Tuesday, October 13, 2009

தீப ஒளி!

அதர்மம் தலை தூக்கும்
ஒவ்வோர் யுகத்திலும்
அதர்மமழிக்க தோன்றுவேன்
என்றவனே! என் கண்ணனே!

எங்களுக்கு வீடிருந்த போது
நீயில்லாத வீடில்லை தெரியுமா?
இப்போதோ எங்களுக்கு
வீடேயில்லை.

உன்னைக் கொண்டாடியதால் தானோ
எங்கள் வாழ்வு தினமும் தீபாவளியானது?
வேட்டுச் சத்தமும் வான வேடிக்கையும்
வழமையாகிப் போனது?

ராவணனை அழித்த உன் அண்ணன்
ஏனோ ராவணன்களோடு கூட்டமைத்தான்
அதர்மமழிப்பேன் என்றாயே
அழிந்ததென்னமோ நாங்கள்தானே!

அண்ணனுக்குப் பின் தானே நீ சொன்னாய்
அதர்மமழிப்பேன் யுகம் யுகமாகவென்று!
மீண்டும் கம்சவதம் செய்ய வருவாயா?
இல்லை நீயும் சக்கராயுதம் தருவாயா?

நீ அவதரித்தால்
அதர்மமழித்தால்
எங்களுக்கு வேண்டியது தீபாவளியல்ல
தீபமேற்ற எங்கள் வீடு! எங்கள் மண்ணில்!

__________/\__________

Monday, October 12, 2009

பெற்ற பிள்ளையா? தத்துப் பிள்ளையா?

பார்த்து தான் தீருவேன் என்றால் சொடுக்குங்கள்.

போன வாரத்தில் ஒரு காலை நாளிதழில் வந்த கலங்கடிக்கும் செய்தி இது. தூத்துக்குடி அருகில் அரசு மருத்துவ மனையில் ஒரு ஆட்டோ ஓட்டுனரின் மனைவிக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளை அவர் மனைவியும் அவரின் தாயும் கழுத்தைத் திருகி கொன்றிருக்கிறார்கள்.

குறைப் பிரசவமானாலும் கிட்டத்தட்ட 2 கிலோ எடையுடன் இன்குபேட்டரில் இருந்த குழந்தைகளை பாலூட்ட அனுமதித்த போது முதலில் ப்ளேடால் அறுத்துக் கொல்ல முயன்று பிறகு இப்படிக் கொன்றார்களாம். காரணம் அவர்கள் பெண் குழந்தைகள்.

கருவிலிருக்கும் குழந்தை பெண் எனத் தெரிந்தால் கருக்கலைப்புச் செய்வதால் குழந்தைகளின் பால் குறித்த தகவல் சொல்லப் படக்கூடாது என்ற சட்டம் சரியாக இருக்கலாம். பிறந்த பிறகு இப்படிக் கொடூரமாக கொல்லத் துணிவார்களேயானால் அந்தச் சட்டம் எதிராகவல்லவா இருக்கிறது?

தாய் சேய் நலத்துறை கருவுற்ற/பிரசவித்த பெண்களின் ஆரோக்கியம் குறித்து கவலைப் படுகிறதேயல்லாமல் இந்த மாதிரி பெற்றும் வளர்க்கத் தயாரில்லாத பெற்றோர்களிடமிருந்து குழந்தையைக் காக்க ஏதும் அமைப்பிருக்கிறதா தெரியவில்லை.

மேலை நாடுகளில் தந்தையின் குடிப்பழக்கம் அல்லது தாயின் இயலாமையினால்  குழந்தை வளர்ப்பில் குறைபாடுகள் இருப்பின் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பாதுகாவலர்கள் குழந்தையை உரிய முறையில், சகல வசதிகளுடனும் வளர்க்கும் பொறுப்பை ஏற்றுப் பாதுகாக்கும் வசதி இருக்கிறது. ஆனால் இங்கு அதற்கான எந்த வழிகாட்டலும் அமைப்பும் இல்லாத நிலையில் இத்தகைய அறைகுறை சட்டங்களால் குழந்தைகளுக்கு என்ன பாதுகாப்பு?

அரசு காப்பகங்கள், மற்றும் தனியார் காப்பகங்களில் கொடுத்து விட்டால், வருமானம் இருக்கிற பெற்றோர் இதற்கான கட்டணத்தைச் செலுத்த சட்டம் வேண்டும். அதற்கும் வழியற்றவர்களுக்கு அரசே மானியம் வழங்கலாம். இந்தக் குழந்தைகளை சட்டப்படி தத்தெடுத்துக் கொள்ள வழியிருப்பதால், அந்தக் குழந்தைகள் தத்து எடுக்கப்படும் வரையிலான காலத்துக்கு கட்டணமோ மானியமோ தேவைப்படும்.

