Saturday, June 27, 2020

மீண்டும் ஒரு கொசு வர்த்தி

India - Tamil Nadu - Chennai - Southern Railway Home Offic… | Flickr

75ல கம்பாஷனேட் க்ரவுண்ட்ஸ்ல வேலைக்கு சேர்ந்தேன். அப்போ எங்க ஆஃபீஸ்ல ஒரு லைப்ரரி இருந்தது. லைப்ரரியனுக்கு ஹெல்ப் பண்ணா புது புஸ்தகம் கிடைக்கும்னு எக்ஸ்பீரியன்ஸ். அப்படித்தான் பழக்கமானார். எமர்ஜென்ஸில கம்ப்ளெயிண்ட் செக்‌ஷன்னு ஒரு செக்‌ஷன் இருந்தது. அதுல இருந்தார். அப்புறம் எங்க ஆஃபீஸுக்கே ட்ரான்ஸ்ஃபர் ஆனார். அப்பதான் பேச்சு வாக்கில தெரிஞ்சது அவர் எங்கப்பாவோட ஃப்ரண்ட்னு.
அப்புறம் ஒரு ஆஃபீசர் கூட சின்ன மோதல். மோதல்னா பெருசா ஒன்னுமில்ல. பட்ஜட் முடிஞ்சதும் பட்ஜட் டாகுமெண்ட் வரும். அவர் பட்ஜட் செக்‌ஷன் இன்சார்ஜ். பெரிய பாஸ் போட்டு வறுத்திண்டிருந்தார். பட்ஜட் முடிஞ்சு பத்து நாளாச்சு பட்ஜட் டாகுமெண்ட் வரலைன்னா கேக்க மாட்டியான்னு. நான் உள்ள இருந்தவன் கம்முனு இருக்காம சார் இன்னோரு ஆஃபீஸர் ரூம் வாசல்ல பண்டல் பண்டலா போட்டு வச்சிருக்கு சார்னேன். இவருக்கு கோவம். தேவையில்லாம உளறாத. உனக்கு பட்ஜட் டாகுமெண்ட் தெரியுமான்னார். சுருக்குனு கோவம் வந்து ரோஸ் கலர், வைட் கலர், பச்சை கலர்னு கலர் கலரா இருக்குமே அதானே. அது அங்கதான் இருக்குன்னேன். அவருக்கு இன்னும் கடுப்பாயிடுத்து. நல்ல வெள்ளை வெளேர் மனுஷன். மூஞ்செல்லாம் சிவந்து போய் ஷட் அப். குறுக்க பேசாதேன்னார். பெரிய பாஸ் நமட்டு சிரிப்பு சிரிச்சுண்டு எங்க போய் ஒரு புக் கொண்டு வான்னார். நேரா போய் அந்த செக்‌ஷன்ல அடிச்சி விட்டேன். இது உங்க புக்கா. இல்லைல்ல.. சொல்லலாம்ல.. பாஸ் கேக்கறார்னு ஒரு பெரிய பண்டல் தூக்க மாட்டாம தூக்கி எடுத்துண்டு போனேன். பிரிச்சா நான் சொன்னது கரெக்ட். அந்தப் பையன் தெரியாமலே சொல்லிருந்தாலும் இப்பிடியா மிரட்றது. எவ்ளோ சரியா சொல்லிருக்கான். நீ போர்டுக்கு ஃபோன் பண்ணி கேட்டிருக்க வேண்டாமான்னு கிழிச்சி ஒட்டி, அந்த செக்‌ஷன் பாஸ அதத்தாண்டிதான ரூமுக்கு போற..பட்ஜெட் டாகுமெண்டுக்கும் உனக்கும் என்னய்யா சம்மந்தம். அத யார் வாங்கிப் போட்டா, நீ ஏன் கேக்கலைன்னு கிழிச்சார்.
அந்த மனுஷன் ரூமுக்கு வந்து கூப்பிட்டனுப்பி உனக்கு தெரிஞ்சதானாலும் பாத்து சொல்றேன்னு சொல்லுடா..எல்லாரும் இவர மாதிரி இருக்க மாட்டாங்க..தப்பாயிடுத்துன்னா அப்ப நம்ம தலை தப்பாதுன்னு அட்வைஸ். அதோட நிக்காம நீ மூர்த்தி பையந்தானே..நான் உங்கப்பா ஃப்ரண்ட். அவ குடுத்த விஷ்ணு சகஸ்ரநாமம்தான் இப்பவும் வச்சிண்டு சொல்றேன்னார்.
அப்புறம் ப்ரொமோஷன்ல ஒரு செக்‌ஷனுக்கு போனப்ப ஆஃபீஸர் கறார் பேர்வழி. சிரிக்கறது ரொம்ப ரேர். ப்ரொமோஷன் எக்ஸாமுக்கு அந்த செக்‌ஷன் சப்ஜெக்ட் எடுக்கலன்னு அப்ளிகேஷன் ஃபார்வேர்ட் பண்ண மாட்டேன்னுட்டார். அப்புறம் கெஞ்சி இந்த சப்ஜக்ட் யாருக்கும் தெரியாதாம். அதனால மார்க் வராதாம்னு எல்லாம் கெஞ்சி சைன் பண்ணார். அவர் ரிடையர் ஆகும்போது ஆசீர்வாதம். மூர்த்தி பையந்தான நீ..எஸ்டாப்ளிஷ்மெண்ட்ல அதாரிடிடா. அவர் பேர கெடுத்துடாதன்னுட்டு போனார்.
அப்புறம் ப்ரொமோஷன்லாம் ஆகி நான் ஆஃபீசராகி ஒரு டேட்டா தேவைன்னு கேட்டு ஒரு ஆஃபீஸ்லருந்து வரலை. நேர ஃபோன் போட்டு அந்த செக்‌ஷன் ஆஃபீசர கேட்டா இருங்க க்ளார்க்க கூப்படறேன்னு அவர் கைல குடுத்துட்டார். நான் யார் என்னன்னு விசாரிக்காம ஏன் டேட்டா அனுப்பலைன்னு கிழிச்சேன். அவர் பொறுமையா ஸ்பெஷல் மெசெஞ்சர் கொண்டு வரார் சார். எனக்கு உடம்பு சரியில்லைன்னு 2 வாரம் சிக்ல இருந்து இன்னைக்குத்தான் சார் வந்தேன். வந்ததும் இத அனுப்பிட்டேன் சார். சாரி ஃபார் த டிலே சார். ஐ ஆம் சுதர்ஸனம் சார்னார். ஒரு நிமிஷம் குப்புனு வேர்த்து ஊத்திடுச்சு..பேபி ஃபுட் பஞ்ச காலத்துல எங்கயோ பாரிஸ் கார்னர்ல சொல்லி என் தம்பிக்கு மாசம் ஒரு பெரிய டின் வாங்கிக் கொண்டு வருவார். கூடவே எனக்கு மிட்டாயும். அப்பாவோட ஃப்ரண்ட். அப்போ நான் 3வதோ என்னமோ படிச்சிண்டிருந்தேன். எனக்கு வேலைக்கு அப்ளிகேஷன் அடிச்சி குடுத்தவர். ஹெட் ஆஃபீஸ்ல போய் இவரப் பாருன்னு சொன்னவர். ஸ்கூலுக்கு போறப்போல்லாம் நல்லா படிப்பா. படிப்புதான் முக்கியம்னு சொல்லுவார். அப்பாவோட ஃப்ரண்ட். அப்புறம் ஆயிரம் மாமா சொல்லி என்ன பண்ண. அடுத்த நாள் பெர்மிஷன் சொல்லிட்டு போய் சாரி சொன்னா அடப்பாவி இதுக்கா வந்தே..நான் பார்த்து வளர்ந்த பிள்ளை இந்த பதவில இருந்து பதவிக்கு ஏத்தா மாதிரி அதாரிடியா பேசுதேன்னு சந்தோஷம்தாம்பான்னு அனுப்பி விட்டார்.
அதான் கடோசி அதாரிடி காட்றது. ஃப்ரண்ட்லியா கேட்டா ஈசியா முடிஞ்சுடும்னு கத்துக்கிட்டதும் கூட

Sunday, August 6, 2017

கேரக்டர் - யாரோ

ஸ்ரீ ரங்கம் மடப்பள்ளி ரெஸ்டாரண்ட். காலியாயிருந்த ஒரு டேபிளின் 3 சேர்களில் உட்கார்ந்த போது எதிர் சேரில் 30-35 வயது வாலிபர். சீரியசான மிஸ்லீடிங் பார்வை. செல்லை சீரியசாக நோண்டிக் கொண்டிருந்தார். எதிர் சீட்டுகளில் உட்கார்வது கூட டிஸ்ட்ராக்ட் செய்யாத ஆனால் அறிந்திருக்கிற முகபாவம்.

பச்சைக்கலர் காட்டனில் மாடர்ன் காலர்லெஸ் சட்டை. வலது கையில் பல கலர் கயிறுகளின் மேல் புத்தம் புதிய வெள்ளி கடா எனப்படும் கங்கணம். வலது கையில் ஸ்போர்ட்ஸ் வாட்ச். வேஷ்டியோ அல்லது ஜீன்ஸோ இருக்கவேண்டும் என்ற முன்முடிவு கள்ளப் பார்வையை ஏமாற்றிய காட்டன் முக்கால் ட்ராக் பேண்ட். கழுத்தைச் சுற்றி இறுக்கிய துளசி மணி. ஹரே ராமா கோஷ்டியாய் இருக்கவேண்டும் என்ற அடுத்த குறுகுறுப்பு தேடிய U அடையாளத்தை ஏமாற்றும் நெற்றி. ஃப்ரெஷ்ஷாக இருந்தாலும் குளிக்கவில்லை என்பது தெரிந்த ஒரு ஆச்சரியம்.

அதே சீரியஸ் முகபாவத்தோடு அரைக்கண் மூடிய நிலையில் யாருக்கோ ஃபோன்.
எத்தனை மணிக்கு ஆரம்பிக்கறது? ம்ம்? பத்தா?
டிஃபன்லாம் வந்தாச்சா?
குழந்தைகள் சாப்டாச்சா?
சரி நான் பத்துக்கு அங்க இருப்பேன்.
என்ன?
இல்லப்பா ஒரு சின்ன வேலை. ஒரு ப்ரொஃபைல் ஆடிட். முடிச்சுட்டு வந்துடுவேன். ஓக்கே
அணைத்து அஸால்டாக எறிந்த மொபைலின் கேஸிலும் ஸ்ரீ க்ருஷ்ண.

பக்கத்து டேபிளில் வந்தமர்ந்த எங்கள் ட்ரைவரை எதிரில் அமரச் சொன்னபோது வந்தமர்ந்து நோக்கிய விழிகளில் அவ்வளவு மகிழ்ச்சி.
வணக்கம் சார்! நல்லாருக்கீங்களா சார்? கவனிக்கல சாரி சார்.
வணக்கம்பா..நல்லாருக்கேன்..உட்காரு..வைஃப் எப்படி இருக்கா? பையன் என்ன பண்றான்..பேசறானா? இன்னைக்கு எங்க டூட்டி..நட்பாக அழுத்தி அமர வைக்கும் கரங்கள். ட்ரைவரின் கண்களில் பரவசம்.

நல்லாருக்காங்க சார். அப்பா, அம்மால்லாம் சொல்றான் சார்.

குட். நாளைக்கு சாயந்திரம் டூட்டியா?

இப்பதைக்கு புக்கிங் இல்ல சார்.

சரி ஃப்ரீயா இருந்தா சாயந்திரம் ஃபேமிலிய கூட்டிண்டு **** ஸ்கூல் க்ரவுண்டுக்கு வா. ஹெல்ப் தேவைப் படும். 150 பசங்களுக்கு யூனிஃபார்ம், புக்ஸ், சாப்பாடு..வேலை இருக்கும்.

வந்துடறேன் சார்!

புக்கிங் இருந்தா விட்டுண்டு வர வேண்டாம். ஃப்ரீயா இருந்தா வா.

சார் ஆதார் வந்துடுச்சு சார்.

குட். பேன் கார்ட் அப்ளை பண்ணு. ஒரு மாசம் ஆகும்னு சொல்லுவான். அக்னாலட்ஜ்மண்ட் இருந்தா போதும். நம்பர் இருக்கும். ஸ்டேட்பேங்க், கேவிபில்லாம் வேணாம். எல்விபி போ. அத வச்சு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிக்கோ. அக்கா இங்க வாங்க. தம்பிக்கு என்ன வேணுமோ குடுங்க. பில் என் கணக்கு.

(ஐ வில் டேக் கேர் சொல்ல வந்த அகந்தையை அடக்கி, இந்த பக்கியும் வாய் தொறக்கலையே என்ற குறுகுறுப்பை அழுத்தி வந்த சர்வர் அக்காவிடம் எங்களுக்கு சொல்லி நீங்க என்ன வேணுமோ சொல்லிக்கோங்க என்ற போதும் திரும்பிக் கூட பார்க்காத தி(ஜ)டம்). பை தி வே மடப்பள்ளி ஹோட்டல் மற்றும் அவுட்லெட்டுகளில் கிச்சன் தவிர பெண்கள் மட்டுமே. பெண்களுக்கே ஆன பரிவு மட்டுமல்ல யார் முகத்திலும் சலிப்பே அற்ற உற்சாகமான கான்ஃபிடன்ஸான முகங்கள்)

இட்லி பரிமாறியவரிடம் அக்கா உன் சைக்கிள் வந்துடுச்சு. மணச்சநல்லூர்ல இருக்கு. எப்டி கொண்டு வரதுன்னுதான் தெரியல. குட்டியானைல போட்டு கொண்டு வரணும். உனக்கும் வந்தாச்சு அந்தக்காக்கும்.

xxxட சொல்லலாம்ல தம்பி.

ப்ச். வண்டி வந்து சேராதுக்கா..அவரத் தேடி அலையணும். என்னவெல்லாம் பண்ணியாச்சு. இந்த வயசுல தெரிஞ்சே குடிச்சி குடும்பத்த நாசமாக்கறார். விடுக்கா பாத்துக்கலாம்.

நோண்டிக் கொண்டிருந்த செல்லிலிருந்து கண்ணெடுக்காமலே பின்னாடி கடந்த அக்காவிடம் அக்கா ஒரு காஃபி. வரதராஜன இன்னும் காணோம்.

கொண்டு வந்த அக்கா ஆத்திக் கொடுத்த பரிவு. சத்தியமா வயத்தெரிச்சல். அடேய், நீ யார்ரான்னு பொங்கி வந்தது. கொஞ்சம் கூட சூடா இருக்குமோ என்ற சந்தேகமே இல்லாமல் வாயில் வைத்து உறியும் அவர்மேல் பொறாமையும் கூட. அதற்குள் வரதராஜன் வந்து விட ‘நீ வரலன்னுதான் காஃபி சொன்னேன்..இத எடுத்துக்கோ’. டபரா காஃபி வரதனுக்கு.

கேஷியரண்ணா! (கணக்குக்கு காற்றில் கிறுக்கல்)

அலைச்சலில் மறந்து விட்டாலும், ராத்திரி சங்கீதாவில் டிஃபன் சாப்பிடும்போது

காலைல ஹோட்டல்ல பார்த்தமே ஒரு பச்ச சட்ட! என்ன பண்றார்?

டிசிபி ஆஃபீஸ்ல வொர்க் பண்றார் சார். எங்க போறதுன்னாலும் என் வண்டிலதான் போவார். முன்னாடியே சொல்லீடுவார். எனக்கு புக்கிங்னா மாத்தி வச்சுக்குவார்.

நிறைய சோஷியல் சர்வீஸ் பண்ணுவாரா?

ஹோட்டல்ல பாத்தீங்கல்ல சார், அந்த குண்டு அக்கா, அப்புறம் காஃபி குடுத்தாங்களே அந்த ஒல்லி அக்கா. ரெண்டு பேருக்கும் சொந்த காசுல நகையெல்லாம் போட்டு கலியாணம் செஞ்சு குடுத்தார் சார். வேத பாட சாலைல கொஞ்சம் பசங்களுக்கு பீசு துணிமணி, இஸ்கூல் ஃபீசெல்லாம் இவருதான். அப்பப்ப எதுனா நிகழ்ச்சி வச்சி நல்ல சாப்பாடா போடுவார் சார். யார்கிட்டயும் வாங்கமாட்டாரு. சொந்தக் காசுதான்.

குடும்பம்?

ஆன்மீகத்துல நாட்டம் சார். கலியாணம் கட்டல. யார் போய் உதவின்னு நின்னாலும் ஹெல்ப் பண்ணுவார் சார். நல்ல மனுஷன் சார்.

*இத விட ஆன்மீகம் என்னத்த பெருசா கொண்டு தரப் போகுது?*

Thursday, August 22, 2013

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்


பிறந்து வளர்ந்தது அம்பத்தூர் என்றாலும் மெட்ராஸ் அப்போது பட்டணம்தான். பட்டணத்தோடான என் முதல் நினைவு லீவில் சேலம் அல்லது ஈரோட்டுக்குப் போவதற்காக செண்ட்ரல் ஸ்டேஷன் போவதுதான். ஐலேண்ட் எக்ஸ்ப்ரஸ் (இப்போதைய வெஸ்ட்கோஸ்ட்) எப்போதும். தேர்ட் க்ளாஸ் பெட்டியில் இடம் கிடைக்கும். பேஸின் ப்ரிட்ஜ் தாண்டும் வரை சிறுசுகள் உட்கார்ந்ததாக சரித்திரம் கிடையாது. முண்டியடித்து இடது வலது என்று பாய்ந்து பக்கிங்காம் கனாலில் போட்டில் போகும் சவுக்கு, உப்பு மூட்டைகளைப் பார்ப்பதில் அத்தனை குஷி.


தீபாவளிக்கு பாரிஸ் கார்னரில் இப்போதைய சரவணபவன் இருக்கும் இடத்தில் சுபைதா டெக்ஸ்டைல்ஸில் ரெடிமேட் பட்டி டவுசர், ஸ்லாக்‌ஷர்ட் தீபாவளி பொங்கலுக்கு கிடைத்தவர்கள் பாக்கியவான்கள். அப்போதெல்லாம் தள்ளுபடிக்கு பாய்பவர்கள் இல்லை வாடிக்கையாளர்கள். கொத்தவால் சாவடி காய்கறிக்கென்றால் ட்ரஸ்ட் ஸ்கொயர் மளிகைக்கு.



நகைக்கடைகள் செட்டியார்களிடமிருந்தது. குடும்ப வைத்தியர் மாதிரி குடும்ப செட்டியார்கள். தலை முறை உறவுகள். இன்னாரின் பேரன் என்றால் கல்லாவில் இருக்கும் பெரிய செட்டியார் மற்ற உறவுகளை விசாரிப்பார். 



பட்டுக்கு காஞ்சீபுரம் போக முடியாவிட்டால் கந்தசாமி கோவில் தெரு மணிசங்கர் தவே. ஆரிய பவன் தோசை. இப்ரஹீம் கரீம் குடை. ரெயின் கோட், ஸ்வெட்டருக்கு யூனூஸ் சேட்/யூசுஃப் சேட் கடை, புடவைக்கு மங்காராம். சீக்கோ வாச்சுக்கு பர்மா பஜார். பல் நோவுக்கு ரத்தன் பஜார் சீன டாக்டர்கள்.



மூர்மார்க்கட் தனி உலகம். பேனா பேர் படிக்க சொல்லிவிட்டு சொக்காயை பிடித்து வாங்க வைப்பது, 30ரூ தோல் செருப்புக்கு பித்தளை ஆணி 5 பைசை என்று ரோபோ வேகத்தில் டிசைன் கட்டி அடித்துவிட்டு 50ரூ கேட்டு மிரட்டும் வியாபாரம், குச்சி பால் ஐஸ்/சர்பத் ஒன்னு பத்துபைசா என்று சொல்லி  கெத்தாக பத்து சொன்ன பிறகு ஒரு ரூ பத்துபைசா என்ற மோசடியெல்லாம் வாசலோடு. 



கிழக்குப் புறம் செண்ட்ரலை ஒட்டி இரும்பு சாமான்கள், கத்தி கபடாக்கள், தெற்குப் புறம் மிலிடரி யூனி ஃபார்ம்கள், மேற்கே சூட்கேசுகள்/ரெக்ஸின் பைகள் பார்டர் தாண்டி மெயின் காம்ப்ளக்சுக்கு வந்தால் சுற்றிலும் புத்தகக் கடைகள்.



கப்புசாமி என்று பில்லில் கையெழுத்துப் போடும் கடைக்காரருக்கு மேற்கத்திய புதினங்கள், மருத்துவப் புத்தகங்கள், எஞ்சினியரிங் புத்தகங்கள் அத்தனையும் அத்துப்படி. பேட்லிபாய் அக்கவுண்டன்ஸி இன்று அவர்கள் சொல்லும் விலைக்கு வாங்கி பேர் எழுதாமல் புதுக்கருக்கழியாமல் கொடுத்தால் அன்றைக்கு என்ன விலையோ அதற்கு வாங்கிக் கொள்வார்கள்.



உள் வளைவில் பொம்மைகள், பைகள், ஃபேன்ஸி ஐட்டம்கள். அடுத்த கட்டத்துக்கு குடும்பஸ்தர்கள் போக மாட்டார்கள். விடலைகள் அங்கு விட்டு வரமாட்டார்கள்.  வேடிக்கை மட்டும் பார்த்து சேவையைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டாலும் மாமாக்கள் காசு பிடுங்கி விடுவார்கள் என்பதால் ஓரக் கண்ணால் பார்த்தபடி  ஒரு நோக்காக/நேக்காக சுத்தி வந்து மையப் பகுதிக்கு வந்தால் இன்றைய அல்லிகுளம். இறைக்காத நீறூற்று. ஹார்லிக்ஸ்/ஹமாம் அட்டை பெட்டியில் பாஸ்போர்ட்/பணம்/மாற்று அழுக்கு உடையுடன் கஞ்சா/சப்பி/ஆர்.எஸ்.பவுடர்/அபின் மயக்கத்தில் வெளிநாட்டு ஹிப்பிகள். 



லுங்கி கட்டிக் கொண்டு வந்தால் டிக்கட் கொடுக்காத மினர்வா தியேட்டர், விசிலடித்தால் வெளியே இழுத்துப் போடும் காசினோ, பிட்டுப் படத்துக்கு கெயிட்டி, இளஞ்சோடிகள் படம் பார்ப்பதாக சொல்லிக் கொண்டு ஒதுங்க ப்ளூடைமண்ட் கண்டினுவஸ் ஷோ, நேப்பியர் பாலம் அருகில் சுராங்கனி ரெஸ்டாரண்ட் பின்புறம் நடந்தால் சண்டைப் பயிற்சி செய்வதாக சீன் போடும் ரவுடிகள். தாண்டிச் சென்றால் மணலில் தடுப்பு தடுப்பாக செய்த லவ் ஸ்பாட், ஜோடியோடு வராவிட்டால் ஜோடிக்கு காசு, வேடிக்கை பார்க்க வந்தால் பொளேரென்று அறை, மீட்டர் கேஜ் ரயில் நிலைய 15 பைசா மசால் தோசை 10 பைசா சாதா தோசை, 15 பைசா 2 இட்லி, இட்லி தெரியாம சாம்பார், 12 பைசா காஃபி, 8 பைசா டீ. 

