Friday, April 1, 2011

பிலிமு காட்டிய பிலிமு.

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, கிட்டத்தட்ட ஒன்னர வருஷத்துக்கு அப்புறம் தியேட்டர்ல போய் படம் பார்க்கலாம்னு ஒரு முடிவெடுத்தேன். அட நெட்ல புக் பண்ணலாமேன்னு தேடுனேன். அபிராமி தியேட்டர்ல 120ரூ டிக்கட்னு க்ளிக் பண்ணா, ஆடுற சேர், அதுக்கு 60ரூ தனியான்னு இருந்துச்சு. அட குடுக்கறத குடுக்கறோம் ஆடிட்டேதான் பார்ப்போமேன்னு இருந்தா ஆட்டி விடுற கூலி 120ரூ டிக்கட்டுக்குன்னு இருந்துச்சு. போடாங்கொய்யாலன்னு மூடிட்டேன். அதோடவா? காப்பி வேணுமா, ஸ்னாக்ஸ் வேணுமான்னு எல்லாம் ஆப்ஷன்.

காலம்தான் எவ்வளவு மாறிப் போச்சு. படிக்கிறப்ப சினிமாவும் புத்தகமும்தான் பொழுது போக்கு. விளையாட்டு வேடிக்கை பார்க்க மட்டும்தான். சினிமாவும் எப்பவும் இல்லைன்னாலும் அனேகமா எல்லா சிவாஜி, எம்.ஜி.ஆர்., சாம்பார்,முத்துராமன் படங்களும், சில ஜெய்சங்கர் படங்களும் (பத்தாம்பு படிக்கிறப்ப ஜாக்பாட் ஜாங்கோ பார்த்தா கெட்டு போயிடுவேன்னு காசு குடுக்கமாட்டன்னு திட்டுச்சு ஆத்தா).

படம் பார்க்கிறது ஒரு அனுபவம்னா நாம படம் பார்த்ததே அனுபவங்கள்தான். சயானி (ஒன்னரை கி.மீ), வீனஸ் (3 கி.மீ) நாதமுனி (4 கி.மீ), ராயல் (மூனரை) சரஸ்வதி/லக்ஷ்மி (4கி.மீ) மேகலா (3கி.மீ), புவனேஸ்வரி(4 கி.மீ), சரவணா/பாலாஜி (ரெண்டரை கி.மீ), உமா (3 கி.மீ). எல்லாம் நடைப் பயணம்தான். அப்போல்லாம் காலைக் காட்சி அபூர்வம். மேடினிதான். 3 மணிக்கு படம்னா 2 மணிக்கு டிக்கட் குடுப்பாங்க. நாம காலைல சாப்பிட்டு அம்மா கூட 10 மணிக்கு கிளம்பினா பதினொன்னு பதினொன்னரைக்கு அங்க கதவு திறக்க முன்ன க்யூல நிப்போம்.

கதவு திறந்ததும் குடுகுடுன்னு ஓடி முதல் இரண்டாவதா போய்ட்டு, யம்மா வரான்னு சொல்லி இடம் வைக்கணும். அப்பதான் கொஞ்சம் காத்தோட்டமா இருக்கும். கையில ஒரு புத்தகம் வச்சிக்கிட்டா (பெரும்பாலும் தினமணிகதிர், ராணி) விசிறிக்க வாகு. டிக்கட்டு 42 பைசால இருந்து 52 பைசா வரைக்கும் வித்தியாசப்படும். யம்மா டப்பால தயிர்சாதம் கொண்டு வந்திருக்கும். டிக்கட் குடுத்ததும் வாங்கி  ஒரு டிக்கட்டை புடுங்கிட்டு தபதபன்னு ஓடி இருக்கறதுலயே பின்னாடி சீட்ல ஓர சீட்டுக்கும் மூணாவது சீட்டுக்கும் நடுவில உக்காந்து ரெண்டு கையும் விரிச்சி யம்மா வரா, தம்பி வாரான்னு சொல்லிட்டிருக்கணும். 

