Tuesday, November 3, 2009

பத்துக்கு பத்து (தொடர் இடுகை)

அழைப்புக்கு நன்றி கதிர். நமக்கும் விதிக்கும் சரி வராது. ஆனாலும் விதியை அப்படியே முன்வைக்கிறேன்.

இத் தொடர் இடுகையின் விதிகள்:
1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அரசியல்வாதி

பிடித்தவர் : எம்.ஜி.ஆர். ஈழத் தமிழர் பிரச்சினையை புரிந்து கொண்டு துணிந்து உதவியும் செய்த ஒரே மலையாளி என்பதால்.

பிடிக்காதவர் : ச‌ம‌கால‌ எல்லா அர‌சிய‌ல் வியாதிக‌ளும்.

எழுத்தாளர்

பிடித்தவர் : சாண்டில்யன்,கி.ரா.

பிடிக்காதவர் : யாருமில்லை

கவிஞர்

பிடித்தவர் : கண்ணதாசன்,தபு சங்கர்.

பிடிக்காதவர் : வானம்பாடிக‌ள் (என்ன‌ச்சொன்னேன் என்ன‌ச்சொன்னேன். நீ க‌விஞ‌ன்னு யாரு சொன்ன‌துன்னு கேக்க‌ வேணாம். நானே சொல்லிக்க‌ல‌ன்னா வேற யாரு சொல்ல‌ப் போறாங்க‌.)

இயக்குனர்

பிடித்தவர் : விஷ்வ‌நாத்.

பிடிக்காதவர் : சங்கர்

நடிகர்

பிடித்தவர் : பிரகாஷ்ராஜ்

பிடிக்காதவர் : விஜயகாந்த் (அந்தாளு எப்போய்யா ந‌டிச்சாருன்னு அடிக்க‌ வ‌ராதீங்க‌)

நடிகை

பிடித்தவர் : நந்திதா தாஸ்

பிடிக்காதவர் : ஸ்ரேயா

இசையமைப்பாளர்

பிடித்தவர் : இளையராஜா. சாம்பிள் இங்கே.


பிடிக்காதவர் : ம‌ன்னிக்க‌ணும். யுவ‌ன்ச‌ங்க‌ர்ராஜா.

பேச்சாளர்

பிடித்தவர் : சீமான்

பிடிக்காதவர் : தெரியவில்லை.

விஞ்ஞானி

பிடித்தவர் : அனைவ‌ரும்.

பிடிக்காதவர் : இன்னும் பிறக்கவில்லை.


அழைக்க விரும்புவது: இத்த‌கைய‌ இடுகைக‌ள் நிர்ப‌ந்த‌மாக‌ சில‌ நேர‌ம் அமைந்து விடுவ‌தால் விதிப்ப‌டி எழுத‌ விரும்புப‌வ‌ர்க‌ள் பின்னூட்ட‌த்தில் தெரிய‌ப் ப‌டுத்தினால் முத‌ல் ஐந்து பேருக்கு முறையாக‌ அழைப்பு விடுத்து இடுகை தேத்த‌ உத்தேச‌ம்.இஃகி இஃகி.

முதல் அழைப்பு: கலகலப்ரியா.
இரண்டாவது அழைப்பு: தியாவின் பேனாவிலிருந்து
(அப்பாடா கண்டிஷன நிறைவேற்றிவிட்டேன். சக்ஸஸ்)

__/\__

Monday, November 2, 2009

சைக்கிளும், நானும் முன்னே ஒரு கோழியும்.


 (டிஸ்கி: தலைப்பைத் திருடத் தந்த கலகலப்ரியாவுக்கு நன்றி)


கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா என்ற விடை தெரியாத கேள்வி அப்படியே இருக்க, முட்டை இட்ட பிறகு கோழி செத்ததா? கோழி செத்த பிறகு முட்டையிட்டதா என்ற கேள்வியும் சேரும் விதி வாய்த்தது எனக்கு. 1971ம் ஆண்டு தீபாவளி. அப்பொழுது 13 வயது முடிந்திருக்கவில்லை எனக்கு. நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டு ஓராண்டு முடிந்திருந்தது.

