காமாச்சி ஒரு தனி மனுஷியல்ல. ஊருக்கு ஊர் நிறைய காமாட்சிகள் இருப்பார்கள். நகரத்தில் அரிதாகி விட்ட தேவதைகள் இவர்கள்.
இந்தக் காமாச்சி இரண்டு பசு, ஐந்து ஆறு எருமையுடன் மணிக்கோனாருக்கும் சொந்தக்காரி. மணிக்கோனார் முட்டியை மடக்கி முதுகில் குத்தினாலும் வாலால் திருப்பி அடிக்கும் எருமை கூட, தே! ஒத்து என்ற காமாச்சியின் குரலுக்கு ஒதுங்குமெனில் மணிக்கோனாரைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?
ஐந்தடி உயரமிருப்பாளா சந்தேகம். பருத்த உடல்வாகு. கணீரென்ற குரல். மஞ்சள் பூசிய முகத்தில், அகலக் குங்குமப் பொட்டும், அகன்ற கண்களும், சீராக வாரிப் போட்ட பிச்சோடாக் கொண்டையும், நத்தை நத்தையாய் மூக்குத்தியும் தோடும், நகைகளும், வெற்றிலைக் குதப்பி அடக்கிய வாயும், சற்றே சரிந்தார்போல் நிற்கையில் கையெடுத்துக் கும்பிடும் காமாட்சிதான். நடக்கையில் சுவாமி ஊர்வலத்தில் பல்லக்குத் தூக்கிகள் அலைபோல் ஆடி வருவார்களே அப்படித்தான் இருக்கும். ஒரு கால் குட்டையாகி விரல்களால் ஊன்றி ஆடி ஆடி நடப்பாள்.
அவள் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. மணிக்கோனாரின் பால் வருமானத்திலேயே அவள் அணிந்த நகைகளை அவள் வேலை செய்யும் வீட்டு அம்மணிகள் ஒரு புகைச்சலோடு பார்க்க வேண்டியிருக்கும். மாசம் முப்பது ரூபாய் சம்பளம். விரும்பி வற்புறுத்தினால் காஃபி குடிப்பாள். 7.30 முதல் 10 மணிவரை டூட்டி வீடு வீடாக. கரார் பேர்வழி. சம்பளம் என்று நீட்டி விட முடியாது. வெற்றிலைப் பாக்கில் தாம்பூலமாக வைத்துத் தரவேண்டும்.
பிரசவத்துக்கு வந்த பெண்கள், அதற்கு வழியற்று இரண்டாவது மூன்றாவது பிரசவத்துக்கு காத்திருக்கும் பெண்கள் நிறைமாதம் வந்ததும் காமாச்சியக்காவைத் தேடுவார்கள். கைத்தடவலில் அவள் சொன்ன நாளில் வலியெடுக்கும். பெருஞ்சோம்புக் கஷாயம் போட்டுக் கொடுத்து மகராசியா போய்வாம்மா என்று வாழ்த்தி அனுப்புகையில் நேசமாக கண்கலங்க கைபற்றிக் கொள்ளுவார்கள்.
குழந்தை பிறந்ததும் காமாச்சியின் செக்கப் இருக்கும். தயாராக கழுதைப் பாலுடன் போய் பார்ப்பாள். காமாச்சி செவ்வாப்பு போட்டிருக்கு குழந்தைக்கு என்று சொல்லி, கழுதைப்பால் புகட்டி தடுத்த மருத்துவர் இல்லை. வீம்புக்கு கழுதைப்பாலாவது மண்ணாங்கட்டியாவது என்று எகிறி குழந்தையைப் பறிகொடுத்த ஒன்றிரண்டு உண்டுதான்.