அப்புறம் சமத்தா தச்சி மம்மு சாப்பிட்டு டப்பாவை கழுவிட்டு வந்து உக்காந்தா ‘ஆரோக்கிய வாழ்வினையே காப்பது லைஃப்பாய். லைஃப்பாய் எவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே’ல ஆரம்பிச்சி, வார் பிக்சர் (ஹி ஹி. நியூஸ்தான்)ல தொடர்ந்து சிவாஜி கூட அழுது, நாகேஷ் கூட சிரிச்சி, எம்.ஜி.ஆர்.க்கு வாஜ்யாரே, பின்னாடி ஒளிஞ்சிருக்கான் வாஜ்யாரேன்னு எல்ப் பண்ணி, ஜனகனமணக்கு நின்னா யம்மா தொலைஞ்சி போயிடுமுன்னு சாரி சொல்லிட்டு கூடவே ஓடி ‘டொங்கட்டான் டொங்கட்டான்னு’ பராக் பார்த்துட்டே நடந்து வந்த சொர்க்கம் பதினொன்னாம்புல போயே போச்சு.

பத்தாம்பு முழு பரிட்சை லீவுல பொம்பள டிக்கட்டுல அனுமதிச்ச பாவி, பதினொன்னாம்பு கால் பரிட்சையில கண்டு புடிச்சிட்டான் நான் ஆம்பிள்ளை சிங்கம்னு. யண்ணா யண்ணா இந்த ஒரு தாட்டி உடுண்ணா. அடுத்தவாட்டி ஆம்பிளை ஆயிக்கறண்ணான்னு கெஞ்சி பார்த்த படம் மூன்று தெய்வங்கள்னு நினைக்கிறேன். அப்புறம் ஆம்பிளைங்க க்யூன்னு ஆகிப் போனதும்தான் 52 பைசா டிக்கட்டின் கோர முகம் தெரிஞ்சது.

கிட்டத்தட்ட ஒரு மிருகமாதான் மதிச்சிருக்கானுவ நம்மள. அப்ப புரியல. சயானில ஒரு ஒன்னரை அடி கதவு திறக்குமான்னு மூத்திர சந்துல க்யூல நிக்கணும். உசுரப் புடிச்சிட்டு ஓடிப்போய் முதல்ல நிப்பேன். நம்ம உருவத்துக்கு அம்புட்டு மதிப்பு. சின்னப் பசங்க ஏண்டா இந்த க்யூவுல வரீங்க ஒத்துன்னு ஒன்னு, படிக்கிற வயசுல சினிமா இன்னாடான்னு அட்வைஸ்லயே ஒன்னு, பேச்சு குடுத்துக்கிட்டே ஒன்னுன்னு நம்மள ரிவர்ஸ் அடிக்க வச்சுறுவானுவ. வெவரம் தெரியாம அழுவாச்சியா வரும். இங்க கூடுதல் கொடுமை என்னன்னா, புழுக்கத்தோட, சாராய நெடியில பொரட்டிகிட்டு வேற வரும்.

கவுண்டர் திறக்கற நேரம் பார்த்து வருவானுங்க கடைசியில இருந்து. தலைக்கு மேலதான் வருவானுங்க. கையில கீரக்கட்டு மாதிரி பூனக்காஞ்சான் செடி. யோவ் யாருய்யான்னு குரல் கிரல் விட்டா போச்சு. மூஞ்சில ஒரு தேய் தேச்சிட்டு போயிடுவானுவோ (நமக்கு அந்த பயமில்ல. அவன் தலை கீழா தொங்குனாதான் நம்மள ட்ட்டச் பண்ண முடியும். நேர கவுண்டர் கிட்ட போய் தலைமேலயே குதிப்பானுவ. நாம 5 வதா இருந்த ஆளு பத்தாவதா போனாலும் நம்மள தள்ளிட்டு போன அஞ்சு பேர தள்ளிட்டு குதிக்கவும் ஒரு அஞ்சு பேரு இருக்கானுவல்லன்னு ஒரு சந்தோஷம்.

மேகலா, சரவணா, வீனஸ் எல்லாம் ரிஸ்க். அவன் மேல கம்பி வலை வேற அடிச்சிருப்பான். பன்னாடைங்க நாலுகால் ஜந்து மாதிரி குனிஞ்சிக்கிட்டே வருவானுவ. தலைய குனிஞ்சிட்டு தரையோட உக்காந்துடணும். எவனாச்சும் சவுண்ட் விட்டா பூனை மாதிரி புசுக்கு புசுக்குன்னு ஒன்னுக்கு அடிப்பானுவ.

