Friday, April 15, 2011

கேரக்டர் - திருமதி ராஜம் ஆறுமுகம்..

கேரக்டர் தொடரில் ஏன் இது மட்டும் திருமதி ராஜம் ஆறுமுகம் என்ற கேள்வி எழலாம். இது உண்மையில் இரண்டு கேரக்டர்களைப் போல் தோன்றினாலும் என் மனதில் அவர்களைத் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாமையா? அல்லது இன்றைய ராஜத்தின் நிலையா என்பதை முடிவில் நீங்களாக முடிவு செய்துக் கொள்ள வேண்டியதுதான்.

அயன்புரம் மார்க்கட் வீதியும் நெட்ட முத்தியால் கான் வீதியும் சந்திக்கும் முனையில் இடது ஓரம் ராஜத்தை இன்றும் பார்க்கலாம். இந்த ராஜத்தை நான் தவிர்த்துவருகிறேன். ஓரிருமுறை கடக்க நேர்கையில் அவசரமாகப் பாராதது போல் கடக்கப் போய் அத்தனை கும்பலிலும் அடையாளம் கண்டு ‘டேய் அய்யிரே’ என்று அழைத்து பாசமாய்க் கேட்ட கேள்வியில் உடையாமல் பதில் சொல்வது என்பது முடியாத காரியமாகிப் போய்விட்டது. என் மனதில் இருக்கும் ராஜம் இவரல்ல.

என்.எம்.கே.ஸ்ட்ரீட் என்று அழைக்கப்படும் நெட்ட முத்தியால் கான் தெருவில் முதல் பிரிவில் வலது பக்கம் இருப்பது திருப்பாச்சூரான்  தெரு எனப்படும் திருப்பச்சீஸ்வரர் தெரு. இதன் முனையில் இருந்தது ‘அறிஞர் அண்ணா வாடகை மிதிவண்டி நிலையம் உரிமையாளர்: கா.ஆறுமுகம்’.

எண்ணெய் தடவி பின் தூக்கி வாரிய கிராப்பு, பென்சிலால் வரைந்தாற்போல் ஜெமினி கணேசன் மீசை, கவிழ்த்துப் போட்ட ஆங்கில எழுத்து ‘வி’ போல முட்டி தட்டும் கால்கள், நிரந்தரமான வாயோர மைனாப் புண், அதிர்ந்து பேசாமலே எதிராளியின் வயிற்றில் புளியைக் கரைக்கும் ஒரு பார்வை, ஐந்தரை அடிக்கும் சற்றே குள்ளமான உருவம் கொண்ட ஆறுமுகத்துக்கும்

ஆறடிக்கு சற்றேறக்குறைய உயரம், உயரத்துகேற்ற உடல்வாகு, உடல்வாகுக்கேற்ற உயர்ந்த குரல், இரண்டு நத்தைகளைத் தொங்க விட்டாற்போல் மூக்குத்தி, அகலமான தோடு, நெற்றில் சிக்னல் போல் ஒரு ரூபாய் அளவு குங்குமம், எண்ணெய் காணாத செம்பட்டைத் தலை, எப்போவாவது விசேஷகாலங்களில் லேசாகத் தலைகாட்டும் ஒரு இணுக்குப் பூவோடு பூக்கடை வைத்திருக்கும் ராஜத்திற்கும் என்ன பொருத்தம் இருந்திருக்கிறது?

காலையில் ஐந்துக்கெல்லாம் எழுந்து முதல் பஸ் பிடித்து பூக்கடை போய் பூவாங்கி வந்து, இரவு மிகுந்த பூக்களை எடுத்துக் கொண்டு போய் கடை போடுவாள் ராஜம்.

ஏழு மணிக்கு குளித்து மைனர் போல் இஸ்திரி செய்த மல்வேட்டியுடன் பளபளா வெள்ளைச் சட்டையும், எம்.ஜி.ஆர். ஸ்பெஷல் சுருட்டலான முழுக்கைச் சட்டைச் சுருட்டலும், சன்னல் பனியனின் மேல் அண்ணா படம் போட்ட இரட்டைப் புலி நக செயினும், வலது கையில் அண்ணா பரிசளித்ததாகச் சொல்லப்படும் உதய சூரியன் படம் போட்ட மோதிரத்துடன், பளபள புது சைக்கிளில் ஏறி, 200 மீட்டர் தூரத்தில் இருக்கும் கடைக்குப் போவார் ஆறுமுகம்.

