Wednesday, March 9, 2011

இலட்சுமணப் பெருமாள் கதைகள் - வாசிப்பனுபவம்.



"சில் என்ற வாழைமட்டையில் உட்கார வைத்து பளிங்குத்தரையில் வழுக்கிக் கொண்டு போகும்படியாய் இலட்சுமணப் பெருமாள் என்னை இழுத்துக் கொண்டு ஓடினார். பஜனை மடங்களும் புராண இதிகாச சிந்தனைகளும் உள்ள எனது மக்களைப் பார்த்து எத்தனை வருசங்களாகிவிட்டன....”

புத்தகக் கண்காட்சியில் இலட்சுமணப் பெருமாள் கதைகளின் அட்டைப் பட ஓவியம் என்னையறியாமல் எடுக்கத் தூண்டியது. பின்னட்டையில் மேல் பத்தியில் இருந்த வரிகளின் கீழே கி.ராஜநாராயணன் என்ற பெயர். வேறென்ன வேண்டும். படிக்க எடுப்பதும், இருக்கட்டும் என்று தள்ளி வைத்துவிட்டு மற்றவற்றைப் படிப்பதுமாயிருந்தாலும், அட்டைக் கிழவனின் பார்வைத் துளைப்பில் ஆரம்பித்தேன்.

கரிசல் மண்ணுக்கும் எழுத்துக்கும் அப்படி என்ன காதலோ. ஒரு வேளை எழுத்துக்காகவே ஒரு கால கட்டத்தில் நிப்புத் தொழில் செழித்திருந்ததோ என்று கூட தோன்றும். கதையின் ஆழம் ஒரு பக்கம் என்றால் நடை...

கி.ரா.வை படிக்கிறது வேறே. அந்த மனுசன் தோள்ள தூக்கி வெச்சி திருவிழாபார்க்க கூட்டிப் போன கதையா பராக்கு காட்டுவார். மொதப்பக்கம் தாண்டியாச்சின்னா கதைக்குள்ள நாமும்ல இருந்து வேடிக்கை பார்ப்போம். முடிச்சா புத்தகத்தை மூடினா அந்த உலகத்துல இருந்து வெளிய வரணுமேன்னுல்ல தவிப்பா இருக்கும்.

இலட்சுமணப் பெருமாள் எழுத்தும் அப்படித்தான். என்ன, கி.ரா.காலத்து மொழியில்லை. அதுவும் மாறினாலும் அடிநாதம் மாறாத மொழி. இதெல்லாம் கதையில்லெ. ஒரு ஒரு கதையும் ஒரு மனுசன் அல்லது மனுசியோட வாழ்க்கெ. எதச் சொல்ல எத விட. சிறுகதைத் தொகுப்புன்னா அது எடுத்தாச்சோ முடிக்காம வச்சு பழக்கமில்லை. இதுல அந்த பப்பு வேகாது. சொல்லுற கதை அப்படி.

‘ஊமங்காடை’ன்னு ஆரம்பிக்குது கதை. பஞ்சாயத்து ஜனங்களின் கிண்டலும், தன் கணவன் ஒரு திருநங்கை என்பதைச் சொல்லவும் முடியாமல் வாழவும் முடியாமல் ஊராரின் சிரிப்புக் கிடையே வழக்கு வரும்போது யாரும் ஊகிக்க முடியுமா? தன்னைப் பெண்ணாகவே பாவித்து திருமணம் செய்யக் கோரியவளை மகனாக நினைத்து ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயித்ததும், அடித்து உதைத்து தன் கவுரவத்துக்கு தாலி கட்ட வைத்ததும்? பொன்ராசு அழுதானோ இல்லையோ, நமக்கு நெஞ்சு வெடிக்கும்.

