Tuesday, September 28, 2010

கால விழுதுகள்...

புதிதாய் விரிந்தப் புறநகர்ப் பகுதியில் விஸ்தாரமான கோவில் அது. நகரின் ஆரவாரங்களிலிருந்து ஒதுங்கி, இன்னும் அதிகம் தாக்குதலுக்குள்ளாகாத வெளியிடம். மாலைப் பூஜை முடிந்து இருள் கவியத் தொடங்கி, இதமான காற்றுடன் பிரகாரம் நிறைந்திருக்கிறது. மேற்கு ஓரமிருந்த மேடையின் முன்பு குவிந்திருக்கிறது கூட்டம். ராமகிருஷ்ணபாகவதர் இன்றைக்கு என்ன கதை சொல்லப் போகிறார் என்பதிலிருந்து, சீரியல் வரை எல்லா விஷயமும் சளசளவென்று கோவிலின் அமைதியைக் கெடுத்த படி பரவிக் கொண்டிருக்கிறது. ‘வந்தாச்சு’ என்ற ஒற்றை அறிவிப்பில் சட்டென நிலவிய அமைதியும், கதை கேட்க ஆவலாய் சரியாய் உட்காரும் சலனங்களும் உணர்ந்தபடியே புன்சிரிப்புடன் கடந்து சென்று மேடையில் அமர்ந்தார் பாகவதர்.

சம்மணமிட்டு அமர்ந்திருந்தவர், இரண்டு கையும் முட்டிக்கு மேல் நீட்டி, ஆஜானுபாகுவாய் நிமிர்ந்தமர்ந்து, கண்மூடி கணீர் என்ற குரலில் தியானஸ்லோகம் சொல்லச் சொல்ல, அலை அலையாய் எழுந்த ஒலி நாதத்தில் ஓர் அமைதி குடி கொண்டது. கண் திறந்து ஒரு முறை எல்லாரையும் பார்த்தார். இந்தக் கோவில்ல அம்பாளோட நாமம் பார்வதி. உமான்னு அவளுக்கு ஒரு பேர் உண்டு. லோக மாதா அவள். நாமல்லாம் அம்மா அம்மான்னு சொல்ற போதெல்லாம் உமாவான அவளுக்குத்தான் அது சேரும்.

மனுஷாளாப் பொறக்கறது பெரிய பாக்கியம். ஏன்னா, பரமாத்மாவிடமிருந்து அதி சமீபத்தில இருக்கிற ஜன்மம் மனுஷ்ய ஜன்மம். பாவத்தக் கழிச்சி, பகவானையே த்யானம் பண்ணிண்டு திரும்ப பிறக்க வேண்டிய அவசியமில்லாம அவனுக்குள்ளையே அடங்கிப் போறதுக்கு வழியும், முயற்சியும் தெரிஞ்சிக்க முடியற ஜன்மா. அப்படியான ஜன்மாவை நமக்குக் கொடுத்து பகவானுக்கும், மனுஷனுக்கும் நடுவில ஒரு பாலமாய் இருப்பவள் தாயார். மனுஷ ஜென்மத்துலயும் அதி உன்னதமான பிறப்பு பெண். அவள் அம்மாவா ஆறதில்லை. அம்மாவா பிறக்கிறாள், அம்மாவா இருக்காள், அம்மாவாவே அம்மாட்ட சேருவாள். அம்மான்னா யாரு? சாக்ஷாத் உமா இல்லையோ. எல்லாரும் என் கொழந்தேன்னு அணைச்சிக்கறவள் இல்லையோ அவள். தப்புப் பண்ணா கண்டிக்கறதிலயும் ஒரு கருணை இருக்குமே அவளுக்கு. எந்தப் ப்ரயத்தனமும் இல்லாம, இந்த குணத்தை பகுமானமா கொடுத்துருக்கு பெண்ணுக்கு. அவள் மூலமா ஒரு ஜீவன் இந்த பூமிக்கு வரும்போது அதி உன்னதமானா தாயாராகிறாள் அவள். ரொம்ப ஸ்ரேஷ்டமான வார்த்தை தாயார். அதனாலதான் அம்பாளுக்கும் தாயார்னு பெயர்.

கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு சிலிர்க்கிறது. முன்னெப்போதையும் விட அம்மாவின் மீதான வாஞ்சை அதிகரிக்கிறது. பெண்களின் முகத்தில் ஒரு பெருமையுடனான நிறைவு. கொஞ்சம் இடை வெளி விட்டு தொடர்கிறார்.

