Friday, February 25, 2011

அஞ்சலை - வாசிப்பனுபவம்.

நாஞ்சில் நாடனின் பாராட்டு விழாக் காணொலியில்தான் முதலில் அவரைக் கண்டேன். சற்றும் பூச்சற்ற வட்டாரப் பேச்சுத் தமிழில் வயிறு நோக சிரிக்கப் பேசினாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உச்சந்தலையில் நச்சென உளியாய் இறங்கும் விஷயங்கள் அவை.

புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை எடுத்துக் கொண்டு பில் போடுமிடத்தில் பணத்தைச் செலுத்திக் கொண்டிருக்க அந்தப் புத்தகத்தை எடுத்தார். சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்து எழுதப் போக ‘என்னுடையது’ என்று தவிர்க்க முனையும் நொடியில் ‘இவர்தாங்க ஆசிரியர்’ என்ற அறிமுகம் நடந்தது.

வெள்ளந்தியாய்ச் சிரித்த முகத்துடன் புத்தகத்தில் பெயர் கேட்டு கையெழுத்துப் போட்டு ‘நெல்லாருக்கும்! படிங்க’ என்று இரு கையாலும் எடுத்துக் கொடுத்தபோது தன் சிசுவை பெருமையுடன் கொஞ்சக் கொடுக்கும் வாஞ்சையிருந்தது முகத்தில்.

அப்படித்தான் வந்து சேர்ந்தாள் கண்மணி குணசேகரனின் அஞ்சலை.
அஞ்சலை! ஒரு தனி மனுஷி அல்ல. அவளே சனம். அவள் எதிரிகளும் தனி மனிதர்கள் அல்ல. அவர்களுமே சனம். உடலின் ஒரு சிறு புண்ணை சொறிந்து சொறிந்து ரணமாக்கி புற்று நோயாக்குவதுபோல் சமூகத்தின் அங்கமாகிய பெண்ணை விரட்டி விரட்டி அவள் வாழ்வைப் பறிப்பதும் அச்சமூகமே.

துரத்தித் துரத்தி உறவு பறித்த வாழ்வின் மீதான ஆசையை கட்டிக் காக்கும் முன் பின் அறியா நட்பு. இழைய இழைய உறவாடி கடன் கொடுக்கவில்லை என்பதால் நாத்தெறிக்க அவமதிக்கும் நட்பு. தேள் கொட்டி விட்டதாய் நடித்து வலி போக்க சற்றும் தயங்காமல் தாலியைக் கழட்டி உதவும் பெண்ணின் மார்பகத்தைத் தடவும் பாலிய நண்பன், தன் சுகத்துக்காக தங்கையை பலிகடா ஆக்கும் அக்காள், இப்படி எங்கு நோக்கிலும் மனிதர்களின் (சனங்களின்) வக்கிரங்கள் இரையானவளைத் தேடிக் கிழிக்கும் அவலம்.

முதல் பக்கத்திலேயே வம்புக்கலையும் பெண்ணின் மூலமாகத்தான் அறிமுகமாகிறாள் அஞ்சலை. முடிக்கும் வரை அஞ்சலையை ஒரு கதாபாத்திரமாக உணரவே முடிவதில்லை. அவளோடு சிரித்து, அவளோடு அழுது, அவள் தவிக்கும் தவிப்பைப் பூரணமாய் உள்வாங்கி ஏதும் செய்ய இயலாமல் கை பிசைந்திருக்கமட்டுமே முடிகிறது நம்மால்.

விதவை பாக்கியத்துக்கு மூன்றாவது பெண்ணாக அழகாய்ப் பிறந்து தொலைத்தது மட்டுமே அவள் செய்த பாவம். ஆளில்லாத (ஆம்பிள்ளை) குடும்பத்தைக் கட்டித் தூக்கி இரண்டு பெண்களை கரை சேர்த்து கடைக்குட்டி மகனைப் படிக்க வைத்து எப்படியோ பிறப்பைக் கழிக்கும் பாக்கியத்துக்கு ஆணுக்கும் மேல் ஆதரவாய் உழைத்துக் கை கொடுக்கிறாள் அஞ்சலை.