பட்டணம் வந்தா உயிர்காலேஜ் செத்த காலேஜ் பாக்காம போனா ஒரு மருவாதி இருக்குமா. இன்னைக்கும் சபர்பன் ஸ்டேஷன் 14வது ப்ளாட்ஃபார்ம் முடியற இடத்துல இருக்க காடுதான் உயிர்காலேஜ். எவ்வளவு பசுமை. ஜூன் மாசமே உள்ள குளிரும். முக்கியமான அட்ராக்‌ஷன் எம்.ஜி.ஆர் சிங்கம், சிவாஜி புலி. அதையொட்டிய கதைகள், சண்டைகள். பெரிய தூக்குகளில் புளிசாதம், எலுமிச்சை சாதம் எல்லாம் கட்டி எடுத்துக் கொண்டு மரத்தடி விருந்து. படிக்காத ஜனங்கள் பெரும்பாலும். அதனால் இலைகளை குப்பை தொட்டியில் போடுவார்கள். பிற்பாடு மினி ட்ரெயின் வந்தது.

சென்னைக்கு எலெக்ட்ரிக் ட்ரெயின் வந்தது. மனுசன் நிலாவில கால் வச்சான். டெலிவிஷன் வந்தது. 14 மாடி கட்டிடம் எரிந்தது. நேரு ஸ்டேடியத்திலிருந்து கிரிக்கட் சிதம்பரம் ஸ்டேடியத்துக்கு போச்சு. இப்படி எவ்வளவோ மாற்றங்கள். மாறாதது ஒன்னு இருக்கான்னா இருக்கு. ஜெமினி சர்க்கஸ். 14வது ப்ளாட்ஃபார்ம் பக்கத்துல இருக்க அதே இடம். கிறிஸ்துமசையும் சேர்த்தா மாதிரியா ஆரம்பிச்சி பொங்கல் தாண்டி ஃபிப்ரவரி 2ம் வாரம் வரைக்கும். அதே டெண்ட், அதே காட்சிகள். அதே விஐபிகளுக்கு ஓசி பாஸ்கள். 

காசு இருக்கவன் சபாக்கு போய் கச்சேரி கேப்பான். காசில்லைன்னா கார்பரேஷன் வாசல் புல் தரையில 4.30லிருந்து கூட்டம் சேரும். 5 மணிக்கு கார்ப்பரேஷன் பேண்ட். சுத்தமான கர்நாடக சங்கீதம். ஆபட்ஸ்பரி கலியாணத்துக்கு நாதமுனி பேண்ட் இருந்தா அன்னாடங்காச்சிக்கு கார்ப்பரேஷன் பேண்ட். இப்பதான் சினிமாப்பாட்டு வச்சாதானே மரியாதை.  சமீப காலம் வரை கார்ப்பரேஷன்ல பணம் கட்டினா கலியாணத்துக்கு புக் பண்ணிக்கலாம். மாப்பிள்ளை அழைப்புக்கு கார்ப்பரேஷன் பேண்ட் செவப்பு வெள்ளை யூனிஃபார்ம்ல என்னா கெத்து தெரியுமா.

பாக்ஸிங் டே தெரியுமா?  கிறிஸ்மசுக்கு அடுத்த நாள். வெள்ளைக்காரன் போயிட்டாந்தான். பாக்ஸிங்கும் போச்சு. ஆனா இன்னைக்கும் சென்னைல மத்திய அரசு ஊழியர்களுக்கு அன்னைக்கு விருப்ப ஓய்வு நாள். கண்ணப்பர் திடலில் சார்பேட்டா பரம்பரை, வைத்தியர் பரம்பரைன்னு சவால், போட்டி, பதக்கம். வட சென்னை மொத்தம் குவியும். ஆங்கிலோ இந்தியர்கள், முஸ்லீம்கள், போர்ட்டர்கள், நடிகர்கள் ஆதரவு. வால்டாக்ஸ் ரோடு, பெரிய மேடெல்லாம் போஸ்டர்கள். 

கிரிக்கட் சிதம்பரம் ஸ்டேடியத்துக்கு போனப்புறம் ஃபுட் பால் லீக் மேச் முன்னாடி யூரோ கப் எல்லாம் எம்மாத்திரம். கோடி ரூபா குடுத்தாலும் போர்ட்டர் வரமாட்டார். கூலி எப்போது வேண்டுமானாலும் வரும். முத்துராமன், ஜெய்சங்கர், நாகேஷ் லுங்கியோட வந்து க்ரவுண்ட்ல உக்காரும்போது கூட விசிலும் கும்மாளமுமா மேச் வருமா. 

கமெண்ட் கேக்கணும். த்த்தா! டாய்! ரெப்ரீ! கண்ல இன்னாடா கீது? கார்னல் கண்ணு தெர்ல கெயப்பொட்ட!!

ஆப்புல அட்சாம்பா! பிகிலட்றா நாயே!

ஃபவுல் பண்ணா பிகிலுக்கெல்லாம் காத்திருக்க முடியாது. ரண்டு கை தூக்கி சாலி சொல்லி கட்டி புட்சிக்கணும். கோல் போட்டா கொத்தவரங்கா நாகேஷ் தூக்க பார்ப்பார். லைன் மேன் பாடு திண்டாட்டம். பால் அவுட்னு கரெக்டா சொல்வில்லை என்றால் டவுசர் போயிடும். தொடர்ந்து தப்பு பண்ணா ரத்தகாயம்தான். 

அந்தக் கோலாகல இடத்தில்தான் இன்று நடிகர்கள் நடிகைகள் பாராட்டு விழாவும் நடக்கிறது. 

ஏனோ ஆங்கிலோ இந்திய இளைஞர்களும், முஸ்லீம்களும் ஹாக்கியையும், பாக்சிங்கையும் புறக்கணித்து விட்டார்கள். 

சீனியர்கள் சொல்வார்கள். வெள்ளைக்காரன் காலத்தில் 4 மணி ஆனதும் வீட்டுக்கு கிளம்புமுன்னர் அந்தந்தத் துறை தலைமை அதிகாரிகள் ஆஃபீசைச் சுற்றி வருவார்களாம். வீட்டுக்கு கிளம்பாமல் வேலை செய்து கொண்டிருந்தால் விளக்கம் கொடுக்க வேண்டி வரும். இளைஞர்கள் என்றால் கஸ்ரத்துக்கு போ மேன், போய் விளையாடு. குடும்பஸ்தர்கள் என்றால் குடும்பத்தோடு நேரம் செலவழி என்று விரட்டுவார்களாம். 

ம்ம்ம்..போதும்..சொல்லி மாளாது.

Friday, August 2, 2013

பேனா


அப்பா ஒரு பேனாப் ப்ரியர். ப்ரியம் என்று சுளுவாக சொல்லிவிட முடியாது. பெரிய பணக்காரர்கள் வைத்திருக்கும் ஓவியம் போல அவைகளுக்கு ஒரு அந்தஸ்து உண்டு. பக்தி, பெருமிதம் இவற்றோடு தனக்குக் கிடைத்த வரம்போல ஒரு பணிவோடான ப்ரியம். இன்னமும் நன்றாய் நினைவிருக்கிறது. துருவழுக்கேறினாலும் மேலிருக்கும் படம் தேயாமல் துருவேறாமல் சோப்புத்தண்ணீரில் நனைத்த துணியால் துடைத்து தேங்காய் எண்ணெயும் கெரசினும் நனைத்த பஞ்சால் துடைத்து ஓரளவு காக்கப்பட்ட ஆல மரத்து ஊஞ்சலில் ஆடும் ராதா க்ருஷ்ணன் படம் போட்ட பாரி மிட்டாய் டப்பா. 

உள்ளே புதுக்கருக்கழியாத பார்க்கர்கள், ப்ளூபர்ட்கள், வாடர்மென், ஒரு ஷீஃபரும்கூட. இன்னும் எத்தனையோ பேர்கள், கவனமில்லை. பலப்பம் கனத்தில் விரல் நீட்டு பேனா. ஒரு பேரா எழுதுவதற்குள் விரலைச் சொடுக்கெடுக்க வைக்கும் குண்டு பேனா. ராணுவ வீரன் தொப்பி போல் கருப்பு தட்டை நிற மேல் பாகத்தின் தொப்பிக்கு காண்ட்ராஸ்ட் சிவப்பு நிறத்தில் பேனா. மினு மினுக்கும் தங்கக் கலர் க்ளிப்பின் முனையில் அர்ச்சுனன் அம்பு, பீமன் கதை போல் கூர்ப்பும் குண்டுமாய். கழுத்தே இல்லாமல் ஜாண் நீளத்துக்கு மரத்தாலான ஒரு வாடர்மென். கீழே பட்டன் மாதிரி இருக்கும். கவர் கட்டைவிரலில் பாதி.  திறந்தால் நிப் தெரியாது. கவரை பின்புறம் சொருகி திருகினால் நிப் மேலே வரும். நிப் உள்ளே இருக்கும்போது படுக்க வைத்தாலும், தலைகீழாய் வைத்தாலும் இங்க் கொட்டாது. அப்பாவின் ஃபேவரிட் இந்தப் பேனா. இங்க் பாட்டிலில் முனை முக்கி க்ளாக் வைசில் திருகி ஆண்டி க்ளாக் வைசில் திருகினால் இங்க் நிறப்பிக் கொள்ளும் ஷீஃபர். மேலிருக்கும் க்ளிப் போலவே சற்று நீளமாக பதிந்தாற்போல ஒரு க்ளிப்பை விரலால் தூக்கி விட்டால் ட்யூபில் இங்க் ஏற்றிக் கொள்ளும் ஒரு ப்ளூபர்ட். 

ஒரு ஓவியக்காரனின் கைத்துணி போல் கருப்பு, கருநீலம், சிவப்பு, பச்சை, பிங்க் என்று பல இங்க் கறையோடு ஆனால் கசங்காமல் சுருக்கமின்றி மடித்து வைக்கப்பட்ட ஒரு வேஷ்டித் துண்டு, கடித்துக் கொண்டிருக்கும் பேனாக் கழுத்தைத் திறக்க அளவாக நறுக்கிய சைக்கிள் ட்யூப், வெள்ளையில் சிவப்பு டைமண்ட் நடுவே வெள்ளெழுத்தில் பாரத் பெயர் தாங்கிய சவர ப்ளேட், மிக மெல்லியதாய் லீக் அடிக்கும் பேனாக் கழுத்து மரையில் தேய்த்து லீக் அடிக்காமல் மூட விறல் கணுவளவு தேன் மெழுகு எல்லாம் டப்பாவுக்குள் அடக்கம். 

ஞாயிறு மதியங்கள் காஃபிக்குப் பிறகு அப்பாவின் அடுத்த வார பேனாக்கள் தேர்வு. அப்பாவுக்கு எப்போதும் பார்க்கர் இங்க்தான். ஏதோ பிடித்த பேனா எடுத்து இங்க் போட்டு வைத்துக் கொள்வதெல்லாம் கிடையாது. ஏதோ ஒரு கணக்கில் 4 பேனா செலக்ட் ஆகும். சிவப்பு, கருநீலம், கருப்பு, நீல இங்க் புட்டிகள் எதிரில். ஒரு புறம் வழவழப்பாய் மறுபுறம் சொரசொரப்பாய் அரையடி நீளம் நாலங்குல அகலத்துக்குக் அப்பாவே பைண்ட் செய்த ஸ்க்ராப் புக். மேற்புறம் மடித்து தொடைமேல் வைத்துக் கொண்டு பேனாவைப் பிடித்து சண்டைக்குப் போகும் மன்னன் கத்தி வாகு பார்ப்பது போல் கையில் பேனாவோடு ஒரு பார்வை, பேப்பர் மேல் வைத்து ஒரு பார்வை, இங்க் இல்லாமல் ஒரு கையெழுத்து, பேப்பரில் கீறியிருக்கிறதா என்று நோட்டில் ஒரு பார்வை. அதன் பிறகு கருப்பு இங்க் பாட்டில் திறந்து நிப் முனை மட்டும் நனைய எடுத்து மூன்று கையெழுத்து. 

இடைவெளி இல்லாமல், பட்டை அடிக்காமல், கீறாமல் சீராக இருக்க வேண்டும். வழவழ பக்கத்தில் எப்படி ஓடுகிறதோ அப்படியே சொர சொரப்பிலும் ஓட வேண்டும். இல்லை எனில் நாதசுர வித்துவான் சீவாளியைப் பதப் படுத்துவது போல ப்ளேட் பிளப்பில் புகுந்து நாக்குக்கும் நிப்புக்கும் நடுவில் நர்த்தனமாடி ஸ்ருதி சேர்க்கும். 

ஷீஃபருக்கும், பார்க்கருக்கும் என்ன மாதிரியான ராயல் ட்ரீட்மெண்டோ அதேதான் 3 ரூபாய் என் கேம்லின் பேனாவுக்கும். ரைட்டர் பேனாவுக்கும். ‘எங்கேடா உன் பேனா’வுக்கே விரல் தந்தியடிக்கும். தொடையில் அப்போதே லேசான எரிச்சல் ஆரம்பிக்கும். க்ளிப்பைக் கடிக்காமல் கணக்கு போட முடியுமா? பக்கத்துப் பையனுக்கு பத்து சொட்டு இங்க் கடன் கொடுக்க வேண்டுமானால் ட்யூப் துண்டுக்கு எங்கே போக. பல்லால் கடிக்காமல் திறக்கவா பேனாக் கழுத்து இருக்கிறது?

பேனா சரஸ்வதி. வாய்ல வச்சி எச்சில் பண்ணாதன்னா தெரியாது? ஒற்றை விரல் இழுப்பில் 30 டிகிரி கோணல் போய் தெத்துப்பல் தூக்கல் போய் மூடியில் க்ளிப் உட்காரும். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியுமாதலால் நிஜமாகவே மூச்சா முட்டும். தப்பிக்க முடியாது. அத்தனை குழியில் புதிதாகப் பதிந்த பல்லடையாளம் கண்டு பிடிக்க சிரமப்பட்டதே இல்லை. போனவாரம்தானே கடிக்காதன்னு சொன்னேனுக்கு ‘இல்ல பழசு’  என்றால் போனஸ் நிச்சயம் என்பதால் அநிச்சையாக இறுகி கை தொடையில் இறங்கும் நேரத்தில் தளர்ந்து அடியின் தாக்கத்தைக் குறைக்க தொடை பழகிவிட்டிருந்தது.

ஒரு வெள்ளிக்கிழமை இரவில் போய்ச்சேர்ந்த அப்பாவுக்காக யாருமே தொடாமல் பொக்கிஷமாய் ஞாயிறுக்காய் காத்திருந்தன பேனாக்கள். ஒரு மிக நெருங்கிய சொந்தத்திடம் பதினெட்டு வயதானால்தான் வேலைக்கு அப்ளை செய்ய ஆறுமாதம் இருந்ததால் செலவுக்காக வாங்கிய கடனுக்கு வேலை கிடைத்த அதே வாரத்தில் கொடுத்த பணம் வேண்டும் என்ற பிடிவாதத்தில் திகைத்துப் போனாள் அம்மா.

கண்ணீர் தளும்ப பேனாப் பெட்டி வெளியெடுக்கப்பட்டது. பழைய ட்ரங்குப் பெட்டியிலிருந்து. கூடவே ஒரு சின்ன மஞ்சள் எல்.ஜி. பெருங்காய டப்பாவும். அம்மாவின் ஒரு சிவப்புக் கல் மூக்குத்தி, மூன்று முனை உடைந்த நிப் பொதிந்த ரோஸ் கலர் பட்டர் பேப்பர் பொட்டலம். ஷீஃபர், பார்க்கர், வாடர்மேன்களின் க்ளிப்புகள், 14 கேரட் என்று பொறிக்கப் பட்ட நிப்புகள் எல்லாம் கழற்றி எடுத்து என்.எஸ்.ஸி போஸ்ரோடு போய் நகைக் கடையில் கேட்டு எதிரில் இருந்த அரசாங்க உருக்குச் சாலையில் கொடுத்து பாதி சப்பிய சாக்லேட் போல் சுத்த தங்கம் ஒரு சின்ன கட்டியாக்கிக் கொடுத்து கிடைத்த ஆயிரத்து ஐந்நூத்தி சொச்சத்தில் ஆயிரம் ரூபாய் அசல் போக மிச்சத்துக்கு ஒரு புடவை ரவிக்கை, பேண்ட் ஷர்ட் மங்காராமில் வாங்கித் தாம்பூலத்தில் வைத்து கடன் அடைத்தபோது அப்பா பெருமைப் பட்டிருப்பார்.

பின்னாளில் அப்பாவின் நண்பரான ராம்ஜி என்ற பேனா பைத்தியத்தோடு போர்ட் ட்ரஸ்ட் கதிரி பாயிடம் இன்ஸ்டால்மெண்டில், ஃப்ளவர் பஜார் யூனூஸ் சேட் கடை முன்னால் ப்ளாட்ஃபார்மில் பேனாக் கடை வைத்திருந்து பிறகு மௌண்ட்ரோட் பேட்டா வாசலில் கடை வைத்திருந்த முதலியாரிடம் சிந்தாதரிப் பேட்டையில் கடைந்தெடுத்து வாங்கிய எபொனைட் பேனாக்கள் கலெக்‌ஷன் என்னிடம் இருந்தது. 

இரண்டு நாள் முன்பு திடீரெனத் தோன்றியது. தாத்தாவுடையது இல்லை என்றாலும் என் பிள்ளைகளுக்கு ஷீஃபரும், வாடர்மென்னும் அவர் நினைவாகக் கொடுக்க வேண்டுமென்று. அமேசானில் முன்னூறும் ஐன்னூருமாய் இருக்கிறது விலைகள். அதுவும் ஏதோ கேட்ரிஜாம். 

பொறுப்பிருக்கிறபோது, கடன் வாங்கி ஹஜ்ஜுக்கு போகக் கூடாதாமே. அந்த மாதிரி கடமையெல்லாம் முடித்து, பென்ஷனாவது மிச்சம் பிடித்து சாதாரணமான இங்க் போடுகிற ஒரு ஷீஃபரும், வாடர்மென்னும் முடிந்தால் ஒரு பார்க்கரும் வாங்க வேண்டும். 

Monday, June 17, 2013

பக்கோடா புராணம்

பக்கோடா என்பது ஏதோ ஒரு தின்பண்டமல்ல. மனிதன் கண்டு பிடித்த அமிர்தம் அது. மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும் என்பது  சொலவடை. மாங்காய் எல்லா நேரத்திலும் கிடைக்குமா என்ன? மனிதனின் தீனிக் கண்டுபிடிப்பில் ஆகச் சிறந்தது பக்கோடா.

பக்கோடாவில் முந்திரிப்பருப்பு பக்கோடா, வேர்க்கடலை பக்கோடா, பனீர் பக்கோடா, காலி ஃப்ளவர் பக்கோடா என்று பல இருந்தாலும் மேட்டுக்குடி மனிதரிலிருந்து டாஸ்மாக் குடிமகன் வரை காற்றில் மிதந்து வரும் வெங்காயப் பக்கோடா மணத்துக்கு வாயில் வெள்ளம் பொங்காத மனித ஜந்து எதுவுமே இருக்க முடியாது.

பக்கோடா என்ற ஒன்று கண்டு பிடிக்கப்படாமலிருந்தால் தானே சமைக்கிறேன் என்ற பெயரில் வைக்கும் கலர் தண்ணீர் சோற்றை பேச்சிலர்கள் தின்றிருக்க முடியுமா? அதற்குச் சற்றும் குறையாத தரத்தில் ஒரு குழம்பை வைத்துவிட்டு உருளைக்கிழங்கு ஃப்ரை உங்களுக்கு பிடிக்கும்னு செஞ்சனா. அப்பதான் ஃபோன் பண்ணீங்களா? லைட்டா தீஞ்சிடுச்சுங்க என்று 7வது டிகிரி பர்ன் என்ற அளவுக்கு நிலக்கரி பொரியலிலிருந்து கொலைக்கேசில் தப்புவித்து தம்பதியரைக் காப்பாற்றும் சமய சஞ்சீவியல்லவா அது?

ஏசி ரூமில் உட்கார்ந்து அள்ளிச்சாப்பிட்டால் ஏற்படக்கூடிய பின் விளைவுக்கு பயந்து கொரிப்பது முந்திரிப் பக்கோடாவாக இருக்கலாம். ஆனால் அது முழுமையான பக்கோடா ஆக முடியாது. தனியாகச் சாப்பிட்டாலும் பக்கோடாவாகச் சாப்பிட்டாலும் கடைசி கடலை சொத்தையாகவே அமைவது ஏன் என்பது எந்த விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்கப்படாத ரகசியம் என்பதால் சரக்கு கசப்பா சைட் டிஷ் கசப்பா என்றறிய முடியாத போதத்திலிருப்பவர்களுக்கான வேர்க்கடலைப் பக்கோடாவையும் பக்கோடா என்றேற்பதற்கில்லை.

பல்லிருக்கவன் பகோடா திங்கான் என்று தனக்காக ஒரு பழமொழியையே கொண்ட ஒரே தின்பண்டம் பக்கோடாதான், பகோடாவைத் தின்னவும் முடியாமல் அதற்காக ஏங்குவதை தவிர்க்கவும் முடியாமல் தவிப்பவர்கள் செய்த கூட்டுச்சதி காலிஃப்ளவர் மற்றும் பனீர் பக்கோடா. மேற்படி எதுவுமே மூலப் பொருளோடு சுருதி சேராமல் பக்கோடா மாவு டேஸ்ட், மூலப் பொருள் டேஸ்ட் என்று அபஸ்வரமான கலியாணக் கச்சேரி மாதிரிதான் இருக்கும்.

ஒரு தேவ ரகசியம் சொல்லட்டுமா? கல்வித் தெய்வம் சரஸ்வதிக்கும் மிகப் பிடித்தது பக்கோடாவாகத்தான் இருக்க வேண்டும். அதனால்தான் பள்ளியிலேயே விடைத்தாளைக் கொடுக்கும் ஆசிரியர் பக்கோடா மடிக்கத்தான் லாயக்கு என்று ஆசீர்வதித்துக் கொடுப்பார். இதப் பகடி என்போர் சயனைட் கவுஜ சரஸ்வதி, கல்வியைத் தன்பேரில் சுமந்திருக்கும் வித்யா என்கிற விதூஷ் தன்னுடைய படைப்புக்களை பக்கோடா பேப்பர் என்ற வலை மனையில்தான் மடித்துத் தருகிறார் என்பதற்கு வேறேதும் மறுப்பு சொல்லக் கூடுமோ?

