Sunday, August 16, 2009

சின்ன சின்ன சந்தேகங்கள்

பாராட்டுனா அப்ரிஷ்யேட் பண்றதுங்கறமே மட்டம் தட்டினா டிப்ரிஷியேட் பண்ணிட்டாங்கன்னு ஏன் சொல்றதில்ல?

ஹெல்மட் போடுங்கப்பான்னா வழுக்கை விழும்னு கோர்ட் வரைக்கும் போறவுங்க என்னேரமும் இயர்போன் வெச்சிகிட்டு பாட்டு கேக்குறாங்களே காது புட்டுக்காதா?

மேல ஏத்திவிடுறப்போ எஸ்கலேடர் சரி, இறக்கிவிடுறப்போவும் அதே பேரு எப்படி?

பேச்சைக் குறைன்னு பெரியவங்க சொன்னத கேக்குறதா? பேசிக்கிட்டே இருங்கன்னு செல்போன்காரன் சொல்றத கேக்குறதா?

இந்த பொம்பள புள்ளைய பத்து விரல்ல டைப் பண்றத விட கட்டை விரல்ல எஸ்.எம்.எஸ். ரொம்ப வேகமா அடிக்குதுங்களே எப்படி?

ஹெட்போன தன் காதுல மாட்டிகிட்டு, யாராவது ஏதாவது கேட்டா கேக்குறவன் செவிடன் மாதிரி ஓன்னு கத்துறமே ஏன்?

குடியிருப்புக்குள்ள லாரி எல்லாம் வராம குறுக்கு கம்பி போட்டா, தாண்டி போற சைக்கிள்காரன்ல இருந்து கார் ஓட்டிட்டு போறவன் வரைக்கும் (ஓட்டுறவன் மட்டும்தான்) அந்த இடம் வந்ததும் குனிஞ்சிகிட்டு ஓட்டுறாங்களே ஏன்?

நிறைய மருந்து இருக்கிறதால புதுசு புதுசா நோவு வருதா; நிறைய நோவு இருக்கிறதால புதுசு புதுசா மருந்து கண்டு பிடிக்கிறாங்களா?

அநியாய வட்டி வாங்கினா சிறைத் தண்டனைன்னு சொல்ற அரசே, சொத்து பங்கு போட்டா குறைவான முத்திரை தீர்வையும், கடன் பத்திரம் பதிய அதிகமான தீர்வையும் வைக்குதே எப்படி?

புகைப்பட அடையாள அட்டையை பார்த்து, பேர் இருக்கான்னு பார்த்துத்தானே வாக்களிக்க விடுறாங்க. அப்புறம் ஏன் விரல்ல மை வைக்கணும்?

விமானப் பயணம் ஒரு மணி நேரம்னாலும் 2 மணி நேரத்துக்கு முன்னாடியே ரிப்போர்ட் பண்ணணுங்கிறானே ஏன்?

அடிக்கடி விமானத்துல போற கொள்ள பேரு லக்கேஜ்ல அவன் ஒட்டுற ஸ்டிக்கரையும் பட்டையையும் அப்பிடியே விட்டுட்டு திரியிறாங்களே ஏன்?

விமானத்துல பயணம் பண்ண களைப்புக்கு ஜெட்லாக்னு பேரு இருக்கே ரயில், பஸ் பயணக் களைப்புக்கு ரயில்லேக், பஸ் லேக் னு ஏன் சொல்றதில்ல?

பகல்ல கம்பளி போர்த்தினா மாதிரி மொய்க்கிற ராத்திரி எங்க போய் தூங்குது? பொழுது சாயவே படை எடுக்கிற கொசு பகல்ல எங்க போகுது?

யாருமே இல்லாத ரூம்ல ஒரு கொசு கூட இருக்காதே. ஒரு ஆளு வந்ததும் அதுக்கெப்படி தகவல் தெரிஞ்சி கூட்டமா வந்து புடுங்குது?

