காட்டாத ஊடகம் உருகி உருகி இப்படி ஒரு நிகழ்ச்சியைத் தருகிறது பாருங்கள்.

ஐயா சுகி சிவம் அவர்களே! யாழ்ப்பாணம் போனீர்கள் சரி. சண்டைக் காலத்திலேயே அங்கு ஓரளவு சகஜ நிலை இருந்ததே ஐயா. இப்போதும் அவர்கள் பயப்படுகிறார்கள் என்கிறீர்களே. என்ன ஒரு கொடுமை இது. அவர்கள் பூமி. அவர்களும் ப்ரஜைகள். பயந்து வாழும் அவலம். அப்படியென்றால் என்ன ஒரு ஆட்சி நடக்கிறது அங்கே. 

சண்டை முடிந்த பிறகும் இப்படித்தான் வாழ்கிறார்கள் என்றால் என்ன கொடுமை இது? பழைய கதையைப் பேசக்கூடாதாம். சுகி அய்யா சொல்கிறார். வாஸ்தவம். பேசிவிட முடியுமா? எத்தனை உயிர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆனால் பாருங்கள் சுகிசிவம். முதல்வர் கூட பார்வதி அம்மாள் விடயத்தில் டெசோ, சந்திரகாந்தன் பற்றியெல்லாம் பேசித் தொலைகிறார். சண்டிவியையோ உங்கள் பொன்னான கருத்தையோ அவரே மதிப்பதில்லை.

மன்னன் எவ்வழி! மக்கள் அவ்வழி! ஆல் த மீஜிக் ஸ்டார்ட்.

எப்படி எப்படி சுகி சார். ஓடிப் போனவர்களா? ஒரே ஒரு புலம் பெயர்ந்த தமிழனிடம் பேசி இருக்கிறீரா? விரும்பியா ஓடினார்கள்? இருக்கும் இடம் சொர்க்கமேயானாலும், அவர்கள் மனதில் அவர்கள் மண்ணுக்கான ஏக்கமல்லவா இருக்கிறது? ஒரு புனிதத் தலத்துக்கு போவதற்காக தவமல்லவா இருக்கிறார்கள்.

அட போராட்ட காலத்தில் சின்னஞ் சிறுசுகளின் பேட்டி பார்த்தீர்களா?அந்த மண்ணைப் பார்த்தேயிராத பிஞ்சுகள். உணர்வு பூர்வமாக எம்மண்ணுக்குத் திரும்புவோம் என்றபோது சிலிர்த்துப் போயிற்று.

சண்டைக்காலத்தில் ஓடிப்போனவர்களாம். என்ன ஒரு எள்ளல். உங்கள் தெருவில் ஒரு சோடாபாட்டில் உடைத்தால் நடுத்தெருவுக்கு வந்து என்னவென்று கேட்பீர்களா ஐயா? முதலில் கதவடைத்துவிட்டு உள்ளேயல்லவா இருப்போம். 

பாதி வகுப்பில் குண்டு வீச்சு, சந்தேகத்தின் பேரில் கடத்தல், விசாரணையென்ற பேரில் சித்திரவதை, வயது வந்த குழந்தையை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ திருமணம் செய்து கொடுப்பது என்ற கட்டாயச் சூழலில் வாழும் நிலை ஏற்பட்டால், ஓடாமல் என்ன ஐயா செய்ய முடியும்?

என்னதான் மூன்று தலைமுறையாக நகரத்தில் பிழைத்தாலும், உங்கள் பூர்வீக கிராமத்தில் அல்லது ஊரில் இருக்கும் நிலமோ, வீடோ உங்களுக்காக உழைத்த, அட வேண்டாம் ஊரென்றிருந்தால் உறவொன்றிருக்குமே வழியின்றி! அதற்கு கொடுத்துவிட்டீர்களா? பூர்வீக கிராமத்தில் நிலம் வீடெல்லாம் இருக்கிறது. விடுமுறைக்கு போய் வருவது என்று ஒரு வழமையே இருக்கிறதே நம்மிடம். 

அதையெல்லாம் கொடுக்க மறுக்கிறார்களாம். யாரிடம் கொடுப்பது? சமூக அமைப்புகளிடம். சமூக அமைப்புக்கு. ஐ.நா. போன்ற அமைப்புக்களிடம் அங்கீகாரம் பெற்ற அமைப்புக்களுக்கு கொடுக்க வேண்டுமாம். அவர்கள் அங்கிருப்பவர்களுக்கு உதவுவார்களாம்.

மருந்து கிடைக்கவில்லை அங்கே என்று வருத்தப் பட்டீர்களே. ட்ட்ட்ட்டச் பண்ணிட்டீங்க சார். உலகெங்குமிருந்து மருந்தும் உணவும் வந்ததே. கொடுக்க விட்டார்களா? யாராவது முன்னெடுத்து கொடுக்கத்தான் செய்தார்களா?

செஞ்சிலுவைச் சங்கத்தையே ஆட்டிப்படைத்ததய்யா. மக்களுக்காக உழைத்த அமைப்புக்களுக்கு முத்திரை குத்தி விரட்டியது. இவர்களிடம் ஒப்படைத்தால் மக்களுக்குப் போகுமாம். நீர் தருகிறீரா உத்திரவாதம்? ஏன் அங்கிருக்கிறவர்கள் போருக்குமுன் எங்கிருந்தார்கள்? ஆகாசத்திலிருந்தா குதித்து விட்டார்கள்? இருந்த இடத்தில் அவர்களை வாழவிட என்ன தடை?

உலகெங்கும், அவர்களின் மீள் குடியமைப்புக்கு கொடையாக, கடனாகவென்று வாங்கிய காசெல்லாம் எங்கே போயிற்று? அருமையாயகச் சொன்னீரைய்யா. அவர்கள் வாழ கோழி, ஆடு, மாடு, வலை எல்லாம் வேண்டுமாம். ஏன் அங்கு படித்தவர்கள் இல்லையா? அவர்களுக்கு வேலைத் தரச் சொல்லுங்களேன். படிக்க பள்ளி கட்டித் தரச் சொல்லுங்களேன். தமிழர் பிள்ளைகளுக்கு கல்வியை இலவசமாக வேண்டாம், சலுகையில் தரச் சொல்லுங்களேன். ஆடு கோழி வளர்த்துதான் தமிழன் வாழ வேண்டுமா?

அஞ்சி அஞ்சி வாழ்கிறார்களாம். அரசோடு ஒத்துப் போக வேண்டுமாம். எப்படி? இப்படி அச்சத்திலேயே வாழவிடு. நாங்கள் கொட்டிக் கொடுக்கிறோம். அவர்களைக் கொல்லாமல் விட்டால் சரியென்றா? 

கடைசியில் சொன்னீர்களே! சீனாக்காரன் அங்கு உறவாடுகிறான். நம் எல்லை குறித்த அவதானிப்பு மிக முக்கியம். அதனால் அரசியல் பேச வேண்டாமென்று. அதனால் அங்கிருக்கும் தமிழர் பலிகடாவாக இருக்கத்தானே வேண்டும். ஆட்டை வளர்த்துத்தானே அடித்து விருந்து வைக்கவேண்டும். இப்படி ஓர் வாழ்க்கைக்காகத்தானே இவ்வளவு போராட்டமும் இல்லையா ஐயா. 

காசு வாங்கியாச்சி. பேசியாச்சி. அந்த நாள் உங்களுக்கு இனிய நாளாகப் போச்சு. நல்லா இருங்கய்யா. உங்களை வளர்த்த தமிழும், உங்கள் வாழ்வாதாரமான ஆன்மீகமும் உங்களை வாழ்த்தும். என்ன எழவு. பாரதி குறித்தெல்லாம் பொங்கி பொங்கி பேசியிருக்கிறீர்களே. உறுத்தாது? பாரதி கண்முன் வந்தால் இந்த பேச்சுக்கப்புறம் தின்னும் சோறு நரகலாயிருக்காது?

ஹி ஹி. ஒரு கேள்வி. இந்த நிகழ்ச்சியை பதிர்வதற்கு கார் வராவிட்டால், காசு தராவிட்டால் போயிருப்பீர்களா? அதென்ன சார் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் சன் டிவியில் மட்டும்தான் பேசவேண்டும் எனச் சத்தியம் வாங்கிக் கொண்டார்களா என்ன? 

 ஐயா அவர்களை அமெரிக்கத் தமிழ் விழாவுக்கு அழைத்திருக்கிறீர்களாமே. இந்தியத் தமிழரோ ஈழத் தமிழரோ அய்யாவோடு ஒரு சந்த்திப்புக்கு வழி செய்து புலம்பெயர் வாழ்வின் வலியைப் புரியச் சொல்லுங்கள். புண்ணியமாய்ப் போகும்.

