Friday, November 6, 2009

அரக்காசு உத்தியோகம் ஒன்னும் சொர்க்கமில்லை..

எனக்கு ரொம்ப வருசமா ஒரு வருத்தம். அரசு ஊழியனுக்கும் கரண்டு கம்பத்துக்கும் வித்தியாசமே இல்லாம பாக்குறாங்க. நம்ம சுஜாதா கூட மட்டமாத்தான் பேசிட்டாருன்னு அவரு மேல கோவிச்சிகிட்டு கொஞ்சநாள் அவரை ஓரம் கூட கட்டினதுண்டு. இப்புடியே உள்ளுக்குள்ளயே வெச்சி வெதும்பி வெதும்பி என்னா பண்ண? புரிய வைக்க வேணாமா?

அதும் ஆஃபீஸ் நேரத்துல உக்காந்து வேல பார்த்துகிட்டே மண்டைல கொஞ்ச ஓரம் டெடெகேடட் மெமரி யோசிக்க, கேப் கிடைக்கிற நேரத்துல ரெண்டு ரெண்டு வரியா தட்டி இடுகை போடுற நாம சொல்லாட்டி யாரு சொல்லுறதுன்னு ஒரு பொறுப்புணர்ச்சி இருக்கிறவன் சும்மா இருக்க முடியுமா?

அரசு ஊழியன்னா என்னமோ மத்த பேரு அலுவலகத்துக்கு சோத்து பையக் கொண்டு போறதாகவும் அரசு ஊழியர் சூட்கேஸ் கொண்டு போறதாகவும் தப்பான ஒரு அபிப்பிராயம் கொள்ள பேத்துக்கு இருக்குறது உண்மை. அதுக்கு அடிப்படைக் காரணம் அரசு ஊழியரோட அவங்களுக்கிருக்கிற தொடர்பு உண்டாக்குற மாயை.

ஒரு சர்டிபிகேட் வாங்கப் போனா அங்க இருக்கிற அரசு ஊழியர் காசு குடுத்தாத்தான் பண்றாரு. அதனால கிம்பளம் மிதமிஞ்சிப் போகுதுங்கற தப்பான அபிப்பிராயம் பரவிப்போச்சு.

அடுத்த முறை அரசு அலுவலகத்துல ஏதாவது வேலைன்னு போக நேர்ந்தா ஆபீசு உள்ள கொஞ்சம் பாருங்க. ஒரே ஒரு நாள் அந்த குப்பைக்கும், ஒட்டடைக்கும், மழையில நனைஞ்சி வெயில்ல காஞ்சி மொச நாத்தம் அடிக்கிற வாசனைக்குள்ள உக்காருவீங்களா?

தண்ணி குடிக்கலாம்னு போய் அங்க இருக்கிற கூலர் (அது கூட இருக்காது சில இடத்துல) அதப்பாருங்க. குடிச்சி உசிரோட இருக்க நம்பிக்கையிருக்கா? பன்னிக்காய்ச்சலோ, டெங்கோ, இன்னும் பேர் தெரியாத வியாதியோ அந்தத் தண்ணிய புடிச்சி குடிக்கிறானே அவன் மனுசனா, தேவனா?

மும்முரமா எழுதிட்டிருக்கிறவன் டேபிள்ள மூஸ் மூஸ் எச்சூஸ்மி. அந்தப்பக்கம் போய்க்கிறேன். சாரின்னு மொசக்குட்டி சைஸ்ல ஒரு பெருச்சாளி ஓடும் ஸார். ஹலோ! எங்க ரெண்டு நாளா காணோம்னு விசாரிக்கிற அளவுக்கு ஃப்ரெண்ட்ஸாயிருப்போம் சார். அதே டேபிள்ளதான், எலிக்காய்ச்சல் வந்துடுமோன்னு பயப்படாம, மதியம் கொண்டு போற தயிர்சாதம் தின்னுறது.

