Tuesday, July 19, 2011

தலைப்பில்லாக் கவிதைகள்

துளிர்த்த பச்சையின் சிலிர்ப்பில்
பழுத்த இலையுதிர்வின் வலியை
உணராதா மரம்?
உதிரினும் 
மண் புகுந்து
தன் உயிர்கலக்கும்...


***
ஹய்ய்யோ!
எவ்ளோ பெரிய கேக்
என்றாள் குழந்தை

ஹய்ய்யோ!
எவ்ளோ பெரிய கண்
என்றிருந்தது எனக்கு..



****


குடை ராட்டினமாய்
மேலும் கீழுமாய்
அலைபாய்கிறது மனது
படி, எழுது, படம் பார்,
நட, ஓடு,
ஏதாவது செய்
என்றார்கள்..
ஆறோ, குளமோ,
ஏரியோ, கடலோ
எங்கு எறிந்தாலும்
கரையொதுங்கும்
கட்டைபோல்
மனமொதுங்குகிறது
நினைவு..



****


குடுவையில் அடைபட்டிருந்தேன்
இறுக்கம் உணர்ந்ததில்லை
அல்லது பழகிவிட்டிருந்தது
உன் விரல் தொட்டுத் திறந்தாய்
மென் மொழியால்
வெளி காட்டினாய்
உள்ளும்..
ரந்து விரிந்திருந்ததென் உலகம்
மொழியற்று
வழியற்று
திசை தப்பி
மீண்டும் குடுவைக்குள் நான்
இறுக்கம் திணறடிக்கிறது
வெளியில்லை
உள்ளும்..



****
அழுதழுதலைபாய்ந்து
அணைத்த கையொடுங்கி
ஆவலாய் முலையுண்ணும்
குழந்தையின்
முதல் ’ம்’க்கும்
உண்டபிறகான
’ஹா’வுக்கும் ஈடாக
நன்றிக்கும்
நிறைவுக்குமான
வார்த்தைகள்
எந்த மொழியிலும் இல்லை

***

Monday, July 18, 2011

விடியலற்ற விடியல்

’அம்மா இவனப் பாரும்மாஆஆ!, போய்ட்டு வரேம்மா, எம்மா கீரம்மா’
எங்கோ தொலைதூரத்தில் கேட்பதாக 
மூளையின் எத்தனையோ மில்லியன் செல்களில் உணர்வும், யோக நிலைக்கீடான ஸ்வப்னாவஸ்தி நிலையில் ‘எட்டாச்சி எழுந்திருங்கோ’ என்ற இடிக்குரலோடு பூகம்பத்தை நிகர்த்த உலுக்கலில் உடலை விட்டு வாக்கிங் போன ஆவி அவசரகதியில் திரும்பி கால்மாடு தலைமாடாக விரவி திடுக்கிட்டெழுந்து, பனி முகடும், பசும்புல் வெளியும் தேடிய கண்களுக்கு கான்க்ரீட்டை விருந்தாக்கி, தவக்கோலக் கண்கள்போல் அரை மூடிய அரவிந்த நயனத்தோடு நழுவிய வேட்டியை இறுகக்கட்டி, போர்வை மடித்து, காலணியணிந்து கழிப்பறை நுழையுமுன் கணினிக்கு உயிரூட்டி, கட்டை ப்ரஷ்ஷில் கால் இன்ச் பேஸ்ட் பிதுக்கி வலப்புறம் நாலு இடப்புறம் நாலு உள்ளால் மீண்டும் என்று தேய்த்துறக்கம் கழுவி, கால் செம்பு தண்ணீரும், காப்பி என்ற பெயரில் சுடுநீரும் அருந்தி, தினத்தந்தி பிரித்த வினையில் கலங்கிய வயிறு மேற்புறமாகப் பொங்குமோ என்ற பயத்தில் கழிப்பறை ஓடி, ஷேவிங் வேண்டுமா வேண்டாமா என்ற பட்டிமன்றம் நடத்தி, வரட்டிழுப்பாவது இழுத்து,ஷவர் திருப்பி காக்காய் குளியல் போட்டு, மூன்று விரல் தொட்டு திறுநீரிழுத்து ஒரு நொடி கண்மூடி, உள்ளாடை மேலாடை கிடைத்ததை உருவியணிந்து, செல்லெடுத்து, கைக்குட்டை திணித்து, ஒபாமாவோ ஏன் மன்மோகனோ கூட நம்மிடம் ஆலோசனை கேட்டு மெயில் அனுப்பவில்லை என்று உறுதி செய்துகொண்டு சட்டென மூடி பட்டெனக் கிளம்புவதில் தொடங்குகிறது என் நாட்கள்.