(பொறுப்பி: ஏதோ எழுத ஒன்றுமில்லாமல் எழுதியதில்லை இது. உலகின் மனிதர்கள் இருக்கும் ஒரு மகோன்னத தேசத்தில் எந்தக் கவலையும் இன்றி சுகித்து வாழும் வழியிருந்தும் தன் மண்ணை, தன் மக்களை நொடியும் மறவாமல் அவர்களுக்காக அழுது, அவர்களுக்காக உழைத்து, அவர்கள் நல் வாழ்வுக்கு தன் சுகத்தை அர்ப்பணித்து, முடிந்தவரை அவர்களுக்கு உதவும் கலகலப்ரியாவுக்கும் அவரைப் போன்ற இதரப் புலம் பெயர்ந்தும் தன் மண்ணை நேசிக்கும் சொந்தங்களுக்கு, இப்படி ஒன்றுமறியாமல் கூலிக்கு மாரடிப்பவர்களின் சார்பில் நான் கோரும் மன்னிப்பு இது)
~~~~~~~~~~

Tuesday, April 20, 2010

கேடு வரும் பின்னே..மதி கெட்டு வரும் முன்னே...

மதிப்பிற்குரிய (?) டோண்டு அவர்களுக்கு,

பார்வதி அம்மாளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விஷயம் என்னும் உங்கள் விஷத்தைப் படிக்க நேர்ந்தது என் துர்பாக்கியம். முதன்முறையாக உங்களுக்கு பின்னூட்டமும் மைனஸ் ஓட்டும் போட்டேன். என் எதிர்ப்பைத் தெரிவித்தாகிவிட்டது என்று மட்டு மட்டாக நான்கு மணி நேரம் இருந்து பார்த்தேன். முடியவில்லை.

சோவுடன் கை கோர்த்து எங்கே பிராமணன் என்று அப்புறம் தேடலாம். அதைப் பார்த்தும், இப்படி ஒரு வக்கிரமான இடுகை எழுதி என்ன கண்டீர்கள்?  ஒரு பசுமாடு வயலில் மேய்வதை தடுக்கக் கூடாது என்று சொல்லும் அதே மனுஸ்ம்ருதி எப்போது அதைத் தடுப்பது பாவம் இல்லையென்றும் சொல்லியிருக்கிறது.

/அவரவர் தத்தம் முந்தைய நிலைக்கேற்ப எதிர்வினை புரிகின்றனர்./

இது உங்கள் பிரமாணம். நம்பியிருப்பீர்கள் இதில் ஒவ்வொரு வார்த்தையையும் என நம்புகிறேன். அப்படியானால் குறித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய எதிர்வினைக்கு இப்போதே கவலைப் படுங்கள்.

/புலிகளின் ஆதரவாளர்கள்? பிரஸ் மீட்கள் வைத்திருப்பார்கள்./

இப்போது நீங்கள் சொல்லும் ஆதரவாளர்கள் ப்ரஸ்மீட் வைப்பதே இல்லையா சார்? ஒரு தனிப்பட்ட மனுஷிக்கு மருத்துவ உதவி தேவை எனில் ப்ரஸ்மீட் வைக்கக் கூடாது என்று எங்காவது சட்டம் இருக்கிறதா? கார்கிலில் சண்டை துவக்கிய முஷாரஃப் ப்ரஸ்மீட் வைக்கக் கூடாது என்றா இங்கு வரவிட்டீர்கள்?

சீக்கியர்கள் ப்ரஸ்மீட் வைப்பதில்லையா? இந்திராவைக் கொலைசெய்தது தவறில்லை என வாதிடும் சீக்கிய மதத்தினருக்கு இந்தியாவில் வைத்தியம் கிடையாது என்றா சொல்லுவீர்கள்?

/தனது பாசமிக்க மகனை நினைவில் இருத்தி அந்த பெண்மணி அழுவாச்சி பேட்டிகள் தந்திருப்பார்/

உங்கள் வயதுக்கு இப்படி ஒரு எள்ளல் அழகா? வார்த்தைகளுக்கு சக்தி உண்டு . அபலையான ஒரு வயதான மூதாட்டியை நீங்கள் செய்த இந்த எள்ளலுக்கு எங்கு போய் முட்டிக் கொண்டாலும் பரிகாரம் கிடையாது.

/அவரது பாதுகாப்புக்கென ஒரு கணிசமான தொகையை நமது அரசுகள் செலவழிக்க வேண்டியிருக்கும்./

ஒரு மொள்ளமாறி முடிச்சவிக்கி கேடிக்கும், கோவிலில் கூத்தடித்த நாய்க்கும் இந்த அரசு தான் செலவு செய்கிறது மிஸ்டர் டோண்டு. பிள்ளையார் ஊர்வலம் என இல்லாத ஒரு சம்பிரதாயத்துக்கு எத்தனை கோடி செலவாகிறது. சொல்லுங்களேன் உங்கள் ராமகோபாலனுக்கு.

/ஒரு முறை உள்ளே வந்தவரை வெளியில் அனுப்பவும் முடியாது முழி பிதுங்கியிருக்கும்./

அனுமதியோடு வந்தவரை மறுக்க முடியும். அனுமதிகாலம் முடிந்த பிறகு அனுப்புவதா கடினம்? இல்லை அடைக்கலம் கேட்டால் மறுக்க என்ன காரணம் வைத்திருக்கிறீகள். அதைச் செய்ய யார் தடுக்க முடியும்? ஊகத்தால் ஒரு அவமானத்துக்கு சப்பை கட்டு கட்டப் பார்க்காதீர்கள்.

/எப்படியானாலும் பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே அல்லது யாருமே நமக்கு வேண்டாம்./

இப்போதைய அரசியல் தலைவர் யாருமே வேண்டாமா? யாருக்குதான் சம்பந்தமில்லை. தெரியாமல் கேட்கிறேன், உங்களுக்கு யார் சார் இந்த அதிகாரம் கொடுத்தது?

/நல்ல வேளையாக பிரபாகரனின் பிணத்தைக் கூட கண்ணில் காட்டாது எரித்து விட்டார்கள்./

இவ்வளவு வக்கிரம் பிடித்தவரா நீங்கள்? ஒரு படிப்பறிவில்லாத, நாகரீகம் அறியாத மனிதன் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய ஒரு உயிரினம் கூட சத்தியமாக இப்படி நினைக்காது.

/இல்லாவிட்டால் அவருக்கு நினைவாலயம் அமைக்கும் கூத்தெல்லாம் நிறைவேறியிருக்கும்./

நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் சார். நினைவாலயம் வைக்க குறைந்த பட்ச தகுதி எதுசார்? நினைவாலயம் இருக்கிறவர்கள் எல்லாம் அதற்குட்பட்டவர்கள் என்று சொல்லுவீர்களா? எந்த விதத்தில் அந்த மனிதன் நினைவாலயத்துக்கு தகுதியில்லாமல் போனார்? இத்தனை வெறுப்புக்கு காரணம் என்ன சார்?

/ஆகவேதான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருக்க வேண்டும்./

இது உங்கள் ஊகமா சார். விசா கொடுக்குமுன்னர் இந்த ஞானம் இல்லையா? உங்கள் எழவு நியாயம் நியாயமாகவே இருக்கட்டுமே. அலைக்கழிக்காமல் இருந்திருக்கலாமில்லையா? ரொம்ப சாமர்த்தியமாக இது பற்றி வாயே திறக்கவில்லையே நீங்கள்?

/மாநில அரசு தன்னிச்சையுடன் இதை பின்பற்றியதோ அல்லது வேறு வழியின்றி பின்பற்றியதோ எதுவாயினும் ஒரு அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கப்பட்டது./

பாருங்கள் சார். உங்களுக்கு தெரிந்திருக்கிறது. நீங்கள் சொல்லவில்லை என்றால் , முதல்வர் இது குறித்து தனக்கோ தன் அரசுக்கோ தெரியாது என்று சொன்னதை நம்பித் தொலைத்திருப்போம். அதென்ன சார் அசம்பாவிதம். எனக்குத் தெரிந்து இதில் நடந்த பெரிய அசம்பாவிதம் இப்படி ஒரு அரைவேக்காட்டு விஷம் கக்கினதுதான். இல்லை இது சம்பாவிதமோ? ஓரளவு துணிச்சலான, உண்மைக்கு போராடும், ஒரு மனிதன் என்று நினைத்திருந்த ஒருவருக்குள் எவ்வளவு வக்கிரம் இருக்கிறது என வெளிக்காட்டியது இச்சம்பவம்.

/சிலரது நாடகத் தன்மை மிக்க செயல்பாடுகளுக்கு தீனி போட்டதாக அமைந்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வு முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது நல்லதுக்குத்தான்./

உண்ணாவிரத நாடகம் நடந்தபிறகு நீங்கள் இப்படி கொண்டாடியோ கண்டித்தோ எழுதினது கவனமில்லை சார். நாடகமில்லாத அரசியல் இருக்கா சார்?

கொஞ்சம் யோசித்தால், அந்தம்மணியை திருப்பி அனுப்பியதற்கு காரணம் நீங்கள் சொன்னபடியே பார்த்தாலும் அவர்கள் இல்லை. நாம்தான் இல்லையா சார். இதற்கு அவர்களைத் திருப்பி அனுப்பியதற்கு நாம் சந்தோஷப்பட வேண்டுமா இல்லை வெட்கப்பட வேண்டுமா?

ஒரே ஒரு சுனாமி, ஒரு பூகம்பம், யாரையும் கேட்டு வராது சார். திருப்பி அனுப்ப முடியாது. மேல கூரை, நிம்மதியா படுக்க மெத்தை, எங்கே பிராமணன் பார்க்க டி.வி. எதுவும் இருக்காது. பிதுங்க பிதுங்க காசு வெச்சிருந்தாலும் பொட்டலம் விழுமான்னு ஏங்கி நிக்கணும். எங்கே பிராமணன்னு தேடிக் கொண்டுவந்து எவனும் போட மாட்டான்.

பூணல், திருமண், பட்டை, அரணாக்கயறு, தொப்பி, சிலுவை எதுவும் நிக்காது. கதியத்துப் போன ஒரு கூட்டம். யாராவது மனசிறங்க மாட்டாங்களா, ஒரு துண்டு ரொட்டி கிடைக்காதா? ஒரு வாய் தண்ணி கிடைக்காதான்னு அலையணும். பெத்த பிள்ளைக்கு கிடைச்சாலும் புடுங்கித் தின்ன சொல்லும் கொலை செய்தாவது.

மனுசனா இருக்கப் பார்க்கலாமே சார். இடுகை போட எவ்வளவோ விஷயம் இருக்கு. இந்தப் பிழைப்பு ஏன்? சத்தியமாக உங்கள் வாரிசுகள் படித்தால் உங்கள் மேல் வைத்திருக்கும் மரியாதை கொஞ்சமாவது காணாமல் போயிருக்கும். இந்தக் காலத்துப் பிள்ளைகள் கொஞ்சம் மனிதம் கற்றிருக்கிறார்கள் சார். நாம் அதை நாசம் செய்யாமலாவது இருப்போமே. இந்த அற்ப சிந்தனை நம்மோடு போகட்டுமே!

வருத்தத்துடன்

வானம்பாடிகள். 

பாலே நடனக்காரன்..

தொடர்ந்தாற்போல் கதிர் இரண்டு மூன்று ஒளகப் படங்களைப் பார்த்து இடுகை போட்டதோடன்றி தொலைபேசியிலும், சிலாகிப்பதைக் கேட்டு ஒருமாதிரியான குற்றவுணர்வு இருந்துக் கொண்டேயிருந்தது. என்னையறியாமலே என் கை முகத்துக்கு நேராகப் போவதும், ஒரு விரல் நெற்றியைச் சுட்டிக் காட்டும் நேரம் மனதுக்குள் ஒளகப்படம் பார்காத நீயெல்லாம் பதிவரா என்ற மனசாட்சியின் டார்ச்சர் வேறு. 

கூகிளாரை வேண்டியதில் பக்கம் பக்கமாக சுட்டிகள் வந்தாலும், என்னையுமறியாமல் பார்க்கத் தோன்றியது ஒரு ரஷ்யமொழித் திரைப்படம்.

