Tuesday, March 10, 2009

மானுடம் பழகுவோமா?

முன்பெப்போதும் இல்லாத அளவு ஈழ மக்களின் வேதனைகளும் வலிகளும் பாமர மக்களை வெகுவாகவே பாதித்திருக்கிறது. ஏன், எதற்கு என்பது குறித்த விழிப்புணர்வு வந்து விடாமல் பல கட்சிகளும் தங்கள் ஆதாயங்கள் தேட ஆதரித்து அல்லது எதிர்த்து என்ற ஒரு நிலைப்பாட்டிலும் ஊடகங்கள் தங்களுக்கு தேவையான போது மட்டுமே பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என்று கூவி தங்கள் பங்குக்கு இருட்டடிப்பு செய்தும், தொலைக்காட்சியில் தமிழன் தொலைக்காட்சி தவிர எப்போதோரு முறை இலங்கை அரசாங்கம் சொல்லும் அல்லது தரும் பாரபட்சமான செய்திகளை ஒளி பரப்பிடினும் மாணவர்கள், பொதுமக்களிடையே சீமான், மணி, நெடுமாறன் அய்யா போன்றோரின் முயற்சியில் ஓரளவு புரிதல் வந்திருக்கிறது.
வெள்ளிக்கிழமை உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழுணர்வாளர்கள் இரு வேளை உண்ணாவிரதமிருக்க தமிழக மாணவரமைப்பின் முயற்சி பெருமை கொள்ளத்தக்கதாகும். மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்டு இந்த அரசியல் வாதிகளின் சுயலாபச் சண்டை தலைகுனிவை ஏற்படுத்துகிறது. பார்க்கப்போனால் நேற்று ஜெயலலிதா வர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதத்தில் அவரின் அறிவிப்பு மற்றவர்களின் நிலைப் பாட்டையே கொண்டிருப்பினும், இது நாள் வரை அவரின் நிலைப்பாட்டிலிருந்து ஓரளவு விலகி மற்ற கட்சிகளின் நிலைப்பாட்டையே ஒத்திருப்பது தெளிவு. ஒரு இனத்தின் தலைவர் என அனைவராலும் எதிர் பார்க்கப்படும் ஒரு பழுத்த அரசியல் தலைவர், பொறுப்பான முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவரிடம் ஒரு சாதாரண மனிதன் ஏக்கத்துடனெதிர் பார்ப்பதெல்லாம், வேறுபாடின்றி (ஒப்புக்காகவேனும் காங்கிரசும் கூட) மக்களின் அவலம் உணர்ந்திருக்கும் இந்த வேளையில் மத்திய ஆட்சியாளர்களின் தோழமைக் கட்சித் தலைவரின் செயல் பாடு குறைந்த பட்சம் போர் நிருத்தமென்ற அளவிலாவது முதன்மைப் படுத்தப் பட்டிருக்க வேண்டுமென்பது. ஆனால் கடந்த சில நாட்களாக தரக் குறைவான முறையில் பேசுவதும், எதிர் கட்சியின் தலைவி என்பதற்காகவே எதிர்ப்பதும் மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது. பதில் கூற முடியாத கேள்விகளுக்கு சம்பந்தமில்லாத பதில்கள் கூறுவது கூட நகைப்புக்குரிய ஒன்றாயினும், இன்றைய பத்திரிகையில் தன்னுடைய சுகக்கேடு குறித்தும்
அந்த நேரத்தில் கூட ஜெ அவர்கள் தினம் ஏதோ கேள்வி எழுப்பி அதற்கு தான் எப்பாடு பட்டு பதிலளித்தார் என்பதையும் ஈழப் பிரச்சினையை விட நீளமாக விவரித்த அழகு கூசச் செய்கிறது.

