Thursday, August 5, 2010

இரண்டாம் நிழல்-3.


பாகம் 3:
ஆண்கள், பெண்கள், குழந்தைகள்.....வெள்ளை, கறுப்பு, மஞ்சள், மாநிறம்...மேடு பள்ளம்....நகரம், கிராமம், காடு எல்லாம் மாறினாலும் விதம் விதமாக வண்ணம் காட்டினாலும் மாறாமல் இருப்பது....கடல்...குண்டான பெண் உடுத்திய நீல சேலை போல..... இந்தியப் பெருங்கடலும், ஆர்க்ட்டிக் பெருங்கடலும், அட்லாண்டிக் பெருங்கடலும், பசிஃபிக் பெருங்கடலும் ஒன்று தான்...மிகப்பெரிய உப்பு கரைசல்.... சென்னை கடற்கரையும் பாண்டிச்சேரி கடற்கரையும் ஒரே காற்று... உப்புக் காற்று...

ஃபோட்டோவுக்கு சிரிக்கும் புது மனைவி போல கொஞ்சமாய்த் திறந்திருந்த ஜன்னல் வழியே வந்த பாண்டிச்சேரியின் கடல் காற்றை ஆழமாய் உள்ளிழுத்ததில் பிரசன்னாவுக்கு உப்புக் கரித்தது....அவன் முகம் வண்ணான் துறையில் வெளுத்தெடுத்த வேட்டி போல ரத்தம் இழந்து கசங்கிப் போய் இருக்க‌....நீண்ட நேரமாய் உட்கார்ந்திருந்தில் கால்களில் ரத்த ஓட்டம் தடை பட்டு முழங்காலுக்கு கீழே லேசாய் அரிப்பெடுத்தது..

ஒரே நாளில்.....இல்லை....ஒரே மாலையில் எத்தனை நடந்திருக்கிறது...தவறு.....என்ன நடக்கிறது என்றே புரியவில்லை...நேற்று மாலை ஸ்ருஷ்டியை பார்க்க மல்டிப்ளக்ஸ் போனது ஞாபகம் இருக்கிறது.....அங்கு ஸ்ருஷ்டியை காணாமல் ஸ்ரீதரன் அங்கிள் போன் செய்தது, ஆபிஸுக்குப் போகும் வழியில் ஜெயராமனை பிக்கப் பண்ணியது ஞாபகம் இருக்கிறது. ஆஃபிஸ் போவதாக ட்ரைவ் பண்ண ஆரம்பித்தது... .திடீரென்று மூச்சு திணறல்...இப்பொழுது எங்கே இருக்கிறேன்....ஜெயராமன் எங்கே...ஸ்ருஷ்டி எங்கே...என்ன எழவு தான் நடக்கிறது....

எரிச்சலுடன் தூக்கமும் குழப்பமுமான கண்களை கசக்கிக் கொண்டு மீண்டும் அறையை சுற்றிப் பார்த்தான்...

இன்னமும் விடியாத மெல்லிய இருட்டு...சின்ன அறை....மிக சாதாரணமான ஸோஃபா...டீ டேபிள்...அதன் மேல் நிரம்பியிருக்கும் ஆஷ் ட்ரே...பாதி விஸ்கியுடன் பீங்கான் மதுக் கோப்பைகள்.....அவனுக்கு எதிரே சிறிய ஃபிலிப்ஸ் ஃப்ளாட் ஸ்க்ரீன் டி.வி...இவன் முகத்தை பார்த்துக் கொண்டு நேர் எதிரே.....
கண்டிப்பாக இது கனவு...யாரையும் நம்ப முடியாத ஒரு போலீஸ்காரனின் வெளியில் சொல்ல முடியாத அந்தரங்க பயம்...பிரசன்னா கண்களை மீண்டும் கசக்கிக் கொண்டான்.

அவரை இரவு உடையில் பிரசன்னா இது வரை பார்த்ததில்லை...கை இல்லாத பழுப்பேறிய முண்டா பனியன்...கழுத்தில் தொங்கும் கறுப்பு கயிற்றில் ஏதோ ஒரு டாலர்....திருச்செந்தூர் முருகனாக இருக்கலாம்...கொஞ்சம் தொப்பை விழுந்த‌ வயிறு வரை ஏற்றி கட்டிய அழுக்கான கட்டம் போட்ட‌ லுங்கி....சுருளும் இல்லாது நேரும் இல்லாத அந்த இடைப்பட்ட கோரை முடி...ஒரு பக்கம் வழக்கம் போல சரியாக நறுக்கப்படாத மீசை...தென் கோடி தமிழகத்தின் மலையாளமும் தமிழும் கலந்த ஒரு மூக்கு...
இவன் முகத்தையே பார்த்துக் கொண்டு ஐஜி சங்கரப் பெருமாள்...
===============================
இவன் விழிப்பதை பார்த்ததும் சங்கரப் பெருமாள் கையிலிருந்த சிகரெட்டை ஆழமாக இழுத்து விட்டு, “ஸாரி பிரஸன்னா...ஜெயராமன் மயக்க மருந்து டோஸ் ரொம்ப அடிச்சிட்டான் போலருக்கு...அவனுக்கு இதுக்கு முன்னாடி பழக்கம் இல்ல என்றார்...”

