புதிதாய் விரிந்தப் புறநகர்ப் பகுதியில் விஸ்தாரமான கோவில் அது. நகரின் ஆரவாரங்களிலிருந்து ஒதுங்கி, இன்னும் அதிகம் தாக்குதலுக்குள்ளாகாத வெளியிடம். மாலைப் பூஜை முடிந்து இருள் கவியத் தொடங்கி, இதமான காற்றுடன் பிரகாரம் நிறைந்திருக்கிறது. மேற்கு ஓரமிருந்த மேடையின் முன்பு குவிந்திருக்கிறது கூட்டம். ராமகிருஷ்ணபாகவதர் இன்றைக்கு என்ன கதை சொல்லப் போகிறார் என்பதிலிருந்து, சீரியல் வரை எல்லா விஷயமும் சளசளவென்று கோவிலின் அமைதியைக் கெடுத்த படி பரவிக் கொண்டிருக்கிறது. ‘வந்தாச்சு’ என்ற ஒற்றை அறிவிப்பில் சட்டென நிலவிய அமைதியும், கதை கேட்க ஆவலாய் சரியாய் உட்காரும் சலனங்களும் உணர்ந்தபடியே புன்சிரிப்புடன் கடந்து சென்று மேடையில் அமர்ந்தார் பாகவதர்.
சம்மணமிட்டு அமர்ந்திருந்தவர், இரண்டு கையும் முட்டிக்கு மேல் நீட்டி, ஆஜானுபாகுவாய் நிமிர்ந்தமர்ந்து, கண்மூடி கணீர் என்ற குரலில் தியானஸ்லோகம் சொல்லச் சொல்ல, அலை அலையாய் எழுந்த ஒலி நாதத்தில் ஓர் அமைதி குடி கொண்டது. கண் திறந்து ஒரு முறை எல்லாரையும் பார்த்தார். இந்தக் கோவில்ல அம்பாளோட நாமம் பார்வதி. உமான்னு அவளுக்கு ஒரு பேர் உண்டு. லோக மாதா அவள். நாமல்லாம் அம்மா அம்மான்னு சொல்ற போதெல்லாம் உமாவான அவளுக்குத்தான் அது சேரும்.
மனுஷாளாப் பொறக்கறது பெரிய பாக்கியம். ஏன்னா, பரமாத்மாவிடமிருந்து அதி சமீபத்தில இருக்கிற ஜன்மம் மனுஷ்ய ஜன்மம். பாவத்தக் கழிச்சி, பகவானையே த்யானம் பண்ணிண்டு திரும்ப பிறக்க வேண்டிய அவசியமில்லாம அவனுக்குள்ளையே அடங்கிப் போறதுக்கு வழியும், முயற்சியும் தெரிஞ்சிக்க முடியற ஜன்மா. அப்படியான ஜன்மாவை நமக்குக் கொடுத்து பகவானுக்கும், மனுஷனுக்கும் நடுவில ஒரு பாலமாய் இருப்பவள் தாயார். மனுஷ ஜென்மத்துலயும் அதி உன்னதமான பிறப்பு பெண். அவள் அம்மாவா ஆறதில்லை. அம்மாவா பிறக்கிறாள், அம்மாவா இருக்காள், அம்மாவாவே அம்மாட்ட சேருவாள். அம்மான்னா யாரு? சாக்ஷாத் உமா இல்லையோ. எல்லாரும் என் கொழந்தேன்னு அணைச்சிக்கறவள் இல்லையோ அவள். தப்புப் பண்ணா கண்டிக்கறதிலயும் ஒரு கருணை இருக்குமே அவளுக்கு. எந்தப் ப்ரயத்தனமும் இல்லாம, இந்த குணத்தை பகுமானமா கொடுத்துருக்கு பெண்ணுக்கு. அவள் மூலமா ஒரு ஜீவன் இந்த பூமிக்கு வரும்போது அதி உன்னதமானா தாயாராகிறாள் அவள். ரொம்ப ஸ்ரேஷ்டமான வார்த்தை தாயார். அதனாலதான் அம்பாளுக்கும் தாயார்னு பெயர்.
கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு சிலிர்க்கிறது. முன்னெப்போதையும் விட அம்மாவின் மீதான வாஞ்சை அதிகரிக்கிறது. பெண்களின் முகத்தில் ஒரு பெருமையுடனான நிறைவு. கொஞ்சம் இடை வெளி விட்டு தொடர்கிறார்.
பகவானைப் பார்த்துட்டேன். இந்த நொடி நான் வான்னா வந்து நிப்பான். சத்தியத்தைத் தெரிஞ்சிண்டேன்னு எல்லாத்தையுமே துறந்த ஒரு மகோன்னதமான சந்நியாசியானாலும் துறக்கமுடியாதவள் தாயார். பரம சத்தியத்தைத் தெரிஞ்சிண்ட மஹானேயானாலும் தாயாரிடம் சாக்ஷ்டாங்கமாக விழுந்து சேவிக்க வேண்டும்னெல்லாம் சாஸ்த்ரம் சொல்றது. அப்படியோர் உன்னதப் பிறப்பு தாயார். எல்லாத்துக்கும் மேலானவள்.
