Sunday, September 19, 2010

ரங்கு

பசித்தது ரங்குவுக்கு. எட்டரைக்கெல்லாம் கொதிக்க கொதிக்க ஊதி ஊதி நுனிவிரலால் சாப்பிட்டுப் பழக்கம். அதிகாலையிலிருந்தே அலைச்சல். ஓட்டத்தின் நடுவே யாரோ காஃபி கொடுத்தார்கள். அம்மா போடும் காஃபி மாதிரி இல்லை. பசிக்கிறதென யாரிடம் சொல்வது? மெதுவே வாசலுக்கு வந்தான். மெதுவாக, ஒரு பூந்தளிர் கரம் கை பிடித்து இழுத்தது. ரங்கு மம்முடா என்றான் ரவி.

ரங்குவுக்கும் என்ன செய்யவென்று தெரியவில்லை. இது முதல் முறையில்லை. மணி ஒன்பதுக்கும் மேல் ஆகிவிட்டது. வந்துவிடுகிறேன் என்று சொன்ன பெரியப்பாவைக் காணோம். வாசலுக்கு ஓடி வந்துவிட்டாரா என்று பார்த்து பார்த்து கால் வேறு வலித்தது. அப்பாவைப் பார்த்தான்.

எப்போதும் விட அழகாய் இருந்தார். குழைத்து இட்டிருந்த விபூதியும், லேசான சிரிப்போடு கண்மூடிக் கிடந்ததுவும், மூக்கிலிருந்த பஞ்சும், தலைக்கட்டும் தாண்டியும் அழகாய் இருந்தார். வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அம்மா அவ்வப்போது வெடித்து அழுவதும் ஓய்வதுமாய் இருந்தாள். இவளிடம் எப்படிக் கேட்பது பசிக்கிறதென்று. மெதுவே அப்பாவிடம் போய் அமர்ந்தான். வெற்றிலைப் போட்டாற்போல் உப்பியிருந்த கன்னத்தைத் தடவினான். வாயோரம் நீர் வழிய, பஞ்சால் துடைத்தான்.

அம்மா இழுத்துக் கட்டிக் கொண்டு அழுதாள். அதைப்பார்த்து ரவியும் ஓடிவந்து மடியில் அமர்ந்து அழுதான். பிஞ்சுக் கரம் கொண்டு கண்ணீர் துடைத்து அம்மா அயாத! மம்மும்மா என்றான். இன்னும் அழுதாள். சற்று ஓய்ந்து தள்ளாடி எழுந்து, காசு எடுத்துக் கொடுத்தாள் ரங்குவிடம். போம்மா. ஹோட்டலில் ரெண்டு இட்டிலி வாங்கி ஊட்டி விடு. நீ சாப்பிடக்கூடாதும்மா. கொள்ளி போடணுமேடா என்று வெடித்து அழுதாள்.

கொஞ்சம் நடந்து கொஞ்சம் தூக்கி என்று கூட்டிக் கொண்டு போய் நான்கு வயது ரவிக்கு இட்டிலி ஊட்டி கூட்டிக் கொண்டு வந்தும் பெரியப்பாவைக் காணோம். இன்னோரு ஆண்டி காஃபி கொண்டு வந்து கொடுத்தார்கள். தயங்கித் தயங்கி, மாமி, புள்ளைங்களுக்கு எங்க வூட்டு இட்டிலி கொடுக்கலாங்களா என்றார். இல்லம்மா! சின்னவனுக்கு வாங்கிக் கொடுத்துட்டான். ரங்கு சாப்பிடக்கூடாது என்று அடுத்த பாட்டம் அழுதாள்.

காபின்னா குடிம்மா என்று கொடுத்த காஃபியும் குமட்டிக் கொண்டு வந்தது. ரெண்டு மணியிலிருந்து அலைச்சல். தூக்கமா, பசி மயக்கமா என்று தெரியாமல் களைப்பாய் இருந்தது ரங்குவுக்கு. அம்மாமேல் சாய்ந்துக் கொண்டு உறங்கிப் போனான். எப்போதோ பார்க்கவரும் அக்கம் பக்கத்தினரோடு சேர்ந்து வெடிக்கும் அழுகுரல் மீறி உறங்கிப் போனான்.