பிரஸன்னாவுக்குள் பயம், குளிர்ந்த வாள் போல அறுத்தது.. ஒருவேளை...இல்லை..இருக்காது... “என்ன ஸார் இது...என்ன நடக்குது... என்னை எதுக்கு கடத்தணும்? இது எந்த ஊரு... நீங்க என்ன பண்றீங்க... ஸ்ரீதரன் எங்கே? ஸ்ருஷ்டி எங்கே?” வேகமாய் எழுந்த அவனை சங்கரப் பெருமாளின் வலுவான கைகள் கீழே அழுத்தியது.

ஒக்காரு ஒக்காரு...சொல்லுதேன்...அதுக்கில்லா ஒன்ன இங்க கொண்டு வந்தது...தப்புதான்...சொல்லாம அள்ளிப் போட்டுக்கிட்டு வந்தது தப்பு தான்...ஆனாக்க எனிக்கு வேற வழி ஒண்ணும் இல்லையாக்கும்...நாஞ் சொல்றத கேட்டா நீயும் சரின்னு சொல்லுவ பாரு.

பிரசன்னா வெட்டத் தயாராகும் ஆடு போல குறுக்காக தலையசைத்தான்.. “மொதல்ல நான் எங்க இருக்கேன்னு சொல்லுங்க ஸார்...இது எந்த ஊர்...இது யார் வீடு...”

சங்கரப் பெருமாள் ஆஷ் ட்ரேயில் இருந்த சிகரெட்டை எடுத்து இழுத்து விட்டு "எங்கருக்கோம்... யாரு வீடு...ம்ம்ம்.....குறிச்சிக் குப்பம்..பாண்டிச்சேரி...இங்க இருந்து அரை மைல்ல கடலு.......எனக்க ஃபெரண்டு வீடாக்கும்...அவன் அறதளி போய்ச் சேந்து அது கொள்ள நாளாச்சு.....எப்பிடி செத்தான்னு கேக்கியா...குடிகாரப்பயல்லா அவன்...குடிச்சி குடிச்சி கொடலு வெந்து பொறத்தால ரெத்தம் வந்து போய்ச் சேந்துட்டான்...இப்பத்தைக்கு இந்த வீடு எனக்க கண்ட்ரோல்ல உண்டு...."

கையூன்றி எழ முயன்ற பிரசன்னாவின் முன் சிகரெட் நீட்டப்பட்டது..."இந்தா....நீ தம்மடிப்பன்னு எனக்கு தெரியும்லா...இங்கின என்ன பண்ணுதோம்னு கேக்குதியாக்கும்..அதொண்ணுமில்லா...இந்தா இந்த வீடியோ போடுதேன்...பாரு...."
=========================
சங்கரப் பெருமாள் ரிமோட் கண்ட்ரோலை தட்ட ஃப்ளாட் ஸ்க்ரீன் டிவியில் தெளிவில்லாமல் காட்சிகள் விரிந்தன....

ஏதோ ஒரு கடற்கரை...தூரமாக நிற்கும் கப்பல்களில் கொரிய கொடிகள்....சென்னை துறைமுகத்தில் நிறைய கொரிய கப்பல்கள் ஞாபகம் இருக்கிறது...சென்னையாக இருக்கலாம்.....கேமராவின் ஃபோகஸ் குறுகிக் கொண்டே வந்து இப்பொழுது ஒரு படகு தெரிகிறது....சாதாரண உடை உடுத்திய மனிதர்கள்....நான்கைந்து பேர் இருக்கலாம்...குறுக்கும் நெடுக்குமாக நடப்பதில் சரியாக தெர்யவில்லை....மீன்பிடி படகு? ஏதோ பேசுகிறார்கள்...புரியாத மொழி...இல்லை....இது மீன்பிடி படகு இல்லை..த்தா பாடு....சென்னை மீனவர்களின் மொழி பிரசன்னாவுக்கு தெரியும்...

இது அவர்களின் மொழியில்லை.....என்ன மொழி இது...பிரசன்னா யோசிக்கும் போதே படகின் தரையில் உட்கார்ந்திருந்த ஒருவன் புரியாத மொழியில் என்னவோ சொல்ல நின்று கொண்டு இருந்த ஒருவன் என்னவோ சொல்லி அல் ஜிஹாத் என்றான்...அவன் முகம் தெரியவில்லை...திரும்பி நின்றதில் முதுகும், கால்களும், கலைந்த தலை முடியும் மட்டுமே தெரிகிறது.....கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் இருந்த அடுத்தவன் ஏதோ கேட்க முதலில் பேசியவன் அல் கயால் என்றான்...கேமரா நின்று கொண்டிருந்தவனின் முகத்தை படம் பிடிக்க முயற்சித்திருக்க வேண்டும்...படகு கடல் அலை பட்டு அலைந்ததில் கேமரா கோணம் தப்பி நீலமான‌ கடல் மட்டுமே திரையில் வந்தது....
=====================
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த பிரசன்னாவுக்கு அறையில் அடித்த மெல்லிய கடற்காற்றையும் மீறி வியர்த்திருந்தது... பயங்கரவாதிகள்... ஃப்ளாட் ஸ்க்ரீன் டி.வி. கடல் அலைகளில் உறைந்திருக்க, கண்களை விலக்கி “ஸார்....இவங்க....”

சங்கரப் பெருமாள் கறுப்பாய் இருந்த திரவத்தை கோப்பையில் முழுதுமாக கவிழ்த்து பாட்டிலை தூக்கி எறிந்து விட்டு “தாயோளிங்க... ஆமா...பிரஸன்னா... அவனுங்க தான்...அவனுங்க யாரு எப்படி பிடிக்கிறதுன்னு நீ கவலைப்பட வேண்டியதில்லை.....காலையில புழல் ஜெயில்ல பாத்துக்கலாம்...நேத்தி நைட்டே அவனுவளை அள்ளியாச்சி...எல்லாப் பயலுவளும் காஜா பீடி சரியில்லைன்னு அரபில கம்ப்ளைண்ட் பண்ணிட்டுருக்கானுவ....”