‘அத்து விட்ட’ பிறகும் அவளுக்குத் தோழியாய், அவள் பிள்ளைக்குக் காவலாய், அது பசியில் அழுது பாலுக்கு முண்டுகையில் தன் மார்பை ஏக்கமாகத் தடவும் பொன்ராசை பார்த்த தங்ககிளிக்கு மட்டுமா சரஞ்சரமாய்க் கண்ணீர் வரும்? இப்படி ஒரு கதையை படித்துவிட்டு அடுத்த கதைக்கு எப்படிப் போக?

ராமாயணத்தில் பாவப்பட்ட கதாபாத்திரம் யார்னு ஒரு கேள்வி வருது,  பாராயணம் கெங்கம நாயக்கர் கதையில. அவரே கேட்டு கதையச் சொல்றார். ராமன் வனவாசம் போகப் புறப்படவும், பின்னாடியே கிளம்பிட்டான் லட்சுமணன். ஊர்மிளைகிட்ட ஒரு வார்த்தையும் சொல்லல. வனவாசம் முடிஞ்சி வந்தப்பதான் கூட்டத்தில ஊர்மிளையை காணோம்னு கவனம் வருதாம். தேடிப் போறானாம். இவன் போனப்ப இருந்த உடையோட நகை அலங்காரத்தோட கட்டில்ல அவ எலும்புக் கூடு இருந்துச்சாம்.

இப்படிக் கதை சொல்ற கெங்கம நாயக்கருக்கு கெத்தும் அதிகம்தான். வீட்டுல தகராருன்னு இவரு மடத்துக்கு வந்துடுவாரு. வர முன்ன பொண்டாட்டிக்கு சாமான், பண்டம் வாங்கிக் கொடுத்து, கொட்டடி ஓரமா சமைச்சி சாப்பிட்டுக்கிட்டு இருன்னு வந்துடுவாரு. அந்த மவராசி ஊர்மிளை. செத்துக் கெடக்கான்னு தகவல் வந்து ஓடுறார் நாயக்கர். வாங்கிக் கொடுத்த பண்டம் எல்லாம் ஒரு மூலையில. அப்பா அம்மா கூட ஒத்து வரலைன்னு தனியா வந்தவங்களுக்கு நெஞ்சுல ஒரு மின்னல் வெட்டும்.

உள் பாவாடை கிழிஞ்சி போய் முடி போட்டு போட்டு ரிப்பன் மாதிரி இருக்கேன்னு ஒன்னுக்கு போகக் கூட தனியாப் போறா பாண்டியம்மா. கெரகம் அன்னேரம் பார்த்து ஒருத்தி வருவாளா? பொம்பளை கஷ்டத்த கூட்டத்துல சொல்லி சிரிப்பாளா? சோக்குக்கா பாண்டியம்மா உள்பாவாடை கட்டுறா.?நைலக்ஸ் சேல இடுப்புல நிக்க வேணாமா? இது புரியாம புது டிசைனான்னு கேலி பேசினா என்ன செய்ய? ஒரு வேகத்துல உருவி வேலிக்கு அந்தண்டை போடுறாள். டிபியில படுத்து கெடக்கிற புருசனுக்கு கைலிக்குள்ள அண்டர்வேர் இல்லாட்டிதான் என்னன்னு அதை உருவி தான் போட்டுகிட்டு போறா வேலைக்கு.

கும்பலோட போனா மானம் போகுமேன்னு அடக்கி அடக்கி வெடிச்சிடும் இனிமென்னு ஒத்தையாளா ஒன்னுக்கிருக்கப் போறா. சுத்தி முத்தி பார்த்து அண்டர் வேரை அவிழ்த்து ஒன்னுக்கிருக்கவா ஆளு வரணும். கிழிஞ்ச பாவாடைக்கே சிரிப்பா சிரிச்சாச்சே, கையில அண்டர்வேரோட சிக்க விதிக்குமா. வீசி எறிஞ்சிட்டு வந்து தீப்பெட்டி ஒட்டுறா. நேத்தைய பாவாடையும் இன்னைய அண்டர் வேரையும் சேர்த்து கொண்டுவந்து மொத்தமா கழுவேத்திட்டான் கணக்குப் பிள்ளை. வேலையும் போய் மானமும் போய் வீதிக்கு வர மூச்ச விட்டுட்டான் புருசன்னு ஆளு வருது.

