Thursday, September 3, 2009

அனுபவம் பழமை

பெருசு, பெர்ஸேய் என்றெல்லாம் அன்பாய் அவமானிக்கப்படும் முதியவர்கள் நிகழ்காலத்தில் உறுத்தலாய் உணரப்படினும் அவர்களைப் புறக்கணிப்பதால் நட்டம் நமக்குத்தான். நான் படித்துக் கிழித்தவன், எனக்குத் தெரியாதா என்ற கர்வம், படிக்காத அவர்களால் தவிடு பொடியாவதை எத்தனை முறை அனுபவித்தாலும் ஏனோ உறுத்தல் மட்டுமே வென்று விடுகிறது. நம்ம பெருசுங்க எவ்வளவு விவரமான வில்லங்கமான ஆளுங்க என்பதற்கு சில உதாரணங்கள் இவை.

ஒரு கதை சொல்லுவார்கள். ஒரு பெரியவர் பகலுணவு உண்டுவிட்டு வரப்போர மர நிழலில் உட்கார்ந்திருந்தாராம். ஒரு வாலிபன் அந்த வழியாக போனவன் ஒரு ஊரின் பெயர் சொல்லி எப்படிப் போகவேண்டும் எனக் கேட்டானாம். வழி சொல்லிய பெரியவரிடம் எவ்வளவு தூரம் எனக் கேட்டானாம். பெரியவர் பதில் சொல்லாமல் இல்லாத பல்லைக் குத்திக் கொண்டிருக்கவே நடக்கத் தொடங்கினானாம். கொஞ்ச தூரம் போனவனை பெரியவர் கூப்பிட்டாராம். அங்கிருந்த படியே என்ன என்று கேட்டவனை, இங்கு வா என்றழைக்கவும், அவன் திரும்ப வந்தானாம். எவ்வளவு தூரமுன்னு கேட்டியேப்பா, 25 நிமிசமாகும் போக என்றாராம். இளசுக்கு வந்திச்சி கோவம். ஏம் பெருசு. அப்போ கேட்டா பல்லு குத்திட்டிருந்த. அவ்வளவு தூரம் போகவிட்டு திரும்ப கூப்பிட்டு சொல்றீரேன்னு பாய்ஞ்சதாம். அட போடா நீ எப்படி நடக்கிற, தெம்பா இருக்கியா, களைச்சிருக்கியான்னு தெரியாம எப்படி சொல்றது. போவைல குழப்பமா களைப்பான்னு தெரியாம தொய்ஞ்சி போய் இருந்திச்சி நடை, நாங்கூப்புடவும் வெரசா வந்த. அதனால தான் சொல்றேன் 25 நிமிசமாகும்னு சொல்லிட்டு களத்துமோட்டுக்குள்ள வேலைய பார்க்க போச்சாம். இளசுக்கு உச்சி மண்டைல உளிய வெச்சி போட்டா மாதிரி ஆகிப்போச்சாம்.

நம்ம ஹீரோ டு ஜீரோல சொல்லி இருந்தேன், நம்ம தம்பியான் வெண்ணெய் தின்ன லீலை. மாசத்துல முதல் மற்றும் மூன்றாம் ஞாயிறுக்காகத் தவமிருப்பேன். நெய்க்காரத் தாத்தா வருவாரான்னு. கால் கிலோ வெண்ணெய் வாங்குவாங்க. நெய் காய்ச்சின வாணலியில இருக்கிற நெய் வீணாகாம கேசரி கிண்டுவாங்க. அது பின்னூட்டம் மாதிரி. ஆனா ஒரு சின்ன கப் வெச்சிட்டு கவர்ச்சியா ஒரு இளி இளிச்சி தாத்தாக்கு ஒரு சொம்பு பான தண்ணி நீட்டுனா அரை கப் நெய் குடுப்பாங்க. அப்புடியெ ஒரு பெரிய தேக்கரண்டி சக்கரைய போட்டு விரல் எரிய எரிய குழைக்க சக்கரை கரைஞ்சி நுரை மாதிரி வரும் . லோகத்துல அத மிஞ்சி ஒரு இனிப்பு எவனும் கண்டு பிடிக்கலைன்னு சொல்லுவேன். சீத பேதி, சூட்டினால வயித்துவலி இருந்தா இதுக்கு மிஞ்சின வைத்தியமில்ல. இது அவரு சொல்லிக் கொடுத்தது.