Балерина

‘பாலே நடனக்காரன்’ என்ற ரஷ்ய மொழித் திரைப்படத்தைக் காணும் பேறு எதிர்பாராமல் கிட்டியது. அமோரோவ்ஸ்கியின் மிகச் சிறந்தபடம் என கூகிளார் சர்டிஃபிகேட்டும். கொடுத்திருந்தார். சப்டைட்டில் இல்லாத குறையேயின்றி அருமையான நடிப்பினால் கட்டிப் போட்டு விடுகின்றனர்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த காலகட்டம் அது. உக்ரைனின் ல்விவ் என்ற ஊரில் ரஷ்யாவின் மிகச்சிறந்த பாலே நடனக் கலைஞர் சான்ட்ரோவ்ஸ்கி. அவரின் பாலே பள்ளியில் பயில உலகெங்குமிருந்தும் மாணவர்கள் ஏங்குவார்கள். அவர் மகள் கடென்கா. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? அவளும் மிகச் சிறந்த பாலே நடனக்காரி.  சாண்ட்ரோவ்ஸ்கி திடீரென பள்ளிப் பொறுப்பிலிருந்து விடுபட்டு, முடங்கிப் போகிறார். மகளின் முன்னேற்றமும் புகழுமே அவருக்கிருக்கும் ஒரே ஆறுதல். 

இன்னோரு ஊரான வின்னிட்சாவில் சற்றேறக் குறைய இதே அளவு பிரசித்தமான பள்ளியின் நடன ஆசிரியை கந்திச்சா. அவள் மகன் ரெமோஸ்கியும் சிறந்த பாலே நடனக்காரன். 

ல்விவ்வில் நடக்கும் பள்ளி பட்டமளிப்பு விழாவில் ஆட ரெமோஸ்கி குழுவுடன் செல்கிறான். நிகழ்ச்சியில் வெகு சிறப்பாக ஆடியமைக்காக அவனுக்கு பரிசும் பாராட்டும் கிடைக்கிறது. குழுவினருடன் குஷியாக கிளம்பும் ரெமோஸ்கி கடென்காவைச் சந்திக்கிறான். முதல் பார்வையிலேயே மனதைக் கொள்ளையிட்ட கடென்கா ரெமோஸ்கியின் நடனம் குறித்து நக்கலடிக்கிறாள்.

அவள் தோழிகளும், ரெமோஸ்கியின் குழுவினரும் அவரவர் குழுவை சிலாகித்துப் பேச இறுதியில் ரெமோஸ்கியும் கடென்காவும் போட்டியாக நடனமாடி எவர் பள்ளி சிறந்தது என்று தீர்மானிக்க முடிவாகிறது.

கடென்கா அவமானப் படுத்தினாலும், அவளின் துடுக்கும், அழகும் ரெமோஸ்கியை நிலைகுலைய வைக்கிறது. விரைவிலேயே கடென்காவும் தான் ரெமோஸ்கியை காதலிப்பதை உணருகிறாள். 

சாண்ட்ரோவ்ஸ்கியின் அழைப்பினை ஏற்று டின்னருக்குச் செல்லும் ரெமோஸ்கி உணவுக்குப் பிறகு பேசிக் கொண்டிருக்கையில் கந்திச்சாவை பற்றி அறிகிறார். ரெமோஸ்கியின் பர்சிலிருக்கும் புகைப்படத்திலிருந்து சண்டைக்காலத்தில் காணாமல் போன தன் தங்கை என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சியடைகிறார்.

கடென்காவின் சகோதரியின் கணவனுக்கு கடென்காவின் மீது காதல். அவனுக்கு கடென்கா ரெமோஸ்கியை காதலிப்பது தெரியவந்ததும் கொதித்துப் போகிறான். அவளை எப்படியும் அடைந்தே தீருவதென திட்டம் தீட்டுகிறான்.

கடென்கா ரெமோஸ்கி காதல் வெற்றி பெற்றதா, அவர்களிடையேயான நடனப் போட்டி, அவள் அக்காள் கணவரின் சதி என்னவானது என்றெல்லாம் முழுக்கதை சொல்லி ஒரு சிறந்த படத்தை கொச்சைப்படுத்துவது சரியல்ல.

ஆரம்பம் முதல் விறுவிறுப்பாக, இயற்கைச் சூழலில் மனித மனப் போராட்டம், காதல், சதியென்று கதையை நகர்த்திச் செல்லும் விதம் சொல்லத் தரமன்று. பொதுவாக ஒளகத் திரைப்படம் என்றாலே சீரியஸ் என்ற முத்திரையைத் தகர்த்தெரிந்து, ரெமோஸ்கியின் குழுவில் இருக்கும் கந்தர், மண்டோவாஸ்கி, சரல்யேவோ ஆகியோரின் முக்கோணக் காதல், அவர்கள் அடிக்கும் லூட்டி வயிறுகுலுங்கச் சிரிக்கவைக்கும். 

அருமையான நடனக் காட்சிகளும், மனதை மயக்கும் இசையும் டைரக்டர் அமரோவ்ஸ்கியின் கைவண்ணத்திலேயே என்பது நம்மை இன்னும் வியப்புக்குள்ளாக்குவது நிச்சயம். 

அனைவரும் பார்க்கவேண்டிய படம். பார்க்க விழைவோருக்கான சுட்டி இதோ.

(டிஸ்கி:இல்ல தெரியாம கேக்கறேன், முதல் ரெண்டு பாரா படிச்சதுமே இது கரகாட்டக்காரன் மாதிரி இருக்கேன்னு தெரியாம இவ்வளவு தூரம் படிச்சிட்டு சுட்டிய வேற அமுக்குறீங்களே. உள்ளூர்ப்படம் பாருங்க மொதல்ல. அப்புறம் ஒளகப்படம் பார்க்கலாம். ச்ச்ச்செரியா. ஆட்டோ அனுப்பற வேலையெல்லாம் வேணாம். )

Sunday, April 18, 2010

பத்திரிகாவிரதை...

தலைவர் பதிவிரதாத்தனத்தை சுட்டி யாரை வேண்டுமானாலும் நக்கலடிக்கலாம். கால் நக்கும் ஊடகங்கள் காட்டும் பதிவிரதாத்தனத்தை பாராட்டாமல் இருக்கவே முடியாது.

இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. மீண்டும் ஒருமுறை பார்வதி அம்மாளை முன்வைத்து கல்லாக்கட்ட தொடங்கிவிட்டன கட்சிகள். போராட்டங்கள், பொறுப்பற்ற குற்றச்சாட்டுகள் என்று தொடங்கி விட்டார்கள். கோமாளி கூட குரல் எடுத்து அலறிவிட்டான். பதில் சொல்ல வேண்டியவர்களோ வாயே திறக்கவில்லை.

யார் வீட்டு படுக்கையறையிலோ புகுந்து நம் வீட்டு ஹாலில் சல்லாபக் காட்சியைக் கட்டவிழ்க்கும் ஊடகமோ, பாலியல் குற்றங்கள் எங்கே எப்படி நடைபெறுகின்றன என்று விலாவரியாகச் சொல்லிக் கொடுக்கும் ஊடகமோ, இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் என்பதைக் கொச்சைப் படுத்தி நீலப்படம் விற்கும் நியாயவாதிகளோ சசி தரூரைக் கவிழ்ப்பதிலும், சாமியார் சல்லாபக் கணக்கிலும் மும்முரமாகி விட்டார்கள்.

அய்யகோ! என்னை மரியாதையின்றி கருணாநிதி என்று சொல்லிவிட்டார் என்று யாரும் கேட்காவிட்டாலும் தானே கேள்வி கேட்டு பதில் சொல்பவர் ஐ.பி.எல். மேட்ச் குத்தாட்டம் ரசிப்பதில் வாயடைந்து விட்டார்.

தனி ஈழம் பெற்றுத் தருவேன் என்று அந்தர் பல்டியடித்தவர் ஒன்றும் கேட்டதாகக் காணோம்.

இரண்டு கல் விழுந்தவுடன் ’அய்யோ! அடிக்கறா! காப்பாத்துங்கோ’ என்று நீதிபதியின் பின் ஒளிந்த ஜந்து உளறிக் கொட்டியதை கட்டம் கட்டிப் போட்டு பெருமைப் படுத்தியாகிவிட்டது.

மிசா காலத்தில் எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் எனக் கதறிய ஊடகங்கள் இப்போது எதற்கு அடிமைப்பட்டுப் போயின? தேடித் தேடி அமைதிப் படையின் அத்துமீறலையும், ஃபோஃபார்ஸ் ஊழலையும் பத்தி பத்தியாய் விற்று இன்வஸ்டிகேடிவ் ஜர்னலிசம் என்று மார்தட்டிக் கொண்ட பத்திரிகைகளுக்கு ஏன் சம்பந்தப் பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு வெளியிடத் தோன்றவில்லை.

அது அவர்கள் தார்மீகக் கடமை என்பதை விட அவர்கள் போராடிய உரிமையல்லவா? சிண்டு முடிந்து பேட்டி எடுத்து கல்லாக் கட்டுவதுதான் பத்திரிகை தருமமா? அரசு தடை விதித்தால், அடக்குமுறை எனக் கொதித்துப் போகும் ஊடகங்கள், அத்தனை பேரும் எந்த அடிப்படையில் செய்தியை மறைக்கிறார்கள்?

ஊடகங்களின் எஜமானர்கள் மக்களல்லவா? செய்திகளைத் திரட்டிக் கொடுப்பது மட்டுமே அவர்கள் வேலை. அதற்காக பொறுப்பற்ற முறையில் அனைத்தையும் சொல்லியாக வேண்டிய அவசியமும் இல்லை. ஒரு நாட்டின், ஒரு மாநிலத்தின், ஒரு ஊரின் அல்லது ஒரு அப்பாவிக் குடிமகனின் பாதுகாப்புக்கு ஊறு ஏற்படும் செய்திகளைத் தவிர மற்ற எந்தச் செய்தியையும் மறைப்பதற்கோ, திரிப்பதற்கோ பத்திரிகைகளோ ஊடகங்களோ யார்?

மக்களின் கவனத்தைச் சிதறடிக்கவும், சிற்றின்பத்தில் மூழ்கடிக்கவும், விளம்பர கல்லாக் கட்டலும் தாண்டி நம்மை முன்னிறுத்தி, கவர் கலாச்சாரம் வரை போய்விட்டதாக ‘வடை போச்சே’ ஊடகங்களின் மூலமாவது தெரியவருகிறது.

நாமும் யாருக்கு என்ன நடந்தால் என்ன?  எவனாவது எதையாவது கொடுக்கிறானா? அது குறித்த தகவல் வந்திருக்கிறதா? எந்த ஊர் தேர்தலில் எவ்வளவு கொடுத்தார்கள் என்பது குறித்தே படித்துப் பழகிவிட்டோம்.

ஒரு காலத்தில் கட்சியின் கொள்கைகளைச் சொல்ல கட்சிப் பத்திரிகைகள் நடத்த வேண்டிய அவசியம் இருந்தது. இப்போதோ ஆளும் கட்சியின் பொது ஜனத் தொடர்பாளர்களாகவே அனைத்து ஊடகங்களும் மாறியதோடல்லாமல் நம்மையும் மூளைச் சலவை செய்யும்  வேலையில் போட்டி போடுகின்றன.

நான் கொடுக்கிற காசுக்கு நன்றாக மலமிளக்கும் பத்திரிகையைத் தேர்வு செய்வது நானாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய, மனச்சிக்கலும் அதனால் மலச்சிக்கலுக்கும் ஆளாகும் துர்பாக்கியம் தமிழனுக்கு ஏன்?

நேற்றைய பேப்பரை காசு கொடுத்து வாங்கிப் படிக்கிறானே அண்டை மானிலத்தவன், அவன் பத்திரிகை இப்படியா ஜால்ரா அடிக்கிறது? நித்தியானந்தர் வீடியோ மீண்டும் ஒளிபரப்பும் நேரம் என டிக்கர் ஓட்டிய ஊடகம், இந்த விடயத்தை எத்தனை முறை நினைவு படுத்தியது?

நமக்கான ஆட்சியைத் தேர்ந்தெடுப்பதில் எத்தனை அடிப்படை உரிமை இருக்கிறதோ நமக்குத் தேவையான செய்தியை தேர்ந்தெடுப்பதிலும் அதே உரிமை நமக்கு வேண்டாமா?