அப்போது ஏன் என்று தெரியாமல், பச்சைக் குழந்தையை காலை இள வெயிலில் கண்ணில் துணி போர்த்தி வெயிலில் கிடத்துவதைப் பார்த்திருக்கிறேன். பின்னாளில், கருவில் மஞ்சள்காமலை என்று சன்லேம்பில் குழந்தைகளைப் பார்க்கும்போது இவளின் உத்தியை நினைத்து வியந்தும் போயிருக்கிறேன். (வாரி வெய்யிலில் போட என வைவது இதுதான் போலும்)
தாயும் சேயும் வீடு வந்ததும், குழந்தை குளுப்பாட்டுவதுதான் காமாச்சியின் டூட்டி. இன்னா சொல்றான் என் மருமகனென்றோ, இன்னாடி சக்காளத்தி என்றோ கொஞ்சி குழந்தையை தூக்கி அணைத்த வாகிலேயே, வயிற்றில் ஒரு நோட்டம் விடுவாள். சில நேரம் மெதுவே தட்டுவாள். ஏற்கனவே அகன்ற விழியை இன்னும் அகலமாக்கி ஏம்மா? மாம்பழம் சாப்டியா? மாந்தம் புடிச்சிகிச்சி பாரு என்பாள். மறுக்கவே முடியாது.
ஜல்ப் புட்சினுக்குதும்மா. இன்னிக்கு ஒடம்ப தொடச்சி விட்டுடலாம் என்றால் மறுபேச்சு பேச முடியாது. வரும் நேரம் சரியாக வென்னீர் இருக்க வேண்டும். ஆகா! அவள் கையால் குளித்த குழந்தைகள் கடவுள் என்றால் மிகையாகாது. மணை போட்டு கால் நீட்டி, குழந்தையைப் போட்டு, கொஞ்சியபடி எண்ணெய் தடவுவாள். சுவாமிக்கு எண்ணெய்க்காப்புகூட அப்படிப் பார்த்திருக்க முடியாது. அங்கம் அங்கமாகத் தடவி, உருவி, குப்புறப் போட்டு கையை நன்றாகப் பின்னுக்கு மடக்கி, காலை முதுகை அழுத்தியபடி பின்னுக்கு மடக்கி அவள் தேய்க்கும் போது பரம சுகமாக சத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் பிஞ்சுகள்.
விளாத்தி வைத்த வென்னீரில் வேப்பிலைத் தழை இருக்க வேண்டும். மறந்தால் திட்டு விழும். அதெப்படித்தான் குழந்தைக்கு பிடித்த சூடு தெரியுமோ. தண்ணீர் விட்டதும் அலறிப் பார்த்ததேயில்லை. பயத்தமாவு குழைத்து உடலுக்குப் பூசி, முகம் கழுவ வருகையில் அவர்கள் விளையாட்டு ஆரம்பமாகும். தே! முயிக்காத! கண்ணுல அப்புவேன். மூடு என்றால் லேசாக மூடி போக்குக் காட்டி கண்ணருகே வர பளிச்செனத் திறக்கும் பிஞ்சு. கொய்ப்ப பாரேன் என்றபடி இமைக்கு மேல் விரலால் அப்புவாள்.
யாராவது தண்ணீர் விட இரண்டு கையாலும் வாங்கி பின்மண்டையில் அறைந்தாற்போல் வீசுவாள். மாங்கா மண்ட மாதிரி ஆய்ட கூடாது. சொம்பு மாதிரி வட்டமா இருக்கணும் என்பது அவளது சட்டம். அது எப்படியோ அப்படி ஆகும். எண்ணெய் போகக் குளிப்பாட்டி, ஒரு விரல் மடித்து நாக்கு உருவி, இரண்டு விரலால் அண்ணத்தை மூடி, பதமாக ஒரு முறை இந்த மூக்குத் துவாரம், மறுமுறை அந்த மூக்குத் துவாரத்தில் ஊதி, சளியெடுப்பாள்.
அதற்குள் சாம்பிராணி ரெடியாக இருக்க வேண்டும். துண்டு வாங்கி தோளில் போட்டு, பூமாதிரி அதில் சாய்த்து, விழுந்துவிடுவது போல் எழுந்து துவட்டி, புகை காட்டி, கண்மை பூசி, பவுடர் போட்டு, திருஷ்டிப் பொட்டிட்டு நெற்றியில் விரலால் சொடுக்கி, தாயிடம் நீட்டி, 10 நிமிஷம் கொஞ்சிட்டு அப்புறம் பால் கொடு என்று போவாள்.