இப்புடி ஒரு ஞாயிறு வாங்கி வெச்சிட்டு பக்கத்து வீட்டம்மாமார் கூட அரட்டைல இருக்கதான் இவன் கால்கிலோ வெண்ணெய லவட்டிட்டான். ஒளிஞ்சிட்டதால நேரம் கடந்து போய் கண்டு பிடிச்சப்ப கண்ணு முழியெல்லாம் மேல சொருகி பயமா போச்சி. அரக்க பறக்க அள்ளி எடுத்து அம்மா கதறுது. அன்னைக்குன்னு வீட்டு சொந்தக்காரங்க பேரனுக்கு தொட்டில்ல போட்டு பேரு வைக்கிற விசேஷம். வந்துச்சு அந்தம்மா. தோபாரு. ஒப்பாரி வைக்காத. டாக்டர்கிட்ட தூக்கிட்டு போ. ஒரு வேள ஏதாவது ஆய்ட்டா 8 மணிக்கு மேல வா ங்குது. துள்ளத்துடிக்க தூக்கி போட்டுகிட்டு வெளிய வந்தா எதிரூட்டுல ஒரு பெருசு. மழை நாள் போக திண்ணைலதான் வாசம். அது கூப்பிட்டு என்னாடி புள்ளைக்குங்குது.

அழுதுகிட்டே இப்படின்னா, அட சீ கொண்டாடி புள்ளையன்னு வாங்கி, கால்ல போட்டு போய் வென்னித்தண்ணி, பாலோடை கொண்டுவான்னாங்க. வெது வெதுன்னு முதல் பாலோடை தண்ணி போட்டு வயத்தை நீவிக் கொடுக்கவே ப்ளக்கு புடிங்கிடிச்சி அய்யாக்கு. நெய்யா போகுது. 10 நிமிசத்துல வயிரு ஒட்டிபோக ஞேனு சிரிக்கிறான். தூக்கி கொஞ்சி, ஒரு அறை போட்டு அவன் அலற திரும்ப கொஞ்சின்னு பைத்தியமாயிடுச்சி அம்மா. கிழவி கூலா சொல்லுது. இன்னும் வென்னீர் கொண்டு வந்து இந்த இடமெல்லாம் அரப்பு பொடி போட்டு அலம்பி விடு. ராத்திரி எறும்பு என்ன தூக்கிட்டு போய்டும்னு.

அம்மம்மா சொல்லும். கலியாணமாகி, மறுவீடு வந்தப்ப தன்னோட மாமியாருக்கு மாமியார் கிழவி கால்ல விழுந்துச்சாம். அந்தம்மா சீக்கிரமே உன் பொட்டு அழிய. தாலி அறுகன்னு வாழ்த்தவும் அலண்டு போயி அழ ஆரம்பிச்சிட்டாங்களாம். கூட வந்த ஒரு அம்முணி போயி இன்னோரு பெருசு கிட்ட கேட்டுச்சாம். என்னங்க முத முதல்ல கலியாணபொண்டு கால்ல விழுந்தா இப்படியா சொல்றது? விவஸ்தை வேணாம்னு. அந்த லொள்ளு புடிச்ச பெருசு, என்னாடியம்மா தப்பு கண்டுட்ட? இப்ப என்னா சொல்லிட்டாங்க? சீக்கிரமே புள்ள பொறக்கட்டும்னு வாழ்த்துச்சி. அவ்வளவுதான்னா இந்தம்மா இதென்னாடா லூசுப்பய குடும்பத்துல வாக்க பட்டுட்டமோன்னு ஆகிப்போச்சாம்.

அப்புறம் சொல்றாங்களாம் விளக்கம். துறுதுறுன்னு இருக்கிற புள்ளைங்க பாலூட்டும்போது தாலிக்கயித்த புடிச்சி இழுக்குமாம். எண்ணெய் வியர்வைன்னு ஊறி தாலிக்கயிறு இத்துப்போய் இருக்க அத்துக்குமாம். கிட்ட போய் கொஞ்சுறப்ப, தூக்கி வெச்சி கொஞ்சுறப்ப பொட்டை விரலால அழிச்சி விடும்ல அதத்தான் அப்புடி சொல்றது. புடிக்காத ஆளுங்க இருந்தா நேரடியா வாழ்த்துவான்னு நினைச்சி நடக்காதுன்னு நினைப்பாங்களாம். இப்படி சொன்னா நடக்காதுன்னு நினைச்சதும் ஆசீர்வாதம் மாதிரியாயிடும்னு அப்புடி சொல்றது வழமைன்னாங்களாம்.