சொல்லிவிட்டு சங்கரப் பெருமாள் பிரசன்னாவை உற்றுப் பார்த்தார்....

“அப்போ...அப்போ...நான்...என்னை எதுக்காக சார் இங்க...."

அவனை பார்க்க விரும்பாதவர் போல சங்கரப் பெருமாளின் முகம் தூரமாக அந்த இருளில் வெறித்தது... “ப்ரஸன்னா....எங்க அப்பாரு ரொம்ப ஷோக்கான ஆளு.... போற எடம் பொண்டாட்டி...வாற எடம் வைப்பாட்டி....அதுல ஒன்னு கேரளாவுல தங்கிட்ட அரபிக் குடும்பம்..மூணாம் தலைமுறைதான்......ஆனா எனக்கு சித்தி மொறை. அவனுவ அல் கயால்னு சொல்றனுங்க... கவனிச்சியா? அதுக்கு அரபில நிழல்னு அர்த்தம்...எனக்கு அரபி தெரியாது...ஆனா, அவனுங்க தலைவனுக்கு ஈடா இங்க யாரோ இருக்காங்க. அது யாருன்னு அவனுங்களை முட்டிக்கு முட்டி தட்டியும் ஒண்ணும் தெரியலை ....அதான்...”

பிரஸன்னாவுக்கு கடல் காற்றை மீறி காது மடல்கள் வேர்த்தது....இவர் சொல்வது...ஸ்ருஷ்டியை காணவில்லை...அப்படியானால் ஸ்ருஷ்டி? என்ன சொல்ல வருகிறார்...இவருக்கு என்ன தெரியும்...எவ்வளவு தெரியும்...

சங்கரப் பெருமாள் கோப்பையில் இருந்த கறுப்பு திரவத்தை ஆழமாக குடித்தார்.....அந்த இருட்டில் சிரங்கு பிடித்தவன் நாட்டு மருந்து குடிப்பது போல அவர் முகம் கோணல்மாணலாகியது... “ஸாரிடே பிரசன்னா...அந்த அல் கயால்...அவனுவளோட‌ லோக்கல் பாஸ்...அந்த குட்டி...உன்னோட ஃபியான்ஸி... ஸ்ருஷ்டியா இருக்கலாம்னு எனக்கு ஒரு சம்சயம்... என்ன தான் இருந்தாலும் நீ கெட்டிக்க போறவள்லா...அவளை போலீசுக்காரனுவ விசாரிக்க மாதிரி விசாரிக்க எனக்கு பிரியமில்லா..ஒன்னை வரச்சொன்னா வருவியாக்கும்? அதான் ஜெயராமனை விட்டு மருந்தடிச்சி தூக்கி வரச் சொன்னேன்....”

சங்கரப் பெருமாள் முடிக்காமலே மீண்டும் குடிக்க ஆரம்பிக்க பிரஸன்னா அவரையே வெறித்து பார்த்தான்....எப்படி....இது போலீஸ் புத்தி...இந்த சங்கரப் பெருமாள் குறி வைக்கிறார்...வெறுமனே தூண்டில் வீசி மீன் சிக்குமா என்று பார்க்கிறார்....ஸ்ருஷ்டிக்கு எதிராக இவர்களிடம் எந்த ஆதாரமும் இருக்காது...இருக்க வாய்ப்பில்லை...என்னேரமும் நிழல் போல‌ அவள் கூட இருக்கும் எனக்கு தெரியாது எதுவும் நடக்க வாய்ப்பில்லை...

“இருக்காது ஸார்....கண்டிப்பா இருக்காது...உங்களுக்கு ஸ்ருஷ்டி பத்தி தெரியலை....ஒரு சின்ன பூனைக்கு அடிப்பட்டா கூட ரொம்ப கஷ்டப்படுவா... கொஞ்சம் ஹார்ஷா பேசிட்டா கூட ஒரு வாரம் என்கிட்ட பேச மாட்டா..அவ போய் எப்படி சார் இந்த மாதிரி தீவிரவாதின்னு...உங்களுக்கு என்ன பிரச்சினை சார்?அவங்க அப்பா கூட காசு பிரச்சினையா இல்லை என் கூட பிரச்சினையா...என்ன ஆதாரம் சார் வச்சிருக்கீங்க....”

பிரசன்னா சூடாக குரல் உயர்த்தி பேச ஆரம்பிக்க‌ சங்கரப் பெருமாள் மதுக் கோப்பையை குறுக்காக ஆட்டினார்...பாதியாக நிறைந்திருந்த கறுப்பு மது ஆடியது....

“அவ குத்தஞ் செஞ்சான்னு நான் எப்பலே சொன்னேன்? ஆனாக்க‌....அவளை யார்னா ப்ளாக் மெயில் பண்ணலாம்ல? அவங்க அப்பனுக்கு நான் ஒரு கால் பண்ணேன்...அனானிமஸா...நிழல்னு ஒரு வார்த்தை தான் சொன்னேன்.... அதுக்கே அவனுக்கு வேர்த்திருச்சு....சோ! என்னவோ தப்புடே....நீ தான் கேக்கணும்..நல்ல புள்ளையா எதமா பேசிக் கேக்கணும்...அதுக்கு தான் உன்னை வர வைச்சிருக்கேன்...”