பகவானைப் பார்த்துட்டேன். இந்த நொடி நான் வான்னா வந்து நிப்பான். சத்தியத்தைத் தெரிஞ்சிண்டேன்னு எல்லாத்தையுமே துறந்த ஒரு மகோன்னதமான சந்நியாசியானாலும் துறக்கமுடியாதவள் தாயார். பரம சத்தியத்தைத் தெரிஞ்சிண்ட மஹானேயானாலும் தாயாரிடம் சாக்ஷ்டாங்கமாக விழுந்து சேவிக்க வேண்டும்னெல்லாம் சாஸ்த்ரம் சொல்றது. அப்படியோர் உன்னதப் பிறப்பு தாயார். எல்லாத்துக்கும் மேலானவள்.

ஒரு ஸ்லோகம் சொல்கிறார். சொல்லும்போதே குரல் உடைந்து இன்னும் குழைகிறது. ஒரு ஆழ்ந்த அமைதியில் கடக்கும் ஒரு நொடி இடைவெளி. இதுக்கு அர்த்தம் என்னன்னா, அம்மா! உனக்கு நமஸ்காரம். ஒரு அணுவா உன்னில் வந்த நொடியிலிருந்து எனக்கு உருவம் கொடுத்து, உயிர் கொடுத்து, உணர்வு கொடுத்து, உள்ளம் கொடுத்து ஜன்மா கொடுத்தியேம்மா. எந்த நொடியில் என்னைக் கருத்தரித்தாயோ நான் உனக்குக் கொடுத்ததெல்லாம் கஷ்டம்தானே?

பசிக்கும் உனக்கு. என்னால் ஒரு வாய் தண்ணி உள்ளிறங்காமல் வாந்தி வரும். சலிச்சிண்டதில்லை நீ. உன் ரத்தத்தை எனக்கு உடலாக்கி,உணவாக்கி வளர்த்தவள் நீ. எனக்கு ஆரோக்கியக் கேடு என்று ருசியைத் துறந்தவள் நீ. இது குழந்தைக்கு ஆகாதே என்று உனக்கு விருப்பமான பண்டங்களையெல்லாம் திரஸ்கரித்திருக்கிறாய். காந்தக் காந்த கஷாயம், ஔஷதின்னு எனக்காக என்னல்லாம் சாப்பிட்டிருக்கிறாய். நீ ஓய்ந்து போய் சாப்பிட அமர்வாய். நான் உள்ளுக்குள் புரண்டு உட்கார விடாமல் செய்வேன். களைத்துப் படுப்பாய். நான் செய்ததெல்லாம் உன் அடி வயிற்றில் உதைப்பேன். புரளுவேன். என் குழந்தைக்கு வசதியில்லை என்று எனக்குச் சுகமான விதத்தில் படுப்பாய். உன் உணவை உறிஞ்சி உறிஞ்சி நான் வளர்ந்தேனே அம்மா. அடி வயிறு கனக்க கனக்க அடி அடியாய் எடுத்து வைத்து நடப்பாயே! ஒரு சலிப்பு இருந்ததுண்டா?

எத்தனை வலி தந்து இந்த பூமியில் பிறந்தேன். உன் ரத்தத்தைப் பாலாக்கி எனக்கு போஷித்தாய். எத்தனை வலி தாங்கியிருக்கிறாய். ஒரு இரவாவது நீ நிம்மதியாய் தூங்கியிருக்கிறாயா? பாலுக்கு அழுவேன். இடையில் இயற்கை உபாதை தீர்ந்ததா என்று பார்க்க விழித்திருப்பாய் நீ. திடுக்கிட்டு எழுந்து எறும்பு போன்ற ஜந்துக்கள் இல்லையே எனப் பார்த்துக் கொள்வாய். சில நேரங்களில் என்னை மடியில் போட்டுக் கொண்டு சாப்பிடுவாய். சிறுநீர் கழித்திருப்பேன். அது பட்டிருந்தாலும், ஓரமாய் ஒதுக்கிவிட்டு உண்டிருக்கிறாய். எத்தனை குழந்தை பிறந்தாலும் எல்லாரிடமும் அதே வாஞ்சையைப் பகிர்பவள் நீ. எத்தனை வயதானாலும் எங்களுக்கான நலம் மட்டுமே விழைந்தவள் நீ. இன்னும் எத்தனை பிறவி எடுத்து உனக்கு இந்தக் கடனையெல்லாம் அடைக்கப் போகிறேன. என்னால் முடிந்ததெல்லாம் ஆத்மார்த்தமான இந்த நமஸ்காரம்.