Saturday, July 9, 2011

ஒரு எதிர் கவுஜயும் பொழிப்புரையும்.

கதிரின் 'உயிருக்குள் ஊட்டுவது’ கவிதையின் எதிர் கவுஜயும், பொழிப்புரையும்

எதிர் கவுஜ:
குடலுக்குள் ஊத்துவது

வெள்ளை க்ளாஸ் விளிம்பில்
அடங்காமல் பொங்கும் நுரையை
கழுத்தைச் சற்றே சாய்த்து நிறுத்தி
என் நாசி தேடும் பீர் வாசக்காற்றும்

என்னுள் வேர்விட்டு கிளை பரப்பி
சொட்டுச் சொட்டாய் நினைவு திருடி
வெண்ணுரையோடு என் சட்டையில்
அடர்த்தியாய் பூத்த சால்னாக் கரையும்

கண் சிமிட்டி சிமிட்டி
உதடுகளைச் சுழித்துப் பிசைந்து
காது வழியே கரைத்து ஊற்றும்
வசவுக் குளறல்களும்

என்னிடமிருந்து எனைப் பறித்து
விடை பெறும் தருணங்களில்
வலிக்காமல் அங்கங்கே உறைந்த
ரத்த காயங்களும் சிராய்ப்பும்

என்னுள் தளும்பும் சொற்கள் ஏராளம்
இருந்தும் எதுவும் முழுதாய் வரவில்லை
உள்ளுக்குள் போனது நீ என்பதாலும்
ஏத்திக் கொண்டது நான் என்பதாலும்.
---------------------------------------------------------------------------------

மூலக் கவிதையின் பொழிப்புரை.

(வெள்ளி தலைக் குளியலில்) - ஒன்னு ரெண்டு நரைக்கு டை அடிக்கப் போய் மொத்தமா வெளுத்து போச்சு. அதுக்கு நக்கல பாரு இந்த கொண்டை மண்டைக்கு.

(அடங்காமல் பறக்கும் முடியை கழுத்தோரம் காதோரம் கடத்திவிட்டு)
கொஞ்சம் வெயில்ல தலைய ஆத்த உடுறாய்ங்களா, பார்வை அப்புடி. வேற என்ன பண்ண?

(என் நாசிதேடும் உன் வாசக்காற்றும்)
கருமம் கருமம். இதுக்கு ஷாம்பூ வாசனை கூட தெரியல.

(என்னுள் வேர்விட்டு கிளைபரப்பி)
ம்கும். இவரு நட்டு வச்சி ஒரம் போட்டு தண்ணி ஊத்துனாரு

(சொட்டுச்சொட்டாய் உயிர்திருடி)
அட பக்கி. சரக்குன்னா உயிராம். இத நாங்க சொட்டு சொட்டா வேற திருடிட்டமாம்.

(வெண்வரிகளோடு)
ஜொல்லு ஊத்தறத சொல்ற ஸ்டைலப் பாரு

(உன் புடவையில் அடர்த்தியாய்ப் பூத்த செம்பருத்திப்பூக்களும்)
அட சாளேஸ்வரக் கண்ணா. கோவிலுக்கு போக செம்பருத்தி பறிச்சி முந்தானைல வச்சிருந்தா பொடவைல செம்பருத்தி பூக்குதாம்ல.

(கண் சிமிட்டிச் சிமிட்டி)
கண்ணு தொறக்க முடியாம மப்பு

(உதடுகளைச் சுழித்துப்பிசைந்து)
உள்ள போன சரக்கு அப்புடி

(காதுவழியே கரைத்து ஊற்றும் வார்த்தைக் கவிதைகளும்)
கண்றாவி கொழ கொழன்னு குழறி பேசுறதுக்கு பேரு கவிதையாம்.