இந்த கறுப்பு மனிதனுக்குள் எத்தனை கணக்குகள்....பிரசன்னா நம்ப முடியாமல் பார்த்து விட்டு எழுந்து கொண்டான்.... “ஒக்கே ஸார்....நான் பேசறேன்.. ஸ்ருஷ்டிக்கிட்ட நான் பேசிக் கேட்கிறேன்.... மொதல்ல இப்ப அவ எங்க இருக்கா? சொன்னீங்கன்னா உடனே கிளம்ப நான் ரெடி....”

சங்கரப் பெருமாள் அவனை ஏறிட்டுப் பார்த்தார்...."பேசுலே..நமக்கு உம்ம தெரியஞ்சாகணும்..அவனுவ‌ பிளான் என்ன?யாரெல்லாம் அவனுவ நெட்வொர்க்ல இருக்கானுவ‌...முக்கியமா லோக்கல் கமாண்டர் யாரு.... ஆனாடே...நீ ஒரு போலீஸ்காரனா போற...ஸ்ருஷ்டிய கெட்டிக்க போறவனா போகலை..ஞாபகம் வச்சிக்க.....”

பிரஸன்னாவின் உடம்பு நிமிர்ந்தது... “தெரியும் ஸார்....அவ எங்க இருக்கான்னு சொல்லுங்க...இப்பவே போறேன்...”

சங்கரப் பெருமாள் தேடி எடுத்து மீண்டும் ஒரு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டார்... “நீ எங்கயும் போக வேணாம்டே பிரசன்னா...ஒனக்க‌ பியான்ஸி பக்கத்து ரூம்ல தான் இருக்கா....”

பிரசன்னா இதை எதிர்பார்க்கவில்லை...எழுந்த நிலையில் அப்படியே நின்றான்.....என்னையும் ஸ்ருஷ்டியையும் கடத்தி ஒரே வீட்டில் அடைத்து... என்ன நடக்கிறது......என்னைக் கடத்தியது எஸ்.ஐ. ஜெயராமன்...அப்படியானால் ஸ்ருஷ்டியை யார் கடத்தியது? ஐ.ஜியா இல்லை வேறு யாராவதா?

இந்த மனிதனின் கணக்கு என்ன?இதில் எத்தனைப் பேர் ஈடுபட்டிருக்கிறார்கள்?
சுவர் கண்டு விழிக்கும் கன்று போல பிரசன்னா ஐ.ஜி. சங்கரப் பெருமாளையே பார்த்துக் கொண்டு அசையாது நின்றான்....
தொடரும்
=================
இன்றைய பகுதியை எழுதியவர்?:1. அது சரி 2. முகிலன் 3. கதிர் 4. வானம்பாடிகள் 5.கலகலப்ரியா 6.பிரபாகர் 7. நசரேயன். 8.பலா பட்டரை ஷங்கர்

Wednesday, August 4, 2010

இரண்டாம் நிழல் - 2

பாகம்- 2
ஸ்ருஷ்டி இண்டஸ்ட்ரீஸ் என்ற பெரிய அலங்கார வளைவுக்குப் பின்னால் அந்தத் தொழிற்சாலை அரவமில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது. தொழிற்சாலையின் இடதுபக்கமிருந்த குளிர் சாதனம் பொறுத்தப்பட்ட அந்தக் கண்ணாடிக் கட்டிடத்தின் முன் அலங்காரமாக மெர்சிடிஸ் பென்ஸ் 'இ' கிளாஸ் கறுப்பு கலரில் நின்றுக் கொண்டிர்ந்தது. வெள்ளைச் சீருடையணிந்த டிரைவர் காக்கியுடைக் காவலாளியுடன் தீவிரமாக மதராஸப்பட்டிணத்தின் நாயகியைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.


உள்ளே போடப்பட்டிருந்த மேஜையின் மீது கிரிக்கெட்டே விளையாடலாம். அவ்வளவு பெரிய மேஜையின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டரில் எதையோ சீரியசாகப் பார்த்துக் கொண்டிருந்தார் ஸ்ரீதரன். இண்டர்காமை எடுத்து இரண்டு எண்களை அழுத்தி காதில் வைத்து, “மாலா! ப்ரொடெக்‌ஷன் மானேஜரை உடனே என்னைப் பாக்கச் சொல்லு” என்றார்.
”...”
“ஃபேக்டரியில இருந்தா பேஜ் பண்ணு. ஹி ஷுட் பி ஹியர் எனி மொமண்ட்” என்று குரைத்துவிட்டு போனை வைத்தார்.

அவர் போனை வைப்பதற்காகவே காத்திருந்ததைப் போல அவர் செல்ஃபோன் அலறியது. எடுத்துப் பார்த்தார். புது நம்பர். யாராக இருக்கும் என்று யோசித்துவிட்டுச் சிவப்புப் பொத்தானை அழுத்தி கட் செய்தார். மீண்டும் அலறியது. அதே நம்பர். இந்த முறை பச்சைப் பொத்தானை அழுத்தி மெஜெஸ்டிக்காக “ஸ்ரீதரன் ஹியர்” என்றார்.

எதிர்முனை சொன்ன செய்தியைக் கேட்டதும் ஏசி அறையிலும் குப்பென்று வியர்த்தது.

“ஹூ ஆர் யு? வாட் டு யு வாண்ட்?” 
“...”