அதற்கு முன்பிருந்த வீட்டில் வீட்டுச் சொந்தக் காரரின் மகனும் நானும் நண்பர்கள் என்பதால், அவன் வைத்திருந்த சின்ன சைக்கிளில் ஓட்டப் பழகியிருந்தேன். பெரிய சைக்கிளில் குரங்குப் பெடல் பிரமாதமாக வரும். நான் மிகவும் உயரம் என்பதால் (கலகலா  இப்போவே 5'2"னு 2" குறைவா சவுண்ட் விடுறத கண்டுக்காதிங்க) பெடல் சக்கிர அச்சில் கால் வைத்தாலும் சீட்டு தாண்டி கால் போட சர்க்கஸ் செய்தாக வேண்டும். மைதானத்தில் ஓட்டுகையில் ஓரளவு சமாளித்து உட்கார்ந்தாலும், பெடல் முழுதுமாக மிதிக்க கால் எட்டாது.

அந்த தீபாவளிக்கு பட்டாசு அதிகமாக வாங்கவில்லை. வெண்ணைக்காக கொஞ்சம் ஊசி பட்டாசு, மத்தாப்பு அவ்வளவுதான். தொலைக்காட்சி கேள்விப் படாத காலம். குடியிருந்த தெரு நீளம் என்பதால் மற்றவர் வெடிக்கும் பட்டாசுகளை வேடிக்கை பார்க்க முனை வரை போனேன். 


நான்கு வீடு தள்ளி என் பகைவனின் வீடு கடந்து போகையில்  அவன் கறி தோசை கேட்டு ரகளை செய்ததால் அடி விழுந்துக் கொண்டிருந்தது.  அவன் ஒவ்வொரு அடிக்கும், அழாமல் எனக்கு கறிதோசை வேண்டும் என்றே அலறியதில் எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. வேகமாகக் கடந்து போய் சிரித்துக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டு தெரு முனைக்கு வர, வாடகை சைக்கிள் கடை திறந்திருந்ததைக் கண்டேன். .

மண்டைக்குள் சைத்தான் மணியடிக்க, வெடி ஆரவாரமும் கொஞ்சம் ஓய, முதல் முறையாக மெதுவாக அம்மாவைச் சுரண்டி வாடகை சைக்கிளுக்கு முப்பது பைசா தேத்தியாகி விட்டது. ராக்ஃபெல்லர் ரேஞ்சுக்கு (பீரியட்ங்க. அந்தக்காலத்தில அப்புடி சொல்லிதான் திட்டுவாங்க, பெரிய ராக்ஃபெல்லர் பரம்பரை போடான்னு) தெம்பாகப் போய், ணா! சின்ன சைக்கிள் ஒன் அவர்க்கு வேணும்ணா என்றேன். அது பெண்டுடா, இன்னொண்ணு இப்போதான் வெளிய போச்சு என்று மனதை உடைத்து, பெருசுதான் இருக்கு என்றார்.

நம்ம ராசிக்கு அதுவும் 24" தான் இருந்தது.  ஆனாலும் வேண்டாமென்று போய், சின்ன சைக்கிள் வரும் வரை காத்திருந்தால் அம்மா மனசு மாறி வேண்டாம் என்றால் கஷ்டமாகிவிடும். சரி குரங்குப் பெடல்தான் இன்னைக்கு என்று எடுத்துக் கொண்டு அதே வீதியில் கோடிக்கு கோடி  மிதப்பில் திரிந்தேன். அப்போது கூட தோழர் கேப் விட்டு விட்டு கறி தோசைக்கு போராடிக் கொண்டிருந்ததில் சிரிப்பு வேறு.