400 பேர் படம் பார்க்கிற தியேட்டர்ல இத்தனை யூரினல் இருக்கணும், இத்தனை டாய்லட் இருக்கணும். இந்த இடைவெளியில சுத்தம் பண்ணனும்னு ரூல் இருக்கு. அதப் பார்க்க ஆளிருக்கு. ஆனா 1000 பேர் இருக்கிற அரசு அலுவலகத்தில  டாய்லட்ட போய் பாருங்க. 5 யூரினல் இருக்கும். 4 கக்கூசு இருக்கும். குழாய் இருக்காது. காலையில ஒரு வாட்டி மதியம் ஒரு வாட்டி கழுவி விடுவான். இவ்வளவு ஏன்? உலகத்துல வேற எங்கியாவது கக்குசுக்கு பூட்டு போட்டு பார்த்திருக்கீங்களா?

அரசு அலுவலகத்தில பார்க்கலாம். அதிகாரி மட்டும் பன்னீர் போவாரு. மத்தவங்க சிறுநீர் போவாங்கன்னு பூட்டி வெச்சிருக்கும் சார். பாதிக்கு மேல பெண்கள் வேலை செய்யிற இடத்திலையும் இதே நிலமைதான். வீடு வாங்குறீங்களே, அல்லது மனை வாங்குறீங்களே, வில்லங்கச் சான்றிதழ் வாங்குறீங்கல்ல?

நோவாம போய் படிவத்த நிரப்பிக் கொடுத்துட்டு,எப்போ தர்றியோ தான்னா வரீங்க. சொரண்டி, ஓரம் கட்டி ஒரு மணி நேரத்துல கிடைக்குமான்னு கேட்டு பேரம் பேசி 2 நாள்ளன்னு சொல்லிட்டான்னு வந்து திட்டுறீங்களே, அனியாயத்துக்கு லஞ்சம் பெருகிப் போச்சுன்னு.

எழுதித் தரேன். யாராவது வில்லங்கச் சான்றிதழ் படிச்சி பார்த்திங்களா ஐயா? மாட்டீங்க. ஆவணத்தைச் சுயமாக பரிசோதித்து நீங்களே உறுதிப் படுத்திகிட்டதா எழுதி இருக்கும் அதில. ஏன்? கேட்டுப் பாருங்க. இப்புடி இருக்கே. நானே பார்த்துக்கறேன்னு.

கொண்டுபோய் ரிகார்ட் ரூம்ல விடுவான். 3 மாசமானாலும் கண்டு பிடிக்க முடியாது உங்களுக்கு. ஒரு குண்டு பல்ப் வெளிச்சத்தில மலை மலையா குவிஞ்சிருக்கிற ரிகார்ட்ல‌ உங்களோடது மட்டும் தேடி எடுக்க முடியாது உங்களால. அவன் உங்கள மாதிரி 100 பேருக்கு தேடணும் சார்.

மூச்சடைக்கும். ஆஸ்மா வந்தவன் மாதிரி விசிலடிக்கும். கை கால்லாம் தடி தடியா அலர்ஜி வரும்.  டாக்டர் கிட்ட போறதுன்னு முடிவெடுத்தா நீங்க குடுக்கிற காசில அவன் டாக்டர் கிட்ட போக முடியாது. அட மாத்திரை மருந்து சாப்பிட்டு நாளைக்கும் இதே தானேன்னு அந்த வேலையில இருக்கிறவன் தண்ணியடிச்சிட்டு போதையில மயங்குறதுக்கு பேரு தூக்கமுங்க.

சின்ன வயசில இருந்து புத்தகம் சரசுவதின்னு சொல்லி சொல்லி மனசுல பதிஞ்சி போய், அலுவலகத்துக்கு போனா உட்கார்ர சேர்ல ஒயர் பிஞ்சி தொங்கும். சரி பண்ண முடியாது சார். டெண்டர் விடணும். அது வரைக்கும் பழைய ரிஜிஸ்டர் போட்டு அதுமேல உட்கார்ரப்ப, எம்புள்ள படிப்புல கை வெச்சிறாத சரஸ்வதின்னு மனசு கெஞ்சும்.