“ஹே! !ஹே ஹே!” என்று அவர் கத்தக் கத்த கட் ஆனது. பாக்கெட்டில் இருந்த கர்ச்சீப்பை எடுத்து வழுக்கைத் தலையை அழுந்தத் துடைத்துக் கொண்டார். செல்ஃபோனில் இருந்த மகளின் நம்பரை டயல் செய்தார். “தி சப்ஸ்க்ரைபர் யு ஆர் ட்ரையிங் டு ரீச் இஸ் கரண்ட்லி ஸ்விட்ச்ட் ஆஃப்” என்ற குரலைக் கேட்டதும் அவர் முகம் கருத்தது. 

சில நிமிடங்கள் கம்ப்யூட்டர் திரையையே வெறித்தார். திடீரென்று நினைவுக்கு வந்தவராய் செல்ஃபோனில் இன்னொரு எண்ணைப் பொதிந்தார். 
*************************
பிரசன்னா மல்டிப்ளெக்ஸின் வாசலில் இறங்கிக் கொண்டு “நீங்க போயிட்டு வாங்க ராஜன். நாளைக்குக் காலைல ஆறு மணிக்கு ஐ.ஜியைப் பாக்க பீச்சுக்குப் போகணும். 5:30க்கு வீட்டுக்கு வந்துடுங்க” என்று டிரைவரை வழியனுப்பிவிட்டு உள்ளே நுழைந்தான்.

வழக்கமாக அவள் நிற்கும் காப்பூச்சினோ கடை வாசலில் அவளைக் காணவில்லை. மறுபடியும் அவள் எண்ணைத் தொடர்பு கொண்டான். மீண்டும் ஸ்விட்ச்ட் ஆஃப் செய்தி. வெறுப்புடன் ஷூக்காலை தரையில் உதைத்துக் கொண்டான்.

“குட் ஈவினிங் சார். அம்மா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் போனாங்க. நீங்க இப்ப வந்திருக்கீங்க?” வாலட் மாணிக்கம் நின்றிருந்தார். 

“என்ன மாணிக்கம் சொல்றீங்க? ஸ்ருஷ்டி போயிட்டாளா? எப்போ?”

“நான் அப்போ இல்லை சார். முத்து தான் திருப்பி எடுத்துக் கொண்டுவந்தான். ஏய் முத்து?” என்று தூரத்தில் நின்ற கட்டைத் தடியனைக் கை தட்டி அழைத்தார். 

ஓடி வந்த முத்து, “என்னண்ணே?” என்றான்

“அந்த ஸ்கோடால வந்த அம்மா எத்தனை மணிக்குப் போனாங்க?” 

“ஒரு அரை மணி நேரம் இருக்குமுங்கய்யா” பவ்யமாய்.

“ஷிட்” தன்னையே நொந்து கொண்டான் பிரஸன்னா. அப்போது அவன் செல்ஃபோன் ஒலித்தது.

“ஹல்லோ அங்கிள். எப்படியிருக்கீங்க?”
“...”
“வாட். நானும் அவளும் மல்டிப்ளெக்ஸ்ல சினிமா போறதா இருந்தது. நான் வரக் கொஞ்சம் லேட் ஆயிடுத்து. அவ கோவிச்சிட்டுக் கிளம்பிப் போயிட்டான்னு நினைச்சேன்”
“...”
“ஓக்கே அங்கிள். நீங்க அங்கருந்து கிளம்பி என் ஆஃபீஸ் வாங்க. அங்கதான் ட்ரேஸ் பண்ணக்கூட வசதியிருக்கு”
“...”
“உங்கள அங்க மீட் பண்றேன் அங்கிள்”

போனை கட் செய்தவன் உடனே இன்னொரு நம்பரை டயல் செய்தான். எதிர்முனை எடுத்ததும், “ராஜன். சாரி ராஜன். திரும்ப மல்டிப்ளெக்ஸ்கே வந்திருங்க. நான் ஆஃபிஸ் போகணும் மறுபடி”
“...”
“இல்லை. என் கிட்ட காரைக் குடுத்துட்டு நீங்க வீட்டுக்குப் போயிருங்க”
“...”
ராஜனுக்காகக் காத்திருந்த நேரத்தில் இரண்டு சிகரெட்டுகளைக் கொலை செய்தான். 

கார் மல்டிப்ளெக்ஸின் உள்ளே நுழைவதைப் பார்த்ததும் சிகரெட்டைக் கீழே போட்டுக் காலால் மிதித்தான். ராஜன் காரைஅவனுக்கருகில் நிறுத்திவிட்டு இறங்கி கதவைத் திறந்து பிடித்தார். டிரைவர் சீட்டில் தாவி ஏறியவன் அதே வேகத்தில் காரை வெளியே கிளப்பினான்.

மூன்றாவது திருப்பத்தில் சிக்னலில் நிற்கும் போது கண்ணாடியை யாரோ விரலை மடக்கித் தட்டினார்கள். திரும்பினான். ‘ஜெயராமன்’.

கண்ணாடியை இறக்கி, “என்ன ஜெயராமன். இந்தப் பக்கம்?”

