Tuesday, March 30, 2010

கேரக்டர் - காமாச்சி

காமாச்சி ஒரு தனி மனுஷியல்ல. ஊருக்கு ஊர் நிறைய காமாட்சிகள் இருப்பார்கள். நகரத்தில் அரிதாகி விட்ட தேவதைகள் இவர்கள். 

இந்தக் காமாச்சி இரண்டு பசு, ஐந்து ஆறு எருமையுடன் மணிக்கோனாருக்கும் சொந்தக்காரி. மணிக்கோனார் முட்டியை மடக்கி முதுகில் குத்தினாலும் வாலால் திருப்பி அடிக்கும் எருமை கூட, தே! ஒத்து என்ற காமாச்சியின் குரலுக்கு ஒதுங்குமெனில் மணிக்கோனாரைப் பற்றிக் கேட்கவா வேண்டும்? 

ஐந்தடி உயரமிருப்பாளா சந்தேகம். பருத்த உடல்வாகு. கணீரென்ற குரல். மஞ்சள் பூசிய முகத்தில், அகலக் குங்குமப் பொட்டும், அகன்ற கண்களும், சீராக வாரிப் போட்ட பிச்சோடாக் கொண்டையும், நத்தை நத்தையாய் மூக்குத்தியும் தோடும், நகைகளும், வெற்றிலைக் குதப்பி அடக்கிய வாயும், சற்றே சரிந்தார்போல் நிற்கையில் கையெடுத்துக் கும்பிடும் காமாட்சிதான். நடக்கையில் சுவாமி ஊர்வலத்தில் பல்லக்குத் தூக்கிகள் அலைபோல் ஆடி வருவார்களே அப்படித்தான் இருக்கும். ஒரு கால் குட்டையாகி விரல்களால் ஊன்றி ஆடி ஆடி நடப்பாள். 

அவள் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. மணிக்கோனாரின் பால் வருமானத்திலேயே அவள் அணிந்த நகைகளை அவள் வேலை செய்யும் வீட்டு அம்மணிகள் ஒரு புகைச்சலோடு பார்க்க வேண்டியிருக்கும். மாசம் முப்பது ரூபாய் சம்பளம். விரும்பி வற்புறுத்தினால் காஃபி குடிப்பாள். 7.30 முதல் 10 மணிவரை டூட்டி வீடு வீடாக. கரார் பேர்வழி. சம்பளம் என்று நீட்டி விட முடியாது. வெற்றிலைப் பாக்கில் தாம்பூலமாக வைத்துத் தரவேண்டும். 

பிரசவத்துக்கு வந்த பெண்கள், அதற்கு வழியற்று இரண்டாவது மூன்றாவது பிரசவத்துக்கு காத்திருக்கும் பெண்கள் நிறைமாதம் வந்ததும் காமாச்சியக்காவைத் தேடுவார்கள். கைத்தடவலில் அவள் சொன்ன நாளில் வலியெடுக்கும். பெருஞ்சோம்புக் கஷாயம் போட்டுக் கொடுத்து மகராசியா போய்வாம்மா என்று வாழ்த்தி அனுப்புகையில் நேசமாக கண்கலங்க கைபற்றிக் கொள்ளுவார்கள். 

குழந்தை பிறந்ததும் காமாச்சியின் செக்கப் இருக்கும். தயாராக கழுதைப் பாலுடன் போய் பார்ப்பாள். காமாச்சி செவ்வாப்பு போட்டிருக்கு குழந்தைக்கு என்று சொல்லி, கழுதைப்பால் புகட்டி தடுத்த மருத்துவர் இல்லை. வீம்புக்கு கழுதைப்பாலாவது மண்ணாங்கட்டியாவது என்று எகிறி குழந்தையைப் பறிகொடுத்த ஒன்றிரண்டு உண்டுதான். 