இப்பேர்ப்பட்ட தாயாருக்கு வயசான காலத்துல அசுகம் ஏற்படறப்போ எந்த விதத்திலயும் அவள் குழந்தையைப் போஷித்த போஷனைக்கு கிஞ்சித்தும் சமமில்லாட்டாலும், அதுல கோடியில ஒரு பங்கு சிரத்தையா பார்த்துண்டா, அவளுக்கு சிசுருஷை பண்ணினா வேற எந்த பூஜை வேண்டாம், தவம் வேண்டாம். அந்த உமா என் குழந்தேன்னு கிட்ட இழுத்துப்பாள். வரம் இல்லையா அது. இதை விட மனுஷனாப் பொறந்தவனுக்கு ஒன்னு வாய்க்குமா?

குழைத்துக் குழைத்து வந்து விழுந்த வார்த்தைகள் வயது வித்தியாசமின்றி அனைவரையும் குழந்தையாக்கிவிட்டிருந்தது. உதடு துடிக்கத் துடிக்க விசும்பல் கேட்டது. கண்ணீரில் குற்ற உணர்ச்சிகள் அடித்துக் கொண்டு ஓடின. புராண இதிகாசங்களிலிருந்து சில பல உவமானங்களோடு காலட்சேபம் முடிந்தது. அமைதியாகக் கிளம்பிய கூட்டத்தில், கலந்திருந்தான் ரகு. ‘என்னமாச் சொல்றாருங்க. தெரிஞ்ச விஷயம்தான். ஆனா இப்படி கேக்கும்போது பிரமிப்பாயிடுதுங்க’ என்று சினேகமாய் பேசிக்கொண்டு வந்தவரை நோக்கினான் ரகு.

உங்களை எங்கயோ பார்த்திருக்கேங்க, எங்கே வீடு, வேலை என்ற விசாரிப்புக்களுக்குப் பிறகு, ரகு கண்டு பிடித்துவிட்டான். ‘அன்னை இல்லத்துல பார்த்திருக்கேன்னு நினைக்கிறேங்க, போன ஞாயித்துக் கிழமை’ என்றான். அட ஆமாங்க. எனக்கும் இப்ப கவனம் வருது. அங்க யாரு இருக்காங்க என்றார்.

‘எங்க அப்பாங்க. பிடிவாதக்கார மனுஷன். ரிடையர் ஆகி ரெண்டு வருஷத்துல அம்மா இறந்துட்டாங்க. ஓப்பனா பேசுவாருங்க. இங்க பாரு ரகு, இன்னும் கொஞ்ச வருஷம் என்னால உங்களுக்கு ஹெல்ப்ஃபுல்லா ஏதோ இருக்க முடியும். அப்புறம் பாரமாயிடும். எனக்கும் மனவருத்தம். உங்களுக்கும் சிரமம். பேசாம இந்த முதியோர் இல்லத்துல சேர்ந்துக்கறேன். பென்ஷன் சரியா இருக்கும். நல்ல வசதி. முடியறவங்க சமூக சேவை செய்ய அது இதுன்னு நிறைய வழியிருக்கு. நினைச்சப்போ வந்து ஒரு நாளோ ரெண்டு நாளோ உங்க கூட இருப்பேன். விசேஷம்னா வரலாம் போகலாம். உங்களுக்கு பார்க்க தோணிச்சின்னா எப்ப வேணும்னாலும் வரலாம்னு, அங்க போய் சேர்ந்துட்டாரு.’

‘முதல்ல கஷ்டமாத்தான் இருந்திச்சி. அப்புறம் யோசிச்சப்ப சரின்னுதான் பட்டுது. நாங்க ரெண்டு பேரும் வேலைக்கு போறோம். டென்ஷனான லைஃபுங்க. எரிச்சல்ல ஏதாவது வார்த்தை காயப்படுத்தலாம். பாகவதர் சொன்னா மாதிரி அவங்களுக்கு பிடிச்சத, அவங்க வசதியா நினைக்கிறத தடுக்கறதை விட இதுவும் ஒரு விதத்துல சேவைன்னுதான் படுது என்ன சொல்றீங்க?’ என்றான் ரகு.