எப்புடியோ டிக்கட்ட வாங்கி தல தெறிக்க ஓடி நாம புடிக்கிற இடம் முதல் வரிசை, இல்லாட்டி அடுத்த வரிசையில ஓரமா ரண்டு சீட்டு. டிக்கட்டு கிழிக்கிறவன் லூசான்னு ஒரு பார்வை பார்ப்பான். அவனுக்கென்ன தெரியும்? என்னதான் ஓடி கடைசி வரிசைல புடிச்சாலும், பூனைய புடிக்கிறா மாதிரி என்னை காலர புடிச்சி தூக்கி முன்ன போய் உக்காருன்னு எனக்குன்னே ஒரு வில்லன் வருவான்னு. நீ சொல்லி நான் என்னடா போறதுன்னு நாமளே போயிடுவோம்ல. அப்பவும் பக்கத்து சீட்டை புடிச்சி வச்சிக்கிறது. அல்லாடுற ஒரு ஜீவன இங்க உக்கார்ணான்னு இடம் குடுத்தா, கொஞ்சம் சீட் பார்த்துக்கண்ணா ஒன்னுக்கு உட்டுட்டு வரேன்னு இன்சூர் பண்ற டெக்கினிக்கு அது. பெருங் கொடுமை தச்சி மம்மு கட். காய காய உக்காந்து படம் பார்க்கணும்.

பி.யூ.சி. படிக்கிறப்ப, மொத மொத இங்க்லீஸ் படம் பார்த்தமுல்ல. ஒன்னார்ரூவா டிக்கட்டு. இங்லீஸ் படம்னா கெட்ட நெனைப்புல்லாம் வேணாம். ஆப்ரிகன் சஃபாரி. அதுக்கு போஸ்டர காட்டி, பாரும்மா புலி, சிங்கம் படம்மான்னு கெஞ்சி கெஞ்சி பர்மிஷன் வாங்க பட்ட பாடு இருக்கே. காலம் அப்புடி. வேலைக்கு வந்து கொஞ்ச நாள் வரைக்கும் ‘தோ ரஹா’ அப்படின்னா ஹிந்தில கற்பழிப்புன்னு தினத்தந்தி தப்பு தப்பா சொன்னத நம்ம்ம்ம்பி வாழ்ந்த காலம். எல்லாப் பத்திரிகையும் கற்பழிக்கறதுன்னு போட்டா பத்திரிகையோட கற்பு போயிடும்னு ‘தோ ரஹா பண்ணிட்டான் வில்லன்’னு போடுற காலம். எப்புடியோ முத முதல்ல 5ரூ கூட சினிமா போன மிதப்பு. பொட்டிக் கடையில ஒரு பன்னீர் சோடா குடிச்சா என்னன்னு ஒரு அரிப்பு.

நம்ம போறாத காலம் நமக்கு முன்னாடி ஒருத்தன் கமர்கட்டுன்னு 3ரூபாய நீட்டி ஒரு கமர்கட்டு வாங்கி வாய்ல இடுக்கிட்டு போனா வயசு பையனுக்கு பத்து பைசா கமர்கட்டு இருக்கும்போது 3ரூக்கு கமர்கட்டு வாங்குறானேன்னு தோணுமா தோணாதா? எனக்கு ஒரு கமர்கட்டுன்னா பொளிச்சுன்னு மண்டைல போட்டு ஓடுன்னு விரட்டிட்டான். அப்புறம் பெரிய பசங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டது அந்த்த்த கமர்கட்டுன்னா அபின்னு.

