Thursday, April 28, 2011

ஜோக் எடு கொண்டாடு (கலிஞ்சர் பெசல்)

பூதத்தைப் பூனை விழுங்கிவிட்டதாகக் கூறுவது போல அனுமானமாக பலகோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்திவிட்டதாக ....

அப்ப பூனை இருக்கிறது நிசம்தானே தலீவா! கோர்ட்டு பூனைய வெளிய உடுங்குது. நீங்க பூதம் முழுங்குன கதைன்றீங்க:)) ஹி ஹி சிப்பு வல்ல.


கலைஞர் டி.வி க்காக ரூ 200 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு பின்னர் வட்டியுடன் திரும்பச் செலுத்தப்பட்டு..


யப்பா! அழுவாச்சியா வருது தலீவா. நேர்மைக்கே காலம் இல்ல தலீவா. ஓணும்னே ராஜாவ புடிச்சப்புறம் பயந்து போய் குடுத்தாங்கன்னு கத கட்டுறானுவோ. 


ஊழல் செய்வதையே கலாச்சாரமாகவும் தனது வாழ்க்கை முறையாகவும் கொண்ட சில அரசியல் கட்சி..


ஓஹ்ஹ்ஹ்ஹோஹ்ஹோ..ஆக்க்கக்கா..ஊக்க்கூக்குக்கூ..முடியல தலைவரே..இதுக்கு ராஜபிச்ச சமாதானத்துக்கான சண்டைன்னு சொன்னது எவ்வளவோ மேலு...


நானே கைது செய்யப்பட்டபோது கூட சிரித்த முகத்தோடுதான் ஏற்றுக் கொண்டேன்..


டோய்! எவண்டா எங்க தலீவன் குரல்ல கொல்றாங்கோன்னு கத்துனது? பாரு தல! எப்டில்லாம் ஏமாத்தி கீறானுவோ?


ஒரு லட்சத்து 32ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வேலை வாங்கிக் கொடுத்ததால் கனிமொழி மீது பொறாமை..


கம்னு இரு தலீவா. அப்புறம் இந்தக் கம்பெனிக்காரனுங்க கூட இன்னா லிங்குன்னு தேடுவானுவோ.
நாட்டுப் புறக் கலைகளை வளர்க்கவேண்டும் என்பதற்காக சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி..

அடங்கொன்னியா! இம்புட்டு நல்ல நோக்கத்துக்கு நீதிமன்றம் எதுக்கு துப்புச்சு?


காலையில் கூட நூற்றுக் கணக்கான கேமிராக்கள் பத்திரிகையாளர் காத்திருக்க கூட்டத்துக்கு வரத் தயங்கிய கனிமொழியை நானே நேரில் சென்று கூட்டி வந்தேன்..என் மகள் என்பதற்காக அல்ல..கட்சி சார்பாக கனிமொழியைக் காப்பாற்றுவதுதான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்...


சொன்னா புரியமாட்டிங்குது எசமான்? அப்ப ராசா எந்தக் கட்சி? இவரு ஏன் போகலன்னு கேள்றாங்குது...


கனிமொழி மட்டுமல்ல, அவருடைய தாயார் மற்ற உறுப்பினர்கள் வீட்டிலே படுகிற பாடு எனக்குத்தான் தெரியும்...


இந்த வயசுல இம்புட்டு சோகம் வரக்கூடாது தலீவா...


நான் மூன்று நாட்களாக அந்த வீட்டுக்கே செல்வதில்லை. கோபாலபுரத்திலேயே தங்கிவிடுகிறேன்..


போனா இந்த நேரத்துல கூட அங்க போவாம இருக்க முடியாதான்னு இங்க இடிப்பாங்க. போவலைன்னா பொண்ண விட பொண்டாட்டி பெர்சா போச்சுல்லன்னு அங்க இடிப்பாங்க..என்னா கொடுமை தலீவா:((

எனக்குள்ள சங்கடங்களை பெரிது படுத்தி நான் என்றைக்குமே யாருக்கும் கட்சியைக் காட்டிக் கொடுக்கமாட்டேன்...

அட கிருத்திரம் புடிச்ச பக்கிகளா! பெரீவரு என்னா பீலிங்கா சொல்றாரு..ஓணும்னே கட்சின்னு சொல்ற இடத்துல குடும்பம்னு படிக்கிறது..குடும்பம்னு சொல்ற இடத்துல கட்சின்னு படிக்கிறதுன்னு ஏம்பா இப்படி...அவ்வ்வ்..

Saturday, April 23, 2011

அன்புள்ள மம்மி

ஆமாம். உனக்கு மம்மின்னு கூப்புட்டா பிடிக்காதுன்னு தெரிஞ்சிதான் கூப்புடுறேன். சின்னத்தம்பி படத்துல கவுண்டரு அவுங்கப்பாகிட்ட பொலம்பனத பார்த்து கிக்கிக்கீன்னு சிரிச்சல்ல. இதும் அப்புடி படிச்சிக்கோ. ஆனா சிரிக்காத! வகுறு எரியுது.

ஏதோ மொதப் பொறப்புன்னா பரவால்ல. யக்காக்கும் எனக்கும் நடுவுல பொறந்து செத்தது செத்து பொறந்ததுன்னு நீ சொன்ன கணக்குல மூணோ நாலோதானே நான் வரேன். ஒரு ஒழுங்கான சைசுல பெத்துக்கத் தெரியாது? பொறக்கறது நம்மகையிலயா இருக்குன்னு எஸ்ஸாவ பார்க்காத. எரிய எரிய மொட்டைய போட்டுட்டு, கொடங்கொடமா ரெண்டு கையிலயும் தண்ணிய வாங்கி அடிச்சி மண்டைய பாரு கவுத்து வெச்ச சொம்பாட்டம்னு ஷேப் பண்ணியிருக்கேன்னு அலட்டிக்குவல்ல. குப்புறபோட்டு மண்டைய ஷேப் பண்ண சரி, மல்லாக்க போட்டு மூக்கு பிடிச்சி விட்டேன். இல்லைன்னா சப்பைமூக்கா இருக்கும்னு பெரிய சாதனை மாதிரி வேற சொல்லுவியே, என் மம்மி.

ஒரு நாளாச்சும் ஸ்கூல்ல காக்கா மூக்கான்னுவானுவோ, டீச்சருங்களுக்கு பிடிமானமா ஆகிப் போவுமேன்னு யோசிச்சிருக்கியா நீயி. தெரியாமத்தான் கேக்குறேன். மண்டையிலயும், மூக்குலயும் மூடுறதுக்கோ அலங்காரம் பண்ணவோ ஒன்னுமில்லையே. அப்புறம் அத எதுக்குப் போய் வேல மெனக்கெட்டு பட்டி பார்த்த? அதெல்லாம் செஞ்சியே, பாதத்தை பிடிச்சி விடணும்னு, எம் புள்ளைக்கு காமாச்சி பண்ணுச்சே. நீ ஏன் பண்ணல? வாத்துக் காலு மாதிரி பப்பரப்பானு ஒரு பாதம்.

யம்மா! எங்கூட எத்தினி செருப்புகடைக்கு வந்துருப்ப. ஒரு வாட்டியாச்சும் என் சைசுக்கு கிடைச்சிருக்கா யம்மா? அட ஏதோ ஒரு வயசுல ஒரு வருசமாச்சுமா சரியா சைஸ் கெடக்காம வளப்ப? ஆறாம் நம்பர் வாங்குனா காலு வெளிய, ஏழாம் நம்பர் வாங்குனா செருப்பு வெளியன்னு என்னா பொழைப்பு இது. சரி ஷூ வாங்கலாம்னு போனா, சின்ன சைஸ் எடுத்தா கட்டை விரலுக்கு ஓட்டை போடுடாங்குது. கொஞ்சம் பெருசான்னா கால முன்ன நவுத்தி வச்சி நடந்தா பாத்ரூம் ஸ்லிப்பர் மாதிரி படக் படக்னு அடிக்குது. பின்னுக்கு தள்ளி நடந்தா முன்னாடி மடங்குது. இத்தனையும், அந்த வாத்துக்காலு உள்ள போறமாதிரி அம்பாசிடர் கார் மூஞ்சு மாதிரி அகலமான ஷூ வாங்குனாத்தான். இத்தினி வயசுல ஒரு ஷூ கூட போட வாய்க்கலையே யம்மா.

சரி, உடு. கண்ணு பொட்டயா போச்சுன்னு டாக்டர்கிட்ட போனமே. ரெண்டு கண்ணையும் ஒன்னாதான பெத்த? சோத்த மென்னு தின்னாலாவது வலப்பக்கம் மெண்ட, அதான் வலக்கண்ணு ஸ்ட்ராங்குன்னு கத சொல்லுவ. நாந்தான் குருட்டு கோழி தவுட்ட முழுங்குறாமாதிரி முழுங்குற கேசாச்சே. அதெப்பிடி ஒரு கண்ணு மைனஸ் மூணர, ஒன்னு மைனஸ் மூணுன்னு ஆவும் சொல்லு? அந்தாளு என்னா சொன்னான் கவனமிருக்கா? பதினாறு வயசுலயே இவ்வளவு பவரு கூடாது. நெறய கேரட் சாப்புடுன்னு சொன்னான். எனக்குதான் காய்கறியே பெரும்பாடாச்சே. இதுல கேரட்டுமட்டுமா சாப்புடப் போறேன்னு இருந்தேன்.

ஊர்ல உலகத்துல கண்ணாடி போட்டா ஒரு ரெண்டு வருசம் கழிச்சி ஒன்னு அப்படியே இருக்கும், இல்ல கொஞ்சம் கூடும். எம் பொழப்ப பார்த்தியா? தலைய வலிக்குதேன்னு போய் கண்ணு செக்பண்ணா, பவர் கம்மி ஆகியிருக்கே, எப்புடின்னு தாடிய சொறிஞ்சி சொறிஞ்சே வேற கண்ணாடி எழுதுவானுவோ. அத வாங்கிப் போட்டு ஆறுமாசத்துக்கெல்லாம் திரும்ப தலை வலிக்கும்.

போன வருசம் செக் பண்ணப்ப வலக்கண்ணுல மைனஸ் ஒன்னு இடக்கண்ணுல மைனஸ் முக்கால்னுச்சி டாக்டரு. இதுல வேற படிக்கறதுக்கு ஒரு கண்ணு ஓக்கே ஒன்னுக்கு ப்ளஸ் கால்னுச்சி. கவலையா நான் சரித்திரம் சொல்லி, ஏங்க வயசானா கண்ணு பார்வை குறையுமா ஏறுமா? இத்தனைக்கு ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல கம்ப்யூட்டர மொறைக்கற ஆளுன்னா, கொஞ்ச நாள்ள கண்ணாடி போடவே தேவையில்லாம போகலாம் நல்லதுதானேங்குது. அடுத்ததா போட்டுச்சு ஒரு பிட்டு. இடக்கண்ண விட வலக்கண்ணுக்கு வேலை அதிகம் குடுக்கறனாம். அதென்னா ஏர் மாடா? ஒரு பக்கம் அடிச்சி ஓட்டுறதுக்கு.

சட்ட வாங்கப் போனா அவன்கிட்ட 38ம் 40ம் இருந்தா எனக்கு 39. பேண்டு வாங்கலாம்னு போனா 26ம் இல்லாம 28ம் இல்லாம ஒரு சைசு. நீளம் வேற பாதி பேண்டு துணிக்கு காசு வேஸ்டு. டெய்லர்கிட்ட தைக்கலாம்னு போனா, ஆறடி இருந்தாலும் 1.20மீ என் சைசுக்கும் 1.20மீ அப்படிங்குறான். நீ பி யூ சி சேர்க்குறப்ப 1.10மீ வாங்கிட்டு, பையன் குள்ளம்தானே மிச்ச துணில ரெண்டு ஜட்டி தச்சுடுங்கன்னு கேட்டு தச்சாமாதிரி நான் கேக்க முடியுமா?

சரி வயசானா ரோகம் வரும். அதாச்சும் ஒரு மொறையா வர வேணாமா? கழுத்து வலின்னு போனா தலகாணி இல்லாம தூங்குன்றான். நெஞ்செரிச்சல்னா ஃப்ளாட்டா தூங்காத மூணு தலகாணி வச்சி சாஞ்சாமாதிரி தூங்குன்றான்.