வலி மனிதனுக்கு கடவுள் அளித்ததே மற்றவர்களின் வலியையும் உணர்வதற்குத் தானோ என்று நினைக்கிறேன். பேச எது தடையாய் இருப்பினும் அங்கு நடக்கும் விடயங்கள் மக்களின் அவலங்கள் சாதாரண மனிதனுக்கு தெரிந்திருக்கும் நிலையில் ஒரு முதலமைச்சருக்கு தெரியாமலிருக்க காரணமில்லை. ஒரு வேளை இந்த அவலங்களைப் பார்த்தால் எங்கீ சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல் போகுமோ என்று தவிர்த்திருக்கலாம். ஒரு கண்ணொளி பார்க்க நேர்ந்தது. தெரு ஓரம் இறந்தவர்களைப் புதைத்து பக்கத்து மைதானத்தில் லாரியில் தவிடு கொட்டப் படுகிறது. அந்த தவிட்டைப் புடைத்து அதில் மிஞ்சிய குருணை தவிட்டோடு சேர்ந்து தான் அதில் களியோ கூழோ. இது தான் சாப்பாடு. குடிக்கத் தண்ணீர் கூட இல்லை.காகிதம் ஆயுதம் என‌ப் பேசும் பெரிய மனிதர்கள் இதைப் பார்க்காமலா இருப்பார்கள்.பச்சிளம் பிஞ்சு வலி என்றால் என்ன என்று கூடத் தெரியாது. இவருக்கும் வலிதான். ஆனாலும் இதன் வலிக்கு முன்னால் எம்மாத்திரம். ஆ என்றால் மருந்துடன் மருத்துவர். ஆடையின்றி அலறும் அந்த பிஞ்சுக்கு அம்மா என்ன தருவாள்? ஓடி விழுந்தாலுமே ஊரைக்கூட்டி அழும் வயதில் அந்த முகத்தில் எத்தனை வெறுமை. இந்தப் பிஞ்சு வளர்ந்து அதன் மனதில் மானுடம் இருக்குமா. வலி மறந்தவன் மனிதனாய் இருக்க முடியுமா? மனிதனுக்கு அழகா இது.
மனிதநேயம் இல்லை எனில் இறைவன் எங்கே? இறையாண்மை எங்கே. ஒரு மாதமாக இதுகுறித்து பேசக்கூட மனமின்றி பேசுபவர்களை நையாண்டி செய்து சாதிக்கப் போவதென்ன.

ஒரு சுனாமி வந்தது. அது பாடம். காரில் வந்து நடந்தவனும், தூங்க இடமின்றி மணலில் தூங்கியவனும் ஒன்றாய்தான் மரித்துப் போனார்கள். இப்போது கூரையின்றி இப்படி குண்டடி பட்டு நிற்பவர்களில் பணக்காரர் யார்? ஏழை யார். ஜாதி இருக்கிரதா இங்கே? வலி வலி வலி மட்டுமே? உலகத்தில் எல்லாரையும் போல்தானே நானும் பிறந்தேன். எனக்கேன் இந்த அவலம் என இவர்களின் வயிறு எரியாமல் போகுமா? அதற்கு விலை நாம் தான் தரவேண்டும்.

யாராவது இந்த இடுகையும் படிக்கலாம். 13ம் திகதி இவர்களுக்காக ஒரு நாள் உண்ணாவிரதம் என படித்திருக்கலாம். ஆனால் அது மட்டுமே எந்த கையாலாகத அரசியல் வாதியின் தாக்கமும் இல்லாமல் நாம் செய்யக் கூடியது. வலி தாங்க மாட்டோம். என்றோ ஒரு நாள் இவர்களைத் தேர்ந்தெடுத்த பாவத்துக்கு நமக்கும் இப்படி நேரலாம். குறைந்த பட்சம் பசி தாங்கவாவவது பழகுவோமா நண்பர்களே? நம் குழந்தைகளிடமிருந்தாவது மானிடம் கற்போம். உண்ணாமல் இருப்போமா அந்த ஒரு நாள்?

1 comment:

Eezhapriya said...

mm...........! 13 + friday .. romba bad combi nu solluvanga.. yarukkunu parkkalam..