‘ன்னாச்சி’ என்று திரும்பத் திரும்ப வரும்போதெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தவர்கள், அறிவார்களா? இது ஒன்றும் புதுமையில்லை. மதராஸ் டு பாண்டிச்சேரி படத்தில் ‘அப்பா பக்கோடா’ என்ற ஒரே வசனத்தை படம் முழுதும் பேசி பக்கோடா காதர் என்ற மாபெரும் கலைப் பொக்கிஷத்தை அளித்த ஒரே தின்பண்டம் பக்கோடாதான்.

சும்மா கண்ட மானிக்கு வெங்காயம் நறுக்கி, கடலை மாவில் பிரட்டி எருமைமாடு நடந்து கொண்டே சாணி போடுவது போல் வாணலிக்குள் விழுவதல்ல பக்கோடா. பக்கோடாவின் பெயரைக் கெடுத்து

“நசுகு பித்து பித்தி நா கொம்ப கூல்ச்சேவு
டர்ருமனி பித்தரா நா பாக்ய சாலுடா”
 என்று கவி வேமனவை அலறவைத்த சதி அதில் எழவெடுத்த பூண்டைப் போடுவது.

நல்ல கடலை மாவில் (கோதுமை அரைத்த பிறகு அரைக்கலாகாது) அளவாக அரிசி மாவு சேர்த்து ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய், புதிதாய்க் காய்ச்சிய சுட்டெண்ணெய் (பஜ்ஜி, அப்பளம் எல்லாம் காய்ச்சி ட்ரான்ஸ்ஃபார்மர் ஆயில் கணக்காய் கரேலென்றிருக்கும் சுட்டெண்ணெய் அல்ல) கொஞ்சம் விட்டு உப்பு போட்டு பிசிறி வைத்து விட்டு, வெங்காயம் நீள நீளமாய் நறுக்கி உதிர்த்து விட்டு பச்சை மிளகாய் வட்ட வட்டமாக மெல்லிசாய் நறுக்கிஅதில் போட்டு கலந்து, பின்னும் சிறிது எண்ணெய் ஊற்றிப் பிசிறிவிட்டு பத்து நிமிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாய் நீர் விட்டு பிசைந்து கெட்டியான பதத்திலேயே பின்னும் ஒரு பத்து நிமிடம் விட்டு, கருவேப்பிலை உருவிப் போட்டு, கொஞ்சமே கொஞ்சம் ஒரு சிட்டிகைப் பெருங்காயப் பொடியிட்டு தண்ணீர் அளவளவாகச் சேர்க்கவேண்டும். ஒரு கை மாவெடுத்து பிசிறி விட்டால் மொத்தையாக கொஞ்சம், தூள்தூளாக மீதி விழக்கூடாது. அப்படிப் பிசிறுவது பரதநாட்டிய அடவு மாதிரி அத்தனைக் கலை நயத்தோடும் பதமாகத் தண்ணீர் சேர்ப்பது ஒரு விஞ்ஞானியின் கவனத்தோடும் செய்யப்பட வேண்டியது. Practice brings perfection.

புகையாமல் நன்றாகச் சுட்ட எண்ணெயில் ஒரு சுண்டைக்காய் மாவு போட்டால் ஒலிம்பிக் வீரர் பெல்ப்ஸ் மாதிரி போட்ட வேகத்தில் மேலே வந்து சுவாசிக்க வேண்டும். அதே சூட்டை கடைசி வரை மெயிண்டெய்ன் செய்வதும், பக்கோடா, வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாமே பொன்னிறத்தில் வரும்போது சுவாசம் மட்டுப் பட்டிருக்கும் போது சரியான பதத்தில் எடுப்பதும் பழக்கத்திலேயே வரும்..

பக்கோடா செய்வது மட்டுமல்ல. தின்பதும் கலையே. சுடச்சுட ஹாவு ஹாவு என்று தின்பதோ நமர்த்துப் போய் தின்பதோ பக்கோடாவுக்குச் செய்யும் அவமரியாதை. கை பொறுக்கும் சூட்டில் ஒவ்வொன்றாக வாயிலிட்டால் பொறபொறவென உதிர்ந்து மெத்தென்ற உள்ளொளி காட்டும். பச்சை மிளகாய், வெங்காயம், கடலைமாவு எல்லாம் உமிழ்நீரின் தம்பூராச் சுருதி சேர்ந்து ஆத்மானுபவம் அளிக்கும்.

கடைப் பக்கோடா என்பது வணிக நோக்குடன் செய்யப்படுவது. அது ஒரு ரசிகனுக்கு உகந்ததல்ல. அத்தகைய பக்கோடாவைத் தின்பதன் மூலம் ஒருவன் உப்புசம், ஏப்பம், லிஃப்ட், மீட்டிங்கில் பங்கேற்க முடியாத அவஸ்தை, மண்ணைத் தின்றது போன்ற புறவயமான அனுபவங்களை மட்டுமே பெறவியலும். நல்ல பக்கோடா என்பது செவ்விலக்கியத்துக்கு ஒப்பானதாகும். ஒரு தேர்ந்த பக்கோடாக் கலைஞர் ஒரு யோகியின் அர்ப்பணிப்போடு, யாகத்தின் கவனத்தோடு, கலை ரசனையோடு செய்யும்போது கிட்டும் தரிசனம். அதை உண்ணும் ரசிகனும் அதற்கான தகுதியை உருவாக்கிக் கொள்ளும்போதே பக்கோடா முழுமை பெறுகிறது.

மாறாக வணிகநோக்கு பக்கோடாக் கலைஞனை மட்டுமல்ல அது மடிக்கும் பேப்பரையும் காலம் புறந்தள்ளி ஏதோ ஒரு கடையில் முழங்கை வரை மாவைக் கலக்கி வேர்வையும், தூசுமாய் கரேலென்று வழித்து விட்டு வருடக்கணக்காய் ஊறிய சோடாமாவை ஊற்றி ட்ரான்ஸ்ஃபார்மர் எண்ணெயில் பஜ்ஜி போடவும், அதைப் பிழிந்து விட்டெறியவும் வைக்கும்.

Tuesday, January 22, 2013

தினத் தந்தி - ஒரு வாசிப்பனுபவம்

பள்ளியில் படிப்பேறவில்லை என்று ஒன்னாப்புலேயே நிறுத்திக் கொண்டவர்களைக் கூட எழுத்துக் கூட்டி படிக்கவைத்த பெருமை வாய்ந்த பத்திரிகை என்பதோடு கடும் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இசப்கோல் கூட தரவியலாத நிவாரணத்தை அளித்து தமிழரின் உணவோடும் உணர்வோடும் கலந்துவிட்ட பத்திரிகை என்றால் அது தினத்தந்திதான். எல்லாப் பத்திரிகைகளையும் போலன்று தினத்தந்தி வாசிப்பு. அது ஒரு நவரசானுபவம்.

இன்றைய தினத்தந்தியை எடுத்துக் கொள்ளுங்கள். முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தி கர்நாடகா மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போட உத்தரவிட்ட முதலமைச்சரின் செய்தி. படிக்கும்போதே வேறு மாநிலத்துக்கு மாற்ற முடியாமல் நேரடியாக சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் போட்டு நஷ்ட ஈடு வாங்கி உண்மையான தமிழ்ப்புத்தாண்டுக்கு முன்பாக ஏழை விவசாயிகளுக்கு பங்கிடப்படும் என நம்பிக்கை தருவதோடு, இழுத்தடிப்பதற்கு இது ஒன்றும் சொத்துக் குவிப்பு வழக்கில்லை என்ற உண்மையும் தாயுள்ளத்தோடு செயல்படும் முதல்வரின் நடவடிக்கை மனதோடு மலத்தையும் இளக்குவதாக உள்ளது.

இதற்கெல்லாம் அசையமாட்டோம் என்று பிடிவாதக்கார மலச்சிக்கல் ஆசாமியா நீங்கள்? இதோ தங்கம் மீதான இறக்குமதி வரி உயர்வும், ரெயில் கட்டண உயர்வு காரணமாக கூடுதல் கட்டணம் செலுத்த சிறப்பு கவுண்டர்கள் அமைத்துள்ள செய்தியும் எப்பேற்பட்ட பாறையையும் அசைத்துப் பார்க்கக் கூடியது.

அடுத்த பக்கத்தில் கிட்டத்தட்ட நான்கு லட்ச ரூபாய் கள்ள நோட்டு பிடிபட்ட செய்தி ஒரு கையால் கலங்கும் வயிற்றைப் பிடித்துக் கொண்டே நம்மிடம் இந்த மாதக் கடைசியில் எங்காவது 500/1000ரூ நோட்டு இருந்து தொலைக்குமோ என்ற பீதியைக் கிளப்புகிறது..

கல்லூரிக்குப் போன மாணவி எரித்துக் கொலை, கலெக்‌ஷனுக்கு போன தனியார் நிறுவன ஊழியரை வெட்டிக் கொள்ளை, டெல்லி கற்பழிப்பு வழக்கில் விசாரணை ரகசியமாக நடைபெறும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் செய்தி, மாமனார் நடுரோட்டில் படுகொலை, மனைவி மாமியாரும் வெட்டிச் சாய்ப்பு, திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் திடீர் தற்கொலை, மகளுடன் கிணற்றில் குதித்த தாய் சாவு, ரெயிலில் அடிபட்டு மாணவி உள்பட இரண்டு பேர் சாவு போன்ற இழவுச் சிறப்புச் செய்திகள்..பக்கத்துக்குப் பக்கம் விரவிக்கிடக்கும் இத்தகைய உற்சாகமூட்டும் செய்திகள் அதிகாலையில் கொடுக்கும் புத்துணர்ச்சி சொல்லத் தரமன்று.

இன்றைய பத்திரிகையின் சிறப்புச் செய்திகள் இரண்டு. 27ம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் திருமணம் நடந்தால் தூக்கில் தொங்குவேன் என்று மாப்பிள்ளை மிரட்டும் காரணம் என்னவென்றே தெரியவில்லை என்று முதல் பத்தியில் கமிஷனரிடம் மனு கொடுக்கும் பெண் இரண்டாம் பத்தியில் மணமகனின் தாய் அந்தப் பெண் ஏற்கவே ஒருத்தரைக் காதலித்து வீட்டை விட்டு ஓடியதை வேறொருத்தியுடன் திருமணமான அவரின் முன்னாள் காதலனே மணமகனிடம் தெரிவித்ததாக கூறியதை நேர்மையோடு ஒப்புக் கொண்டு அவன் மீதும் போலீஸில் கேஸ் கொடுக்க இருப்பதாகவும், முருகனை என் கணவனாக கனவு கண்டுவிட்டேன், எத்தனைப் பிரச்சனைகள் வந்தாலும் அவரைக் கைப்பிடித்தே ஆவேன் என்று கண்ணீர் பொங்க ஆவேசப் பட்டதைப் படிக்கையில் நமது கண்ணிலும் கண்ணீர் வழிகிறது. சவாலில் ஜெயித்து முருகனை மணப்பாரா என்று (என்பதை வெள்ளித் திரையில் காண்க என்று பாட்டு புத்தக பாணியில் எழுதாத குறையாக) எழுதியிருக்கும் ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அடுத்ததாக கிளுகிளுவோடு நகைச்சுவையும் தளும்பும் வால்பாறை தலைமை ஆசிரியர் வகுப்பறையில் ஆசிரியையுடன் உல்லாசமாக இருந்த காட்சி இணைய தளத்தில் வெளியானதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மூணாப்பு சிறுவர்களை வைத்து நடத்திய மறியல் செய்தி படத்துடன் வெளியிட்டது. சிறுவர்கள் முகத்தில் ததும்பும் சிரிப்பைப் பார்த்தால் செய்தியின் தாக்கம் புரிகிறது. இதற்கு முன் பாலியல் கல்வியால் சிறுவர்கள் கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போகத்தான் முடியும் என்ற ஆசிரியரின் தலையங்கத்தை நினைவு கூர்வதைத் தவிர்க்க முடியவில்லை.

விளையாட்டுப் பகுதியில் டென்னிஸ் போட்டி புகைப்படங்கள் வாசகர்களின் மனதில் அதெப்படி டென்னிஸ் போட்டி கேமிராக்கள் பெண் ஆட்டக்காரர்களை மட்டும் டாப் அல்லது பாட்டம் ஆங்கிளில் மட்டுமே புகைப்படம் எடுக்கிறது என்ற புதிரைத் தோற்றுவிக்கும்.

இறுதியில் சினிமா விளம்பரங்கள் பகுதிக்கு வருகையில் காதல் வலி, கில்லி பசங்க, நேசம் நெசப்படுதே, ஆதி பகவன், பத்தாயிரம் கோடி போன்ற திரைக்காவியங்களுக்கு அண்ணன் உண்மைத்தமிழன் விமரிசனம் எழுதிவிட்டால் என்று நினைக்கும்போதே உபாதை நீங்கி உடல்பறப்பது போன்ற உணர்வு திண்ணம்.

வெறும் 400 காசில் இணையற்ற இந்த அனுபவங்களுக்குப் பின்னால் தினத்தந்தி அளிக்கும் சேவை சொல்லில் அடங்காது. ஒரு சில இங்கே:

*தினத்தந்தி இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு பயலும் பஜ்ஜி சாப்பிட முடியாது.

*சாப்பாடு கட்டிக் கொண்டு போய் பீச்சை குப்பை மேடாக்கியதில் பெரும்பங்கு தினத்தந்திக்கே.

*தினத்தந்தியை துண்டு துண்டாக கிழித்து பெட் பாட்டில், ஃப்ளாஸ்க் ஆகியவற்றில் போட்டு நீறூற்றி ஒரு இரவு ஊறவைத்து அடுத்த நாள் நன்றாகக் குலுக்கி கழுவிப் பாருங்கள். கறை என்பதே இருக்காது.

*துணிகளில் எண்ணெய்க் கறை இருப்பின் தினத்திந்தி பேப்பரை அதன் மேல் வைத்து அயர்ன் செய்தால் கறை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

Tuesday, November 20, 2012

இணையத் தமிழ்ச் சங்கம்

முருகன்: தந்தையே தமிழகத்தில் மீண்டும் தமிழுணர்வு தழைத்தோங்குகிறது தந்தையே. சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததொருகாலம். இப்போது டொட்காம் வைத்து வளர்க்கிறார்கள். தந்தையீர் உதவ வேண்டும்.

சிவன்: என்ன வேண்டும் கேள் மகனே.

முருகன்: புலவர்கள் அனைவருக்கும் கம்ப்யூட்டர் ட்ரெயினிங் கொடுத்து மீண்டும் தமிழகத்தில் பிறக்கச் செய்ய வேண்டும்.

சிவன்: ஆகட்டும். யாரங்கே! சித்திரகுப்தனிடம் புலவர்கள் அனைவருக்கும் ஒரு வாரம் க்ராஷ் கோர்ஸ் கொடுத்து ஜிமெயில் கணக்கு ஆரம்பித்து பூலோகத்துக்கு அனுப்பு.

முருகன்: நன்றி தந்தையே.

அவ்வையார்: ப்ளாகும் ப்ளஸ்ஸும்
                             ட்வீட்டும் முகநூலும் இவை
                             நான்கும் கலந்துனக்கு
                            ஸ்டேடஸ் உடுவேன்
                            துங்கக் கரிமுகத்துத் தூமணியே
                            நீ எனக்கு அன்லிமிடட் ப்ராட் பேண்ட் தா!
விநாயகர் : அவ்வையே! உன் அன்புக்கு மெச்சினோம்.

முருகன்: அவ்வையே! உனக்கு இண்டர்நெட் என்றால் என்ன என்று சொல்லிக் கொடுத்து தமிழ் வளர்க்க சொன்னது நான். நீயோ அண்ணனிடம் டீலிங் பேசுகிறாய். தமிழ்ப் பண்பாட்டைக் காட்டிவிட்டாயல்லவா! நீ விடும் ப்ளஸ்ஸெல்லாம் கைய புடிச்சி இழுத்தியா ஆகக் கடவது.

அவ்வை:முருகா! குமரா! என் உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும்...

முருகா: அவ்வையே! போதும் உன் சமாதானம். நான் உன்னை ப்ளாக் செய்துவிட்டேன். நீ டேக் பண்ணாலும் எனக்கு மெசேஜ் வராது.

அவ்வையார்: இதுவும் கடந்து போகும்.

அவ்வையார்: வள்ளுவரே! ஏன் வாட்டமாய் இருக்கிறீர்?

திருவள்ளுவர்: என்னத்தைச் சொல்ல சகோ! என் நிலமை இப்படி ஆயிருக்க வேண்டாம். அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் என்று குறளெழுதினேனாம். பாலியல் குற்றத்தில் பிடிக்கப் போகிறார்கள் என்று திருமூலர் சொல்கிறார்.

அகநாழிகை: கவலை வேண்டாம் வள்ளுவரே. நீர் அறம் பொருள் மட்டும் அப்டேட் பண்ணும். அது ஆவின் பாலை விட மட்டமாக இருக்கும். காமத்துப்பால் காண்ட்ராக்ட் போகன் என்று கோத்து விடுவோம்.

வள்ளுவர்: நன்றி கவிஞரே.

அவ்வையார்: ஹி ஹி. திருவள்ளுவரே பழைய படிக்கும் பாதில உடைஞ்ச பென்சில் ஊக்கு மாதிரி செய்யுள் எழுதாதீரும். செய்யுளெல்லாம் சீந்துவார் இல்லை. கவிஞருக்குதான் மவுசு.

அகர முதல
எழுத்தெல்லாம்
ஆதி பகவன்
முதற்றே
உலகு

இப்புடி எழுதணும். சிரமம்தான். நான், நாலடியாரெல்லாம் அப்பவே இப்படி.

போகன்:: அவ்வையே கர்வம் வேண்டாம். அமுதம் கங்கையிடம் அப்ரசண்டியாகி கவிதை எழுதப் பாருங்கள். நீங்கள் ஒரு கவுஜ ப்ளஸ் விடுவதற்குள் 50 கவுஜ ஃப்ளீட்டே விடுவார்.

அவ்வையார்: ஆ! தொல்காப்பியரே! இதைக் கேட்பார் இல்லையா? இலக்கணம் என்ற ஒன்று இருக்கிறதா இல்லையா?

தொல்காப்பியர்: அட அப்டி ஓரமா குந்தும்மா! நானே கடுப்புல இருக்கேன். இலக்கணம் பிலாக்கணம்னு

அவ்வையார்: தொல்காப்பியரே! என்ன மொழி இது? தமிழ் போலிருக்கிறது. ஆனால் ஒன்றும் புரியவில்லை..

தொல்ஸ்: இப்ப புரியுதா? தமிள் இழமை வாய்ந்தது. தழ தழவெண்று செளித்தோங்குவது. பழ்ழம் கண்டு பாயும் நீர் போல் நம் மனதை நிரப்பி கழிப்பிக்கச் செய்வது...

அவ்வையார்: அய்யோ தொல்காப்பியரே. தமிழன்னை இந்த நிலையிலா இருக்கிறாள்?

தொல்ஸ்: இன்னாது? ஒரு கும்பலே வந்து மிரட்டிட்டு போயிருக்கிறார்கள். திருத்து அல்லது திருத்தப் படுவாய்னு. என் ஃபாலோயரைப் பார்த்தாயா? சித்தார்த் ஃபேமிலில மூணு பேர், ஹிட்டன் ஐடில ஜெ.மோ...அவ்வ்வ்ளோதான்

அவ்வையார்: பாவம் நீர். இதோ செம்புலப் பெயநீரார். ஏன் அழுது கொண்டு வருகிறார்?

செ.பெ: அன்னையே! நீரே சொல்லும். யாயும் ஞாயும் எழுதியது நாந்தானே

அவ்வையார்: யார் இல்லை என்றது?

செ.பெ: இதோ இந்தப் பெரியப்ஸ் டைனோஜி சொல்கிறார் எழுதியது வைரமுத்து. பாட்டு போட்டது ரகுமானு. நறுமுகையே நறுமுகையே அவர் எழுதியதை நான் சுட்டு நான் எழுதியது என்கிறேனாம்.

டைனோ: லிங்க் இதோ. நீங்கள் எழுதியதற்கு சுட்டி இருந்தால் கயுவி கயுவி ஊத்துங்கள்.

அவ்வையார்: தொல்காப்பியரே! கயுவி என்றால்

தொல்ஸ்: ஏ கிழவி! ஓடிப் போயிடு. கயுவி கியுவின்னா ப்ளாக் பண்ணிடுவேன்.

அவ்வையார்: நீர் என்ன ஓய் ப்ளாக் செய்வது. இப்போதுதான் தெரிகிறது ஏன் உமக்கு ஃபாலோயர் இல்லை என்று.

ரா சு: தொல்காப்பியரே! உங்கள் நிலை பரிதாபத்துக்கு உரியதுதான். எதற்கும் ஸ்ரீதர் நாராயணனை ஃபாலோ செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போதுக்குன்னு பஞ்சாமிருதத்துல பிரியாணி தயிர்பச்சடி லெக்பீசெல்லாம் கலந்தா மேரி சிலது எடுத்து வச்சிருக்கார். அதுலருந்து நாலு எடுத்து உட்டார்னா தெளிஞ்சாலும் தெளியும். இல்லைன்னா ஞை ஞைன்னு போவலாம்.

சீத்தலை: அய்யாங். ஞை ஞை நானு நானு. சைபர் போலீஸ் இவிங்கள புடிச்சி கேஸ் போடுங்கைய்யா.

இளங்கோவடிகள்: அய்யோ என்னை விட்டு விட்டு விடுங்கள். விட்டு விடுங்கள் (ஓடி வருகிறார்)

அவ்வை: இளங்கோவடிகளே நில்லும். ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள். உங்களைத் துரத்தும் இவர்கள் யார்? ஏன் துரத்துகிறார்கள்?

இளங்கோவடிகள்: அன்னையே! தமிழகத்தில் காவிரி வறண்டு விட்டதென்று தெரியாமல் கர்நாடகம் சென்று அங்கே காவிரியோரம் உட்கார்ந்து மணிமேகலையின் கொள்ளுப் பேத்தியை வைத்து ஒரு காவியம் படைக்க விழைந்தேன். ஒரே ஒரு பாட்டெழுதினேன். இதோ இந்த ஜீவ்ஸ் வெடுக்கென்று காபி பேஸ்ட் செய்து மச்சி இதப் பாரேன் என்று கேவியாருக்கு ஷேர் போட்டார். அந்த மனிதர் பிரித்து மேய்ந்து  ‘மச்சி! இதப் பாருடே’ என்று சுபைருக்கு டேக் செய்தார். மூவரும் சேர்ந்து தளை தட்டுகிறது, கிளை முட்டுகிறது என்று கலாய்க்கிறார்கள்.