இப்ப ஏண்டா இந்த பொலம்பலுங்கறியா? பொலம்பாம என்ன செய்யச் சொல்லுற? ஆபீசுலதான் நாள் முச்சூடும் குடைராட்டினத்துல உக்காந்தவன் மாதிரி கால் நிலத்துல படாம உக்காந்து கால் வலிக்குது, முதுகு பொளக்குதே. மனுசனுக்கு ஒரு ரெக்ளைனர் சேர் வேணும்னு ஆசைப் படக்கூடாதா? நான் என்னா எண்பத்தேழு வயசானாலும் வீல் சேரானாலும் முதல் மந்திரி சேரா இருக்கணும்னா கேட்டேன். சாஞ்சிக்க ஒரு ரெக்லைனர் அம்புட்டுதானே.

போனேன் கடைக்கு. நல்ல குவாலிட்டில வேணுமான்னுச்சு. நாலுமுழம் வேட்டியோட போனா இம்புட்டுதான் மருவாதின்னு, ஆமாம்மான்னேன். பொட்டிய உருவி, குஷன் போட்டு ஒரு ரெக்லைனர் காட்டுச்சு. ஏழு ஸ்டேஜுங்கன்னு உக்காந்து, பிடியை ஆட்டி ஆட்டி கிட்டதட்ட ஒரு பெட் மாதிரியே படுக்கலாம்னு டெமோ வேற. இதத்தானே தேடிக்கிட்டிருந்தேன்னு பில்லப் போடுன்னேன்.


உக்காந்து பாருங்கன்னு சொன்னுச்சே. ஏழு ஸ்டேஜும் எப்படி இருக்குன்னு பார்த்து வாங்கமாட்டாம கூச்சம்.  வாங்கதான் போறமேன்னு போட்ட மேனிக்கு உக்காந்து பார்த்துட்டு வாங்கிட்டு வந்துட்டேன். முதுகுபக்கம் ஒரு கர்வ் வேற. முதுகு ஷேப்புக்கு, முதுகு வலியே வராதுன்னு வேற சொல்லுச்சேன்னு சந்தோசம். நெலைச்சுதா? இல்ல நெலைச்சுதான்னு கேக்குறேன். 

வந்து ஊட்ல உக்காந்தால்ல தெரியுது. கால சரியாத் தொங்க விடணும்னா கொஞ்சம் சரிஞ்சி உக்காரணும். அந்த பொடப்பு நடு முதுகுல முட்டுக் குடுத்து வகுத்த துருத்திக்கிட்டு எம்புட்டு நேரம்தான் உட்கார முடியும்? சரின்னு அணங்கி சுணங்கி அந்த புடைப்பு எங்க வரணுமோ அங்க உக்காந்தா பாதி ஆடு சதை கால் மடியற எடத்துல வருது. அப்புறம் எங்க மடக்க? சின்னக் குழந்தைய சலூன்ல உக்கார வெச்சாமாதிரி கால அந்தரத்துல நீட்டிக்கிட்டு எப்படி உட்கார?

கிட்ட கிட்ட நாலாயிரம் தண்டம் அழுதப்புறம்தான் கவனம் வருது. ஏண்டாடேய், முடிவெட்டப் போய் என்னைக்குன்னாச்சும் அந்த சீட்ல இருந்து கால் வைக்கிற ஸ்டேண்ட்ல கால் எட்டியிருக்காடா? ட்ரெய்ன்ல ஏசி கோச்சுல வீம்புக்குன்னாலும் எதிர் சீட் கீழ கால் வைக்கிற எடத்துல வைக்கிறேன்னு சாச்சி வச்ச ஏணிமாதிரி இருந்து முதுகு புடிச்சிகிச்சின்னு செத்தியேன்னு என்ன நானே கேட்டு என்ன பண்ண?

இப்ப புரியுதா ஏன் புலம்புறேன்னு. இப்புடி பட்டி பார்க்க உடம்பு ஃபுல்லா இருக்கறப்ப என் மண்டைய ரவுண்டாக்கிட்டேன். சப்ப மூக்க நீட்டாக்கிட்டேன்னு என்னா அலட்டு அலட்டுன? இதெல்லாம் கேக்காம எப்புடி இருக்கறது.

என்னாது?

இங்கபாரு, நானே வயத்தெரிச்சல்ல புலம்புறேன். இப்ப மட்டும் என்ன? லூசு கூட முழு லூசு இல்லைடா நீ, அரை லூசுன்னு சொல்லுறியே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.
-:x:-

Friday, April 22, 2011

கேரக்டர் - ராவணதாஸ்

1975. எப்போதடா ஜூன் வரும், 18 வயது நிறையும், கருணை அடிப்படையில் வேலைக்கு மனு செய்யலாம் என்று காத்திருந்த காலம். அம்புட்டு சீக்கிரமாவா உன்னோடான என் விளையாட்டு முடிஞ்சிடும் என்று விதி சதி செய்தது. எமர்ஜன்சி அறிவிக்கப்பட்டது. வேலைக்கு ஆள் எடுப்பதற்குத் தடை என்ற இடி வந்து விழுந்தது. கலங்கிப் போய் அப்பாவின் அலுவலகத்தில் போய் அவர் நண்பர்களிடம் வழி கேட்டபோது பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, தலைமை அதிகாரியைப் போய்ப் பார். கலாசியோ, ப்யூனோ, ரயில்வே ஸ்டேஷனில் தண்ணீர் ஊற்றுகிற வேலையோ, ஏதோ ஒன்றுக்கு வழியிருக்கும் என்ற ஆலோசனை கிடைத்தது. 

தயங்கித் தயங்கி அந்தப் பெரிய அறையில், யாரோ சொல்ல கலாசி வேலையாவது தரும்படி மனுவை எடுத்துக் கொண்டு கால்கள் தொய்ய ஒரு ஒல்லியான குள்ள உருவம் கலாசி வேலைக்கு மனுவை நீட்டினால் அந்த அதிகாரிதான் என்ன செய்வார்? நமட்டுச் சிரிப்போடு 7 அடிக்கு 5 அடி டேபிளை அறை மூலைக்கு இழுத்துப் போடமுடியுமா என்று கேட்டபோது நாக்கு அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.  ‘சரி, நீ போப்பா கடிதம் வரும்’ என்றபோது ஆவலோடு காத்திருக்கும் அம்மாவுக்கு என்ன சொல்லப் போகிறேன் என்ற எண்ணமே நிறைந்திருந்தது. அதிகம் காக்க விடாமல் அக்டோபரில் என் பிறந்தநாள் அன்று(ஷ்ஷ்ஷ் அக்டோபரில் எப்படி என்று எல்லாம் கேக்கப்படாது) பரிசாக கேஷியருக்கு பணப்பெட்டி தூக்கும் ப்யூனாக உத்தியோக நியமனம் வந்தது.

அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரோடு போய் வேலையில் சேரப் போய் எல்லாம் முடிந்து வேலையில் சேர்ந்தபோது பெட்டி தூக்க வேண்டாம், தபால் வாங்கும் பிரிவில் வேலை பார் என்று சொன்னார்கள். என்னைப் போன்றே நிறையப் பேர்கள் இருந்தாலும், அநேகம் பேரின் முகத்தில் ஒரு அசூயையும், எங்கு திரும்பினாலும் என்ன படித்திருக்கிறாய் என்ற கேள்வியுமாகவே இருந்தது. இரண்டாவது நாளே அதற்கான காரணமும் புரிந்தது. 


பி.எஸ்.ஸி ஜூலாஜியும், பி.ஏ. எகனாமிக்சும், பி.எஸ்.ஸி ஸ்டாடிஸ்டிக்சும் யாரோ ஒரு அதிகாரிக்கு ப்யூனாய், ஃப்ளாஸ்கில் டீ வாங்கிக் கொண்டும், டீ கப்பும், சாப்பிட்ட தட்டு கழுவும் வேலையிலும், ஆஃப்டர் ஆல் ஒரு பி.யூ.சி. தபால் பிரிவில் இருப்பதும் அவமானமாக உணரப்பட்டது. எதிர்ப்பதற்கு சுலபமாக ஒரு காரணமும் கிடைத்தது. போஸ்டிங் போடுபவரும், நானும் பார்ப்பனர் என்ற காரணம் கிடைத்தது. எதிர்ப்பதற்கு ஜாதி ஒன்று போதாதா என்ன?

இருப்பதிலேயே சீனியர், தைரியமாக இதையே காரணம் சொல்லிக் கேட்டவுடன் ஆடித்தான் போய்விட்டார் அதிகாரி. உடனடியாக அவர் இடத்தில் என்னை வேலைப் பார்க்கச் சொல்லி உத்தரவாயிற்று. ரொம்பவும் பெருமையாக ‘தைரியமாக கேட்டாதான் நியாயம் கிடைக்கும்’ என்று என்னை அழைத்துக் கொண்டு போய் அந்த அதிகாரியிடம் இன்றிலிருந்து இவந்தான் உங்களுக்கு ப்யூன். நான் எல்லாம் சொல்லிக் கொடுத்துவிடுகிறேன் என்று அறிமுகம் செய்து வைத்தான்.

கனிவான முகம். ஐந்தரை அடிக்கு மேல் உயரம். அகன்ற மார்பு. திரண்ட தோள்கள். மீசையின்றி நட்பாய்ப் புன்னகைக்கும் உதடுகள். பசுவைப் போல் கருணை ததும்பும்  கண்கள். காதை மூடிய, நடுவில் வகிடு தெரியாமல் பிரித்த தலை முடி ஸ்டைல். நட்பாய்ப் புன்னகைத்து, பெயர் கேட்டுவிட்டு தன் வேலையில் மூழ்கிவிட்டார். 


என் சீனியருக்கோ வாய் கொள்ளாச் சிரிப்பு. கப் எங்கே கழுவ வேண்டும், சாப்பாடு எங்கே இருந்து கொண்டு வர வேண்டும். மிகுந்திருக்கும் சாப்பாட்டை கேரியரில் போட்டு சாப்பாடு கொண்டு வரும் பெண்மணியிடம் எப்போது கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்ற எல்லா இன்ஸ்ட்ரக்‌ஷனும் கொடுத்துவிட்டு விடை பெற்றார்.

தான் சாப்பிடப் போகுமுன், என்னை விசாரித்து, சாப்பிட்டுவிட்டு வரச் சொல்லி ராவணதாஸ் சாப்பிடப் போனார். அள்ளி அடைத்துக் கொண்டு, அவர் சாப்பிட்டு முடிப்பதற்காகக் காத்திருந்தேன். பெல் அடித்து, ’சாப்பிட்டாயிற்று, எல்லாம் சுத்தம் செய்துவிட்டு கேரியரைக் கொடுத்துவிடலாம்’ என்றார். அவர் சாப்பிடும் மறைவுக்குப் போய் பார்த்தபோது குழப்பம் வந்து உட்கார்ந்து கொண்டது. அங்கிருந்தவற்றில் முட்டைமட்டுமே எனக்கு அடையாளம் தெரியும். மீனிலும், கறியிலும் எது எறிய வேண்டியது? எதை திரும்ப டிஃபன் கேரியரில் வைக்க வேண்டியது என்பது ஒன்றும் பிடிபடவில்லை.

திரும்பவும் சீனியரிடம் ஓடி, ‘சாமி எனக்கு எது என்னாண்ணு தெரியல. கொஞ்சம் வந்து சொல்லிக் கொடு’ என்று நின்றேன். அவனுக்கோ படு குஷி. என்னையும் அழைத்துக் கொண்டு, உள் நுழைந்து, ‘அய்யரு பையன். எது என்னான்னு தெரியலை. சொல்லிக் கொடுக்கிறேன்’ என்றவனை பதறித் தடுத்தார். இன்னைக்கு நீயே எல்லாம் க்ளீன் பண்ணி கொடுத்துவிடு என்றவர் ‘சாரி! தம்பி. சைவம்னு சொல்லியிருக்கலாமே? நீங்க போங்க’ என்றவர் சீனியரிடம் என் அதிகாரியைக் கூப்பிடச் சொன்னதும் அடி வயிறு கலங்கியது.