‘சரியாதாங்க படுது. உங்க கதை பரவாயில்லீங்க. எங்கம்மா, எங்கண்ணன் கூட இருந்துச்சி. அண்ணி கூட சரி வரலை. இத்தனைக்கும் ஹவுஸ் வைஃப் அவங்க. சொம்மா இருக்காது எங்கம்மா. எதுனா சொல்லும். இழுத்து போட்டுக்குனு செய்யும். அப்பால, வயசான காலத்துல எல்லாம் நான் செய்யறதா இருக்குன்னு கத்தும். நம்ம ஊட்லயும் வேலைக்கு போறவங்க. நைட் டூட்டியெல்லாம் இருக்கும். சரி வராது. அதான் அண்ணனும் நானும் ஷேர் பண்ணி இங்க சேர்த்துருக்கோம். கொஞ்சம் காஸ்ட்லின்னாலும், எல்லா வசதியும் இருக்கு இல்லைங்களா. ஒடம்பு முடியாம போனா ஊட்ல வச்சிருந்தா நாம வர வரைக்கும் தவிச்சிகினு இருக்கும். இங்க டாக்டருங்க, உடற்பயிற்சின்னு ஆரோக்கியமா இருக்காங்க. பசங்களுக்கு லீவ் டைம்ல இட்டாந்து வச்சிக்குவோம். ஒரு வாரம் மேல தங்காதுங்க. அவங்களுக்கு அங்க புட்சிப்போச்சி. அத விட என்னாங்க வேணும். சரிங்க பார்க்கலாம்’ என்று பஸ்ஸ்டேண்ட் நோக்கி நடந்தார்.

67 comments:

கலகலப்ரியா said...

அது என்னமோ தெரியல சார்... கடைசில இருந்து அஞ்சாவது பரா வரைக்கும்... ரொம்ப லயிச்சுப் படிச்சேன்...

ப்ரவாகமா அந்த நடை... நேர்ல கேட்ட மாதிரியே இருந்திச்சு...

அது சரி(18185106603874041862) said...

எனக்கும் என்னவோ உபந்நியாசம் கேட்ட மாதிரி இருக்கு...

ஆனா,கடைசில முடிச்சிருக்க விதம், காலத்துக்கு ஏத்த மாதிரி எல்லாம் மாறும்னு சொல்ற மாதிரி...நல்லாருக்கு..

(சைடு சைக்கிள்: தாய்மை பத்தி அயன் ராண்ட் என்ன சொல்றாங்க? படிச்சிருக்கீங்களா?)

கலகலப்ரியா said...

கடைசி நாலு பத்தியும்... கொஞ்சம் ஒட்டாம இருந்தாலும்.... விஷயம் ஓக்கே...

vasu balaji said...

கலகலப்ரியா said...

//கடைசி நாலு பத்தியும்... கொஞ்சம் ஒட்டாம இருந்தாலும்.... விஷயம் ஓக்கே...//

ம்ம். புரியுது.

vasu balaji said...

//(சைடு சைக்கிள்: தாய்மை பத்தி அயன் ராண்ட் என்ன சொல்றாங்க? படிச்சிருக்கீங்களா?)//

எது தெரியலையே. சொல்லுங்களேன்.

vasu balaji said...

/ஆனா,கடைசில முடிச்சிருக்க விதம், காலத்துக்கு ஏத்த மாதிரி எல்லாம் மாறும்னு சொல்ற மாதிரி...நல்லாருக்கு..//

சந்தோஷமாயிருக்கு:). நான் சொல்ல நினைச்சதும் அதுதான்.

Unknown said...

வாழ்வின் நிஜம் சார். மனசை ரொம்ப குத்துது. குடையுது. தேவைப் படும் இந்த பதிவின் பயன் ஒரு காலத்தில் நமக்கு.

Unknown said...

கதா காலட்சேபத்தில் சொல்லும் அன்னையின் மஹிமை அன்னை இல்லத்து ஆளுங்களுக்கு தானா. நல்ல முரண்பாடு.

பல வயதான தாய் தந்தையர் தனியாக கஷ்டப் படும் போது கூட, இந்த மாதிரி அன்னை இல்லம் போன்ற இடங்களில் இருப்பதை விரும்புவதில்லை. அது ஏனோ கௌரவ குறைச்சலாகக் கருதுவர். வெளி நாடுகளில் retirement ஹோம் நோக்கி மனிதர்கள் சென்று விடுகிறார்கள். மனப் பக்குவமும் வேண்டும்.

பழமைபேசி said...

அண்ணா.......

காமராஜ் said...

//இது குழந்தைக்கு ஆகாதே என்று உனக்கு விருப்பமான பண்டங்களையெல்லாம் திரஸ்கரித்திருக்கிறாய்.//

எல்லாக்காலங்களிலும்.விட்டுக்கொடுக்கிற இடத்தில் அவள்.