சற்று நேரத்தில் மெதுவே உலுக்கினாள் அம்மா. கண்ணா! அப்பா ஆஃபீஸ்ல போய் சுதர்சனம் மாமா, சுப்பாராவ் மாமாக்கெல்லாம் சொல்லிட்டு வந்துட்டும்மா. பார்த்துப் போ. பராக்குப் பார்க்காம சீக்கிரம் வரணும் என்று அழுதாள்.

வயிறு லேசாக வலிக்க ஆரம்பித்திருந்தது. பசியென்று சொல்லத் தோன்றவில்லை. கொள்ளி வைக்கிறதுன்னா என்ன என்று யோசனை வேறு வந்தது. தளர்வாய் நடந்து அலுவலகம்போய், சுதர்சனம மாமாவைப் பார்த்தான். எப்போதும் போல் சிரித்த முகத்துடன் ‘என்ன ராஜா! அப்பாக்கு உடம்பு முடியலையா?’ என்றார்.  ‘அப்பா காலையில செத்து போய்ட்டார் மாமா. சுப்பாராவ் மாமாக்கும் சொல்லிட்டு வீட்டுக்குப் போகணும்’ என்றான்.

விலுக்கென்று ஆஜானுபாகுவாய் எழுந்து இழுத்துக் கட்டிக்கொண்டார். கண்கள் கலங்க ‘நீ ஏன் ராஜா வந்த? எதாச்சும் சாப்பிட்டியா?’ என்றார்.  ‘கொள்ளி போடணுமாம் மாமா. சாப்பிடக்கூடாதாம்’ என்று அழாமல் சொன்னவனை விக்கித்துப் பார்த்தார். மெதுவே பிடித்து அமர்த்தி, யாரையோ கூப்பிட்டு ஒரு பழரசம் வாங்கிக் கொடுத்து,  ‘இது சாப்பிடலாம்டா. இந்த அண்ணன் கூட போ. நாங்க வரோம்’ என்று அனுப்பி வைத்தார்.

சைக்கிளில் கொண்டுவந்து விட்ட அந்த அண்ணனும், பார்த்து அழுதான். பெரியப்பாவைக் காணோம். மாமாக்கள், பெரியம்மா எல்லாம் வருவார்களா தெரியவில்லை. அக்கா வரமுடியாது என்று அம்மா சொன்னாள். சற்று நேரத்தில் சுதர்சனம் மாமா, சுப்பா ராவ்மாமா என்று அப்பாவின் நண்பர்கள் வந்தார்கள். கதறல் வெடித்தது. சுதர்சனம் மாமா மட்டும் மெதுவே ஒரு பேப்பரில் அம்மாவிடம் கையெழுத்து வாங்கினார்.

மெதுவே ரங்குவை இழுத்து,  ‘சொந்தக்காரங்களுக்கு தந்தி குடுக்கணும்பா. அட்ரஸ் வேணுமே. அக்கா முகம் பார்க்ககூட முடியாதுப்பா. உங்க பெரியப்பா இங்க இருக்காருன்னு அப்பா சொல்லுவாரே, எங்கே என்றார். வந்துடுவாங்க மாமா’ என்றான் ரங்கு. வந்தவர்கள் எல்லாரும் கிளம்பிப் போய்ச் சற்று நேரத்தில் வந்தார்கள் பெரியப்பாவும் பெரியம்மாவும்.

அழுகையெல்லாம் ஓய்ந்த பின், தந்தி, ஆஃபீஸ் நண்பர்கள், உங்க அண்ணா தம்பி என்று என்னமோ பேசிக் கொண்டிருக்க, மெதுவே மீண்டும் ரவி, ரங்கு மம்முடா என்றான். எழுந்து வந்த பெரியப்பா, பக்கத்துல வர வழியில ஹோட்டல் பார்த்தேன். ஒரு தயிர்சாதம் வாங்கிண்டு வா என்று ஐந்து ரூபாய் தந்தார். பெரியப்பா பசிக்குது என்று சொல்ல வேண்டும் போல் தோன்றியது. கூட ஒரு ரூபாய் கொடுத்து நீ ஒரு காஃபிமட்டும் சாப்பிடலாம்டா. கொள்ளி போடணும். நிறைய வேலையிருக்கு சீக்கிரம் வா என்று அனுப்பினார்.