ஒரு ஸ்லோகம் சொல்கிறார். சொல்லும்போதே குரல் உடைந்து இன்னும் குழைகிறது. ஒரு ஆழ்ந்த அமைதியில் கடக்கும் ஒரு நொடி இடைவெளி. இதுக்கு அர்த்தம் என்னன்னா, அம்மா! உனக்கு நமஸ்காரம். ஒரு அணுவா உன்னில் வந்த நொடியிலிருந்து எனக்கு உருவம் கொடுத்து, உயிர் கொடுத்து, உணர்வு கொடுத்து, உள்ளம் கொடுத்து ஜன்மா கொடுத்தியேம்மா. எந்த நொடியில் என்னைக் கருத்தரித்தாயோ நான் உனக்குக் கொடுத்ததெல்லாம் கஷ்டம்தானே?
பசிக்கும் உனக்கு. என்னால் ஒரு வாய் தண்ணி உள்ளிறங்காமல் வாந்தி வரும். சலிச்சிண்டதில்லை நீ. உன் ரத்தத்தை எனக்கு உடலாக்கி,உணவாக்கி வளர்த்தவள் நீ. எனக்கு ஆரோக்கியக் கேடு என்று ருசியைத் துறந்தவள் நீ. இது குழந்தைக்கு ஆகாதே என்று உனக்கு விருப்பமான பண்டங்களையெல்லாம் திரஸ்கரித்திருக்கிறாய். காந்தக் காந்த கஷாயம், ஔஷதின்னு எனக்காக என்னல்லாம் சாப்பிட்டிருக்கிறாய். நீ ஓய்ந்து போய் சாப்பிட அமர்வாய். நான் உள்ளுக்குள் புரண்டு உட்கார விடாமல் செய்வேன். களைத்துப் படுப்பாய். நான் செய்ததெல்லாம் உன் அடி வயிற்றில் உதைப்பேன். புரளுவேன். என் குழந்தைக்கு வசதியில்லை என்று எனக்குச் சுகமான விதத்தில் படுப்பாய். உன் உணவை உறிஞ்சி உறிஞ்சி நான் வளர்ந்தேனே அம்மா. அடி வயிறு கனக்க கனக்க அடி அடியாய் எடுத்து வைத்து நடப்பாயே! ஒரு சலிப்பு இருந்ததுண்டா?
எத்தனை வலி தந்து இந்த பூமியில் பிறந்தேன். உன் ரத்தத்தைப் பாலாக்கி எனக்கு போஷித்தாய். எத்தனை வலி தாங்கியிருக்கிறாய். ஒரு இரவாவது நீ நிம்மதியாய் தூங்கியிருக்கிறாயா? பாலுக்கு அழுவேன். இடையில் இயற்கை உபாதை தீர்ந்ததா என்று பார்க்க விழித்திருப்பாய் நீ. திடுக்கிட்டு எழுந்து எறும்பு போன்ற ஜந்துக்கள் இல்லையே எனப் பார்த்துக் கொள்வாய். சில நேரங்களில் என்னை மடியில் போட்டுக் கொண்டு சாப்பிடுவாய். சிறுநீர் கழித்திருப்பேன். அது பட்டிருந்தாலும், ஓரமாய் ஒதுக்கிவிட்டு உண்டிருக்கிறாய். எத்தனை குழந்தை பிறந்தாலும் எல்லாரிடமும் அதே வாஞ்சையைப் பகிர்பவள் நீ. எத்தனை வயதானாலும் எங்களுக்கான நலம் மட்டுமே விழைந்தவள் நீ. இன்னும் எத்தனை பிறவி எடுத்து உனக்கு இந்தக் கடனையெல்லாம் அடைக்கப் போகிறேன. என்னால் முடிந்ததெல்லாம் ஆத்மார்த்தமான இந்த நமஸ்காரம்.
இப்பேர்ப்பட்ட தாயாருக்கு வயசான காலத்துல அசுகம் ஏற்படறப்போ எந்த விதத்திலயும் அவள் குழந்தையைப் போஷித்த போஷனைக்கு கிஞ்சித்தும் சமமில்லாட்டாலும், அதுல கோடியில ஒரு பங்கு சிரத்தையா பார்த்துண்டா, அவளுக்கு சிசுருஷை பண்ணினா வேற எந்த பூஜை வேண்டாம், தவம் வேண்டாம். அந்த உமா என் குழந்தேன்னு கிட்ட இழுத்துப்பாள். வரம் இல்லையா அது. இதை விட மனுஷனாப் பொறந்தவனுக்கு ஒன்னு வாய்க்குமா?