பஸ் புடிச்சி, ரயில் புடிச்சி, ஆட்டோக்கு அழுது அட்டண்டென்ஸ் போயிடுமேன்னு ஓடி வருவான். ஒரு மேல் அதிகாரி எழுந்து வாய்ல ப்ரஷ் வெச்சிகிட்டு கக்கூசு போயிருக்காருன்னு வீட்டில இருந்து தகவல் வந்ததும் லிஃப்ட நிப்பாட்டி அவரு வராருன்னு போர்டு தொங்க விட்டுடுவான். கண்ணு தெரியாதவங்க, காலில்லாதவங்க எல்லாம் தடவி, தடுமாறி ஆறாவது மாடின்னாலும் ஏறிப்போவாங்க.

சாயந்திரம் 4.30 மணிக்கு கூப்பிட்டு, 20 வருஷத்துக்கு முன்னாடியில இருந்து முட்டைக்கு மசுரு புடுங்க எவ்வளவு செலவுன்னு மந்திரி கேட்டிருக்காரு. 20 நிமிஷத்தில என் டேபிள்ள தகவல் இருக்கணும்னு கேப்பாரு அதிகாரி.மனுசனால முடியுமாய்யான்னு கேக்க முடியாது.

எப்படி சார் 20 நிமிஷத்திலன்னு முனகுவான். உன்னால முடியும்யா. இல்லன்னா உன்ன ஏன் கேக்குறேன்னு சொல்ற அதிகாரின்னா 15 நிமிஷத்தில குடுப்பான். அவனுக்குத் தெரியும். இப்படி எழவெடுப்பானுங்கன்னு. கேக்குறானோ இல்லையோன்னு வித விதமா தகவல் வெச்சிருப்பான் சார்.

தொலைச்சிடுவேன், மந்திரி கேக்குறாருங்கறேன் முடியாதுன்னா சொல்ற? தண்ணியில்லாத காட்டுக்கு மாத்திடுவேன்னு எகிறுனா, நடுங்கிப் போயி வாடி உனக்கிருக்கு ஆப்புன்னு சாப்புடாம, தண்ணி குடிக்காம, அங்க இங்க நகராம, பார்த்துகிட்டு தான சார் இருக்கிங்க. பண்ணிகிட்டு தானே இருக்கேன். மந்திரத்தில வருமா. மந்திரி கேட்டதாச்சே சார். ஒரு சின்ன தப்பு வந்தா உங்க வேலைக்கே வேட்டாயிடும்னு தானே பண்றேன்னு விடிய விடிய சாவடிக்கவும் தெரியும் அவனுக்கு.

காலையில சீக்கிரம் வந்து புள்ளைங்க தூங்க வீட்டுக்கு போயி, சனி, ஞாயிறு அலுவலகத்தில சாவுற சதவீதம் அதிகம் ஸார். பொண்டாட்டிய ஆஸ்பத்திரில சேர்த்துட்டு ஆபீஸ் சாவி கையில இருக்கும்மா. குடுத்துட்டு வரேன்னு வந்தவன, அதக்கேட்டு இதக்கேட்டு அரை நாள் கழிச்சி அனுப்புவாங்க சார்.

வட்டிக்கு ப‌ண‌ம் குடுக்குற‌து, சைட்ல‌ க‌ட‌ க‌ண்ணி வெச்சிருக்க‌ற‌து, த‌வ‌ணையில‌ ஜ‌ட்டியில‌ இருந்து ச‌க‌ல‌மும் விக்கிற‌ கும்ப‌ல் இருக்க‌த்தான் செய்யுது. அவ‌னுக்கு தொழிற்ச‌ங்க‌ம் துணை நிக்கும். இல்லைன்னா அதிகாரிக்கு க‌ப்ப‌ம் க‌ட்டுவான். அவ‌னும் சின்ன‌ ச‌த‌வீத‌ம்தான். அவ‌ன் வேலையும் சேர்த்து ச‌ம்ப‌ள‌த்துக்கு ம‌ட்டும் வேலை செய்யுற‌ அர‌சு ஊழிய‌ர் அதிக‌ம்.