சிலப்பதிகாரம் எழுதிய எனக்கா தளை தட்டுகிறது என்று அங்கே போய்க்கொண்டிருந்த ஜ்யோவ்ராம் என்ற ஒருவரிடம் காட்டி நீதி கேட்டேன்.

எப்படிங்க இப்படி மொக்கையா எழுதீட்டு இதைக் காப்பியம்னு வேற சொல்றீங்க என்று சொல்லிவிட்டார்.

அப்துல்லா: அண்ணே அழுவாதண்ணே. அக்கா சொல்லுக்கா. எல்லாம் நம்ம பயகதான். இப்ப என்னாகிப் போச்சு. ஆரம்பமே காப்பியம், ஓப்பியம்னா இங்கல்லாம் ஒத்துக்கிர மாட்டாங்க. அதும் இவிங்க வில்லங்கம் புடிச்சவங்க. மொதல்ல என்கிட்ட குழந்தை கவிதை எழுதப் பழகுங்க. அப்புறம் விதூஷக்காட்ட சேர்த்து விடுறேன். சிலப்பதிகாரத்துல ஒரு பாட்டை எடுத்து போட்டு டிங்கரிங் பண்ணி சயனைட் கவுஜன்னு டேக் பண்ணுங்க. பய புள்ளைங்க யம்மேன்னு தெறிச்சி ஓடுவாய்ங்க.

கம்பர்:மகனே ஜீவ்ஸ்! என்னை மாதிரி கவிஞன் உண்டா என்பாயே. நெட்டு புடுங்கிட்டான். சப்ஸ்க்ரிப்ஷன் கட்டுவாயா என் சடையப்ப வள்ளலே.

ஜீவ்ஸ்: கம்பு மாம்ஸ்! இப்படித்தான் ஒரு கதை சொல்லுவாய்ங்க. உம்பாட்ட படிச்சேன் எனக்கு சந்தோசமா இருந்துச்சு. என்னா எழுத்துடான்னு எழுதுனேன் உனக்கு சந்தோஷமாச்சு. அதோட முடிஞ்சது. நீங்க என்ன பண்றிங்க கேளுங்கள் கிடைக்கும்னு ஒரு க்ரூப்ல சேர்ந்து யார்னா ராஜாவ போய் கேளுங்க.

அவ்வை: சரி வாரும். அதியமான் எனக்காக நெல்லிக் கனி கொடுத்தவன். சப்ஸ்க்ரிப்ஷனா கட்டமாட்டான். மன்ன்ன்ன்ன்ன்ன்னா

அதியமான்: அவ்வையே! மன்னர் மரபெல்லாம் ஒழிந்து நானே மானியத்தில் உயிர் வாழ்கிறேன். உங்களுக்கு என்ன கொடுப்பது? இணையத்தில் அட்வைஸ் மட்டுமே எல்லாரும் தயக்கமின்றி கொடுப்பது பழக்கம். கூகிள் அட் சென்ஸ் விட்ஜட் போட்டு காசு தேத்தப் பாருங்கள். வர்ட்ட்ட்டா..

அவ்வையார்: முருகா! ஞான பண்டிதா. உன் கோபம் தணிந்ததா?

முருகன்: அவ்வையே! ஃபேக் ஐடியில் வந்து புலம்புகிறாயே இது உனக்கு அழகா? இனி என்ன எழுதினாலும் அம்பலவாயறும், ஜாக்கியும் பிழைதிருத்தினால்தான் டொட்காம் ஏற்கும்.

ஜாக்கி: உ.த அண்ணே. சொல்லி வைண்ணே. நாம்பாட்டுக்கு தாதாயிசம் போல...

உ.த: இருய்யா இருய்யா. ஆரம்பிக்காத. என்னாச்சி இப்ப

ஜாக்கி: உங்காளு அநாவசியமா என்ன சீண்ட்றான். ஓ...

உ.த: அய்யோ ஸ்டாப் ஸ்டாப். நான் பாத்துக்கறேன். அப்பனே முருகா இது ரத்த பூமி. நீயும் உங்கப்பனும் சேர்ந்து எதுனா பண்ணி வச்சா நீ ஏண்டா சொம்பு தூக்கிட்டு பஞ்சாயத்து பண்ணலன்னு என்ன கலாய்ப்பாங்க. அப்புடியே இதெல்லாம் எரேஸ் பண்ணிட்டு போ ராசா. ஸ்ஸ்ஸப்பா! நாம சொன்னா எவன் கேக்குறாய்ங்க. 66 ஏ வந்தாதான் அடங்குவானுங்க.

Tuesday, October 2, 2012

நறுக்னு நாலு வார்த்த V 6.1

ரங்கசாமி ராஜினாமா செய்ய வேண்டும்: நாராயணசாமி வற்புறுத்தல்

நல்ல சாமிய பார்த்தா நாறசாமிக்கு பொறுக்காதே.
----------------------------------
பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி ஈரோட்டில் உண்ணாவிரதம்

பத்தாயிரம் ரூவா கட்டினா டெய்லி ஒரு க்வார்ட்டரு பிறந்த நாளைக்கு ஒரு ஃபுல்லுன்னு எதுனா திட்டம் வருதா?
___________________________________
கொலையான வீட்டில் கொள்ளையடித்த போலீசார்!

அப்ப கொள்ளை போச்சுன்னு புகார் பண்ணா கொலையும் பண்ணுவாய்ங்களோ?
-----------------------------------
சபாநாயகர் பதவிக்கு தனபால் நிறுத்தப்படுவார் -ஜெ

உங்க கட்சில ஒரு ஆம்பிளையாவது நிக்குறாய்ங்களா. மொதல்ல நேரா நிக்கச் சொல்லுங்கம்மா.
-----------------------------------
நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கு! நகைச்சுவை நடிகர் சிட்டிபாபுவுக்கு பிடிவாரண்டு!

வில்லன காமெடி பீசாக்கின காமெடியன் வில்லன்.
------------------------------------
வி.ஏ.ஓ. கீ-ஆன்சர் வெளியீடு

பரிட்சை முடிஞ்சி வெளியிட்டதால என்னை மாதிரி விடை தெரியாதவங்க பாஸ் ஆக வாய்ப்பு பறிபோச்சுன்னு எவனாச்சும் கோர்ட்ல கேஸ் போடாம இருந்தாச் சரி.
-------------------------------------
திமுக-காங்கிரஸ் உறவில் பாதிப்பு இல்லை: கலைஞர் பேட்டி

அதுக்கெல்லாம் சொரணைன்னு ஒன்னு வேணும்
-------------------------------------
மது மீது மோகம்! மனைவியை கொலை செய்ய முயன்ற கணவர் கைது!

மது யாரு அவர் காதலியா?
-------------------------------------
இறந்தவர்களின் உயிரை ஜெயலலிதாவால் திருப்பித்தரமுடியுமா? ராமதாஸ் கேள்வி

படிச்சு டாக்டரான உங்களாலயே முடியாது. பட்டத்துல டாக்டரான அவிங்க என்ன செய்வாங்க மருத்துவரைய்யா
-------------------------------------
அக்டோபர் 5ல் மனித சங்கிலி

தலைவர் போராட்ட லிஸ்ட்ல இதுக்கொரு எண்ட்ரியப் போடேய்.
--------------------------------------
மத்திய மந்திரி சபையில் தி.மு.க. சார்பில் புதிதாக யாரும் இடம் பெறமாட்டார்கள்: கலைஞர் அறிவிப்பு

என்னமோ இவர கெஞ்சினா மாதிரியும் இவரு முடியாதுன்னு சொல்லிட்டா மாதிரியும் என்னா பில்டப்பு?
--------------------------------------

Tuesday, August 14, 2012

வீடு

'வனக்கம் சார்! மெனையா பாக்கறீங்களா? ஊடு இர்ந்தா பரவால்லியா?’

‘வணக்கங்க. மனை இருந்தா நல்லது. இல்லைன்னா ரொம்ப பழைய வீடு இருந்தாலும் பரவால்ல’

‘இன்னா பஜ்ஜிட்ல பாக்குறீங்கோ?’ (கேட்கும்போதே குத்துமதிப்பா எவ்வளவுக்கு நான் ஒர்த் என்ற எக்ஸ்பர்ட் அனலிஸிஸ்)

‘இடம் பிடிச்சிருந்தா கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும் பரவாயில்ல’ (ஒன்னைய மாதிரி எத்தன பேருட்ட நான் பதில் சொல்லிருப்பேன்)

‘அப்பார்மெண்டு வோணாவா?’ (உன்னப் பாத்தா தனியா மனை வாங்கி கட்டுற அளவுக்கு ஒர்த்தா தெரியலையே)

‘இல்லைங்க. அபார்ட்மெண்ட், டூப்லெக்ஸ் எல்லாம் வேணாம்.’

‘கொள்த்தூர் பிஜ்ஜு கிட்ட சூப்பரா ஒரு எடம் இருக்குது பாக்குறியா’ (ங்கொய்யால! உன் தம்புடி எப்புடின்னு கண்டு புடிக்கறேன் மவனே)

‘பெரியார் நகர், ஜவஹர் நகர், பெரம்பூர், அயனாவரம் இதுக்குள்ள சொல்லுங்க சாமி’

‘லோக்கோ டேசன் கிட்ட ஒரு வெடம் கீது. நாப்பத்தஞ்சிக்கு அம்பத்தஞ்சி. நல்ல ஏரியா. பேப்பர் க்ளீனா இருக்குது. மெனதான். ஒன்னு நாப்பது சொல்றாங்கோ. பார்ட்டி கிட்ட இட்டும்போறேன். உக்காந்து பேசிக்கிங்க. தோ! லோக்கோ பிஜ்ஜி கீய லெப்ட்ல திரும்புனாங்காட்டியும் நேர கார்னர் ப்ளாட்டுக்கு அடுத்த ப்ளாட்டு. ஊடு நல்லாருக்குது. சரிபட்டா பார்க்கலாம். இல்லன்னா இட்சி கட்டிக்கலாம். நாப்பதுக்கு முப்பது. தொர ஊடு. பேசனா மேண்டேன்ஸ் பண்ணிக்கிறாரு. உங்க இஸ்டம். ஒன்னு இரவத்தஞ்சு. ஒன்னு இரவது வரிக்கும் கேட்டாங்கோ குடுக்கல. நீங்க ஒக்காஞ்சு பேசுங்க. இன்னா நா சொல்றது’

போகும் வழியில் அவன் காட்டிய வீட்டைப் பார்க்கிறேன். 1964-65களில் அப்பாவின் விரல் பிடித்துக் கொண்டு லோகோவர்க்ஸ் ஸ்டேஷனின் தென்புறம் இறங்கி கண்டெம்ட் வேகன்களை கடையாக்கி சோடா ஃபேக்டரிகளில் ஒன்றில் பச்சை கலர் கோலி சோடா. குடிக்க முடியாமல் முக்கி முக்கி குடித்தும் பாதிக்கு மேல் அப்பாவுக்கு. பிறகு திரும்ப ப்ரிட்ஜ் ஏறி பட்மோடாக இருந்த தரிசு நிலத்தில் இருந்த கேம்பில் டெண்ட் ஆஃபீஸில் முன்னாள் ராணுவத்தினர் நலச் சங்கத்து ஆஃபீஸில் மஞ்சள் பையிலிருந்து கட்டுக் கட்டாக காகிதங்கள், டிஸ்சார்ஜ் புக், ஜார்ஜ் படம் போட்ட வெள்ளிப் பதக்கம், ராணி படம் போட்ட செம்பு ஸ்டார் பதக்கம் எல்லாம் காட்டி சண்டை போடுவதும் வருவதுமாக இருந்தது. யாரு சண்டை போட்டா நமக்கென்ன போச்சு. நமக்கு பச்சை சோடா கிடைச்சா சரி.

மாசம் ரண்டு மூணு வாட்டி இதுக்கே அலைய முடியாதுன்னு அம்பத்தூரிலிருந்து அயனாவரத்துக்கு 65ல டேரா தூக்கியாச்சு. மாசம் நாலு பச்சை சோடா கேரண்டின்னு ஒரே சந்தோஷம். ஒன்னு ரண்டு மாசம் அப்படியும் நடந்தது. சபிக்கப்பட்ட ஒரு ஞாயிறு. அந்த ப்ரோக்கர் சொன்ன அதே வீதியில் கார்னர் ப்ளாட். ஒரு க்ரவுண்ட் என்று கவனம். அப்பாவுக்கு இடம் காட்டின ஆசாமி ஏதோ சொல்லி டெண்டுக்குள் அழைத்துப் போனான். கொஞ்ச நேரத்தில் அப்பாவின் இடி முழக்கக் குரல். இங்கயே இருக்கணும்னு நிறுத்திப் போன இடத்தில் இருந்து அசையும் அளவுக்கெல்லாம் நமக்கு தைரியமும் இல்லை.

கொஞ்ச நேரத்தில் வெளியில் வந்த கையோடு கையில் இருந்த பேப்பரெல்லாம் சுக்கு நூறாக கிழித்து வீசி டிஸ்சார்ஜ் சர்டிஃபிகேட்டை கிழிக்க முயன்றபோது அது காலிக்கோ பௌண்ட் என்பதால் முடியாமல், ‘அப்பா வேணாம்பாக்கும், சார்! என்ன இதுக்கும்’ அடங்கிப் போய் அதை மட்டும் பையில் போட்டுக் கொண்டு தரதரவென்று இழுத்துக் கொண்டு போனார்.

வீட்டுக்குப் போய் 500ரூ லஞ்சம் கேக்கறான். கேட்டா நீ சிப்பாய் இல்லை. க்ளார்க்குங்கறான். நான் ஆஃபீஸ்ல உக்காந்தா கிழிச்சேன். பர்மா காட்டுலயும், பாகிஸ்தான்லயும் குண்டுக்கு நடுவில இருந்தாக்கும் வேலை பார்த்து அந்த மெடல் வாங்கினது. இப்படி ஒரு கேவலப்பட்டு காசு குடுத்து அந்த மனை வாங்கத் தேவையில்லை என்ற வீராப்பு (500ரூ அப்போ ஒரு ஆறேழு மாச சம்பளமா இருக்கும்)

சரிங்க பார்க்கலாம் என்று ப்ரோக்கரிடம் சொல்லிவிட்டு வந்து ஒரு குட்டித் தூக்கம். கனவில் அப்பா.

‘அப்பா! புருபுருன்னு கத்திண்டு பேப்பர கிழிச்சி போட்டு வந்தீங்களே. அந்த இடத்துல பாதி ஒன்னேகால் கோடி சொல்றாம்பா! ஒரு ஐந்நூறு அழுதிருக்கப்படாதா?’

‘ஒழச்ச ஒழப்புக்கு மரியாத இல்ல. க்ளார்க்குன்னு சொல்றான். சரி சொல்லிட்டு போ. அதுக்கு லஞ்சம் குடுத்தா மட்டும் சரியாயிடுமா. அப்படி மானத்த விட்டு மனை வாங்கி என்ன பொழப்புடா அது’

‘ம்க்கும். அதான் மானத்த பாத்துண்டிருக்கா மாதிரி ஆகிப் போச்சு பொழப்பு. ரண்டு கோடி போச்சேப்பா’

‘வெங்கட்ராமையர் காலனில 5 வீடு. மாசம் அம்பதுரூபா மேனிக்கு அம்பது மாசம் குடுத்து க்ரயம் பண்ணிக்கோ வாசுன்னு அந்த ப்ராம்மணன் எவ்வளவோ சொன்னார். இரவத்தஞ்சி ரூபா வாடகையோட இன்னும் இரவத்தஞ்சு கட்டிருக்க முடியாதா. பையன் வளந்தா காலேஜுக்கு எல்லாம் கஷ்டம். பட்டணம் போறேன்னு ஒரே பிடிவாதம்.’.இது அம்மாவோட குரல்.

‘வாய மூடுடி! எனக்கு நீ புத்தி சொல்ல வேணாம். விதிச்சிருந்தா வேண்டாம் வேண்டாம்னாலும் வந்தடையும்.’

அதிசயமாக அம்மாவுக்கு எதிரான அப்பாவின் குரல். அதைவிட அதிசயமாக அம்மாவிடம் சைலேன்ஸ்.

‘அசுர சந்தியாச்சு. எழுந்திருங்கோ. விளக்கேத்தணும்’ (எங்கூட்டம்மணி)

‘ம்! காஃபி குடு’ (அப்பாவுக்கேத்த தப்பாத ஒபீடியண்ட் புள்ள)

(ராத்திரி 12.30 மணி)

மீ: ஓய் இருக்கியா?

மொவன்: சொல்லு நைனா

மீ: லோக்கோல ஒரு இடம் பார்த்தேண்டா. ஒன்னேகால் சொல்றான்.

மொவன்: இதெல்லாம் ஆவறதில்ல நைனா. பேசாம பொள்ளாச்சி, ஈரோடுன்னு எங்கனா ஒரு அரை ஏக்கர் பாரு நைனா. ஒரு கொட்டாய் போட்டுக்கலாம். நீ ஜம்முன்னு புக்கு படிச்சிக்கினு நெட்டுல மொக்க போட்டுனு இரு. நான் ஒரு நாலு மாடு வச்சிக்கினு வெவசாயம் பண்றேன். ஜாலியா இருந்துக்கலாம்.

(என்ன பெத்ததும் சரியில்ல. நான் பெத்ததும் சரியில்ல.=)))))))

Friday, June 15, 2012

அன்புள்ள அம்மா

அன்புள்ள அம்மா,

நல்லாருக்கியா! நான் நல்லாருக்கேன்! அப்படின்னு கடிதம் எழுதற பாவத்த பண்ணாம நீ போற வரைக்கும் கூட இருந்துட்டன்னு சந்தோஷப் படறதா? இல்ல, ஒரு வேளை அப்படி அமைஞ்சிருந்தா சேர்ந்து இருக்க வாய்ச்சிருக்கக் கூடிய நாள்ள இன்னும் க்ளோசா, சண்டையெல்லாம் இல்லாம இருந்திருப்பமான்னு புரியல.

எப்பவாவது அது எப்பவோ எப்பவாவதுதான் மடில புதைஞ்சிக்கிறப்ப ‘என்ன திடீர்னு அம்மா பாசம் பொங்கறது’ன்னு கை புடிச்சி தள்ளினாலும் மனசு இழுத்து புடிக்குமே அப்படி தோணிப்போச்சு இன்னைக்கு. இந்த நினைப்பு வந்தப்ப நீ பண்ற பருப்பு துகையலுக்கு மனசு ஏங்கித்து. இப்ப ரொம்ப நிஜம்மா நாக்குலயும் அந்த சுவை எப்படி வந்ததுன்னு தெரியல.

டி.யு.சி.எஸ்ல விடியக் கார்த்தால பாலுக்கு போகிறப்ப க்யூல செங்கல் வெச்சிட்டு வீட்டுக்கு வந்து குளிச்சிட்டு காஃபி குடிச்சிட்டு புக்கத் தூக்கிண்டு போய் க்யூல நின்னு பத்து பதினோரு மணிக்கா ரேஷன் அரிசி வாங்கி, வரும்போதே பாலிஷ் புடிச்சி அது நாத்த அரிசின்னா இன்னோரு பாலிஷ் அப்புறம் குடம் குடமா அலசி கெரசின் ரேஷனுக்கு போதாதுன்னு சாதம் மட்டும் வெங்கலப் பானையில கும்மட்டி அடுப்புல வைப்பியே. பிடிவாதமா நீ சமைக்கிற வரைக்கும் அப்பா திவசத்துக்கு கூட அதானே. அதெப்புடிம்மா குழையவும் குழையாம விரை விரையாவும் இல்லாம சாதம் வடிச்ச? அது ஒரு ரூபா ரேஷன் அரிசியோ இல்ல பின்னாள்ள கிலோ 12ரூபாயாம்னு சலிச்சிண்ட மூட்டை அரிசியோ அப்படி ஒரு ருசி.

இப்ப மூட்டை ரூ 1800ன்னு பளபளா குக்கர்ல இண்டக்‌ஷன் ஸ்டவ்லயோ கேஸ்லயோ ரண்டு விசில் கணக்குக்கு இறக்கிட்டு அத சாதம்னு சாப்டா சாதம் மாதிரி இல்லையே!

ரசம் பொங்காத ஒரு கண்ணு வச்சிக்கோன்னு சொல்லிட்டு போய் ஆழாக்கோ உழக்கோ துவரம்பருப்பு வாங்கிண்டு வந்து ரண்டு தேங்கா பத்தையோட சேர்த்து மொற மொறன்னு அம்மில ஒரு பருப்பு துகையல் அரைப்பியே. துகையல் சாதம் போக ரசத்துக்கும் மோருக்கும் அதையே தொண்டுட்டு கடைசியா அசடு வழிய ‘ம்ம்மா! கொஞ்சூண்ண்ண்டு துவையல்மா’ன்னு வழிச்சி நக்குவேனே.

டிப்பார்ட்மெண்டல் ஸ்டோர்ல ப்ரீமியம் பருப்பு வாங்கி நெய்ல வருத்து மிக்ஸில தாராளமா தேங்கா வச்சு அரைச்சாறது. பார்க்க அதே மாதிரிதான். அதே மொற மொறப்புதான். வாசனையும் ப்ரமாதம்தான். ப்ச்! என்னமோ அந்த டேஸ்ட் வரல!

நாலே நாலு சாம்பார் வெங்காயம், புளி கரைச்சுன்னா கரைச்சுதான் (அந்த வெளுத்துப் போன மிச்சத்த விளக்கு தேய்க்கன்னு எடுத்து வைப்பியே) அதுல என்னத்தச் சேர்ப்பியோ தேன் மாதிரி ஒரு வத்தக் குழம்பு, அந்த டேஸ்டுக்கு கொஞ்சம் கிட்டக்க வருதுன்னு இப்ப கொள்ள காசு குடுத்து க்ராண்ட் ஸ்வீட்ல வத்தக் குழம்பு பொடி வாங்கறேன்.

எப்பப்பாரு வாழைப்பூ உசிலியான்னு சண்டை போட்டிருக்கேனே! சாதத்துக்கும் இதே, ரசத்துக்கும் இதேவான்னு சண்டை போட்டு அப்புறம் மோருக்கும்  அதே போடுன்னு வெக்கமில்லாம கேட்டிருக்கேன். சில நாள் வாழைப்பூ கடலப் பருப்பு கூட்டு, சில நாள் அதோட பெலாக் கொட்டை இல்லன்னா கருவடாம்னு சேர்த்து போட்டு ஈன்னு இளிப்போட கலவை கலந்தா, வண்டிக்காரன்மாதிரி குழைக்காதன்னு பொட்டுன்னு துடையில அடி விழும்.

இப்பல்லாம் வாழைப்பூவ பார்த்தா சோகமா நழுவிடுவேன். அதென்னமோ உசிலல பருப்பு அதிகமா இல்லன்னா பூ சக்கையான்னு அமைஞ்சு சண்டைதான் வரும்.