(என்னிடமிருந்து என்னைப்பறித்து விடைபெறும் தருணங்களில்)
ரெண்டாளா இருந்தாராம். தெளிஞ்சிருச்சாம்

(வலிக்காமல் செல்லமாய்க் கிள்ளும்)
கன்னத்த கொத்தா புடிச்சி ரப்பர் வாயி மாதிரி இழுத்துட்டு போனத சொல்றாரு. வலிக்கலையாம். பெரிய வடிவேலு

(நகத்தில் பிறக்கும் பிறைவடிவமும்)
அடப்பாவி!! ஆணில உராசி கிழிஞ்சி போச்சுன்னு அரசு ஆஸ்பத்திரில தையல் போட்டது எனக்கில்ல தெரியும்.

(என்னுள் தளும்பும் சொற்கள் ஏராளம்)
ஆடாம ஸ்டெடியா நில்லுங்ணா. தளும்பாம இருக்கும்.

(இருந்தும் எதுவும் அலுக்கவில்லை)
ஊத்திக்கினு உருளாதவன் எங்கருக்கான்? (சண்டைல கிழியாத சட்டை மாதிரி)

(உயிருக்குள் ஊட்டுவது நீ என்பதாலும்)
திமிரப்பாரு. வெறும் வகுத்தோட கெடந்தா அல்சர் வருமேன்னு சோறு ஊட்டுனது தப்புடியோ.

(ஏந்திக்கொள்வது நான் என்பதாலும்)
இதுக்குதான் வெளியவே குந்த வச்சி தட்டுல போட்டு குடுக்கறது.

Friday, July 1, 2011

கேரக்டர் மீனாட்சி.


அறைக்கு வெளியே சிவப்பு விளக்கைப் போட்டுவிட்டு மதிய உணவிற்குப் பின் சாய்ந்திருந்தேன். மெதுவே கதவைத் தட்டும் ஓசை. சற்றே திறந்த கதவிடுக்கில் எட்டிப் பார்த்தது ஒரு பெண் முகம். மலர மலர தொந்தரவு பண்ணிட்டேனாடா கோந்தே! ஒன்னாம்படையாளப் பார்த்தேன். இங்க இருக்கன்னு சொன்னா. பார்க்காம போக மனசு வரலை என்றபடி மூச்சிரைக்க வந்தார் மீனாட்சி மாமி. 

மீனாட்சியைப் பார்க்கும் போதெல்லாம் என் மனதிற்குள் பெரிய போராட்டமே நடக்கும். பேசும்போதே ஒரு குற்ற உணர்ச்சி தொத்திக் கொள்ளும். இந்த வாத்ஸல்யம் காட்டக் கூடியவனா நான் என்ற குறுகுறுப்பு வந்தடையும்.

14 வயதில் அந்தத் தெருவில் குடி போனபோது ஒரு மாமிச மலை போல் வீட்டின் வாசற்படியருகில் உட்கார்ந்த மாமி கேட்டார், “புதுசா வந்துருக்கேளாடா அம்பி?”. அம்மாவிடம் வந்து சொன்னபோது நான் வைத்த பெயர் குண்டு மாமி. குண்டு மாமியின் பெரிய மகள் மீனாட்சி மாமி. அப்பாவின் அலுவலகத்தின் இன்னோரு ப்ரான்ச்சில் டைப்பிஸ்டாக இருந்தார். 4 வயதிலும் ஒரு வயதிலும் மகள்கள். அவர் தங்கை கல்யாணி என் பள்ளியில் ஒரே வகுப்பு. இரண்டு தம்பிகள். இரண்டாவது மகள் பிறந்து ஒரு வாரத்தில் மார்பில் வலி வர தனக்கு இதயக் கோளாறு இருப்பது தெரியவந்தது மீனாட்சிக்கு.

திருவல்லிக்கேணியில்தான் புகுந்தவீடு. கூட்டுக் குடும்பம். மாமியார், விதவை நாத்தனார், அவர் மகன், கலியாணமாகாத இன்னோரு நாத்தனார். கணவரும் ரயில்வேதான். குழந்தை பிறந்ததும் வந்து பார்த்துப் போனவர். புண்ணியாசனத்துக்கூட வரவில்லை. இருதய நோய். ஹார்ட் ஆபரேஷன் செய்ய வேண்டும். குழந்தை பிறந்திருப்பதால் 3 மாதம் கழித்துச் செய்யலாம் என்பது மருத்துவரின் முடிவு.