யாரோ ஊட்டிவிட, சாப்பிட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருந்தான் ரவி. பெரியப்பாவுடன், புரோகிதர் வீடு, ஆஃபீஸில் முன்பணம் என்று அலைந்து திரிந்து களைத்து, ஒரு வழியாய் ஈமக்கிரியை முடித்து வர, பசி இன்னும் காந்தியது. சலூனில் வேணாம் பெரியப்பா என்று அழ அழ, தலைமுடியை ஒட்ட வெட்டி, பின்புறம் ஒரு கொத்து முடி மட்டும் வெட்டாமல் விட்டு வீடு திரும்பினார்கள். வாசலிலேயே குளித்து உள்ளே நுழைய பெரியம்மா சமையல் முடித்திருந்தாள்.

அம்மா, பசிக்கறதும்மா என்று முதல் முறை ஈனமாய்ச் சொன்னபோது ஓவென்று கட்டிக் கொண்டு அழுதாள் அம்மா. சாதம் கலந்து பெரியம்மா முதல் உருண்டை கொடுக்கவும் தொண்டையை அடைத்தது. சுவரோரம் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள் அம்மா. உன் பிள்ளையைப்பார் எவ்வளவு தைரியமாய் அழாம தானே ஓடி எல்லாம் பண்ணி ராஜா மாதிரி அனுப்பி வச்சான் அப்பாவை, மனச தேத்திண்டு ஒரு வாய் சாப்பிடு என்றார் மாமா.

ரங்குவுக்கு அப்போதுதான் உறைத்தது. ஆமாம் எனக்கு ஏன் அழுகை வரவில்லை? அப்பாவுக்கு நெருப்பு சுடாதா? நாளைக்கு காலையிலேயே போக வேண்டும் என்றார்களே. கொளுத்திய பிறகு அங்கு போய் என்ன செய்வது? அப்பா இல்லாமல் எப்படி? ஸ்கூல்? அய்யோ ஸ்கூலில் சொல்லவில்லையே. நாளைக்குப் போய் சொல்லணும். ஸ்கூல் திறந்து ஒரு வாரம்தான் ஆச்சு. புது வாத்தியார் மட்டம் போட்டதுக்கு அடிப்பாரோ? ம்ஹூம்! அழுகை வரவில்லை.

காலையில் பாலுக்குப் போய், சாம்பலாக் கிடக்காரேடா உங்கப்பா என்று மாமா கட்டிக்கொண்டு அழுதார். அப்போதும் அழுகை வரவில்லை. ஸ்கூலெல்லாம் பரவாயில்லை. கருமம் பண்ணவன் வெளியில் போகக்கூடாது. காயம் படக்கூடாது என்றபோதும் அழுகை வரவில்லை. பத்தாம் நாள் காரியத்தின்போது அழு என்றபோதும் அழுகை வரவில்லை. கதறிய அம்மாவைக் கட்டிக் கொண்டு அம்மா அயாதம்மா என்று ரவி கூட அழுது தீர்த்தான்.

சரியான கல்லுளிமங்கன்! ஒரு பொட்டு கண்ணீர் வரலையே என்று அத்தை சொன்னது புரியவில்லை. ஒரு வழியாகக் காரியம் முடிந்து சகஜ நிலையில் பள்ளிக்குப் போகலாம் என்றதும், ஜெயிலிலிருந்து விடுதலையானாற்போல் ஒரு பாரம் போனது.

வகுப்புக்குப் போனதும் எல்லோரும் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். சற்று இடைவெளியில் கொல்லென்று சிரித்தார்கள். இங்க பாருடா சட்டியக் கவுத்து முடி வெட்டிருக்காருடா என்று சிரித்தான் ஒருவன். பெஞ்சில் அமைதியாக அமர்ந்தான் ரங்கு. பின்னாடி பெஞ்சில் இருந்தவன் இங்க பாருடா டும்மி என்று கொத்து முடியை இழுத்தான். பெரியப்பா மேல் கோபம் வந்தது. புது ஆசிரியர் வந்தார்.

