Wednesday, June 3, 2009

தகப்பன் சாமிகள் - 2

இதுவும் ஒரு நாள் மின்சார ரயிலில் பயணிக்கும்போது பெற்ற அனுபவம்.

ஆந்திரத்தின் பஞ்சத்துக்கு தப்பி தமிழ்நாட்டில் வந்தவர்கள் போலும். உட்கார இடமின்றி வழியில் நின்றிருந்தவர்களிடம், 'அன்னா. கொஞ்சம் ஜருகன்னா' என்று அந்தப் பெண் கூறிய பொழுது தான் பார்த்தேன். 13 அல்லது 14 வயது இருக்கலாம். ஒரு சிறுமி. சட்டென்று மனதில் பதிந்து போனது அந்த முகமும் கண்ணும். இந்தக் கூட்டத்தில் இடித்துக் கொண்டு போக வேண்டுமே என்றோ, இப்படிப் பிழைப்பாச்சே என்றோ கூச்சமும், நாணமும் காட்டும் முகம். கண்ணில் பசியும், வெட்கமுமாய்க் கவலை. மிக மிக மெதுவான குரலில் தயங்கி தயங்கி யார் மீதும் இடிக்காமல் அன்னய்யா அன்னய்யா என்று வழி கேட்டு ஒரு ஓரமாய் நின்றாள்.ஒன்பது வயதிருக்கலாம் ஒரு சிறுவன், 4 வயதில் ஒரு குழந்தை. எண்ணெய் காணாத செம்பட்டைத் த‌லை, பழைய உடையாயினும் அழுக்கின்றி உடுத்தி இருந்தார்கள் அந்தப் பெண்ணும் சிறுவனும். குழந்தையைக் கவனிப்பாரில்லையோ அல்லது என்ன காரணமோ அழுக்கு. முகம், கை எல்லாம் கறை. அந்தப் பெண்ணின் கழுத்தில் துணியால் கட்டப்பட்ட ஒரு ஆர்மோனியம். தோளில் ஒரு துணிப்பை. சிறுவனின் கையில் இரண்டு சிறிய அஸ்பெஸ்டாஸ் சில்லுகள். அந்தச் சிறுவனும் குழந்தையும் பின் தொடர ஒரு முறை அந்தச் சிறுவனைப் பார்த்தாள்.

நடையில் டக்கென நின்ற சிறுவன் அந்தக் குழந்தையை முன்னிறுத்தி, ரெண்டு சில்லையும் விரலில் இடுக்கி உள்ளங்கையில் தட்டி ஒலி எழுப்பினான். அந்தப் பெண் ஆர்மோனியத்தில் ஒரு முறை வாசித்து நிறுத்தினாள். பெட்டியில் ஒலி அடங்கி ஒரு நிமிடம் நிசப்தம். ஒரு முறுவலுடன் அந்த‌ப் பெண் ஒரு பழைய பாட்டு பாடத் தொடங்கினாள். 'நீ உன்னதா கொண்ட பை .. நா சாமி என நிறுத்திவிட்டாள். எப்படித்தான் தெரியுமோ. பிசிறின்றி சரியாக சில்லைத் தட்டி தாளமிட்ட சிறுவன் அடுத்த வரியைத் தொடர்ந்து நிறுத்தினான். அய்யா, தர்மம் செய்யண்டய்யா என்று மெதுவாக ஆரம்பிக்க, அந்தக் குழந்தை கை நீட்டிய படி சென்று, கொடுத்தால் வாங்கி மற்ற கையில் வைத்துக் கொண்டு, தராமல் முகத்தைத் திருப்பிக் கொள்பவர்களைச் சுரண்டத் தொடங்கியது. கை இழுத்தவர்களை விடாமல் அன்னா, அய்யா என்று சுரண்ட அருவெறுத்து கொஞ்சம் பேர் காசு கொடுக்க கொஞ்சம் பேர் மிரட்ட வரிசைக்குள் நுழைந்தது அந்தக் குழந்தை. இதே நாடகம் தொடர அடுத்த வரிசை, ஒரு வரி பாடல், தாளம், இணைந்து தனியாக என. சத்தியமாய் அப்படி ஒரு குரல் அந்தப் பசித்த வயிற்றில் எப்படித்தான் வருமோ. பிசிறின்றி ஒரு தேர்ந்த ஆர்கெஸ்ட்ரா போல் சேர்ந்தும் தனியாகவும் என்று பாடினார்கள். ஆதரவிருப்பின் ஒரு சுசீலா, கண்டசாலா என வந்திருப்பார்கள் நிச்சயம்.