ஒரு தபா ஒரு மனை ரிஜிஸ்டர் பண்ண போனேன். அங்க ஒரு பெருசு. நீர்க்காவி வேட்டி, காலர் பிஞ்சி போன சட்டைன்னு குத்துக்காலு போட்டு உக்காந்திருந்திச்சி. பக்கத்துல ஒரு பெரிய அலுமினிய தூக்கு. சொட்டைன்னா அப்படி ஒரு சொட்டை. கொஞ்ச நேரத்துல வக்கீல் வந்தாரு. ஸ்டைலா ஒரு பய புள்ள வந்தான். பத்திரத்த ப்ரீஃப் கேஸ்ல இருந்து எடுத்து படிக்க ஆரம்பிச்சாங்க. இரு இருன்னு அமர்த்தி, தம்பி இத வாங்கி படி நைனான்னாங்க. வாங்கி படிச்சேன். நல்லா இரு தம்பின்னு வாழ்த்தினாங்க. வக்கீலுக்கு ஒரு பக்கம் கடுப்பு ஒரு பக்கம் மலைப்பு.

காசெல்லாம் கொண்டாந்திருக்கீங்களான்னாரு. அதெல்லாமிருக்குது நீ ஐயாட்ட குடுப்பான்னு பெருசு டிஸ்மிஸ் பண்ணிடிச்சி. ரிஜிஸ்ட்ரார் வாங்கி பார்த்துட்டு, என்னா பெரியவரே எல்லாம் பேசியாச்சா. பதிஞ்சிறலாமான்னா, ஆமாங்க நீங்க பதிங்க நான் காசு செட்டில் பண்ணிட்டு வரேன்னு கெளம்பி வெளிய போனாங்க. கண்ணு மறைவா கூட்டி போகவும் நமக்கு சொறியுது. இடுப்புல கட்ற அளவிருக்காதே பணம். என்னாங்கடான்னு. வக்கீலுக்கும் விக்கிற ஆளுக்கும் அதே குழப்பம். தூக்க தொறந்து கட்டு கட்டா எடுக்குறாரு. தல சுத்திப் போச்சு. குடுத்துட்டு அந்த புள்ளைக்கு அட்வைசு. பத்திரமா கொண்டு போ தம்பி. அதுக்குதான் தூக்குல போட்டு கொண்டாந்தேன். ஒரு பயலுக்கும் சந்தேகம் வராது பாரு. காலம் கெட்டு கெடக்குன்னு. யப்பா. இந்த வெவரம் புரியாம , அலட்டலா பேங்க்ல காச எடுத்து பொட்டில வெச்சிகிட்டு தண்டோரா போடாத குறையா விளம்பரம் பண்ணி எத்தன பேரு பறி குடுக்குறாங்க? பதிவு கட்டணம் கட்டிட்டு வரேன் தம்பின்னு சொல்லிட்டு போன ஆள பார்த்த அந்த ஆளு, வக்கீலு ஏன் நானுந்தான் கண்ணுல உங்களயெல்லாம் பட்டிக்காட்டான்னு சொல்லிட்டு திரியிறமேன்னு இருந்திச்சி.

Wednesday, September 2, 2009

தொலைந்து போனவர்கள் - 2

மும்பையின் டப்பா வாலாக்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். அந்த அளவு பிரபலம் இல்லாவிடினும் சென்னையிலும் இவர்கள் இருந்தார்கள். இவர்கள் வெறும் பணியாளர்கள் மட்டுமல்ல. ஒரு சமுதாயத்தின் பற்சக்கரமாக இருந்தவர்கள். சம்பாத்தியம் முக்கியமாக இருப்பினும் மனித நேயத்திற்கு இவர்களின் பங்களிப்பு அதிகமென நினைக்கிறேன். இவர்களைத் தொலைத்து விட்டோமே ஏன்? எங்கு போனார்கள் இவர்கள்?

