Sunday, September 6, 2009

தொலைந்து போனவர்கள் - 3

உலகத்துலயே மொத மொத ஹேன்ட்பேக் மாட்டின பரம்பரை நாங்கன்னு கோவை சரளாம்மணி ரவுசுடுமே. அவங்கதான் தொலைந்தவர்கள் வரிசையில இன்னைக்கு. ஆறாம்புல இருந்து பதினொண்ணாம்பு வரைக்கும் 6 வருசம் இவங்கள படிச்சிருக்கிறேன். ஒரு மத்திய அரசு அலுவலகத்தின் உள்ளே கதவுக்கும் வெளியே கதவுக்கும் இடைப்பட்ட நடைபாதைதான் இவங்க குடியிருப்பு.

வரிசையா நிக்கிற தூங்குமூஞ்சி மரத்து கீழ மொத்தமா எத்தன குடின்னே தெரியாம ஒரு முப்பது நாற்பது பேரு குஞ்சும் குளுவானுமா இருப்பாங்க. வெயில்காலம் பரவால்ல. நல்ல நிழல். மழைன்னா பாவம் ஒட்டு போட்ட பிளாஸ்டிக் ஷீட் ஆபீஸ் மதிலுக்கு ஒரு ஓரம் வரிசையா செங்கல் வெச்சி மத்த ஓரம்னு சரிவா கட்டி உள்ள நடுங்கிகிட்டு இருக்கிறத பார்க்க பாவமா இருக்கும். காலை பள்ளிக்கூடம் போகையில், இவர்கள் அதற்கும் முன்னரே கிளம்பி வீடு வீடாக வாங்கிக் கொண்டு வந்த சாப்பாட்டை வட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

அப்புறம் எங்கு போவார்களோ தெரியாது. ஒன்னு ரெண்டு வயசானவங்க மட்டும் கடை போடுவாங்க. மணி மாலை, நரிக்கொம்பு, மருந்து, வேர்கள்னு கலந்தாங்கட்டியா. அதெல்லாம் எழுதப்போனா அஞ்சாறு இடுகை தேரும். அந்தக் காலக் கட்டத்தில் ஏனோ இவர்களில் ஆண்களில் பல பேர் திருட்டுத் தொழிலும் பெண்கள் ஏமாற்றுவதுமாக இருந்தார்கள். கடைகளில் கொஞ்சம் கூட்டமிருக்கும் நேரம் ஒதுங்கி இருந்து, கூட்டம் கொஞ்சம் குறைய 10ரூ தாளை நீட்டி சில்லறை கேட்பார்கள். இல்லை என்றாலும் குடு சாமி, குடு சாமி என்று அழிச்சாட்டியமாய் நிற்பார்கள்.

தொல்லை தாளாமலோ பாவமென்றோ சில்லறை கொடுத்தால் போச்சு. அங்கேயே நின்று, கூட்டம் சேரவும் மிச்சம் கொடு போகணுமென்று ஆரம்பிக்கும். 10 ரூ சில்லரை கொடுத்தாச்சில்ல போ என்றால், ஐய்யோ 50 ரூ கொடுத்தேன் 100ரூ கொடுத்தேன். மிச்சம் தரலை. கல்லால பாருன்னு கத்தும். வியாபரத்தைப் பார்ப்பதா? இவளோடு மல்லுக் கட்டுவதா? பெரும்பாலும் கொடுத்து விடுவார்கள்.

மருந்துக் கடைகளில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து ஒரே ஜுரம், இருமல் மருந்து குடு என்று நிற்பார்கள். கடைக் காரர்கள் அடிக்காத குறையாக விரட்டுவார்கள். நான் சும்மாவா கேட்டேன். காசு தரேன். மருந்து குடு. சாமி நீயே சொல்லு என்றெலாம் வம்படியாய் நிற்பார்கள். நியாயம் தானே என்றுதான் தோன்றும். அப்புறம் என்ன நடக்கும் தெரியுமா? பாதி நொவால்ஜின், அரை இருமல் மருந்து கொண்டு வந்து சரியா போச்சு. காசு குடு என்று கூட்ட நேரத்தில் ஆரம்பிக்கும். தமாசுக்கு சொல்லைங்க. அடாவடி அடிச்சி அசிங்கமா கத்தினா ஒழியுது சனியன்னு குடுத்துடுவாங்க. இல்லன்னா போய் மொத்த கும்பலையும் கூட்டி வந்து வியாபாரத்தைக் கெடுக்கும்.