இதை அப்படித்தான் என்னால புரிஞ்சுக்க முடியுது பாலாண்ணா.

அது சரி(18185106603874041862) said...

//
வானம்பாடிகள் said...
//(சைடு சைக்கிள்: தாய்மை பத்தி அயன் ராண்ட் என்ன சொல்றாங்க? படிச்சிருக்கீங்களா?)//

எது தெரியலையே. சொல்லுங்களேன்.
September 28, 2010 4:35 AM
//

ம்ம்க்கும்...நான் படிச்சதில்லை..ஒரு வேளை நீங்க படிச்சிருக்கலாம்னு உங்களை கேட்டா, நீங்க வாத்தியார் மாதிரி என்னையவே கேக்கறீங்க :))

இல்லை, தாய்மை ஒரு முழுமையான சுயநலத்தின் உச்சம்னு அயன் ராண்ட் சொன்னதா எங்கயோ படிச்சிருக்கேன். அதான் கேட்டேன். (அயன் ராண்ட் படிக்கலைங்கிறதுனால முழுசா சொல்ல முடியலை..)

vinthaimanithan said...

"தாயின் காலடிகளுக்குக் கீழேதான் சுவர்க்கம் இருக்கின்றது" இது நபிவாக்கு!

சுனையின் ஊற்றுக்கண்போல தாய்மை மீதான நன்றியும் நெகிழ்வும் பதிவில் இழையோடுகின்றது

ஆமா.... டாக்டர் ஷாலினி தாய்மை பத்தி ஒரு தொடர் எழுதிட்டு வர்றாங்களே படிச்சிருக்கீங்களா?

நேசமித்ரன் said...

கேள்வியும் பதில்களும் ஊடு பாவாக நெய்ய கேட்கிற நெஞ்சுகூட்டுடன் போகிறேன், நன்றி

ஸ்ரீராம். said...

மனதுக்குள் இருக்கும், வெளியில் சொல்ல முடியாயத குற்ற உணர்ச்சிதான் இந்த மாதிரி மனிதர்களை காலட்சேபம் கேட்க வைப்பதும், கேட்டு கண்ணீர் சிந்துவதும். உண்மை வாழ்வில் அதைச் செய்ய முடியாத குற்ற உணர்ச்சியை வார்த்தைகளாக, பொய்ச் சமாதானங்களாக ஒருவருக்கொருவர் சொல்லி, தன்னை தானே ஏமாற்றிக் கொண்டு...

சைவகொத்துப்பரோட்டா said...

நிதர்சனம், சொல்லிய பாங்கு நன்றாக இருந்தது.

பிரபாகர் said...

சொல்ல வந்தது புரியுதுங்கய்யா! அம்மாவப் பத்தி அவ்வளவு அழகா சொல்லிட்டு... யதார்த்தம் தான், ஆனாலும் ஒட்டல. ஒருவேளை அம்மாதான் எல்லாம் என இருப்பதாலோ?

பிரபாகர்...

என்னது நானு யாரா? said...

கூட்டுக் குடும்பங்கள் உடைஞ்சிப் போச்சு! தனிக்குடும்பங்கள் தான் நிஜம்ங்கிறதா ஆயிடிச்சி!

கால மாற்றத்திற்கு ஏற்பத்தான் எல்லாம் நடக்குது. இன்னும் பாருங்க அண்ணாச்சி!

அந்த பாகவதர் சொன்னமாதிரி எல்லாம் இல்லாம, இனி வர்ற காலத்தில, குழந்தையை ஏதோ ஒரு மிஷினே முழுமையா வளர்த்து வெளியே அனுப்புகிற வித்தை வர்ற போகுது.

தாய்மையும் காலத்துக்கு ஏத்தபடி மாறப்போகுது! மகன்மையும் (புது வார்தை கண்டுபிடிச்சிட்டேன் சாரே) அப்படியே தான் காலத்துக்கு ஏத்தபடி மாறிட்டு இருக்கு!

கால மாற்றத்தைப் புரிஞ்சிக்கிட்டு வாழ்க்கையை நடத்த வேண்டியது தான். வேற வழியில்லை.

பவள சங்கரி said...