யேய்! நீ கேளேன். நீ கேளேன் மாதிரியாவது தெரிந்தவர் தெரியாதவர் அனைவரிடமும், ஒரு நாள் பத்திரிகை வாங்காமல் இருங்களேன் என்று போராடிப் பார்த்தால் என்ன? கவரையும், விளம்பரத்தையும் இன்ன பிற கிளுகிளுப்பையும் நம்பி ஊடகம் யாருக்கென்று நடத்த முடியும், நாம் புறக்கணித்தால்?

(டிஸ்கி: ஈயத்தப் பார்த்து இளிச்சதாம் பித்தளைன்னு எங்கள சொல்ல வந்துட்டியா வானம்பாடி! நித்தியானந்தனையும், சாருவையும் சாடி எத்தனை பதிவு வந்தது? பார்வதி அம்மாளுக்கு நடந்த கொடுமைக்கு எத்தனை பேரு இடுகை போட்டீங்கன்னு துப்புங்க எசமான் துப்புங்க)

Saturday, April 17, 2010

டமிலன் என்றொரு இனமுண்டு

மீண்டும் ஒரு முறை (இரு?) டமிலன் என (ப்+எ)ருமையுடன் சொல்லிக் கொள்ளலாம். (சொரணையத்துப் போனப்புறம் ‘ப்’ ஒரு கேடா). வந்தாரை வால வைக்கும் டமிலகம் இனி டமிலனென்று சொல்லடா தலை குனிந்து நில்லடாவென மார்பிலல்ல மண்டையில் அடித்துக் கொள்ளலாம். செந்டமில் மாநாட்டில் ‘குடுத்த காசுக்கு மேலயே கூவுறாண்டா கொய்யா’ என்ற சொற்றொடருக்கு தகுந்த மதிப்பளித்து அரசின் தலையாய கொள்கையாக அறிவித்தலும் வேண்டும்.

என்னமோ கள்ளத்தோணி, கள்ள ரயில், லாரியில் வந்தாற்போல் மத்திய அரசு கொடுத்த விசா இருந்தும், உடல் நலமற்ற ஒரு மூதாட்டியைத் திருப்பி அனுப்பியதன் மூலம், டமிலனின் செஞ்சோற்றுக்கடன் செம்மையாகவே காட்டப்பட்டிருக்கிறது. இதற்கொரு விழாவும் எடுக்கலாம். 

சற்றும் எதிர்பாரமல் திடீரென நடந்த ஒரு விடயமாயிருக்க முடியாது. குறைந்த பட்சம், இங்கு வந்தால் விசா இருந்தாலும் அனுமதிக்க முடியாத சூழ்நிலை என்று விளக்கியிருந்தாலாவது அலைச்சலாவாது அந்த மூதாட்டிக்கு இல்லாமல்  இருந்திருக்கும். 

மருத்துவத் தேவைக்கு என்று வந்தவரை திருப்பி அனுப்பி டமிலரின் பண்பாட்டை நன்றாகவே  காப்பாற்றிவிட்டோம். மனதிருந்தால் மார்க்கமில்லாமலா போயிருக்கும்?

ஒரு வேளை முதல்வர் அறியாமல், அல்லது அவரை மீறிய செயெலெனில் இந்த ஒரு மனிதாபிமான செயலுக்காவது அனைவரையும் ஒன்று திரட்டி தமிழீன்ற தாய்க்கு நன்றிக்கடன் செலுத்தலாம். செந்தமிழுக்குமே கூட.

அடுத்ததாக டமிலரின் பண்பாடான பதிவிரதை சர்டிஃபிகேட். கூடிய விரைவில் அரசு பதிவிரதை சர்டிஃபிகேட் கட்டாயமாக்கலாம். பகுத்தறிவு, சுயமரியாதை மண்ணாங்கட்டி எல்லாம் ஒன்றுமே கிடையாது. பதிவிரதைக்கான கையேடு வழங்கும் விழா வெகு விரைவில் நடைபெறக் கூடும். இனி டமில் பெண்கள், காலையில் கணவனின் பாதத்தைக் கும்பிட்டு, பாத பூஜை செய்து, எச்சில் தட்டில் சாப்பிட்டு, டாஸ்மார்க் சரக்கு கலந்து கொடுத்து பதிவிரதை சர்டிஃபிகேட் வைத்திருக்க வேண்டும். (பதி டிக்கட் வாங்கின கேசுக்குன்னு யார்பா நக்கலடிக்கிறது?)

டமில் நாட்டில் பெண்களுக்கு எவ்வளவு உயரிய மரியாதை வழங்கப் பட்டிருக்கிறது, ஈனம் மான காவலரால். குறைந்த பட்சம் நண்பர் நண்பர் என்று தேவைப்படும்போது சொல்லிக் கொண்டதற்காவது இறந்தவரைத் தரக்குறைவாகப் பேசாமல் இருந்திருக்கலாம். 

ஆனால், ஜெயலலிதா, தான் கணவராக வரிந்து கொண்ட, தான் தலைவராக வருவதற்கு காரணமாக இருந்த, சர்வாதிகாரத்துடன் கட்சியை நடத்த காரணமாக இருந்த எம்.ஜி.ஆர்., உடல் நலம் குன்றி இருந்த போது அவருக்காக பிரார்த்தனை செய்யாமல் அவரை பதவியில் இருந்து நீக்கி விட்டு, தன்னை அந்தப் பதவியில் அமர்த்தும் படி சொல்லும் அளவிற்கு பதிபக்தி இல்லாமல் இருந்தவர்’

வயது முதிர்ந்த ஒருவர், ஒரு இனத்தின் காவலன் எனக் கூறப்படும் ஒருவர், ஒரு முதல்வர், தேவையேயில்லாமல் ஒரு பெண்ணை இப்படிப் பேசுவது டமிலனின் சிறப்பில்லாமல் வேறென்ன? டமில்நாட்டில்தான்  இது நடக்கும்.

விரைவில் என் தலைவன் சொல்லட்டும்டி நீ பதிவிரதைன்னு என்று டாஸ்மாக் ஏற்றிக் கொண்டு உதைத்தால் போலீசுக்கு கூட போகமுடியாது என்னும் நிலை வரலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Friday, April 16, 2010

பதிவர் தத்துவம்ஸ்...

டிஸ்கி: (ரண்டு நாளா ஒரே அழுவாச்சி. வீக் எண்ட்ல எதுக்கு மூட கெடுக்கணும்னு இந்த மொக்கை. ஒவ்வொருத்தரு வலைப்பூவிலயும் என்னா தத்துவம்டா சாமீ!)

பழமைபேசி:/எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையணும்!/

என்னதான்  இரவிரவா வலைமேஞ்சாலும் நித்திரைக்கு போறப்ப ஜிமெயில்ல ஏதாச்சும் பின்னூட்டமிருக்கானு பார்த்து அவுத்துவுட்டுதான் தூங்கணும்.

மணிஜீ: /நானும் கொஞ்சம் பேசுகிறேன்..../

தாடிக்குள்ள வாயசையறது தெரியமாட்டங்குதாங்ணா.

பின்னோக்கி: /பின்னோக்கி பார்ப்பது தவறல்ல. அது முன்னோக்கி நடக்கும் போது தவறு களைய உதவும்/

பின்னாடி பார்த்துக்கிட்டே போய் ஒரு வாட்டி மேன்ஹோல்ல விழுந்தப்புறம் திரும்ப அந்த தப்பு நடக்குமா? எப்புடீஈஈஈ

ஸ்நேக் பிரபா: /பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட, வாழும் சில நாட்களில் இன்பத்தையும் துன்பத்தையும் கலந்து சந்தித்தாலும், துன்பத்தை மறந்து இன்பத்தை மட்டும் நினைந்து நல்ல இதயங்களை சேர்த்து, சேர்ந்து வாழ்வோமே!.... பிரபாகர்./

ங்கொய்யால. வரும்போதே க்ரூப் சேர்க்கறதுங்கற தீர்மானத்தோடதான் வந்தீரோ?

பலாபட்டறை ஷங்கர்: /பலா என்றால் இனிப்பு. பட்டறை என்றால் பட்டறைதான் - விளக்கம் = ஷங்கர் (நாந்தான்). /

விளக்கத்துக்கே விளக்கம் அடைப்புக்குள்ளயாம்யாம்யா

கதிர் ஈரோடு: /நகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர்/

ஓஹோ. கட்டைன்னும் சொல்லலாம் மரம்னும் சொல்லலாம். நகரத்துல இருக்கிறப்ப காதல் கவுஜ கிராமத்து பக்கம் போனா மரம் வளர்க்கற இடுகை. என்னா வில்லத்தனம்டா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாமீ

பாலாசி: /சொல்லும் அளவிற்கு அறியப்படவில்லை./

தபார்ரா. உள்ளூரு ஓணான் இல்லாம அசலூரு ஆந்தையெல்லாம் அலறுதாம் பாலாசி வாரான் கட் அண்ட் பேஸ்ட் போடன்னு ரவுசப்பாரு.

நசரேயன்: /தமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு/

ம்கும். துண்டு போடத் தெரியலைன்னாலும் இடுகை போடுறதுல என்னா உசாரு! தப்பெழுதுவியான்னு முட்டிய தட்டுவாங்கன்னு தடிய எடுக்க கூடாதாம்.

ஜெட்லி & கோ: /நாம் அன்றாடம் வாழ்வில் பார்த்து, படித்து, கேட்டு ரசித்தவற்றை இங்கே பகிர்வோமாக./

பாக்குறவரு ஜெட்லி, படிக்கிறவரு சாரு சங்கர், கேட்டு சொல்றவர் சித்துவா?

சேட்டைக்காரன்: /ஏன்? பெயர்,வயசு,ஊரு எல்லாம் சொன்னாத்தான் படிப்பீங்களாக்கும்?/

இப்புடி போட்டா மட்டும் சொல்லுன்னு கேட்றுவமாக்கும்.

துபாய் ராஜா: /இங்கு எல்லோருக்கும் இடம் உண்டு./

ஃபாலோயர் விட்ஜட்ட காணோமாம். இப்புடி போட்டா சரியா போச்சா?

செந்தில்வேலன்: /இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று../

ஊறுகா போடணும்னா கனி உதவாதே! ஒதைக்கிற மாட்ட ஊசி போட்டுதானே கறந்தாவணும்.

சூர்யா கண்ணன்: /இப்பொழுது "கம்ப்யூட்டர்" விற்றுக் கொண்டிருக்கிறேன், அவ்வப்பொழுது கீரையும் கூட..,/

கம்ப்யூட்டர் புரியாத மண்டையில கீரையாவது வளத்துக்கன்னா பாஸ்?

கார்த்திகைப் பாண்டியன்: /மதுரைக்காரன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை அண்ணே.../

இதத்தான் பொட்ட்டு வாஆஆங்கறதுன்னு பார்த்திபன் அண்ணா சொல்லிக் குடுத்துட்டாருல்ல. சிக்கமாட்டம்டியேய்.

நைஜீரியா ராகவன்: /நானும் ஒரு கார் வச்சுருக்கேன் சொல்றதில்லீங்களா.. அது மாதிரிதான் இதுவும்.. நானும் ஒரு வலைப்பதிவு வச்சுருக்கேன்னு சொல்றதுக்காக ஒன்னு (ஆ)ரம்பிச்சுட்டேன்../

கார்னாலும் சரி பதிவுன்னாலும் சரி வாரம் ஒரு வாட்டி ஸ்டார்ட் பண்ணி ஒரு ரவுண்ட் வரணும்னே. 

கலகலப்ரியா: /பாரதியின் பரம விசிறி, "ரௌத்ரம்" மட்டும் பழகிக் கொண்டிருக்கும் பயங்கரவாதி!/

ஹி ஹி! இதப்போய் நீ கரப்பான் பூச்சிகிட்ட சொல்லி மிரட்ட, அது பதிலுக்கு மீசைய ஆட்டி உன்னைய வெறுப்பேத்தி டுர்ர்ருன்னு பறந்து வந்து உன் மூக்குமேல உக்காந்துச்சின்னு வைய்யீ..ஹய்ய்ய்ய்யோஓஓஓஓஓஓ ஹைய்ய்யோ

வானம்பாடிகள்: /தினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்/

உன் ‘அவசரத்துக்கு’ நடுவில இந்த மொக்க உன்ன எப்புடி பாதிச்சிது சொல்றா வானம்பாடி.