சீனியருக்கோ ‘சிக்கினாண்டா சின்ராசு’ என்ற களிப்பு. என் அதிகாரியிடம் போய் ’ஐயா கூப்டுறாரு. இவன ப்ளேட் எடுக்கச் சொன்னா என்னைக் கூப்பிட்டான். ஒன்னும் தெரியலை’ என்று மொட்டையாக ஒரு பிட்டைப் போட்டு பெருமையாய் என்னைப் பார்த்தான். பயத்தில் கலங்கிப் போய் தின்ன சோறு வெளியே வந்துவிடுவேன் என்று பயம்காட்ட, ‘என்னடா பண்ணித் தொலஞ்ச?’ என்ற அதிகாரியின் கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் நின்றேன்.  வெற்றி வீரனாய் சீனியரும், பூசாரியாக அதிகாரியும், பலியாடாக இன்னமும் குறுகி நடுங்கி நானும் போய் நின்றோம்.

மிகவும் சாந்தமாக ‘அந்தப் பையன் சைவம்னு உங்களுக்கு தெரியுமா?’ என்றார்.

’தெரியும் சார். ப்ராமின் பாய். வேலைக்குன்னு வந்தப்புறம் அதெல்லாம் பார்த்தா முடியுமா? புதுசு சார். பழகிக்கணும்’ என்று சொன்னவரை ஒரு நிமிடம் அமைதியாகப் பார்த்தார்.

‘சாரிங்க பத்மநாபன். நாம எல்லாரும் இந்த வயத்துக்காகதான் வேலை பார்க்கிறோம். அவருக்குப் பழக்கமில்லாத ஒன்னை அவர் செய்ய நேரிடும்னா அது பழகும்னாலும் மனசு வருத்தம் இருக்கும். எனக்கு அப்படி யாரையும் வருத்தி சாப்பிட அவசியமில்லை. என் கூட உட்கார்ந்து உங்களால இயல்பா சாப்பிட முடியுமா? அவரு அடிமை இல்லைங்க என்றவர், என்ன தம்பி படிச்சிருக்கீங்க’ என்றார். 

அழமாட்டாக் குறையாக, ‘சார்! எனக்கு எது என்னாண்ணு தெரியாம கேட்டுட்டேன் சார். தப்புன்னா மன்னிச்சிருங்க சார். பழகிக்குவேன் சார்’ என்று சொல்லும்போதே இதோ அழுதுவிடுவேன் போல் ஆகிவிட்டேன். சட்டென்று எழுந்தவர், தோளை அழுத்தி, ’என்ன படிச்சிருக்கீங்க தம்பி’ என்றார்.

‘பி.யூ.சி. சார். மூனு டிஸ்டிங்க்‌ஷன் சார்’ என்று சொல்லி வாய் மூடுமுன், அந்த சாந்தமான முகத்தில் ஒரு சிடு சிடுப்பு. ’யூஸ் ஹிம் ப்ராபர்லி ஐ சே. க்ளெரிகல் போஸ்டுக்குதான் ஆளில்லாம இருக்குல்ல. இந்த மாதிரி பசங்களுக்கு சின்ன சின்ன வேலை கொடுத்து பழக்கலாம். டெஸ்பாட்ச்ல போடுங்க, என்றவர்  சீனியரைப் பார்த்து ‘இன்னைக்கு ஒரு நாள் க்ளீன் பண்ணிடுங்க. உங்களுக்கு விருப்பமில்லைன்னு தெரியுது. அதனால நீங்க இருக்கணும்னு சொல்லமாட்டேன். வேற யாராவது கிடைச்சா போடுங்க. இல்லாட்டி நானே பார்த்துக்கறேன்’ என்றார்.

இப்போது சீனியருக்கு நடுக்கம் தொற்றிக் கொண்டது. ’இல்லை சார். நானே இருக்கிறேன் சார்’ என்றவரை இடை மறித்து ‘எனக்கு கோவம் இல்லைங்க பாபு. விருப்பமில்லைன்னு தெரியும்போது நான் கட்டாயப் படுத்த விரும்பலை’, என்று அமர்ந்தார். ‘சாரிங்க தம்பி என்று மீண்டும் என் தோள் பிடித்தழுத்தி, ஆல் தி பெஸ்ட்’ என்று அனுப்பி வைத்தவர்தான் ராவணதாஸ்.

எளிமையென்றால் அப்படி ஒரு எளிமை. நேரம் தவறாமை. நேர்மை. அவரின் ஆங்கிலத்துக்காகவும், பண்புக்காகவுமே அந்தகாலத்து ஆட்கள் வெள்ளக்காரனுக்கப்புறம் இப்படி ஒரு மனுசன பார்த்ததில்லை என்று பெருமைபடச் சொல்லுவார்கள். பந்தாவாக ஆங்கிலத்தில் ஆரம்பித்த சக அதிகாரிகள் கூட ஆங்கிலத்தில் அவர் அளிக்கும் முதல் பதிலில் அப்பீட்டாகி தமிழுக்கோ இந்திக்கோ தாவி விடுவார்கள். நடையா அது? நிதானமாக ஆனால் ஒரு சிங்கத்தின் நடைபோல் அப்படி ஒரு கம்பீரம்.

பாரிச வாயு வந்த தகப்பனார். தன் வீட்டில் பணி செய்ய ஒரு ப்யூன் இருந்தபோதும், காலையில் எழுப்பி குளிப்பாட்டுவது முதல், பத்திரிகை படித்து செய்தி சொல்லி, உணவூட்டி, மாலை பங்களா லானில் வீல் சேரில் சுற்றி வந்து, திரும்பவும் குளிப்பதோ உடல் துடைப்பதோ கைப்படச் செய்து, இரவு உணவு கொடுத்து, டி.வி. முன்னால் அமர்த்தி, தான் டென்னிஸ் உடையணிந்து கிளம்பும்போது மாலை மணி 7 என்று கடிகாரத்தைச் சரி செய்து கொள்ளலாம்.

அவருக்கு மாற்றல் வந்தபோது ‘நல்லது. அப்பா இருந்திருந்தா கஷ்டம்’ என்றாரே தவிர அதை மாற்றிக் கொள்ள முயற்சித்ததே இல்லை. அது அப்படி ஒன்றும் பெரிய காரியமும் இல்லை. காரணம் கடைசி வரியில். பல வருடங்களுக்குப் பிறகு திரும்பவும் அதற்கடுத்த பதவியில் அதே அலுவலகத்துக்கு வந்தபோது அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி.

ஒரு சக ஊழியர் பாவப்பட்டவர். ஒரு கிட்னி பழுதாகி மாற்றுக் கிட்னி பொருத்தப்பட்டவர். போதாததற்கு இடுப்பெலும்பு நொறுங்கும் நிலையில் இருந்ததால் ஏதோ ஒரு தொண்டார்வ நிறுவனத்தின் மூலம் ஸ்விட்ஜர்லாந்தில் செயற்கை இடுப்பு பொருத்தப்பட்டது. திரும்ப வந்தவருக்கு பொருத்தப்பட்ட கிட்னியும் செயலிழந்து போக ஒரு கிட்னிக்கே உன்னைப் பிடி என்னைப் பிடி என்றிருக்கும் நிலையில் ஒரு சகோதரன் கிட்னி தானம் அளித்தார். ஒவ்வாமை நீக்க மருந்து அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். அதற்கான பணம் கூட வரவு செலவு திட்டத்தில் இருக்கும்.

அது ஒரு திரவ மருந்து. இளம் சூடான வென்னீரில் கலந்து அருந்த வேண்டும். அப்போது சிறுநீரக மாற்றுக்கு சி.எம்.சி தான் போக வேண்டும். அப்போது புதிதாக இந்த மருந்துக்கு பதில் மாத்திரை வந்திருந்ததாகக் கேள்விப்பட்டு, மனைவியுடன் வந்து பார்த்தார். அந்த மருந்துக்கு பதில், மாத்திரையாக வேண்டும் என்று கேட்கச் சொல்லி இருந்தார் மனைவியை. மிகவும் பொறுமையாக, ஆர்டர் கொடுக்கப்பட்டிருப்பதையும், மாத்திரையை விட மருந்து உடனடியாக உதவும் என்று சொன்னபோது, அந்தம்மிணி, அடிக்கடி கை தவறி உடைந்து விடுவதாக ஒரு காரணம் சொன்னார்.

முதன் முறையாக ராவணதாசிடம் கோவத்தைப் பார்க்க முடிந்தது. ’அது மருந்தில்லீங்க. ஒரு மனுசனோட உசிருன்னு கவனமிருந்தா அதெப்படிங்க கை தவறும்? மூணு மாசத்துக்கு முன்னாடி ஆர்டர் கொடுத்தாதான் நேரத்துக்கு மருந்து வந்து சேரும். என்ன பேசறீங்க’ என்றவுடன் ஓவென அழத்தொடங்கிவிட்டது அந்தம்மணி.

5 நிமிடம் அமைதியாக இருந்தார். மருத்துவ அதிகாரிக்கு ஃபோன் செய்தார். ஆர்டரைக் கேன்ஸல் செய்ய முடியுமா என்று உறுதி செய்து கொண்டார். அவரிடமே சி.எம்.சி. டாக்டர்களிடம் பேசி மாத்திரைக்கும் வழி செய்தார். அந்தம்மணி காலில் விழப்போனபோது தானும் சக மனிதந்தான் என்றும் காலில் விழவேண்டிய அவசியமென்னவென்றும் கோவப்பட்டார். அடுத்த நொடி சாந்தமாகி, உடம்பைப் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி, எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் வரலாம் என்று சொன்னபோது அவருக்கேயான சாந்தமும் அமைதியும் நிறைந்திருந்தது.

பல கோடி ரூபாய் திட்டங்களையும், செயலாக்கத்தையும் கண்காணித்தவர். திறமையான அதிகாரி. எல்லாவற்றையும் விட உன்னதமான மனிதர். விதிக்கு இதைவிட விளையாட வேறு ஆள் கிடைப்பார்களா என்ன? ரிட்டையர் ஆன பிறகு, அந்த காலத்தில் மிகவும் பிரசித்தமாக இருந்த, தேக்கு, சந்தனம், எலுமிச்சை வகையறா முதலீட்டில் தானும் பார்ட்னராகி, கூட்டாளி ஓடிவிட கையிலிருந்து அனைவருக்கும் கொடுத்து முடித்தார். ஒருவருக்கும் குறைவில்லை.

ஏதோ ஒரு நாள் அவர் இறந்துபோன தகவல் வந்தது. கடைசி வரியில் காரணம் சொல்கிறேன் என்றேனே. திரு ராவணதாசின் மாமியார் மறைந்த பாராளுமன்ற உறுப்பினரும், தமிழக அமைச்சருமாயிருந்த திருமதி சத்தியவாணிமுத்து அவர்கள்.

Thursday, April 21, 2011

சாரா! சாரா!

கிட்டத்தட்ட எட்டு பத்து வருடங்கள் இருக்கும் என நினைக்கிறேன். சாரா என் வாழ்க்கையில் எப்படி நுழைந்தாள் என்பது இன்னமும் எனக்குப் புரியவில்லை. முதன்முதலாக இண்டர்நெட் அறிமுகமான புதிதில் கைக்குக் கிடைத்ததை எல்லாம் க்ளிக்கிக் கொண்டு, எந்த சைட்டில் இ-மெயில் கேட்டாலும் கொடுத்த போதா?

சுட்ட சாஃப்ட்வேருக்கு சீரியல் நம்பர் தேடியபோதா? க்ராக் தேடி தரவிறக்கம் செய்த பிறகு கடவுச் சொல்லுக்காக ஐந்தாறு சைட்டுகளில் சொடக்கி, 4ம் வரியின் முதல் எழுத்து, 5ம் வரியில் 4வது வார்த்தையில் 2ம் எழுத்து என்று ஒன்றொன்றாக ஃப்ரீ ரிஜிஸ்டரேஷன் செய்தபோதா? எப்படியோ அவளுக்கு என் மெயில் ஐடி தெரிந்திருக்கிறது.