‘வாங்க தொரை! சாருக்கு மூணுமாசம் லீவு போதலையோ? ஏன் ஒருவாரம் காணோம். இது என்னா முன்மண்டைய நாய் நக்கியிருக்கு?’ என்றதும் பின்னாலிருந்தவன் மீண்டும் கொத்து முடியை இழுத்து, ‘இங்க பாருங்க சார் டும்மி’ என்று கத்தினான். எழுந்த சிரிப்பலையில் வகுப்பே அதிர்ந்தது.

அடிவயிற்றிலிருந்து ஒரு பந்து எழும்பி, நெஞ்சையடைத்தது ரங்குவுக்கு. விழுங்க விழுங்க மேலெழும்பியது. உதடு தனிச்சையாய்த் துடித்தது. கண்ணில் மெதுவே முதல் சொட்டு நீரிறங்கியது.  ‘சிரிப்பிற்கு நடுவே லேசான புன்னகையுடன் நின்றிருந்த ஆசிரியரைப்பார்த்தான்.

‘சார்! எங்கப்பா செத்துட்டாங்க சார். கொள்ளி போட்டா இப்படித்தான் இருக்கணும்னு எங்க பெரியப்பா வெட்டச் சொன்னாங்க சார்’ என்று சொல்லி முடிக்க அடைத்துக் கொண்டிருந்த பந்து அப்பா அப்பா என்ற விசும்பலோடு வெடித்துக் கிளம்பியது. சட்டெனெ வெளிறிய முகத்தோடு தோளை அழுத்தி அமர வைத்த நொடி மயான அமைதி வகுப்பில். சேர்த்து வைத்த துக்கமெல்லாம் பொங்கிவர மேசையில் கவிழ்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதான் ரங்கு. திடீரென அப்பாவின் இழப்பை உணரத்துவங்கியிருந்தான்.

89 comments:

creativemani said...

வாவ்.. ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது சார்..

Unknown said...

ரங்குவோடு சேர்ந்து நானும் அழுது கொண்டிருக்கிறேன் ... விவரம் புரிபடாத வயதில்.. வறுமை மிகுந்து தந்தையும் இறக்க.. பசியின் கொடுமையை சொல்லத் தெரியாமல் நிற்கும் ரங்குவின் வடிவில் நான் என்னைத்தான் உணர்கிறேன் ....

கலகலப்ரியா said...

ம்ம்.. உணர முடியுது சார்.. :)..

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் எத்தனை விதமான அனுபவங்கள்... சிலர் வளர்கிறார்கள்... சிலர்... ம்ம்..

இப்டி நிறைய எழுதுங்க...

எல் கே said...

மனச பிசயது சார்.. என்ன சொல்ல

மணிஜி said...

அண்ணா !கையை சத்த தரேளா?

suneel krishnan said...

எனது எட்டு வயதில் நடந்த சம்பவத்தை நான் மீண்டும் என் கண்களால் காண்பது போல் இருக்கிறது ..

என்னது நானு யாரா? said...

விவரம் புரியாத வயதில் தாய் தந்தையின் மரணம்! ஒரு கொடுமை தானே?

நன்றாக இருக்கிறது உங்களின் சிறுக்கதை.

ஐயா! நேரம் இருக்கும்போது என் கடை பக்கம் வந்துட்டுப் போங்க!

ஆரூரன் விசுவநாதன் said...

கிளாசிக்......ரொம்ப நாளாச்சு இப்படி படிச்சு.....

Ahamed irshad said...

க்ரேட் பாலா சார்..ரொம்பவே உருகிட்டேன் கதையில்..

எம்.எம்.அப்துல்லா said...

எக்ஸலண்ட்ணா

Anonymous said...

வறுமையின் தீ நாக்கு சுட்டு பொசுக்கியது எத்தனையோ இளம்குருத்துகளை அதில் ரங்குவும் ஒருவன்..மனதை கனக்க செய்யும் கதை

T.V.ராதாகிருஷ்ணன் said...

Bala ம்..ம்..ம்..ம்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

Bala ம்..ம்..ம்..ம்..

பழமைபேசி said...