~~~~~~~~~~~~~~~~

Thursday, April 15, 2010

இட்ட அடி நோக..

‘ராணி! இங்க வாம்மா. வாயெல்லாம் வறண்டு போவுது. ஜில்லுன்னு ஃபிரிட்ஜ்ல இருந்து தண்ணியெடும்மா. இங்க வா! குனி! ம்ம்ம்ம்.ப்ச்.ப்ச்ச்.ப்ச்ச். நல்லாயிருப்படிம்மா. ஒரு குறையும் இருக்காது உனக்கு. மணி பத்தாக போகுதே. சாப்புடும்மா.
‘ஏ வேலக்கார முண்ட. நீயாருடி என்ன தடுக்கறது? கொன்னு போட்டுடுவேன் தெரிஞ்சிக்கோ. குளிப்பாட்ட, சாப்பாடு குடுக்கத்தான் உன்ன கூலிக்கு வச்சிருக்கு. என்னைஅதிகாரம் பண்ற வேல வெச்சிக்காத! 
‘ஏம்மா? கலியாணமாகி 3 வருஷமாச்சிங்கறியே. டாக்டர்ட போய் பாரும்மா. வயசானா புள்ள நிக்கறது கஷ்டம் ராணி.’

இது ஒரு உதாரணம். என்றோ எப்போதோ பேசியவை அல்ல. குறைந்தபட்சம் 2 நிமிட இடைவெளிமுதல் 20 நிமிஷ இடைவேளைகளில் பேசியவை.

டேய்! எழுந்திருடா. திருடன் வந்து பணத்தையெல்லாம் எடுத்துண்டு போய்ட்டாண்டா. நான் பார்த்து சத்தம் போட்டேன். சன்னலுக்கா பூந்து ஓடிட்டான்.

அம்மா தூங்கும்மா. யாரும் வரலை. சன்னல் வழியா எப்படிம்மா ஓடுவான். இது மாடிம்மா. கனவு கண்டிருப்ப தூங்கு.

கட்டேல போறவனே. பொணமாட்டம் தூங்குவ. உனக்கென்ன தெரியும். எடுத்த காச வீசிட்டு போயிட்டான் பாரு. நான் பொய்யா சொல்றேன்.

உடனே எழுந்து, விளக்குப் போட்டு பார்த்து, இல்லைம்மா. எங்கையும் காசு இறையலம்மா. நீயே பாரு. கனவுதான் கண்டிருக்க என்றாலே ஒழிய தூங்க முடியாது. ஒரு நாள், இரண்டுநாள் இந்த விளையாட்டு விளையாடலாம். தினமும் என்றால்? தோ! சத்தம் போடாம படு. எல்லாரும் சண்டைக்கு வராங்க. அம்மால்ல! முடியலைம்மா எனக்கு. கொஞ்சம் தூங்கணும்மா என்றாவது தூங்கத் தோணும்.

ஒரு நாள் ரகசியமாக, ஏய்! இங்க வாடா. திருட்டுக் கடங்காரன் நான் தூங்கறேன்னு என் செயினைத் திருடி வெளிய போட்டு ஒளிஞ்சிருக்கான். அசந்தா ஓடிடுவான். மெதுவா அறைக்கதவை இழுத்து பூட்டிட்டு கத்து என்பவளை என்ன சொல்ல? விடிய விடியக் காத்திருந்து சர்வீஸ் ஏரியாவில் பார்த்தால் செயின் கிடக்கும். தானே போட்டிருப்பாள். அடுத்த நாள் கழுத்தில் செயின் இருக்கும் போதே நாசமாப் போறவனே. என் செயினைத் திருடி வித்துட்டியே. நீ உருப்படுவியா என்றழுபவளை எப்படி சமாதானம் செய்ய?

ஒரு அடி எடுத்து வைக்க முடியாது. நிற்க முடியாது. சிறுநீர் கழிக்க வேண்டுமெனச் சொல்லத் தெரியாது. ஏதோ ஒரு நொடியில், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாய், சீராக நடந்து, ஸ்டூல் இழுத்துப் போட்டு, தாழ்ப்பாளைத் திறந்து விட்டு லேட்ச் திறக்கத் தெரியாத, முடியாத தருணங்களில், என் பொண்ணு கலியாணத்துக்கு போகவிடாம அடைச்சி வெச்சிருக்காளே இந்த வேலைக்கார முண்ட இவளைக் கேட்பாரே இல்லையா என்று அலறியபடி வெட்டிய மரமாய் விழுந்து தலையில் அடிபட்டு ரத்த காயம் உண்டாகும்.

பணிப்பெண் என்ன செய்வாள்? குழந்தை மாதிரி தூக்கியெடுத்து துடைத்து மருந்திட்டு ஏம்மா இப்புடி காயம் பட்டுக்கறீங்க? எவ்வளவு வலிக்கும் என்றால் அழுவதோ அல்லது சலிப்பாய் திட்டிவிட்டால் அடியேய்! ஆடதடி. ஒரு நிமிஷம்! ஒரே ஒரு நிமிஷம். ஊரக்கூட்டி என்ன தடியால அடிச்சி மண்டைய பொளந்துட்டான்னு கத்தினா போலீஸ் என்னைத்தான் நம்பும். தெரிஞ்சிக்கோ என்பவளை என்னதான் செய்ய?

கால் ஊன்றி நிற்பதைப் பார்த்தால் அவ்வளவு லகுவாக இருக்கும். சுவற்றில் ஊன்றியிருக்கும் கை மெதுவே தொட்டாற்போல்தான் இருக்கும். அந்தக் கையை அசைப்பதோ, காலை நகர்த்துவதோ இயலாத காரியம். பின்புறமாக அணைத்து, பாதங்களின் கீழ் மண்ணுளிப் பாம்புபோல் நம் பாதத்தை நுழைத்துத் தாங்கி ஒரே ஒரு இஞ்ச் நகர்த்திவிட்டால் போதும். அப்புறம் நம் பாதத்தை நகர்த்திக் கொண்டுவந்து படுக்கையில் விடலாம்.
ஒரு புறம் ப்ரயத்தனத்தாலும், மறுபுறம் நைந்து நாரான உடம்பை, எங்கேயோ விழுந்து எங்கு ஊமைக்காயம் பட்டுக் கொண்டு, எங்கு வலிக்கிறது என்று கூடச் சொல்லத் தெரியாதவளை குண்டுக்கட்டாய் இப்படி தூக்கிப் போட வேண்டியிருக்கிறதே என்ற வலியாலும், நெஞ்சுக்கூடு வெடிக்கும்.

நம்மையறியாமலே தினம் சிமிட்டுகிறார்போல் ஆயிரக்கணக்கில் எச்சில் கூட்டி முழுங்குகிறோமே. தொண்டைக்குக் கீழ் ஒன்று ஏறி இறங்குகிறதே, அப்படி அந்த தசையை இயங்க மூளை கட்டளையிட மறுத்தால் என்னாகும்? பசிக்குது என்று அழத்தெரியும். வாயில் சோற்றையோ, கஞ்சியையோ வைத்தால் விழுங்கத் தெரியாது. முடியாது. அடைத்துக் கொண்ட குழாய்க்கு பைபாஸ் மாதிரி ஏதோ செய்து அதில் கஞ்சி, ஹார்லிக்ஸ் என்று ஊற்றி எத்தனை வருடங்கள் காப்பாற்ற?

முக்கியமாக, பெட்சோர் வராமல் அவ்வப்போது புரட்டிவிட்டு, நனைத்து விட்ட உடுப்பை மாற்றி, படுக்கையை சரிசெய்து தூங்கச் செய்யும் வேளைகளில், உதடு பிதுங்க முகம் வருடி பாவம்டா நீ என்னும்போது யார் பாவத்துக்கு அழ?

பர்கின்ஸன்ஸ் டிஸீஸ் என்று நடந்து வருவதைப் பார்த்தே கண்டுபிடிக்கும் மருத்துவர் இருக்கத்தான் செய்கிறார். இந்த இழவு அதுதான் எனத்தெரிந்து அவரிடம் நேரத்தே அழைத்துச் செல்லத்தான் நமக்குத் தெரிவதில்லை. நின்னா தள்ளுதுடா என்றால் பி.பி. மாத்திரை போட்டியா, ராத்திரி தூங்கினியா எனக்கேட்கவும், கால் கை எல்லாம் மறத்துப் போகுதுக்கு கோடாரித் தைலமும் வாங்கிக் கொடுத்தால் முடிந்ததா என்ன?

முழங்கால், முழங்கையை மடக்க முடியலை என்றால் ருமாடிசம்!. வயசாச்சின்னா அப்படித்தான். தென்னமரக்குடி எண்ணெய் தேய்ச்சா சரியாயிடும் என்று வேலையைப் பார்க்கத்தானே அய்யா தெரியும் நமக்கு . இப்படியெல்லாம் நோயிருக்கிறதென்று யாருக்கு தெரியும்?

(தொடரும்)

Tuesday, April 13, 2010

கேரக்டர் - வாசு

வாசு வாய்விட்டு சிரித்து பார்த்தது ரொம்பக் குறைவு. ஆனால் கண்ணில் குறும்பு கொப்பளிக்க வாயோரம் லேசாக சுழித்து வாசு ஏதாவது சொன்னால் சுற்றியிருப்பவர்கள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிப்பார்கள். ஜெமினி ஸ்டுடியோவின் இரட்டைக் குழந்தைகள் வைத்திருக்குமே ட்ரம்பட். அதே மாதிரி ‘V'  ஸ்டைலாகப் போட்டு  எழுதும் ‘V.V.Moorthy' என்ற கையெழுத்தே வெகு அழகாய் ஒரு ஓவியம் போலிருக்கும்.

ஐந்தடி ஆறங்குல உயரம் இருக்கலாம், மாநிறத்துக்கும் கொஞ்சம் குறைவு, தீர்க்கமான நாசி, துளைக்கும் கண்கள், தூக்கி வாரிய தலைமுடி, கணீரென்ற குரலில் அப்படி ஒரு மென்மையான பேச்சு எப்படி சாத்தியம் என்றே புரிந்ததில்லை இன்றுவரை.

எட்டு முழ குண்டஞ்சி வேஷ்டி, வெள்ளை ஸ்லாக் சட்டை, ஜிப்பா மாதிரி நான்கு லாக்கர்ட் பட்டன் வைத்தது (வெள்ளியில செயின் கோர்த்து ஒரு செட் வாங்கணும்). காலரில் அழுக்குப் படாமல் ஒரு வெள்ளைக் கைக்குட்டை, சட்டைப் பையில் ஒரு கைக்குட்டை, புத்தக வடிவில் ஒரு வெள்ளி பொடி டப்பி, உள் பாக்கட்டில் கொஞ்சம் காசு. மேல் பாக்கட்டில் ராணுவத்தான் ரிப்பன் மாதிரி, சிவப்பு, கருப்பு, நீல ஃபவுண்டன் பேனா. இடது கையில் கால் தடுக்காமல் வேட்டி நுனியைப் பிடித்தபடி, லாடம் அடித்த கான்பூர் தோல் செருப்பு அல்லது ஏரோப்ளேன் டயர் செருப்பு அணிந்து அலுவலகம் கிளம்பினால் அப்படி ஒரு கம்பீரம். அக்கம் பக்கம் பராக்கு பாராமலே சுற்றிலும் உள்வாங்கும் நேர்கொண்ட பார்வை.