ஊர் வாய்க்கு அஞ்சியே அவளை ‘ஒருத்தன் கையில் பிடித்துக் கொடுக்க’ ஆசைப்படும் பாக்கியத்துக்கு ஆரம்பமே இரண்டாவது மருமகனால் விழுகிறது அடி. வஞ்சமும் வார்த்தையாகவுமே அல்லல் படுகிறது அஞ்சலையின் வாழ்வு.

விருத்தாசலத்தைச் சுற்றியுள்ள ஊர்களில் அமைகிறது கதை. துள்ளலும் கேலியுமாய் கார்குடல் வயல் காட்டில் அஞ்சலையோடு அத்தனை வேலைகளையும் அவளோடு செய்யும்போது தெரிகிறது சோற்றில் விவசாயியின் வியர்வை மணம். திருமணமாகி மணக்கொல்லை போய் முந்திரிக்காட்டின் உழைப்பை உணர்கையில் பாயசத்தில் மிதக்கும் முந்திரி கசக்கக் கூடும்.

பாழாய்ப் போன சமுதாயம் சொல்லிக் கொடுத்த ’ஒருத்தனை புருசன்னு நினைச்சிட்டு அவனோடு மனசார வாழ்ந்து திருமணத்தில் அவன் தம்பியை கட்ட வச்சு ஏமாத்திப்புட்டானுவளே! என்னுமா அவனுக்கு முந்தி விரிக்கிறது’ என்பதில் கலைகிறது அவள் வாழ்க்கை.

’நானு போயிட்டா நீ தனியாக் கெடந்து என்னா பண்ணுவ எம்மா?’ என்று யாருக்காக கவலைப் பட்டாளோ அந்தத்தாயே முதல் எதிரியாகிறாள். அவள் வாழ்க்கையை  விதவிதமான வாளாய், ஈட்டியாய், நெருப்பாய், விஷமாய் சனத்தின் நாவு கூறு போடுகிறது.

சுருட்டி வைத்த உதிர்ந்த முடி பறந்து போய் அவள் சீலத்தை எள்ளி நகையாட வைக்கிறது. பேசினாலே இந்த இழவில் முடியும் என்று ஒதுங்கிப் போனாலும் விடாமல் துரத்துகிறது. தாயிடம் கொடுத்த சத்தியத்தினால் சாகவும் முடியாமல், ஓட இடமின்றி ஓடி, ஒளிய இடமின்றி ஒளிந்து, ‘இனியாவது’ என்ற நம்பிக்கையில் கிடைத்த வாழ்வை வாழத் தலைப் படுகையில் அதைத் தேடிக் குலைப்பதில்தான் சனத்துக்கு எத்தனை முனைப்பு?

ஏதோ ஒரு குக்கிராமத்து பறத்தெருவின் மனிதர்கள் மட்டுமல்ல இவர்கள். படித்ததாய், நாகரீகமானவர்களாய் வேஷம் போடும் நம் ஒவ்வொருவருள்ளும் இருக்கிறது சனம். சனம், சமூகம் என்று சொறிந்து சொறிந்து மேன்மேலும் நகைப்புக்கு இலக்காக்கி எந்த வழியும் போகவிடாமல் சுழட்டி சுழட்டி அடிப்பது ஒன்றே சமூகமா?

போக இடம் தெரியாமல் போய் நின்றவளை வழி நடத்தி வாழவைக்கும் வள்ளியும் இதே சமூகம்தானே! வள்ளியைப் போல் ஆங்காங்கே புண்ணுக்கு மருந்திடும் மனங்களும் இருக்கத்தான் செய்கிறது. யாரைச் சொல்ல யாரை விட?

’ஆனது ஆகிப் போச்சு! அமைஞ்சதுதான் வாழ்க்கைன்னு’ வாழ வேண்டியதுதான என்று சனம் சொல்லும். சொல்கிறது. ‘உருவத்தைப் பார்த்து வெறுத்து வெள்ளைத் தோலுக்கு மயங்கியவள்’ என்று ஒரு கோணல் பார்வையும் பார்க்கக் கூடும். அவளுக்கு வாழத் தெரியவில்லை என்று ஒற்றை வார்த்தையில் புறம் தள்ளலாம் சமூகம். அவள் வாழ்வை அவளை வாழவிடவில்லை என்பதே உண்மை.