“சார் நீங்க ஆஃபீஸ் போறீங்கன்னா, நானும் ஏறிக்கட்டுமா சார். ரொம்ப நேரமா நிக்கிறேன் ஆட்டோ எதுவும் கிடைக்கலை”

“ஏறிக்கோங்க ஜெயராமன். நோ ப்ராப்ளம்” 

ஜெயராமன் ஏறுவதற்கும் சிக்னல் விழுவதற்கும் சரியாக இருந்தது. முதல் கியரை மாற்றி காரை விருட்டென்று எடுத்தான் பிரசன்னா.
******************************
நீலாங்கரைக்கு அந்தப்பக்கம் கடலில் சற்று உள்ளே தள்ளி அந்த மீன்பிடிப் படகு நின்றிருந்தது. படகின் கம்பத்தில் இந்திய தேசியக் கொடி லேசாகக் கிழிந்து பறந்து கொண்டிருந்தது. படகு அலையில் வேகத்தில் மேலும் கீழும் ஆடிக் கொண்டிருந்தது. 

உள்ளே அவர்கள் ஆறு பேரும் சுற்றி உட்கார்ந்திருந்தார்கள். மீன்களைக் கொட்டும் பெரிய பெரிய பெட்டிகள் அவர்களுக்கு முன்னால் திறந்து இருந்தன. மீன்களுக்குப் பதில் 8 கலாஷ்னிக்காவ்கள் அந்தப் பெட்டிகளை நிரப்பி இருந்தன. இன்னொரு பெட்டியில் அம்மோ க்ளிப் க்ளிப்பாகக் குவிக்கப்பட்டிருந்தன.

“அண்ணே போட்டை ஒரு இடத்துலயே நிறுத்தி வச்சிருந்தா கோஸ்ட் கார்ட்க்கு டவுட் வந்திரும். கொஞ்சம் மத்த படகு இருக்கிற எடத்துக்கு போகலாம்ணே” என்றான் அந்த கந்தல் சட்டை அணிந்த மாலுமி. சரி சரி என்பது போல கையை மட்டும் அசைத்தான்

அவர்களின் சற்றே உயரமாக இருந்தவன் கரகரத்த குரலில் பாடுவதைப் போன்ற இனிமையான அரபியில் பேச ஆரம்பித்தான். 

“நாம் அனைவரும் இங்கே எதற்காக வந்திருக்கிறோம் என்பது நினைவில் இருக்கிறதா?”

மற்ற அனைவரும் மத்தியமாகத் தலை அசைத்தனர்.

“நாம் வந்திருப்பது ஒரு புனிதப் போருக்கு. நாம் செய்யும் இந்த செயல்கள் அல்லாவுக்கு பணிவிடை செய்வதற்குச் சமம். நம்மில் எத்தனை பேர் ஊருக்குத் திரும்பிப் போக முடியும் என்பது தெரியாது. ஆனால் நாம் செய்ய வந்த கடமையை முடிக்காமல் ஊருக்குப் போகக் கூடாது. புரிகிறதா?”


“புரிகிறது”

“அல்-ஜிஹாத் ஃபி சபில் அல்லாஹ்” 

“அல்-ஜிஹாத் ஃபி சபில் அல்லாஹ்” 

“நமக்கு உள்ளே இருந்து தகவல் வரவும் நாம் புறப்படத் தயாராக வேண்டும். எப்போது வேண்டுமானாலும் தகவல் வரலாம்”. வெளியே சூரியன் தன் ட்யூட்டியை முடித்துக் கொண்டு கிளம்பத்தயாரானான். 
*********************************
இன்றைய பகுதியை எழுதியவர்?:1. அது சரி 2. முகிலன் 3. கதிர் 4. வானம்பாடிகள் 5.கலகலப்ரியா 6.பிரபாகர் 7. நசரேயன். 8.பலா பட்டரை ஷங்கர்

Tuesday, August 3, 2010

இரண்டாம் நிழல் -1

முன்னுரை

இரவுகள் அழகானவை.மெல்லச் சிரிக்கும் பெண்ணின் ஒளி வீசும் பற்களைப் போல...இரவுகள் அகோரமானவை...நீண்டு மறையும் பாம்பின் பிளவுண்ட நாக்குப் போல...வெளிச்சம் என்ற நிர்வாணத்தை மறைக்க இயற்கை அணிந்த உடை இரவு. கண்கள் பளபளக்க தலை குனிந்து இரை தேடி மிருகங்கள் வேட்டை செய்யும் இரவு.

இருள் சூழ்ந்த அந்த அறையில் கண்ணாடிக் கோப்பையின் உள்ளே ததும்பும் மதுவைப் போல மெல்லிய மஞ்சள் வெளிச்சம் சோகையாய் வழிந்து கொண்டிருக்க நீளமான அந்த மேஜையச் சுற்றிலும் போட்டிருந்த மூன்று நாற்காலிகளில் நட்டு வைத்த நடுகல்லைப் போல அந்த மூவரும் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். நாற்காலி இல்லாத நான்காம் பக்கத்தில் இருளுடன் கலக்க முயற்சித்து உறைந்தது போல அந்த ஃப்ளாட் ஸ்க்ரீன் டி.வி அவர்களைப் போலவே மெளனமாய் இருந்தது.

உறைந்து போன மெளனத்தை உடைக்க வெட்கப்படுவது போல நடுநாயகமாய் திரைக்கு எதிரில் அமர்ந்திருந்தவரின் சிகரெட்டால் கறுத்த அந்த உதடுகள் இரை தேடும் பாம்பு போல மெல்லிய குரலில் பேசியது.

“அந்தப் பிள்ள மேல தாண்டே எனக்கு சம்சயம். அவளாச் செய்யலன்னாலும் யாராச்சும் மிரட்டியிருப்பானுவளோன்னு நெனைக்கேன்...”