எது செய்தாலும் நேர்த்தி, நிதானம், ஒரு முழுமை. அதுதான் வாசு. சம்ஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி, தமிழ், கொறச்சு மலையாளமும் கூடி ஆயாளு சம்சாரிக்கும். காலையில் குளித்துவிட்டு ஸ்லோக புத்தகம் படிக்கும்போதும், விடுமுறை நாட்களில் பைபிள் அல்லது குர் ஆன் படிக்கும்போதும் ஒரு சின்ன மாறுபாடு கண்டதில்லை. எல்லாமும் ஒரே அலமாரியில் துளி தூசில்லாமல் இருக்கும்.

கோவிலுக்கென்று போனதோ, அல்லது வீட்டிலோ கூட ஸ்வாமிக்கு பூஜையென்று கண்டதில்லை. பண்டிகை நாட்கள் தவிர. காலை மாலை சந்தியாவந்தனம் மட்டும் தவம் போல் செய்வார்.

மூக்குப் பொடி போட்டு உதறிப் பார்த்ததில்லை. கைக்குட்டையில் துடைத்து, மூக்கின் கீழ் வைத்து இடம் வலமாக இரண்டு தீட்டு தீட்டுவார். சட்டையிலோ, வேட்டியிலோ சிந்தினதேயில்லை. மூக்குப் பொடி கைக்குட்டையைத் தானேதான் துவைப்பார். உடுத்தும் துணியில் துளி அழுக்கில்லை, தினம் ஒரு வேட்டி சட்டை எதுக்கு சலவைக்குக் கேடு என்ற தங்கமணியின் தாக்குதலுக்கு எதிர்த் தாக்குதலும் வந்ததேயில்லை.

முனை மழுங்கிய ஹாக்ஸா ப்ளேட் காயலான் கடையில் வாங்கி இரண்டாக உடைத்து, தரையில் மணல் தூவித் தீட்டி, சந்தனக்கல்லின் பின்புறம் விளக்கெண்ணெய் விட்டு இன்னும் கூர் பிடித்து செய்யும் கத்திக்கு முன் சாணை பிடிப்பவன் ஒன்றுமில்லாமல் போவான்.

மைதா மாவு வாங்கி மயில்துத்தம் தூவி பசை செய்து, புத்தக பைண்டிங் செய்தால் புத்தகம் உளுத்துப் போனாலும் அட்டையை எதுவும் துளைத்துப் பார்த்ததில்லை. தன் பிள்ளைகளுக்கேயன்றி, மாமா எனக்கு மாமா என்று வரும் குழந்தைகளின் புத்தகங்களுக்கும் பைண்டிங் செய்து கொடுத்து தங்கமணியின் கத்தலை புறந்தள்ளி அவர்களுக்குக் கொடுக்கும் போது   ‘அய்! நல்லாருக்கு மாமாவில்’ விகசிக்கும் போது அவ்வளவு அழகாயிருப்பார் வாசு.

ஆஃபீஸில் மூன்று மாதத்துக்கு ஒரு முறை தரப்படும் உலர்ந்த மரப்பிசினி, பச்சை, நீலம், சிவப்பு, கருநீலம், கருப்பு பேனா மை மாத்திரைகளை மற்றவர் குப்பையில் போடும்போது இவர் வீட்டுக்கு கொண்டு வருவார். தேங்காய் மூடி தேய்த்து தேய்த்து வழ வழவென்று வைத்திருப்பார். விளிம்பு கூட தேய்த்து சீராக இருக்கும். அதில் பிசினை வென்னீரில் ஊறவைத்து, இங்க் மாத்திரையை பொடித்துக் கலந்து வெயிலில் காயவைத்தால் தோலைப் புண்ணாக்காத சாந்து ரெடி. தேவையான போது ஒரு விரலை நீரில் நனைத்துக் குழைத்து சாந்தாக்கி இட்டுக் கொள்ளமுடியும்.

மாங்கு மாங்கென்று சந்தனம் அரைத்து, வெண்கல உருளியின் அடிப்புறம் தடவிக் காயவைத்து, மூன்று செங்கல் மேல் வைத்து அடியில் ஒரு விளக்கில் புத்தம்புது விளக்கெண்ணெய் விட்டு பஞ்சுத்திரி விளக்கேற்றி அதன் சூட்டிலும் கரியிலும் சந்தனம் கருகியிருக்க, கையை சோப்பு போட்டு கழுவி, கரித்த சந்தனப் பொடியை சுத்தமான காகிதத்தில் உதிர்த்து, சுத்தமான பித்தளைக் கிண்ணத்தில் போட்டு விளக்கெண்ணெயில் குழைத்துச் செய்யும் கண்மையில் கண்கள் குளிர்ந்து போகும்.

பேனாப் பிரியர். கிட்டத்தட்ட நூறு பேனாக்களை இரண்டு சாக்லேட் டப்பாவில் அடுக்கியிருப்பார். ஞாயிறு காலை சாப்பாட்டிற்குப் பின்பு, வென்னீர் வைத்து போன வாரம் கொண்டு போன பேனாக்களைச் சுத்தம் செய்து அடுத்த வாரத்துக்கான பேனாக்களைத் தெரிவு செய்து மை நிரப்பி, சவரம் செய்த ப்ளேடில் நிப்புகளை ஃபைன் ட்யூன் செய்து, பிடித்தமாதிரி எழுதவிட்டு எடுத்து வைத்த பின் சின்னதாய் ஒரு தூக்கம் போடுவார். மாமா பட்டையடிக்குது மாமாக்கும், மாமா கிறுக்குது மாமாக்கும் நிப்பின் பிளப்பில் ப்ளேடை விட்டு என்ன மாயம் செய்வாரோ தெரியாது, சொன்னபடி கேட்கும் பேனாக்கள். எத்தனை நாள் கழித்து எழுதினாலும், வெயில் காலத்திலும் கூட உதறி எழுத அவசியமே இராது.

உருட்டு ரூலரில் எதிர்ப்பக்கம் கோடு போடுதல்  மிகக்கடினம்.  நோட்டுப் புத்தகங்களிலாவது கோடு கோணலாயிருக்கும். இவரிடம் ஆனதேயில்லை. அதிலும் மயிரிழை உருட்டி டபுள்லைன் போடும் அழகே அழகு. அலுவலகத்தில் மேகசின் க்ளப் நடத்தினாலும், புதுப்புத்தகம் தான் படித்த பிறகு என்ற வழக்கம் இருந்ததேயில்லை. வீட்டில் யாரும் தொடவும் கூடாது. கலைமகள், மஞ்சரி மட்டும் தனக்கு ஒரு ஏடு தனியாக வாங்கி முதலில் படிப்பார். தினத்தந்தி யாராவது பிரித்துப் படித்துவிட்டால், இன்னொரு பேப்பர் வாங்கித்தான் முதலில் படிப்பார். 

கந்தசாமி கோவில் அருகில் இருக்கும் நாட்டு மருந்துக் கடைகளில் தேடித் தேடி மருந்து சாமான் வாங்கி வீட்டில் வந்து தானே காய வைத்து, சுத்தம் செய்து உரலில் இடித்து வஸ்த்ரகாயம் (மெல்லிய சல்லாத்துணியில் சலிப்பது) செய்து, நெய்விட்டோ அல்லது வெல்லம் சேர்த்து இடித்தோ செய்யும் ஸ்யவனப்ராசம் சிறு பிள்ளைகளிடையே வெகு பிரசித்தம்.

புத்தகம் முனை மடிப்பது, புத்தகத்தில் கோடிழுப்பது, எச்சில் தொட்டுப் புரட்டுவது, பத்திரிகைகளை ஆளுக்கொரு பக்கம் பிரித்துப் படிப்பது, சாப்பிடும்போது இறைப்பது ஆகியவை பொறுக்கமாட்டார். விழும் ஒற்றை அறையில் நாள் முழுக்க எரியும்.

கர்நாடக சங்கீதத்தில் கொள்ளைப் பிரியம். பிள்ளைகள் படிப்புக் கெட்டுவிடுமென்று ரேடியோ வாங்காமல் இருந்தது மட்டும் ஒரு குறை. மூக்குப் பொடியோ, விதியோ நுரையீரலில் நீர் சேர்ந்து ஃப்ளூரசியாகி ஐந்தடி நடந்தால் இடுப்பைப் பிடித்துக் கொண்டு மூச்சு வாங்கிப் பின் நடந்தபோதும் அந்த கம்பீரம் மட்டும் குறைந்ததே இல்லை.

ஒரு வெள்ளிக் கிழமை இரவில் மூச்சுத் திணறி, ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன பிறகு, பயப்படாம போப்பா. தம்பி தனியா இருப்பான் பார்த்துக்கோ என்றவர், அதிக ரத்த அழுத்ததால் நாளம் வெடித்து இறந்த பிறகும், அரை மணியில் ரிக்‌ஷாவில் உட்கார்ந்தபடியே கம்பீரமாகத்தான் வந்திறங்கினார்.

வாசு! என் பாசமான அப்பா!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Thursday, April 8, 2010

பதிவர்ஃபோபியா பலவிதம்..

(ஓசில ப்ளாக்கர் கிடைச்சது, ஒளிஞ்சிகிட்டிருந்த எழுத்தாளன் எட்டிபார்த்தான்னு எழுத வந்துட்டு, தானே வச்சிக்கிட்ட ஆப்பு, பின்னூட்டத்துல அடிச்ச வேப்பிலை, ஓட்டு படுத்தற பாடு, அறச்சீற்றம், புறச்சீற்றம், குழு கூடி கும்மின்னு பலதுலயும் சிக்கி சின்னாபின்னமாகி, நிச்சயமா ஒரு மனோதத்துவ நிபுணர்கிட்ட போனா கொஞ்ச்ச்ச்சமா கழண்டிருக்குன்னு சந்தேகப்படுற அளவுலதான் இருக்கோம் என்பதில் சந்தேகமில்லை. செல்ஃப் அனாலிசிஸ்ல எனக்கு கலாய்ச்சோ ஃபோபியா இருக்கும் போல தெரியுது. அதனால மத்த பதிவர்கள் ஒரு மனோதத்துவ நிபுணர்கிட்ட போய் பிரச்சனைய சொன்னாமாதிரி கலாய்ச்சிக்க வேண்டிய நிர்பந்தம். ஹி ஹி..)