அப்போது ஏன் என்று தெரியாமல், பச்சைக் குழந்தையை காலை இள வெயிலில் கண்ணில் துணி போர்த்தி வெயிலில் கிடத்துவதைப் பார்த்திருக்கிறேன். பின்னாளில், கருவில் மஞ்சள்காமலை என்று சன்லேம்பில் குழந்தைகளைப் பார்க்கும்போது இவளின் உத்தியை நினைத்து வியந்தும் போயிருக்கிறேன். (வாரி வெய்யிலில் போட என வைவது இதுதான் போலும்) 

தாயும் சேயும் வீடு வந்ததும், குழந்தை குளுப்பாட்டுவதுதான் காமாச்சியின் டூட்டி. இன்னா சொல்றான் என் மருமகனென்றோ, இன்னாடி சக்காளத்தி என்றோ கொஞ்சி குழந்தையை தூக்கி அணைத்த வாகிலேயே, வயிற்றில் ஒரு நோட்டம் விடுவாள். சில நேரம் மெதுவே தட்டுவாள். ஏற்கனவே அகன்ற விழியை இன்னும் அகலமாக்கி ஏம்மா? மாம்பழம் சாப்டியா? மாந்தம் புடிச்சிகிச்சி பாரு என்பாள். மறுக்கவே முடியாது. 

ஜல்ப் புட்சினுக்குதும்மா. இன்னிக்கு ஒடம்ப தொடச்சி விட்டுடலாம் என்றால் மறுபேச்சு பேச முடியாது. வரும் நேரம் சரியாக வென்னீர் இருக்க வேண்டும். ஆகா! அவள் கையால் குளித்த குழந்தைகள் கடவுள் என்றால் மிகையாகாது. மணை போட்டு கால் நீட்டி, குழந்தையைப் போட்டு, கொஞ்சியபடி எண்ணெய் தடவுவாள். சுவாமிக்கு எண்ணெய்க்காப்புகூட அப்படிப் பார்த்திருக்க முடியாது. அங்கம் அங்கமாகத் தடவி, உருவி, குப்புறப் போட்டு கையை நன்றாகப் பின்னுக்கு மடக்கி, காலை முதுகை அழுத்தியபடி பின்னுக்கு மடக்கி அவள் தேய்க்கும் போது பரம சுகமாக சத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் பிஞ்சுகள். 

விளாத்தி வைத்த வென்னீரில் வேப்பிலைத் தழை இருக்க வேண்டும். மறந்தால் திட்டு விழும். அதெப்படித்தான் குழந்தைக்கு பிடித்த சூடு தெரியுமோ. தண்ணீர் விட்டதும் அலறிப் பார்த்ததேயில்லை. பயத்தமாவு குழைத்து உடலுக்குப் பூசி, முகம் கழுவ வருகையில் அவர்கள் விளையாட்டு ஆரம்பமாகும். தே! முயிக்காத! கண்ணுல அப்புவேன். மூடு என்றால் லேசாக மூடி போக்குக் காட்டி கண்ணருகே வர பளிச்செனத் திறக்கும் பிஞ்சு. கொய்ப்ப பாரேன் என்றபடி இமைக்கு மேல் விரலால் அப்புவாள். 

யாராவது தண்ணீர் விட இரண்டு கையாலும் வாங்கி பின்மண்டையில் அறைந்தாற்போல் வீசுவாள். மாங்கா மண்ட மாதிரி ஆய்ட கூடாது. சொம்பு மாதிரி வட்டமா இருக்கணும் என்பது அவளது சட்டம். அது எப்படியோ அப்படி ஆகும். எண்ணெய் போகக் குளிப்பாட்டி, ஒரு விரல் மடித்து நாக்கு உருவி, இரண்டு விரலால் அண்ணத்தை மூடி, பதமாக ஒரு முறை இந்த மூக்குத் துவாரம், மறுமுறை அந்த மூக்குத் துவாரத்தில் ஊதி, சளியெடுப்பாள். 

அதற்குள் சாம்பிராணி ரெடியாக இருக்க வேண்டும். துண்டு வாங்கி தோளில் போட்டு, பூமாதிரி அதில் சாய்த்து, விழுந்துவிடுவது போல் எழுந்து துவட்டி, புகை காட்டி, கண்மை பூசி, பவுடர் போட்டு, திருஷ்டிப் பொட்டிட்டு நெற்றியில் விரலால் சொடுக்கி, தாயிடம் நீட்டி, 10 நிமிஷம் கொஞ்சிட்டு அப்புறம் பால் கொடு என்று போவாள். 