பத்து மணியளவில் பூக்கடையை ஏறக்கட்டி வரும்போது குழம்பு செலவுக்கு காசுக்கு மல்லுக்கு நிற்பாள் ராஜம். பெரும்பாலும் மறுவார்த்தையின்றி ஒரு பத்தோ இருபதோ கொடுத்துவிடுவார் ஆறுமுகம். இல்லை எனச் சொல்லப்படும் நாட்களில் அசந்த நேரத்தில் டவுசர் பாக்கட்டில் கைவிட்டு ராஜம் மொத்தமாக லவட்டப் பார்ப்பதும், டவுசரின் மேல் கையை இறுகப் பிடித்து ‘உடுமே உடுமே’ என்று சல்லாபிப்பதும் கடந்து செல்பவர்களின் கடைவாயோரப் புன்னகையை வரவழைப்பவை.

பத்துமணிக்கும் இரண்டுமணிக்கும் உண்டான இடைவெளியில் எப்போது சமைக்கிறாள், எப்போது காலை வாங்கி வந்த பூவைக் கட்டி வைக்கிறாள், மீண்டும் மாலை உதிரிப் பூ வாங்கப் போய் வருகிறாள், நான்கு மணிக்கு தவறாமல் எப்படி கடை போடுகிறாள், இரவு ஒன்பதரை அளவில் வந்து எப்போது சாப்பிட்டு, எப்போது பேசி, எப்போது தூங்கப் போகிறாள் என்பதை யாரும் கணிக்க முடியாது.

தி.மு.க.வில் முக்கியப் புள்ளியான ஆறுமுகத்துக்கு கட்சி தாண்டிய மதிப்பு கண்கூடு. வீதியில் சண்டை போடுபவன், பெண்டாட்டியை நடு வீதியில் போதையில் கும்முகிறவன், கட்சி மீட்டிங்கில் பிகிலடித்து கலாட்டா செய்ய நினைக்கும் புதிய இளைஞன், கள்ள ஓட்டு போட வந்து, போ என்று சொன்ன பிறகும் நிற்பவன் யாராயிருந்தாலும் ‘ஏய்! போ!!’  என்ற ஒற்றைச் சொல்லில் போகாவிட்டால் விழும் ஒற்றை அறையில் ஒன்று தரையில் இருப்பார்கள் அல்லது தள்ளாடி நடப்பார்கள்.

மற்றவரைப் போல் கூவி அழைத்துக் கூட பூ விற்கமாட்டாள் ராஜம். அவள் கடையில் யாரும் பேரம் பேசுவது கிடையாது. பாத்திமாவோ, ரெஜினாவோ, மங்களமோ, ராணியோ கர்ப்பிணிப் பெண்கள் யாரும் தலையில் ஒரு விறக்கடை பூவில்லாமல் தாண்டிப் போக முடியாது. கூடவே புருஷனும் இருந்தால் ஜென்மத்துக்கு சாப்பிட மறந்தாலும் மறப்பான், பெண்டாட்டியை பூவில்லாமல் ராஜத்தின் கடை தாண்ட அனுமதிக்கமாட்டான். பெண்டாட்டிக்கு வைத்து விட்டாளே என்று கடனே என்று யாரும் உடனே ஒரு முழம் பூ வாங்கிக் கொடுக்க முடியாது. அவள் வைத்து விட்டதுதான்.
 