த‌த்தெடுப்ப‌து குறித்தும் இர‌ண்டு வார‌ங்க‌ளுக்கு முன்னால் ப‌த்திரிகையில் ஒரு செய்தி வ‌ந்த‌து. மும்பையைச் சேர்ந்த‌ ஒரு ந‌டிக‌ர் த‌ம்ப‌திக‌ளுக்கு ஒரு பெண் குழ‌ந்தை இருப்ப‌தால் அவ‌ர்க‌ள் த‌த்தெடுத்த‌ இர‌ண்டாவ‌து குழ‌ந்தை ச‌ட்ட‌ பூர்வ‌மான‌து என்ற‌றிவிக்க‌க் கோரி மும்பை உய‌ர்நீதி ம‌ன்ற‌த்தில் தொடுத்த‌ வ‌ழ‌க்கில் அவ‌ர்க‌ளுக்குச் சாத‌க‌மாக‌ தீர்ப்பு என்ப‌து.

ஒரு ந‌டிக‌ருக்கு இன்னொரு பெண் குழ‌ந்தை த‌த்தெடுத்து வ‌ள‌ர்ப்ப‌தில் என்ன‌ பெரிய‌ ச‌ட்ட‌ச் சிக்க‌ல் இருக்கிற‌து என்று தேடிய‌ போது விழி பிதுங்கிப் போனது. இந்து த‌த்தெடுப்பு ம‌ற்றும் ப‌ரிபால‌ன‌ச் ச‌ட்ட‌ம் 1956 (மொழி பெய‌ர்ப்பு ச‌ரியா தெரிய‌வில்லை) பார்த்த‌ போது அதிர்ந்து போனேன்.

அர‌த‌ப் ப‌ழ‌ச்சான‌ இந்த‌ச் ச‌ட்ட‌ம் சொல்வ‌து என்ன‌?

விதி 11 (1) ஆண் குழ‌ந்தையை தத்தெடுக்க விரும்பினால் அந்தத் தந்தைக்கோ தாய்கோ மகனோ, பேரனோ, கொள்ளுப் பேரனோ சட்டபூர்வமான இரத்த உறவிலோ அல்லது தத்தெடுத்ததன் மூலமோ இருக்கக் கூடாது.

விதி 11(2)பெண் குழந்தையானால் அந்தத் தந்தைக்கோ தாய்க்கோ இன்னொரு பெண் அல்லது மகனுக்கு பெண் இரத்த உறவிலோ அல்லது தத்து மூலமாகவோ இருக்கக் கூடாது.

இந்த இரண்டாவது விதியை எதிர்த்துத்தான் வெற்றி. கலாச்சார மாறுதல், இன்ன பிற காரணங்களால் சட்ட பூர்வமற்ற குழந்தைப் பேறு, மற்றும் பெண் சிசுக் கொலை என்று இவ்வளவு நடந்தும் 52 ஆண்டுகளாக ஒரு சட்டம் நடைமுறைகேற்ப எந்த மாறுதலும் மேற்கொள்ளவில்லை என்பது பெரிய அதிர்ச்சி.

இப்பொழுது கூட இது ஒரு தனிமனிதனின் வெற்றியே தவிர சட்டத் திருத்தத்திற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப் படுமா என்பது கேள்விக் குறியே. பெரிய பணக்காரர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல.

தெருவோர வாசிகளில் நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். தாயிழந்த ஒரு பிள்ளை அழுது கொண்டிருக்க, அதன் தந்தை குடித்துவிட்டு மயங்கி கிடக்க, ஒரு தாய், தோ அழுவுது பாரு, அதக் கூட்டியா. அவங்கப்பன் எப்போ தெளிஞ்சி அதுக்கு நாஷ்டா குடுக்குறது என்று தண்ணி சோற்றை ஊட்டி விட்டார். அவர்களுக்கும் இது பிரச்சனையில்லை. அவன் விட்டு ஓடினால் கூட யாரோ வளர்த்து விடுவார்கள்.

சமுதாயச் சாக்கடையில் சாதி, கௌரவம் இன்ன பிற எழவுக்கு வாழ்வைத் தொலைத்த நடுத்தர வர்க்கம் மான் கறி வைத்தியனுக்கு கொட்டிக் கொடுக்குமே தவிர இப்படிக் குழந்தைகளை தத்தெடுக்க முன்வருவதே பெரிய விடயம்.