லீவு நாள் வந்தா சாயந்திரம் நாலு மணிக்கு அநேக நாள் உன்ன நினைக்காம முடியலம்மா. வேலைக்குப் போற வயசில்ல. எப்பவும் அடி வயத்துல தீயா பசிக்கிற வயசு. போக வர எதாவது தின்னக் கிடைக்குமான்னு அலையற மனசு. ஒரு மணிக்கு ரெண்டாம் வேளை மோர்சாதம் குழைச்சா மாதிரியா பிசைஞ்சு கைல குடுத்து தூங்கினா 3 மணிக்கு காஃபி வாசனைக்குதானே எழுந்திருக்கேன்.

அந்தக் கிறக்கத்துலயே வாய் நம நமன்னு டிஃபனுக்கு ஏங்கும்! ரண்டு கை புழுங்கரிசி போட்டு வறுக்கறப்ப என்ன பண்ணப் போறயோன்னு ஒரு தவிப்பா இருக்கும். அப்புறம் ஒரு கை உளுந்து தனியா வறுத்து கல் இயந்திரத்துல கட்டைய அடிடான்னு ஆர்டர் போட்டு அதை அரைச்சு தனியா சம்புடத்துல எடுத்து வச்சிட்டு ஒம்பாட்டுக்கு வாசல்ல போய் உக்காந்துடுவ. பசின்னு கேக்கவும் தயக்கம். அப்புறமா எழுந்து வந்து வறுத்த புழுங்கல் அரிசில ஒரு ஸ்பூன் நெய்யும் ரண்டு ஸ்பூன் சக்கரையும் ஒரு கப்புல போட்டு இந்தான்னு குடுக்கறதோ இல்லன்னா உளுந்து மாவுல வெல்லத்தையும் சுக்கையும் பொடிச்சி போட்டு அளவா ஒரு ஸ்பூன் நெய் ஊத்தி உருண்டை பிடிச்சி ரண்டுதான்னு சொல்லிட்டு தப்பா மூணு குடுப்பியே. அதத் தின்னா அப்புறம் ரண்டு மூணு டம்ப்ளர் தண்ணி கேக்கும். வயறு திம்முன்னு ஆயிடும்.

ஏழேகால் ந்யூஸ் முடிஞ்சதும் ரண்டு தோசைக்கு மேல திங்க முடியாது. வெயில் காலம்னா 4 மணில இருந்து தண்ணி ஊத்தி குளுகுளுன்னு ஆக்கின வீட்டு வாசல் தரையில, குளிர் காலம்னா பனி இறங்காம பெட்ஷீட்ட நாலு மூலைல கட்டி அதுங்கீழன்னு ஒரு தூக்கம் வருமே. பெட் இருக்கு! ஏஸி இருக்கு. புழுங்கல் அரிசி உளுந்தும் இருக்கு. எழவு அந்த பசியும் இல்ல. நீ பண்ணின படிக்கே பண்ணாலும் அந்த ருசியும் இல்ல. அப்புடி தூங்கின தூக்கமும் இல்ல.

வேலைக்கெல்லாம் போய் கொஞ்சம் வசதி ஆனதும் நீ மோசமாயிட்டம்மா. உளுந்து அப்பளம், அரிசி அப்பளம்லாம் கடைல வாங்க ஆரம்பிச்சிட்ட. உளுந்து அப்பளம் பண்றப்போ, அரிசி அப்பளம் பண்றப்போ, வடாம் போடுறப்போன்னு அந்த மாவ ஆட்டைய போட்டு தின்றப்ப திட்டினாலும் அந்த வேளைக்கு சோத்து செலவு மிச்சம்தானே. அட செலவ விடு உளுந்து அப்பள மாவு மேல் அண்ணத்துல ஒட்டிக்க நாக்கால எடுக்க முடியாம விரல விட்டு வழிச்சி ‘கடா மாடு வயசாச்சு! எச்சை பண்ணுவியான்னு’ பளீர்னு முதுகுல விழுந்தாலும், லேசா அந்த விளக்கெண்ணெய் கசப்பும், சீரகமும் உப்புமா அந்த டேஸ்டும், வடாத்து மாவோட புளிப்பு காரமும் எத்தனை கொட்டிக் கொடுத்தாலும் க்ராண்ட் ஸ்வீட்ல கூட கிடைக்காதே!

தட்டைன்னு ஒன்னு பண்ணுவியே. வேஷ்டிய விரிச்சி போட்டு அதுல தட்டி பொரிச்சு எடுத்தா கடிக்கறப்பவே கரைஞ்சு போகுமே. அதுல வெடுக் வெடுக்குன்னு வேர்க்கடலையும் கடலப் பருப்புமா.  ம்ஹூம். அதென்னமோ பால்கவர் பின்னாடி தட்டின வரட்டியை தட்டைன்னு திங்க மனசு ஒப்பல.

அப்பா திவசத்தன்னைக்கு ராத்திரி பலகாரம்னு எப்பவாவது பண்ணி இருக்கியா? நீ பண்ண எள் உருண்டை, ரண்டு வடை, நாலு அதிரசம். ‘சனியனே! தின்னதும் வயத்த தடவாதன்னா கேக்கறியா’ன்னு அடி வாங்குவேனே. என்னமோ! நானும் காசு பாக்காம சமையல்காரிய வச்சுதான் பண்றேன். உன் திவசத்துக்கு எள் உருண்டை, அதிரசம்னு இலைல வைக்கிறப்ப என்ன அறியாம சாரிம்மான்னு சொல்லிப்பேன். அதிரசம் நான் திங்கறதே இல்லைம்மா இப்ப.

என்னன்னமோ சுக்காங்கீரை பருப்பு, புளியம் பிஞ்சு துவையல், புளியந்துளிர் பருப்பு, புளிச்சக் கீரை பருப்பு, பிரியாணி, வெஜிடபிள் ரைஸ், குஸ்கா, புலாவ், குருமான்னு அது ஒரு ருசியாத் தின்னாலும் இப்படி ஏங்க வைக்கிறதில்லை.

சின்ன வயசுல சில ஸ்பெஷலான மாசக் கடைசில கதம்ப சாதம்னு ஏமாத்தி குழம்பு சாதம், ரசம் சாதம், மோர்சாதம்னு கலந்து வச்சிண்டு இதுக்கு அது தொட்டுக்க அதுக்கு இது தோட்டுக்கன்னு மாத்தி மாத்தி காம்போ வச்சி கைல போட்டு தொட்டுக்க ஒன்னுமில்லையான்னு கேள்வியே வராதபடிக்கு போடுவியே. வேலைக்கு போன அப்புறம் தொட்டுக்க ஒன்னுமில்லையான்னு சண்டை போட தோணித்தே தவிர இப்படி போடுமான்னு கேக்க தோணலையே.

ரொம்ப வருஷம் கழிச்சி நீ போய் சேர்ந்து ஒரு வருஷத்துல ஒரு நாள் ப்ரியாம்மா இங்க வந்தப்ப சமைச்சு அப்படி சாப்பாடு குடுத்தா.குருடனுக்கு கண்ணு தெரிஞ்சி திரும்ப குருடானா மாதிரி இருக்கு.  அப்புறம் ரண்டு வாட்டி வந்தும் அந்த பக்கிக்கு இதுக்கு ஒழியல.

இந்த காசு, பணம், பதவி, பவுசு எல்லாம் என்னத்துக்கு? திரும்ப ஒருவாட்டி உனக்கு பிள்ளையா பிறந்து ஓட்டு வீட்டுல இப்படி ரேஷன் அரிசின்னாலும் பத்தியும் பத்தாம ருசியா சாப்டு அதே சந்தோஷத்துல போய் சேர்ந்துடணும்போல இருக்கு.

வித் லவ்

உம்புள்ள

Sunday, May 13, 2012

கேரக்டர்: கன்னீப்பா

சொல்வனத்தில் வெளிவந்த ரோமாக்கள் குறித்தான கட்டுரையைத் தொடர்ந்து தென்றல்’ஸ் ப்ளஸ்ஸில் ஜிப்சிக்கள் குறித்தான விவாதம் படித்துக் கொண்டிருந்தபோது தமிழ்நாட்டு ஜிப்சிகள் குறித்தும் பேசப்பட்டது. என் பள்ளி நாட்களில் ஏறக்குறைய 8 வருடம் அவர்களை அவதானித்திருக்கிறேன். விடுமுறையில் பெரியம்மா வீட்டிற்கோ மாமா வீட்டிற்கோ செல்லும்போதெல்லாம் அவர்கள் ஊரைத் தவிர ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் மட்டுமே. வண்டி ப்ளாட்ஃபார்மில் நுழையுமுன்னே சிற்றெறும்புக் கூட்டங்களாகச் சிதறி ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாக ஓடிப் பதப்படுத்திய அணில் விற்கும் குறத்திகள். சின்னப் பலகையில் பாய்ந்தேரத் தயார் நிலையில் சற்றும் அழகு கெடாத அணிலின் குண்டுமணிக் கண்ணில் எப்படி உயிர் கொண்டுவரமுடியும்? ‘சாம்யோ! ரண்ட்ரூப்பா சாம்யோவில் ஆரம்பித்து வண்டி புறப்படும்போது கூடவே ஓடி வர்ருப்பா குடுசாம்யோவில்’ முடியும் பேரம். முன் தோள் ஒன்று புடைக்க ஒரு கால் முன்வைத்து, பின்னங்கால் இரண்டும் சற்றே மடிய இரை பிடிக்கும் பார்வையோடு பதுங்கி நிற்கும் பதப்படுத்திய நரியின் கோலிக் கண்ணில் அத்தனை கள்ளம் எப்படி வைத்தான் ‘பத்ருப்பா குடு சாமி! காலீல கண்ணு முய்ச்சா லச்சுமி சாமி என்றும், சத்யமா நம்பு சாமி! நரிக்கொம்பு சாமி! ராசி சாமி! அஞ்ச்ரூப்பா குடு சாமி’ என்று கெஞ்சும் அந்தக் குறவன்? அயனாவரம் ரயில்வேக்காலனி குறவர்கள் ஏன் அணில் விற்பதில்லை? கிளிக்குஞ்சும், மைனாக் குஞ்சும் மட்டும், சமைப்பதற்கு கொளுத்திய டயர் கம்பியில் அவர்களே பின்னி, அலுமினிய பெயிண்ட் அடைத்த கூடையில் வைத்து விற்பது ஏன்?

நாய் கடித்துக் குதறி குற்றுயிராய் குப்பைத்தொட்டியில் முடங்கிய நோஞ்சான் பூனைக்குட்டியை புதையல் மாதிரி அள்ளி எடுத்து தெருக்குழாயில் குளிப்பாட்டி, காயத்துக்கு தினத்தந்தி பேப்பர் கிழித்து ஒட்டி, டால்டா டப்பாவில் நேற்று இரவு முறை வைத்து வீதிகளில் ராப்பிச்சம்மா என்று வாங்கிய வெங்காய சாம்பார்,ரசம்,கறிக்குழம்பு,மீன் குழம்பு எல்லாம் ஒன்றாகக் கொட்டிக் கலந்து அதிலிருந்து ஒரு துண்டு மீனோ கறியோ பகிர்ந்து   கொழுகொழுவென்று வளர்த்த அந்தப் பூனையை மடியில் வைத்து ஒரு கையால் தடவிக் கொண்டே மறுகையால் கூராகச் சீவப்பட்ட மூங்கிலை அதன் ப்ருஷ்டத்தில் ஒரே சொருகாகச் சொருகி டயர் கொளுத்திய ரப்பரில் சுட்டு கும்பலாக உட்கார்ந்து பிய்த்துத் தின்ன எப்படி மனம் வரும்?

மருந்துக் கடையில் துவளத் துவள இடுப்பில் குறுக்காக தூளி மாதிரி கந்தல் துணியில் கிடக்கும் குழந்தையைக் காட்டி, எட்டணாவை நீட்டி ’புள்ளக்கி கண்ணு தொர்க்காத ஜொரம் சாமி! நோவால்ஜின் குடு சாமி என்றோ, பத்ருப்பா சில்ற குடுசாமி என்றோ கெஞ்சும் குறத்தியை பெரிய கழியோடு ஏன் கடைக்காரர் விரட்டுகிறார்?

எல்லாம் விட ஐம்பதுக்கும் குறையாத ஆணும், பெண்ணும், குழந்தையுமான கூட்டத்தில் ஆண்களெல்லாம் ‘கன்னீப்பாவாகவும்’ பெண்களெல்லாம் ‘கன்னீமா’வாகவும் இருக்க யாரோ ஒரு கன்னீப்பாவோ கன்னீமாவோ கூப்பிடும்போது எப்படி சரியான கன்னீமாவோ கன்னீப்பாவோ புரியாத பாஷையில் பதில் சொல்கிறார்கள்?

ஐந்தாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்புவரை அயனாவரம் ஜாயிண்ட் ஆஃபீஸ் ஓரம், பள்ளிக்கூட மைதான நிழலில் என்று இவர்களை அவதானிப்பதே பெரிதும் படித்த படிப்பு எனலாம். ஏழாவது வகுப்பு படிக்கும்போது பதினொண்ணாம் வகுப்பு அண்ணன்மார் சொல்லிக் கொடுத்தபடி கும்பலாக போய் குறத்திகளின் எதிரில் மூக்கைச் சொரிந்தால் ‘போசடிகெ, மாதர்சோத்’ என்ற இன்ன பிறவு வசவுகளுக்கான காரணம் பதினொன்றாம் வகுப்புக்குப் சென்றபோது புரிந்து கோபம், பயம், வெட்கம், அருவெறுப்பு என்று கலவையான உணர்ச்சிகளுக்கு ஆளானது சரிதானா?

நாலணாவுக்கு தம்பிடி குறையாது என்று லோலோ என்று கத்தும் கன்னீமா, பிச்சைக்காரியின் குழந்தை கழுத்தில் கருகுமணி போட்டுவிட்டு கொஞ்சுவாள். பேறு வீடுகளில் பேரம் பேசாமல் குழந்தைக்கு கருப்பு வளவியும், கருப்பும் வெளுப்புமான மணிகோத்த கால் கயிரும் கொடுப்பாள். குடலேற்றம் கண்டு துடிக்கும் குழந்தையை இரண்டுகாலை விரலிடுக்கில் பிடித்து தூளி மாதிரி மூன்று வீச்சு வீசி சிரிக்கச் சிரிக்கத் திரும்பத் தருவாள். கையில் நிற்காமல் துடிக்கும் குழந்தையை பார்த்த மாத்திரம் எங்கோ சுளுக்கென்று முறத்தில் இட்டு புடைக்கும் மாயத்தில் அது ‘ஙே’ என்று இளிக்கும். கொஞ்சம் போல சோறோ, குழம்போ, இரண்டு வெற்றிலையோ, ஒரு இணுக்கு கட்டைப் புகையிலையோ கொடுத்தால் போதும். நரம்புச் சிலந்தி எடுத்துக் கொளுத்தி புதுத்துண்டும், கிழிந்த சட்டையும், கவுளி வெத்தலையில் வைத்துக் கொடுத்த 5ரூ தட்சணையோடு ஒரு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்து முடித்த சர்ஜனின் களைப்போடும் பெருமிதத்தோடும் ‘வ்ர்ரேஞ்சாமி’ என்று போகும் கன்னீப்பா கிழவன் அடுத்த அரைமணியில் ஏழாம் நம்பர் சாராயக் கடையில் ஏற்றிக் கொண்டு கன்னீமாவோடு கோவணம் அவிழ மல்லுக் கட்டுவான். கன்னீமாக்கு கொடுக்காமல் மொத்தமும் குடித்த குடிக்கு சண்டை.

தினமும் பார்த்துப் பார்த்து எந்தக் கன்னீமாவுக்கு எந்தக் கன்னிப்பா புருஷன், எந்தக் கன்னீமா மகள், எந்தக் கன்னிப்பா மகன், எந்தக் கன்னிமா அத்தை, சித்தி போன்ற உறவுகள் புரிந்தது. வாரம் ஒருமுறை செங்கல் அடுப்பில் அலுமினிய டேக்ஸா ஏறுகையில் இன்னைக்கு எந்தப் பூனைக்கு ஆயுசு முடியும் என்று பெட் கட்டும் அளவு புரிந்து வைத்திருந்தோம். கருக்கலில் பால் வாங்கிக் கொண்டு வருகையில் கன்னீப்பா கிழவன் காக்கா அடிக்கத் தயாரானால் அன்றைக்கு வீட்டில் திட்டுதான். பால் வண்டி லேட்டு என்று சொல்லிவிடலாம். அதற்காக ‘கன்னீப்பா கிழவன்’ காக்கா அடிக்கும் காட்சியை விட முடியுமா என்ன?

விரலளவு அடிக்கணுவில் ஆரம்பித்து சிறுத்துக் கொண்டே வந்து மெலிதாக முடியும் முனையில் சின்னக் கோலிக் குண்டு அளவு தார் உருட்டி வைத்திருப்பான். டால்டா டப்பாவிலிருந்து இரண்டுகை சோறு விசுறுவான். ‘க்ராவோவ்வ்வ்வ்வ்க்ரா’ என்று ஒரு குரலுக்கு இருபது முப்பது காக்கைகள் வந்திறங்கும். மறைவிலிருந்தபடியே அந்த மூங்கிலின் வீச்சுக்கு பத்து காகமாவது சுருண்டு விழும். பாய்ந்து அள்ளிப் பிடித்து றெக்கை முறுக்கி வலைக்கூடையில் வைக்க ஆரம்பிக்க வொர்க்‌ஷாப் ஆட்கள் எனக்கு உனக்கு என்று போட்டியிடுவார்கள். அந்த ஒரு வீச்சுதான். கிடைத்தவர்களுக்கு சந்தோஷம். கிடைக்காதவர்களுக்கு வருத்தம். ஏதேதோ வியாதிக்கு ரத்தம் கறி என்று மருத்துவப் பக்குவம் வேறு இலவசம்.

காலையில் எட்டரைக்கெல்லாம் தொழில் பார்க்கக் கிளம்பி விடுவார்கள். மைடப்பா, சாந்து புட்டி, பாசி மணி, ஊசி மணி, கருப்பு வளவி, திருஷ்டி மணி, ப்ளாஸ்டிக் மோதிரம், ப்ளாஸ்டிக் வாச், சீப்பு இதர சாமான்களோடு. ரிட்டையரான பெருசுகளும், அன்றைக்கு சமைக்கும் ஒன்றிரண்டு குடும்பங்களும் மட்டும் இருக்கும். எட்டாவது முழுப்பரிட்சை முடியும்போதுதான் அந்தக் கன்னிம்மா சிறுமி படுத்திருப்பதைப் பார்க்க நேர்ந்தது. வலது கை முழுதும் ரத்தக் களறியாய்க் கொப்புளங்கள். ஓயாது அழுகை. என்னமோ எண்ணெய் போடுவாள் ஒரு கிழவி. முழுப்பரிட்சை முடிந்து திரும்பவும் பள்ளிக்குச் சென்றபோது பார்த்தால் பேரதிர்ச்சி. கையில் சதை என்பதே இல்லை. மஞ்சளும் சிவப்புமாய் எலும்பும், சதையுமாய் அரை மயக்க நிலையில் கிடப்பாள். எல்லாரும் போனதும் ‘கன்னீப்பா கிழவன்’ வீதியோர வெள்ளை கருப்பு கல்லைக் கழுவுவான். ஏதோ இலைகள், கொடிகள், மஞ்சள் கிழங்கு அதைத் தட்ட உடைந்து போன ஒரு குழவி. அதில் அரைத்து ஏதோ எண்ணெயில் வதக்கி ஆற வைத்து அவள் கையில் பற்றுப் போட்டு வலியில் அவள் கதற, அவளை அடக்க இவன் கத்த என்று ஒரு கூட்டம் சேர்ந்துவிடும்.

‘காக்கா கிழவன்’ என்று பேர்தானே தவிர நரைத்தாலும் தலை கொள்ளாத முடியும் குடுமியும் எங்கிருந்தோ வித்தியாசமான தேன் கலர் சருமமும், வழக்கமான தூசும், டயர்கரியுமற்ற உருவம். நல்ல உயரம். கையில் மார்பில் கிளி, கன்னமா (கன்னீம்மா) பெயர், ஒரு வாளைச் சுற்றிப் படர்ந்த இரண்டு பாம்புகள், நெற்றியில் மூன்று புள்ளிகள் என்று பச்சை குத்தியிருப்பான். கரண்டை கரண்டையாக காலும் கையும் ஒட்டிய வயிறும் கிண்ணென்றிருக்கும். கையில் வாட்ச் இல்லாத ஸ்ட்ராப் மட்டும். எல்லா விரலிலும் ஸ்டீல் அல்லது செம்பு மோதிரம். நரிப்பல் கோர்த்த பவளமணி. எம்.ஜி.ஆர் படம் வைத்த ரெக்ஸின் பர்ஸ். பல வண்ண ஒட்டுப் போட்ட ரெக்ஸின் பை. அதற்குள் ப்ளையர், மணிகள், மணி கோர்க்கும் அலுமினிய செம்பு கம்பிகள்.  எப்போதும் புதிதாக இருக்கும் சிவப்பு அரணாக் கயிற்றில் அழுக்குக் கோவணம். வெற்றிலை குதப்பிய வாய். கொச்சைத் தமிழில் எம்.ஜி.ஆர் படப்பாட்டு. சாயந்திரமானால் சாராயம், கன்னீமாவோடு பஞ்சாயத்து.

அந்தப் பெண்ணுக்கு வைத்தியம் என்பதாலோ அல்லது ஆஃபீஸ் வாசலிலே கடையும் போடுவதாலோ காக்காக் கிழவன் வேறெங்கும் போவதில்லை. நாளாக நாளாக அந்தப் பெண்ணின் புண் ஆறுவதாகவும் தெரியவில்லை. அந்தக் கிழவனின் வைத்தியமும் நிற்கவில்லை. ஒன்பதாவது பரீட்சை முடிந்தபோது அந்தச் சிறுமி பிழைக்காது என்ற நிலையில் கிடந்தாள். விடுமுறை முடிந்து வந்தபோது காயங்கள் முற்றிலும் ஆறி செம்புண்ணாக உரித்த கோழி நிறத்தில் இருந்தது கை. சிரிப்பும் சுளிப்புமாக கிழவனுக்கு ஒத்தாசை செய்து கொண்டு தூசும் அழுக்குமாக இருப்பாள். எப்படியோ பள்ளி முடிந்து போகும்போது கன்னீமா வளர்ந்துவிட்டிருந்தாள். அந்தக் கூட்டமும் குறைந்து விட்டிருந்தது. பின்பு படிப்பு முடிந்து வேலை என்றோடி அவர்களை அவதானிக்கும் வாய்ப்பே அற்றுப் போனது.