கிழடுங்களுக்கு இருக்கிற பிரச்சனை, பாரமா நினைச்சி குழந்தையை மட்டுமில்ல கிழடுகளையும் கரை சேர்க்கிற புண்ணியவதி, பட்டாசு ஃபேக்டரியெல்லாம் எந்திரம்னும் மூடியாச்சேன்னு பொழப்பத்து போனதுல லாரி ட்ரைவர்களை நம்பி ஒரு வாழ்க்கை, அதிலும் அவமானம், அடி உதைன்னு படிக்க படிக்க அப்படி என்ன சாபம் வந்து சேர்ந்துச்சு இந்த மண்ணுக்குன்னு அழாம முடியுமா?

தீப்பெட்டி பேக்டரி பத்திக்குது. அய்யோ எம் புள்ளகென்னு பதறி வாரா விறகு பொறுக்கப் போன சேர்மத்தாயி. நாலும் பொட்டப் புள்ளைக. தீ புடிச்சதுமே ஓடி வந்துட்டுதுக. கட்டிப் புடிச்சி அழுகறா. அப்புறம்? கூலியில்லாம எப்புடி கூழ் குடிக்க? பசியில குஞ்சுகள் அல்லாடுது. செத்தவங்களுக்கு மட்டும் நிவாரணம். இவளுக்கில்லே. பசிக்கிம்மான்னு அழுதா என்ன செய்வா? கைக்கொரு விறகா எடுத்து விளாசுறா. எந்த ஜமீன் கொள்ளப் போச்சுன்னு ஓடியந்தீங்கடி. ஒருத்தி பொசுங்கியிருக்கப்படாதான்னு.

ஓட முடியாம கடைசிப் புள்ள காலைக் கட்டிக்கிட்டு அழுவுது. ‘அம்மா! இனிமே தீப்பிடிச்சா ஒடீயாரமாட்டம்மா, அடிக்காதம்மான்னு.’ இப்படி குழந்தைகளுக்கு ஒரு வழி செய்யாமச் சும்மா சைல்ட் லேபர் ஆக்ட், பட்டாசு வெடிக்கத் தடைன்னு வெள்ளை வேட்டி கசங்காம சட்டம் போடுறவன வையறதா? இன்னும் மூனு வருசம் போனா எம்புள்ள தீப்பெட்டி ஃபேக்டரில வேலைக்குப் போவானாம். நான் காலாட்டிகிட்டு கஞ்சி குடிப்பனாம்னு கொஞ்சுற ஆத்தாளை வையறதா?

இலட்சுமணப் பெருமாளின் கதையை காலம் மீறி வாழும். ஏனெனில் இவை தன் போக்கில் வளரும் காட்டுச் செடிகள்னு அழகிய பெரியவன் சொல்லுறது ஒன்னு போதாதா? அவசியம் படிக்கணும்.

அருமையான கதைகள். இப்படி ஆழமா அடி நெஞ்சை உலுக்குற நிஜங்கள். அருமையான புத்தக அமைப்பு. ப்ச். எத்தனை பசியோட ருசியான சாப்பாடுன்னு அனுபவிச்சி சாப்பிடும்போது கடுக்குன்னு ஒரு கல்லு சிக்கினா பசி, ருசி எல்லாம் மீறி வந்து உக்காருதே ஒரு எரிச்சல். இந்த வம்சி பதிப்பகத்துல பிழை பார்க்க ஆளே இல்லையா? ஒரு கல்லுக்கே இப்படின்னா வாய்க்கு வாய் கல்லாயிருந்தா என்ன செய்ய?