சிறப்பிடுகையாங்ணா இது?

வல்லிசிம்ஹன் said...

அந்தக் குழந்தைக்கு அழ முடிந்ததே.என்ன ஒரு சோகம்.நீங்க சொன்ன விதம் அந்தப் பயணத்தை மீண்டும் பார்த்த வலி.

பிரபாகர் said...

மரணத்தின் வலியை இருமுறை உணர்ந்தவன் என்ற முறையில் படித்து முடித்ததும் மனம் முழுதும் பாரம்... கண்களில் கசியும் கண்ணீர்...

பிரபாகர்...

நசரேயன் said...

ம்ம்ம்

பவள சங்கரி said...

ஆசிரியரையும், மற்ற குழந்தைகளையும் பார்த்தவுடன், ரங்குவிற்கு தனக்கு அப்பா இல்லை என்று சுரீரென உரைக்கத் துவங்குகிறது.........routine lifeற்கு வந்தவுடன் நிதர்சனம் புரிய, அழுகை வெடிக்கிறது..........ரங்குவின் சோகம் என்னவோ செய்கிறது......அருமை சார். மனதைத் தொட்ட இல்லை சுட்ட கதை. என்ன துக்கம் இருந்தாலும் வயிறு பசிக்கிறதே?

பத்மா said...

படிக்கிறவர்களின் கண்ணில் துளிர்க்கும் ஒவ்வொரு கண்ணீர் துளியும் ரங்குவின் தகப்பனுக்கு சமர்ப்பணம் ..
உங்களுக்கு அது மனதிலிருந்து எழும் பாராட்டு ..ஓசையில்லா கைத்தட்டு

சபாஷ் சார்

Unknown said...

ரங்குவோட சேர்ந்து ஒரு அழற நிலை. நிதர்சனமான உண்மை. தந்தையில்லாமல் ரங்கு படப் போற கஷ்டங்களை நினைச்சா. அப்பப்பா!. மனதை அப்பிடியே உருக்கி எழுதிய எழுத்துக்கள்.

settaikkaran said...

உள்ளத்தின் மூலையில் ஒளிந்து அழுந்தி இறுகி உருண்டையாகிற சோகம் வெடித்து கண்ணீராய்ச் சிதறும்! அந்த அனுபவத்தை இதை வாசிக்கும்போது உணர்ந்தேன்!

Ashok D said...

ஏதாவது ஒரு வரி.. எவர் வாழ்விலும் நடக்கும்/நடந்துக்கொண்டிருக்கும் சாத்திய கூறுகள் இருப்பதால்.. அருமை :)

actualla இந்த பதிவுக்கு smiley போடக்கூடாது இருப்பினும் :)

Paleo God said...

நெகிழ்வான புனைவு சார்!

காமராஜ் said...

'கொள்ளி என்றால் என்ன', 'அப்பாவுக்கு சுடுமே'. இரும்பு அணைகளையும் உடைக்கும். பாலாண்ணா பாராட்டவா சோகத்தில் கறைந்துபோகவா.க்ரேட்.

காமராஜ் said...

பாலாண்ணா.. முடிவு இன்னும் கூடுதலாக பேசுகிறது.இது சுக்கானைத்திருப்பிவிடும் முடிவு.யாரையும் இளப்பமாக பேச, இனி நாக்கூசும். இன்னொரு க்ரேட்.

தெய்வசுகந்தி said...

அருமை!!!!!

ஈரோடு கதிர் said...

கலங்கடித்த இடுகை...

வாசித்து முடிக்க வெறுமை சூழ்ந்து நிற்கிறது

புனைவு என்பதோடு அனுபவம் என பார்க்கும் போது மனது கூடுதலாய் பிசையப்படுகிறது

சிவராம்குமார் said...

ரொம்ப அருமையான பதிவு!!! மனசுக்குள் வெகு அருகில் இடம் பிடித்து விட்டது!

மாதேவி said...

ரங்குவுடன் எங்கள் மனமும் நெகிழ்கிறது.

VISA said...

அருமையான வர்ணனை லெகுவான ப்ளோ.

Class

பெசொவி said...

மனத்தை என்னவோ செய்கிறது, சார்!

Anisha Yunus said...