மார்க்கட்டில் பெண்களை இடிப்பவர், குடித்துவிட்டு மிரளவைப்பவர், மீன் வெட்டும் கத்தியை உயர்த்திப் பிடித்தபடி சண்டைபோட்டு கலங்கடிப்பவர்களுக்கு, ஒற்றை இழுப்பில் சுருண்டு விழுந்து ராஜத்தின் காலால் இடுப்பில் மிதிபட்ட வலியா அல்லது மூன்று நான்கு தலைமுறையை சேர்த்து இழுத்து வைத்து திட்டும் திட்டில் நாளை எப்படி இந்த வீதியில் நடப்போம் என்ற வலியா எது பெரிது என்று புரியாது. குறைந்தது அரைமணி நேரம் ஓயமாட்டாள்.

ஏதோ ஒரு விசேஷ நாளில், தலை குளித்து தலையாற்றி, லேசாக எண்ணெய் பூசி ஒரு விறக்கடை மல்லிப்பூ சுத்திவிட்டால், ஆறுமுகம் மாலை ஆறுக்கெல்லாம் கடையடைத்துவிட்டு பத்தாம் நம்பர் சாராயக் கடைக்குப் போய்விடுவார். இரண்டு மகள்களும் இரு மகன்களும் அத்தகைய ஒரு நாளில் வந்து பிறந்திருக்க வேண்டும்.


மகள்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொடுத்து, அதே மார்க்கட்டில் பூக்கடை வைக்க இடம் பிடித்துக் கொடுத்து ஒரு வழியாக ஒப்பேற்றினாலும், மூத்த மகன் சண்டியனாகவும் இளைய மகன் சுமாராகப் படிப்பவனாகவும் அமைந்து போனான். வசதி கருதி பெரம்பூருக்கு நான் குடி பெயர்ந்தபின்னும் வீட்டு விசேஷம் என்றால் மூன்று கிலோமீட்டருக்கு ஆட்டோவாகிலும் வைத்துக் கொண்டு போய் ராஜம் கடைப் பூதான் வாங்குவது.

அப்படிப் போன ஒரு நாளில் அவளின் மூத்தமகனின் படம் தாங்கிய போஸ்டரைக் காண நேர்ந்தது. என்ன கேட்கவென்றே தெரியாமல் தடுமாற, ஒரு வார்த்தை பேசமுடியாமல் விழியோரம் முந்தானையால் துடைத்துக் கொண்டு கைவந்த போக்கில் கொடுத்த பூவை வாங்கிக் கொண்டு வந்தேன். அடுத்த முறை போனபோது இன்னொரு மகனின் போஸ்டரின் முன்னால் முகம் கொள்ளாச் சிரிப்போடு அமர்ந்திருந்தாள் ராஜம்.

பட்டப்படிப்பை முடித்து, எம்.ஏ.வில் சேர்ந்ததைப் பாராட்டி நண்பர் குழாம் அடித்த போஸ்டர் அது. மறக்காமல் போஸ்டர் உபயம் கா.ஆறுமுகம் என்பதைச் சேர்த்திருந்தார்கள். பெரும்பாலும் கடை கண்ணிக்குப் போவது என் தம்பியாதலால், சில வருட இடைவெளிக்குப் பிறகு ராஜத்தின் கடை முன் நின்று தேடினேன்.

வாடி வதங்கி, முற்றிலும் பொலிவிழந்து, மூக்குத்தியும் தோடும் மட்டுமே அடையாளம் காட்ட ‘வா அய்யரே’ என்றவள் நொறுங்கிப் போனாள். ‘அப்பா போய்ட்டாருய்யா. ராஜம் தண்ணி எட்தாமேன்னாரு. ரண்டு நிமிட்டு இல்ல அய்யரே. தல தொங்கிடிச்சி. பாவி மனுசன், என்ன விட்டு எப்புடி போனாரு தெரியல அய்யரே. ஒரு திட்டு, ஒரு அடி நினைச்சி கோவப்படக்கூட ஒன்னுமில்லாம போய்ட்டாருப்பா அப்பா’ என்று கதறியவள் ஒரு மூக்குச் சீந்தலில் சாதாரணமாகிப் போனாள்.