இரண்டு வரிசை கடக்க ஒரு புரவலர் கேட்கிறார். பாட்டு ஃபுல்லா பாடுறியா. 50 காசு தர்ரேன் என. பாவமாய் நிற்கிறது அது. அறையலாம் போல வந்தது. நாள் முழுதும் பாடி, காசு சம்பாதித்து கொண்டு போனாலே இப்படி இருக்கிறார்கள். இவருக்குப் பொழுது போக்கு. அந்த 3 நிமிடத்தில் ஆளுக்கு கொடுக்கும் காசு கூட இல்லை. அந்தப் பையன் விடாமல் இரண்டாம் வரி பாட அந்தப் பெண்ணுக்குத் தெரியும் போலும் இப்படி ஆட்கள் இருப்பார்கள் என்று. அவளும் சேர்ந்து ஒரு பத்தி பாடி நிறுத்தினாள். அன்னா என்று சிறுவன் கேட்க புல்லா பாடு என்றான். அன்னா ஆகலி(பசி) என்றது அது. ஒரு நாளும் முழுசா பாட மாட்டாங்க என்று சலித்த படி 25 காசு கொடுத்தான் அந்த வள்ளல். கொஞ்ச நிமிசத்தில் ஒரு பெண் உயர்ந்த குர‌லில் திட்டுவது காதில் விழ எழுந்துவிட்டேன். ஒரு அம்மணி. திருமணத்துக்கு போகிறதோ தின்று கொழுத்து வருகிறதோ தெரியவில்லை. அந்தக் குழந்தை தொட்டு விட்டதாம். லோ லோ எனக் கத்தத் தொடங்கிவிட்டாள். கூடவே அவர் கணவனும் தன் பங்குக்கு திட்ட, பழகியும் மருண்டு நின்றார்கள் குழந்தையும் சிறுவனும். யாரும் வாய் திறக்கவில்லை. ஒரு நிமிடம்கூட இல்லை. கத்திக் கொண்டிருந்த அம்மணி கண்கள் சொருக மயங்கிவிட்டாள். கணவன் பதைத்து, தண்ணி இருக்குங்களா எனத் தேட, யாரிடமும் இல்லை. தயங்கி தயங்கி நகரச் சொன்ன அந்தப் பெண் தள்ளிக் கொண்டு முன்னேறி பையிலிருந்து ஒரு பாட்டிலிலிருந்த நீரை நீட்டியது. படக்கென வாங்கி முகத்தில் தெளித்து துடைத்து விட்டு விழித்ததும் கொஞ்சம் குடிக்கக் கொடுத்து திரும்பக் கொடுத்த கண்ணில் நன்றி இல்லை. கடு கடுவென நீட்டி காசும் நீட்ட, ஸ்டேஷன் வஸ்துந்தி ராரா (ரயில் நிலையம் வருகிறது. வாடா) என மெல்லச் சிரித்தபடி நகர்ந்தனர் மூவரும்.

திமிரப் பார்த்தியா என்றவனை அத்தனைக் கண்களும் காறி உமிழ்ந்தன.

கொசுறு
திரட்டிக் களத்தில்
பதிவர் சண்டை
கண்ணியக்கொலை!

12 comments:

Anonymous said...

good Observation. Last line is nice Punch !!!

Juergen Krueger.

நசரேயன் said...

கடைசி வரி நச்

sakthi said...

ண்ணில் பசியும், வெட்கமுமாய்க் கவலை. மிக மிக மெதுவான குரலில் தயங்கி தயங்கி யார் மீதும் இடிக்காமல் அன்னய்யா அன்னய்யா என்று வழி கேட்டு ஒரு ஓரமாய் நின்றாள்.

படிக்கும்போதே மிகவும் வேதனையாக இருக்கின்றது

sakthi said...

இரண்டு வரிசை கடக்க ஒரு புரவலர் கேட்கிறார். பாட்டு ஃபுல்லா பாடுறியா. 50 காசு தர்ரேன் என. பாவமாய் நிற்கிறது அது. அறையலாம் போல வந்தது.

சிறுமை கண்டு சீறியிருக்கலாமே???

vasu balaji said...

நன்றி நசரேயன், சக்தி.

vasu balaji said...

/சிறுமை கண்டு சீறியிருக்கலாமே???/

இல்லைங்க. எனக்கு அந்த நேரம் அப்படி வந்திச்சி. கூட்டமில்லைன்னா இப்படி நேயர் விருப்பமா பாடக் கேட்டு கலெக்ட் பண்ணி கொடுப்பாங்க.

ராஜ நடராஜன் said...

ரயில் பயணங்களின் இயல்புகள் அப்படியே எழுத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

vasu balaji said...

/ரயில் பயணங்களின் இயல்புகள் அப்படியே எழுத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது./

நன்றி

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அருமையான நடை பாலா. நெகிழ்வான பதிவு.

பழமைபேசி said...

பாலாண்ணனுக்கு இதெல்லாம் நெம்ப சுலுவு!

vasu balaji said...

ஊக்கத்துக்கு நன்றி ஸ்ரீதர்.

vasu balaji said...

/ பழமைபேசி said...
பாலாண்ணனுக்கு இதெல்லாம் நெம்ப சுலுவு!/

இதெல்லாம் நெம்ப ஓவரு.