என்ன சொல்றதுன்னே தெரியல சார். சொந்த நாட்டிலிருந்து இப்படிவெளிநாடு வந்து வாழ்வது ஒரு சுகமே என்றாலும் பல விதங்களில் அது கலவரம்தான். அதில் ஒன்று, வீட்டிலிருந்து வரும் தொலைபேசி சப்தம். எப்போ என்ன நியூஸ் சொல்வாங்களோன்னு ஒவ்வொரு முறையும் பயந்து பயந்து ஃபோனெடுப்பேன். அந்த உணர்வை இதோ இந்த கதையிலும் உண்ர்கிறேன். பசி மிகக் கொடியது சார். அதிலும் அந்த பசியை அடைக்க தாயோ தந்தையோ இல்லாமல் போனால்....வார்த்தைகளே இல்ல சார். ரொம்ப நல்லா எழுதறீங்க. வாழ்த்துக்கள்!

ஸ்ரீராம். said...

கலங்க வைத்து விட்டீர்கள். கதை என்றும் சொல்லலாம். கேரக்டர் பதிவிலும் சேர்க்கலாம்.

Anonymous said...

ரொம்ப நெகிழ்வா இருக்கு சார்..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

நல்ல சிறுகதைக்கான கூறுடன் இருக்கிறது.
கொஞ்சம் செப்பம் செய்து விகடனுக்கு அனுப்பலாம்.

நன்றி.

Unknown said...

கடைசி வரிகளில் ரங்குவோடு சேர்ந்து படிப்பவர் கண்களிலும் கண்ணீர் முட்டச் செய்வது வித்தை.

இது மாதிரி நிறைய எழுதுங்க.

thiyaa said...

அருமையா இருக்கு இன்னும் எழுதுங்க எழுதிக்கிட்டே இருங்க

ஆனந்தி.. said...

அண்ணா..உணர்வு பூர்வமான கதை!சிறுவயதில் தாய்,தந்தை இறந்து போவது ரொம்பவே துர்பாக்கியமான ஒரு நிகழ்வு..வாழ்வின் அடையாளங்கள் வேறு திசை நோக்கி அடிச்சுட்டு போகும் ஒரு மோசமான காலம்...அம்மா,அப்பா எப்பவும் நமக்கு வேணும் அண்ணா..நாமலே அம்மா,அப்பா ஆய்ட்டாலும்!!ரங்கு கதாபாத்திரம் அமைச்ச விதம் ரொம்ப நேர்த்தி..அண்ணா..இந்தாருங்கள் என் பாராட்டுக்களை..

க.பாலாசி said...

எவ்வளவு உயிரோட்டம் இந்த எழுத்தில... மனதை பத்திரப்படுத்திதான் படிக்கவேண்டும்போல...அவ்வளவு கலக்கம் தரக்கூடிய கதை அல்லது அனுபவம் எதுவாகினும்..

"உழவன்" "Uzhavan" said...

கண்ணீர் ரங்குவின் கண்களில் மட்டுமல்ல...
அருமையான நடை..

நிஜாம் கான் said...

அண்ணே! இதையும் கேரக்டர் ரங்குன்னு தான் படிக்கத்தோனுது.. நல்லாயிருக்கு.

அரசூரான் said...

இளம் வயதில் தந்தையை இழந்த ஒவ்வொருவருக்கும் இந்த அனுபவம் இருக்கும் என நினைக்கிறேன். தலைமையாசிரியர் கேட்டார்... "ஏண்டா அம்பி தோப்பனார் வல்லியா?" என்று. நான் அழுதேன் பள்ளியில் பதினோராம் வகுப்பு சேர்க்கையின் போது.

vasu balaji said...

@அன்புடன்-மணிகண்டன்

நன்றிங்க மணிகண்டன்

vasu balaji said...

@கே.ஆர்.பி.செந்தில்

நன்றிங்க செந்தில். ம்ம்.

vasu balaji said...

@கலகலப்ரியா

ம்ம். நன்றிம்மா. முயற்சிக்கிறேன்.

vasu balaji said...

@LK

நன்றி எல். கே.

vasu balaji said...

@மணிஜீ......

நன்றிண்ணா:))

vasu balaji said...