மற்ற இருவரும் ஆமோதிப்பது போல தலையசைத்தனர். நடுவிலிருந்த உருவம் ரிமோட்டை எடுத்து ஆன் செய்ததும் திரையில் படம் ஓடத்துவங்கியது. முடிந்ததும்...

“இதாண்டே நம்ம ப்ளான். இண்டைக்கே இத எக்ஸிக்யூட் செய்யணும். செரியா?”

"பெரிய விஷயமாருக்கு...மேல சொல்லணுமா..." தயக்கத்துடன் மற்றவர்களில் ஒருவன் இழுத்தான்...

"இல்லடே...மேல கொண்டு போக இன்னமும் பெரிசா வேணும். இப்ப கொண்டு போனா ‘ஒனக்கு இதே வேலையா போச்சுவே’ன்னு குப்பையில போட்ருவானுவ. அதுக்குத் தான் இந்த ப்ளான். முடிச்சிடுவிய இல்லியா..."

செஞ்சிடலாம் சார்...என்று அவன் இழுக்க, இழுக்காதடே...பொழுது சாயறதுக்குள்ள முடிச்சிட்டு நைட்டுக்குள்ள குறிச்சிக்குப்பம் வந்துடுங்க. நான் அங்கின வெயிட் பண்ணுதேன்...

அவர்கள் இருவரும் முகத்தை அழுந்த துடைத்து தலையாட்டி எழுந்து கொண்டார்கள். நீரில்லாத நதி போல அவர்கள் நகர்ந்து மறைய நடுநாயகமாய் இருந்த நபர் சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டு மீண்டும் இருளை வெறிக்க ஆரம்பித்தார்.

=================

பாகம் -1

சென்னையின் சமீபத்திய பிரபலமான மல்டிப்ளக்ஸ் அது. தியேட்டர்களினிடையே கடையா, கடைகளினிடையே தியேட்டர்களா என்று பட்டிமன்றம் ரேஞ்சுக்கு குழப்படியான ஒரு அமைப்பு. காசு செலவில்லாமல் ஏசி குளிர்ச்சியில் எக்ஸிபிஷன் மாதிரி பொழுதைக் கழிக்க வரும் கூட்டம், பீட்டரில் கலாய்க்கும் மாணவிகள்,  கிறங்கிப் பின்னாடி திரியும் மாணவர்கள் என்று பரபரப்பான சூழல். 

பார்க்கிங் லாட்டின் நுழைவில் சர்ரென வந்து நின்ற ஸ்கோடாவை கண்டதும், ஓடி வந்தார் வாலட் மாணிக்கம். ஒரு சல்யூட் வைத்து, கார் கதவை திறந்து விட்டு,  “வாங்கம்மா, நல்லாருக்கீங்களா? அய்யா வரலைங்களா?” என்றார். ஒரு மேஜிக் மாதிரி, திறந்த காருள்ளிருந்து, லோ வெயிஸ்ட் லீவையும், கருப்பு டீ ஷர்ட்டும் அணிந்து, ஷாம்பூ விளம்பரம் மாதிரி ஒரு தலையசைப்பில் கூந்தலை பின்னுக்குத் தள்ளி, “ஹை ஓல்ட் மேன்” என்று அவரை மாதிரியே சல்யூட் அடித்து சிரித்து,  “வருவாங்க! முன்னாடியே பார்க் பண்ணுங்க மாணிக்கம்” என்று, சாவியும், நூறு ரூபாயும் திணித்துவிட்டு காத்திருந்தாள் ஸ்ருஷ்டி.

ஸ்ருஷ்டி! இருபத்தாறு வயது! இதோ நடந்து கடப்பவர்கள் அந்த நடிகை இந்த நடிகை என அனுமானிப்பதும்,. பார்க்கிங்குக்கு வந்த கார்கள் நகர மறுப்பதற்கும் காரணமானவள். தொழிலதிபர் ஸ்ரீதரனின் ஒரே வாரிசு. ஒரு வருஷம் ஆத்லடிக் என்றும் மறு வருடம் டென்னிஸ் என்றும், “ஐ லவ் பரத நாட்டியம் அப்பா” என்றும் அலக்கழித்தவள் M.B.A. முடித்து வந்ததும், பெருமையாக, தன் கம்பெனியில் சேர அழைப்பு விடுத்தவரை, “சாரி டாட்! ஐ வுட் ராதர் டேக் ஓவர் யுவர் பிஸினஸ்” என்று தனியே தொழில் தொடங்கியவள். 

ஓட்டமும் நடையுமாக வந்து, சாவியைக் கொடுத்த மாணிக்கத்துக்கு நன்றி சொல்லி, செல்லை எடுத்து ஒற்றி, “யோவ்! இன்னா? கிளம்பியாச்சா?” என்றாள்.  “க்கே! ஜஸ்ட் டைம் ஃபார் அ கப்பூச்சினோ! லேட் பண்ணா போயிண்டே இருப்பேன். ஒன் வீக் சாவடிப்பேன்” என்று சிரித்து காஃபி ஷாப் நோக்கி நகர்ந்தாள்.

“ராட்சசி!” என்றபடி, முகம் கழுவி கிளம்ப தயாரானான் ப்ரஸன்னா. அஸிஸ்டண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ். சரியாக, அந்த நேரம் கமிஷனரின் கால். “ப்ரஸன்னா! வில் யூ ப்ளீஸ் கம் ஃபார் அ மொமெண்ட்” என்றதும், போச்சுடா என்று நினைத்தபடி கமிஷனரின் அறைக்கு நடந்தான்.