ஆசை ஆசையா பின்னூட்டம் போட்டு இன்னைக்கு உங்களுக்கு முன்ன வாங்கிடுவேன்னு வாங்கின அடுத்த விருந்து தோழர் காமராஜின் கருப்பு நிலாக் கதைகள் காத்திருக்கு. 
-*-

20 comments:

க ரா said...

நீங்க படிச்சத அப்படியே எங்க தலைக்குள்ள் ஏத்தி வக்கீறிங்களே... என்னான்னு சொல்ல உங்கள.. கேரக்டர் பதிவுகளுக்கு அப்புறம் இந்த மாதிரி புத்தகங்கள பத்தி நீங்க எழுத்ரதும் கிளாசிக்காதான் சார் இருக்கு.. இன்னும் நிரைய படிச்சு நிரய எழுதுங்க எங்களுக்காக...

க ரா said...

நானும் கருப்பு நிலா கதைகள் வெச்சுகிட்டு உக்காந்து கிட்டு இருக்கேன் சார்.. எங்கூரு ஆளு எழுத்த படிச்சுகிட்டே இருக்கேன் சார்..

ஓலை said...

வாசிப்பனுபவம் அருமை சார். நண்பர் காமராஜின் கருப்பு நிலாக் கதைகள் படிக்கணும். கரிசல் நிலத்துக்கு கையப் புடிச்சி கூட்டிட்டுப் போவாரே!உங்கள் அறிமுகத்திற்கு காத்திருப்போம்.

பழமைபேசி said...

அண்ணா, எப்பவும் ஒரு பேச்சுத்தான்... நீங்க சரின்னு சொல்லுங்க... வாற ஞாயித்துக் கிழமையே வந்து வாக்கிக்கறேன்... விமான நிலையத்துக்கு கொண்டு வந்து கொடுத்தீங்கன்னா... நெம்ப செளரியம்... அந்த டீக்கடைப் பொண்ணை, இந்தவாட்டியாவது படம் புடிச்சு முகிலன் முகத்துல கரியப் பூசணும் அதான்!! இஃகிஃகி!!

அகல்விளக்கு said...

அருமைங்க அண்ணா...

உங்களுடைய எழுத்து இன்னும் இந்த படைப்பிற்கு திறம் கூட்டுகிறது...

ஒவ்வொரு கதையும் ஆழ்ந்த அழுத்தம் கொண்டவை...

நிச்சயம் வாசிக்க வேண்டும்...

Unknown said...

தன்னைப் பெண்ணாகவே பாவித்து திருமணம் செய்யக் கோரியவளை மகனாக நினைத்து ஒரு பெண்ணுக்கு திருமணம் நிச்சயித்ததும், அடித்து உதைத்து தன் கவுரவத்துக்கு தாலி கட்ட வைத்ததும்? பொன்ராசு அழுதானோ இல்லையோ, நமக்கு நெஞ்சு வெடிக்கும்.

இது சத்தியமாப் புரியலை.. கோணங்கியவே படிச்சிருவேன் போல.

பா.ராஜாராம் said...

அருமையான பகிர்வு பாலாண்ணா!

கருப்பு நிலா கதைகள்! ஆகா.. சீக்கிரம்ண்ணா! :-)

Chitra said...

அருமையான கதைகள். இப்படி ஆழமா அடி நெஞ்சை உலுக்குற நிஜங்கள். அருமையான புத்தக அமைப்பு. ப்ச். எத்தனை பசியோட ருசியான சாப்பாடுன்னு அனுபவிச்சி சாப்பிடும்போது கடுக்குன்னு ஒரு கல்லு சிக்கினா பசி, ருசி எல்லாம் மீறி வந்து உக்காருதே ஒரு எரிச்சல். இந்த வம்சி பதிப்பகத்துல பிழை பார்க்க ஆளே இல்லையா? ஒரு கல்லுக்கே இப்படின்னா வாய்க்கு வாய் கல்லாயிருந்தா என்ன செய்ய?