ஒரு முறை சாப்பாடு கேட்டு வந்த ஒரு சிறுவனை நாய் கடித்து விட்டது. கெண்டைக்காலில் பிடுங்கியதால் ரத்தம் கொட்டுகிறது. சைக்கிள் கடை வைத்திருந்த அண்ணன் தூக்கி வண்டியில் உட்கார வைத்து ஆசுபத்திரிக்கு கூட்டிப் போனார்கள். கொஞ்ச நேரத்தில் ஒரு கும்பலே திரண்டு வந்துவிட்டது. ஏன் ஊசி போட்டாய். இன்னும் மிச்ச ஊசி போட காசு கொடு என்று. மனுசனுக்கு கோவம் வருமா வராதா? விறகு கட்டையை தூக்கிக் கொண்டு அடிக்கப் போய்விட்டார். எகிறின இரண்டு இளந்தாரிகளுக்கு அடியும் விழுந்தது.

காசு பேறாது எனத் தெரிந்தவுடன் ஒரு அம்மணி மட்டும் அழுது கொண்டு வந்தது. சாமி, காசு வேணாம், எந்த நாய் கடித்தது . அந்த நாய்க்கு தினம் யாராவது சோறு போடுவாங்க இல்ல. அவங்க யாரு சொல்லு சாமின்னு அழுது. அங்க போய் ஏதாவது அடாவடி பண்ணுவாய். ஓடுன்னு விரட்டினா, இல்ல பண்ண மாட்டேன். இங்கிலீசு மருந்து எல்லாம் வேணாம். சுடுகாட்டுக்கு கூட்டிட்டு போய் பிணம் எரியிற புகையை நாய் கடித்தவன் மேல் படுறா மாதிரி வீசி, அப்புறம் அந்த நாய்க்கு யார் அடிக்கடியோ தினசரியோ சாப்பாடு குடுப்பார்களோ அவங்க வீட்டில் தண்ணீர் வாங்கி கொடுத்தா போதும். சரியாயிடும் சாமி. சொல்லு சொல்லுன்னு அழுது. சொன்னப்புறம் அப்படியே கூட்டிக் கொண்டு வந்து தண்ணீர் வாங்கி முகம் கழுவி குடிக்க விட்டு கூட்டிப் போனது.

நரம்புச் சிலந்தி என்று கேள்விப் பட்டிருப்பீர்கள். எங்கள் தெருவில் ஒரு ஆளுக்கு புடிச்சது சனியன். ஒரு கால் மட்டும் வீங்கிப் போய் அசைய முடியாமல் கிடந்தார்.
சாப்பாடு கேட்டு வந்த ஒரு கிழவர், சாமி நரம்பு சிலந்தி சாமி. நான் எடுக்கிறேன் சாமி என்று வரவும் பதறிப் போய்ட்டாங்க. ரொம்பவும் தைரியம் சொல்லி ஒரு கனிந்த வாழைப்பழம் வாங்கி வரச் சொல்லி கட்டி விட்டு, அப்படியே இருக்கணும். கட்டு நெகிழக்கூடாது. 2 நாள் போகட்டும் என்று சொல்லி விட்டு போனார். அடுத்த நாள் வந்து பார்த்துக் கொண்டு, 3ம் நாள் வந்து, கற்பூரம் கொண்டு வரச் சொல்லி சாமி கும்பிட்டு, ஒரு பச்சை தென்னோலை கேட்டு அதன் ஈர்க்கை ஒரு அடிக்கு உடைத்துக் கொண்டார். கட்டை அவிழ்த்து, வாழைப்பழம் நன்றாக அழுகிப் போய் இருந்தது. அந்தக் குச்சியாலேயே வழித்து விடவும், மெதுவே புழு எட்டிப் பார்த்தது.