வஞ்சிக்கப் பட்டவளை ’ஆறுதலாய் ஏற்றிருக்குமேயானால்’ போன்ற பல ஆனால்களால் அழிபடுகிறது அவள் வாழ்க்கை. சமூகமே எள்ளினாலும் புறந்தள்ளி அவளை  ‘மீண்டுமேற்றுக்’ கொண்ட மண்ணாங்கட்டியே ‘நீ தேவுடியாதானடி’ என்று இயலாமல் சொல்லிய சொல்லுக்கு ஊரையே எதிர்த்து நின்றவள் நொறுங்கிப் போகிறாள்.

‘ஒரு தடவ சொன்னாலும் அதான். ஓராயிரம் தடவ சொன்னாலும் அதான். செத்துட்டா மட்டும் அழிஞ்சிடவா போகுது?பொறந்தது பொறந்தாச்சி. என்னா ஆயிடுங்கற. பத்துப் பொழுது இந்த சனங்க கிட்ட இருந்து, என்னா ஏதுன்னு வாழ்ந்து பாக்காம, செத்துப் போறதுதானா பெரிசு?’. ஞானாசிரியனான பெற்றமகளின் கைத்தாங்கலில் நம்பிக்கையோடும், ‘இன்னும் என்ன சின்னாபின்னப் படப்போறனோ’ என்ற பயத்துடனும்அடியெடுத்து வைக்கும் அஞ்சலைக்கு, ‘வா! வா! நீயும் தானே நான்’ என்று  சனம் உச்சி முகருமா இனியாகிலும்?

வேஷமற்ற எழுத்து! வேஷமற்ற மனிதர்கள்! இன்னொரு முறை கண்மணி குணசேகரனைக் காண நேர்ந்திடின், அஞ்சலைக்காக இரு சொட்டுக்கண்ணீர் மட்டுமே தரமுடியும்.

39 comments:

பழமைபேசி said...

நல்லது... அன்பளிப்பாக் குடுக்குறதை எல்லாம், அவங்கவங்க படிச்ச பொத்தகங்களையே குடுத்துடுங்க...

sriram said...

பாலாண்ணா,
எலக்கியவாதி ஆகிட்டீங்க போல? கலக்குங்க..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

செல்ல நாய்க்குட்டி மனசு said...

உடனே படிக்கத் தூண்டும் அழகான விமர்சனம், எழுத்தில் மெருகு ரொம்ப கூடியிருக்கு வானம்பாடிகள் ஐயா

Chitra said...

- ரசனையுள்ள விமர்சனம். கதையையும் பாத்திரங்களையும் உள்வாங்கி - சமூக நிலையை குறித்து சிந்திக்கவும் செய்து - என்று பல கோணங்களில் இந்த பதிவு, அருமை. கண்மணி குணசேகரன் அவர்களுக்கு, பாராட்டுக்கள்!

VELU.G said...

படிக்கத் தூண்டும் நூல் விமர்சனம் அதை விவரிக்கும் உங்கள் பாங்கு வெகு அலாதியானது

ஈரோடு கதிர் said...

சூப்பர்ணே!!!

நீண்ட நாட்களாக வாங்கனும்னு நினைச்ச புத்தகம்!

க ரா said...

Good Review sir...

ஓலை said...

நான் பழமைகிட்டேர்ந்து வாங்கிப் படிச்சுக்கிறேன்.

suneel krishnan said...

மிகை இல்லாத விமரிசனம் ,இவர வெளி உலக வெளிச்சத்திற்கு வராத தேர்ந்த எழுத்தாளர் என்று நண்பர்கள் மூலம் அறிகிறேன் ,நிச்சயம் படிக்கவேண்டிய படைப்பு

Rathnavel Natarajan said...

நல்ல விமர்சனம்.
வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

அறிமுகத்துக்கு நன்றிங்கண்ணா!


ஒரு வேளை தமிழகத்தில் இருந்திருந்தால் நானாச்சு புத்தகங்களாச்சுன்னு இருந்திருப்பேன்.

நசரேயன் said...

//நான் பழமைகிட்டேர்ந்து வாங்கிப்
படிச்சுக்கிறேன்//

நான் சேதுகிட்ட இருந்து வாங்கி படிச்சிக்கிறேன்

பா.ராஜாராம் said...

வாசித்து முடிச்ச கையோட எழுதியது போலான உணர்வுப் பிரவாகம் பாலாண்ணா. 'நெல்லாருக்கும் படிங்க' என்று சொன்னவரின் முகமும், சிரிப்பும் வந்து போகுது.