ஆம்பள புள்ள என்னா என்னமோ எலிக்குஞ்சு மாதிரி அயுவுது? நாளைக்கி கோரோஜனை ஊத்தணும்மா என்பாள். பெரும்பாலும் கை வைத்தியம். சில நேரம் ஓயாமல் அழும் குழந்தைகள். எங்கிருந்தோவெல்லாம் தேடி வருவார்கள். இன்னா இன்னாடா பண்ணுது கண்ணுக்கு என்றபடி வாங்கி வயிற்றைத் தடவி, உரம் விழுந்திருக்கும்மா என்பாள். எப்போ ஊட்டின என்ற கேள்வியைப் பொறுத்து வைத்தியம் இருக்கும். 

அதென்ன மாயமோ? பெற்றவளுக்கு பதைத்துப் போகும். இரண்டு காலையும் ஒரு கையால் பிடித்தபடி தலை கீழாக மூன்று விசிறு. அப்படியே கைவாங்கி மார்பில் அணைத்து சரியாப் போச்சுடி எனும்போது அழுகை காணாமல் போயிருக்கும். ஏதோ சுளுக்குக்கு முறத்தில் போட்டுப் புடைப்பாள். படியுருட்டுவாள். சரியாப் போகும் அவ்வளவுதான். வெற்றிலைப்பாக்கில் வைத்துக் கொடுக்கும் ஒரு ரூபாய்க்கும், ஐந்து ரூபாய்க்கும் ஒரே ட்ரீட்மெண்ட்தான். 

கை தொடுதலிலேயே குழந்தை ஆரோக்கியம் எங்கு படித்தாளோ. வைத்தியர் வீட்டுக்கு அலைந்தவை வெகுசில.  பெரீ டாக்குட்டருட்ட இட்டும்போம்மா. கொயந்த சரியில்லை என்ற ஒன்று இருதயத்தில் துவாரம் எனக் கண்டு பிடிக்கப்பட்டது. அதிகபட்சம் ஐந்து மாதங்கள் குளிப்பாட்டுவாள். நான்காம் மாதமே சொல்லியும் கொடுப்பாள். 

அம்மை வந்தால் ஆம்பிளைக்கும் கேட்கும்படி, மனுசத்தனமா இருந்துக்குங்கன்னு சொன்னால் அதற்கு மேலும் வேண்டுமா? அவள் வாயில் யார் விழுந்து எழுவது? ஆடிமாதம் பொங்க வைக்க காசு கொடுத்தால் போறாது. கோவிலுக்கு வந்து குழந்தைக்கு அவள் கையால் துன்னூரு வைக்கணும். தாய்ப்பால் இல்லையேல் பசும்பால். அப்புறம் நேராக பருப்புச் சோறுதான் அவள் ப்ரிஸ்கிருப்ஷன். 

ஃபாரக்ஸ், செரிலாக் வகையறா அவளுக்கு இளக்காரம். உங்குளுக்கு பொசு பொசுன்னு இருந்தா போதுண்டியேய் என்று சிரித்தபடி போவாள். அவளுக்கு பெருங்குறை. அவளோடு இந்தக் கலை முடிந்து போகிறதேயென்று. பாவம் இரண்டும் ஆண் பிள்ளை அவளுக்கு. என்றாவது மணிக்கோனார் சரக்கடித்து, சவுண்ட் விட்ட படி வருவார். 

இடுப்பில் கைவைத்தபடி, கேவலமும் கோவமும், சிரிப்புமாய் ஒரு பார்வை. இந்த நாய்ப் பொயப்புக்கு சத்தம் வேற. போய் திண்ணைல கெட. உள்ள போய் வாந்தி எடுத்து வெச்ச வெளக்குமாறு பிஞ்சிடும். த்த்த்த்தூ என்று குதப்பிய வெற்றிலை உமிழ்ந்த பிறகு சத்தம் கேட்டால்தானே. 