ரொம்ப நளினமாக புழுவின் அடியில் நெருட அது சுத்திக் கொண்டு இன்னும் கொஞ்சம் வெளீயில் வந்தது. இப்படியெ அதுவாக வெளி வருவதும் அந்த அளவு இவர் குச்சியைத் திருகி சுத்துவதுமாக ரொம்பப் பொறுமையாக நடத்திக் கொண்டிருந்தார். வெகுநேரம் கழித்து அதன் மற்ற முனையும் தானே வந்து விடவும், ரத்தமும் சீழுமாய் வழிய அப்படியே விட்டு, கற்பூரம் கற்பூரம் என்று அலறி, அதைக் கொளுத்தி, அதன் தணலில் சும்மா சொல்லக் கூடாது, ஒரு நூல்கண்டு அளவிற்கு சுற்றிய புழுவை கருக்கி, போதாதற்கு மண்ணெண்ணெய் ஊற்றி, சாம்பலாக்கி, கழுவி விட்டு அப்புறம் தான் காயத்தைக் கவனித்தார்.

இப்போ எதுக்கு இவங்கள தொலைஞ்சிட்டாங்கன்னு தேடுறங்கரீங்களா. அந்த வங்கொடுமைய ஏன் கேக்குறீங்க. பித்தளையில ஒரு முள்ளிடுக்கி வெச்சிருப்பாங்க. ஊசி மாதிரி ஒண்ணு, இடுக்கி மாதிரி இருக்கிறதுக்குள்ள இருக்கும். அது கூடவே ஒரு கம்பியில சின்ன குழியோட கரண்டி மாதிரி இருக்கும். காதில சேர்ர அழுக்கெடுக்க, கட்டை விரல் இடுக்கில மண்ணு சேர்ந்து உயிர் போகுமே, அதுக்கெல்லாம் அத விட சிறந்தது ஒண்ணில்ல. எல்லா வீட்டுலயும் இருக்கும். நம்ம தாத்தால்லாம் அரைஞாண் கயித்தில கட்டி வச்சிருப்பாங்க. அது அவங்க கிட்டதானாம் கிடைக்கும். கிட்ட தட்ட 25 வருசத்துக்கு மேல தேடுறேன். கிடைக்கலை.

Friday, September 4, 2009

துளித் துளியாய் துயரம்..

நீதியின் கண்கட்டி
நீச்சன் சுட்டதில்
நிர்வாணமானது..மனிதம்.

உயிர்காட்சிச் சாலைகளில்
மனிதர்கள் வண்டிக்குள்
நாங்களேன் வலயத்துள்?

அரசு துக்கம்
அலுவலகத்துக்கு விடுமுறை
கலக்கும் காமெடி சானல்கள்

ரேஷன் அட்டை பார்த்து
கலர் டி.வி கொடுத்த பின்
போலி அட்டை சோதனையா?

விநாயகர் கரைப்பு ஊர்வலம்
விமரிசையாய் தொடங்கி வைத்தார்
சுற்றுச்சூழல் நல அமைச்சர்.

நீதிக் கொலைஞனுக்கு
நிவாரணப் பரிசு மழை
நீயா நானா போட்டி..

எங்களுக்காய் போராடிய
எல்லோரும் போனபின்
எங்களுக்காய் போராட எவருமில்லை.

சாதனையில் தொடங்கியது
ரோதனையாய் மாறிடவும்
வேதனையானதெங்கள் வாழ்வு.

அரசியல் டாஸ்மாக்கின்
பதவிச் சாராயத்துக்கு
தொட்டுக்கொள்ள தமிழன்.

இணைய வர்த்தகத்தில் மட்டுமே
இனி எங்கள் ஒட்டு
இடைத்தரகர்கள் மன்னிக்க!

எலக்சன் முடிந்தது
எடுத்து வை ஈழத்தை
எப்போதாவது உதவும்.