பகிர்விற்கு நன்றியண்ணா!

முகவை மைந்தன் said...

நான் நசரேயங்கிட்ட இருந்து வாங்கிப் படிக்கேன்:-)

பா.ராஜாராம் said...

//நான் சேதுகிட்ட இருந்து வாங்கி படிச்சிக்கிறேன்//

நான் நசருக்கிட்ட இருந்து வாங்கி படிச்சுக்கிறேன்.

பா.ராஜாராம் said...

இடையில் முகவை மைந்தன் வந்துட்டாரா?

சரி விடுங்க. முகவை மைந்தன்ட்டருந்து வாங்கிப் படிச்சிக்கிறேன்.

(இதை போஸ்ட் பண்றதுக்குள்ள வேற யாரும் வராம இருக்கணுமே பாலாண்ணா)

பா.ராஜாராம் said...

அப்பாடி! :-)

vasu balaji said...

=))

ஓலை said...

சார்! கதையின் ஆளுமை உங்க எழுத்தின் வீச்சில் முழுவதும் ஆட்கொள்ளுகிறது. எவ்வளவு வீரியம் வாய்ந்த உங்க விமரிசனம். புத்தகத்த படிக்கணும் போல இருக்கு. படிப்போம்.

ஒரு கட்டத்தில நம்மள நாமே சுய விமர்சனம் செய்ய ஆரம்பிச்சா, கண்டிப்பா ஏதாவது ஒரு வகையில குற்றவாளிக் கூண்டில தான் நிப்போம். இது மாதிரி நாவல்கள் நம்மளை சீர்திருத்த உதவும்.

உங்க அறிமுகம் அருமையா இருக்கு. பா.ரா.வின் நேற்றயை கவிதை எவ்வளவு அர்த்தம் வாய்ந்தது. அருமை.

நசரேயன் said...

//முகவை மைந்தன் said...
நான் நசரேயங்கிட்ட இருந்து வாங்கிப்
படிக்கேன்:)//

மாப்ள நாம அந்த காலத்திலேயே படிச்ச புத்தகத்தை பத்தி ஒரு இடுகை போடலாமுன்னு இருக்கேன்

sriram said...

இவங்க எல்லாம் படிச்சு முடிக்குறதுக்குள்ள புத்தகம் அரதப் பழசாயிடும். நீங்களும் வேறொரு புத்தகத்தைப் பத்தி எழுத இவங்க எல்லாம் அந்தப் புத்தகத்துக்கு அடிச்சிப்பாங்க, அப்போ நான் இந்தப் புத்தகத்தை வாங்கி எடைக்கு போட்டுவிட்டு குச்சி மிட்டாய் வாங்கிக்கறேன். நம்ம எலக்கிய ரேஞ்சு அவ்ளோதான்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

நசரேயன் said...

// நம்ம எலக்கிய ரேஞ்சு
அவ்ளோதான்..//

என்னையும் சேத்துகோங்க நானும் அந்த ௬ட்டத்திலே ஒருத்தன்

ஓலை said...

தளபதி! ஒரு உணர்ச்சி பூர்வமான விமர்சனத்தில நாம் பன்றதப் பார்த்து மக்கள் திட்டப் போறாங்க. தெரியாம ஆரம்பிச்சுவிட்டுட்டேன்.

rajasundararajan said...

தமிழ் எழுத்துப் பரப்பின் சிறந்த பெண் வார்ப்புகளில் ஒன்று, இல்லை இல்லை, இதுவரை வந்த பெண்பாத்திரங்களில் நம்பர் 1 'அஞ்சலை'தான்.

உங்கள் கைக்குக் கிட்டியிருப்பது இரண்டாம் பதிப்பு. முதற் பதிப்பு, வந்த ஓராண்டுக்குள் விற்றுத் தீர்ந்துவிட்டது.

வலை உலகுக்கு உங்களால் பதிவான இந் நூல் அறிமுகத்தைப் பாராட்டுகிறேன். உங்கள் எழுத்தும் கதையின் தாக்கத்தால் சுரமேறித் தகிப்பதை உணர முடிகிறது. பயனுடைய இடுகை. வாழ்க!

Anonymous said...