ஐந்தாறு வருட இடைவெளி இருக்கும். ஆஃபீஸ் முடிந்து கேரேஜ் ஸ்டேஷனில் இறங்கி ஜாயிண்ட் ஆஃபீஸ் வழியாக வரும்போது பழைய இடத்தில் ஒரு பெண்ணும் ஒரு கிழவனும். அந்த தேன் நிறம் சட்டென்று பார்க்க வைத்தது. மடிப்பு மடிப்பாக தடித்து கிடந்ததது தேகம். காது சுருங்கி, மூக்கிருந்த அடையாளமாக இரண்டு ஓட்டைகள், உதடற்ற பற்கள், விரலற்ற இரண்டு உள்ளங்கைகளில் அழுந்தப் பிடித்த அலுமினிய டம்ப்ளர். ஊதிக் கூட குடிக்க முடியாததால் சூடாக இருந்ததாலோ என்னவோ விரலற்ற கால்களுக்கிடையில் டம்ப்ளரை இறுக்கியபடி இரண்டு உள்ளங்கைககளாலும் ஆரஞ்சு சைசில் இருந்த ஒரு கல்லை எடுத்து அடுப்பில் கிளறிக் கொண்டிருந்தவளின் முதுகில் வீசினான். எழுந்து வந்து டம்ப்ளரில் இருந்ததை ஆற்றிக் கொடுத்துப் போனாள். சாப்பிட்ட பிறகு ஒரு கம்பியை வளைத்து பீடியை சொருகி, அடுப்புக் கங்கில் கொளுத்திக் கொடுத்தாள். இரண்டு உள்ளங்கையிலும் பிடித்து பல்லில் கடித்து கைகொண்டு பொத்தி எப்படியோ உறிஞ்சி புகைத்தபடி திரும்பியவன் நிமிர்ந்தான். இமைகளும் சுருங்கி பிதுங்கிய வெண்ணிறக் கோளமாக கண்கள். மெதுவே கை பிடித்து அழைத்துப் போய் கால்வாயோரம் போன கன்னீமாவின் கழுத்தில் கருகமணி.

திடீரென வந்தது போலவே திடீரென ஓரிரு மாதங்களில் காணாமல் போனார்கள். கும்பலிலிருந்து எப்படி இவர்கள் மட்டும் பிரிந்து வந்தார்கள்? ஒரு வேளை அந்தப் பெண்ணை மணந்ததால் ஒதுக்கி வைத்துவிட்டார்களா? புற்று வைத்த கையை இலை தழையால் குணமாக்கியவனுக்கு பெருநோய்க்கு மருந்தில்லையா? திடீரென எப்படிக் காணாமல் போனார்கள். ஒரு வேளை காக்கா கிழவன் இறந்திருக்கக் கூடுமோ? இதை எழுதும்போது கூட அன்றெழுந்த இந்தக் கேள்விகளுக்கு பதிலில்லை. அப்புறம் அவர்கள் எவரையும் பார்க்கவும் முடியவில்லை.

Monday, March 5, 2012

ஐ போன் இடுகை

இப்போது ஐ போனிலிருந்தே இடுகை பப்ளிஷ் பண்ணலாம். ஐ போன் ஸ்டோரில் பிளாக்கர் விட்ஜெட்டை தரவிறக்கி உங்கள் ஜி மெயில்கணக்கில் நுழைந்தால் உங்கள் கணக்கில் இருக்கும் எந்தப் பதிவிலும் இடுகை வெளியிடலாம். இது சோதனை இடுகை

Created by "Tamil for iPhone/iPad"

Tuesday, January 10, 2012

கேரக்டர் : வைத்தி மாமா

வைத்தி மாமாவை நீங்கள் பாராமல் இருந்திருக்க முடியாது. எந்த ஒரு அரசாங்க அலுவலகத்திலும் இருப்பவர் அவர். பொதுவான ஒரு தோற்றம் போலவே பொதுவான ஒரு தொழிலும் அவர்களுக்கு உண்டு. அந்தக்காலத்து பி.ஏ. லிட்ரேச்சர் ஆஃபீஸர்களுக்கு அந்தக் காலத்து சிக்ஸ்த் ஃபார்ம் (இந்தக்காலத்து எம்.ஏக்கு சமமாக்கும் என்ற அலட்டலுடன்) எனக்கு டிக்டேட் பண்ணக்கூடிய அளவுக்கு உனக்கு லேங்க்வேஜ் போதுமா என்ற திமிருடனும், நான் சொல்ற ஸ்பீடுக்கு எழுதீடுவியா என்ற கித்தாப்புடன் இருக்கும் அதிகாரிக்கு ஸ்டெனோவாக ஒரு லவ் ஹேட் ரிலேஷன்ஷிப்புடன் இருப்பவர்கள். தனிப்பட்ட ரீதியாக, டெரர் ஆஃபீஸர் வீட்டில் எலி என்ற ரகசியத்தை கான்ஃபிடன்ஷியலாகப் பரப்பும் தூதர்கள். தன்னைத் தவிர யாரும் நெருக்கமாகிவிடாமல் கீழ்மட்ட ஊழியர்களைப் போட்டுக் கொடுத்தே பேர்வாங்கும் புலவர்களும் இதில் உண்டு.

வெள்ளிக்கிழமை ரேசுக்கு நம்பர் கிடைக்காமல் அல்லாடும் அதிகாரியின் கடுப்பைப் புரிந்துக் கொண்டு யாரையும் பார்க்க அனுமதிக்காமல் இருப்பது, வெளியூர் டூர் போகும்போது தீர்த்தவாரி கொண்டாடும் ஆஃபீசர்களுக்குத் தோதான ப்யூனை செலக்ட் செய்து கொண்டு போவது, மதுரை டூட்டியானால் இருட்டுக் கடை அல்வாவும், சுங்கடிப் புடவையும் விற்கும் ஊழியரின் தகவல், திருச்சியானால் மாவடு, மாம்பழம், மடிக்கு வாழைமட்டை இத்யாதிகள் போன்ற பொது அறிவு மிக முக்கியம்.

பிட்மன் வேண்டுமானால் பென்ஸிலில் எழுதி இருக்கட்டும், நாங்கள் இங்க் பேனாவோ, பால்பென்னிலோ எழுதுவோம் என்ற தெனாவட்டும், ‘நீ திக்கித் திணறி குடுக்கற டிக்டேஷனுக்கு ஷார்ட் ஹேண்ட் ஒரு கேடா’ என்று சொல்லாமல் நக்கலடிக்கும் லாங் ஹேண்ட் நோட்ஸ் எழுதும் குசும்பும், இதற்காகவே எங்கேயோ ட்ரெயினிங் எடுத்தமாதிரி இருந்தவர்கள் இவர்கள். சக ஸ்டெனோ பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அது கிழவியோ குமரியோ, ஆஃபீசரின் ‘அந்தரங்க’ என்பதை அழுத்தி காரியதரிசியாகப் பரப்புபவர்கள். இளம் வயதானால் டெரிலின் ஷர்ட்டும், கத்தி முனை டெரிகாட்டன் பளபளா பேண்டும், மினுக்கும் ஷூவுமாக பந்தாவும், நடுத்தர வயது தாண்டினால் தொளதொளா பேண்டு அல்லது வேட்டி, இஸ்திரி காணாத சட்டை (நடு முதுகில் கொடியில் உலர்த்திய கோடு அணில் மாதிரி தெரியும்), ஏரோப்ளேன் டயர் செருப்புமாக பரிணாம மாற்றம் அடைந்தவர்கள். எழுதுவது பேனாவில் என்றாலும், ஸ்டெனோ என்பதற்கு அடையாளமாக கூராக சீவிய பென்ஸிலும், காலிகோ அட்டைக்குள் செருகிய ஷார்ட் ஹேண்ட் நோட்டும் கவச குண்டலங்களாகக் கொண்டவர்கள்.

வைத்தி என்கிற வைத்தீஸ்வரன் இதற்குரிய சகல அடையாளங்களும் கொண்டவர். பெரும்பாலும் சந்தனக் கலர் டெரிலீன் ஷர்ட், காப்பி கலர் பேண்ட், நெற்றியில் பட்டையாக விபூதி, குங்குமம், ஆஞ்சநேயர் சிந்தூரம், ஐயப்பன் கோவில் கருப்பு மை என்று சகலமும் இருக்கும். சுமாரான உயரம், எச்சில் விழுங்கினால் தெரியும் பல்லி வெள்ளை நிறம், அலையலையான முடி, குறுகுறு கண்கள், கண்ணாடி, மழுங்கச் சிரைத்து படிகாரம் பாலிஷ் போட்ட முகம், தாமரைப் பூவிதழ் நிறத்தில் மெல்லிய உதடுகள், மெலிந்த கையில் ஃபேவ்ரி லூபா கடிகாரம், விரல் நுனிகளில் காலைப் பூஜையின் அட்சதை மஞ்சள், எப்போதும் சிரித்த முகம் என்று லைவ்லியாக இருப்பார். காலையில் வந்ததும் டைப்ரைட்டருக்கு மூடிய தகரக் கூட்டின் இரண்டு பக்கப் பூட்டுக்களை கழற்றி, டேபிள் அறையிலிருந்து டங்க்ரி துணியால், குளுப்பாட்டிய குழந்தை மாதிரி வாஞ்சையோடு துடைத்து, கவரைக் கழற்றி டைப்பிங் பேஸ்கட்டில் ப்ரஷ் செய்து திரும்பப் பூட்டி, பதக்க இரண்டு உள்ளங்கையும் ஊன்றி கண்ணில் ஒற்றிக் கொள்ளும்போது வாய் முணு முணுக்கும். ஒரு வேளை டைப்ரைட்டர் அகவலோ, அந்தாதியோ அவரே இயற்றி இருக்கக் கூடுமாவென சந்தேகம் பலருக்கும் உண்டு. பிறகு டேபிள் கண்ணாடியின் கீழ் இருக்கும் வெங்கடாசலபதி, லக்ஷ்மி, சரஸ்வதி, பிள்ளையார், குருவாயூரப்பன், அண்ணாமலையான், முருகன் இத்யாதியோடு பல சாமியார் படங்களுக்கும் முணுமுணுப்பும் கண்ணொற்றுதலும் நடக்கும்.

பிறகு மேல் சட்டைப் பாக்கட்டிலிருந்து புறப்படும் பாக்கட் டைரியின் உள் மடிப்புகளில் இருக்கும் சில்லறை தெய்வ வழிபாடு, ஷார்ட் ஹேண்ட் நோட்டுக்கு ஸ்பெஷலாக முகத்தோடு ஒற்றி ஒரு நமஸ்காரம், கால் இண்டிகேட்டர் பச்சையில் இருக்கிறதா என்ற செக்கப்புக்குப் பிறகு ப்யூனை அழைத்து ஆஃபீசரை வரவேற்று ப்ரீஃப்கேஸ், சாப்பாட்டுப் பை கொண்டு வர அனுப்பி, ஆஃபீஸர் ரூம் துடைத்திருக்கிறதா, ஃபைல் எல்லாம் நேராக இருக்கிறதா, அவுட் ட்ரே சுத்தமாக இருக்கிறதா, டெலிஃபோன், இண்டர்காம், காலிங் பெல் செக்கிங் எல்லாம் முடித்து அயற்சியோடு வந்து ஒரு வாய் தண்ணீர் குடித்து முடிக்க, சார்வாள் வந்திருப்பார்.

‘குட் மார்னிங் சாரோடு உள்ளே போய், அன்றைய கடைமைகளான மச்சினிக்கு டிக்கட், மாமனாருக்கு எமர்ஜன்ஸி கோட்டா தகவல், காசிச் செட்டித் தெருவில் வாங்க வேண்டிய பன்ஸி ரவைக்காக பிதுக்கி எண்ணிக் கொடுத்த சில்லரை ஆகியவற்றோடு வந்தால் அப்புறம் ஆரம்பிக்கும் வைத்தி மாமாவின் ராஜ்ஜியம். ஆர்டர் அதகளம் பறக்கும். சீனியர் ஸ்டெனோவாக இருந்தும், லேட்டஸ்டாக கோத்ரஜ் ஏ.பி., ரெமிங்டன் மெஷினெல்லாம் ஒத்து வராது. பழைய ஹால்டா மெஷின்தான். பக்கத்தில் குட்டியாக போர்ட்டபிள் ப்ரதர் டைப்ரைட்டரும் இருக்கும். வைத்தி டைப் அடிக்க ஆரம்பித்தால் கொஞ்சம் ரசனை உள்ளவர்களுக்கு அது ஒரு கச்சேரி. சில நேரம் மணி அய்யரின் அவுட்வாண சங்கதியாக, சில நேரம் பாலக்காடு மணி அய்யரின் ஃப்ரண்களாக, சில நேரம் சிவமணியின் ட்ரம்ஸாக ரசிக்க முடியும். இன்றைக்கு வேர்ட் ஃபைலில் ஃபார்மட் செய்வதற்கே மூச்சுத் திணறிப் போகும் வேளையில், அந்த வேகத்தில் அடிக்கும் போதே கூடிய வரை வலது பக்க மார்ஜினும் ஒழுங்காக, மேல் கீழ் மார்ஜின் சீராக, கடைசிக் கார்பன் காப்பியிலும் எல்லா எழுத்தும் ஒரே தெளிவுடன் இருக்கும்படியான கலைஞன் வைத்தி. ஒரு எழுத்து விட்டுப் போனதோ, ஸ்பெல்லிங் மிஸ்டேக்குக்கு கரக்டிங் ஃப்ளூயிட் போடுவதோ, எக்ஸ் அடிப்பதோ கிடையவே கிடையாது.

பொதுவாக ஸ்டெனோக்கள், அதுவும் உயர் அதிகாரியின் ஸ்டெனோக்கள் காசுக்காக எக்ஸ்ட்ரா வேலை பார்ப்பது அரிது. வைத்தி மாமாவுக்கு அதெல்லாம் பொருட்டில்லை. வைத்தி மாமா டைப்பிங் என்றால் ப்ரூஃப் பார்க்கத் தேவை இல்லை என்பதால், ஊழியர்களின் வீட்டுக் கடன் அடமானப் பத்திரங்கள், ஒப்பந்தங்கள், காண்ட்ராக்ட் ஒப்பந்தங்கள், அலுவலக விசாரணை மனுக்கள் என்று பல வேலைகள் தேடி வரும். அத்திப் பூத்தாற்போல் டிக்டேஷனும் உண்டு. களைத்த விரலைச் சொடுக்குவது, பெருமூச்சு, சலிப்பு ஒன்றும் காணமுடியாது. இத்தனை வேலைகளுக்கு நடுவிலும் ஆஃபீஸ் அக்கப்போர்கள், கிசுகிசுக்கள், இதர ஆஃபீசர்களின் நிறை குறைகள் பற்றிய விமரிசனம் எல்லாவற்றிற்கும் எங்கிருந்து நேரம் ஒதுக்குகிறார் என்பது யாரும் அறியாத ஒன்று.

வைத்தி மாமா, சில நேரம் மாமா என்று அழைக்கப்படுவதற்குக் காரணமும் உண்டு. மனுஷனுக்கு ஒரு குணக்கேடு உண்டு. ஒரு ஊகமாக வேறு யாரும் செய்ய வாய்ப்பில்லை என்று ஏகோபித்த கருத்துடன் இருந்தாலும் நிரூபிக்கவும் முடியாமல், கையும் களவுமாக பிடிக்க முடியாமல் வைத்தி மாமா செய்யும் ஒரு வேலை கூலரில், கக்கூஸ் கதவுகளில், லிஃப்டில் என்று ஜோடி சேர்த்து எழுதுவது. எங்கெங்கு காணினும் கமலா (ஹார்ட்டின் ஏரோ) அனந்து, டெய்ஸி/சுந்தரம், மெஹர்/கார்த்தி என்று சீர்திருத்தக் காதல் உட்பட சகலமும் காணலாம். கொடுமை என்னவென்றால் இது குறித்து ஆஃபீசரிடம் முறையிட பெர்மிஷன் கேட்டு வரும்போது மாமா அவர்களுக்கு ஆதரவாகத் திட்டும் திட்டில் வேறு யாராவது எழுதி இருந்தால் தற்கொலையே செய்துக் கொள்ளக் கூடும். யாராவது பிடிக்காத ஆட்கள் என்றால் மொட்டைப் பெட்டிஷன் போடுவது உபரிப் பொழுது போக்கு.

மாமாவுக்கு மாதம் ஒரு முறை எப்படியாவது தீர்த்தவாரி ஆகிவிடும். காண்ட்ராக்ட் கிடைத்த மகிழ்ச்சியோ, கல்யாணம் நிச்சயமான கொண்டாட்டமோ, அலுவலகப் பரிட்சை பாசோ, மகன்/மகளுக்கு வேலையோ ஏதோ ஒரு சாக்கில் நடக்கும் பார்ட்டியில் வைத்தி மாமா உற்சாகமாகக் கலந்து கொள்வார். மூடியைத் திறக்கும்போதே முழி சொருகும் அளவுக்குதான் தாங்கும் சக்தி என்றாலும், விடுகிற பந்தா முழு பாட்டிலை ராவாக அடிக்கிறவன் தோற்கும் அளவிற்கு இருக்கும். பார்ட்டி முடிந்து மாமாவை வீடு சேர்க்கும் பொறுப்பு இருப்பதால் ப்யூனுக்கும் ஆங்கே பொசியும். ஒரு விரற்கணு மதுவுக்கு அரையடி நீர் சேர்த்து, தலை குலுக்கி, ஊறுகாய் நக்கி, சிப்ஸ் கடித்து, வடையோ, மிக்ஸரோ ஸ்ருதி சேர்த்து பார்ட்டி முடியும் வரை பாதி தாண்டியிருக்க மாட்டார். புறப்படும் நேரம் பெரிய குடிகாரன் மாதிரி ஒரு கல்ப்பில் முடித்து, ஹாய்/பை சொல்லி ப்யூனுடன் புறப்படும் போதுதான் சிக்கல். எத்தனை சாமர்த்தியமாக கூட்டிக் கொண்டு போனாலும் ஏதோ ஒரு தெருவிளக்குக் கம்பம் கண்ணில் பட்டு/கவனத்தில் பட்டால் போதும்.

அது சாய்ந்து விழுந்துவிடுவது போல் தோன்றுமோ என்னமோ? கைப்பையை காலிடுக்கில் வைத்துக் கொண்டு விளக்குக் கம்பம் சரியாமல் பிடித்துக் கொள்வார். படைத்த ப்ரம்மனே வந்தாலும் அவரைப் பிரிக்க முடியாது. ஒரே ஒரு வார்த்தை வெளிவராது. மணிக்கணக்கில் பிடித்தபடி நிற்பார். ப்யூன் ‘சார்! உழாது வா சார்! லாஸ்ட் ட்ரெயின் போயிடும் சார் வா சார்! என்ற கெஞ்சலெல்லாம் காதில் ஏறும் என்ற நம்பிக்கை பொய்த்தபின், சோடா வாங்கி முகத்தில் அடித்து, கன்னத்தில் தட்டி என்று சண்டிமாடு கணக்காய் இடம் பெயர்த்தினால் தள்ளாட்டமின்றி போவார். ஆனாலும் எப்போதும் சள சளவென்று பேசுபவர் ஊமையாகி விடுவார்.

சவடால் வைத்தி உண்மையில் பெரும் கோழை என்பதை விதி ஒரு நாள் காட்டிக் கொடுத்துவிட்டது. ஒரு ரவுடி ஊழியனை பணி நீக்கம் செய்தபின் அப்பீலுக்காக ஆஃபீசரைப் பார்க்க வந்திருந்தான். வரும்போதே நல்ல போதை. ஆஃபீஸர் அறையில் இல்லை என்பதை விட அவருக்கு குடிகாரர்களைக் கண்டால் இருக்கும் பயம் தெரியுமாதலால் சவடாலாக ’அதெல்லாம் இப்ப பார்க்க முடியாதுய்யா! தெளிஞ்சிருக்கும் போது வா!’ என்று எகிறியபோது துணைக்கு ப்யூன் இல்லை என்பதை மறந்துவிட்டார். ‘அய்ரே! என்னப் பார்த்தா போதை பண்ணா மாதிரியா தெரியுது?’ என்று அடிக்கப் பாய்ந்தபோது, தப்புக் கணக்குப் போட்டு ஆஃபீசரின் அறைக்குள் பாய்ந்து விட்டார். அதே வேகத்தில் பாய்ந்து அந்த ஊழியன் விட்ட ஒரு அறையில் அங்கிருந்த சோஃபாவில் விழுந்து, அபயக் குரல் எழுப்புவதற்குள், கொலை வெறியோடு விழுந்த சில அறைகளில் காலரா வந்தவன் போல் கழிந்து விட்டது. அப்புறம் ப்யூன்கள் ஓடி வந்து விலக்கி விட்டு, வைத்திமாமாவை டாய்லட்டுக்கு அழைத்துப் போய், எல்லாம் செய்தாலும் விலை உயர்ந்த சோஃபா கழித்துக் கட்டப்பட்டது. ஆனாலும், ஆட்டோ பிடித்து உடை மாற்றி கடமையுணர்வுடன் திரும்பவும் டூட்டிக்கு வந்த வைத்திமாமாவின் கடமை உணர்ச்சியை என்னவென்று பாராட்ட?

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து என்பார்களே அப்படி ஏதோ ஒரு சபிக்கப் பட்ட நேரத்தில் நேர்மையான, போலீஸில் உயர்மட்ட தொடர்புள்ள ஒரு அதிகாரியைக் கடிக்கத் தோன்றியது வைத்தியின் குணக்கேடு. ரிட்டையர் ஆக மூன்றாண்டு இருந்த நிலையில், ப்ரமோஷனுக்காக போய் பார்த்தபோது இவரின் குணக்கேடும் கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும், எல்லாருக்கும் நல்லவரான அந்த அதிகாரி கடுமையாகப் பேசிவிட்டார். அந்தக் கடுப்பில், ரொம்பவும் புத்திசாலித்தனமாக அவர் அறையில் இருந்த ஒரு பழைய டைப்ரைட்டரில் பொய்க் கையெழுத்தோடு விஜிலன்சுக்கு ஒரு பெட்டிஷன் தட்டிவிட்டார் வைத்தி. உயர் அதிகாரி ஆனதால் போலீசுக்கு கேஸ் போய்விட்டது. சந்தேக லிஸ்டில் வைத்திமாமா இருந்தார். புலனாய்வில் தேய்ந்து போன ஒரிரு எழுத்துக்களை வைத்து இவர் அறையில் இருந்த ஹால்டா டைப்ரைட்டரில்தான் அடிக்கப்பட்டிருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சாட்சியம் போதாதுதான் என்றாலும், ஓரிரு அறைக்கே கழிந்தவர், போலீஸ் விசாரணைக்கு என்று அழைத்ததும் கலங்கிப்போனார். ஒரு மிரட்டல், ஒரு அறையில் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துவிட்டு வெளிறிப் போய் வந்த பிறகு சஸ்பென்ஷன், பணி நீக்கம் என்றாயிற்று.