தாய்மையின் உன்னதத்தை இதைவிட அழகாக இன்னொருவர் வெளிப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை சார். தங்கள் எழுத்தோடு இணைந்து, அப்படியே அவரவர் தாயின் தரிசனம் பெறும் அருமையான பதிவுங்க அய்யா.........தாயைத் தெய்வமாகப் பார்க்கும் அந்த பண்பாடுதானே நம் இந்திய்க் கலாச்சாரத்தின் உச்சமே......நிறைய சிந்திக்க வைக்கிறது உங்கள் பதிவு...... ஆனால் முதியோர் இல்லத்திற்கு அனுப்புவதற்கான காரணம்.....நொண்டிச் சாக்காகப் படுகிறது......

Unknown said...

//இல்லை, தாய்மை ஒரு முழுமையான சுயநலத்தின் உச்சம்னு அயன் ராண்ட் சொன்னதா எங்கயோ படிச்சிருக்கேன். அதான் கேட்டேன்//

கிட்டத்தட்ட இதே போல ஒரு கருத்து வர்ற மாதிரியான அறிவுரை என் மனைவி அவர் தோழியின் கணவருக்குக் கொடுத்தது நினைவுக்கு வருகிறது..

குடுகுடுப்பை said...

சுயநலத்தின் உச்சம் குஜமுகதான். அதுக்கும் தாய்மைக்கும் முடிச்சு போட்டு குஜமுக ஒரு பொறுக்கி கட்சி தாயமையும் அப்படியேன்னு விரைவில் ஒரு ஆராய்ச்சி கட்டுரை நானே ஆள் வெச்சு எழுதறேன்

நர்சிம் said...

பிரவாகம்

Unknown said...

"தாயுமானவன்" வானம்பாடிகள் ஐயா....

vasan said...

பிர‌சங்க‌மும், பிராக்டிக்க‌ளும், அர‌சுக‌ளின் தேர்த‌லுக்கு முன்பும், பின்பும் போல்.

'பரிவை' சே.குமார் said...

வாழ்வின் நிஜம் மனசை ரொம்ப குத்துது.

Ravichandran Somu said...

படித்து முடித்தவுடன் மனதில் ஒரு கனம்...

thiyaa said...

ஏதோ போங்க சார்
நீங்க எது சொன்னாலும் நல்ல வருது
அது எப்படி?

கே. பி. ஜனா... said...

அற்புதமான நடை சார்! அந்த உபன்யாச மொழிகள் superb! நல்ல கதை. பாராட்டுக்கள்!

VELU.G said...

அற்புதமான எழுத்து நடை

வல்லிசிம்ஹன் said...

என்ன ஒரு பிரவாகமான உபந்யாசம்.
அம்மா.அன்பானாலும் அவள்தான். நம்மைத் தாங்கும் வரை அம்மா.நாம் அவளைத் தாங்கும் நிலை வந்தால் முதல் வேதனை அவளுக்கு. அதற்குப் பிறகு அவளுக்கு. இதே போல ஒரு முதுமை ஆராய்ச்சி இரு வருடங்களுக்கு முன்னால் நாங்களும் நடத்தினோம். முதியோர் இல்லம் பிடித்திருக்கிறது.
எப்படியாவது கண்ணீர் விட வைத்துவிட்டீர்கள் பாலா சார்.

settaikkaran said...

சரளமான நடையில் எதார்த்தத்தை எளிமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஐயா.

ரிஷபன் said...

யதார்த்தம்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வாவ்..என்ன ஒரு சரளமான நடை..!
வானம்பாடிகளை விடாம படிச்சாப் போறும்.. நமக்கும் நாலு எழுத்து எழுத வரும்னு நினக்கிறேன்!!
மனபூர்வமான நல்வாழ்த்துக்களுடன்...

ஈரோடு கதிர் said...

நெகிழ்ச்சி

க.பாலாசி said...

ஆரம்ப கதா காலட்சேபம் மிகத்தேர்ந்த எழுத்து. அன்னையின் மேன்மையைச் சொல்லி படிப்பவரையும் மெய் சிலிர்க்கவைக்கும் சொல்லாடல்கள். சரியானதை பாதையை கற்பித்துவிட்டு பட்டென கைவிரித்து காட்டுகிறமாதிரி இந்த கதையின் முடிவு.

அருமையான ஆக்கம்ங்க...

Mahi_Granny said...

அற்புதமான எழுத்து.

T.V.ராதாகிருஷ்ணன் said...

பாலா..பிரபலம் ஆகிட்டீங்க!! நெகட்டிவ் ஓட்டு விழுதே!!!

தாராபுரத்தான் said...

வணக்கமுங்க..

Unknown said...