அவனுக்கு பக்கத்து வீட்டில், நாங்கள் கரடி என்று பெயர் வைத்திருந்த எங்கள் பள்ளியில் படிக்கும் பெண்ணின் வீடு.  அது அப்பொழுதுதான்  ஒரு கூடை பட்டாசு வைத்துக் கொண்டு பக்கி மாதிரி பகலில் புஸ்வாணம் கொளுத்திக் கொண்டிருந்தது. அதுக்குப் போய் ஒரு ஆண்மகன் பயப்படுவானா? ஜம்மென்று குரங்குப் பெடலில் போய் வந்துக் கொண்டிருந்தேன். ரொம்ப நேரமாக குரங்குப் பெடல் அடித்த தைரியத்தில் எப்படியோ ஃப்ரேமில் கால் வைத்து சீட்டில் உட்கார்ந்து ஓட்ட ஆரம்பித்தேன். வேகமாக மிதித்தால் வண்டியோட்டத்தில் பெடல் மேலுக்கு  வர கால் எட்டியது.

எனக்கு சனியன் அப்போது பிடித்தானா? இல்லை கையில் கொளுத்தி தூக்கிப் போட அந்தக் கரடி நினத்த போது சிரித்தானா என்பது தெரியவில்லை.  கொஞ்சம் தூரத்தில் வரும்போதே பட்டாசு காற்றில் வெடிப்பது கண்டு, இறங்குவதா? இங்கு இறங்க பிரயத்தனம் செய்தால் அவர்கள் வீடு தாண்டுவதற்குள் இறங்க முடியுமா? ஓட்டிக் கொண்டு போனால் வேகமாக போய் விடலாமா என்று யோசிப்பதற்குள் வந்தே விட்டது அவர்கள் வீடு.

சரியாக அந்த நேரம் பார்த்து அந்தப் பரதேசி ஒரு வெடியை வீச, நான் கவனப் பிசகாய் பயத்தில் இறங்கப் போய் உலரப்போட்ட கால்சட்டை போல் சைகிள் ஃப்ரேமில் தொங்க, அதே நேரம் அங்கு மேய்ந்து கொண்டிருந்த கோழியும் மிரண்டு பறக்க, ஒரிரண்டு செகண்டில் கொக்கொக், டொம், அம்மாஆஆஆ என்று முறையே கோழி, பட்டாசு மற்றும் நான் சப்தமிட்டோம்.

அடுத்த நொடியில் சைக்கிளின் முன் சக்கரம் கால்வாயில், அதில் சிக்கிக் கொண்டு நான், என் முகத்துக்கு நேரே கோழி.  ஒரு கண்ணில் அதன் வாய் வழியே ரத்தம் வருவதும் மறுகண்ணில் அதன் பின் வழியே முட்டை சுகப்பிரசவமானதும் தெரிந்தது. கவட்டை ஃப்ரேமில் பட்டு மூச்சு நின்று போய் நான். அய்யோ என் கோழி என்று எதிரியின் அம்மா. ஆஹா இன்னைக்கு கறிதோசை டோய் என்று அழுத கண்ணீரைக் கூட துடைக்காமல் என் எதிரி ஒடிவந்து கோழியைத் தூக்கினான்.

அந்தம்மா  புருசங்காரன் போய்ச் சேர்ந்தா மாதிரி மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு வெடுக்கென கோழியை ஒரு கையில் பறித்தபடி, என் காலரை மறு கையில் பிடித்து சைக்கிளிலிருந்து உதறி விடுவித்து நீதி கேட்ட கண்ணகி மாதிரி, போட்டிருந்த கொண்டை அவிழ, நடந்தது. ஒரு கையில் தொங்கிய கோழியும், கவட்டியில் பட்ட அடியினால் நடக்க முடியாமல் நானும் ஒரே மாதிரி தொங்கிக் கொண்டிருக்க இழுத்துக் கொண்டு போனார் அந்தம்மணி.