ஒரு முறை பால் காசு கொடுக்கப் போனபோது, முகம் துடைத்து புள்ளைங்க வளர்ந்துடுச்சுங்க, இப்போ இந்த எழவு வேற தேவையா? துன்னுய்யா என்று சோறூட்டிக் கொண்டிருந்தாள். மணிக்கோனார் போய்ச்சேர்ந்த பின், மாடுகள் மட்டுமே உறவாகி, ,மருமகள் வந்ததும் இவளும் மாடாகி ஒரு நாள் செத்துப் போனாள். ஏனோ, மணிக்கோனாருக்குப் பின் குழந்தை குளிப்பாட்ட போனதேயில்லை.

49 comments:

பழமைபேசி said...

படிச்சிட்டு வர்றேன்...

பழமைபேசி said...

//ஐந்து ஆறு எருமையுடன்//

முப்பது எருமைகளா??

பிரியமுடன்...வசந்த் said...

//இன்னா சொல்றான் என் மருமகனென்றோ, இன்னாடி சக்காளத்தி என்றோ கொஞ்சி குழந்தையை தூக்கி அணைத்த வாகிலேயே, //

நிறைவான இடுகை நைனா

இதேபோல எங்கூர் பக்கம் நிறைய அம்மாச்சிமாருக அப்பத்தாமாருக அத்தமாருக சொல்லி கேட்ருக்கேன்...

பழமைபேசி said...

//மணிக்கோனாருக்கும்//

இது சரியில்ல...ஆமா...

பழமைபேசி said...

//விரும்பி வற்புறுத்தினால் காஃபி குடிப்பாள்.//

அதெப்படி இவ்வளவு வெவரமாச் சொல்றீங்க? ம்ம்...இப்பத்தான் வருது விசியம்...

ஈரோடு கதிர் said...

//பழமைபேசி Says:
முப்பது எருமைகளா??//

மாப்பு... முதல்ல கூட்டுங்க..

அப்புறம் பெருக்கலாம்

பழமைபேசி said...

மணியாரை சாவடிச்சிட்டாரே இந்த அண்ணாச்சி....போட்ட ஓட்டை எப்படித் திரும்ப எடுக்குறதுங்க மாப்பு?

பழமைபேசி said...

//ஈரோடு கதிர் Says:
March 30, 2010 7:16 PM
//பழமைபேசி Says:
முப்பது எருமைகளா??//

மாப்பு... முதல்ல கூட்டுங்க..

அப்புறம் பெருக்கலாம்
//

ஓ, அப்படியா? 5+6=11 x மணிக்கோனார்.... அப்ப காம்ட்சிக்கு 11 ஆளுகளா??

ஈரோடு கதிர் said...

//அவளுக்கு பெருங்குறை. அவளோடு இந்தக் கலை முடிந்து போகிறதேயென்று. //
((:

ஈரோடு கதிர் said...

//பழமைபேசி said...
மணியாரை சாவடிச்சிட்டாரே இந்த அண்ணாச்சி...//

இதென்ன கூத்துங்க

வைத்தியம் சரியில்லையோ

Chitra said...

ஒரு முறை பால் காசு கொடுக்கப் போனபோது, முகம் துடைத்து புள்ளைங்க வளர்ந்துடுச்சுங்க, இப்போ இந்த எழவு வேற தேவையா? துன்னுய்யா என்று சோறூட்டிக் கொண்டிருந்தாள். மணிக்கோனார் போய்ச்சேர்ந்த பின், மாடுகள் மட்டுமே உறவாகி, ,மருமகள் வந்ததும் இவளும் மாடாகி ஒரு நாள் செத்துப் போனாள். ஏனோ, மணிக்கோனாருக்குப் பின் குழந்தை குளிப்பாட்ட போனதேயில்லை.


........குழந்தை குளிப்பாட்டுதல், மருத்துவ முறை என்று இதமாக சொல்லி விட்டு, ரொம்பவும் நெகிழ வச்சிட்டீங்க...... ம்ம்ம்ம்......