இதில் இவ்வளவு சட்டச் சிக்கல் இருந்தால் எப்படி? இனிமேலாவது குழந்தை நலனுக்கு முக்கியத்துவம் தந்து அரசு தானே முன் வந்து ஊக்குவிக்காவிடில் இத்தகைய சமூக அவலங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்.

Sunday, October 11, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V2.9

ராஜீவ்காந்தி கொலையை காரணம் காட்டி இன்னும் எத்தனை தமிழ் மக்கள் கொல்லப்படப் போகிறார்கள்?: இந்திய குழுவிடம் யாழ். பல்கலை மாணவர் கேள்வி

அப்புடி போடு. ஆனா இது பக்ஸேயதான் கேட்டு சொல்லணும். இன்னும் எத்தன மிஞ்சி இருக்குன்னு. இதுங்க டூர் வந்ததுங்க.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழர்கள் கண்களில் இருந்து இனி ஒரு சொட்டு கண்ணீர் கூட வரக்கூடாது:கனிமொழி

வராதுங்க. வரதுக்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்கறதில்லையாமே. வரண்டு போச்சு அழுது அழுது!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு

சே சே! அவங்க சுடும்போது இவங்க குறுக்க போய்ட்டாங்கம்பாரு சிதம்பரம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சொந்த செலவிலேயே எம்பிக்கள் இலங்கை சென்றிருக்கிறார்கள்:கலைஞர்

அப்போதானே எது சொன்னாலும் சொந்தக் கருத்துன்னு சொல்லிக்கலாம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
எம்.பி.க்களின் இலங்கை பயணத்தில் எதிர்க்கட்சிகளுக்கு இடமில்லை ஏன்? ஜெ.

சொந்த செலவுல போனாங்களாம். நீங்க காசு தந்திருக்க மாட்டீங்களோ என்னமோ!
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கைக்கு காங். கூட்டணி கட்சியினர் மட்டுமே செல்வது சந்தேகத்தை அளிக்கிறது: பழ.நெடுமாறன்

உங்கள அனுப்பினா சொல்லிக் குடுத்த மாதிரி சொல்லமாட்டீங்களே. இதில சந்தேகமே வேணாம்யா.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழக எம்பிக்களின் இலங்கை பயணம் வெளிப்படையானது: தங்கபாலு

தெரியுமே. கண்துடைப்புக்கும் வாயடைப்புக்கும் செட்டப்புன்னு.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஈழத்தமிழருக்காக மவுனம் காத்தேன்: கலைஞருக்காக இப்போது மவுனம் கலைக்கிறேன்: பாரதிராஜா

ஒரு மசுருக்கும் புண்ணியமில்ல. எதுக்கு இந்த நாடகம். சீ.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையில் யாரும் இதுவரை செல்லாத இடத்துக்கும் செல்வோம்: கனிமொழி எம்.பி. நம்பிக்கை

நீங்க சொல்றது தானே. தனியா சொன்னா பொய். கூட்டா சொன்னா அறிக்கை.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்திய அனைத்துக்கட்சி குழுவினரின் கிழக்கு மாகாண விஜயம் இறுதி நேரத்தில் ரத்து.

பல்லி கத்துச்சோ. போங்கடா.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நான் பத்திரிக்கையாளனா?நடிகனா?: கலைஞர் விளக்கம்

சந்தேகமே வேணாம். ரெண்டும் ஒண்ணுதான். வேஷம்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒபாமாவுக்கு நோபல் பரிசா?கலைஞர் கண்டனம்

ஆமாங்க. சொக்குக்கு எட்டாவது தடவையும் இல்லைன்னா எப்புடி?மயான அமைதி நாயகர்கள் உங்க மூணு பேருக்கும் கொடுத்திருக்கலாம்.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விருதுகள் எல்லாம் வருத்தத்தைப் போக்கக்கூடிய மருந்துகள்: கலைஞர்

மருத்துவத் துறைக்கான அடுத்த நோபல் பரிசு இவருக்குப்பா.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாவோயிஸ்ட்டுகளை எதிராக ராணுவம் செயல்படாது!

அவன் தமிழனா என்னா?
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலக பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க இலங்கை அறிவுரை வழங்கவுள்ளது

ஆமாம். ஒரே ஒரு அணுகுண்டு. போங்கடா.

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------