என்னமோ கோழிக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறில் நான் போட்டுத் தள்ளியது போல, அம்மாவிடம் உம்புள்ள என் செனக்கோழிய கொன்னுட்டாம்மா என்று மூஞ்சிக்கு நேராக ஆட்டிய கத்தியது அந்தம்மா. பதறி நடுங்கிய அம்மாவிடம் என் காலர் முறையாக  கை மாறி என்ன இழவுடா இது என்றபடி முதுகில் ஆட்டம் பாம் வெடித்தது. ஒரு கையில் தேர்ந்த தவில் வித்துவான் போல் லயம் பிசகாமல் முதுகில் சாத்தியபடியே, சரிம்மா நடந்து போச்சு. என்ன பண்ணனும் சொல்லு எனக் கேட்க அந்தம்மா 100ரூ கொடு என்றது.

100 ரூபாயா என அதிர்ந்து பேரம் தொடங்கி, அந்தம்மா கோழியை அம்மா முகத்துக்கு நேராக நீட்டி நீட்டி பேசும் போதெல்லாம் அலறி, என் முதுகில் சாத்தி (ஹெ. எதிரி பார்த்துக் கொண்டிருக்க அழுதுடுவமா?) 30 ரூ தருகிறேன் என்றாள். யம்மா, உயிரோடு கோழி 12 ரூ உரித்த கோழி 15 ரூ என்று (கறிக்கடையில் பார்த்த போர்ட் கண்முன் வந்து போக) அடிக்கு நடுவே அந்தத் தகவலையும் சொல்லிவிட்டேன்!

செனக்கோழி 12ரூபாய்க்கு தராங்களா? 2 நாள்ள முட்டை வெச்சிருந்தா அது குஞ்சாகின்னு கோழிப்பண்ணை கணக்கு சொல்லி, சாவடிச்சிட்டு பேசுறான் பாருன்னு இன்னும் வேகமாக கோழியை ஆட்ட, ஊர்வம்ப இழுத்து விட்டு வாய் வேற உனக்கு கிழியுதோ என்று ஒரே முனைப்பாய் ரெண்டு கையிலும் தபலா வாசித்தார் அம்மா. ஒரு வழியாய் 30ரூ வாங்க அந்தம்மா சம்மதிக்க, சப்தம் கேட்டு சம்முகம் பொண்டாட்டி, அதான் முனீசுவரன் பார்ட்டி மேலே வந்தாங்க.

என்னாடி கோழிய வெச்சிகிட்டு தகராரு பண்ற? மாமி, நீ சொல்லு என்னாச்சின்னாங்க. சலுகை சொல்ல ஆள் வந்ததில் அம்மா அழுதபடி விபரம் சொல்ல அந்தம்மா, ஏண்டி 30ரூ வேணுமா உனக்கு, கோழி விலை வாங்கிக்கன்னிச்சி. அதெல்லாம் முடியாதுக்கா. பேசியாச்சி 30ரூ தரசொல்லுன்னுச்சி அந்தம்மா. சரி, கோழியக் குடு என்று பிடுங்கி மாமி நீ  25ரூ குடு என்று வாங்கிக் கொடுத்து, இந்தாடி இவ்வளவுதான் போன்னாங்க.

அந்தம்மா, என்னாக்கா நீ வேற என்றபடி கோழியைக் கேட்க, கோழியும் குடுத்து 25ரூபாயும் குடுப்பாங்களா? கோழி எனக்கு, நீ ஓடுன்னாங்க. எனக்கு இஃகிகினு வந்திச்சி. . எதிரிக்கு கறி தோசை போய்டுமோன்னு விழி பிதுங்கிப் போச்சி. அந்தம்மா, விளையாடாதக்கா! கோழி போச்சேன்னு வூட்டுக்காரர் கத்துவாரு நீ குடுத்துடுக்கான்னுச்சு. கோழியும் கொடுத்து, 25ரூ தரமுடியாது.  கோழி வேணுமானா எடுத்துகிட்டு குழம்பு செலவுக்கு 10ரூ போக மிச்சம் கொடு. இல்லன்னா போன்னு கராறா பேசுனாங்க.