குழைத்துக் குழைத்து வந்து விழுந்த வார்த்தைகள் வயது வித்தியாசமின்றி அனைவரையும் குழந்தையாக்கிவிட்டிருந்தது. உதடு துடிக்கத் துடிக்க விசும்பல் கேட்டது. கண்ணீரில் குற்ற உணர்ச்சிகள் அடித்துக் கொண்டு ஓடின. புராண இதிகாசங்களிலிருந்து சில பல உவமானங்களோடு காலட்சேபம் முடிந்தது. அமைதியாகக் கிளம்பிய கூட்டத்தில், கலந்திருந்தான் ரகு. ‘என்னமாச் சொல்றாருங்க. தெரிஞ்ச விஷயம்தான். ஆனா இப்படி கேக்கும்போது பிரமிப்பாயிடுதுங்க’ என்று சினேகமாய் பேசிக்கொண்டு வந்தவரை நோக்கினான் ரகு.
உங்களை எங்கயோ பார்த்திருக்கேங்க, எங்கே வீடு, வேலை என்ற விசாரிப்புக்களுக்குப் பிறகு, ரகு கண்டு பிடித்துவிட்டான். ‘அன்னை இல்லத்துல பார்த்திருக்கேன்னு நினைக்கிறேங்க, போன ஞாயித்துக் கிழமை’ என்றான். அட ஆமாங்க. எனக்கும் இப்ப கவனம் வருது. அங்க யாரு இருக்காங்க என்றார்.
‘எங்க அப்பாங்க. பிடிவாதக்கார மனுஷன். ரிடையர் ஆகி ரெண்டு வருஷத்துல அம்மா இறந்துட்டாங்க. ஓப்பனா பேசுவாருங்க. இங்க பாரு ரகு, இன்னும் கொஞ்ச வருஷம் என்னால உங்களுக்கு ஹெல்ப்ஃபுல்லா ஏதோ இருக்க முடியும். அப்புறம் பாரமாயிடும். எனக்கும் மனவருத்தம். உங்களுக்கும் சிரமம். பேசாம இந்த முதியோர் இல்லத்துல சேர்ந்துக்கறேன். பென்ஷன் சரியா இருக்கும். நல்ல வசதி. முடியறவங்க சமூக சேவை செய்ய அது இதுன்னு நிறைய வழியிருக்கு. நினைச்சப்போ வந்து ஒரு நாளோ ரெண்டு நாளோ உங்க கூட இருப்பேன். விசேஷம்னா வரலாம் போகலாம். உங்களுக்கு பார்க்க தோணிச்சின்னா எப்ப வேணும்னாலும் வரலாம்னு, அங்க போய் சேர்ந்துட்டாரு.’
‘முதல்ல கஷ்டமாத்தான் இருந்திச்சி. அப்புறம் யோசிச்சப்ப சரின்னுதான் பட்டுது. நாங்க ரெண்டு பேரும் வேலைக்கு போறோம். டென்ஷனான லைஃபுங்க. எரிச்சல்ல ஏதாவது வார்த்தை காயப்படுத்தலாம். பாகவதர் சொன்னா மாதிரி அவங்களுக்கு பிடிச்சத, அவங்க வசதியா நினைக்கிறத தடுக்கறதை விட இதுவும் ஒரு விதத்துல சேவைன்னுதான் படுது என்ன சொல்றீங்க?’ என்றான் ரகு.
‘சரியாதாங்க படுது. உங்க கதை பரவாயில்லீங்க. எங்கம்மா, எங்கண்ணன் கூட இருந்துச்சி. அண்ணி கூட சரி வரலை. இத்தனைக்கும் ஹவுஸ் வைஃப் அவங்க. சொம்மா இருக்காது எங்கம்மா. எதுனா சொல்லும். இழுத்து போட்டுக்குனு செய்யும். அப்பால, வயசான காலத்துல எல்லாம் நான் செய்யறதா இருக்குன்னு கத்தும். நம்ம ஊட்லயும் வேலைக்கு போறவங்க. நைட் டூட்டியெல்லாம் இருக்கும். சரி வராது. அதான் அண்ணனும் நானும் ஷேர் பண்ணி இங்க சேர்த்துருக்கோம். கொஞ்சம் காஸ்ட்லின்னாலும், எல்லா வசதியும் இருக்கு இல்லைங்களா. ஒடம்பு முடியாம போனா ஊட்ல வச்சிருந்தா நாம வர வரைக்கும் தவிச்சிகினு இருக்கும். இங்க டாக்டருங்க, உடற்பயிற்சின்னு ஆரோக்கியமா இருக்காங்க. பசங்களுக்கு லீவ் டைம்ல இட்டாந்து வச்சிக்குவோம். ஒரு வாரம் மேல தங்காதுங்க. அவங்களுக்கு அங்க புட்சிப்போச்சி. அத விட என்னாங்க வேணும். சரிங்க பார்க்கலாம்’ என்று பஸ்ஸ்டேண்ட் நோக்கி நடந்தார்.