சரசு அக்கா, லட்சுமி, காந்தி எல்லாம் எப்படி இருக்காங்கம்மா என்றேன். லச்சுமிக்கு 2 சவரன் கூட போட்டேன்னு சரசு பேசறதில்ல, லச்சுமி மச்சினிச்சிய காந்திக்கு கட்டலைன்னு அவளும் பேசறதில்ல. படிச்சவரு, லவ் பண்ணிக்கினு கண்ணாலம் கட்டிக்கினாரு. பூக்காரியவும், சைக்கிள் கடைக்காரனையும் அம்மா அப்பான்னு சொல்லிக்க முடியுமா? அவரும் பிச்சிக்கினாரு.

எனக்கு விதிச்சது, இதோ பூவும், நானுமா ஓடுது பொயப்பு. அம்மா திதியா? மல்லிப்பூ எடுத்தும்போ. மவராசி, உங்கப்பா இருக்க சொல்ல மல்லியில்லாம இருக்கமாட்டா. என்னாதான் நான் இறுக்கமா கட்டினாலும் அவ கட்டி வச்சிகிட்டாதான் அதுக்கு சந்தோசம் என்று ஏதோ கணக்கில்லாமல் கொடுத்தாள். எவ்வளவென்றே கேட்காமல் ஏதோ காசு கொடுத்தேன். அன்றிலிருந்து அவள் கடையைத் தவிர்த்தே வருகிறேன். அவரவர் பிழைப்பு அவரவர்க்கு என்று இருந்தவர்களிடையே இத்தனை காதலா? அந்த ஒரு மனிதனின் இழப்பா இப்படி ஒரு மலையைச் சாய்த்துவிட்டது என்ற பிரமிப்பு மட்டும் இன்றும் இருக்கிறது.

-:o:-

25 comments:

rajamelaiyur said...

நான் தான் first

க ரா said...

இறுக்க கட்டிய மல்லிகைசரம் மாதிரி அத்தனை கச்சிதம் உங்க எழுத்து.. ராஜம் ஆறுமுகம் ரெண்டு பேரும் மனதில் நிற்பார்கள் எப்போதும்.. நன்றி பாலா சார் ...

Mahi_Granny said...

''ஒரு மனிதனின் இழப்பா இப்படி ஒரு மலையைச் சாய்த்துவிட்டது என்ற பிரமிப்பு மட்டும் இன்றும் இருக்கிறது.'' இதுதாங்க எனக்கு பிடிச்சது. அயன்புரம் மார்க்கெட்டில் பூ விற்கும் ராஜத்தை பார்த்த உணர்வும் வருகிறது .அருமையான உறவு சார்

ஓலை said...

ரொம்ப நல்லா இருக்கு இந்த கேரக்டர்.

"அவள் கடையைத் தவிர்த்தே வருகிறேன்."
யோசிக்கணும். இப்ப தான் ரெகுலர் customer இன் தேவை அவங்களுக்கு.

ஓலை said...

"யோசிக்கணும்." - Please read it as 'மறுபரிசீலனை செய்யணும்'.

sriram said...

போங்க பாலாண்ணா
இது போங்காட்டம்..
கண்ணில் நீர் வரவழைக்காத கேரக்டர்தான் இனிமே எழுதணும்னு சொன்னேனா இல்லையா?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Chitra said...

அந்த ஒரு மனிதனின் இழப்பா இப்படி ஒரு மலையைச் சாய்த்துவிட்டது என்ற பிரமிப்பு மட்டும் இன்றும் இருக்கிறது


.......அந்த ஒரு வரியில் உள்ள அர்த்தங்களை - இந்த பதிவின் தாக்கத்தில் தெரிந்து கொண்டேன். அவர்களின் சிறிய உலகத்தில் தான் எத்தனை சோகங்கள்.........

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
கண் கலங்க வைக்கிறது.

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

Amazing Bala Sir!!!

நாங்கள் நேரில் பார்த்தால் கூட இப்படி அந்த மனிதர்களை உணர்ந்து இருக்க மாட்டோம் .

சில நேரங்களில் ஒரு தனி மனித இழப்பு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் .

நன்றி !!!

ராஜ நடராஜன் said...