மனம் விரும்புதே உன்னை உன்னை - 1

போன மாதம் தேனி போக மதுரையில் இறங்கி ரயில் நிலைய ஓய்வறையில் குளித்து பெட்டியை கெடாசிட்டு பொறுப்பான ஆளிடம் பஸ் நிலையம் எங்கேன்னு கேட்ட போது எனக்குத் தெரியல. இப்படி ஒரு சோதன காத்துக் கிடக்குன்னு. தனியார் பஸ் சீக்கிரம் போகும்னு சொன்னாங்கன்னு போனா நிறைய பஸ் நின்னிச்சி. சரி ஒரு மணி நேரப் பயணமாச்சே, எந்த பஸ்னு கேக்கலாம், அப்படியே ஒரு தின இதழ் வாங்கலாம்னு போய் இருந்த தினமலரை வேண்டா வெறுப்பா வாங்கினப்பதான் அதுங்கள பார்த்தேன்.

கருகருன்னு மினுக்க மினுக்க கண்ணாடி உடையில ஒன்னு என்னைப் பார் என் அழகைப்பார்னு இழுக்க பக்கத்துலயே ரோஜா நிறத்துல ஒன்னு மினுக்குது. சின்ன வயசுல சென்னைல பார்த்தது. அப்புறம் கண்ணுல காணுறதே இல்லை. இதுங்கள மதுரையில பார்ப்பேன்னு நினைச்சது கூட இல்லை. அதும் அப்போ பார்த்த மாதிரியே அதே அழகு. கொஞ்ச வருசம் குறைஞ்ச வருசமில்லிங்க. சின்ன வயசுல இருந்து இதுங்க கூட பழகமாட்டமான்னு ஏங்கின ஏக்கம். மத்தவங்களுக்காக பயந்து பயந்து பெத்தவங்களுக்காக பயந்து உள்ள போட்டு பூட்டி வெச்ச ஆசைங்க அது. சுத்தி ஆளுங்க இருக்கிறதோ பஸ் நிலையம்னோ, வயசோ எதுவும் உறைக்கல. கை கால்லாம் டோப் அடிக்கிறவன் அதுக்கில்லாம தவிக்கிறா மாதிரி உதறுது. மனசு கிடந்து துடிக்குது. வெளியூருடா. யாருக்கும் தெரியப் போறதில்ல. எத்தனை நாள் ஏக்கம். தீத்துக்கோன்னு. மனசு பேசினா ரெண்டு குரல்ல பேசும்தானே. பேசுச்சி. மவனே. காலங்கார்த்தால உன் வயசு ஆளுங்க பண்ணுற வேலையாடா? வெக்கமா இல்லை. அவ்வளவு புலனடக்கம் இல்லாம போச்சா. தூத்தெறின்னு துப்புது. அது கெடக்குது. இப்பொ விட்டா திரும்ப வாய்ப்பு கிடைக்குமா தெரியாது. விடாதன்னு எதிர்க்குரல். தவிச்சி போனேன். நல்ல காலம் தேனி தேனின்னு ஒரு பஸ் கிளம்ப ஓடிப்போய் ஏறிட்டேன். மனசு மட்டும் இன்னும் அங்கயே சுத்துது.

அஞ்சாப்பு படிக்கிற வரைக்கும் இதெல்லாம் நமக்கு தெரியாதுங்க. வீட்டு எதிரில பள்ளிக்கோடம். பள்ளிக்கோடம் விட்டா வீடு. வீட்டுப் பாடம். ஆறுல இருந்து ஏழு வரைக்கும் அக்காவுக்கு பாட்டு சொல்லிக்குடுக்க வாத்தி வருவாங்க. அக்காவ விட நாந்தேன் அக்கறையா கேக்குறது. அப்புறம் சாப்பாடு தூக்கம்னு போய்டும். அப்பாக்கு முடியலன்னு அலுவலகத்துக்கு பக்கதுல வீடு பார்த்தாங்க. சென்னை மாநகருக்குள்ள வந்துட்டம். குடி வந்த அடுத்த நாளே கிரகம் புடிச்சிட்டுது. அதுவும் ஒரு பேப்பர் வாங்க போய்தான் இதுங்கள முதல்ல பார்த்தேன். முதல் பார்வையிலயே மனசுக்குள்ள வந்து உக்காந்துடிச்சிங்க. பார்த்த விழி பார்த்த படின்னு திரும்ப திரும்ப பார்த்துக்கிட்டே வீடு வந்தேன்.