திறமையான ஆள் என்றாலும் யாருக்கு எந்த நேர்த்தில் என்ன நேருமோ என்ற சந்தேகமும் சேர்ந்ததால் அப்பீல் எதுவும் ஏற்கப்படவில்லை. டிஸ்மிஸ் ஆனதால் பென்ஷன், க்ராச்சூவிடி, ரிடையர்மெண்ட் பாஸ் எதுவும் இல்லை. பின்பொரு நாள், ஹைகோர்ட் எதிர் சந்து ஒன்றில் நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடவிட் வாங்கச் சென்றபோது ஒரு கடை ஓரத்தில் ஒரு பழைய ஹால்டா மெஷின் எதிரில் வைத்தி மாமா அமர்ந்திருந்தார். நீர்க்காவி வேட்டியும், காலர் கிழிந்த சட்டையும், செருப்பற்ற காலும், பொலிவிழந்த முகமுமாக இருந்த போதும், டைப்ரைட்டரில் விரல் பாவியபோது மணி அய்யர்களோ, சிவமணியோ அவர் விரலை விட்டு நீங்கி விடவில்லை.

Friday, December 30, 2011

ஈரோடு சங்கமம் 2011 - என் பங்குக்கு

ஈரோடு சங்கமம் குறித்து எல்லாரும் பதிவிட்டு விட்டார்கள். நான் பிந்தங்கிப் போனேன். ஆஃபீஸ் ஆணி அதிகமிருந்தது ஒரு பக்கம் என்றாலும், ஓசி பாஸ் இருந்தாலும் எனக்கென்று ரிசர்வ் செய்தால் கக்கூஸ் பக்கத்து சைட் பர்த், இல்லாவிட்டால் மூனு இஞ்ச் கேப்பில் மூஞ்சியில் ஏசி அடிக்கும் மேல் பர்த்தான் கிடைக்கும். சுக்கிரன் ஏழில் இருந்து அஞ்சாம் இடத்து சூரியனைப் பார்ப்பானேயாகில் வெயிட்டிங் லிஸ்ட் ஈக்யூ போட்டாலும் கன்ஃபர்ம் ஆகாது. பட்டா பாக்கியம் காலி இருந்தால் ரிஸர்வ் செய்யலாம் என்று போக, போக ஏற்காட்டில் ஏஸியும் வர கோவையில் செகண்ட் சிட்டிங்கும் இருக்க (நான் பார்த்தபோது 55 காலி இடங்கள்)  ஏற்காடு ரிஸர்வ் செய்து கோவைக்கு ரிசர்வ் செய்யும்போது வெயிட்டிங் லிஸ்ட் ரண்டு என்று வந்தது.  ஆனாலும், கிளம்பும் அன்று கன்ஃபர்ம் ஆகிவிட்டதால் கிளம்பிவிட்டேன்.

சொல்லி வைத்தாற்போல் கக்கூஸ் பக்கத்து சைட் பர்த் எனக்கே எனக்கு. கொஞ்சம் படித்துவிட்டுத் தூங்கலாம் என்றிருக்க, தலைக்கு வைத்திருந்த கம்பளியிலிருந்து குட்டி குட்டியாய் மூன்று கரப்பான் பூச்சிகள் வாக்கிங் கிளம்பின. ஈரோடு சங்கமம் போகுமுன் என் காதுக்குள் சங்கமமாகி விடாமல் விடிய விடிய அந்தக் குட்டிக் கரப்பான் பூச்சிகளைக் கண்விழித்துக் காத்தேன். பெத்துப் போட்ட மூதேவி பெரிய கரப்பான் பூச்சி எங்கே கிடந்து தூங்கியதோ தெரியவில்லை.

முதல் சங்கமம் முடிந்ததும் ஆடியோவோடு பதிவிட்டது நாந்தான். இந்த முறை பழமைபேசி கேட்டிருந்தும், என்னிடம் ஐஃபோன் இருந்தும் ரிக்கார்ட் செய்யவில்லை. காரணம் பிரபல எழுத்தாளர் பாலாசி. போன முறை பள்ளிபாளையம் கோழி வாங்கித் தருகிறேன் என்று ஏமாற்றியதோடல்லாமல், ஸ்டேஷனிலிருந்து வரும்போதே பார்த்தேன் என்று கண்டுக்காமல் விட்டதுமில்லாமல் சொல்ல வேறு செய்தார்.  சங்கமம் நடைபெறும் அரங்குக்கு கதிரோடு வந்து சேர்ந்தேன். ங்கொய்யால திருவிழாக் கூட்டத்தில் தொலைத்தாற் போல் கழட்டி விட்டு அரங்க அமைப்பைப் பார்க்கப் போய்விட்டார். ஒரு பார்வை பார்த்துக் கொண்டு வந்து, வாங்க டிஃபன் சாப்பிடலாம் என்று உத்தரவு போட்டார். எனக்குப் பசிக்கிறதா என்று கேட்காமல் வாங்க சாப்பிடலாம் என்று உத்தரவு போட்டதில் கதிரின் டிஃபனாதிக்கப் பூனைக் குட்டி வெளியே தெரிந்தது.

ஆனாலும், டிஃபனுக்குப் போய் உட்கார்ந்தேன். எனக்குப் போட்ட இலையின் முனை சுருண்டிருந்தது. வலது பக்க ஓரம் வாழைப்பால் கறை வேறு. ஈரோட்டில் வாழைக்கா பஞ்சம்? அடுத்த முறை முதல் நாளே வாழை இலை வாங்கி வாஷிங் மெஷினில் போட்டு துவைத்து, இஸ்திரி செய்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். நான் பெரும்பாலும் விடுமுறை நாட்களில் காலை டிஃபன் சாப்பிடுவதில்லை. ஆனாலும் கதிரின் டிஃபனாதிக்கத்துக்கு அடிபணிந்து, சாப்பிட உட்கார்ந்தால், இட்டிலி, வடை, பொங்கல், பூரி என்று வைத்துக் கொண்டு போனார்கள். போறாததற்கு கதிர் தோசை வைங்க என்று ஆளூமை செலுத்தியபோது பொத்தென்று விரல் கனத்துக்கு ஒரு தோசை விழுந்தது. ஓரம் பிய்த்து சாப்பிட்டு, நடுவில் விரல் வைக்க ரொட்டி மாதிரி அமுங்கியது. ஒரு டவுட்டில் பிரித்துப் பார்த்தால் மஞ்சளாக ஒரு கோட்,. அண்ணே, என்னாதிது என்றால் முட்டை தோசையாம்.

தயவு செய்து தவறாக நினைக்க வேண்டாம். குறையாகச் சொல்லவில்லை. அடுத்த முறை இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் சொல்கிறேன். கலியாணத்தில் அப்பளத்தில் மணமகன் பெயர் மணமகள் பெயர், நன்றி போட்டு வறுத்தெடுக்கிறார்போல் முட்டை தோசையில் முட்டை தோசை என்று எழுதி இருக்கலாம். செய்வார்கள் என்று நம்புகிறேன். சாப்பிட்டு முடித்ததும் திரும்ப கதிர் அரங்குக்குப் போய்விட்டார்.

அரங்கத்தில் கழிப்பறை எந்தப் பக்கம் என்று கண்ணில் படாததால் (நோட் திஸ் ஆல்ஸோ யுவர் அமைப்பாளர்ஸ்) நானே தேடிக் கண்டு பிடிக்க வேண்டியதாயிற்று. மணிஜி, வாசு, மயில், இவர்களுக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு அப்படியே ஓரம்கட்டினால், பிரபல ஃபோட்டோக்ராஃபர், பிட் நாயகன் (ஓய் BIT இல்லை PIT) ஜீவ்ஸ் ஏற்கனவே ஒரு அடிக்கு இருந்த அட்டாச்மெண்டைக் கழட்டி கையில் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு மற்ற அட்டேச்மெண்ட் மாற்ற உதவியபோது தெரியவில்லை. யுவர் ஹேண்ட் யுவர் ஐ பாலிசி என்பது. வளைச்சு வளைச்சு என் மண்டையை ஃபோட்டோ எடுத்திருக்கிறார். (உசாரா பாத்து சொல்லுங்கப்பு, எங்கயாச்சும் ஃபோட்டோ போட்டில சூரியன் க்ளோஸ் அப் ஷாட்டுனு பரிசு கிடைச்சா பங்கு கேக்கணும்)

சரி இனம் இனத்தோடே சுரக்குடுக்கை ஆத்தோடே என்று தருமி சார் பக்கமாகப் போய் நின்றேன். மாத்தி மாத்தி அய்யா அய்யா என்று யாரோ ஒருவர் வரவும் முந்தின இடுகையில் சொன்னாற்போல் ஒருவருக்கு ஒருவர் ஆற்றுப் படுத்திக் கொண்டோம். மெதுவாக மொட்டை வாசு, எம்மின கா.பா என்று வட்டமாக நின்று பேச எங்களை வைத்து லென்ஸ் டெஸ்ட் செய்திருக்கிறார் ஜீவ்ஸ். ஒரு வழியாக அரங்கத்துக்குச் செல்ல, ஐ.டி கார்ட் பொறுப்பாளராக பாலாசி. பயபுள்ளைக்கு ஆளைப்பார்த்தும் கண்டுக்கலையே என்று கார்டில் பேர் எழுதி மாட்டியதும், ‘அல்லோ! புடிங்க கேமரா. இதுலயும் படம் எடுக்கணும்’ என்று உத்தரவாயிற்று. எழுத்தாளர் சொன்ன பிறகு தட்ட முடியுமா? உவர் மோஸ்ட் ஒபிடியண்ட்லி என்று படம் எடுத்துக் கொண்டிருக்க என் மண்டையை யாரையோ விட்டு படமும் எடுத்து பஸ்ஸும் விடுது பயபுள்ள.

நான் வந்து அவ்வளவு நேரமாகியும் முதலாளியின் தரிசனம் கிடைக்கவில்லை. முட்டை தோசை திங்கவா அவ்வளவு தூரம் வந்தோம்? முதலாளி முன்னே நிற்க வேண்டாமா? முதலாளியின் சின்ன மகன் ஒரு டெர்ரரிஸ்ட் என்று தெரியும்தான். ஆனாலும், குரு சுக்கிரனைக் கோணப்பார்வை பார்க்கும் ஜாதகத்தில் பிறந்த ஒருவன் தப்ப முடியுமா? சும்மா ஓடிக்கொண்டிருந்தவரை பிடித்து இழுத்து, என்னைத் தெரியுதா என்றேன். தலையை லேசாக மேலே சாய்த்து, ஆள்காட்டி விரலால் விரலைத்தட்டி ஒரு யோசனை போஸ். கண்ணில் ஒரு மின்னல். “அய்ங். தெரிஞ்சிரிச்சு!!! எங்க வீட்டுக்கு ஏஸி மாட்ட வந்தீங்க! 18ல வச்சிங்கன்னு” அடுக்கடுக்கா அள்ளி விடுது சின்ன ஆரூரரன். ‘அடேங்கப்பா! ஆள விட்றா சாமி’ என்று எஸ்ஸாகி நிற்க நெடு நெடு என்று ஒரு உருவம். ‘வானம்பாடி அண்ணந்தானே, நான் யார் தெரியுதா?’ என்று ஹேண்ட் க்ரனேட் வீசியது.

‘பிட் அடிச்சி மாட்டின பார்வையோடு’ தத்தித் தத்தி சௌம்யன் என்று குத்து மதிப்பாக இழுக்க, ‘அது எங்கண்ணன், நான் அபி அப்பா’ என்று சொன்னார். ‘அட கெரகமே! சப்புனு அப்புனா தலை தனியாப் போறாமாதிரி ஒரு உருவத்த வச்சிக்கிட்டு அப்து அண்ணன், இந்த மனுசன் கொஞ்சம் காத்தடிச்சா, புடிங்க புடிங்கன்னு கத்துறா மாதிரி இருந்துகிட்டு பஸ்ஸுல ப்ளஸ்ஸுல என்னா சவுண்டு?’ன்னு கிறுகிறுன்னு வந்துச்சு. அப்புறம் ஒன்னு ரண்டு தெரிஞ்சவங்க கூட பேசிட்டு, ஒரு ஓரமா உட்கார்ந்தேன்.  என்னை யாருக்கும் தெரியாததாலும், எனக்கும் யாரையும் தெரியாததாலும், மனுசன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகப்படாதா? ரயில்ல தூங்காத தூக்கம் தொத்திக்கிச்சி. அடுத்த முறை இப்படித் தூங்குபவர்களை இனம் கண்டு முகத்தைத் துடைத்துக் கொள்ள வெட் டிஷ்யூ ஏற்பாடு செய்வார்கள் என்று நம்புகிறேன்.

அப்புறம் பரிசளிப்பு விழா கைத்தட்டலில் கண் விழித்து, நானும் கைதட்டி, நடுவில் கிடைத்த கேப்பில் தூங்கி, எல்லாப் பந்தியும் கடந்து இனியும் தாமதித்தால் ட்ரெயின் பிடிக்க முடியாது என்ற நிலையில் சாப்பிட்டு, கிளம்ப, திரும்ப கதிரைப் பார்த்தபோது எக்ஸிபிஷனில் காணாமல் போய் போலீஸ் பூத்தில் இருந்த குழந்தை பெற்றோரைப் பார்த்ததுபோல் அழுவாச்சியும் சிரிப்பாச்சியுமாய் இருந்தது. விழா சிறப்பாக நடந்தாலும் சிறு குறைகள் இருக்கத்தான் செய்தன. இந்தக் குறைகளும் அடுத்த சங்கமத்தில் இருக்காமல் இருப்பதற்காக அவற்றைக் குறிப்பிடுகிறேன்.:

* கூகிள் ஆர்க்குட், ஹைஃபைவ் உபயோகிப்பாளர்களைச் சேர்க்காமல் விட்டது தவறு.
* என்னதான் வளைச்சு வளைச்சு எழுதினாலும் பின்னூட்டம் இல்லாத இடுகை பாழ் அல்லவா. எனவே பின்னூட்டாளர்களையும் அழைக்க வேண்டும்.
*டிப்பன், சாப்பாடு மெனு கார்ட் மற்றும் முன்கூட்டியே கொடுத்து விட்டால் தேவைக்கேற்ப டிஃபனையோ சாப்பாட்டையோ ஒரு பிடி பிடிக்க வசதியாய் இருக்கும்.
*அடுத்த சங்கமத்துக்கு ஒரு மாதம் முந்தியே அப்ளிகேஷன் ஃபார்ம் ஃபோட்டோவோடு வாங்கி தளத்தில் வெளியிட்டு, பக்கத்திலேயே பி.ப,பு.ப,ர.கெ.ப,ட்,ஃப்,ப், என்று அடையாளக் குறியிடுவது புதுமையாக இருக்கும்.
*என்னதான் கவனமெடுத்துச் செய்தாலும் எப்படியோ யாருக்காவது ஒரு குறை இருக்கும் என்பதால் குழுமத்தினர் அனைவரும் ‘குறை இருந்தா மன்னிச்சுக்குங்க, அடுத்த முறை இன்னும் சிறப்பாச் செய்யுறோம்’ அப்படின்னு சொல்றது நல்லாருக்கும். அம்புட்டு தூரம் வந்து காட்டுன விடுதில தூங்கி, அது வேணும் இது வேணும்னு கேக்காம குடுத்தத சாப்பிட்டு, அவிங்க இஷ்டத்துக்கு அமைச்ச நிகழ்ச்சியப் பார்த்து கைதட்றமே. இது கூட செய்யலன்னா எப்புடி?

Monday, December 19, 2011

ஈரோடு சங்கமத் துளிகள்

* நிகழ்ச்சி ஆரம்பிக்குமுன் வெளியில் நின்றிருக்கும்போது அஃப்கானோ, லிபியாவோ அட்ரஸ் தெரியாமல் வந்துவிட்டாற்போல் ஒரு உணர்வு. ஆளாளுக்கு பஸூகா, போஃபார்ஸ் மாதிரி அரை அடியிலிருந்து ஒன்னரை அடி நீளத்துக்கு அட்டாச்மெண்டுடன் கழுத்தில் காமராவோடு அலைந்தார்கள்.

* கூடிய சீக்கிரம் ஜெய்ஜாக்கி வட்டம் ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. அது மட்டும் வந்துச்சுன்னா ஊர்ல இருக்கிற வட்டம் எல்லாம் சதுரம், முக்கோணம்னு மாறிக்கிறணும். ஜாக்கியின் அதி தீவிர வாசகர் ஒருவர், அவரின் பையைச் சுமப்பதை பாக்கியமாக எண்ணி சுமந்து சிஷ்ய பரம்பரை காத்தது ஆச்சரியம். (இதுக்காகவே அங்கிட்டும் இங்கிட்டும் நடந்து சீன் போட்ட ஜாக்கியின் குசும்பை வேறு யாரும் நோட் பண்ணாங்களா தெரியலை)

* மணிஜி லிக்விட் ஃபார்மில் குற்றாலமாகவும் சாலிட் ஃபார்மில் அண்டார்ட்டிகாவும் ஆகிவிடுகிறார். வழக்கமான மணிஜி மிஸ்ஸிங்.

*ஈரோடு குழுமத்தினருக்கு எச்சரிக்கை. வருடாவருடம் பங்கேற்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கறது என்று சாப்பாட்டில் ஏனோதானோவென்று இருந்துவிட முடியாது. டாக்டர் கந்தசாமி சார் இலையில் ஒவ்வொரு ஐட்டமாக பறிமாறிக் கொண்டிருக்க புகைப்படத்தில் ஆவணப் படுத்தியிருக்கிறார்.

* சற்றேறக் குறைய மூன்று பந்திகள் முடிந்து அடுத்த பந்திக்கு ஆட்கள் சேராத சைக்கிள் கேப்பில் தாமோதர் சந்துருவும், விஸ்வம் சாரும் ருசி பார்க்க உட்கார்ந்தார்கள். சமையலுக்குப் பொறுப்பானவர் போலிருக்கிறது வெள்ளை வேட்டியும் சட்டையுமாக தானே வந்து கறி வகைகளை பரிமாரினார். முதல் துண்டு கறி வாய்க்குப் போனதும் சந்த்ருவின் முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை. டைப்ரைட்டிங்கில் நிமிஷத்துக்கு இத்தனை வார்த்தை என்று ஸ்பீட் டெஸ்ட் இருப்பதுபோல் இதற்குமிருந்தால் சந்த்ரு சூப்பர் ஹைஸ்பீட் டெஸ்டில் மெடல் வாங்கியிருப்பார். ஒரு துண்டு கறி வாய்க்குப் போனதும், எம்ப்டியாக ரிட்டர்ன் ஆகாமல் சீராக இன்னோர் அயிட்டம்போல் வாயிலிருந்து இலையில் எலும்பைச் சேர்க்க, கறி காலியாகிக் கொண்டிருந்தது. ம்கும். இதுங்கூட போட்டி போட என்னால ஏலாது என்று விஸ்வம் சாதத்துக்குப் போய்விட்டார்.

*அபி அப்பா அவ்வப்போது குடை சாய்ந்து மணிஜி பக்கம் சரிந்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தபோதும் போதி தருமர் போஸில் நோக்கு வர்மத்தில் இலையை காலி செய்தார் மணிஜி.

*ஒரு நல்ல ரசிகனே நல்ல எழுத்தாளராக முடியும் என்பது ஜெமோலாஜி சாப்பிடும்போது தெரிந்தது. கலந்தோமா அடைத்தோமா வேலையே கிடையாது. தேர்ந்த கலைஞன் போல் சோற்றையும் குழம்பையும் புரட்டிக் கொடுத்து செம்புலப் பெயல் நீர் போல சோற்றில் குழம்பு கலக்க சுருதி சேர்த்து, செல்லமாக ஒரு வாய் கறி கொறித்து, முதல் கவளம் வாயில் போக அப்படி ஒரு ரசிப்பு. (வரப்போற அம்மணி பாவம்)

*புதுசா மாறின வேதக்காரன் போப்பாண்டவருக்கே பைபிள் சொல்றா மாதிரி மயில்ராவணன் குடல்கறி இல்லாத குறையைச் சொல்ல தலைக்கறியோடு குடல்கறி மதியத்தில் ஜோடி சேராது என்ற பரமார்த்த தத்துவத்தோடு பல்பு கொடுத்தார் சந்த்ரு.

*சாப்பிடும்போது முகத்தையும், பரிமாறும் போது இலையையும் பார்த்து பரிமாறணும்னு சொல்லுவாங்க. அகநாழிகைக்கு சாப்பாடு போடும் வாய்ப்புப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்/வாணிகள். தேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் போல முகத்தில் அத்தனை பாவமும் பார்க்கலாம். ஆனந்த விகடனில் சினிமாவுக்கு மார்க் போடுவது போல் வாசு எழுந்திருக்கும்போது முகத்தைப் பார்த்து சாப்பாட்டுக்கு மார்க் போடலாம்.

* சைவப் பந்தியில் ஒரு வன் புணர்ச்சி நடத்தினார்கள் வேலு Gயும் இன்னோருவரும். அதுவரை கோழி படம் தொங்கவிட்டுக் கொண்டு ஆஹா ஓஹோ என்று அலம்பலோடு சாப்பிடும் மனோரமா போல் இருந்திருப்பார் போல் வேலு. மற்றவர் முட்டைப் பணியாரம் கேட்கவும், ‘நண்பேண்டா’ என்று கூவாமல் தானும் வாங்கிக் கொண்டு நிம்மதியாக சாப்பிட விடுகிறதா உலகம். சமய சந்தர்ப்பம் தெரியாமல் ’நீங்க சைவமில்ல’ என்று ஒருத்தர் கேட்க ‘முட்டை சாப்பிடுவேன்’ என்ற குரல் கிணத்துற்குள்ளிருந்து வந்தாலும் லேசாக தீய்ந்த வாடை அடித்தது.

* ஆரூரன், கார்த்தி, ஜாஃபர், மேடி ஆகியோரை ‘சாப்பிடல’ என்று அவ்வப்போது யாராவது லந்து கொடுப்பதும், ‘தோ சாப்பிடப் போறோம்’ என்று சொல்லி எஸ்ஸாகும்போது அந்த வெட்கமும் சிரிப்பும் எந்த நடிகையும் திரைப்படத்தில் கொண்டுவந்து விடமுடியாது.

* என்னவோ வெட்டி முறிக்கிறாமாதிரி இங்குட்டும் அங்குட்டும் ஓட்டிட்டிருந்த கும்பல ஒரு ஓரமா நின்னு நானும் தருமியும் பார்த்துக்கிட்டிருந்தோம். அந்த அலைச்சலுக்கு நடுவேயும் தவறாம யாரோ ஒருத்தர் வந்து மாத்தி மாத்தி ஐயான்னு ஏதோ சொல்ல, ‘இவிங்க வேற எவ்வளவு சொன்னாலும் ஐயா ஐயான்னுகிட்டு’ என்று தன் சோகத்தை இறக்கி வைத்த தருமி சாருக்கு ‘உங்களுக்காவது பரவாயில்லை. என்னைய ஆசான்னு வேற கொல்றாய்ங்க’ என்று ஆற்றுப்படுத்தியபோது. ‘என் இனமடா நீ’ என்ற அர்த்தத்தில் ஓவியமாய் ஒரு புன்னகை சிந்தினார்.