கதிர்: நல்ல விசயமாச்சேன்னு கண் தானம் பத்தி எடுத்து சொல்லி கிட்ட கிட்ட 85 கண்ணு தானம் வாங்கிட்டங்க. இப்ப என்னன்னா யாராச்சும் தாத்தாக்கு ஜலதோஷம்னு பேசினாலே, கண் தானம் பண்ணிட்டீங்களான்னு கேட்டுப்புடுறேன். கடைக்கு போனா கண்ணைப் பார் சிரின்னு போர்ட் வெச்சிருந்தா லவட்டிட்டு போலாமான்னு வருது. காலையில தூங்கிட்டிருக்க தயிர்க்கார பொம்பள நம்ம பாப்பாவ கண்ணூஊன்னு கூப்டுருக்குங்க. நான் வாரி சுருட்டிகிட்டு தோ வந்துட்டேன்னு ஓட, தங்கமணி கண்ணுல க்ராஃபிக்ஸ் தெரிஞ்சதுங்க. ஹி ஹின்னு சமாளிச்சிட்டு ஆஃபீஸ் கெளம்புறேன், பக்கத்தூட்டு அக்கா பேத்திக்கு சோறூட்டுது. ஒளுங்கா சாப்புடு, இல்லீன்னா கண்ணு புடுங்கற மாமாவ கூப்புடுவேன்னு மெரட்டுது. அதான் வந்துட்டேன். 

டாக்டர்:இது நல்ல விசயந்தான். ஆனாலும் ஃபாலோயர், ஓட்டுன்னு அடிமனசு தாக்கத்துல இன்னும் சிறப்பா செய்யணும்னு வர நம்பரோ ஃபோபியா. அதுனால கொஞ்ச நாளைக்கு கண்ண பார்த்து காதல் கவிதை எழுதுனீங்கன்னா சரியாயிரும். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாலாசி: அதிகாலைச் சூரிய ஒளியில் வரட்டு வரட்டென்ற விளக்குமாற்றின் ஒலியில் சிறுவயது நினைவுகள் சிலிர்தெழ, நடுங்கியபடி எழுந்து, சிறுபறவை ஒலியை ரசித்தபடி, கோபால் பற்பொடி கொண்டு துலக்கி, வெறும்பல்லில் போட்டிக்கு ஒலியெழுப்பி மகிழ்ந்தவாறே நாயர்கடை சென்று மணக்கும் மசால் வடையும், மசாலா பாலும் உண்டு..

டாக்டர்: யோவ்! என்னா?

பாலாசி: இப்ப கொஞ்ச நாளா இப்புடிதாங்க எழுதவருது. எல்லாரும் என்னமோ சாண்டில்யன் பேரன் ரேஞ்சுக்கு ஏத்திவிடுறாங்களா? இன்னைக்கு ஆஃபீஸ்ல மேனஜர்கிட்ட இப்புடி பேசப் போய் உங்க கிட்ட போய் காட்ட சொன்னாருங்க.

டாக்டர்: இது வருணனையோஃபோபியாப்பா. கொஞ்ச நாளைக்கு கவிதை படிக்காம இரு சரியாயிரும். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஷங்கர்: செக்கர் வான் நிறக்காவி அணிந்த பின்னா, கருகருவென தாடி வளர்த்த பின்னா, ஒளகப் படம் பார்த்த தாக்கமா? ஒடுங்கி நின்ற மனதின் ஏக்கமா? போதி மரம் தேடினேன். மீதி மரம் தென்படவில்லை. வெண்ணெய். தோசை. உள்குத்து. வெளிக்குத்து. சென்னை வெய்யிலா கொக்கா?

டாக்டர்: ஒன்னுமே சொல்ல வேணாம். கொஞ்ச நாளைக்கு சாரு சங்கர் கூட பேசாம இருங்க. ஜெட்லீ கூட ஒரு படம் விடாம பாருங்க. கொழப்போமேனியா வந்தமேனிக்கு போயிரும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பழமை: ஆங்கிலம் கலந்து பேசிட்டேன்னு அப்புச்சிக்கு கோவம். உள்ளுக்குள்ள குத்து குத்துன்னு குத்துது. இவனுங்க வேற எம்பேரு பழமைன்னு எழுதுனாகூட படிக்காமலே இதுல உள்குத்து இருக்கான்னு போட்டு கடுப்பேத்துறானுங்க. அன்னைக்கு இடுகை போட்டு லேபில்ல உள்குத்துன்னு போட வச்சிட்டானுங்க..அவ்வ்வ்வ்வ்வ்.

டாக்டர்: இது செம்மொழியோ டெஃபிஷியன்சி சிண்ட்ரோம் பழமை. ஒரு பத்து நாளைக்கு அகராதி, சங்கப்பாடல்னு படிச்சா சரியாயிரும். இதும் ஒரு ஒவ்வாமைதான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முகிலன்:கடவுள் செஞ்சுரி. ரங்கநாதன் தெரு. ராயல் சேலஞ்சர்ஸ். தோஹால நகை. சென்னைல போறப்ப பதிவர் சந்திப்புன்னு கூப்பிட்டா போலாமா வேணாமா? ப்ளேன்ல முகிலன் ஸ்னோல விளையாடலாம்னு அடம் புடிச்சா என்ன பண்ணுவேன்.?

டாக்டர்: இதான் ப்ரச்சனையா? இது டபுள் சேனல் ஊருக்குபோனோ ஃபோபியா. காலண்டர்ல மொத்தமா தேதி கிழிக்க சொல்லுமே. கொஞ்சம் பொறுத்துக்க வேண்டியதுதான். ஊருக்கு போய்ட்டு வந்து இடுகை தேத்தினா சரியாயிரும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அதுசரி:  :O))). கொஞ்ச நாளா யுனைடட் அராப் ஏர்லைன்ஸ்ல ஏறிட்டு, ஷிவாஸ் ரீகல், ஹலால் பண்ணாத சிக்கன், போர்க் சாப்ஸ்னு ஆர்டர் பண்ணி அவிங்க அதெல்லாம் இல்லன்னா, சரி நான் வெச்சிருக்கேன் செர்வ்பண்ணுன்னு வெறுப்பேத்தணும் போல வருது. அந்தரத்துலயே எறக்கி விட்ருவானா டாக்டர்? :O)))

டாக்டர்: இதுக்கு கொழுப்போஃபோபியான்னு பேரு. கொஞ்ச நாளைக்கு வெறும் மோர்க்குழம்பு சாதம் சாப்டா சரியாயிருவ!

அதுசரி: அதுக்கு கருப்பு சாம்பார் சாப்டு செத்துபோய்க்குவேன் போய்யா :O)))
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கலகல: ஷிட். ஷ்ஷ்ஷ்ஷ்ஷிட். ப்லடி ஷிட்.

அட்டெண்டர்: நேரா போயி லெப்ட்லங்கம்முனி

கலகலா: வாட் ட ஹெல். இங்கதானே சொன்னாங்க

அட்டெண்டர்: அட இது டாக்டர் ரூம்புங்க அம்முணி. ஷிட்டெல்லாம் நேரா போய் லெஃப்ட்ல

கலகல: யோவ். ஒத்துய்யா.ஷிட் @#!~*&^+_|].வந்தூட்டான்

டாக்டர்: வாம்மா. உக்காரு

கலகல: டாக்டர் வேணாம் அவந்தான் ஏதோ சொல்றான்னா நீங்களும் வாங்கி கட்டிக்காதிங்க. த ஹோல் வர்ல்ட் ஈஸ் ஷிட். &^%$#@!

டாக்டர்: ஓஓஓஓ. புரிஞ்சது. கொஞ்ச நாளைக்கு சமையல் இடுகை போடும்மா. மிளகுரசம், கருப்பு சாம்பார். ஷிட்டோஃபோபியா சரியா ‘போயிரும்’

கலகல: ம்கும். போகல நீ போய்ச்சேந்துருவ. வர்ட்டா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரபா:அய்யா! வணக்கங்கைய்யா!

டாக்டர்: அட வித்தியாசமா இருக்கே.

பிரபா: ஆமாங்கைய்யா. நடைய மாத்திட்டம்ல. பிரச்சனையே அதாங்கையா. சுத்திலும் எதப்பார்த்தாலும் இடுகை மேட்டராவே தெரியுதுய்யா. பயங்கரமா கற்பனை பிச்சிக்கிட்டு வருதுய்யா. ஒன்னுமில்ல பட்டாபட்டின்னு ஒருத்ததரு பின்னூட்டம் பார்த்ததும் எங்கூருல பட்டாபட்டி நெஜார் போட்ட தாத்தாவ டரியல் பண்ணது கவனம் வந்து பஸ்லயே ஐஃபோன்ல இடுகை போட்டுடேன்னா பார்த்துக்குங்களேன். அருவத்தியஞ்சு இடுகை ரெடியா இருக்குய்யா. ஒரு 5 மினிட்ஸ். உங்களமாதிரி எங்க ஊருல ஒரு டாக்டரப்பத்தி ஒரு இடுகை போட்றங்கைய்யா?

டாக்டர்: இது பின்னூட்டோ டெஃபிஷியன்ஸி சிண்ட்ரோம் அண்ட் இடுகையோ மேனியா காம்பி. நிறைய பின்னூட்டம் போடுங்க. நைட்டூட்டில நெட்ல லாகின் பண்ணாதீங்க. முக்கியமா பஸ் வாட்ச்சிங் ஆகவே ஆகாது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வானம்பாடி: யோவ் என்ன உடுய்யா. ஏன்யா கடத்திகிட்டு போறீங்க.