இத்தாலி பேசுது இந்தி
இளிச்ச வாயன் தமிழனா
இனிப் படிப்போம்.

பதவித் துண்டுக்குள்
பரிமாரிய பேரம்
உயிர்கள்!
****

நறுக்குன்னு நாலு வார்த்த V 2.1

கடந்த கால கசப்புகளை மறக்க வேண்டும் என மகிந்த‌ தெரிவிப்பு

விஷத்த குடுத்து கொன்னுபோட்டு கசப்ப மறந்துடுங்கவா? ஏன் ஆட்டம் கண்டு போச்சோ?
_______________________________________________________________

திஸ்ஸநாயகத்திற்கு 20 வருட சிறை; கருணாவுக்கு அமைச்சர் பதவியா?: ஊடக அமைச்சரிடம் ஊடகவியலாளர் கேள்வி..

எட்டப்பனுக்கு பதவி. கட்டபொம்மனுக்கு தூக்கு. இதுதான் உங்க தமிழர் கலாச்சாரம்னு நக்கலடிப்பான். ஏன்யா?
_______________________________________________________________
ஜனாதிபதி படுகொலை சதித்திட்டங்கள் தொடர்கின்றன – மேர்வின் சில்வா

தொழிலமைச்சருக்கு ஏன்டா இந்த கவலை. கொலை பண்றதே தொழில். அதையும் ராணுவத்தான் புடுங்கிட்டான். உனக்கென்ன தொழிலிருக்க போவுது. நீ அடி ஜால்ரா.
_______________________________________________________________
உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழும் மஹிந்த ராஜபக்ஷ– வெனிசுலா ஜனாதிபதி

ஆமாம்டா. எல்லாரும் முன்னுதாரணமா கொண்டு ஜனங்கள போட்டுத் தள்ளிடுங்க. அவன் அவன் நாடு அவனவனுக்கு சொந்தம். அப்புறம் உங்களுக்குள்ள அடிச்சிட்டு சாவலாம்.
_______________________________________________________________
புலிகளை தடுத்து வைத்து மக்களை விடுதலை செய்ய வேண்டும் - ரணில்

அதத்தான் இப்போ பண்ணிட்டிருக்கேன். மக்களெல்லாம் மண்ணுக்குள்ளன்னு சொல்லவா போறான்.
_______________________________________________________________
யுத்தத்தில் ஊனமுற்ற படைவீரர்களை பராமரிக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் - கோதபாய ராஜபக்ஷ

இல்லன்னா அவனவனும் வாய தொறந்துடுவானே. அடிச்ச காசெல்லாம் இதுக்கே போகும்.
_______________________________________________________________
உலகப் புலனாய்வு அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளைப் போன்று நாட்டிற்குள் ஊடுருவியுள்ளனர் – திவயின

ஆஹா ஆஹா. வெறி புடிச்சி அத்தன வெள்ளச்சாமியவும் கம்பிக்குள்ள போடமாட்டானா? அப்பவாவது சுரணை வராதா?
_______________________________________________________________
சமாதான நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு பான் கீ மூன் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு.

இவரெப்போ கோரினாரு? மறந்து போய் சண்ட நடக்கிறப்போ எடுத்த கூடுதல் நகல அனுப்பிட்டாரோ?
_______________________________________________________________
நீர்மூழ்கிகளுக்கான சுரங்கப் பாதையைக் கட்டியமைக்க ஜப்பான் விபுணர்கள் குழு புலிகளுக்கு உதவியது: கொழும்பு நாளேடு

ஜப்பான் காரன் இனிமே நிவாரணம் இல்லன்னுட்டான் போல.
_______________________________________________________________
இடம்பெயர்ந்தோர் தொடர்பில் மனித உரிமைகள் அமைச்சருடன், பான் கீ மூன் பேச்சுவார்த்தை

இப்புடியெல்லாம் கசிய விட்டா நான் என்னதான்டா பண்ணுவேன்? பார்த்துக்குங்கன்னு அழுதாரோ?
_______________________________________________________________
"சனல் 4" காணொளி தொடர்பாக எந்த விசாரணைக்கும் அரசு தயார்: ஊடக அமைச்சர் யாப்பா அறிவிப்பு