எங்கே வந்தால் ஒரு வேளை ஆபரேஷனில் போய்ச் சேர்ந்துவிட்டால் இரண்டு பெண்களைத் தலையில் கட்டிவிடுவார்கள் என்று நினைத்தாரோ அல்லது அம்மாவின், நாத்தனாரின் அட்வைஸோ தெரியவில்லை. வரவேயில்லை. பெற்றோர் போய் அழைத்தபோது சீக்காளிப் பெண்ணைத் தலையில் கட்டிவிட்டதாக மாமியாரும் நாத்தனாரும் போட்ட கூப்பாட்டில் நொறுங்கிப் போய் வந்தார்கள் பெற்றவர்கள். 

மகளிடம் சொல்லவும் முடியாமல், அறுவைச்சிகிச்சைக்கு முடிவெடுக்கவும் முடியாமல் தவித்த தவிப்பு யார் அறியக்கூடும். வெள்ளந்தியான மனுஷியானாலும் கட்டினவளுக்குத் தெரியாதா கணவனின் அந்தரங்கம்? உறங்க முடியாத ஒரு இரவில் அப்பாவைக் கேட்டாளாம். நோவாளிப் பொண்ணு வேணாம்னு சொல்லிட்டாளாப்பா? விடுப்பா, பகவான் இருக்கான். போய்ச் சேரணும்னு விதியிருந்தா ஒனக்கு காலம் கெட்ட காலத்துல இன்னும் ரெண்டு கொழந்தைன்னு வளர்த்து விடுப்பா. எப்படியும் என் பென்ஷன் வரும். அதுக்காவது யாராவது வளர்த்து விடுவா என்று பொட்டுக் கண்ணீரில்லாமல் பேசறா மாமி என்று குண்டு மாமி அழுதாள். 

ஆபரேஷன் முடிந்து நல்லபடியாக வேலைக்குச் சேர்ந்து குழந்தைகளே வாழ்க்கையாய் இருந்தாள். போய்விடும், வேறு பெண்ணைக் கட்டலாம் என்று காத்திருந்த ஏமாற்றமோ, அம்மா மண்டையைப் போட்டதும் சொந்த வீட்டை விற்று பங்கு வேண்டும் என்று மல்லுக் கட்டிய சகோதரி மேல் வெறுப்போ, ஏழு வருடங்களுக்குப் பிறகு தேடிவந்தான் புருஷன்.

தனியாகப் போகும் வரை வீட்டோடு இருக்கவும் சம்மதம் என்று வந்தபோது இத்தனை வருடங்களுக்குப் பிறகாவது மகளின் வாழ்க்கையில் வசந்தம் என்ற பூரிப்பில் இருந்தனர் பெற்றவர்கள். இரண்டு மாதம்தான். சாயம் வெளுத்தது. ரேஸில் கடன். சம்பளம் வட்டிக்குப் போதவில்லை. பிரிந்த சோகத்தை சேர்த்து வைத்து கொட்டிய பிரியத்தில், மீனாட்சி மீண்டும் கர்ப்பமானாள். தாலி ஒன்றை விட்டு மொத்த நகையும் அடமானத்துக்கு என்று கொண்டு சென்றவன் சென்றவன்தான்.

ஏமாந்தோம் என்பதை விட, காலம் கெட்ட காலத்தில் வயிற்றில் பிள்ளையோடு என்ன செய்வாள் மீனாட்சி? இதய அறுவைச்சிகிச்சை ஆன உடம்பு. முதிர்ந்த வயது கர்ப்பம். பிரசவிப்பதில் ரிஸ்க் கம்மி என்பது டாக்டர்களின் அறிவுரை. அதையும் தாங்கியது அந்த இதயம்.

பிள்ளை பிறந்தான். ஒற்றை ஃபோனில், ஒரு ரூபாய் காசில் புருஷனைக் காலரைப் பிடித்து உலுக்கலாம். அதிகாரிகளிடம் முறையிடலாம். டைவர்ஸ் கேஸ் போடலாம். எதற்கும் தயாரில்லை அவள். பொறுப்பான பிள்ளைகள். நன்கு படித்தார்கள். மூத்தவளுக்கு போர்ட் ட்ரஸ்டில் வேலை கிடைத்தது. அடுத்தவள் ப்ளஸ் ஒன் போனாள். பையனும் பள்ளியில். 