எம்.ஜி.ஆரை வெரட்டி விட்ட பிறகு வந்த முதல் படம் நேற்று இன்று நாளை. படத்த ஓட விடமாட்டோம்னு இவனுவ. நிறுத்துடா பாக்கலாம்னு அவனுவ. கலவர பூமியாப் போச்சு. எப்படியோ ஒரு நிலைக்கு வந்தப்புறம் சயானி மூத்திர சந்துல நின்னு க்யூல நின்னாச்சு. நமக்கு முன்னாடி ஒரு எம்.ஜி.ஆர். ரசிகரு. தலை தொங்க தொங்க தண்ணி. ‘டாய்!னு சவுண்ட் விட்டு கருணாநிதியை திட்டிட்டு தலை தொங்கிடுவாரு’. டிக்கட் குடுக்க ஆரம்பிக்கவும் தள்ளாடி தள்ளாடி போய், கவுண்டர் கிட்ட லுங்கிய தூக்கி டவுசர்ல விட்ட கை வெளிய வர மாட்டிங்குது.

பின்னாடி இருக்கிறவன் யோவ் போங்கய்யான்னு தள்ளுறான். நாமதான் ரெடியா சில்லர வச்சிருக்கமேன்னு கவுண்டர்ல நீட்டிட்டேன். தப்பாய்யா? டபார்னு ஷட்டர அடிச்சான். துட்டு உள்ள மாட்டிக்கிச்சி. அப்புறம் போனா போவுதுன்னு டிக்கட்ட குடுத்தானேன்னு வாங்கிட்டு உள்ள வந்தா, ப்ளாக்ல விக்க வாங்கினவன உட்ட போலீசு, அவ்ளோ அவசரம் என்னான்னு பொளேர்னு கன்னத்துல குடுத்துட்டான். அப்புடி என்ன மானம் கெட்டு சினிமா பாக்குறதுன்னு டிக்கட்ட கிழிச்சி போட்டு வெளிய வந்துட்டேன்.

அப்புறம் எட்டு வருஷம் தியேட்டர் பக்கம் போனதில்லை. ஐ.சி.எஃப். இன்ஸ்டிட்யூட்ல 25 பைசாவுக்கு சனி, ஞாயிறுல பழைய படம் போடுவாங்க. அது மட்டும் கொஞ்ச நாள் ஓடுச்சு. அப்புறம் ஆரம்பிச்சது ஆங்கிலப் பட மோகம். ஒரே நாள்ள 4 படம், மொத நாள் மொத ஷோன்னு போனது. அப்பவும் 3ரூ டிக்கட்டுக்கு 11 மணிக்கு க்யூதான் பெரும்பாலும்.

அப்புறம் கலியாணம் ஆகி அம்மிணி ஆசை பட்டுச்சுன்னு வேட்டகாடு சினிமாக்கு போனது. என்.டி.ஆர். ஸ்ரீ தேவிய வெரட்டி வெரட்டி பாடின டூயட்டுல அரண்டு போய் மண்டை இடி வந்துடுச்சி. நாம சங்கராபரணம் மாதிரி சாஃப்ட் படம் பாக்குற ஆளு. அப்புறம் நம்ம விருப்பத்துக்கு ஹிஸ்டரி ஆஃப்த வர்ல்ட் பார்ட் 3 க்கு கூட்டிட்டு போனா ஒரு காமெடி சீனுக்கு விளக்கம் கேட்டுச்சு அம்மணி. சொன்னதும் ஒரே அழுகை. இந்த மாதிரி எழவு படத்துக்கெல்லாமா கூட்டிட்டு வருவீங்கன்னு.

சரி இனிமே சினிமாவே வேணாம்னு ஒரு டீலு. டி.வில படம் பார்க்கலாம்னா பக்கத்துல உக்காந்து காமெடி சீன் வந்தா யானை முட்டுனா மாதிரி விலாவில முழங்கையால ஒரு இடி, அப்புறம் சிரிப்பு, இல்லைன்னா டப்பாக் கட்டு கட்டிக்கிட்டு உக்காந்திருந்தா வெறும் தொடையில படார்னு ஒரு அடி, அப்புறம் சிரிப்புன்னு ஒரு ரெண்டு படம் ஓடிச்சி. அப்புறம், மொக்கை காமெடிக்கெல்லாம் இந்த டார்ச்சர் தொடரவும், ரைட்ட்டு, இத சாக்கா வச்சி வெளுத்து வாங்குறான்னு புரிஞ்சி போச்சு.