நிஜமான உபந்யாசம் மாதிரியே இருக்கு. உபந்யாசகர் அம்மா, அம்மான்னு உமாமஹேஸ்வரியப் பத்திதானே சொன்னாங்க? நம்ம சொந்த அம்மாக்களப் பத்தி சொன்னாத்தானே அவங்களப் பத்திக் கவலப்படனும்??

காலத்துக்கு ஏத்தமாதிரி, அன்னை இல்லங்கள்ல கொண்டுபோய் தள்ளிவிடாமே, காலத்துக்கு ஏத்தபடி மனசுகள கொஞ்சம் மாத்திகிட்டா (இரு தலைமுறையும்) இன்னும் சந்தோசமா இருக்கும்ம்ம்ம்ம்ஹ்ம்ம்ம்ம்.

அருமையான சிந்தனை அய்யா..

பனித்துளி சங்கர் said...

பொதுவாக எழுதுவதை பேசுவது என்பது எளிது ஆனால் பேசுவதையே எந்த மாற்றமும் இல்லாமல் எழுதுவது என்பது சற்று இல்லை அதிகமாகவே சிரமமான ஒன்று . உங்களின் பதிவுகளோ அதையும் எளிது என்று நிருபிக்கும் வகையில் எளிமையான எதார்த்தங்களை அதன் சூழ்நிலை மாறாமல் தாங்கி நிற்கிறது வார்த்தைகள் ஒவ்வொன்றும் . பகிர்வுக்கு நன்றி ஐயா !

ராஜ நடராஜன் said...

கதா காலசேபம்!சொல்றதை எழுத்துல கொண்டு வந்திருக்கீங்க.சும்மா சொக்குது!

ப்ரியமுடன் வசந்த் said...

இன்னிக்கு ஒரு வயசு ஜாஸ்தியாச்சா இல்லியா? ஆச்சுன்னா வாழ்த்துகள் நைனா. :)

Unknown said...

"இன்னிக்கு ஒரு வயசு ஜாஸ்தியாச்சா இல்லியா? ஆச்சுன்னா வாழ்த்துகள் நைனா. :)"

Really. If so, Many Happy Returns of The Day' sir.

vasu balaji said...

@கலகலப்ரியா

/அது என்னமோ தெரியல சார்... கடைசில இருந்து அஞ்சாவது பரா வரைக்கும்... ரொம்ப லயிச்சுப் படிச்சேன்...

ப்ரவாகமா அந்த நடை... நேர்ல கேட்ட மாதிரியே இருந்திச்சு.../

ரொம்ப நன்றிம்மா.

vasu balaji said...

@Sethu
/ Sethu said...
கதா காலட்சேபத்தில் சொல்லும் அன்னையின் மஹிமை அன்னை இல்லத்து ஆளுங்களுக்கு தானா. நல்ல முரண்பாடு.

பல வயதான தாய் தந்தையர் தனியாக கஷ்டப் படும் போது கூட, இந்த மாதிரி அன்னை இல்லம் போன்ற இடங்களில் இருப்பதை விரும்புவதில்லை. அது ஏனோ கௌரவ குறைச்சலாகக் கருதுவர். வெளி நாடுகளில் retirement ஹோம் நோக்கி மனிதர்கள் சென்று விடுகிறார்கள். மனப் பக்குவமும் வேண்டும்./

ஆமாம். நன்றி சேது.

vasu balaji said...

@பழமைபேசி

ம்ம்.

vasu balaji said...

@காமராஜ்

உங்களுக்கு புரியக் கஷ்டமில்லையே காமராஜ்.

vasu balaji said...

@விந்தைமனிதன்

நன்றிங்க விந்தை மனிதன். இல்லைங்க ஷாலினி கட்டுரை படிக்கலை.

vasu balaji said...

@நேசமித்ரன்

நன்றி நேசன்:)

vasu balaji said...

@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றிங்க சைவகொத்துபரோட்டா.
@@நன்றி பிரபா.இருக்கலாம்.
@@ஆமாங்க என்னது நானு யாரா. நன்றி.
@@நன்றிங்க நித்திலம்.
@@நன்றி முகிலன்
@@நன்றி தலைவரே:)) காத்திருக்கேன்.

vasu balaji said...

@@நன்றி செந்தில்
@@நன்றி நர்சிம்
@@நன்றி வாசன்
@@நன்றி குமார்.
@@நன்றிங்க ரவிச்சந்திரன்
@@ரொம்ப நன்றிங்க தியா:)
@@நன்றி ஜனார்த்தனன்
@@நன்றி வேலு.

vasu balaji said...