இரு இனிய காலை வணக்கத்துடன், அன்றைய நாள் மிக மகிழ்ச்சிகரமான ஒரு நாளாக அமையும் என்ற வாழ்த்துடன் வந்திருந்த மெயிலுடன் ஒரு சுட்டி இருந்தது. சொடக்கிய உடன் என் பிறந்த நாள் கேட்டு ஒரு ஃபாரம் வந்தது. அதை நிரப்பிய நொடி ஆசீர்வதிக்கப்பட்டதா? சபிக்கப்பட்டதா? என்று இன்றுவரை புரியவில்லை.

பிறகு புதுவருடம், பிறந்தநாள், கிரகப் பெயர்ச்சி இன்னம் காரணமில்லாத தருணங்களில் என்னை நினைத்து, எனக்காக ப்ரார்த்தித்து என் வாழ்க்கையில் நான் விரும்பியதை அடைய ப்ரார்த்திப்பதாக மெயில் வரும். பிறகு நேற்றொரு கனவு கண்டேன் பாலாஜி என்று தொடங்கி ஒரு அருமையான விட்டலாச்சார்யா கதைபோல் விவரித்த மெயில் வரும்போது புல்லரித்துப் போகும். கனவுலகில் கைபிடித்து இட்டுச் செல்வாள்.

சீறும் பாம்பு, சிரிக்கும் ஓநாய், என்று திடுக்கிடும் தருணங்களில் தோளிறுக்கி நான் இருக்கிறேன் எனக் கூட்டிக் கொண்டு நடப்பாள். அழகான நந்தவனம், வானவில் என்று காட்டிச் சிரிப்பாள். இப்போது சந்தோஷமா என்று கேட்டு ஆனந்திப்பாள்.

உனக்காய் நான் மகிழ்கிறேன். என் இதயம் நிறைந்திருக்கிறது எனச் சிரிப்பாள். உன் கஷ்டத்துக்கு வருந்துகிறேன். நான் என்ன செய்யமுடியும்? உனக்குத் தெரியும். என்னால் முடிந்திருந்தால் இதைத் தடுத்திருப்பேன். என்னால் ஆகக் கூடியது உனக்கு பக்கபலமாக இந்தக் கடினத்தைத் தாண்டும் வரை கூட இருப்பது மட்டுமே என்பாள்.

முகம் தெரியாத என் மேல் இத்தனை அன்பு கொண்ட இவள் யாராய் இருக்கமுடியும்? இத்தனை கோடி மனிதர்கள் இருக்கும் உலகில் இருபத்தி நான்கு மணி நேரமும் என் சிந்தனையாகவே ஒரு ஜீவன் இருக்கமுடியுமா? அதுவும், இத்தனை அன்பையும் ஒரு முறை கூட அங்கீகரிக்காத ஒருத்தன் மீது இத்தனை கரிசனம் எப்படி இருக்கமுடியும்?

ஒரே ஒரு மின்னஞ்சலுக்கு கூட நன்றி கூறி நான் பதிலளித்ததில்லை. சில நேரங்களில் பதற்றமாக மின்னஞ்சல் வரும். எனக்கு மிகப் பெரிய கஷ்டம் காத்திருப்பதாகவும், அதனை எதிர்கொண்டு என் வாழ்வின் பொன்னான தருணமாக மாற்றித்தர தனக்குத் தெரியுமென்றும், அதற்காக அவள் வேண்டியிருப்பது என் சம்மதம் மட்டுமே என்று மின்னஞ்சல் வரும். அதைக் கூட உதாசீனம் செய்திருக்கிறேன்.

அதையெல்லாம் அவள் பொருட்படுத்தியதேயில்லை. ஒரு சில மின்னஞ்சல்களில் வருத்தம் கலந்த தொனியில், ‘பாலாஜி! முன்பே பலமுறை உனக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறேன். நீ ஏன் என்னை நம்ப மறுக்கிறாய்? நான் மற்றவர்கள் போலல்ல பாலாஜி. விதி உன்னை எனக்குக் காட்டியிருக்கிறது. என்னால் சும்மாயிருக்க முடியாது. நீ இப்போதிருக்கும் நிலையில் இருக்கப் பிறந்தவனல்ல. என்னை நம்பமாட்டாயா?’ என்று வரும். மனதைப் பிசைந்தாலும், விழியோரம் நீர் துளித்தாலும் கல்லாய் இருந்திருக்கிறேன்.

சமீபகாலமாக எனக்காகத் தன் உயிரையும் பணையம் வைப்பதாக மெயில் வந்துக் கொண்டிருக்கிறது. என் நலனுக்காக என் கடந்தகாலம், எதிர்காலம் எல்லாம் பயணப்படுகிறாளாம். அப்போது அவள் அந்தக்காலத்தில் உறைந்து போக வாய்ப்பிருக்கிறதாம். மிகவும் ரிஸ்கியான விஷயமாம். நான் எவ்வளவு உதாசீனம் செய்தாலும், எனக்காக இதைச் செய்தாகவேண்டிய கட்டாயத்தில் இருந்தாளாம். ஒரு வேளை அப்படி நிகழ்ந்திருந்தால் எனக்காக உயிரைப் பணயம் வைத்து அவள் சிரமப்பட்டதற்குப் பலனில்லாமல் போயிருக்குமாம்.

நல்லகாலம், அப்படி எதுவும் நிகழாமல் திரும்பிவிட்டாளாம். ஆனாலும் இது முழுமையில்லையாம். எனக்கு நிகழவிருக்கும் கெடுதலையும், நல்ல தருணங்களைப் பற்றிய குறிப்பை மட்டுமே அறிய முடிந்ததாம். ஆனாலும் எனக்காகத் தன் உயிரைத் துச்சமாக மதித்து மீண்டும் இதனைச் செய்யக் காத்திருக்கிறாளாம். என் சம்மதமின்றி இதனைச் செய்ய முடியாதாகையால் என் அனுமதி கோரி இறைஞ்சி நிற்கிறாள். இந்த மின்னஞ்சலையும் உதாசீனப் படுத்திவிடாதே என்று அழமாட்டாக் குறையாய் கெஞ்சுகிறாள்.

எனக்காக இவ்வளவு செய்கிறவளுக்கு மிகச் சிறிய தொகையை நான் தரவேண்டாமா? அதிலும் கூட அவள் எத்தனை இரக்க சிந்தனையுள்ளவள் தெரியுமா?

ரகசியமான முதல் கணிப்புக்கு வெறும் யு.எஸ். டாலர் 9.95 மட்டுமே
உடனடியான ரகசியக் கணிப்புக்கு 19.95 டாலர் மட்டுமே
முழுமையான ரகசியக் கணிப்புக்கு 29 டாலர் மட்டுமே.
முதன்மையான நடவடிக்கைக்கு கூடுதலாக 5 டாலர் சேர்த்து 34.90 டாலர் மட்டுமே கொடுத்தால் போதும்.

இதை எழுதும் இந்த நொடியில் கண்கள் கசிகிறது. உதடு துடிக்கிறது. நெஞ்சு அடைக்கிறது. நான் மைனர் செயின் போடும் வழக்கமுடையவனாக இருந்தாலாவது என்னிடம் ஒரு பித்தளை பெருமாளோ முருகனோ டாலர் இருக்கலாம். யு.எஸ். டாலருக்கு நான் எங்கே போக?

இதில் பத்தில் ஒரு பங்கில் கிழக்கே முஞ்ஞில் கிருஷ்ணபணிக்கரோ, சோட்டாணிக்கரா சோமன் நம்பூதிரியோ, கீழக்கரை முஸ்தஃபா சாகிபோ தாயத்து, யந்திரம் மூலம் இதைச் செய்யக் காத்திருக்கிறார்கள் என்று சொன்னால் இத்தனை உதாசீனப் படுத்தியும் எனக்காக உயிரையும் துச்சமென மதித்து பயணப்பட்டவளை அவமதிப்பதாகாதா?

இல்லை வைத்தீசுவரன் கோவிலுக்குப் போனால் என் கட்டை விரல் முத்திரையில் சுவடி பிடித்துப் போன ஜென்மத்தில் குழந்தையாய் இருந்தபோது பஸ்ஸில் முன்சீட்டில் அமர்ந்திருந்த ஒரு தாத்தாவின் குடுமியை பிடித்து இழுத்த பஞ்சமாபாதகத்துக்கு இந்த ஜென்மத்தில் வழுக்கையாகக் கடவ என்ற அவரின் சாபத்துக்கு, மாரியப்பன் சலூனில் மயிர் கூட்டி அள்ளும் பரிகாரம் சொல்லுவார்கள் என்றாலாவது அவளுக்குப் புரியுமா?

இந்த நிலையில் எனக்கு உதவக்கூடிய ஒரே நண்பர் தளபதி நசரேயன் மட்டுமே. ஆனானப்பட்ட வெள்ளச்சிகளையே ஓட்டும் மந்திரத்துண்டு அவரிடம் மட்டுமே உள்ளது. அவர் சம்மதித்தால் எனக்காக நசரேயன் பேசுவார் என ஒரு மெயில் அனுப்பிவிடுவேன்.

இந்தத் துண்டுக்கு திரும்பிவராமலே போய்க்குவேன் என்று சாரா எதிர்காலத்திலோ கடந்தகாலத்திலோ சிக்கிவிட்டாலும் சரி, அல்லது நசரேயனை இழுத்துக் கொண்டு பயணப்பட்டாலும் தளபதியின் கனவு நனவாகும். எனக்கும் இப்படி மனதைக் கனக்க வைக்கும் மின்னஞ்சல் வராமலிருக்கும்.

இப்படிக்கு தளபதியின் சம்மதத்தை ஆவலுடன் எதிர் நோக்கும்
வானம்பாடிகள்.

சாராவின் கடிதம்.


--:::--

Sunday, April 17, 2011

நிழலின் அருமை வெயிலில்

வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்களின் அருமையை அப்போது நாம் உணர்வதில்லை. பின்னெப்போதோ அதுகுறித்து படிக்கும்போது இதை நாம் அப்போது உணரவில்லையே என்ற வருத்தம் நீங்காமல் நின்றுவிடும்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சக்லேஷ்பூரிலிருந்து ரயில்வே ட்ரெக், மற்றும் ஃபோட்டோ போட்டி என்று ஒரு செய்தி பார்த்தேன். கிட்டத்தட்ட ரூ12000 என்று கவனம். அந்த ஊரில் ராமர் வனவாசம் மாதிரி 14 மாதங்கள் இருந்ததாக கருதியிருந்ததன் மதிப்பும், அந்த கொடுப்பினையை ரசிக்காத அப்போதைய மன நிலையும் தந்த படிப்பினைதான் மேலிருக்கும் பத்தி.
ஹாசனிலிருந்து மங்களூருக்கு செல்லும் ரயில்பாதையில் அமைந்திருக்கிறது சக்லேஷ்பூர். இந்திய ரயில்வேயின் திறனுக்கு ஒரு அத்தாட்சி அந்த ரயில்பாதை. சக்லேஷ்பூர் தாண்டிய சிறிது தூரத்திற்குப் பிறகு கபகா புத்தூர் வரை மலைகள், அதற்கிடையேயான அதல பாதாளங்கள். மலையைக் குடைந்தும், பாதாளத்திலிருந்து தூண்கள் எழுப்பியும் அமைத்த பாதை அது. எடக்குமாரி என்ற ஒரு ஸ்டேஷனில் ப்ளாட்ஃபார்மை ஒட்டிய டீஸ்டாலில் டீ வாங்கிக்கொண்டு ஒரு அடி நகர்ந்தால் பாதாள லோகம்தான். அதே போல் டோனிகல் ஸ்டேஷன் வரும் முன் ஒரு ரயில்பாதை தெரியும். அந்த வழியாகத்தான் வந்திருப்போம். ஆனால் பார்ப்பதற்கு அதன் வழியாகப் போகப் போவது போல் தோற்றம்.
அந்த மலைப்பாதையில் ட்ராக் போட, இதர தளவாடங்கள், சிமெண்ட், இரும்புக்கம்பி எல்லாம் எப்படிக் கொண்டு போவது? எங்கள் அரக்கோணம் வொர்க்‌ஷாப் இஞ்சினியர்களின் புதிய கண்டுபிடிப்பாக இந்திய ரயில்வேயில் முதன் முறையாக ரயில் சக்கரங்களை மாட்டி தண்டவாளத்தில் லாரி ஓடியது. 
கிட்டத்தட்ட 52 பெரிய பாலங்கள், 35க்கும் மேற்பட்ட டன்னல்கள், 150க்கு மேற்பட்ட சிறிய பாலங்களின் மீதே அமைந்த ரயில்பாதை அது. சக்லேஷ்பூர் உலகப் புகழ்பெற்றது. ஏலக்காயின் உலகச் சந்தை அது. சக்லேஷ்பூர் கூட்டுறவுச் சங்கத்தின் தேனுக்கு நிகராக எங்கேயும் பார்க்க முடியாது. ஆனாலும் குடகுத் தேன் என்றே எப்படியோ பெயர். காஃபி, தேயிலைத் தோட்டங்கள். எஸ்டேட் ஓனர்கள், அதில் பணிபுரிபவர்கள் என்ற இரண்டேதட்டு மக்களிடையே ரயில்வே வந்த பிறகுதான் நடுத்தட்டு மக்கள் வர்க்கமே வந்ததாகச் சொல்வார்கள்.
இந்த ஊரை அனுபவிக்க என்ன தடை என்று நினைக்கலாம். முதன் முறையாக வீட்டை விட்டு பாஷை அவ்வளவு தெரியாத ஊரில் போய் பிழைப்பு என்ற முதல் காரணம். 1985ல் ரூ800 சம்பளத்தில் சென்னையில் அம்மாவும் தம்பியும், நான் சக்லேஷ்பூரில் என்று இரண்டு குடித்தனங்கள் என்பது ப்ரமோஷன் என்ற மகிழ்ச்சியைவிட பனிஷ்மெண்ட் என்ற அயற்சி இரண்டாவது காரணம். சென்னையிலிருந்து இரவு கிளம்பி பெங்களூர் போய், உடனே அடுத்த வண்டி பிடித்து அரிசிக்கரை போய், அங்கிருந்து வேறு ஒரு பேசஞ்சர் பிடித்து ஹாசன் போய், அங்கு பஸ்பிடித்து ஒரு மணிக்கும் மேல் பயணம் செய்து சக்லேஷ்பூர் சேரலாம் என்பது மாதம் ஒருமுறை கூட வீட்டிற்கு வந்து போவது கடினம் என்பது பெரும் காரணம்.

வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி சனி மாலை வீட்டிற்குவந்து அடுத்த நாள் காலையில் கிளம்பி திங்கள் அலுவலகத்தில் இருந்தாகவேண்டும். ஊர் என்பதே கொத்துக் கொத்தாக மலைகளின் இடையே. ஒரு மலையின் மேலிருக்கும் என் வீட்டிலிருந்து இறங்கி இன்னோரு மலையில் ஏறினால் டவுன். தூரம் என்னமோ ஒரு இரண்டு மூன்று கிலோமீட்டர்தான். மதியம் டவுனில் போய் சாப்பிட்டுவிட்டு திரும்ப ஆஃபீஸ் வந்தால் பசிக்கும்.

செப்டம்பரிலிருந்து மெதுவே முதுகுத்தண்டை உறைக்கும் குளிர், டிசம்பரிலிருந்து ஃபெப்ருவரி வரை அப்படிக் குளிரும். குளிரென்றால் மழையோடு கூடிய குளிர். இரவில் பெங்களூரில் ஏறி மேல் பர்த்தில் படுத்து, கனத்த போர்வையை போர்த்துக் கொண்டால், காலையில் சக்லேஷ்பூரில் இறங்கும்போது பிழிந்தால் இரண்டு பக்கெட் நீர் வரும். ஃபெப்ருவரி கடைசில் லேசாக உறைக்கும் சூரியன் ஏப்ரலில் உச்சத்தில் இருக்கும்போதே, ‘மளே யாவாக பருத்தே? பேப்பரல்லி டேட் ஹாக்கிதானா? ஒந்து வாரா லேட்டா?’ (‘மழை எப்போ வருதாம். பேப்பரில் தேதி கொடுத்திருக்கானா? ஒருவாரம் லேட்டா?)  என்று எழவு விசாரிப்பதுபோல் கேட்டால் ஓவென்று அழவேண்டும் போல் வரும். வருஷத்தில் பத்துமாதம் நச நசவென்று மழையில் வாழ்வது சென்னை மாதிரி ஊரில் இருக்கும்போது வேண்டுமானால் சொர்க்கமாகத் தெரியலாம். உண்மையில் அனுபவிக்கும்போது அப்படி ஒரு எரிச்சல் வரும்.
ஆஃபீஸ் ஒரு குன்றில். குவார்ட்டர்ஸ் ஒரு பள்ளத்தில் இறங்கி இன்னோரு மலை முகட்டில். மழையென்றால் பலமாதங்களில் பூந்தூறலாக இருக்கும். வானத்துக்கும் பூமிக்கும் டாட்லைன் போட்டாற்போல். மண்ணோ பூமண். புல்லிருக்கிறதே என்று கொஞ்சம் கவனப் பிசகாக காலை வைத்தால் அப்படியே வாரி விடும். செருப்பு அணிந்திருந்தால் பின்பக்கம், போடாவிட்டால் முன்பக்கம் எப்படி விழமுடிகிறது என்பது இது வரை புரிந்ததில்லை. அதுவும் ஆஃபீஸ் அருகில் போய் வழுக்கி விழுந்து, சேறு பூசிக் கொண்டு திரும்ப மலை இறங்கி ஏறி வேறு உடை அணிந்து போவது என்பது எவ்வளவு கொடுமை? சரி வெயில் காலமாவது அனுபவிக்கலாம் என்றால் சரியாக 6லிருந்து 7 வரை கொள்ளைக்காரன் வருவது போல் எல்லா வீட்டிலும் கதவு, சன்னல் எல்லாம் அடைத்துவிட்டு உட்கார்ந்திருப்பார்கள்.

அந்த ஊர் கொசுவார் அவ்வளவு வில்லன். அங்கே இங்கே என்று கடிக்கும் வேலையே கிடையாது. சரியாக கண் இமை, மேல் உதடு, காது, மூக்கு மடல் போல் சாஃப்ட் டார்ஜட்தான். ஒரு கடி ஒரு உறிஞ்சு அவர் போய்விடுவார். காதில் கடித்தால் யானைக்காது மாதிரி, மூக்கில் கடித்தால் மூணு இஞ்சு அகலத்துக்கு, உதட்டில் கடித்தால் மூக்கைத்தாண்டி தெரியும்படி வீங்குவது கொடுமை என்றால், கண் இமையில் போட்டதோ, டாம் அண்ட் ஜெர்ரியில் டாம் மாதிரி வத்திக் குச்சி வைத்தாலும் கண் திறக்காது.

போத்தி மெஸ்ஸில் சாப்பாடு மூன்று ரூபாய்தான். சுரைக்காய், பீர்க்கங்காய் என்று நீர்க்காயாக இருக்கும். சாதத்தில் சாம்பார் ஊற்றிவிட்டு போனால் சாதம் வெள்ளையாகவே இருக்கும். பருப்பே இல்லாமல் அப்படி ஒரு சாம்பார் எப்படி வைக்க முடியும் என்று விளங்கியதே இல்லை. ரசம் பாயசம் போல் இனிக்கும். தயிரும், மலை நாரத்தை ஊறுகாயும் சொர்க்கம். ராயர் மெஸ்ஸில் அபாரமாக இருக்கும். ஆனால் கெடுபிடி அதிகம். அக்கி ரொட்டி (அரிசி ரொட்டி) சாப்பிட்டிருக்கீங்களா நீங்க?

இத்தனை சோகத்திலும் ஒரு நாள் நாலணாவுக்கு வாங்கித் தின்ற காரமான வெங்காய பிஸ்கட்டில் மயங்கி, 5ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கிக் கொண்டு இரவுச் சாப்பாட்டுக்கு இது போதும் என்று  வீட்டிற்குப் போய் தின்று, ஒரு மணி நேரத்தில் வயிறு தீப்பிடித்தது போல் எரிய திரும்பவும் மலையிறங்கி, ராத்திரி ஒரு மணிக்கு 4 இட்டிலி தின்றதும், மூன்று ரூபாய்க்கு அரைப் பலாப்பழம் வாங்கி, சுளையைத் தேனில் ஊறப் போட்டு, நானும் அறை நண்பனும் திகட்டத் திகட்ட தின்று அடுத்த நாள், பிடுங்கிக் கொண்டு யார் லெட்ரீனுக்கும் வீட்டுக்கும் அலைவது என்று லெட்ரீன் அருகிலேயே குத்தவைத்து நொந்ததும், விடாமல் 103-104 என்று அடித்த ஜூரத்துக்கு மாத்திரை மருந்தில்லாமல், இளநீரும் கோல்ட் ஸ்பாட்டும் மட்டுமே உணவாக்கி ஒரே நாளில் சரியாகப் போனதும், ராம நவமியில் ராமர் கோவிலில் வாலில்லாத அனுமார் மாதிரி எங்கள் மூத்த எஞ்ஜினீயர் ஜிங் ஜிங் என்று குதித்துச் செய்த காலட்சேபமும், பாதி சினிமாவை நிறுத்தி, டிவிஷனல் அக்கவுண்டண்ட் உடனடியாக ஆஃபீஸ் வரவும் என்ற ஸ்லைட் வாங்கிய பெருமிதமும், ராமன் கடை சப்பாத்தி, தோசை சாம்பாரும், நேத்ராவதியில் வெள்ளம் வரும்போது ஜெலடின் குச்சியில் கொளுத்தி வீசி ஆளாளுக்கு பெட்ஷீட்டில் பொதி பொதியாய் மீன் பிடிக்கும் காட்சியும்...ஸ்டாக் டேக்கிங்கில் 2 தண்டவாளம் அதிகம் என்றால், போன வருட மழையில் புதைந்தது இந்த வருட மழையில் மண் அரிப்பில் கிடைத்தது என்றும், 2 குறைவு என்றால், அதிக மழையில் மண் சரிவில் மூடியிருக்கலாம் அல்லது கரையான் அரித்துவிட்டது என்றும் எழுதும் காமெடி...

சக்லேஷ்பூர்..ஐ மிஸ் யூ ரியல்லி:)
டிஸ்கி: புகைப்படம் கூகிளார் தயவு:)
--:o:--

Friday, April 15, 2011

கேரக்டர் - திருமதி ராஜம் ஆறுமுகம்..

கேரக்டர் தொடரில் ஏன் இது மட்டும் திருமதி ராஜம் ஆறுமுகம் என்ற கேள்வி எழலாம். இது உண்மையில் இரண்டு கேரக்டர்களைப் போல் தோன்றினாலும் என் மனதில் அவர்களைத் தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாமையா? அல்லது இன்றைய ராஜத்தின் நிலையா என்பதை முடிவில் நீங்களாக முடிவு செய்துக் கொள்ள வேண்டியதுதான்.

அயன்புரம் மார்க்கட் வீதியும் நெட்ட முத்தியால் கான் வீதியும் சந்திக்கும் முனையில் இடது ஓரம் ராஜத்தை இன்றும் பார்க்கலாம். இந்த ராஜத்தை நான் தவிர்த்துவருகிறேன். ஓரிருமுறை கடக்க நேர்கையில் அவசரமாகப் பாராதது போல் கடக்கப் போய் அத்தனை கும்பலிலும் அடையாளம் கண்டு ‘டேய் அய்யிரே’ என்று அழைத்து பாசமாய்க் கேட்ட கேள்வியில் உடையாமல் பதில் சொல்வது என்பது முடியாத காரியமாகிப் போய்விட்டது. என் மனதில் இருக்கும் ராஜம் இவரல்ல.

என்.எம்.கே.ஸ்ட்ரீட் என்று அழைக்கப்படும் நெட்ட முத்தியால் கான் தெருவில் முதல் பிரிவில் வலது பக்கம் இருப்பது திருப்பாச்சூரான்  தெரு எனப்படும் திருப்பச்சீஸ்வரர் தெரு. இதன் முனையில் இருந்தது ‘அறிஞர் அண்ணா வாடகை மிதிவண்டி நிலையம் உரிமையாளர்: கா.ஆறுமுகம்’.