.......விமர்சக வித்தகர் தான், நீங்கள். சுவாரசியமான எழுத்து நடை.

அரசூரான் said...

//செத்தவங்களுக்கு மட்டும் நிவாரணம். இவளுக்கில்லே. பசிக்கிம்மான்னு அழுதா என்ன செய்வா? கைக்கொரு விறகா எடுத்து விளாசுறா. எந்த ஜமீன் கொள்ளப் போச்சுன்னு ஓடியந்தீங்கடி. ஒருத்தி பொசுங்கியிருக்கப்படாதான்னு. // நெஞ்சைப் பொசுக்கும் வரிகள். உண்மை, வறுமையின் கொடுமையை ஒரு தாயின் பார்வையில் கொடுத்திருப்பது.

செ.சரவணக்குமார் said...

பகிர்வுக்கு நன்றி பாலா சார்.

தாராபுரத்தான் said...

நானும் படித்தேன்..அதை யார்கிட்டவாது பகிர்ந்து கொள்ளாவிட்டால் ...பகிர்வுக்கு நன்றிங்க.

ஸ்ரீராம். said...

பகிர்வில் காட்டும் சிறு இடங்களே கவர்கின்றன. முழு புத்தகம் வாசிக்க ஆசை. உண்மையில் படித்த யாராவது இப்படிப் பகிர்ந்தால்தான் தெரிந்து கொள்ள முடிகிறது. அடுத்த முறை புத்தகக் கடை போகும்போது நிச்சயம் கண்கள் இந்தப் புத்தகத்தைத் தேடும். நன்றி.

Rathnavel Natarajan said...

உங்களது வாசிப்பனுபவம் அருமை ஐயா.
கிராவின் புத்தகங்களை தேடிப்படிப்பேன். இலட்சுமனப்பெருமாளின் புத்தகங்களை வாங்குகிறேன்.
நன்றி ஐயா.

kashyapan said...

லட்சுமணப்பெருமாளின் கதைகள் பற்றிய உங்கள் பதிவு அருமை.அவரை எப்படி கோண்டாட! அவருடைய கதைகளைப் படிதுவிட்டு இரவு தூக்கமிலாமல்தவித்திருக்கிறென். இந்திய மற்றும் பல மொழிகளுக்கு கோண்டு செல்ல வேண்டிய கதைகள். பதிப்பகங்கள் முயற்சிக்க வேண்டும். நவீன தமிழுக்கு அவரொரு கோடை---காஸ்யபன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான பகிர்வு

'பரிவை' சே.குமார் said...

வாசிப்பனுபவம் அருமை. பகிர்வுக்கு நன்றி பாலா சார்.

க.பாலாசி said...

அடுத்து வாங்கவேண்டிய லிஸ்ட்ல எழுதிக்கிறேன். நல்ல பகிர்வும், நன்றியும்.

ஈரோடு கதிர் said...

உடனே தேடிப்பிடித்து படிக்கத் தூண்டுதே!!!

நன்றி

vasu balaji said...

@@நன்றி இராமசாமி
@@நன்றி சேது
@@நன்றிங்க பழமை:)
@@நன்றி ராஜா.
@@நன்றி முகிலன். ஒரு பெண்ணாவே தன்னை நினைச்சு கலியாணத்துக்கும் ஆசைப்பட்ட ஒரு வெள்ளந்தி மனுஷனின் கதை.
@@நன்றி பா.ரா
@@நன்றிங்க சித்ரா
@@நன்றி அரசூரான்
@@நன்றி சரவணா
@@நன்றிண்ணா
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி ரத்னவேல் சார்
@@நன்றி காஸ்யபன் சார்.
@@நன்றி டி.வி.ஆர். சார்
@@நன்றி சே. குமார்
@@நன்றி எழுத்தாளரே
@@நன்றிங் மேயர்ங்:))

Mahi_Granny said...

அருமையான பகிர்வு பாலா சார் .