அது என்ன படம் இருக்கட்டுமே, நாம அமைதியா ஒரு புக்கை வச்சிக்கிட்டு செட்டில் ஆயிடுவோம். அப்பப்ப தியேட்டர்னு முனகல் வரும். அதுக்கு அரை நாள் லீவ் போட்டு டிக்கட் ரிஸர்வ். அப்புறம் படம் பார்க்க லீவுன்னு எகிறி எஸ்ஸாயிடுவோம்ல. இந்த முப்பது வருசத்துல ஒரு ஆறேழு படம் தியேட்டர்ல பார்த்திருந்தா அதிகம்.

நல்லகாலம் இப்ப மாதிரி உக்காந்த இடத்துல டிக்கட்டு, வேண்டிய சீட்டு, தின்னுற தீனி எல்லாத்துக்கும் வழின்னு அப்போ இருந்திருந்தா? இடி வாங்கி அடி வாங்கி, நம்ம உசரத்துக்கும் உருவத்துக்கும் நசுங்கின சொம்பு உருண்டு வராமாதிரியே இருக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.


டிஸ்கி: இம்புட்டு நீளமா? ஸ்ஸ்ஸப்பான்னு அலுத்துக்கிறவங்களுக்கு. அந்த காலத்துல படம் வந்ததும் எத்தன ரீலுன்னு கேக்கணும். 18/20ன்னா அப்பாடான்னு ஒரு திருப்தி. 16 ரீலுன்னா சின்ன படம்பான்னு ஒரு சலிப்பு. இதும் அப்படித்தான்.
-:o:-

33 comments:

நசரேயன் said...

ம்ம்ம்

நசரேயன் said...

நான் இன்னும் வாலிப புள்ள என்பதாலே கருத்து சொல்லலை

Chitra said...

நீங்க படங்கள் பார்க்க டிக்கெட் வாங்கின கதையையே , "ஆட்டோக்ராஃப்" மாதிரி ஒரு படமா எடுக்கலாம் போல..... அன்றிலிருந்து இன்று வரைன்னு.... கலக்கல் பதிவு!

bandhu said...

இந்தமாதிரி கொடுமையா நானும் கேசினோவில் ரைடர்ஸ் ஆப் தி லாஸ்ட் ஆர்க் பார்த்தேன்! சரளமான நடை உங்களது!

Philosophy Prabhakaran said...

Superb Narration...

Philosophy Prabhakaran said...

// அபிராமி தியேட்டர்ல 120ரூ டிக்கட்னு க்ளிக் பண்ணா, ஆடுற சேர், அதுக்கு 60ரூ தனியான்னு இருந்துச்சு. அட குடுக்கறத குடுக்கறோம் ஆடிட்டேதான் பார்ப்போமேன்னு இருந்தா ஆட்டி விடுற கூலி 120ரூ டிக்கட்டுக்குன்னு இருந்துச்சு. //

அனேகமா நீங்க பார்த்தது லவ்வர்ஸ்களுக்கான சீட்ஸ்... டிக்கெட் ஒத்தையா எடுக்க முடியாது, ரெண்டு டிக்கெட்டா தான் எடுக்க முடியும்...

Philosophy Prabhakaran said...

// சயானி (ஒன்னரை கி.மீ), வீனஸ் (3 கி.மீ) நாதமுனி (4 கி.மீ), ராயல் (மூனரை) சரஸ்வதி/லக்ஷ்மி (4கி.மீ) மேகலா (3கி.மீ), புவனேஸ்வரி(4 கி.மீ), சரவணா/பாலாஜி (ரெண்டரை கி.மீ), உமா (3 கி.மீ) //

பிரைட்டன் டாக்கீஸ் பார்த்திருக்கீங்களா...

vasu balaji said...

/பிரைட்டன் டாக்கீஸ் பார்த்திருக்கீங்களா.../

எங்க ஆஃபீசுக்கு பக்கம். பாலைவனச் சோலை அங்கதான் பார்த்தேன்:)

பெசொவி said...

//மொக்கை காமெடிக்கெல்லாம் இந்த டார்ச்சர் தொடரவும், ரைட்ட்டு, இத சாக்கா வச்சி வெளுத்து வாங்குறான்னு புரிஞ்சி போச்சு. //

:))

ஸ்ரீராம். said...

அதெல்லாம் ஒரு காலம்....! சுகமா எழுதியிருக்கீங்க...

ஓலை said...