இந்த நிலைப் படித்த பெண்களுக்கும் உள்ளது.கதையை அழகாக விமர்சித்து உள்ளீர்கள்.இதைப் பற்றிப் பேசுவதை விடுத்து ஏன் எல்லோரும் கீழே தங்களைப் பற்றி எழுதி உள்ளார்கள்?

காமராஜ் said...

சாயங்காலம் வந்து படிக்கனும்.கொஞ்சம் அவசரம்,வணக்கமண்ணா.

க.பாலாசி said...

இவரோட இன்னும் ரெண்டு புக்கும் படிக்க நெனச்சிருக்கேன்.. இதையும் சேர்த்துக்கணும்.. நல்ல பகிர்வு.. மூணாம்பத்தி அசத்தல்..

dheva said...

//அஞ்சலை! ஒரு தனி மனுஷி அல்ல. அவளே சனம். அவள் எதிரிகளும் தனி மனிதர்கள் அல்ல. அவர்களுமே சனம். //

அதிரடியாய் ஆரம்பிக்கும் வரிகளைக் கடந்து வரும் போதே ஏதோ ஒரு மெல்லிய சோகம் மனதைப் பிசைவதை தவிர்க்கமுடியவில்லை..உங்களின் வாசிப்பின் கோணத்தினை பார்வையாக்கி பரப்பி வைத்திருக்கும் விதமும்....

கதையில் இருக்கும் அடர்த்தியும்...

வாசித்து முடித்த பின்னும் வெகுநேரம் சலமின்றி அமரச்செய்துவிட்டது.

அஞ்சலையை மனதின் ஓரத்தில் பதுக்கி வைத்திருக்கிறேன்.....எப்படியாயினும் வாங்கி படித்து விடுகிறேன்...!

அட்டகாசமா அனுபவத்திற்கும் பகிர்வுக்கும் நன்றிகள்!

Unknown said...

அசத்தல் விவரனை...

கண்டிப்பா வாங்கிப் படிப்பேன்..

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான வர்ணனை சூப்பர் மக்கா...

Philosophy Prabhakaran said...

உங்களைப் பற்றி இங்கே சில வரிகள் எழுதியிருக்கிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_2005.html

settaikkaran said...

உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?
நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்குத்தான் அது

ஐயாவுக்கு ’குலேபகாவலி’ படப்பாடலின் இந்த வரிகள் ஞாபகமிருக்கும். தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு என்ற குறளும் உங்கள் வாசிப்பனுபவத்தின் வரிகளை நான் அனுபவித்து வாசித்தபோது தன்னிச்சையாக ஞாபகம் வந்தது.

நிஜத்தை ஜோடனையின்றி சொல்வது எல்லா எழுத்தாளர்களுக்கும் சாத்தியப்படுவதில்லை என்று சொல்வதுண்டு. காரணம், சிற்சில நகாசு வேலைகள் புனைவுகளுக்கும் தேவைப்பட்டுத் தொலைக்கிறது என்பதால் அந்தக் கட்டாயத்தில் சில சமயங்களில் விரும்பத்தகாதவற்றோடு சமரசம் செய்து கொள்கிறவர்கள் உண்டு. இந்த இடுகையை வாசித்ததும், முத்தாய்ப்பாய் இறுதியில் நீங்கள் எழுதியிருந்த "இன்னொரு முறை கண்மணி குணசேகரனைக் காண நேர்ந்திடின், அஞ்சலைக்காக இரு சொட்டுக்கண்ணீர் மட்டுமே தரமுடியும்." என்ற வரிகளைப் படித்ததும், அடுத்த முறை புத்தகக்கடை சென்றால் வாங்கி விட வேண்டும் என்று மட்டும் உறைத்தது.

வேஷமற்ற எழுத்து! வேஷமற்ற மனிதர்கள்! - ஆர்வத்தைக் கிளப்பியிருக்கிறீர்கள். வேஷமற்ற எழுத்தை வாசிப்பது அபூர்வமாகி விட்ட காலத்தில், நம்பிக்கையூட்டுவது போல......!

பகிர்வுக்கு நன்றி ஐயா!

செ.சரவணக்குமார் said...