ஜனநெரிசலில் அவரவர் கடமையே முதன்மையாக ஓடும் மக்கள் மத்தியில் மனிதர்களின் மனங்களை,உடல் இயல்பு,அதன் மொழி பற்றி உற்றுக் கவனிக்கிறீர்கள்.

பாதி படிச்சிட்டுப் பின்னூட்டம் வந்து பின் தொடர்கிறேன்.

ஸ்ரீராம். said...

ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனை அனுபவங்கள்....
//"அந்த ஒரு மனிதனின் இழப்பா இப்படி ஒரு மலையைச் சாய்த்துவிட்டது என்ற பிரமிப்பு மட்டும் இன்றும் இருக்கிறது"//

படிக்கும் எங்களாலும் உணர முடிகிறது.

ஈரோடு கதிர் said...

பாலாண்ணே கிளாஸ் கேரக்டர்!

---

எழுத சோம்பல் படும் விரலை உடைத்தால் என்ன :)

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நிறைவான கேரக்டர்கள். ஒவ்வொரு கேரக்டரிலும் உங்களின் முகமும் தெரிகிறது பாலாண்ணா. அபாரம்.

கலகலப்ரியா said...

ஏதோ கலக்கம் ஏற்கனவே இருந்ததாலோ என்னமோ... இந்தக் கேரக்டர் கலங்கடிக்குது... வழக்கம் போல நல்லாருக்கு சார்..

vasu balaji said...

@@
நன்றி இராமசாமி
நன்றிங்க மஹி க்ரான்னி

vasu balaji said...

/ஓலை said...

ரொம்ப நல்லா இருக்கு இந்த கேரக்டர்.

"அவள் கடையைத் தவிர்த்தே வருகிறேன்."
யோசிக்கணும். இப்ப தான் ரெகுலர் customer இன் தேவை அவங்களுக்கு./

அதான் சொன்னேனே. விசேஷம்னாதான் அங்க போய் வாங்குறது. அது தம்பியே போவார். நான் போனா என்னால அவங்கள பார்க்கமுடியாது.

vasu balaji said...

@@சாரி ஸ்ரீராம். என்ன பண்ண. :)
@@நன்றிங்க சித்ரா
@@நன்றிங்க ரத்னவேல் சார்
@@நன்றிங்க அருள்

vasu balaji said...

/ராஜ நடராஜன் said...

ஜனநெரிசலில் அவரவர் கடமையே முதன்மையாக ஓடும் மக்கள் மத்தியில் மனிதர்களின் மனங்களை,உடல் இயல்பு,அதன் மொழி பற்றி உற்றுக் கவனிக்கிறீர்கள்.

பாதி படிச்சிட்டுப் பின்னூட்டம் வந்து பின் தொடர்கிறேன்./

நன்றிங்ணா.

vasu balaji said...

@@நன்றி ஸ்ரீராம்
@@ நன்றி கதிர்.
/எழுத சோம்பல் படும் விரலை உடைத்தால் என்ன :)/

நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாக்குன்னு ஆயிடும்:)

vasu balaji said...

@@நன்றி சுந்தர்ஜி.

vasu balaji said...

/கலகலப்ரியா said...

ஏதோ கலக்கம் ஏற்கனவே இருந்ததாலோ என்னமோ... இந்தக் கேரக்டர் கலங்கடிக்குது... வழக்கம் போல நல்லாருக்கு சார்../

நன்றிம்மா. காலையில மார்க்கட் போயிருந்தேன். இவங்க கடைக்கு முன்னமேயே திரும்பிட்டேன். என்னமோ எழுதணும்னு தோணுச்சு.:(

பா.ராஜாராம் said...

கண்கள் கலங்கியது பாலாண்ணா. அபாரம்!

க.பாலாசி said...

ஒரு வெண்கலச்சிலைக்கு கதம்ப மாலை போட்டமாரி அற்புதம்... ஆனாலும் எல்லாக்கேரக்டர்குள்ளயும் மறைந்து கிடக்கிற சோகம் ப்ச்ச்.

vasu balaji said...

நன்றி பா.ரா
நன்றி பாலாசி

Unknown said...

பிரமிப்பு எனக்கும் நீங்கவில்லை...