பழமைபேசி said...

//ஈரோடு கதிர் said...
//பழமைபேசி said...
மணியாரை சாவடிச்சிட்டாரே இந்த அண்ணாச்சி...//

இதென்ன கூத்துங்க

வைத்தியம் சரியில்லையோ
//

இதுல உள்நாட்டு சதி இருக்குமோ?

பழமைபேசி said...

பாலாண்ணே, இடுகை உங்க அவதானிப்பையும் பல தகவல்களையும் பகிர்ந்துக்குற மாதிரி இருக்கு.... நன்றி!

நாங்களும் ரெளடிதான்னு காமிக்க அடிச்ச கும்மிய ஞாவகத்துல வெச்சிகிடுங்க...இஃகிஃகி! வாறேன்!!

எம்.எம்.அப்துல்லா said...

எங்கூர்ல முத்துக்கோனார், அழகுக்கோனார் எல்லாம் இப்ப முத்து யாதவ், அழகு யாதவ் ஆயிட்டாங்க :)

எம்.எம்.அப்துல்லா said...

ஜூப்பர் இடுகை.

V.Radhakrishnan said...

//அவளுக்கு பெருங்குறை. அவளோடு இந்தக் கலை முடிந்து போகிறதேயென்று.//

எனது கிராமத்தை கண்ணுக்கு முன்னாள் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள் ஐயா.

Subankan said...

நல்ல இடுகை சார், அம்மா சொன்ன அந்த யாரோ ஒருவர் ஞாபகத்தில் வந்துவிட்டுப்போனார்

இராகவன் நைஜிரியா said...

அண்ணே தலைமை ஆசிரியர் வந்து கும்மின இடத்தில் நான் கும்முவது நல்லா இருக்காது என்பதால்..

இடுகை சூப்பரோ சூப்பர் என்று கூவிக்கிறேன்.

ஜெரி ஈசானந்தன். said...

சீக்கிரம் புத்தகம் போட்டுடலாம் பாலாண்ணா..ரசித்தேன்.

கலகலப்ரியா said...

நல்லா இருக்கு சார்.. அந்தக்காலத்து ஆளுங்க ரொம்ப வெவரமானவைங்க.. வெவரம் தெரிஞ்சவைங்க..

நாடோடி said...

கிராம‌த்தில் இது போல் நிறையா அம்மாக்க‌ளை பார்க்க‌ முடியும்.. ந‌ல்ல‌ ப‌திவு..ர‌சித்தேன்.

துபாய் ராஜா said...

வார்த்தைகளும், வர்ணனைகளும் அருமை. படிக்கும்போது பலவிதமான உணர்ச்சிகள் பாலா சார்...

நசரேயன் said...

// துண்டு வாங்கி தோளில் போட்டு//

என்ன துண்டு ?

செ.சரவணக்குமார் said...

மிக நன்று.

ஸ்ரீராம். said...

மணை போட்டு கால் நீட்டி, குழந்தையைப் போட்டு, கொஞ்சியபடி எண்ணெய் தடவுவாள். சுவாமிக்கு எண்ணெய்க்காப்புகூட அப்படிப் பார்த்திருக்க முடியாது. அங்கம் அங்கமாகத் தடவி, உருவி, குப்புறப் போட்டு கையை நன்றாகப் பின்னுக்கு மடக்கி, காலை முதுகை அழுத்தியபடி பின்னுக்கு மடக்கி அவள் தேய்க்கும் போது பரம சுகமாக சத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் பிஞ்சுகள்..//

ஆஹா...

கை தொடுதலிலேயே குழந்தை ஆரோக்கியம் எங்கு படித்தாளோ//

அந்தக் காலத்து அனுபவம்...

ஏனோ, மணிக்கோனாருக்குப் பின் குழந்தை குளிப்பாட்ட போனதேயில்லை"//

ஏன்? வாழ்வின் சுவை முடிந்து விடுகிறதோ..?

Han!F R!fay said...