சிறிய வயதில் நாங்கள் குடி இருந்த வீட்டில் 10 குடித்தனங்கள். பெரும்பாலும் இரயில்வேயில் பணியாற்றுபவர்கள். அவர்களூக்கு மதிய உணவு எடுத்துச் செல்ல ஒரு அம்மா வரும். வந்தோமா, சாப்பாடு கொடுத்தால் கொண்டு போவதும் திரும்ப டப்பாவை கொண்டு வந்து கொடுத்தோமா என்றிருக்க மாட்டார்கள். சாப்பாடு தயாரில்லை என்றால் முடியவில்லையாம்மா? எவ்வளவு நேரமாகும்? நீ கட்டி வையம்மா நான் அடுத்த வீட்டில் போய் எடுத்துக் கொண்டு திரும்பப் போகும்போது எடுத்துக் கொள்கிறேன் என்று போவார்கள். சமைக்காமல் இருந்தால் அல்லது நேரமாகும் போல் இருந்தால், நீ டப்பாவைக் கொடம்மா, நான் கடையில் வாங்கி கொண்டு போய் கொடுக்கிறேன். அய்யாட்ட சொல்லிக்கலாம். வேலையில எப்படியோ என்னமோ, பசியோட வரும்போது சாப்பாடு இல்லை என்றால் வருத்தமாயிருக்கும் என்று வாங்கிக் கொண்டு போவார்கள். நானும் வேலைக்குப் போகும்போது இப்படி சாப்பிட வேண்டும் என நினைத்ததுண்டு.

நான் வேலைக்குப் போக ஆரம்பித்ததும் அலுவலகத்தில் இவர்களைப் போன்றோரை ஒரு சேரக் காண முடிந்தது. சாப்பாட்டுக் கூடையுடன் வாழையிலையும் வாங்கிக் கொண்டு வந்து விற்பார்கள். சூடான உணவு, சுவையாகவும் இருந்து வாழையிலையில் விருந்து மாதிரி சாப்பிடக் கசக்குமா என்ன? சாப்பாடு வாங்க ஐயா நேரத்துக்கு வரவில்லையெனில் அவர் நண்பரோ, அதே அலுவலகத்து ஆட்களோ தென்பட்டால் விசாரிப்பு நடக்கும். ஐயாவுக்கு வேலை அதிகமா? வெளிய போய் இருக்கிறார்களா என்று. பல நேரம் தேடிக் கொண்டு வந்து இருக்குமிடத்திலேயே கொடுப்பதும் உண்டு. எழுதாத ஓர் சட்டம் இவர்களுக்கிருந்தது. சாப்பாடு கொண்டு வர கூலி பேசும் போதே தினசரி கொஞ்சம் சாதம், குழம்பு, பதார்த்தம் ஆகியவை மிச்சம் வைக்கப் பட வேண்டும். அதிலும் ஒரு கண்டிப்பு. கலந்த பிறகு பிடிக்கவில்லை என்றோ, அதிகமென்றோ வைக்கக் கூடாது. தனித் தனியாகவே வைக்க வேண்டும். சாப்பாடு நேரம் முடிய டப்பா இவர்கள் கைக்கு வந்துவிடும். வாங்கும் வேகத்திலேயே கனப்பதை வைத்து ஏன் சாப்பிடலை? உடம்பு சரி இல்லையா? சாப்பாடு சரியில்லையா என்ற விசாரிப்பு நடக்கும்.

அக்காலத்தில் வெள்ளந்தி மனிதர்கள். வெடிகுண்டு கலாச்சாரம் எல்லாம் கேள்விப் பட்டதே இல்லை. எனவே செக்யூரிட்டி என்று பெயருக்கு இருந்தாலும், சாதாரணமாக யார் வேண்டுமானாலும் அலுவலக வளாகத்துக்குள் வருவார்கள். நடைபாதை வாசிகள், ரிக்ஷாக்காரர்கள், பிச்சைக்காரர்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக வருவார்கள். இவர்களிடம் மீதம் வைத்த சாப்பாட்டை சைவ சாப்பாடு தனியாக, அசைவச் சாப்பாடு தனியாக என்று சிலர், எல்லாம் கலந்து என்று சிலர் கொடுப்பார்கள். யானைக்குக் கொடுக்கும் கவளம் போல் பெரிய உருண்டையாக உருட்டிக் கொடுப்பார்கள். மிகுந்த வாழையிலைத் துண்டில் பொரியலோ, ஊறுகாயோ ஏதோ ஒன்று தருவார்கள்.