புது பள்ளிக்கோடம். புது சினேகம். நம்பகமா ஒரு நண்பன் கிடைச்ச பொறவு மெதுவா ஒரு நாள் என் ஏக்கத்த சொன்னேன். இப்பிடி பார்த்தேனடா. யாரு என்னான்னு தெரியலடான்னு. அவனுக்கு நல்ல பழக்கமாம். கருப்பா இருந்திச்சின்னு சொன்னேன்ல. அது மூணு பேராம். சின்னது கொஞசம் நிறமாம். ஆனா நச்சு புடிச்சதாம். பெருசு முரடாம். நடுவாச்சிதான் சூப்பராம். சினிமால எல்லம் வந்திருக்குடான்னு ஏத்தி விட்டான். ரோசு கதையே வேறயாம். அதுமாதிரி வரவே வராதாம். இப்போல்லாம் சகட்டு மேனிக்கு நம்ம பொண்ணு பர்ஸ்ல இருந்து 100ரூ எடுத்துக்கறேன்னு லவட்டிட்டு போகுது. அப்போ கைக்காசுன்னா என்னான்னே தெரியாது. அவந்தான் சொன்னான். கைக்காசு இல்லாம செலவுக்கு எப்டிடான்னு.

தயங்கி தயங்கி தாங்க மாட்டாம ஒரு நாள் அம்மாட்ட சொல்லிட்டேன். அவ்வளவுதான். படிக்கிற வயசில இதெல்லாம் என்னான்னு சாமியாடிட்டாங்க. அப்பாட்ட வேற சொல்லி கந்தலாக்கிட்டாங்க. எட்டாக்கனின்னு மனசொடிஞ்சி போனாலும் அடைந்தால் மகாதேவி ரேஞ்சுக்கு மனசுல வைராக்கியம் விழுந்துடிச்சி. மனசு ஏங்கின ஏக்கத்துக்கு வடிகால் மாமன் மூலமா கிடைச்சது. பஸ் ஏத்திவிட பையைத்தூக்கிட்டு வந்தேன்னு நாலணா குடுத்தாங்க. மூச்சிறைக்க நண்பன் வீட்டுக்கு போய், தோடா செலவுக்கு காசு வாடான்னு கூட்டிக்கிட்டு போய் இதுங்களையும் கூட்டிக்கிட்டு நம்ம வீதில போனா மாட்டிபோம்னு வேற வழியா சுத்திகிட்டு போயும் போறாத காலம் அப்பாவோட நண்பர் பார்த்துட்டாரு போல. போட்டு குடுத்துட்டாரு. இந்த வயசிலே இப்படி நாசமா போறான்னு.

சாயந்திரம் வீதில விளையாடிட்டிருக்க அப்பா அலுவலகத்தில இருந்து வரும்போதே, உள்ள வாடான்னு சொன்ன விதம் டவுசர் லேசா ஈரமானா மாதிரியே பீலிங்கு. மானமே போச்சு. எப்படி இப்படி? இதுக்கெல்லாம் ஏது காசுன்னு. மாமான்னு முனகி முடியமுன்னாடியே உந்தம்பிக்கு அறிவிருக்கான்னு எகிற, அம்மாக்கு தம்பிய சொல்லிட்டாங்கன்னும் சேர்த்து வந்த கோவத்தில பின்னிட்டாங்க. படிக்கிற வயசில இதெல்லாம் எதுக்குன்னு அட்வைஸ் வேற.

அப்புறம் வளர்ந்து சம்பாதிக்க ஆரம்பிச்சும் இந்த ஏக்கம் இருந்து அரிச்சிக்கிட்டே இருக்கும். ஆனாலும் யாராவது பார்த்து பத்த வெச்சிட்டா அசிங்கம்னு இப்படியே வாழ்க்கை ஓடிப்போச்சு. அப்பப்போ நினைவு வந்தாலும் கூச்சம். எப்படி இவ்வளவு வளர்ந்த மனுசன் பண்ணுற வேலையான்னு விடுறது. அதுக்கு வந்த சோதனைதான் இது.(திரும்ப முதல் இரண்டு பேராவ படிங்க. சலிச்சிக்காம).

நீங்க பாட்டுக்கு கேவலமா ஊகம் பண்ணிக்க வேணாம். கருப்புன்னு சொன்னது கமருகட்டு. ரோசுன்னு சொன்னது தேன் முட்டாயி.