@வல்லிசிம்ஹன்

ம்ம்.நன்றி வல்லிசிம்ஹன்.

vasu balaji said...

@@நன்றி சேட்டை
@@நன்றி ரிஷபன்
@@நன்றி ஆர்.ஆர்.ஆர். ஆஹா:)
@@நன்றி கதிர்.
@@நன்றி பாலாசி
@@நன்றிங்க மஹி கிரான்னி
@@நன்றி டி.வி.ஆர்.சார். ஆமாம் சார் டி.ஆர்.பி ரேட்டிங் கொஞ்சம் சருக்கிடுச்சி இனி கூடிடும்:))
@@அண்ணா. வணக்கம்.

vasu balaji said...

@@நன்றிங்க தஞ்சாவூரான். முடியுறப்போ யாரும் பண்ணாம இருக்கப் போறதில்லை. முடியலைன்னு இருக்கறப்போ இரண்டு பக்கமும் புரிதல் இருந்தால் கசப்பில்லை:). குற்ற உணர்வுக்கு அவசியமும் இல்லை.

vasu balaji said...

@@நன்றி சங்கர்.
@@நன்றிண்ணா:))

vasu balaji said...

@@நன்றி வசந்த்

vasu balaji said...

நன்றி சேது.:)

Unknown said...

Then it is True.

Happy Birthday Sir.

Yenna Paayasam veetile?

vasu balaji said...

@Sethu

ஹி ஹி. அதெல்லாம் கொண்டாடறதில்லை.:)

Unknown said...

என்ன சார்! பிறந்த நாளும் அதுவுமா தாயப் பத்தி நினைச்சு எழுதியிருக்கீங்க. எங்க அம்மா அது தான் செய்வாங்க. நானும் கொண்டாடறது இல்லை.

vasu balaji said...

@Sethu

அது எழுதி ரெண்டு நாளாச்சே. இல்லாமலும் அதானே பொருத்தமும் கூட:)). ஆமாம் சேது. அம்மாக்கள் பிறந்தநாள்னு கொண்டாடுறது அபூர்வம்.

Unknown said...

சார், அப்ப அந்த சிறுவன் ரங்கு ஸ்டோரி, உங்க சுய சரிதமா சார்? அப்பயே கேக்கனும்னு நினைச்சேன். ஆனால் மனம் கனத்தது அப்ப.

vasu balaji said...

@Sethu

ஷ்ஷ்ஷ்.:))

Unknown said...

பிறந்த நாளன்று தந்தை தாயை நினைப்பதற்காக கேட்டேன்.

Have a wonderful Day Sir.

vasu balaji said...

இங்க பிறந்தநாள் முடிஞ்சி அடுத்த நாள் வந்தாச்சே:)) நன்றி சேது.

vasu balaji said...

கொஞ்சநாள் தொல்லையில்லாம இருந்துச்சு. திரும்பவுமா. இந்த ஜீஜிக்ஸ் தொல்ல தாங்க முடியல நாராயணா:))

Anisha Yunus said...

சரிதான் சார். இருந்தாலும் இன்னும் இந்திய நடைமுறைக்கு ஒத்து வராத விஷயம்...மனதளவில் தயாரான முதியவர்களையும்...சுற்றம், சமூகத்திற்கு பயந்து அவர்களை அனுப்பவும் செய்யாமல் வீட்டில் வைத்திருக்கவும் இஷ்டமில்லாமல் முழு சூழ்நிலையையும் பிரச்சினைக்குரியதாய் ஆக்கியே வாழ்பவர்களையும் நான் பார்க்கத்தான் செய்கின்றேன். இன்பமும் துன்பமும் மனதில்தான் உள்ளது!! நன்றி, நல்லதொரு கருவை, நல்லதொரு கதையில் சொன்னதற்கு!

வை.கோபாலகிருஷ்ணன் said...

87 வயதுவரை வாழ்நத என் தாய்க்கு நான் கடைசி பிள்ளை. அவர்களை விட்டு ஒரு வாரம் கூட நான் பிரிந்து இருந்ததில்லை. இப்போது இருந்தால் என் தாய்க்கு நூறு வயது முடிந்து 101 வயது பிறந்திருக்கும். தங்களின் பதிவு எனக்கு என் தாயாரை நினைத்து இரண்டு சொட்டு கண்ணீர் வரவழைத்து விட்டது. எவ்வளவு வயதானால் என்ன, தாய் என்பவளின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று தான். பதிவுக்கு நன்றியும் பாராட்டுகளும்.