அச்சு அசல் அப்டியே காமாச்சி அக்கா....எங்க சார் கத்துகிடீங்க இவ்வளவு அழகா எழுத....!!!!!!!
ரொம்ப நல்லார்க்கு சார்....

இராமசாமி கண்ணண் said...

ரொம்ப நல்லா இருக்கு. எங்க ஊருலயும் இந்த மாதிரி கைவைத்தியம் பாக்கற பாட்டி மார் ரொம்ப பேறு இருந்தாங்க. அவங்களுக்கு வைத்தியம் முறையா தெரியுமான்னு தெரியல. ஆனா எல்லாரும் நல்லா இருக்கனும்னு நெனைக்கிற அவங்க நல்ல மன்சு.

padma said...

நம்ம பாத்து அனுபவிச்சத ஒருத்தர் எழுதி படிக்கறது ரொம்ப சுகம் .எல்லாம் என்னவோ எங்க வீட்ல நடந்தாபோல .
அது சரி விளாவிய வெந்நீர் தானே ? விளாதியதுன்னு சொல்வாங்களா?புது வார்த்தையாக உள்ளது நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

super

தீபிகா சரவணன் said...

www.tamilarkalblogs.com தமது இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாகவும் வலைப்பதிவாளர்களை ஊக்குவிக்கும் முகமாகவும் போட்டியொன்று நடாத்த திட்டமிட்டு உள்ளது. போட்டியில் வெற்றிபெறும் 10 பதிவர்களுக்கு 25 GB's of Space மற்றும் 1 Domain Name இலவசமாக வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு http://www.tamilarkalblogs.com/page.php?page=announcement இந்த இணைப்பினை பார்க்கவும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

சந்தடிச் சாக்கில் ஏராளமான தகவல்கள் வந்து விழுகின்றன பாலா சார்.. கடைசியில் முடித்த விதம் நெகிழ்வு..

முகிலன் said...

ஃபினிஷிங் டச் சூப்பர் சார்

thenammailakshmanan said...

மணை போட்டு கால் நீட்டி, குழந்தையைப் போட்டு, கொஞ்சியபடி எண்ணெய் தடவுவாள். சுவாமிக்கு எண்ணெய்க்காப்புகூட அப்படிப் பார்த்திருக்க முடியாது. அங்கம் அங்கமாகத் தடவி, உருவி, குப்புறப் போட்டு கையை நன்றாகப் பின்னுக்கு மடக்கி, காலை முதுகை அழுத்தியபடி பின்னுக்கு மடக்கி அவள் தேய்க்கும் போது பரம சுகமாக சத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் பிஞ்சுகள்..//


எங்க வீடுலயும் இப்படித்தான் முத்தி அக்கா என்ற அக்கா வந்து எண்ணை தடவி குழந்தைகளுக்கு எங்களுக்கும் குழந்தையாய் இரு்ந்த போது ஊ்றினார்கள்
உங்களுக்கு சிறூவயதில் நடந்ததெல்லாம் அபாரமான ஞாபக சக்தி பாலா சார்

Deivasuganthi said...

//நம்ம பாத்து அனுபவிச்சத ஒருத்தர் எழுதி படிக்கறது ரொம்ப சுகம் .எல்லாம் என்னவோ எங்க வீட்ல நடந்தாபோல .
அது சரி விளாவிய வெந்நீர் தானே ? விளாதியதுன்னு சொல்வாங்களா?புது வார்த்தையாக உள்ளது நன்றி//
repeat

அது சரி said...

//
,மருமகள் வந்ததும் இவளும் மாடாகி ஒரு நாள் செத்துப் போனாள். ஏனோ, மணிக்கோனாருக்குப் பின் குழந்தை குளிப்பாட்ட போனதேயில்லை.
//

ஏனோ மணிக்கோனாருக்கு பின் குழந்தை குளிப்பாட்ட போனதேயில்லை!

இவளும் மாடாகி ஒரு நாள் செத்துப் போனாள்....

உண்மையில் இங்கு தான் நீங்கள் சொல்ல வந்த விஷயமே இருக்கிறது...அபாரமான முடிவு!