இத்த‌னை க‌ஷ்ட‌மும் போறாதுன்னு அரைவேக்காட்டு அட்மினிஸ்ட்ரேட்ட‌ர‌ ஏமாத்தி கூகிள் ரீடர்ல‌ பின்னூட்ட‌ம் பார்க்குற‌தும், உண‌வு நேர‌த்துல‌ சாப்பாட்டை விழுங்கியோ விழுங்காம‌லோ அதுக்கு ப‌தில் போடுற‌தும், ம‌த்த‌வ‌ங்க‌ இடுகைக்கு ஓட்டு போடுற‌தும், பின்னூட்ட‌ம் போடுற‌தும், அலுவ‌ல‌க‌ நேர‌த்துக்குள்ள‌ இடுகை எழுதி வெச்சி, அலுவலக நேரம் முடிய அரை ம‌ணி முன்னாடி அனும‌திக்கிற‌ப்ப‌ ப‌ப்ளிஷ் ப‌ண்ற‌தும் அர‌சு ஊழிய‌னுக்கு சின்ன‌ ரிலாக்சேஷ‌ன்.

ச‌ரி ச‌ரி, ம‌ணி அஞ்சாக‌ப் போகுது. இப்போ இடுகை போட்டாதான், ஆபீஸ் முடிய‌ முன்னாடி ப‌டிச்சி பார்த்து பின்னூட்ட‌ம் போடுவாங்க‌. வெள்ளிக்கிழ‌மையாச்சா, இல்லாட்டி க‌றிக்க‌டை வாச‌ல்ல‌ எலும்பு துண்டுக்கு காத்து கிட‌க்கிற‌ நாய் மாதிரி யாராவ‌து பின்னூட்ட‌ம் போட்டாங்க‌ளா? ஓட்டு விழுந்துச்சான்னு (முக்கிய‌மா மைன‌ஸ் ஓட்டு) திங்கள் வரை பார்த்துகிட்டே இருக்க‌ணும்.

Thursday, November 5, 2009

பெயர் வினை..

ஒரு முறை திருக்குறள் முனுசாமி அவர்கள் சொன்னார். குழந்தை பிறந்தால் கடனை உடனை வாங்கி ஊரைக்கூட்டி, பஞ்சாங்கம் பார்த்து அல்லது பெரியவர் விருப்பப்படி அழகாக ஒரு பெயரை வைக்கிறீர்கள்.

ஆனால் அந்தப் பெயர் வைத்து நீங்கள் கூப்பிட்டால் அது  உணர்ந்து செயல்படும் வயது அதாவது இரண்டு அல்லது மூன்று வயதில் அந்தப் பெயரை விட்டு, ஏ சனியனே அங்க போகாத, ஏ எருமை சீக்கிரம் சாப்பிடு, ஏ மூதேவி தண்ணி கொண்டுவா என்றுதான் பெரும்பாலும் அழைக்கிறீர்கள்.

இதுக்கெதுக்கு அவ்வளவு செலவு என்று கூறி நல்ல சொற்களை பேசுவது குறித்த வள்ளுவனின் குறளைக் கூறி அதற்குமுன் இப்படி ஒவ்வாத பெயர் கூறி குழந்தைகளை அழைப்பதை நிறுத்தத் தொடங்குவோம் என்றார்.

அட இந்த கெரகம் புடிச்சவன் ஊரச் சுத்தாம விஷயத்துக்கு வரமாட்டானேன்னு சலிக்காதீங்க. முனுசாமி அய்யா சொன்னது கவனம். அதாவது கூப்புடுற ஒரு பேரே சரியா கூப்புடுறதில்லை. இதுல நம்ம வீட்டு வழமுறைன்னு மூணு பேரு காதுல சொல்லி பேரு வைப்பாங்களாம்.