ஆம்புலன்ஸ் அட்டெண்டர்ஸ்: ங்கொய்யால. கலாய்ச்சோ மேனியா முத்திப்போச்சுன்னு அட்மிட் பண்ணா கக்கூசுக்கு போறேன்னு தப்பிச்சி வந்து இங்க டாக்டர் வேலையா பார்க்குற. இருடி அங்க வச்சி நொங்கெடுக்குறோம். 
~~~~~~~~~

Wednesday, April 7, 2010

பச்சை நிறமே! பச்சை நிறமே!

முதன் முதலாக பெரம்பூர் மேம்பாலத்தை கட்டி முடித்திருப்பதன் மூலம் சாதனை நிகழ்த்திய சென்னை மாநகராட்சி இன்னொரு வறவேற்கத்தக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இன்றைய தேதியில் சென்னை மற்றும் வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதிகளில் மிக அத்தியாவசியமான நடவடிக்கை இது. விரைவில் இதர நகராட்சிகளும் பின்பற்றவேண்டிய முன் உதாரணமாக இது அமைய வேண்டும். மாநகராட்சிக் கமிஷனர் நடத்திக்காட்டுவார் என்ற நம்பிக்கையிருக்கிறது.

ஆம்! சென்னையில் இனிமேல் மரங்களை வெட்டுவது தடை செய்யப் பட்டிருக்கிறது. தவிர்க்க முடியாத பட்சத்தில் வெட்டவேண்டுமாயின், முன் அனுமதி பெறவேண்டும். அப்போதும் கூட 25 மரக் கன்றுகளை நட்டாக வேண்டும். ஆண்டுக்கு 10000 மரங்களை நட ஏற்பாடும் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்த முழு செய்தி இங்கே:



வரவேற்கப் படவேண்டிய இத்திட்டத்தில் மக்களாக பங்கேற்க ஊக்குவிப்பதும், குறைந்தபட்சம் இந்த விஷயத்திலாவது ரெகம்மண்டேஷன், லஞ்சத்துக்கு வழி வகுக்காமலும் பார்த்துக் கொண்டாக வேண்டும். எத்தனை காசிருந்தாலும், நல்ல காற்றும் தண்ணீரும் வாங்கி மாளாது. ஆயின் மாநகராட்சி மட்டுமே இதில் பங்கு கொள்வது சாத்தியமில்லை. மக்களும், அதனுடன் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமமும் பங்குபற்றியாக வேண்டிய ஓர் நடவடிக்கையாகும் இது.

  • இனிமேல் வரைபடத்துக்கு ஒப்புதலுக்கு வரும்போது சுற்றுப்புறம் விட வேண்டிய அடிப்படை காலி மனைகளில் குறிப்பிட்ட அளவு வெறும் மண் இருக்குமாறு அமைந்திடல் வேண்டும்.
  • மழைநீர் சேகரிப்புக்கு வழி செய்திருப்பதுடன் இந்த மண்ணில் வீடுகளின் அமைப்புக்கேற்ப மரங்கள் நட்டிருக்க வேண்டும்.
  • பெரிய தொகுப்பு வீடுகள், அடுக்குமாடி வீடுகள் அமைக்கப் படும்போது அதிக அளவில் மரங்களுக்கு வழி செய்திருக்க வேண்டும்.
  • குடியிருப்பு சங்கங்களைப் பதியும் போது குறைந்த பட்ச மரங்கள் அதன் பராமரிப்பு குறித்த விதிகள் வகுக்கப் பட்டிருக்க வேண்டும்.
  • தனி வீடுகளில் மரவளர்ப்பும், பராமரிப்பும் கட்டாயம் எனச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்.
  • மாநகராட்சியில் இது குறித்த ஆலோசனை மற்றும் உதவிக்கு ஒரு தனி அலுவலகம் செயல் படுதல் வேண்டும்.
  • இலவச டிவி கொடுப்பதை விட இப்படி மரம் வளர்ப்பவர்களுக்கு வீட்டு வரி, தண்ணீர் வரியில் குறிப்பிட்ட சதவீதம் தள்ளுபடி கொடுப்பது கட்டாயம் பலனளிக்கும்.
  • இப்போது இருக்கும் கட்டிடங்கள், பொது அமைப்புகள், கலியாண மண்டபங்களில், கான்கிரீட்டால் மூடப்பட்ட பகுதிகளை ஓரங்களில் நீக்கி, மரக்கன்று நடுவதும், மழைநீர் சேகரிக்கவும், கார்ப்பரேஷனே மேற் கொள்ளவேண்டும். இதற்கான நோட்டீஸ் கொடுத்தபின் இதற்கான செலவை குறிப்பிட்ட காலத்தில் செலுத்தத் தவறினால் மேல் முறையீடின்றி ஜப்தி செய்ய ஏதுவாக சட்டம் கொண்டு வரப்பட்டேயாக வேண்டும்.
  • அழகுக்காக கல்பனை, கல்வாழை, கத்தாழை போல் நிலத்தடி நீர் உறிஞ்சும் மரங்களை தடை செய்ய வேண்டும். அல்லது அதற்குச் சரியான விகிதத்தில் தூங்குமூஞ்சி, வேம்பு, அசோக மரங்கள் நடப்பட வேண்டும்.
  • மாநகராட்சி வார்டுகளில் வார்டு வாரியாக சிறப்பாக செயல் படுத்தும் கவுன்சிலர்களுக்கு அரசின் பாராட்டும் அந்த வார்டுக்கு சான்றிதழ் வழங்குதல், தொடர்ந்து சிறப்பாக செயல்படும் வார்டுகளுக்கு மாநகராட்சியின் சிறப்பு உதவி போன்றவை செயல்படுத்தப் படவேண்டும்.
  • இதற்கான நடவடிக்கையோ நாட்டமோ இல்லாத கவுன்சிலர்கள் கட்சி வேறுபாடின்றி பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.
  • சட்டசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதியில் குறைந்தபட்ச பிடித்தம் செய்யப்பட்டு, மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு, அந்த தொகுதியில் மரவளர்ப்புக்கு இந்த நிதி செலவிடப்படுதல் வேண்டும்.
  • சாலையோரங்களில் மரம் வளர்த்துப் பாதுகாக்க முன்வரும் பெரிய நிறுவனங்களுக்கு நடைபாதை விளம்பரம் அழகாக அமைத்துக் கொள்ள அனுமதியளிக்க வேண்டும்.

எந்த எதிர்ப்புக்கும் ஈடு கொடுத்து கமிஷனர் அவர்களும் துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களும் இதை முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. செய்தாக வேண்டும்.

Monday, April 5, 2010

சிதைவளர் மாற்றம்....


வாழ்க்கையின் நொடிகள்
நம்பிக்கைகளால் நிரப்பப்படுகின்றன!
ஒரு நம்பிக்கையின் மரணமும்
இன்னொரு நம்பிக்கையின் ஜனனமும்
இடைவெளியின்றி நடந்தபடியே இருக்கின்றன.

ஒரு நம்பிக்கையின் இறப்பும்
மறு நம்பிக்கையின் சூலும்
தொடர்புடனோ இன்றியோ அமைகிறது..
நம்பிக்கைக் கருச் சுமக்கும் காலங்கள்
வலி நிறைந்ததாகவே அமைந்து போகிறது..
கருவுக்கு தடைபோடத் தெரிந்த மனதுக்கு
நம்பிக்கைக் கருவைத் தடைசெய்ய மனதில்லை...

நாடி விரும்பியே கரு சுமக்கிறது
கூடவே வலியும்..
சின்னச் சின்னத் தலைக் கோதலில்
பெரியதாய் கோட்டை கட்டி
இடிந்து சிதிலமாவதைத்
துடிக்கத் துடிக்கப் பார்த்தும்
தானே எழுந்து,
தானே ஆறுதல் சொல்லியபடியே
அடுத்த கோட்டைக்காய்
மனமே மனது குழைக்கிறது..

என்றோ ஒருநாள்
மரணம் அழைக்கும் தருணம்
ஒரு நம்பிக்கையின் மரணமாகவோ
ஜனனமாகவோ அமைவதைப் பொறுத்தே
மரணம் வலியாகவோ
சுகமாகவோ அமையக்கூடும்!
~~~~~~~~~~~~~

Friday, April 2, 2010

ரெட் ரிப்பன் ரயில்

ஒரு பத்திரிகைன்னா குறைஞ்ச பட்சம் மலச்சிக்கல் இருக்கிறவங்க கழிப்பறைக்கு கொண்டு போய் படிக்கவாவது உதவணும். காலையில பத்திரிகைய படிச்சா வாந்தி வருது.

சம்பளமோ, போனசோ எதுனாலும் திநகர்ல கொண்டு கொட்டினாதான் நமக்கு விடியும். ரோட்டோரம் மரங்களும் அங்கனதான் இருக்கு. மரத்து கீழதான் ஹேர்கிளிப், ஸ்டிக்கர் பொட்டு கடைகளும் இருக்கு. நான் நிறைய பார்த்து நொந்து போயிருக்கேன். வயசு புள்ளைங்க மரத்திலிருக்கும் ஒரு விளம்பரத்தை கண்ணு விரியப் பார்த்து திகைத்து நிற்பதை.

மரத்துக்கு மரம் ஒரு பிரபல மருத்துவமனையின் விளம்பரம்.  “அரை மணி நேரத்தில் வலியின்றி கருக்கலைப்புச் செய்யப்படும். ஒரு நெருங்கிய உறவினருடன் வரவும்.” இன்னும் ஐம்பது வருடமானாலும் நாம் இப்படித்தான் இருப்போம் போலும்.

எங்கம்மா 16 வயசுலதான் வேண்டாத தெய்வத்த வேண்டி பெரிய மனுசியாச்சி. நாம்பதினஞ்சு. எம்பொண்ணும் என்னய மாதிரிதான்னு இருந்துட்டு அது 12 வயசுல பள்ளியில் வயதுக்கு வந்து பயந்து அழுது வந்தாலும் உறைக்காது நம்மவர்க்கு. தெரிஞ்சிக்க வேண்டியதை சொல்லிக் கொடுக்கக் கூச்சம் என்பதா? சொல்லத் தெரியாது என்பதா?

ஏன் பொங்குறன்னு கேக்கறீங்களா? பல லட்சம் ப்ரதிகள் விற்பனையாகும் ஒரு எழவெடுத்த தினசரி செய்யும் சமூக சேவையை பாருங்கள்.


பல கோடி ரூபாய் செலவில், அரசுத்துறை எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்ச்சிக்கு ரெட் ரிப்பன் ரெயில் என்ற ஒரு இரயில் மூலம் தேர்ந்த மருத்துவ நிபுணர்கள் உதவியுடன் விளக்கத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. அதில் காட்டப்படும் படங்கள் மாணவ மாணவிகளைக் கெடுத்து விடுமாம். கருத்தடைச் சாதனம் பற்றிக் கேட்டு மாணவிகள் வெட்கப்பட்டு ஓடி விட்டார்களாம்.

ஒரு அதி மேதாவி சொன்னதாம். எய்ட்ஸ் குறித்து, உடல் உறுப்பு குறித்து யாருக்கு சந்தேகம் இருக்கிறதோ அவர்களுக்குதான் விழிப்புணர்வு தேவை. அது குறித்து ஒன்றும் அறியாத மாணவ மாணவிகளுக்கு இது தேவையில்லையாம்.

ஆமாம். இது குறித்தெல்லாம் தெரிந்துவிட்டால் சாமியார் சல்லாப வியாபாரம் நடக்காதே. விழிப்புணர்வு வந்துவிடுமே.

சரி! ஒரு வேளை தான் எழுதுவதிலாவது ஒரு நேர்மையான நம்பிக்கையுடன் தொழில் தர்மம், கொள்கை, கலாச்சாரக் காவலன் முத்திரையாவது இருக்கிறதா என்றால் காசுக்கு இவன் செய்யும் சேவை இது


ரயிலாவது இவன் சொல்கிறார்போல் தேடிப் போய் கெட்டுப் போகும் வழி. இவன் பத்திரிகையை வாங்கி வீட்டில் வைத்தாலே பிள்ளைகள் கெட்டுப் போகுமே.

அரசு கண்டிப்பாக இத்தகைய பத்திரிகைகள் மேல் தயங்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பெற்றோர்களாக நம் பிள்ளைகளை இதற்கு ஊக்குவிப்பது நம் கடமை. சென்னை செண்ட்ரலில் 11ம் ப்ளாட்பாரத்தில் இந்த ரயில் இருக்கிறது.

Thursday, April 1, 2010

கூசித்தான் போகிறது...


உப்புக் குறைவென்று
உதைத்துவிட்டுப் போனவன்
ஊரடங்கிய பின் உறவுக்காய்
உள்ளங்கால் சுரண்டிச் செல்கையில்..

அக்குளில் பிரிந்த தையல் மறந்து
அரசுப் பேருந்தில் கையுயர்த்திப் பிடிக்கையில்..
மகளின் சடங்குக்கு மாதச்சீட்டு சேர்ந்து
தவணை தவறித் தவிக்கும் தருணங்களில்..

உழைத்துக் களைத்துத் திரும்புகையில்
உறங்கித் தொலைத்து
ஒதுங்கிய முந்தானையூடுருவிய
ஓரப் பார்வைகளின் குறுகுறுப்பில்..

உறவுகளைத் தொலைத்த திருமணம்
என்றறியாமல், ஊருக்குப் போக
அடம் பிடிக்கும் குழந்தைகளின்
உற்சாகக் குமிழை உடைத்தெறிகையில்..

உப்பு வாங்கவும் வழியற்ற
ஓர் மாதக் கடைசி ஞாயிறில்
உணவு வேளையில் வந்த தோழியை
உபசரிக்கவியலாத் தருணங்களில்..