அங்கும் இவர்களின் கரிசனம் தெரியும். சாராய நெடியுடன் வந்து உட்காருபவருக்கு திட்டு விழும். ஒரு உருண்டை உண்டுவிட்டு தள்ளாடியபடி எழும்ப எத்தனிக்கையில், இப்படி குடி குடின்னு நாசமா போறியே. சாப்பாடாவது சாப்பிட்டு தொலை. அதுலயும் மிச்சம் புடிச்சி குடிக்கலாம்னு சாவுறியா? இந்தா துண்ணு என்று அடுத்த உருண்டை வைப்பார்கள். சற்று தூரத்தில் காசின்றி பசி வயிற்றிலும், உயிர் கண்ணிலும் வைத்துக் கொண்டு சிலர் நின்றிருப்பார்கள். இருப்பதை வழித்து அவர்களுக்கும் கொடுத்துவிட்டு, நாளைக்கு காசு கொடுக்கணும். தினம் சும்மா குடுப்பேன்னு நினைக்காத என்பார்கள். எதுனா வேலை செய்யேன். சும்மா எப்படி காசு வரும் என்று கண்டிப்பார்களே தவிர அடுத்த நாள் நேற்று சாப்பிட்டதற்கு காசு எங்கே என்று கேட்டு நான் பார்த்ததில்லை.

எனக்கு அந்த வயதில் ஆச்சரியம் என்னவென்றால், யாருக்கு சாப்பாடு கொண்டு போகிறார்களோ அவர்கள் பெரும்பாலும் நோஞ்சானாக, அல்லது நேர்மாறாக ஊற வைத்த உளுந்து மாதிரி ஊதிப்போய் இருப்பார்கள். இந்த உருண்டைச் சாப்பாடு ஆட்களெல்லாம் அர்னால்டு மாதிரி இருப்பார்கள். எல்லாச் சத்தும் கலந்து அப்படி இருந்தார்களா என்று நினைப்பதுண்டு. இப்போது இவர்களைத் தொலைத்துவிட்டு ஹாட் பேக், டப்பர்வேர் என்று காலையிலேயே கட்டிக் கொண்டு வந்து நெஞ்சடைக்கச் சாப்பிடுகிறோம். உருண்டை சாதம் சாப்பிட்ட பயில்வான்கள் இன்று நெஞ்சுக் கூடு தெரிய உழைக்கிறார்கள். குடிமட்டும் அழியாமல் அப்படியே இருக்கிறது.

(பி.கு.: இதெல்லாம் சரி. நீ வேலைக்குப் போனால் இப்படி சாப்பிடணும்னு நினைச்ச கதை என்னாச்சின்னு கேக்குறீங்களா? நம்ம வீட்டில் காலை 8.30 கே குழம்பு, ரசம் என முழுச் சாப்பாடுதான். மதியம் குழம்பு சாதமோ, மோர் சாதமோ. இதுக்கெதுக்கு கேரியர். கையில கொண்டு போனா போதாதான்னு ஆப்பு வெச்சிட்டாங்க. அவ்வ்வ்வ்)

Tuesday, September 1, 2009

ஹீரோ டு ஜீரோ

எங்கப்பாரு ஒரு அற்புதமான மனுசனுங்க. ஞாயிறு தவராமல் அவர் இராணுவத்தில் இருந்த பொழுது கிடைத்த ரிப்பன், விக்டோரியா ராணி படம் போட்ட ஒரு வெள்ளி மெடல், நட்சத்திரம் மாதிரி ஒரு வெண்கல மெடல் எல்லாம் பள பளன்னு துடைச்சி வைக்கிறப்ப அப்பாவ யூனிஃபார்ம்ல துப்பாக்கியோட (அந்த வயசில நமக்கு தெரிஞ்ச துப்பாக்கி குறவர் கைல இருக்கிறதுதான்) கற்பனையா பார்க்குறப்ப பயத்த விட சிரிப்புதான் வரும். அப்பிடி ஒரு ஹீரோ இமேஜ டேமேஜ் பண்ணன்னே பொறந்தான் எந்தம்பி.

குரங்கா படைக்கிறதா குழந்தையா படைக்கிறதான்னு கன்ஃப்யூசன்ல டாஸ் போட்டு அது களிமண்ணுல நட்டுகிட்டு நின்னிச்சோ தெரியல. பிரம்மா பாதி பாதியா படைச்சுட்டான். பயபுள்ள பண்ண அட்டகாசத்துக்கு அளவே இல்ல. 11 மாச குரங்கு, சை குழந்தை கால்கிலோ வெண்ணெய நக்குமாங்க. சரி தெரியாம தின்னுட்டான் குழந்தைன்னா, போய் மூலைல சுத்தி வச்ச பாய பிரிச்சி அது பின்னாடி போய் ஒளிஞ்சி மப்படிச்சி மயங்கி கிடந்தா மனுசன் என்னாறது? அந்த கதை ஒரு இடுகைக்காகும். அதனால இப்ப விடுவோம்.