* முதல்வருக்கு மனு கொடுக்கலாம் என்றிருக்கிறேன். வளைத்து வளைத்து பிடித்து கேஸ் போட்டும் நில அபகரிப்புக் கூட்டமொன்று பதிவராகவோ/ட்வீட்டராகவோ/ஃபேஸ்புக் பயனாளராகவோ வளைய வருகிறது. குறைந்தது மூன்று பேராவது என் பின்மண்டையை புகைப்படம் எடுத்ததைப் பார்க்கும்போது அசந்தால் கடைக்கால் தோண்டி வணிகவளாகம் கட்டிவிடுவார்கள் போலிருக்கிறது

Friday, September 30, 2011

கேரக்டர் - அப்துல்லா குட்டி

அப்துல்லா குட்டி என்கிற குட்டியை உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். அப்படி என்ன இவரைப் பற்றித் தெரிந்து கொள்ள இருக்கிறது என்று கூடத் தோணலாம். எனக்குமே கூட அந்த வயதில் அவரின் மேல் அவ்வளவு ஈர்ப்பு இருந்ததாக உணர்வில்லை. ஆனாலும் அவரில் ஏதோ ஒன்று இருந்தது. இல்லையெனில் பதவிக்காகவேயன்றி ஒரு மனிதனாக அத்தனை பேரின் நேசிப்புக்கும் ஆளாயிருக்க முடியாது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு குட்டியை நான் வேறு விதமாக புரிந்துக் கொள்ள முடிகிறது. குட்டி அப்படி ஒன்றும் கவர்ச்சியான மனிதனும் இல்லை. நல்ல உயர அகலம். அதற்குச் சற்றும் பொருந்தாத சிறிய வட்டமுகம், பெரிய வாய், கருத்துத் துருத்திய கனத்த உதடுகள், பரந்த மூக்கு, பரந்த நெற்றியில் மேலேறித் தொடங்கும் சுருள் சுருளான முடிகள் என்று ஒரு கற்கால மனிதனை நினைவூட்டக் கூடும் உருவம். ஆனாலும், கலகலவென்ற பேச்சும், நொடிக்கு நொடி பகடியும் சிரிப்புமாக சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும் மனிதன்.

முதல் சந்திப்பின் அறிமுகத்திலேயே அவரின் வயிற்றுக்கு சற்றே உயர்ந்திருந்த என்னை கிண்டல் செய்தபடிதான் அறிமுகமானார். பதவியில் எனக்கு அடுத்த உயர்நிலையானாலும், அதிகாரத்தில் எனக்கு கட்டுப்பட வேண்டிய நிலை. ‘சாரே! நிங்கட ஹைட்டுக்கு எனிக்கு உக்காந்து குட்மார்னிங் சொன்னா போறே! ஆனா அது மரியாதையில்லை கேட்டோ. பின்னே ஞான் சார்னு பிள்ளார்னு தூக்குன்னது மாதிரி தூக்கி கொஞ்சி குட்மார்னிங் பறயட்டே’ என்றால் சிரிக்காமலா இருக்க முடியும்? முதல் சந்திப்பில் முதல் டீயோடு மனைவியும், முதலாண்டு இஞ்சினியரிங் படிக்கும் மகனும் ‘நாட்டில்’ இருப்பதாகச் சொன்னார்.

குட்டி சார் வந்தால் அலுவலகம் கலகலப்பாகிவிடும். ஒவ்வொருவராக போய் வம்பிழுத்து சிரிக்கவைத்து எல்லோரோடும் ஒரு அன்னியோன்னியத்தை உருவாக்கியிருந்தார். பலரின் உடல் மொழியில் ஒரு மரியாதையும் கலந்திருந்தது. அவருடைய அலுவலர்கள் மத்தியில் அவர் ஒரு தேவன். குளிர் பிரதேசம். பெரும்பாலும் அந்தக் காட்டைச் சேர்ந்த மக்கள். குடி என்பது அவர்களுக்கு இன்றியமையாத ஒன்று. சில நேரம் போதையில் விபத்துக்கு ஆளாவார்கள். ரூல் படி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாலும், குடிபோதையில் பணியில் இருந்ததற்காக வேலை போகும் அபாயமும் உண்டு. குட்டி அப்படியான தண்டனைகளை நிகழவிட்டதே இல்லை என்பார்கள். அவசர சிகிச்சைக்குப் பின், மைசூர் ஆஸ்பத்திரியில் சேர்த்து டாக்டரிடம் பேசி இஞ்சுரி ஆன் டூட்டி கொடுத்துவிடுவார். தேறி வரும் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடைக்கும். 

என் தனிப்பட்ட உதவிக்காக இருந்த நஞ்சப்பன் கூறிய தகவல்கள் இவை.  ‘சார், கல்யாணம் வச்சிருக்கேன்னு போய் நின்னா போதும் சார். அவங்க அவங்களுக்கு ஏத்தாமாதிரி தேவையானது கிடைக்கும். கலியாணத்துக்கு முதல் நாள் கூப்பிட்டு என்னவாச்சும் வேணுமான்னு கேப்பாரு. அண்ணன் தம்பி இல்லைன்னே கவலை இல்ல சார். ஆளுங்கள கூப்புட்டு நீ இது பண்ணு, அந்த வேலை பாருன்னு சொல்லீடுவாரு. பேச்சு வார்த்தை இல்லாதவன் கூட குட்டி சார் சொன்னா செய்யாம இருக்கமாட்டான். ஒரு அஞ்சாரு வருஷம் இருக்கும் சார். குட்டி சாருக்கு ட்ரான்ஸ்ஃபர் போட்டாங்க. கூலி வேலை செய்யறவன் கூட வரலை சார். ஒரு நாள் முழுக்க வேலை செய்யாம கேன்ஸல் பண்ண வச்சிட்டோம்.’

ஆனாலும் குட்டியை இரண்டு பேருக்கு மட்டும் பிடிக்காது. தன்னைத் தவிர மற்றவரெல்லாம் ’அரிசிக்கரே கள்ளரு’ என்ற அபிப்பிராயம் கொண்ட அக்கவுண்ட்ஸ் லக்ஷ்மி நரசிம்மன், லட்சம் என் அப்பா சேர்த்தது, அதுக்காக நான் சம்பளத்தை மட்டும் நம்ப முடியுமா என்றிருந்த டைப்பிஸ்ட் கிருஷ்ண மூர்த்தி. எல்லாம் திருடனுங்க. பினாமில காண்ட்ராக்ட் எடுத்து நம்மளுக்கு ப்ரஷர் குடுப்பாங்க என்ற சலிப்பு லக்ஷ்மி நரசிம்மனுக்கு என்றால், பில், அக்ரிமெண்ட் டைப் பண்ண 50ரூபாய்க்கு மேல் தருவதில்லை என்ற கடுப்பு கிருஷ்ணமூர்த்திக்கு. 

லக்‌ஷ்மி நரசிம்மனின் பார்வையில், ’குடித்தான்ரீ அவனு! கிளப்பினல்லி ஹோகி, சன்னாகி குடுதுபிட்டு பாக்கி ஆடுத்தான. லோஃபர் நன்ன மகா.. கேஷுவல் லேபர் ஹுடுகிகளு லீவ் பேக்கு சாரந்த்ரே ரெஸ்ட் ஹவுசிகெ பாந்த ஹேள்தான. அவனு சகவாசா பேடாரீ நிம்மகே (குடிப்பாங்க அவன். க்ளப்பில் போய் குடித்துவிட்டு, சீட்டு ஆடுவான். பெண் பித்தன். தினக்கூலிப் பெண்கள் லீவ் கேட்டால் ரெஸ் ஹவுசுக்கு வான்னு சொல்லுவான். அவன் சகவாசம் உங்களுக்கு வேண்டாம்) என்றார். 

பின்னொரு நாள், ராமன் நாயர் கடை வாசலில் டீ சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது மூன்று பெண்கள் வந்தனர். கேஷுவல் லேபர்கள்தான். குட்டி சாருக்கு வணக்கம் சொன்னதும், எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தபடி, வழக்கமான இடிச்சிரிப்போடு,  ‘சினிமால நடிக்கப் போறீங்களா? மேக்கப்பெல்லாம் பலமா இருக்கு?’ என்றவருக்கு நாணிக் கோணி,  ‘இல்லா சார்,  சினிமாக ஹோக்திவி சார். லீவ் பேக்கு சார்’ (சினிமாக்கு போகிறோம் சார். லீவ் வேண்டும் சார்) என்றார்கள். ‘ஹோகாணா ஹோகாணா! ரெஸ்ட் ஹவுஸிக ஹோகுரி பர்த்தினி’ (போலாம் போலாம் ரெஸ்ட் ஹவுஸுக்கு போங்க வரேன்) என்று அனுப்பிவிட்டு, உடலை முறுக்கி ‘பின்ன நோக்காம் சாரே. நன்னாயிட்டு ஒரு மஸாஜ் எடுத்து குளிச்சிட்டு, வீட்டினு போயால், மீன் கறியும், கோழியும் இருக்கும்’ என்று கண் சிமிட்டிவிட்டுப் போனார். சரிதான். லக்ஷ்மி நரசிம்மனுக்கு காமாலைக் கண் இல்லை போலிருக்கிறது என்று நினைக்கத் தோன்றியது.

பின்பொரு நாள் டவுனில், குட்டியின் ஸ்கூட்டரில் ஒரு இளம்பெண்ணோடும் நான்கு வயது சிறுவனோடு பார்த்தபோது, கிருஷ்ணமூர்த்தி ‘சாரோட சின்ன வீடு’ என்று அறிமுகம் செய்தான். குட்டி சார் இன்னும் இரண்டு படி கீழிறங்கினார். வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதமாகியும், குவார்ட்டர்ஸ் கிடைக்காமல் சமைக்க முடியாமல் மழையில் மெஸ்ஸுக்கு போவதும் முடியாமல், நஞ்சப்பன் கொண்டு வரும் ஆறிப்போன சாப்பாடுமாய் இருந்த நிலையில் ஒரு குவார்ட்டர்ஸ் கிடைத்தது. கிருஷ்ணமூர்த்தியும் பேச்சிலர் என்பதால் ஷேர் செய்து கொள்வது வசதியாக இருந்தது. அடுத்த குவார்ட்டர்ஸ் குட்டியின் நெருங்கிய நண்பரான ராமச்சந்த்ரன் நாயருடையது.

அது கட்டுமான அலுவலகம் என்பதால், எக்ஸிக்யூடிவ் எஞ்சினியர் காலையில் சைட் இன்ஸ்பெக்‌ஷன், அது இது என்று அலைந்து விட்டு அலுவலகம் வருவதே பெரும்பாலும் மாலை ஐந்து மணி ஆகிவிடும். அதன் பிறகுதான் அலுவலகம் வேலை தொடங்கி இரவு ஒன்று இரண்டு என்று நடக்கும் என்பதால், பகல் போதில் அவரவர் வசதிக்கு வந்து வேலை பார்ப்பது வழக்கம். பெரும்பாலும் பக்கத்து குவார்ட்டர்சில் சீட்டுக் கச்சேரி காலை பத்து மணிவாக்கில் தொடங்கிவிடும். சும்மாவே அதிரச் சிரிக்கும் குட்டி சாரின் குரல், சரக்கும் சேர்ந்துவிட்டால் குவார்ட்டர்ஸ் அதிரும். முன்னூரு ரூபாய் அதிகம் வருமென்று இந்தக் காட்டிற்கு ப்ரோமோஷனில் வந்த எனக்கு, ஒரு ஆட்டத்துக்கு 200, 500 என்று ஆட்டம் நடப்பது நம்ப முடியாததாகவிருந்தது.

அதிக பட்சம் 50ரூ கேம் ஆடுவான் கிருஷ்ணமூர்த்தி. ஒரு நாள் இது சம்பந்தமாக பேச்சு வந்தபோது குட்டி சாரின் கிளப் கதையோடு சின்ன வீட்டின் கதையும் சொன்னான். நகரின் பெரிய பணக்காரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் கிளப் அது. ரெஸ்ட் ஹவுஸ் குட்டி சாரின் பராமரிப்பில் இருந்ததாலும், மத்திய அரசின் ஒரு மூத்த அதிகாரி என்ற சலுகையும் அவரை உறுப்பினராக்கியது. சீட்டாட்டம் என்பது அங்கே வெறும் ஆட்டம் மட்டுமில்லை. அந்தஸ்தோடு சேர்ந்த விஷயம். பிஸினஸ் போலவே அங்கும் நாணயம் முக்கியம். குறைந்த எண்ணிக்கை சீட்டு எடுப்பவர் போடுவதுதான் பந்தயம். முடியாது என்று எழுந்திருந்தால் ஒரு மாதம் சஸ்பெண்ட் என்பதோடு, இன்ஸால்வென்ஸி கொடுத்ததற்குச் சமமான சமூக மதிப்பு. கையில் காசில்லை என்றால் துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்தால் போதும். பணம் கொடுக்க அடுத்த நாள் வரை டயம் தருவார்கள். தவறினால் உயிருக்கும் உத்திரவாதமில்லை என்பதான காட்டு விதிகளுடன் கூடிய க்ளப்பாம். 

சபிக்கப்பட்ட ஒரு நாளின் இறுதியில் குட்டிசாருக்கு ரூ 50000 கடன் ஆனது. அடுத்த நாள் கொடுத்தாக வேண்டுமாம். வங்கியிலும் இருப்பில்லை. செய்வதறியாது வீட்டில் இருந்தவரை வீட்டுச் சொந்தக்காரரின் மகள் காரணம் கேட்டிருக்கிறாள். போதையில் நடந்ததைச் சொல்லி அழுதவரை தன் நகைகளைக் கொடுத்து விற்றுக் கொடுத்து விடுங்கள் என்று சொன்னாளாம். அவள் ஒரு செக்ஸ் ஒர்க்கராக இருந்தாள் என்றும் சொன்னான் கிருஷ்ணமூர்த்தி. நகையை விற்று கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, மிகுந்த பணத்தில் சீட்டாட உட்கார்ந்த குட்டியின் மடியில் அதிர்ஷ்டதேவதையும் அமர்ந்தாள் போலும். அன்றைய ஆட்டத்தின் முடிவில் குட்டியின் வெற்றி தந்த பரிசு இரண்டரை லட்சமாம். தான் அந்த ஊரில் இருக்கும் வரை தன்னோடு மட்டுமே இருக்க வேண்டும் என்ற உடன் படிக்கையில் அந்தப் பெண்ணுடன் இருப்பதாகச் சொன்னான் கிருஷ்ணமூர்த்தி. 

சோம்பலான ஒரு ஞாயிறன்று ராமன் நாயர் கடைக்கு காலை டிஃபனுக்குப் போனபோது பத்து மணியிருக்கும். ’தோசா இல்லா சாரே. இரிக்கு. அஞ்சு மினிட்டில சப்பாதி தரும்’ என்று  காத்திருந்தபோது ‘எடோ நாயரே!’ என்ற குட்டியின் குரல். அதிகபட்ச போதை. கையில் ஒரு பை. வழக்கமான, இடி சிரிப்புடனான குட் மார்னிங் டி.ஏ. சார் இல்லை. நான் இருப்பதைக் கூட உணர்ந்ததாகத் தெரியவில்லை. ‘இதில் கரி மீனும், கோழியும் உண்டு. ச்சோறு இவிடதன்னே. கேட்டோ. ஞான் இப்பத்தன்னே வராம்’ என்று கொடுத்துவிட்டுப் போனார்.

என்ன ராமண்ணா, காலையிலயே இன்னைக்கு என்றேன். எண்ட குருவாயூரப்பண்ட களி சாரே. இன்னு ஞான் மாட்டி. எப்பவோ செத்திருக்கணும் இந்தாளு. போயிருந்தா நன்னாயிட்டிருக்கும். பெரிய ப்ரிட்ஜிலிருந்து விழுந்து கால் மட்டும் உடையுன்னது இப்படி ஜீவிக்கான் வேண்டியோ சாரே. ரண்டு வாரம் ஊர் முழுக்கத் தேடி சாரே. பின்னே நொண்டி நொண்டி வந்தது ஆளு. காட்டிலிருக்குன்ன ஜனங்கள் வைத்தியம் பார்த்தது கொண்டாணு ஆயாளு ஜீவிச்சு. பின்னே கொறே விஷயம் நடந்து போயி.

உடம்பு முழுக்க ரோகம் சாரே. ரண்டு வாட்டி ஹார்ட் அட்டாக் வந்நு. குடலும் கெட்டுப் போயி. பீப்பீ, சக்கரா எல்லாமுண்டு. உப்பு கூடாது, சக்கரை கூடாது. மாமிசம் கூடாது. குடிக்கக் கூடாது. சொன்னாக் கேட்டாதானே. ‘பின்னெந்தாடா ஜீவிக்கணும்’ என்னு களியாக்கும் சாரே. நாட்டிலிருந்து மோன் வந்திருக்கும். காசு வேண்டி. அதாணு இப்பமே ஆரம்பிச்சு. இனி வந்து குடியும் அழுகையும் எண்டே ஈஸ்வரா. சாரு அறியுமல்லே. இவிட உள்ள பெண்குட்டி சார்னு சின்ன வீடுன்னு பறையும் மக்களு. அதல்லா சாரே நிஜம். அது ஒரு பாவப்பட்ட குடும்பம். பெரிய மோளுக்கு தீராத்த ஒரு ரோகம். இவள் சின்ன வயசிலேயே தெற்றிப் போயி. அச்சனுக்கு சுகக்கேடாணு. குட்டி சார் இவிட வரும்போ என்னொத்த பிராயம். 

ஆபீசு பணியல்லல்லே. எப்பவோ போகும். எப்பவோ வரும். தாமசிக்கான், சோறுண்ணான் வேண்டி அவருடே வீட்டில் கேறி. சாரு அறியுல்லே குட்டி சாரிண்டே சீட்டுக் களியிண்டே பிரபாவம். அது நிஜமாணு. பின்னே ஆ பெண்ணு யாரோடோ கர்ப்பமாயி. அவளுக்கு அபார்ஷன் செய்யானு வழியில்லான்னு பறஞ்சு டாக்டர்மாரு. இவனுக்கெந்தா பற்றி சாரே. மணிப்பாலிலே கொண்டு எத்தி. ப்ராந்தணாணு சாரே இவன். கலியாணம் கழிச்சில்லா. அவளினு கூட்டிக் கொண்டு போய் ஒரு வீடு உண்டாக்கி கொடுத்து அவிடயா தாமசிக்குண்ணு. இவிட எல்லாரும் பேசுன்னது ஆயாளு அறியும். பின்னே யாரும் நேரே சம்சாரிக்கானில்லல்லோ. அத்தர பயமா குட்டி சாருனு கண்டெங்கில். பின்னே நூறு கதை சம்சாரிக்கும். தூ. 

எனிக்கறிஞ்சி பின்ன ஒரே ஒரு தரம் நாட்டிக்கு போயி சாரே. எந்தாயி, ஏது சமாச்சாரம் ஒன்னும் பறையில்லா ஆயாளு. ‘நாயரே. இனி ஞான் நாட்டிக்கு போகுல்லடே’ன்னு மாத்ரமா பறஞ்சது. பின்னே ஆரம்பிச்சதாணு தினம் குடி. மோன் வரும். வெறும் ஃபீஸ், ட்ரெஸ்ஸுக்கு மாத்திரம் அம்மை சொன்ன எமவுண்ட் வேண்டிப் போகும். சொந்த மகனல்லே. அவன் வந்நு போயால் இவிடத்தன்னே சாரிண்டே களி. நீ போய்க்கோ சாரே. ஒரு பாடு ஜோலியுண்டு. வரும்போ மீன் கறி ரெடியாட்டிருக்கணும் என்றனுப்பி வைத்தார்.

பின்னெப்போதும் குட்டி சாரை தரக்குறைவாக நினைக்கத் தோன்றியதில்லை. ட்ரான்ஸ்ஃபரில் கிளம்பி வரும்போது, ஸ்டேஷனுக்கு வந்து கிளம்பும் சமயம் இறுகக் கட்டிக் கொண்டு, ‘சாரே! என்னே மாத்ரம் மறக்கரிது கேட்டோ! வி ஹேட் அ நைஸ் டைம்’ என்றபோது உடைந்துவிட்டேன். ‘இதெந்தினா அய்யே! சாரு வரும்போ செறிய குட்டியாணு. இப்போ கல்யாணம் கழிஞ்சல்லே சார்னு. அழுன்னது கண்டால் பெண்டாட்டி சிரிக்கும்’ என்று இடிச்சிரிப்போடு அனுப்பி வைத்தார்.

நஞ்சப்பன் மட்டும் வரும்போதெல்லாம் சந்திப்பான். இரண்டு வருடம் கழித்து சந்தித்தபோது வழக்கம் போல் குட்டி சாரை விசாரித்தேன். ‘தேவுரு இல்லா சாரே. சாரு சத்தோகிபிட்ரு’ என்றான். சாவா அது. பெரிய பாலத்திலிருந்து விழுந்து காப்பாற்றிய உயிரை இப்படிப் பறிக்கத்தானா? மோட்டார் ட்ராலியில் சரிவில் போகும்போது ஒரு ஜெர்க்கில் வீசி எறியப்பட்ட குட்டி சாரையும், அவரைக் காப்பாற்றப் பாய்ந்த ராமச்சந்திரன் நாயரையும் கரும்பு ஜூஸ் மிஷினில் சிக்கிற கரும்பு மாதிரி சிறுகச் சிறுக சிதைத்ததாம் ட்ராலி. . ‘சார் மாடித்து ஏனில்லா சாரே. குட்டி சார் ஹெண்த்தி பந்தவரே. செட்டில் மெண்ட் ஹணா மொத்தம் இவளிக கொட்டோகிபிட்ரு சார்’(சார் பண்ணினது ஒன்னுமில்லை சார். அவர் மனைவி கிடைத்த செட்டில்மெண்ட் பணம் மொத்தம் இந்தம்மாவுக்கு கொடுத்துட்டு போயிட்டாங்க சார்). கம்பாஷ்னேட் அப்பாயிண்ட்மெண்ட்டு பேடாந்துபிட்ரு சார் (அவர்களுக்கோ பையனுக்கோ அனுதாப அடிப்படையில் வேலை கூட வேண்டாமென்று விட்டார்கள் சார்)’ என்றான்.

அவர்களுக்குள் என்ன நடந்திருக்கும்? இத்தனை வெறுப்பு ஏன்? குட்டிக்கு ஏன் இப்படி ஒரு முடிவு? இப்படி ஒரு வாழ்க்கை? ஒரு வேளை ‘தேவுரு இல்லவா சாரே?’