பத்து நாள் குழந்தைக்கு எங்க கவனமிருக்கும் காதுல சொன்ன பேரு. ஆக ஜாதகத்தில் பாலசுப்பிரமணியன் என்கிற ஆண் குழந்தை சுப ஜனனம்னு எழுதிட்டாங்க. அப்புறம் திருப்பதி போனபோது யாரோ வடக்கத்தி சிறுமி பாலாஜின்னு கூப்பிட அதுவே நிலைச்சிப் போச்சி எனக்கு.

எங்கத இப்புடின்னா எங்கப்பாருக்கு வச்ச பேரு விஸ்வநாதனாம். அதேனோ வாசுதேவமூர்த்தின்னு ஒரு பேரு வந்து அதையும் இவரு வி.வி.மூர்த்தின்னு சுருக்கி, கூப்புடுறவங்க வாசுன்னு கூப்பிட்டு ஏக குழப்பம்.

எங்கப்பாரு தங்கமணி அதாங்க எங்கம்மா பேரு நிஜமாவே தங்கமணிதான். அது ஏனோ தங்கம்மாள்னு மருவிப்போச்சு. (அட இருங்க வெண்ணெய் சங்கத் தலைவரே. சொல்லுவம்ல. வெண்ணைக்கும் கணபதி சுப்பிரமணியம் என்கிற ரவிசங்கர்தான் பேரு).

ரேஷன் கார்டுல வி.வி.மூர்த்தி, தங்கம்மாள், பாலாஜின்னு இருக்கும். வேற ஒண்ணில வாசுதேவ மூர்த்தி, தங்கம், பாலசுப்பிரமணின்னு இருக்கும். எதுக்கு என்ன பேரு குடுத்தோம்னே தெரியாம போச்சி.

வேலைக்கு ஆர்டர் வந்து வெரிஃபிகேஷன் போனப்ப வெடிச்சது முதல் குண்டு. S.S.L.C புத்தகத்தை பார்த்துட்டு அந்த எழுத்தர் உதட்ட பிதுக்கி உம்பேரு பாலாஜின்னு இருக்கு, அப்பா பேரு வி.வி.மூர்த்தின்னு இருக்கு. பெற்றோர் கையெழுத்தில தங்கம்மாள்னு இருக்கு. அலுவலக ஆவணப்படி வி.வாசுதேவ மூர்த்தி, மனைவி தங்கமணி, பையன் பாலசுப்பிரமணியன். அதனால நீ அவனில்லைன்னுட்டாரு.

அரண்டு போய் அய்யா இதோ அம்மாவோட பென்ஷன் ஆர்டர். இதில பாருங்க தங்கமணி, மறைந்த திரு வி.வி. மூர்த்தியின் மனைவின்னு இருக்குன்னு நீட்டுனேன். சளைக்காம சொறிஞ்சிகிட்டு சரி, வி.வி. மூர்த்தி பொண்டாட்டி தங்கமணின்னு நான் ஒத்துக்குறேன். உன் சர்டிஃபிகேட்ல தங்கம்மாள், உன் பேரு பாலாஜின்னு இருக்கேன்னு பிட்ட போட்டாரு.

குழம்பிப் போயி, நான் எங்கப்பாரு அலுவலகத்தில கேட்டு பாக்குறங்கன்னு வந்து அம்மாகிட்ட எகுறுனேன். ஜாதகத்த நீட்டுச்சி.அதுல அடுத்த லிங்கு வாசுதேவ மூர்த்திக்கு பாலசுப்பிரமணியன் என்கிற ஆண் குழந்தைன்னு இருந்திச்சி.

எனக்கு அழுறதா சிரிக்கிறதா தெரியல.அப்பாரு அலுவலகத்தில் போய் அவர் நண்பரிடம் விஷயம் சொன்னதும் இருந்த ரிகார்ட் எல்லாம் பார்த்தாரு. நல்ல காலத்துக்கு இறந்ததும் கொடுத்த குடும்ப உறுப்பினர் பட்டியல்ல பாலாஜின்னு பெயர் இருந்தது.