அந்தகாலத்தில மாவு திரிக்க யந்திரக்கல்லுன்னு ஒன்னுண்டு. கீழ வட்டமா ஒரு கல்லு. மேல வட்டமா ஒரு கல்லு. கீழ் கல்லு கொஞ்சம் கனமா உசரமா இருக்கும். நடுவில ஒரு விரக்கடை அளவு குழி. மேல கனம் கம்மியா ஒரு கல்லு. அதுக்கு ரெண்டு காது மாதிரி இருக்கும். ஒன்னில ஒரு குழி. நடுவில ஒரு குழி. கீழ்க் கல்லுக்கு ஒரு கட்டை அடிச்சிருக்கும். அது கல்லு குழிவழியா வர அச்சு. கைப்புடிக்கு ஒரு கட்டை. ரெண்டு தினத்தந்தி பேப்பர பரத்தி அதுமேல இத ஏத்தி வச்சு மேல் கல்லு குழில கைப்பிடி கைப்பிடியா அரிசிய போட்டு அரைக்கிறது. ஒரு கால மடிச்ச வாகில ஒரு கால நீட்டிகிட்டு அம்மா அரைக்கிறப்போ போட்டி போட்டுகிட்டு அரிசிய போடுறது.

வில்லங்கம் அங்கதான் உருவாச்சி. கைப்புடி கட்டை சைசா, வாகா கிடைச்சி போச்சி. நடு முளை மட்டும் எங்கப்பாரு எட்டு குட்டிகரணம் அடிச்சி என்னல்லாமோ பண்ணாலும் அரைக்கிற ஜோர்ல புட்டுக்கும். சுத்திய வெச்சி தட்டி தட்டி அதுந்தலை ஆத்துல ஊரின பனங்கொட்ட மாதிரி ஆகிப்போய் ஒரு கட்டத்துல மேக்கல்லு உள்ள போகமாட்டன்னு அடம் புடிச்சது. அரைக்கமாட்டேன்னு அம்மாவும் அடம் புடிச்சாங்க. அப்பாருக்கு வந்தது ரோசம். இதுக்கு நிரந்தரமா ஒரு தீர்வுன்னு பழைய இரும்புக் கடைல போயி ஒரு கம்பி, ஆக்ஸா ப்ளேடு வாங்கிண்டு வந்து அளவா அறுக்கிறதுக்குள்ள அரை நாளாயிடிச்சி. நமக்கு மண்டைக்குள்ள குடைச்சல். அத்தசோடு குழிக்குள்ள இந்த மெல்லிசு கம்பிய எப்பிடி பொருத்துவாங்கன்னு. இத பார்த்துண்டிருக்கிறதுக்குள்ள ரென்டு வாட்டி கடிச்சி வெச்சிட்டான் என்ன குரங்குப்பய.

அடுத்ததா வீட்டில ரசம் வைக்க இருந்த ஈய சொம்பு. அது ஓட்டையாகி கன காலமாச்சு. அத சுத்திய வெச்சி அடிச்சி துண்டாக்கவும் ஐடியா புடிபட்டு போச்சி. தம்பிப் பய புள்ள எப்போ என்ன பண்ணுவான்னு தெரியாதா. முதல்ல அரைஞாண் கயித்தில தூளிக்கயித்த கட்டி இவன புடிச்சி கதவோட கட்டி போட்டாங்க. கடிச்ச நாய கட்டிப் போட்டாங்கடான்னு சந்தோசம். யந்திரக்கல்ல நகர்த்தி வெச்சி, அம்மாக்கு கம்பிய நான் சொல்றப்ப ஆட்டாம இப்படி பிடிக்கணும்னு காண்பிச்சி, பம்ப் ஸ்டவ்ல தாளிக்கிற கரண்டிய வெச்சி அதில ஈயத்த போட்டு காய்ச்சிட்டிருந்தாங்க. நாமதான் கலாய் பூசுறவன் அப்ரசன்டியாச்சா. கல்லுல ஈயம் ஒட்டாதுப்பான்னு சொன்னா யாரு கேக்குறா? அவரு பாட்டுக்கு உருக்குனாரு. ஊத்தினாரு. கொஞ்ச நேரத்துல அம்மா ஒரு ஆட்டு ஆட்டி பார்க்க லாலிபாப் மாதிரி வந்துடுச்சி. சொன்னேன்லனு கெக்கெக்கேன்னு சிரிக்க, ஆற முன்னாடி ஏன் எடுத்தன்னு அம்மாவை திட்றாங்க. திரும்ப உடைச்சி திரும்ப உருக்கி ஊத்த, ஆறலைன்னு ஏன் திட்டு விழணும்னு அம்மா ஒரு டம்ளர் தண்ணிய ஊத்தினாலும் திரும்ப லாலி பாப்.