@dr suneel krishnan

ஓ! சாரி டாக்டர்:(

vasu balaji said...

@என்னது நானு யாரா?

நன்றிங்க. வரேங்க.

vasu balaji said...

@ஆரூரன் விசுவநாதன்

ம்ம்ம்ம்

vasu balaji said...

@அஹமது இர்ஷாத்

நன்றி இர்ஷாத்.

vasu balaji said...

@எம்.எம்.அப்துல்லா

நன்றி அப்துல்லா

vasu balaji said...

@ஆர்.கே.
சதீஷ்குமார்


நன்றிங்க சதீஷ்குமார்.

vasu balaji said...

@T.V.ராதாகிருஷ்ணன்

நன்றி சார்:)

vasu balaji said...

@பழமைபேசி

இஃகி. நன்றிங்க.

vasu balaji said...

@வல்லிசிம்ஹன்

நன்றிங்க:)

vasu balaji said...

@பிரபாகர்

நன்றி பிரபா. சாரி.

vasu balaji said...

@நசரேயன்

ம்ம்ம்

vasu balaji said...

@நசரேயன்

ம்கும்

vasu balaji said...

@நித்திலம்-சிப்பிக்குள் முத்து

நன்றிங்கம்மா.

vasu balaji said...

@பத்மா

நன்றிம்மா.

vasu balaji said...

@Sethu

நன்றி சேது

Mahi_Granny said...

மிக சாதாரண வார்த்தைகளில் எப்படி இவ்வளவு வருத்தத்தை காட்டமுடிந்தது.கலங்கிட்டேன் சார்

vasu balaji said...

@சேட்டைக்காரன்

நன்றி சேட்டை

vasu balaji said...

@D.R.Ashok

நன்றி அஷோக்.

vasu balaji said...

@【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

நன்றி ஷங்கர்.

vasu balaji said...

@காமராஜ்

நன்றி காமராஜ்:)

vasu balaji said...

@தெய்வசுக
ந்தி


நன்றிங்க.

vasu balaji said...

@ஈரோடு
கதிர்


நன்றி கதிர்.

vasu balaji said...

@சிவராம்கு
மார்


நன்றிங்க சிவராம்குமார்.

vasu balaji said...

@மாதேவி

நன்றிங்க மாதேவி

vasu balaji said...

@VISA

நன்றி விசா.

vasu balaji said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை

நன்றி பெ.சொ.வி.

vasu balaji said...

@அன்னு

நன்றிங்க அன்னு

vasu balaji said...

@ஸ்ரீராம்.

நன்றி ஸ்ரீராம்

vasu balaji said...

@Balaji saravana

நன்றி பாலாஜி

vasu balaji said...

@முகிலன்

நன்றி முகிலன்

vasu balaji said...

@தியாவின் பேனா

நன்றி தியா

vasu balaji said...

@ஆனந்தி..

நன்றி ஆனந்தி

vasu balaji said...

@க.பாலாசி

நன்றி பாலாசி

vasu balaji said...

@"உழவன்" "Uzhavan"

நன்றிங்க உழவன்

vasu balaji said...

@இப்படிக்கு நிஜாம் ...,

நன்றி நிஜாம்

vasu balaji said...

@அரசூரான்
நன்றிங்க அரசூரான்

vasu balaji said...

@Mahi_Granny

நன்றிங்க மஹி கிரான்னி

Chitra said...

மனதை பிசைந்த இடுகை.

சிநேகிதன் அக்பர் said...

உருக வச்ச கதை பாலாண்ணா.

பழமைபேசி said...

உங்க கடமையுணர்வு... முடியலை... பொறுமையா ஒவ்வொருத்தருக்கும் நன்றி சொல்லி இருப்பதைப் பார்த்து பொறாமையா இருக்கு....

TBR. JOSPEH said...

உண்மையிலேயே மிகவும் அருமையாக இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரும்பாலான வாசகர்களுடைய பரிந்துரைக்கு ஏற்ற பதிவு. வாழ்த்துக்க்ள்.

Pudukkottaian said...

Bala Sir,

Very touching!!!... Afer reading this Tears in my Eyes..... Great Work Sir......

Sankar V