கடந்த சில மாதங்களாக குஞ்சு குளுவான், கருவிலிருக்கிறது, நடக்க முடியாத வயோதிகர்கள், ஆவினம் என்று அழிக்கப் பட்ட போதே கடவுள் இருக்கிறாரா என்ற வேதனையுடன் கூடிய எரிச்சல் மிகுந்து என்னதான்யா பண்ற என்று திட்டி, அது சரியின்
நான் கடவுள் இடுகை படித்து, நன்றாக வேண்டும் என்று சந்தோஷப்படும் மனநிலை வந்தது நிஜம்.
சென்ற வாரம் முதல் நடைபெறும் சில நிகழ்ச்சிகள், சரி கடவுளே நீ எங்களைக் காக்க வேண்டாம். சூடு சுரணை இருந்தால் உன் பெயரையாவது காப்பாற்றிக் கொள் என்று அவரையே வேண்டுமளவு பக்தனாக்கி விட்டது.
அறிவியலும் மத நம்பிக்கையும் எப்பொழுதும் இணை கோடுகளாகவே இருந்து வந்திருக்கிறது. ஆனாலும் இந்தியாவைப் பொறுத்த மட்டில் சந்திரனுக்கு விண்கலம் அனுப்புவது கூட சந்திர ஹோரை பார்த்துத் தான் என்பதும், பூஜை, ஹோமம் இத்யாதி புண்ணாகுகளுக்கு பின் தான் என்பதும் தெளிவு.
ஆனால் ஒரு பதவி, அதுவும் தலைவர் பதவி முழுக்க முழுக்க தகுதி அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பது விதி. ஹி ஹி. வருடாந்தர ரகசிய அறிக்கையில் கடவுளுக்கு நேர்த்திக் கடன் இருக்கிறதா? எந்தக் கடவுள்? அவர் பவர்ஃபுல்லா என்றெல்லாம் பார்க்கிறார்கள் போல இப்போது.
அது அவர் தனிப்பட்ட மதச் சுதந்திரம் என்ற கருத்து முன்வைக்கப் படுமேயானால், பத்திரிகையில் விளம்பரமாக வந்திருக்க வேண்டுமே தவிர செய்தியாக இல்லை. பாருங்கள் படத்தை:
அடுத்ததாக இதுவும் பதவிக்காக கடவுள் வாங்கிய லஞ்சமா? காரியம் நடக்குமா? அட்வான்ஸா? நீங்கள்தான் சொல்லுங்களேன்.
இது மஹா கேவலம். ஒரு அடியாள் ரேஞ்சுக்கு, போன வருடம் வந்த போது வேண்டிக் கொண்டேன். நல்ல படியாக குழந்தை, குட்டி, கிழவன், கிழவி எல்லாரையும் போட்டுத் தள்ளியதோடல்லாமல், ஒரு புடுங்கியும் ஒன்னும் பண்ண முடியாமல் முடித்துக் கொடுத்தற்கு நேர்த்திக் கடன் என்று பேட்டி கொடுக்கும் பேயைப் பாருங்கள்.
இதெல்லாம் சகஜமப்பா என்கிறீர்களா? அப்படியானால் மீண்டும் படியுங்கள். உங்கள் வாழ்க்கை அரசியல் வாதியின் கையிலும் அரசு இயந்திரத்தின் கையிலும் நசுங்கும் கரும்புச் சக்கை. முதலாவது தன் திறமையின் மீது மட்டுமே நம்பிக்கையற்ற அரசு இயந்திரத்தின் பல்சக்கரம். இரண்டாவது தன் கட்சியையே சரிவர கட்டிக் காக்கத் தெரியாத அரசியல் வாதி செய்யும் பேரம். கடவுள் தரகனாகி விட்டான். ஆர்.டி.ஓ. ஆஃபீசில், மொபட் மட்டுமே ஓட்டத் தெரிந்த ஒருவனுக்கு கார் ஓட்ட அனுமதி பெற்றுத் தந்த தரகனுக்கு நிகராகி விட்டானா கடவுள்?
மூன்றாவது அரக்க நாய், கடவுளை ஒரு கூலிப்படைத் தலைவனாக்கி விட்டானே. கடவுளை அடையாளம் காட்டும் வேதம் சொல்கிறது, ஹத்தி (கொல்வது) என்பது, ப்ரம்மஹத்தி (விமோசனமே இல்லை) என்னும் கருத்தரித்த பெண்ணை கருவோடு கொல்லுதல், சிசு ஹத்தி (கடினமான தண்டனைக்கானது) என்னும் குழந்தைக் கொலை, பசு ஹத்தி என்னும் மிருகக் கொலை போன்றவை மிகக் கடுமையான பாதகச் செயல்கள் என்று.
இது ஒன்றைக்கூட விடாமல் செய்த ஒரு பாவி அந்தக் கோவிலுக்கு வந்து நல்ல படியாக நடத்திக் கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்கிறான் என்றால் கடவுளுக்கு கடவுளைக்காட்ட எந்த வேதம் இருக்கிறது?
கைக்குழந்தை சிறுநீர் கழித்து விட்டால் பரிகார பூசை என காசு பிடுங்கும் கோவில்களில் இத்தனை ஹத்தி செய்த புறம்போக்கு வந்து போன தோஷம் கழிய என்ன செய்யப் போகிறீர்கள். பரிகாரமே இல்லை என வேதம் சொன்ன ப்ரம்மஹத்திக்கு பை-லா எதாவது இருக்கிறதா?
மாற்று மதத்தினருக்கு அனுமதியில்லை என்று போர்ட் வைத்திருக்குமே அறநிலையத் துறை. பௌத்தனான மகிந்தா எப்படி ஐயா போனான். கூலிப் படைத் தலைவனுக்கு காசுதான் முக்கியமென்கிறானா? ஒன்னு பண்ணுங்கடே. கடவுளே காசு பார்க்கும் போது நீங்க பார்த்தா என்ன தப்பு? நெஞ்சு முட்ட நீங்க தின்னாலும் கொஞ்சமாவது மக்களுக்கு கிடைக்கும்.
1. மனித வள மேம்பாட்டுத் துறை, அந்தந்த தொழில் துறை, சமயத் துறை கூட்டாக ப்ரமோஷன் நேர்த்தி பேக்கேஜ் வைக்கலாம். அரசுத் துறை ஊழியருக்கு கட்டணத்தில் தள்ளுபடி தரலாம். கிடைக்கும் வருமானத்தை அந்தந்தத் துறையின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தலாம். கூடுதல் வருவாய் கிடைப்பதால், குப்பன் சுப்பனின் கூலியில் வருமான வரி குறையலாம்..
2. வெளியுறவுத்துறை சமயத்துறையோடு கூட்டாக அயல் நாட்டு அதிபர்கள், ஆயுத வியாபாரிகள், போதைப் பொருள் விற்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் அவர்கள் நினைத்ததை முடிக்க நேர்த்தி பேக்கேஜ் அறிவிக்கலாம். அந்நியச் செலாவணி அபரிமிதமாக வருமாதலால், பொருளாதாரம் பிச்சிகிட்டு கிளம்பிடும்.
அவன் அவன் எடுக்குற முடிவு உனக்கு சாதகமாத்தாண்டா இருக்கு கடவுளே!