ஆம்பள புள்ள என்னா என்னமோ எலிக்குஞ்சு மாதிரி அயுவுது? நாளைக்கி கோரோஜனை ஊத்தணும்மா என்பாள். பெரும்பாலும் கை வைத்தியம். சில நேரம் ஓயாமல் அழும் குழந்தைகள். எங்கிருந்தோவெல்லாம் தேடி வருவார்கள். இன்னா இன்னாடா பண்ணுது கண்ணுக்கு என்றபடி வாங்கி வயிற்றைத் தடவி, உரம் விழுந்திருக்கும்மா என்பாள். எப்போ ஊட்டின என்ற கேள்வியைப் பொறுத்து வைத்தியம் இருக்கும்.
அதென்ன மாயமோ? பெற்றவளுக்கு பதைத்துப் போகும். இரண்டு காலையும் ஒரு கையால் பிடித்தபடி தலை கீழாக மூன்று விசிறு. அப்படியே கைவாங்கி மார்பில் அணைத்து சரியாப் போச்சுடி எனும்போது அழுகை காணாமல் போயிருக்கும். ஏதோ சுளுக்குக்கு முறத்தில் போட்டுப் புடைப்பாள். படியுருட்டுவாள். சரியாப் போகும் அவ்வளவுதான். வெற்றிலைப்பாக்கில் வைத்துக் கொடுக்கும் ஒரு ரூபாய்க்கும், ஐந்து ரூபாய்க்கும் ஒரே ட்ரீட்மெண்ட்தான்.
கை தொடுதலிலேயே குழந்தை ஆரோக்கியம் எங்கு படித்தாளோ. வைத்தியர் வீட்டுக்கு அலைந்தவை வெகுசில. பெரீ டாக்குட்டருட்ட இட்டும்போம்மா. கொயந்த சரியில்லை என்ற ஒன்று இருதயத்தில் துவாரம் எனக் கண்டு பிடிக்கப்பட்டது. அதிகபட்சம் ஐந்து மாதங்கள் குளிப்பாட்டுவாள். நான்காம் மாதமே சொல்லியும் கொடுப்பாள்.
அம்மை வந்தால் ஆம்பிளைக்கும் கேட்கும்படி, மனுசத்தனமா இருந்துக்குங்கன்னு சொன்னால் அதற்கு மேலும் வேண்டுமா? அவள் வாயில் யார் விழுந்து எழுவது? ஆடிமாதம் பொங்க வைக்க காசு கொடுத்தால் போறாது. கோவிலுக்கு வந்து குழந்தைக்கு அவள் கையால் துன்னூரு வைக்கணும். தாய்ப்பால் இல்லையேல் பசும்பால். அப்புறம் நேராக பருப்புச் சோறுதான் அவள் ப்ரிஸ்கிருப்ஷன்.
ஃபாரக்ஸ், செரிலாக் வகையறா அவளுக்கு இளக்காரம். உங்குளுக்கு பொசு பொசுன்னு இருந்தா போதுண்டியேய் என்று சிரித்தபடி போவாள். அவளுக்கு பெருங்குறை. அவளோடு இந்தக் கலை முடிந்து போகிறதேயென்று. பாவம் இரண்டும் ஆண் பிள்ளை அவளுக்கு. என்றாவது மணிக்கோனார் சரக்கடித்து, சவுண்ட் விட்ட படி வருவார்.
இடுப்பில் கைவைத்தபடி, கேவலமும் கோவமும், சிரிப்புமாய் ஒரு பார்வை. இந்த நாய்ப் பொயப்புக்கு சத்தம் வேற. போய் திண்ணைல கெட. உள்ள போய் வாந்தி எடுத்து வெச்ச வெளக்குமாறு பிஞ்சிடும். த்த்த்த்தூ என்று குதப்பிய வெற்றிலை உமிழ்ந்த பிறகு சத்தம் கேட்டால்தானே.
ஒரு முறை பால் காசு கொடுக்கப் போனபோது, முகம் துடைத்து புள்ளைங்க வளர்ந்துடுச்சுங்க, இப்போ இந்த எழவு வேற தேவையா? துன்னுய்யா என்று சோறூட்டிக் கொண்டிருந்தாள். மணிக்கோனார் போய்ச்சேர்ந்த பின், மாடுகள் மட்டுமே உறவாகி, ,மருமகள் வந்ததும் இவளும் மாடாகி ஒரு நாள் செத்துப் போனாள். ஏனோ, மணிக்கோனாருக்குப் பின் குழந்தை குளிப்பாட்ட போனதேயில்லை.