விதியேடான்னு கோழிய வாங்கிகிட்டு 15ரூ திரும்பக் கொடுத்துட்டு கோழியை பிடுங்கிக் கொண்டு போச்சு அந்தம்மா. எனக்கு 15ரூ மிச்சமான ஆறுதல். எதிரிக்கு கறிதோசை கிடைச்சிடும்னு சந்தோஷம். அப்புறம் ஒரு வழியாக பப்பரப்பேன்ன்னு காலை அகட்டி கெந்திக் கெந்திப் போய் சைக்கிளைக் கொடுத்துவிட்டு வந்து, வாங்கிய அடிக்கு நிதானமாக அழுதேன். அன்று முதல் கோழி செத்தப்புறம் முட்டை வந்திருக்குமா? முட்டையிட்டப்புறம் கோழி செத்திருக்குமா என்ற கேள்வியைச் சுமந்து கொண்டிருக்கிறேன்.

Sunday, November 1, 2009

கடவுள் கைக்கூலியா?

கடந்த சில மாதங்களாக குஞ்சு குளுவான், கருவிலிருக்கிறது, நடக்க முடியாத வயோதிகர்கள், ஆவினம் என்று அழிக்கப் பட்ட போதே கடவுள் இருக்கிறாரா என்ற வேதனையுடன் கூடிய எரிச்சல் மிகுந்து என்னதான்யா பண்ற என்று திட்டி, அது சரியின் நான் கடவுள் இடுகை படித்து, நன்றாக வேண்டும் என்று சந்தோஷப்படும் மனநிலை வந்தது நிஜம்.

சென்ற வாரம் முதல் நடைபெறும் சில நிகழ்ச்சிகள், சரி கடவுளே நீ எங்களைக் காக்க வேண்டாம். சூடு சுரணை இருந்தால் உன் பெயரையாவது காப்பாற்றிக் கொள் என்று அவரையே வேண்டுமளவு பக்தனாக்கி விட்டது.

அறிவியலும் மத நம்பிக்கையும் எப்பொழுதும் இணை கோடுகளாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனாலும் இந்தியாவைப் பொறுத்த மட்டில் சந்திரனுக்கு விண்கலம் அனுப்புவது கூட சந்திர ஹோரை பார்த்துத் தான் என்பதும், பூஜை, ஹோமம் இத்யாதி  புண்ணாகுகளுக்கு பின் தான் என்பதும் தெளிவு.

ஆனால் ஒரு பதவி, அதுவும் தலைவர் பதவி முழுக்க முழுக்க தகுதி அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது விதி. ஹி ஹி. வருடாந்தர ரகசிய அறிக்கையில் கடவுளுக்கு நேர்த்திக் கடன் இருக்கிறதா? எந்தக் கடவுள்? அவர் பவர்ஃபுல்லா என்றெல்லாம் பார்க்கிறார்கள் போல இப்போது.

அது அவர் தனிப்பட்ட மதச் சுதந்திரம் என்ற கருத்து முன்வைக்கப் படுமேயானால், பத்திரிகையில் விளம்பரமாக வந்திருக்க வேண்டுமே தவிர செய்தியாக இல்லை. பாருங்கள் படத்தை:‍‍‍‍

அடுத்ததாக இதுவும் பதவிக்காக கடவுள் வாங்கிய லஞ்சமா? காரியம் நடக்குமா? அட்வான்ஸா? நீங்கள்தான் சொல்லுங்களேன்.


இது மஹா கேவலம். ஒரு அடியாள் ரேஞ்சுக்கு, போன வருடம் வந்த போது வேண்டிக் கொண்டேன். நல்ல படியாக குழந்தை, குட்டி, கிழவன், கிழவி எல்லாரையும் போட்டுத் தள்ளியதோடல்லாமல், ஒரு புடுங்கியும் ஒன்னும் பண்ண முடியாமல் முடித்துக் கொடுத்தற்கு நேர்த்திக் கடன் என்று பேட்டி கொடுக்கும் பேயைப் பாருங்கள்.