இருடான்னு போய் ஒரு சான்றிதழ் அடிச்சி கொண்டு வந்து கொடுத்தாரு இப்படி:

This is to certify that Sri V. Balaji is also known as Sri V. Balasubramanian. He is s/o  late Sri V. Vasudevamoorthy alias V.V. Moorthy and Mrs V. Thangamani who is also known as Thangammal as per official records. He is not related to me.

அதக் கொண்டு வந்து நீட்டி ஒரு மாதிரியா  பொழைச்சிப் போன்னு வேலையக் குடுத்தாங்க.  அப்பயின்மென்ட் ஆர்டரக் குடுக்குறப்ப அந்த எழுத்தர் சொன்னாரு,இப்புடி வேற எதுக்காவது கேட்டா ஜாதகத்த நீட்டாத. அதில உன் பிறந்த தேதி 29 செப்டம்பர்னு இருக்கு, சர்டிஃபிகேட்ல 10 ஜூன்னு இருக்கு, வில்லங்கமாயிரும்னு. சின்னத்தம்பி கவுண்டமணி மாதிரி ஏன் நைனா? பேருலதான் கொழப்பிட்டீரு. வயசுலயுமான்னு புலம்புனேன்.

இந்தப் பெயர் குழப்பம் அப்பப்ப தலையக்காட்டி படுத்துற பாடு இருக்கே. படுறவனுக்குதாங்க தெரியும். அப்பாக்கு திதி குடுக்குறப்ப வழக்கமா வர புரோகிதர்னாலும் எப்போ தேவையோ அப்போ, அப்பா பேரு சொல்லும்பாரு. அதனால குழப்பமில்ல. அப்புறம் தாத்தா பேரு சொல்லு, கொள்ளுத் தாத்தா பேரு சொல்லுன்னு நடத்துவாங்க.

ஒரு வாட்டி புதுசா ஒருத்தர் வந்தாரு. எல்லாம் ரெடி பண்ணிகிட்டே யாருக்கு ஸ்ராத்தம்னாரு. எங்கப்பாக்குன்னேன்.  ஹோமத்துக்கு எல்லாம் ரெடி பண்ணிக்கிட்டே ஊரு கத பேசிட்டு,  பேரு என்னன்னாரு. எம்பேர சொன்னேன் பாலசுப்புரமணியன்னு. சரி ஆரம்பிக்கலாமான்னாரு. சரிங்கன்னேன்.

அப்புறம் ஆரம்பிச்சி மந்திரம் சொல்லச் சொல்லத் திரும்ப சொல்லி, ஒரு வழியா முடியுறப்ப மனசுக்குள்ள ஒரு நமைச்சல். என்னாங்கடா. அப்பாக்கு திவசம், அவரு பேரே கேக்காம பண்ணி முடிச்சிட்டானே இந்தாளுன்னு மெதுவா ஏங்க,எங்கப்பாரு பேரு கேக்கவே இல்லையேன்னேன். அந்தாளு மிரண்டு போய் யோவ் பேரு கேட்டா பாலசுப்புரமணின்னியேன்னாரு.

ஏங்க அது எம்பேருன்னேன். எனக்கெதுக்குடா உம்பேருன்னு எகிறி, சரி, ஹோமம்லாம் பண்ணியாச்சி. இனிமே ஒன்னும் பண்ண முடியாது. போய் குளிச்சிட்டு வான்னு சொல்லி, திரும்ப ஏதோ மந்திரம் சொல்லி விஸ்வநாதன் அப்பா பேருதானேன்னு சத்தியம் பண்ணாத குறையா சொல்லச் சொல்லி ஏதோ சப் ரூல்ல திவசம் பண்ண வெச்சாரு.