Engalukku April 1st filimu kaattareengalaa? Nallaa irukku sir. Enna thaan eththini thooram nadanthu poi eththini adi vaangi deepavali release annikku padam paarkkira sugam super thaan.

Mahi_Granny said...

எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் கிடைத்திருக்கும் . அதனை இத்தனை ரசனையாய் எழுத்தில் கொண்டுவந்து விட்டீர்கள் பாலா சார்

பழமைபேசி said...

ஒரு படத்தைப் போயி பார்க்காம, இங்க பெருசா படம் போட்டுட்டு இருக்கீக அப்படின்னு சொல்லத் துப்பில்லாம என்னாவொரு டபாய்ப்பு? இஃகி, நான் தளபதியச் சொன்னனுங்க!!

பவள சங்கரி said...

ஹ..ஹா......சூப்பர் நடைங்க........

பிரபாகர் said...

சினிமா பார்ப்பதைப்பற்றி சொல்லியிருக்கிறீகள்... எழுத்த்தில் இன்னும் சுவராஸ்யம் அய்யா...

பிரபாகர்...

settaikkaran said...

சினிமா பார்க்கிற அனுபவத்தை, வாத்தியார் படத்தைப் போலவே விறுவிறுப்பாக, உங்களது டிரேட்-மார்க் சரளத்துடன், இடையிடையே சில ஆச்சரியமூட்டும் தகவல்களோடு சொல்லியிருக்கீங்க! அதிலும் அந்த பெண்கள் வரிசை மேட்டர் சூப்பரோ சூப்பர்! :-)

Unknown said...

எங்கூரு டூரிங் டாக்கீஸ் நினைவுக்கு வருது...

ஹூம்.. அது ஒரு கனாக்காலம்...

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே .. செம காமெடிண்ணே

ராஜ நடராஜன் said...

//அட குடுக்கறத குடுக்கறோம் ஆடிட்டேதான் பார்ப்போமேன்னு இருந்தா ஆட்டி விடுற கூலி 120ரூ டிக்கட்டுக்குன்னு இருந்துச்சு.//

தமிழ் மணம் திறந்தவுடன் தரிசனம்:)

ராஜ நடராஜன் said...

//சினிமாவும் எப்பவும் இல்லைன்னாலும் அனேகமா எல்லா சிவாஜி, எம்.ஜி.ஆர்., சாம்பார்,முத்துராமன் படங்களும், சில ஜெய்சங்கர் படங்களும் //

எல்லாருமே பேரு போட்டுட்டு அவர மட்டும் ஏன் சாம்பார்:)

ராஜ நடராஜன் said...

//‘ஆரோக்கிய வாழ்வினையே காப்பது லைஃப்பாய். லைஃப்பாய் எவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே’ல ஆரம்பிச்சி,//

இன்னா மெமரி யம்மே:)

ராஜ நடராஜன் said...

//கவுண்டர் திறக்கற நேரம் பார்த்து வருவானுங்க கடைசியில இருந்து. தலைக்கு மேலதான் வருவானுங்க. //

அது ஒரு செம டெக்னிக் இல்ல:)

Paleo God said...

சார் அடுத்தமுறை நீங்க நானு பிரபாகர் மூணு பேரும் எதாவது எம்ஜியார் படத்துக்கு போலாம்! :))

vasan said...

நீங்க‌ள் சொன்ன‌ விச‌யத்தை விட‌, சொன்ன‌ வித‌ம் 'சும்மா க‌லைவாணரு ப‌டங்கெணக்‌கா, சூப்ப‌ரு' பாம‌ர‌ன் சார்.

ராஜ நடராஜன் said...

//16 ரீலுன்னா சின்ன படம்பான்னு ஒரு சலிப்பு. இதும் அப்படித்தான்.//

16 கூட பரவாயில்ல.14 இருக்கே!

பா.ராஜாராம் said...

:-))

40- பைசாவிற்கு படம் பார்த்த நினைப்பு வருது பாலாண்ணா. 15- பைசா, சக்கரச் சாயா!

'எங்க காலத்துலல்லாம்' ன்னு சொல்லக் கேட்டது போக, சொல்ற காலமும் வந்துருச்சே பாலாண்ணா!