“உட்கார் ப்ரஸன்னா. ஐ வோண்ட் டேக் மச் ஆஃப் யுவர் டைம். ஐ.ஜி. வாண்ட் யூ ஃபார் அ ஸ்பெஷல் டாஸ்க். நாளைக்கு காலைல 6க்கு மெரினால மீட் பண்ணனுமாம். கிவ் அ கால் அரவுண்ட் 8 இன் த ஈவினிங். பெஸ்ட் ஆஃப் லக்!” என்று கை கொடுத்தார். 

வெளியே வந்து, முகம் கழுவி, தயாராகி, ட்ரைவரை தயாராக இருக்கச் சொல்லி ஆர்டர்லிக்கு சொல்லிவிட்டு, ஸ்ருஷ்டிக்கு கால் செய்தான். “கிளம்பிட்டேன் டியர்! டென் மினிட்ஸ்ல வந்துர்ரேன்” என்று கிளம்பி, வெளியே வந்தான். போர்டிகோவில் நின்ற காரில் ஏறி, மல்டிப்ளக்ஸில் ட்ராப் பண்ணிட்டு நீங்க போலாம், ராஜன் என்றான். 

டைம் பார்த்தபடி, கப்பூச்சினோ உறிவதும், சுற்றிலும் இருப்பவர்களைப் பார்ப்பதும், இவள் பார்ப்பது தெரிந்ததும், சட்டென கண்ணைத் திருப்புபவர்களை ரசிப்பதுமாய் இருந்தாள் ஸ்ருஷ்டி. 

கார் கமிஷனர் அலுவலகத்தை விட்டு கிளம்பி வீதியில் இறங்கும் தருவாயில், வேகமாக வந்த ஒரு ஃபோர்ட், சடாரெனத் திரும்பி வழிமறித்து, முன்னால் சென்ற ஒரு ஆட்டோவில் மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஹார்ன்கள் அலற ட்ராஃபிக் ஜாம். 

டிரைவர் ராஜன், கத்த, செண்ட்ரி ஓடி, வழி ஒழுங்கு படுத்த முயன்று, திரும்ப ஓடி வந்து, ஆட்டோக்கு நல்ல அடி சார். சண்டை போடுறாங்க என்று திரும்ப ஓடினான். ஏஸியின் கார் நிற்பது கண்டு மற்ற செண்ட்ரிக்கள், போலிஸ் என்று ஓடி வந்தனர். ப்ரஸன்னாவும் காரை விட்டிறங்கி, ஆக்ஸிடண்ட் ஆன இடத்துக்கு விரைந்தான். 

பத்து நிமிடங்கள் பறந்துவிட்டிருந்தன. ஸ்ருஷ்டி பொறுமையிழந்தாள். “சாவு இடியட்” என்று கிளம்பினாள். ஒரு முறை அழைத்தாள். காரில் விட்டுப் போயிருந்த செல் அடிப்பது, ஹாரன் சத்தத்தில் கேட்காமல் போனது. ‘ஆஸ் ஹோல்’ என்று திட்டியபடி, செல்லை ம்யூட் செய்து, பையில் போட்டு பார்க்கிங் லாட்டுக்கு விரைந்தாள். 

மாணிக்கத்தைக் காணவில்லை. கட்டைத் தடியனாக ஒரு வாலட் ஓடி வந்து, மாணிக்கம் சாப்பிட போயிருக்காரும்மா. சாவி கொடுங்க நான் எடுத்துட்டு வரேன் என்று சாவி வாங்கிப் போனான். 

“சை! ஐ டோல்ட் ஹிம்! ஃபுல்டே லீவ் போடு. ஆஃபீஸ் போனா ஸ்பாயில் ஆயிடும்னு. இடியட்!’ என்றபடி நின்றவளின் அருகில் வந்து நின்றது கார். கதவைத் திறந்து இறங்கியவன், அவள் ஏறியதும் கதவை மூடி சல்யூட் அடித்தான். விருட்டென்று காரைக் கிளப்பி வெளியில் வரும்போது ரியர்வ்யூவில் ஒரு உருவம் அசைவதும், காதுக்கு அருகே சில்லென்று ஒரு உணர்வும், டேக் லெஃப்ட் அண்ட் ட்ரைவ் நார்மலியும் கேட்டது. 

ட்ராஃபிக் ஜாம் ஒருவாறு சரியாக, திரும்ப காரில் ஏறிய ப்ரஸன்னா மிஸ்ட் கால் பார்த்து கால் செய்தான். ஸ்விட்ச்ட் ஆஃப் என்று வந்த மெசேஜை வெறுத்து, சீக்கிரம் மல்டிப்ளக்ஸ் ரோடில் விடு என்றான்.

தொடரும்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்தக் கதை சில பதிவர்கள் சேர்ந்து எழுதியது. கீழ்க்கண்ட பதிவர்களில் யார் இந்தப் பகுதியை எழுதியது என்பதை மறக்காமல் கதை குறித்த பின்னூட்டத்துடன் குறிப்பிடவும்.

1. அது சரி 2. முகிலன் 3. கதிர் 4. வானம்பாடிகள் 5.கலகலப்ரியா 6.பிரபாகர் 7. நசரேயன்.8.பலா பட்டரை ஷங்கர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
டிஸ்கி: மாங்கு மாங்குன்னு உக்காந்து கதையப் போட்டா அத பத்தி சொல்லாம ஒத்தையா ரெட்டையா புடிக்கிறீங்களா? அவ்வ்வ்வ்.