இதெல்லாம் சகஜமப்பா என்கிறீர்களா? அப்படியானால் மீண்டும் படியுங்கள். உங்கள் வாழ்க்கை அரசியல் வாதியின் கையிலும் அரசு இயந்திரத்தின் கையிலும் நசுங்கும் கரும்புச் சக்கை. முதலாவது தன் திறமையின் மீது மட்டுமே நம்பிக்கையற்ற அரசு இயந்திரத்தின் பல்சக்கரம். இரண்டாவது தன் கட்சியையே சரிவர கட்டிக் காக்கத் தெரியாத அரசியல் வாதி செய்யும் பேரம். கடவுள் தரகனாகி விட்டான். ஆர்.டி.ஓ. ஆஃபீசில், மொபட்  மட்டுமே  ஓட்டத் தெரிந்த ஒருவனுக்கு கார் ஓட்ட அனுமதி பெற்றுத் தந்த தரகனுக்கு நிகராகி விட்டானா கடவுள்?

மூன்றாவது அரக்க நாய், கடவுளை ஒரு கூலிப்படைத் தலைவனாக்கி விட்டானே. கடவுளை அடையாளம் காட்டும் வேதம் சொல்கிறது,  ஹத்தி (கொல்வது) என்பது, ப்ரம்மஹத்தி (விமோசனமே இல்லை) என்னும் கருத்தரித்த பெண்ணை கருவோடு கொல்லுதல், சிசு ஹத்தி (கடினமான தண்டனைக்கானது) என்னும் குழந்தைக் கொலை, பசு ஹத்தி என்னும் மிருகக் கொலை போன்றவை மிகக் கடுமையான பாதகச் செயல்கள் என்று.

இது ஒன்றைக்கூட விடாமல் செய்த ஒரு பாவி அந்தக் கோவிலுக்கு வந்து நல்ல படியாக நடத்திக் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்கிறான் என்றால் கடவுளுக்கு கடவுளைக்காட்ட எந்த வேதம் இருக்கிறது?

கைக்குழந்தை சிறுநீர் கழித்து விட்டால் பரிகார பூசை என காசு பிடுங்கும் கோவில்களில் இத்தனை ஹத்தி செய்த புறம்போக்கு வந்து போன தோஷம் கழிய என்ன செய்யப் போகிறீர்கள். பரிகாரமே இல்லை என வேதம் சொன்ன ப்ரம்மஹத்திக்கு பை-லா எதாவது இருக்கிறதா?

மாற்று மதத்தினருக்கு அனுமதியில்லை என்று போர்ட் வைத்திருக்குமே அறநிலையத் துறை. பௌத்தனான மகிந்தா எப்படி ஐயா போனான். கூலிப் படைத் தலைவனுக்கு காசுதான் முக்கியமென்கிறானா? ஒன்னு பண்ணுங்கடே. கடவுளே காசு பார்க்கும் போது நீங்க பார்த்தா என்ன தப்பு? நெஞ்சு முட்ட நீங்க தின்னாலும் கொஞ்சமாவது மக்களுக்கு கிடைக்கும்.

1. மனித வள மேம்பாட்டுத் துறை, அந்தந்த தொழில் துறை,  சமயத் துறை கூட்டாக ப்ரமோஷன் நேர்த்தி பேக்கேஜ் வைக்கலாம். அரசுத் துறை ஊழியருக்கு கட்டணத்தில் தள்ளுபடி தரலாம். கிடைக்கும் வருமானத்தை அந்தந்த‌த் துறையின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தலாம்.  கூடுதல் வருவாய் கிடைப்பதால், குப்பன் சுப்பனின் கூலியில் வருமான வரி குறையலாம்..

2. வெளியுறவுத்துறை சமயத்துறையோடு கூட்டாக அயல் நாட்டு அதிபர்கள், ஆயுத வியாபாரிகள், போதைப் பொருள் விற்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் நினைத்ததை முடிக்க நேர்த்தி பேக்கேஜ் அறிவிக்கலாம்.  அந்நியச் செலாவணி அபரிமிதமாக வருமாதலால், பொருளாதாரம் பிச்சிகிட்டு கிளம்பிடும்.

அவன் அவன் எடுக்குற முடிவு உனக்கு சாதகமாத்தாண்டா இருக்கு கடவுளே!