எண்ணெய் தடவி பின் தூக்கி வாரிய கிராப்பு, பென்சிலால் வரைந்தாற்போல் ஜெமினி கணேசன் மீசை, கவிழ்த்துப் போட்ட ஆங்கில எழுத்து ‘வி’ போல முட்டி தட்டும் கால்கள், நிரந்தரமான வாயோர மைனாப் புண், அதிர்ந்து பேசாமலே எதிராளியின் வயிற்றில் புளியைக் கரைக்கும் ஒரு பார்வை, ஐந்தரை அடிக்கும் சற்றே குள்ளமான உருவம் கொண்ட ஆறுமுகத்துக்கும்

ஆறடிக்கு சற்றேறக்குறைய உயரம், உயரத்துகேற்ற உடல்வாகு, உடல்வாகுக்கேற்ற உயர்ந்த குரல், இரண்டு நத்தைகளைத் தொங்க விட்டாற்போல் மூக்குத்தி, அகலமான தோடு, நெற்றில் சிக்னல் போல் ஒரு ரூபாய் அளவு குங்குமம், எண்ணெய் காணாத செம்பட்டைத் தலை, எப்போவாவது விசேஷகாலங்களில் லேசாகத் தலைகாட்டும் ஒரு இணுக்குப் பூவோடு பூக்கடை வைத்திருக்கும் ராஜத்திற்கும் என்ன பொருத்தம் இருந்திருக்கிறது?

காலையில் ஐந்துக்கெல்லாம் எழுந்து முதல் பஸ் பிடித்து பூக்கடை போய் பூவாங்கி வந்து, இரவு மிகுந்த பூக்களை எடுத்துக் கொண்டு போய் கடை போடுவாள் ராஜம்.

ஏழு மணிக்கு குளித்து மைனர் போல் இஸ்திரி செய்த மல்வேட்டியுடன் பளபளா வெள்ளைச் சட்டையும், எம்.ஜி.ஆர். ஸ்பெஷல் சுருட்டலான முழுக்கைச் சட்டைச் சுருட்டலும், சன்னல் பனியனின் மேல் அண்ணா படம் போட்ட இரட்டைப் புலி நக செயினும், வலது கையில் அண்ணா பரிசளித்ததாகச் சொல்லப்படும் உதய சூரியன் படம் போட்ட மோதிரத்துடன், பளபள புது சைக்கிளில் ஏறி, 200 மீட்டர் தூரத்தில் இருக்கும் கடைக்குப் போவார் ஆறுமுகம்.

பத்து மணியளவில் பூக்கடையை ஏறக்கட்டி வரும்போது குழம்பு செலவுக்கு காசுக்கு மல்லுக்கு நிற்பாள் ராஜம். பெரும்பாலும் மறுவார்த்தையின்றி ஒரு பத்தோ இருபதோ கொடுத்துவிடுவார் ஆறுமுகம். இல்லை எனச் சொல்லப்படும் நாட்களில் அசந்த நேரத்தில் டவுசர் பாக்கட்டில் கைவிட்டு ராஜம் மொத்தமாக லவட்டப் பார்ப்பதும், டவுசரின் மேல் கையை இறுகப் பிடித்து ‘உடுமே உடுமே’ என்று சல்லாபிப்பதும் கடந்து செல்பவர்களின் கடைவாயோரப் புன்னகையை வரவழைப்பவை.

பத்துமணிக்கும் இரண்டுமணிக்கும் உண்டான இடைவெளியில் எப்போது சமைக்கிறாள், எப்போது காலை வாங்கி வந்த பூவைக் கட்டி வைக்கிறாள், மீண்டும் மாலை உதிரிப் பூ வாங்கப் போய் வருகிறாள், நான்கு மணிக்கு தவறாமல் எப்படி கடை போடுகிறாள், இரவு ஒன்பதரை அளவில் வந்து எப்போது சாப்பிட்டு, எப்போது பேசி, எப்போது தூங்கப் போகிறாள் என்பதை யாரும் கணிக்க முடியாது.

தி.மு.க.வில் முக்கியப் புள்ளியான ஆறுமுகத்துக்கு கட்சி தாண்டிய மதிப்பு கண்கூடு. வீதியில் சண்டை போடுபவன், பெண்டாட்டியை நடு வீதியில் போதையில் கும்முகிறவன், கட்சி மீட்டிங்கில் பிகிலடித்து கலாட்டா செய்ய நினைக்கும் புதிய இளைஞன், கள்ள ஓட்டு போட வந்து, போ என்று சொன்ன பிறகும் நிற்பவன் யாராயிருந்தாலும் ‘ஏய்! போ!!’  என்ற ஒற்றைச் சொல்லில் போகாவிட்டால் விழும் ஒற்றை அறையில் ஒன்று தரையில் இருப்பார்கள் அல்லது தள்ளாடி நடப்பார்கள்.

மற்றவரைப் போல் கூவி அழைத்துக் கூட பூ விற்கமாட்டாள் ராஜம். அவள் கடையில் யாரும் பேரம் பேசுவது கிடையாது. பாத்திமாவோ, ரெஜினாவோ, மங்களமோ, ராணியோ கர்ப்பிணிப் பெண்கள் யாரும் தலையில் ஒரு விறக்கடை பூவில்லாமல் தாண்டிப் போக முடியாது. கூடவே புருஷனும் இருந்தால் ஜென்மத்துக்கு சாப்பிட மறந்தாலும் மறப்பான், பெண்டாட்டியை பூவில்லாமல் ராஜத்தின் கடை தாண்ட அனுமதிக்கமாட்டான். பெண்டாட்டிக்கு வைத்து விட்டாளே என்று கடனே என்று யாரும் உடனே ஒரு முழம் பூ வாங்கிக் கொடுக்க முடியாது. அவள் வைத்து விட்டதுதான்.
 
மார்க்கட்டில் பெண்களை இடிப்பவர், குடித்துவிட்டு மிரளவைப்பவர், மீன் வெட்டும் கத்தியை உயர்த்திப் பிடித்தபடி சண்டைபோட்டு கலங்கடிப்பவர்களுக்கு, ஒற்றை இழுப்பில் சுருண்டு விழுந்து ராஜத்தின் காலால் இடுப்பில் மிதிபட்ட வலியா அல்லது மூன்று நான்கு தலைமுறையை சேர்த்து இழுத்து வைத்து திட்டும் திட்டில் நாளை எப்படி இந்த வீதியில் நடப்போம் என்ற வலியா எது பெரிது என்று புரியாது. குறைந்தது அரைமணி நேரம் ஓயமாட்டாள்.

ஏதோ ஒரு விசேஷ நாளில், தலை குளித்து தலையாற்றி, லேசாக எண்ணெய் பூசி ஒரு விறக்கடை மல்லிப்பூ சுத்திவிட்டால், ஆறுமுகம் மாலை ஆறுக்கெல்லாம் கடையடைத்துவிட்டு பத்தாம் நம்பர் சாராயக் கடைக்குப் போய்விடுவார். இரண்டு மகள்களும் இரு மகன்களும் அத்தகைய ஒரு நாளில் வந்து பிறந்திருக்க வேண்டும்.


மகள்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொடுத்து, அதே மார்க்கட்டில் பூக்கடை வைக்க இடம் பிடித்துக் கொடுத்து ஒரு வழியாக ஒப்பேற்றினாலும், மூத்த மகன் சண்டியனாகவும் இளைய மகன் சுமாராகப் படிப்பவனாகவும் அமைந்து போனான். வசதி கருதி பெரம்பூருக்கு நான் குடி பெயர்ந்தபின்னும் வீட்டு விசேஷம் என்றால் மூன்று கிலோமீட்டருக்கு ஆட்டோவாகிலும் வைத்துக் கொண்டு போய் ராஜம் கடைப் பூதான் வாங்குவது.

அப்படிப் போன ஒரு நாளில் அவளின் மூத்தமகனின் படம் தாங்கிய போஸ்டரைக் காண நேர்ந்தது. என்ன கேட்கவென்றே தெரியாமல் தடுமாற, ஒரு வார்த்தை பேசமுடியாமல் விழியோரம் முந்தானையால் துடைத்துக் கொண்டு கைவந்த போக்கில் கொடுத்த பூவை வாங்கிக் கொண்டு வந்தேன். அடுத்த முறை போனபோது இன்னொரு மகனின் போஸ்டரின் முன்னால் முகம் கொள்ளாச் சிரிப்போடு அமர்ந்திருந்தாள் ராஜம்.

பட்டப்படிப்பை முடித்து, எம்.ஏ.வில் சேர்ந்ததைப் பாராட்டி நண்பர் குழாம் அடித்த போஸ்டர் அது. மறக்காமல் போஸ்டர் உபயம் கா.ஆறுமுகம் என்பதைச் சேர்த்திருந்தார்கள். பெரும்பாலும் கடை கண்ணிக்குப் போவது என் தம்பியாதலால், சில வருட இடைவெளிக்குப் பிறகு ராஜத்தின் கடை முன் நின்று தேடினேன்.

வாடி வதங்கி, முற்றிலும் பொலிவிழந்து, மூக்குத்தியும் தோடும் மட்டுமே அடையாளம் காட்ட ‘வா அய்யரே’ என்றவள் நொறுங்கிப் போனாள். ‘அப்பா போய்ட்டாருய்யா. ராஜம் தண்ணி எட்தாமேன்னாரு. ரண்டு நிமிட்டு இல்ல அய்யரே. தல தொங்கிடிச்சி. பாவி மனுசன், என்ன விட்டு எப்புடி போனாரு தெரியல அய்யரே. ஒரு திட்டு, ஒரு அடி நினைச்சி கோவப்படக்கூட ஒன்னுமில்லாம போய்ட்டாருப்பா அப்பா’ என்று கதறியவள் ஒரு மூக்குச் சீந்தலில் சாதாரணமாகிப் போனாள்.

சரசு அக்கா, லட்சுமி, காந்தி எல்லாம் எப்படி இருக்காங்கம்மா என்றேன். லச்சுமிக்கு 2 சவரன் கூட போட்டேன்னு சரசு பேசறதில்ல, லச்சுமி மச்சினிச்சிய காந்திக்கு கட்டலைன்னு அவளும் பேசறதில்ல. படிச்சவரு, லவ் பண்ணிக்கினு கண்ணாலம் கட்டிக்கினாரு. பூக்காரியவும், சைக்கிள் கடைக்காரனையும் அம்மா அப்பான்னு சொல்லிக்க முடியுமா? அவரும் பிச்சிக்கினாரு.

எனக்கு விதிச்சது, இதோ பூவும், நானுமா ஓடுது பொயப்பு. அம்மா திதியா? மல்லிப்பூ எடுத்தும்போ. மவராசி, உங்கப்பா இருக்க சொல்ல மல்லியில்லாம இருக்கமாட்டா. என்னாதான் நான் இறுக்கமா கட்டினாலும் அவ கட்டி வச்சிகிட்டாதான் அதுக்கு சந்தோசம் என்று ஏதோ கணக்கில்லாமல் கொடுத்தாள். எவ்வளவென்றே கேட்காமல் ஏதோ காசு கொடுத்தேன். அன்றிலிருந்து அவள் கடையைத் தவிர்த்தே வருகிறேன். அவரவர் பிழைப்பு அவரவர்க்கு என்று இருந்தவர்களிடையே இத்தனை காதலா? அந்த ஒரு மனிதனின் இழப்பா இப்படி ஒரு மலையைச் சாய்த்துவிட்டது என்ற பிரமிப்பு மட்டும் இன்றும் இருக்கிறது.

-:o:-

Monday, April 4, 2011

”கருப்பு நிலாக் கதைகள்” ஒரு வாசிப்பனுபவம்.

‘கருப்பு நிலாக் கதைகள்”. கவிதைத் தலைப்புக்கேற்ற கவித்துவமான புகைப்படம். புத்தகத் திருவிழாவிற்கு நாளை போகலாம் என்றிருந்தபோது தோழர் காமராஜின் பதிவில் அதற்காகக் காத்திருப்பதாக படித்ததும், நான் உங்களுக்கு முன் வாங்கிவிடுவேன் என்று அலட்டிக் கொண்டு போய் வாங்கிப் படிக்கவும் ஆரம்பித்தாயிற்று. இடையே திருச்செங்கோடு பயணமிருந்ததால் மாதொருபாகனை அங்கு போவதற்குள் படித்தாக வேண்டும் என்ற முனைப்பில் இது தள்ளிப் போயிற்று.