இது போன்ற எத்தனை மனிதர்கள்...மண்ணுடன் மறக்கப்பட்டவர்கள்....கல்லறையில் புதைக்கப்பட்ட எல்லைச்சாமிகள் இங்கு அதிகம் உண்டு!

தாராபுரத்தான் said...

இன்னமும் காமாட்சி ஆத்தாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

க.பாலாசி said...

ஆனாவொண்ணுங்க... நான் பொறக்கறச்சே... இந்தமாதிரி காமாட்சியம்மால்லாம் இல்லீங்க... எங்கம்மாவே என்னைய நல்லா குளிப்பாட்டியிருக்காங்க.... இன்னைக்கும் எங்கத்தெருவுல கொழந்தைங்களுக்கு வயித்துக்கோளாருன்னா எங்கம்மாகிட்ட வைத்தியம் கேக்குறாங்க...

//மாடுகள் மட்டுமே உறவாகி, ,மருமகள் வந்ததும் இவளும் மாடாகி ஒரு நாள் செத்துப் போனாள்.//

இதாங்க கொடுமை....

இப்படிக்கு நிஜாம்.., said...

அண்ணே! இது போல காமாட்சிகளும் மணிக்கோனார்களும் எங்களூர் பக்கம் அதிகமோ அதிகம். இப்பெல்லாம் ஆவின்,காவின்,மாவின்னு வகைவகையா பாக்கெட் பால் வந்த பிறகு இப்ப யாரையுமே கானோம்...

~~Romeo~~ said...

என்னோட பையன தினமும் ஒரு அம்மா வந்து குளிப்பாட்டி விடுறாங்க .. இதை படிக்கும் பொது அவங்க நியாபகம் தான் வருது .. சூப்பர் பதிவு தலைவரே .

சைவகொத்துப்பரோட்டா said...

காமாச்சியை , கண் முன்னே கொண்டு வந்து
விட்டீர்கள்.

பிரபாகர் said...

காமாட்சியைப்பற்றி படித்து கடைசியில் கண்கலங்கிப்ப்போனேன். என்ன ஒரு கேரக்டர். அதை உன்னிப்பாய் கவனித்து எழுதியிருக்கிறீர்கள். இது போல் சின்ன வயதில் பார்த்திருக்கிறேன். இன்னமும் என் அப்பத்தாவிடம் குழ்ந்தை சம்மந்தமாய் ஐடியா கேட்டு வருவார்கள், அழகாய் விளக்கம் சொல்வதை ஆர்வமாய் கவனிப்பேன்...

அருமை அய்யா!

பிரபாகர்.

அக்பர் said...

good one

princerajan C.T said...
This comment has been removed by the author.
princerajan C.T said...

/*கை தொடுதலிலேயே குழந்தை ஆரோக்கியம் எங்கு படித்தாளோ*/ கடவுள் கொடுத்த வரம்....இந்த வரத்தை பெற தகுதியானவர்கள் இன்று நம்மிடையே ஒருவர் கூட இல்லையே என எண்ணும் போது கலிகாலம் என்பதை மறுக்க முடியவில்லை. தேவதைகள் மறுபடியும் பூமிக்கு திரும்புமா! நம் கனவுகளும் உயிர் பெறுமா!

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

ரொம்ப நல்லா சொல்லியிருக்கீங்க ஐயா

வானம்பாடிகள் said...

அனைவருக்கும் நன்றி!

"உழவன்" "Uzhavan" said...

இதுபோன்ற காமாட்சிகளின் கைப்பக்குவம் இல்லாமல், இப்போது கைக்குழந்தைகள் அடிக்கடி மருத்துமனைக்குச் சென்றுவருகின்றன.
கேரக்டர் உருவாக்கம் அருமை

ரோஸ்விக் said...

இதப் படிச்சுகிட்டு இருக்கும்போது காமாட்சி என் முன்னாலையே வாழ்ந்துகிட்டு இர்ருக்கிறது போன்ற எழுத்து நடை பாலா அண்ணே... மிக மிக அருமை.

பின்னோக்கி said...

விரைவில் புத்தகமாக படிக்க ஆவல்.