Saturday, August 15, 2009

யாரைப் போய் கேக்குறது?

1.கலைஞர்னு சொல்லமாட்டம கலின்ஜர்னு சொல்லியே பழகின தமிழன சர்வக்ஞர்னு சரியா சொல்லுடான்னு கன்னடத்தான் அடிக்கமாட்டானானு

2. சர்வக்ஞர் சிலை திறப்பு விழாவில் தமிழாக்கம் செய்து பாராட்டி பேசினாரே கலைஞர் இதுக்கு முன்னாடி படிச்சிருக்காரா? இத யாரு மொழிபெயர்த்து சொன்னதுன்னு

3. பன்றிக்காய்ச்சல், எலிக்காய்ச்சல்னு நமக்கு வந்தா பேரு வைக்கிறமே, அதுங்களுக்கு வந்தா மனிதக்காய்ச்சல்னு ஏன் சொல்லுறதில்லைன்னு

4.தனி ஈழம்தான் தீர்வுன்னு தம்மு கட்டி கத்தின கட்சியெல்லாம் தேர்தல் முடிஞ்சதும் தனக்கென்ன போச்சின்னு கெடக்குதுங்களே, இதுங்கள என்ன பண்ணலாம்னு

5. ஆறாவது மாடியில இருக்கிற பன்னாடைங்களெல்லாம் வெள்ள நிவாரணம் வாங்கிக்கிட்டு, அவன் சொத்தையா குடுக்கிறான்? நாம கட்டின வரிப்பணம்தானேன்னு பேசுதுங்களே இதுங்க மனுசங்கதானான்னு

6. வீட்டில LCD TV இருந்தாலும் அரசு இலவச தொலைக்காட்சிப் பெட்டி தருதுன்னு வாங்கிக்கிட்டு அதைக் கொண்டு வர 3 கி.மீ. கூட இல்ல மனசாட்சியே இல்லாம அம்பது ரூபாய் கேக்குறான் ஆட்டோக்காரன்னு அலுத்துக்கிற பரதேசிய எதைக்கொண்டு அடிக்கலாம்னு

7. என்னதான் கட்சித் தலைவின்னாலும் சொக்கு சாதாரண பிரஜை தானே? அரசு முடிவை எல்லாம் அவங்க கிட்ட கலந்தாலோசிப்பாங்களா மாட்டாங்களா? அவங்க சம்மதத்தோடதான் அரசு முடிவுன்னா அது இறையாண்மையை மீறினதில்லையான்னு

8. ஆந்திராவில் விளைச்சல் இல்லைன்னு விவசாயக் குடும்பங்கள் தற்கொலை பண்ணிக்கிறப்ப பலாலி விமான தளம் நவீன மயமாகணும்னு கோடி கோடியா குடுக்கிறாங்களே இது நியாயமான்னு

9. தமிழருக்கு ஆதரவா எவன் பேசினாலும் புலி ஆதரவுன்னு சகட்டு மேனிக்கு சொல்லுற இலங்கைக்கு சுரணையே இல்லாம கோடி கோடியா குடுக்கிறானுவளே ஏன்னு

10.ஐம்பதாயிரம் பேர் ஒரே நாள்ள சாவடிக்கப் பட்டாலும் ஒரு கே.பி. கடத்தப் பட்டாலும் எவனுமே ஏன்னு கேக்க மாட்டங்குறானே, அப்படி என்னதாண்டா உங்களுக்குன்னு

11. ரிஜிஸ்ட்ரார் ஆபீசில இந்த வருட வருமானத் திட்டத் தொகை இவ்வளவு, இன்றைக்கு வரை வருமானம் இவ்வளவுன்னு போடுறாங்களே. தேடிப் போய் ஆள் புடிச்சா வருமானத்தை பெருக்க முடியும்? பின்ன ஏன்னு

12. ஹோட்டல்ல‌ ரண்டு இட்டிலிய சாப்டாலும் பசிக்கிறா மாதிரியே இருக்கே, அவன் அதே ஒரு இட்டிலிக்காற மாவ இழுத்து இழுத்து பேப்பர் ரோஸ்ட்னு குடுத்தா வயறு ஊதிக்குதே எப்படின்னு