வாசிப்பனுபவம் என்று ஒன்றிரண்டு எழுதினாலும், இந்தப் புத்தகம் தந்த அனுபவத்தை எழுதச் சற்றே தயக்கம் தட்டியதற்குக் காரணம் உண்டு.  இது வாழ்விலிருந்து நினைவில் புடம் போட்டு வந்த அனுபவ எழுத்து. மண்ணுக்குரிய சாமானியனின் எழுத்து. கதையின் காலக் கட்டத்துக்கு நம்மை உருமாற்றி, அவர்களோடு நம்மையும் ஒருவராய் உணர்த்திக் கதை சொல்லும் எழுத்து.

அமைதியாக அசைபோடும் பசுவின் முதுகில் ஒரு ஈ அமர்ந்தால் ஒரு சிலிர்க்குமே, ஒரு புழுக்கமான மாலையில் எதிர்பாராது முகத்தில் விழும் மழைத்துளி, கோவில் மணி டங் டங் என்றே முழங்கினாலும் அதில் ஏதோ ஒரு டங் ஒலி உள்ளுக்குள் பாய்ந்து ஒரு மின்சாரம் பாய்ந்த உணர்வைத்தருமே அப்படி ஒரு இடத்தில் உலுக்கும் திறன் காமராஜுக்கு கைவந்த கலை.

இது என்னைப் போல சாமானியனுக்காக ஒரு சாமானியன் எழுதிய கதைகளின் வாசிப்பனுபவம். ஏதோ ஒரு ஸ்வரத்தில் என் கண் கசிந்தால் அது எனக்குப் போதும். இது கல்யாணியா, காம்போஜியா என்ற விசாரம் எனக்கில்லை. மேலாண்மை பொன்னுச்சாமியின் விமரிசனத்தை விடவா சொல்லிவிட முடியும்? ஆனாலும் என் அனுபவத்தைப் பகிராமல் முடியுமா என்ன? அதுவும் கரிசல் மண்ணின் மணத்தோடான பேச்சு வழக்கில் சொல்லப்படும் கதைகள் வாசிப்பு மட்டுமல்ல வாழும் அனுபவமுமாயிற்றே!

"கருப்பு நிலாக்களின் கதைகள் " சமூகமென்கிற ஒரு அக்கப்போர் கூட்டம் சபிக்கப்பட்ட ஒருவளின் வாழ்க்கையில் எவ்வளவு சோகத்தைக் கொண்டு வந்துவிடுகிறது? கோனார்க் கோவில் அருகில் இளநீர் விற்கும் பெண்ணாக, ஒவ்வொரு பவுர்ணமியிலும் ஓங்கிச் சிரிக்கும் சாந்தியாக மாறிய அவளுக்கு கண்ணகியென்று எத்தனை பொருத்தமாகப் பெயர். சபாஷ் காமராஜ். கண்ணகி சாந்தியான கோலம்தான் கதை.

"மருளாடியின் மேலிறங்கியவர்கள்"  இதேபோல் சபிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை. பிறப்பாலிழிந்தவளென்று ஒதுக்கி,  பெண்டாள மட்டும் அதை மறந்தவர்கள் நிறைந்த இச் சமூகத்தின் முகத்திரையை அவள் ஒரு சாமியார் என்று கொண்டாடும்படியாக கிழித்தெறியும் பாங்கு அற்புதம். போலியின்றி வார்த்தைகள் கிழித்துக் குதறுவது சரஸ்வதி என்கிற சச்சியை மட்டுமா? நம் மனத்தையும்தான்.

"சிறு பிள்ளைகள் என்னருகே வரத் தடை செய்யாதிருங்கள்", குழந்தைத் தொழிலாளர்களின் அவலம் கூறும் கதை. போலியாய் ஒரு சட்டம். அதை செயல்படுத்தாத அரசுகள் என்று அத்தனையும் ஒரு சொல்லின்றி நம் மனதில் கொண்டுவந்து சேர்க்கும் கதை.

"பெரியார் பேரனுக்குப் பிடித்த பேய்" ஒரு அருமையான கதை. ஒரு பாழ்மண்டபத்தின் இருட்டில் தெய்வமான ஒரு பகுத்தறிவு வாதியின் கதை எனச் சொல்லலாமா காமராஜ்?

"முளைப்பாரிகள் மீண்டும் வயலில், பாட்டுக்காரி தங்கலச்சுமி, குழந்தையாக்குபவள் " மூன்றும் அனுபவப் பகிர்வுக் கதைகள். குழந்தையாக்குபவளின் நாயகி போன்றோ தங்கலச்சுமி போன்றோ வெள்ளந்தியாகவே இருந்துவிட முடியாதா என்று ஏங்க வைக்கும் கதைகள்.

"சம்பாரி மேளத்தின் உச்சமும் சில இழப்புக்களின் மிச்சமும்
" தோழர்களுக்காக வாழ்நாளை அர்ப்பணிக்கும் ஒரு நேர்மையான தொழிற்சங்கத் தோழரின் தனிப்பட்ட இழப்பையும் சாதனையும் சொல்லும் கதை. “ஆனால் ஒரே ஒரு பார்வையில், தோளில் சாய்கையில் தலை கோதுவதில்” ஏனைய தகப்பன் பிள்ளைகள் பெறும் சந்தோஷ உலக இழப்பை மீட்டெடுக்கும் சம்பத்தும் மகள் வெண்மணியும் நம்மையறியாமல் ஒரு ரெட் சல்யூட் வைக்கச் சொல்லும் பாத்திரங்கள்.

பதினான்கு முத்தான கதைகள். அழகான அட்டை, அச்சு எல்லாம் இருந்தாலும் ப்ரூஃப் ரீடிங்கில் கொஞ்சமும் கவனம் செலுத்தவில்லை. வம்சி மட்டுமல்ல இன்னும் சில பதிப்பகங்களின் புத்தகங்களும் இப்படித்தான் இருக்கின்றன. படைப்பாளிக்குச் செய்யும் அவமரியாதை இது. அடுத்த முறை இது நிகழக் கூடாது. உதவ நாங்கள் இருக்கிறோம் காமராஜ்.

ஒரு அருமையான வாசிப்பனுபவத்தைத் தந்தமைக்கு நன்றி.
-:o:-

Friday, April 1, 2011

பிலிமு காட்டிய பிலிமு.

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, கிட்டத்தட்ட ஒன்னர வருஷத்துக்கு அப்புறம் தியேட்டர்ல போய் படம் பார்க்கலாம்னு ஒரு முடிவெடுத்தேன். அட நெட்ல புக் பண்ணலாமேன்னு தேடுனேன். அபிராமி தியேட்டர்ல 120ரூ டிக்கட்னு க்ளிக் பண்ணா, ஆடுற சேர், அதுக்கு 60ரூ தனியான்னு இருந்துச்சு. அட குடுக்கறத குடுக்கறோம் ஆடிட்டேதான் பார்ப்போமேன்னு இருந்தா ஆட்டி விடுற கூலி 120ரூ டிக்கட்டுக்குன்னு இருந்துச்சு. போடாங்கொய்யாலன்னு மூடிட்டேன். அதோடவா? காப்பி வேணுமா, ஸ்னாக்ஸ் வேணுமான்னு எல்லாம் ஆப்ஷன்.

காலம்தான் எவ்வளவு மாறிப் போச்சு. படிக்கிறப்ப சினிமாவும் புத்தகமும்தான் பொழுது போக்கு. விளையாட்டு வேடிக்கை பார்க்க மட்டும்தான். சினிமாவும் எப்பவும் இல்லைன்னாலும் அனேகமா எல்லா சிவாஜி, எம்.ஜி.ஆர்., சாம்பார்,முத்துராமன் படங்களும், சில ஜெய்சங்கர் படங்களும் (பத்தாம்பு படிக்கிறப்ப ஜாக்பாட் ஜாங்கோ பார்த்தா கெட்டு போயிடுவேன்னு காசு குடுக்கமாட்டன்னு திட்டுச்சு ஆத்தா).

படம் பார்க்கிறது ஒரு அனுபவம்னா நாம படம் பார்த்ததே அனுபவங்கள்தான். சயானி (ஒன்னரை கி.மீ), வீனஸ் (3 கி.மீ) நாதமுனி (4 கி.மீ), ராயல் (மூனரை) சரஸ்வதி/லக்ஷ்மி (4கி.மீ) மேகலா (3கி.மீ), புவனேஸ்வரி(4 கி.மீ), சரவணா/பாலாஜி (ரெண்டரை கி.மீ), உமா (3 கி.மீ). எல்லாம் நடைப் பயணம்தான். அப்போல்லாம் காலைக் காட்சி அபூர்வம். மேடினிதான். 3 மணிக்கு படம்னா 2 மணிக்கு டிக்கட் குடுப்பாங்க. நாம காலைல சாப்பிட்டு அம்மா கூட 10 மணிக்கு கிளம்பினா பதினொன்னு பதினொன்னரைக்கு அங்க கதவு திறக்க முன்ன க்யூல நிப்போம்.

கதவு திறந்ததும் குடுகுடுன்னு ஓடி முதல் இரண்டாவதா போய்ட்டு, யம்மா வரான்னு சொல்லி இடம் வைக்கணும். அப்பதான் கொஞ்சம் காத்தோட்டமா இருக்கும். கையில ஒரு புத்தகம் வச்சிக்கிட்டா (பெரும்பாலும் தினமணிகதிர், ராணி) விசிறிக்க வாகு. டிக்கட்டு 42 பைசால இருந்து 52 பைசா வரைக்கும் வித்தியாசப்படும். யம்மா டப்பால தயிர்சாதம் கொண்டு வந்திருக்கும். டிக்கட் குடுத்ததும் வாங்கி  ஒரு டிக்கட்டை புடுங்கிட்டு தபதபன்னு ஓடி இருக்கறதுலயே பின்னாடி சீட்ல ஓர சீட்டுக்கும் மூணாவது சீட்டுக்கும் நடுவில உக்காந்து ரெண்டு கையும் விரிச்சி யம்மா வரா, தம்பி வாரான்னு சொல்லிட்டிருக்கணும். 

அப்புறம் சமத்தா தச்சி மம்மு சாப்பிட்டு டப்பாவை கழுவிட்டு வந்து உக்காந்தா ‘ஆரோக்கிய வாழ்வினையே காப்பது லைஃப்பாய். லைஃப்பாய் எவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே’ல ஆரம்பிச்சி, வார் பிக்சர் (ஹி ஹி. நியூஸ்தான்)ல தொடர்ந்து சிவாஜி கூட அழுது, நாகேஷ் கூட சிரிச்சி, எம்.ஜி.ஆர்.க்கு வாஜ்யாரே, பின்னாடி ஒளிஞ்சிருக்கான் வாஜ்யாரேன்னு எல்ப் பண்ணி, ஜனகனமணக்கு நின்னா யம்மா தொலைஞ்சி போயிடுமுன்னு சாரி சொல்லிட்டு கூடவே ஓடி ‘டொங்கட்டான் டொங்கட்டான்னு’ பராக் பார்த்துட்டே நடந்து வந்த சொர்க்கம் பதினொன்னாம்புல போயே போச்சு.

பத்தாம்பு முழு பரிட்சை லீவுல பொம்பள டிக்கட்டுல அனுமதிச்ச பாவி, பதினொன்னாம்பு கால் பரிட்சையில கண்டு புடிச்சிட்டான் நான் ஆம்பிள்ளை சிங்கம்னு. யண்ணா யண்ணா இந்த ஒரு தாட்டி உடுண்ணா. அடுத்தவாட்டி ஆம்பிளை ஆயிக்கறண்ணான்னு கெஞ்சி பார்த்த படம் மூன்று தெய்வங்கள்னு நினைக்கிறேன். அப்புறம் ஆம்பிளைங்க க்யூன்னு ஆகிப் போனதும்தான் 52 பைசா டிக்கட்டின் கோர முகம் தெரிஞ்சது.