எங்கம்மா அழுதுகிட்டு இப்புடி ஒரு தருவிசில்லாம புள்ள இருக்குமா. திவசம் பண்றப்போ தன் பேரு வருதே தனக்கு தானே பண்ரோமேன்னு தெரியாதான்னு எகிற, நீ பார்த்துக்கிட்டிருந்தியே,  எம்புருசன் பேரு ஏன்டா சொல்லலைன்னு கேக்க கூடாதான்னு நான் எகிற அதுக்கப்புறம், திவசம்னா ஒரு பேப்பர்ல பேருங்க ரெடியா எழுதி வெச்சி வந்ததும் நீட்டிடுவேன். எதுக்கு குழப்பம்?

(டிஸ்கி: ஆமாம் ஒருத்தரு டிக்கட் வாங்கிட்டா லேட்னு போடுறமே.  எப்பவோ போயிருக்க வேண்டியது, லேட்டாதான் செத்ததுன்னு நக்கலா சொல்றா மாதிரியில்லை? )

Wednesday, November 4, 2009

குவாடர் வாழைக்காய்.


காட்சி 1: ஆபீசில ரொம்ப வேலை. முடிச்சி மணி பார்க்குறேன். மணி பத்து. இந்த நேரத்துக்கு மேல புரோட்டா கடையிலதான் ஏதாவது கிடைக்கும். செரிமானமாகாம உடம்பு கெட்டு போகும். சரின்னு 2 ரஸதாளி வாழைப்பழம் சாப்பிட்டு படுத்தேன்.

காட்சி 2: குழந்தைக்கு ஆறுமாசமாச்சிம்மா. இனிமே கொஞ்சம் பழம் கொடுக்கலாம். வேக வைத்த ஆப்பிள், மலைவாழைப்பழம் இதெல்லாம் கூழுணவுடன் சேர்த்து கொடுக்கலாம்.

காட்சி 3: ஏங்க பூஜைக்கு எல்லாம் வாங்கிட்டு வாழைப்பழம் இல்லாம வந்துட்டீங்களே. ஓடிபோய் வாங்கிட்டு வாங்க.

காட்சி 4: உடம்பு பூரணமா குணமாயிடுச்சிங்க. ரொம்ப வீக்கா இருக்கீங்க. நல்ல காய்கறி பழங்கள்னு சாப்பிட்டு ஆரோக்கியம் பார்த்துக்குங்க.


இனிமே இதுக்கெல்லாம் வேலையே இல்லை. போ ராசா. போய் வளமாக் குடிச்சி நலமா இருந்துகன்னு டாக்டரே போதைலதான் சொல்லுவாரு போல.

என்னாடா பினாத்துறான் வானம்பாடின்னு பார்க்குறீங்களா. காலைல எழுந்து பேப்பர படிச்சா இந்த விவசாயிங்க பண்ணுற அனியாயத்த போட்டுருக்கான். டாஸ்மாக்குல ரெண்டு கட்டிங் ராவா அடிச்சா மாதிரி தலை சுத்திப் போச்சு. பேசாம அரசாங்கம் வீட்டுக்கு வீடு டாஸ்மாக் கனெக்சன் குடுத்துட்டா சரியாப் போய்டும். குழந்தைங்களுக்கு க்ரைப் வாட்டர் குடுக்கறதே தடை பண்ணிட்டாங்க. இனிமே குவார்ட்டர் குடுத்து வளர்த்துக்கலாம். வளர்க்கணும்.

மனுசனுக்கு ஆசை இருக்கலாம். பேராசை இருக்கலாமாங்க. 5 விரலும் ஒண்ணா இருந்தா ஏதாவது பண்ண முடியுமா? இயற்கைக்கு எதிரா போய் போய் ரோகம் பெருகி, வருமானமும் பெருகி சம்பாதிக்கிறத டாக்டருக்கு அழுது என்னாத்த கண்டோம். அட போங்க. குடிகாரன் புலம்பல் மாதிரி இருக்குன்னு வஞ்சா நான் என்ன பண்ண? நீங்கதான் படிங்க.




மாப்பு: உங்கூருக்காரங்க நல்ல படியா ஆரம்பிச்சி வெச்சிருக்காய்ங்க. எங்க போய் சொல்லுறது.