ஏறிபோச்சுடா டேய். சவுண்டுட்டா அடங்கிடுவானுங்கன்னு நல்லா கரம்பேறிப் போச்சு.
_______________________________________________________________
இலங்கை ராணுவத்தின் கொடூரச்செயல்:அமெரிக்கா கண்டனம்

இந்த மாசத்துக் கண்டனம் தெரிவிச்சாச்சு. அவங்கவங்க வேலைய பார்க்கலாம். நெக்ஸ்ட்.
_______________________________________________________________
அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை பிள்ளையான் வெளியிடக் கூடாது – அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன்

போட்டுக் கொடுக்க புலி இல்லன்னு நாயே நாயை தின்ன பார்க்குது.
_______________________________________________________________
யுனிசெவ் அமைப்பின் தொடர்பாடல் பணிப்பாளரை நாடுகடத்துமாறு சிறீலங்கா அரசாங்கம் உத்தரவு

உன்ன நாடு கடத்த ஒருத்தனுக்கும் தருவிசில்லாம போச்சே.
_______________________________________________________________
புலிகளுடனான இறுதி யுத்தத்த போர்க் காட்சிகளைக் கொண்ட அனைத்து ஒளிப்பதிவு நாடாக்களும் அரசின் கட்டுப்பாட்டுள்

எங்கப்பன் குதிருக்குள்ள இல்லீங்கோவ். இப்பவாவது முழிச்சிக்கங்கடா. இறையாண்மை மசிராண்மைல்லாம் கடாசிட்டு மனுசனா இருக்கப் பாருங்கடா.
_______________________________________________________________
இலங்கைக்கு திறமையான புலனாய்வு வலைப்பின்னல் தேவையாம்.

ஒட்டப்பாலத்தக் கேளும்மா. புல்லு புடுங்க ஆளனுப்பினேன்னு அனுப்புவான்.
_______________________________________________________________
இலங்கையில் இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்த பூரணமான ஆதரவளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது

எங்கூர்க்காரனுவ தனி ஈழத்துக்கு ஆதரவு குடுத்தத விட கேவலமா இருக்கே. செய்யாத வேலைக்கு ஆதரவு இல்லன்னுதான் கெடப்புல போட்டானோ. போங்கடா நீங்களும் உங்க ஆதரவும்.
_______________________________________________________________
ஐநாவுக்கு அளித்த வாக்குறுதியை மீறும் இலங்கை

இவன் பவுசுதான் தெரியுதில்ல. என்னா கழட்டிட போறான்.
_______________________________________________________________
தமிழர் பகுதியில் முழு அமைதி நிலவுகிறது: திருச்சியில் இலங்கை அமைச்சர் பேட்டி

ஆமாம்டா. சுடுகாடு அமைதியாத் தானே இருக்கும்.
_______________________________________________________________
பிறந்த நாள் பரிசு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி ஜெ. மனு

நல்லாக் கேட்டுக்குங்கப்பு. வழக்கிலிருந்துதான். பரிசிலிருந்தில்ல.
_______________________________________________________________
நள்ளிரவில் கிரிவலம் வந்த நடிகை சினேகா:படம்

வாங்கி நடு வீட்டில வெச்சி வலம் வரலாம். எல்லாம் விடிஞ்சிடும்.
_______________________________________________________________
எஸ்.வி.சேகருக்கு கொலை மிரட்டல் கடிதம்

சேகரு. நீ அவ்ளோ ஃபேமஸா?
_______________________________________________________________
பனையூர் கொலை வழக்கில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: ஜெ.

யார்ப்பா அங்க. நாளைக்கு பேப்பர்ல மூணாவது பக்கத்த அப்படியே விடுங்க. முதல் பக்கத்துல வெள்ளை அறிக்கை மூணாவது பக்கம் பார்க்கனு போட்டா சரி.
_______________________________________________________________