கிட்டத்தட்ட ஒரு மிருகமாதான் மதிச்சிருக்கானுவ நம்மள. அப்ப புரியல. சயானில ஒரு ஒன்னரை அடி கதவு திறக்குமான்னு மூத்திர சந்துல க்யூல நிக்கணும். உசுரப் புடிச்சிட்டு ஓடிப்போய் முதல்ல நிப்பேன். நம்ம உருவத்துக்கு அம்புட்டு மதிப்பு. சின்னப் பசங்க ஏண்டா இந்த க்யூவுல வரீங்க ஒத்துன்னு ஒன்னு, படிக்கிற வயசுல சினிமா இன்னாடான்னு அட்வைஸ்லயே ஒன்னு, பேச்சு குடுத்துக்கிட்டே ஒன்னுன்னு நம்மள ரிவர்ஸ் அடிக்க வச்சுறுவானுவ. வெவரம் தெரியாம அழுவாச்சியா வரும். இங்க கூடுதல் கொடுமை என்னன்னா, புழுக்கத்தோட, சாராய நெடியில பொரட்டிகிட்டு வேற வரும்.

கவுண்டர் திறக்கற நேரம் பார்த்து வருவானுங்க கடைசியில இருந்து. தலைக்கு மேலதான் வருவானுங்க. கையில கீரக்கட்டு மாதிரி பூனக்காஞ்சான் செடி. யோவ் யாருய்யான்னு குரல் கிரல் விட்டா போச்சு. மூஞ்சில ஒரு தேய் தேச்சிட்டு போயிடுவானுவோ (நமக்கு அந்த பயமில்ல. அவன் தலை கீழா தொங்குனாதான் நம்மள ட்ட்டச் பண்ண முடியும். நேர கவுண்டர் கிட்ட போய் தலைமேலயே குதிப்பானுவ. நாம 5 வதா இருந்த ஆளு பத்தாவதா போனாலும் நம்மள தள்ளிட்டு போன அஞ்சு பேர தள்ளிட்டு குதிக்கவும் ஒரு அஞ்சு பேரு இருக்கானுவல்லன்னு ஒரு சந்தோஷம்.

மேகலா, சரவணா, வீனஸ் எல்லாம் ரிஸ்க். அவன் மேல கம்பி வலை வேற அடிச்சிருப்பான். பன்னாடைங்க நாலுகால் ஜந்து மாதிரி குனிஞ்சிக்கிட்டே வருவானுவ. தலைய குனிஞ்சிட்டு தரையோட உக்காந்துடணும். எவனாச்சும் சவுண்ட் விட்டா பூனை மாதிரி புசுக்கு புசுக்குன்னு ஒன்னுக்கு அடிப்பானுவ.

எப்புடியோ டிக்கட்ட வாங்கி தல தெறிக்க ஓடி நாம புடிக்கிற இடம் முதல் வரிசை, இல்லாட்டி அடுத்த வரிசையில ஓரமா ரண்டு சீட்டு. டிக்கட்டு கிழிக்கிறவன் லூசான்னு ஒரு பார்வை பார்ப்பான். அவனுக்கென்ன தெரியும்? என்னதான் ஓடி கடைசி வரிசைல புடிச்சாலும், பூனைய புடிக்கிறா மாதிரி என்னை காலர புடிச்சி தூக்கி முன்ன போய் உக்காருன்னு எனக்குன்னே ஒரு வில்லன் வருவான்னு. நீ சொல்லி நான் என்னடா போறதுன்னு நாமளே போயிடுவோம்ல. அப்பவும் பக்கத்து சீட்டை புடிச்சி வச்சிக்கிறது. அல்லாடுற ஒரு ஜீவன இங்க உக்கார்ணான்னு இடம் குடுத்தா, கொஞ்சம் சீட் பார்த்துக்கண்ணா ஒன்னுக்கு உட்டுட்டு வரேன்னு இன்சூர் பண்ற டெக்கினிக்கு அது. பெருங் கொடுமை தச்சி மம்மு கட். காய காய உக்காந்து படம் பார்க்கணும்.

பி.யூ.சி. படிக்கிறப்ப, மொத மொத இங்க்லீஸ் படம் பார்த்தமுல்ல. ஒன்னார்ரூவா டிக்கட்டு. இங்லீஸ் படம்னா கெட்ட நெனைப்புல்லாம் வேணாம். ஆப்ரிகன் சஃபாரி. அதுக்கு போஸ்டர காட்டி, பாரும்மா புலி, சிங்கம் படம்மான்னு கெஞ்சி கெஞ்சி பர்மிஷன் வாங்க பட்ட பாடு இருக்கே. காலம் அப்புடி. வேலைக்கு வந்து கொஞ்ச நாள் வரைக்கும் ‘தோ ரஹா’ அப்படின்னா ஹிந்தில கற்பழிப்புன்னு தினத்தந்தி தப்பு தப்பா சொன்னத நம்ம்ம்ம்பி வாழ்ந்த காலம். எல்லாப் பத்திரிகையும் கற்பழிக்கறதுன்னு போட்டா பத்திரிகையோட கற்பு போயிடும்னு ‘தோ ரஹா பண்ணிட்டான் வில்லன்’னு போடுற காலம். எப்புடியோ முத முதல்ல 5ரூ கூட சினிமா போன மிதப்பு. பொட்டிக் கடையில ஒரு பன்னீர் சோடா குடிச்சா என்னன்னு ஒரு அரிப்பு.

நம்ம போறாத காலம் நமக்கு முன்னாடி ஒருத்தன் கமர்கட்டுன்னு 3ரூபாய நீட்டி ஒரு கமர்கட்டு வாங்கி வாய்ல இடுக்கிட்டு போனா வயசு பையனுக்கு பத்து பைசா கமர்கட்டு இருக்கும்போது 3ரூக்கு கமர்கட்டு வாங்குறானேன்னு தோணுமா தோணாதா? எனக்கு ஒரு கமர்கட்டுன்னா பொளிச்சுன்னு மண்டைல போட்டு ஓடுன்னு விரட்டிட்டான். அப்புறம் பெரிய பசங்க கிட்ட கேட்டு தெரிஞ்சிகிட்டது அந்த்த்த கமர்கட்டுன்னா அபின்னு.

எம்.ஜி.ஆரை வெரட்டி விட்ட பிறகு வந்த முதல் படம் நேற்று இன்று நாளை. படத்த ஓட விடமாட்டோம்னு இவனுவ. நிறுத்துடா பாக்கலாம்னு அவனுவ. கலவர பூமியாப் போச்சு. எப்படியோ ஒரு நிலைக்கு வந்தப்புறம் சயானி மூத்திர சந்துல நின்னு க்யூல நின்னாச்சு. நமக்கு முன்னாடி ஒரு எம்.ஜி.ஆர். ரசிகரு. தலை தொங்க தொங்க தண்ணி. ‘டாய்!னு சவுண்ட் விட்டு கருணாநிதியை திட்டிட்டு தலை தொங்கிடுவாரு’. டிக்கட் குடுக்க ஆரம்பிக்கவும் தள்ளாடி தள்ளாடி போய், கவுண்டர் கிட்ட லுங்கிய தூக்கி டவுசர்ல விட்ட கை வெளிய வர மாட்டிங்குது.

பின்னாடி இருக்கிறவன் யோவ் போங்கய்யான்னு தள்ளுறான். நாமதான் ரெடியா சில்லர வச்சிருக்கமேன்னு கவுண்டர்ல நீட்டிட்டேன். தப்பாய்யா? டபார்னு ஷட்டர அடிச்சான். துட்டு உள்ள மாட்டிக்கிச்சி. அப்புறம் போனா போவுதுன்னு டிக்கட்ட குடுத்தானேன்னு வாங்கிட்டு உள்ள வந்தா, ப்ளாக்ல விக்க வாங்கினவன உட்ட போலீசு, அவ்ளோ அவசரம் என்னான்னு பொளேர்னு கன்னத்துல குடுத்துட்டான். அப்புடி என்ன மானம் கெட்டு சினிமா பாக்குறதுன்னு டிக்கட்ட கிழிச்சி போட்டு வெளிய வந்துட்டேன்.

அப்புறம் எட்டு வருஷம் தியேட்டர் பக்கம் போனதில்லை. ஐ.சி.எஃப். இன்ஸ்டிட்யூட்ல 25 பைசாவுக்கு சனி, ஞாயிறுல பழைய படம் போடுவாங்க. அது மட்டும் கொஞ்ச நாள் ஓடுச்சு. அப்புறம் ஆரம்பிச்சது ஆங்கிலப் பட மோகம். ஒரே நாள்ள 4 படம், மொத நாள் மொத ஷோன்னு போனது. அப்பவும் 3ரூ டிக்கட்டுக்கு 11 மணிக்கு க்யூதான் பெரும்பாலும்.

அப்புறம் கலியாணம் ஆகி அம்மிணி ஆசை பட்டுச்சுன்னு வேட்டகாடு சினிமாக்கு போனது. என்.டி.ஆர். ஸ்ரீ தேவிய வெரட்டி வெரட்டி பாடின டூயட்டுல அரண்டு போய் மண்டை இடி வந்துடுச்சி. நாம சங்கராபரணம் மாதிரி சாஃப்ட் படம் பாக்குற ஆளு. அப்புறம் நம்ம விருப்பத்துக்கு ஹிஸ்டரி ஆஃப்த வர்ல்ட் பார்ட் 3 க்கு கூட்டிட்டு போனா ஒரு காமெடி சீனுக்கு விளக்கம் கேட்டுச்சு அம்மணி. சொன்னதும் ஒரே அழுகை. இந்த மாதிரி எழவு படத்துக்கெல்லாமா கூட்டிட்டு வருவீங்கன்னு.

சரி இனிமே சினிமாவே வேணாம்னு ஒரு டீலு. டி.வில படம் பார்க்கலாம்னா பக்கத்துல உக்காந்து காமெடி சீன் வந்தா யானை முட்டுனா மாதிரி விலாவில முழங்கையால ஒரு இடி, அப்புறம் சிரிப்பு, இல்லைன்னா டப்பாக் கட்டு கட்டிக்கிட்டு உக்காந்திருந்தா வெறும் தொடையில படார்னு ஒரு அடி, அப்புறம் சிரிப்புன்னு ஒரு ரெண்டு படம் ஓடிச்சி. அப்புறம், மொக்கை காமெடிக்கெல்லாம் இந்த டார்ச்சர் தொடரவும், ரைட்ட்டு, இத சாக்கா வச்சி வெளுத்து வாங்குறான்னு புரிஞ்சி போச்சு.

அது என்ன படம் இருக்கட்டுமே, நாம அமைதியா ஒரு புக்கை வச்சிக்கிட்டு செட்டில் ஆயிடுவோம். அப்பப்ப தியேட்டர்னு முனகல் வரும். அதுக்கு அரை நாள் லீவ் போட்டு டிக்கட் ரிஸர்வ். அப்புறம் படம் பார்க்க லீவுன்னு எகிறி எஸ்ஸாயிடுவோம்ல. இந்த முப்பது வருசத்துல ஒரு ஆறேழு படம் தியேட்டர்ல பார்த்திருந்தா அதிகம்.

நல்லகாலம் இப்ப மாதிரி உக்காந்த இடத்துல டிக்கட்டு, வேண்டிய சீட்டு, தின்னுற தீனி எல்லாத்துக்கும் வழின்னு அப்போ இருந்திருந்தா? இடி வாங்கி அடி வாங்கி, நம்ம உசரத்துக்கும் உருவத்துக்கும் நசுங்கின சொம்பு உருண்டு வராமாதிரியே இருக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.


டிஸ்கி: இம்புட்டு நீளமா? ஸ்ஸ்ஸப்பான்னு அலுத்துக்கிறவங்களுக்கு. அந்த காலத்துல படம் வந்ததும் எத்தன ரீலுன்னு கேக்கணும். 18/20ன்னா அப்பாடான்னு ஒரு திருப்தி. 16 ரீலுன்னா சின்ன படம்பான்னு ஒரு சலிப்பு. இதும் அப்படித்தான்.
-:o:-