சூப்பர் பாலா சார். அருமையா எழுதியிருக்கீங்க. எதை சொன்னாலும் மனதைத்தொடும்படி சொல்வதே உங்கள் சிறப்பு. இந்த ஆண்டில் இது ஒரு நல்ல துவக்கமாக இருக்கட்டும். தொடர்ந்து நீங்கள் வாசித்த நூல்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

கண்மணி குணசேகரன் தமிழின் ஆகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். அஞ்சலை வாசித்துக் கலங்கியிருக்கிறேன். இயல்பான எழுத்தையும் முந்திரிக்காட்டின் மண்வாசத்தையும், சம்பவங்களின் அடர்த்தியையும் இவர் படைப்புகளில் தரிசிக்கலாம். உண்மையில் பரவலாக சென்றுசேராத அதிமுக்கியமான படைப்பாளி நம் கண்மணி குணசேகரன். அவரைச் சந்திக்கவேண்டும் என்ற விருப்பம் நீண்ட நாட்களாகவே உள்ளது. அவருடனான சந்திப்பையும் அழகாகப் பகிர்ந்திருக்கிறீர்கள் பாலா சார்.

சமீபத்தில்தான் 'நெடுஞ்சாலை' இரண்டாவது முறையாக வாசித்தேன். அதைப்பற்றி எழுதவேண்டும் என்று நினைத்து நேரமில்லாமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. உங்கள் பதிவு கண்மணியின் எழுத்துக்களை நினைவுபடுத்தி மீண்டும் அந்த மண்மணக்கும் எழுத்தை அசைபோடச்செய்ததால் உடனே எழுத வேண்டும் என்று தோன்றுகிறது.

நன்றி பாலா சார்.

ஸ்ரீராம். said...

படித்ததை அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள்...

ரிஷபன் said...

நேர்த்தியான-வாசிக்கத் தூண்டும் பதிவு..

பனித்துளி சங்கர் said...

அஞ்சலை பற்றிய உங்களின் அனுபவப் பதிவு . புத்தகத்தை வாங்கி இன்றே வாசிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை அடி மனதில் தூண்டத் தொடங்கிவிட்டது . நன்றி அய்யா . பகிர்வுக்கு நன்றி

கானகம் said...

ஒரு நல்ல புத்தக விமர்சனத்துக்கு எடுத்துக்காட்டு. ஆசிரியனின் மனதில் தோன்றியதை முழுதும் உள்வாங்கிப் படித்து எழுதப்பட்ட விமர்சனம்.

குறைகள் பற்றி ஒன்றும் எழுதவில்லை. இந்தக் கணமான எழுத்தில் அக்குறைகள் ஒன்றுமில்லாமல் இருக்கக்கூடும்.

உங்களின் நிலைப்பாடுகள் குறித்து எனக்கு விமர்சனமுண்டு. ஆனால் எழுதும் நடை ஈர்க்கிறது

vasu balaji said...

@@ நன்றிங்க பழமை
@@ அப்போ நான் இன்னும் விமரிசகன் இல்லையா..அவ்வ்வ்..நன்றி ஸ்ரீராம்
@@நன்றிங்க நாய்குட்டிமனசு
@@நன்றிங்க சித்ரா
@@நன்றி வேலு
@@நன்றி கதிர்
@@நன்றிங்க இராமசாமி
@@நன்றி சேது
@@நன்றி டாக்டர்
@@நன்றி இரத்தினவேல்
@@நன்றி ராஜாண்ணா
@@நன்றி தளபதி.ம்க்கும்
@@நன்றி பா.ரா.
@@முதல் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி முகவை மைந்தன்
@@நன்றிங்க ராஜசுந்தரராஜன்
@@நன்றிங்க மீனு ஆஷா
@@நன்றி காமராஜ்
@@நன்றி பாலாசி
@@நன்றி தேவா
@@நன்றி செந்தில்
@@நன்றிங்க பிலாசபி பிரபாகரன்
@@நன்றிங்க மனோ
@@நன்றி சேட்டை
@@நன்றி சரவணா.
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி ரிஷபன்
@@நன்றி சங்கர்
@@நன்றிங்க கானகம். முதல் வரவுக்கும் கருத்துக்கும்.

சந்தான சங்கர் said...

தனி மனுசி அல்ல
அவளே சனம்"

கனக்க வைக்கும்
உங்கள் நடையின் சாரம்
அருமை..

எழுதுபவனின்
பொறுமைக்கு
பெருமை சேர்க்கும்
விமர்சன வித்தகம்..

சந்தான சங்கர்.