120-க்கு ஆடுற சேர் அப்போல்லாம் என்கிற காலமும் வந்துரும் போல. :-(

vasu balaji said...

பா.ராஜாராம் said...

:-))

40- பைசாவிற்கு படம் பார்த்த நினைப்பு வருது பாலாண்ணா. 15- பைசா, சக்கரச் சாயா!//

ஆமாம் பா.ரா. ‘ஸ்க் ஸ்க்’னா பிஸ்கட், இ ஈய்ய்யெய்ன டீ, ’சொட்ட்ட்ட்ட்ட்ட்ட்டெ கலாஆஆஆஆஆஆஆ’ன சோடா கலர், ‘ம்ஸா ம்ஸேஏஏஏய்’னா சமூசா, உக்காந்த இடத்துல வரும்:(

க.பாலாசி said...

ஸ்ஸ்ஸப்பா முடியல... அதுவும் போலீஸாண்ட அடிவாங்கி ரோசம் வந்தது... //இத சாக்கா வச்சி வெளுத்து வாங்குறான்னு புரிஞ்சி போச்சு. // இதுன்னு... அக்மார்க்..

//ஒரு முடிவெடுத்தேன்.//

ஹி..ஹி.. அவசரத்துல ‘ஒரு முடியெடுத்தேன்’னு படிச்சிட்டேன்..அந்தளவுக்கு ஏதுன்னு கன்ப்யூஸ் ஆயிடுச்சி...

எனக்கு தெரிஞ்சி கும்பகோணத்துல யம்மாக்கூட பார்த்த பாசமலர்தான் முதல்படம்னு நினைக்கிறேன். மத்ததெல்லாம் அப்பறமேட்டுதான்...

Unknown said...

அம்மா.......டி..யோ.... டிக்கெட் எடுக்கவே இவ்வளவு பெரிய பதிவா...
அருமையாக எழுதியிருக்கிங்க... பழைய நிகழ்வுகளை..

Jerry Eshananda said...

என்னங்கண்ணா...நீங்க....பாதி life வேஸ்ட் பண்ணியிருக்கீங்க..இந்த கிளுகிளுப்பு மலையாள படமெல்லாம் லிஸ்ட்ல வரலைங்கன்னா......அம்புட்டு அப்பாவியாண்ணா?

vasu balaji said...

@@நன்றி நசரேயன்
@@நன்றிங்க சித்ரா
@@நன்றி பந்து:))
@@நன்றி இராமசாமி
@@நன்றி பிரபாகரன்
@@நன்றி பெ.சொ.வி
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி சேது
@@நன்றி மஹி_க்ரான்னி
@@அப்புடி கேளுங்க பழமை
@@நன்றிங்க நித்திலம்
@@நன்றி பிரபா
@@நன்றி சேட்டை
@@நன்றி பாலாசி
@@நன்றிங்க சிநேகிதி
@@நன்றி செந்தில். ஆமாங்க நானும் எழுதிட்டு வெட்டிட்டேன். நீஈஈஈளம்.
@@நன்றி நடராஜண்ணே
@@நன்றி செந்தில்குமார்
@@நன்றிங்க வாசன்

vasu balaji said...

/ஜெரி ஈசானந்தன். said...

என்னங்கண்ணா...நீங்க....பாதி life வேஸ்ட் பண்ணியிருக்கீங்க..இந்த கிளுகிளுப்பு மலையாள படமெல்லாம் லிஸ்ட்ல வரலைங்கன்னா......அம்புட்டு அப்பாவியாண்ணா?/

அரசாங்கம் 18 வயசுல மேஜர்னாலும் நம்ம அம்மா 20 வயசு வரைக்கும் 6 மணிக்கு ஊட்டுல இல்லன்னா பஸ் ஸ்டேண்ட்ல வந்து நிக்கும். :))

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

நேர்மையான பதிவு பாலாண்ணா.

இதில் கிட்டத்தட்ட எல்லா அனுபவமும் எனக்கும் கிடைத்திருக்கிறது.

எனக்குத் தெரிந்து சினிமாவைப் பார்க்கப் போன அனுபவத்தையே இத்தனை விலாவாரியாய்ப் படித்த நினைவில்லை.

அற்புதம்.