சிரிச்ச சிரிப்பில மனுசன் கொலவெறியாய்ட்டாரு. வந்துது வினை எனக்கு. டேய். தெருவில தார்ரோடு போட்டிருக்கான்ல. அதில சின்ன சின்ன கல்லா கொஞ்சம் பொறுக்கியாடான்னாரு. மனுசன் ஈயத்துல காங்கிரீட் போடுறாராமா. ஓடிப்போய் பொறுக்கியாந்து குடுத்தேன். கம்பிய நட்டு, சுத்தியும் பொடி கல்ல போட்டு, அசையாம புடிக்க சொல்லிட்டு ஈயத்த உருக்கி ஊத்துனாரு. டும்முன்னு ஒரு சத்தம். வெளிச்சம் காணோம். யம்மா பப்பரப்பேன்னு விளுந்து கிடக்கு. அப்பாக்கு ஒரு கண்ண காணோம். குண்டு பல்பில பேப்பர் ஒட்டி மறைச்சா மாதிரி இருக்கு. கட்டிவெச்ச நாப்பய வீல்னு அலறி அழுறான். எட்டு வயசுப்பய எதுக்குன்னு தான் சிரிக்கிறது. விஷயம் என்னன்னா முதல்ல ஊத்தின தண்ணி குழிக்குள்ள இருந்திருக்கு. சூடா ஈயம் விழவும் வெடிச்சி அப்பாவோட கண்ணாடி, குண்டுபல்பு எல்லாத்துக்கும் கலாய் பூசிடுச்சி.

பயபுள்ள தெய்ய தெய்யன்னு அலற்றானே கைய கைய பார்த்துன்டுன்னு ஓடிப் போய் பார்த்தா கை, தலையெல்லாம் ஈயம். பக்கத்துல இருந்த எங்களுக்கெல்லம் ஒன்னும் ஆகல. அவன் எங்கயோ இருக்கான். கணிசமா ஈயம் தலைல போய் விழ சூட்டில கைய வெச்சி தொடைச்சிட்டான். நானும் அக்காவுமா தூக்கிட்டு பக்கத்து ஆசுபத்திரிக்கு ஓட டாக்டர் இத கொலகேசா மாத்தப் பாக்குறாரு. ஈயம் எப்படி வந்திச்சி? புல்லட் மாதிரியாச்சே. அவன் தொடைக்கலன்னா மண்டைய பொத்துகிட்டு போயிருக்கும். பெரியவங்க எங்க? போலீசுக்கு சொல்லணும்னு. ஆர்மி ட்ரெஸ்ல பார்த்த அப்பாவ கைதி ட்ரெஸ்ல கற்பனை பண்ணி பார்க்க முடியுமா? பதறி அடிச்சி பாதில வந்தவர மடக்கி டாக்டரு போலிசுக்கு சொல்லணுங்கிறாருன்னு அழ அவரு அப்படியே ஸ்டன்னாயிட்டாரு.

அதுக்குள்ள அம்மா போய், கலாய் பூசுற இடத்தில நிக்கிறப்ப ஆயிடுத்துன்னு கதைவிட்டு, அப்பாரு ஊருக்கு போயிட்டாருன்னு புளுகி, அம்மாவ பார்த்ததில பய புள்ள ஓவரா அலறுனத வலி தாங்கலைன்னு நினைச்சி டாக்டர் வைத்தியம் பார்த்தாங்க. பயலுக்கு 40 வயசு வரைக்கும் அந்த இடம் வட்டமா வழுக்கையாவே நின்னுபோச்சு. அப்புறம் வளந்துச்சான்னு கேக்கிறீங்களா? இல்லைங்க. மொத்தமா வழுக்கையாய்ட்டான்.