கடன் கட்ட வேறு வழியின்றி வீட்டை விற்று அக்காளின் அடாவடிக்கு மீதியைக் கொடுத்து திருவல்லிக்கேணி மேன்ஷனில் ரூமில் இருந்தவருக்கு பெண்டாட்டி பிள்ளைகள் கவனம் வந்தது. சிகரட்டின் பரிசாக டி.பி.யும் வந்து போயிருந்தது. வீடு தேடி வந்து அழுதார். நகைக்காக வந்திருந்தா சாரி! பொண்ணு கல்யாணத்துக்கு நிக்கறா. அவ சம்பளத்த சேர்த்து வச்சி கரையேத்தணும். அவ சம்பளத்துக்கும் சேர்த்து ஆசைப்பட்டு வந்திருந்தா இப்படியே வெளியே போங்கோ என்று அவ்வளவு நிதானமாக பேசினாள் மீனாட்சி.

என்னவானாலும் பெண்தானே. நொறுங்கிப் போய் அழுதவனை உள்ளே போங்கோ என்றாள். கஷ்டகாலம் தொலைந்தது என்று விட்டால் கடவுள் இருப்பதை யார் நினைப்பார்? இரண்டாவது மகள் ப்ளஸ் டூ வந்தும் வயதுக்கு வரவில்லை. எத்தனை ஹார்மோன் ஊசி, மருந்து எதுவும் பலிக்காமல் இன்னோரு குண்டுமாமியாக வளர்ந்தாள் அவள். மூத்த மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடந்தாலும் இவள் பெரிய பாரமாகிவிட்டாள். இரண்டு வருடத்தில் கணவனும் போய்ச் சேர்ந்தான். கருணை அடிப்படையில் சின்னவளுக்கு வேலை கிடைத்தது. 

இப்படி ஒரு சூழலில்தான் என்னைத் தேடி வந்தார். கணவனின் பென்ஷனோடு கொடுத்த அகவிலைப்படி தவறு என்று பெரிய தொகையை பிடித்தம் செய்து வந்தார்கள். அதை எதிர்த்து மனு கொண்டு வந்தார். பிடித்தம் செய்யக் கூடாது என்று ஆணை வழங்கும் இடத்தில் நான். எத்தனை நம்பிக்கை இருந்திருக்கும்? எத்தனை சுலபமான வேலை என்று வந்திருக்கக் கூடும்.

நான் பெரிய ரூல் புடுங்கி என்று பெயரெடுத்திருந்த காலம் அது. தேவையே இன்றி வக்கீல் குமாஸ்தாபோல் சுப்ரீம் கோர்ட் கேஸ்களைப் படித்து பெட்டிஷன் நம்பர், யார் வாதி, என்ன ஜட்ஜ்மெண்ட் என்று தூக்கத்தில் எழுப்பிக் கேட்டலும் சொல்லும் திமிர். என் மேதாவித்தனத்தை மீனாட்சி மாமியிடம் காட்டவேண்டிய நிர்ப்பந்தம். என் வேலைக்கு உண்மையாய் இருப்பதா, மீனாட்சி மாமியின் கஷ்டம் உணர்ந்து கண்ணடைத்துக் கொள்வதா என்ற ஒரு நிலை. 

ஒரு சுப்ரீம் கோர்ட் ஆணையின் அடிப்படையில் ரூல் இருந்தது. மனைவி தன் முயற்சியால் வேலை தேடி அதே மத்திய அரசில் பணியில் இருந்தால், அகவிலைப் படி கொடுக்கலாம். கணவன் மூலமாக கருணை அடிப்படையில் வேலை கொடுத்திருந்தால் கொடுக்கக் கூடாது என்று இருந்தது. மகளுக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுத்தது எனக்குத் தெரியும். என் இடத்தில் வேறு யாராவது இருந்தால் இந்தக் கேள்வியே வந்திருக்காது. ஆனாலும், ஆவணங்களில் வேலை கொடுத்த விபரங்கள் இருக்கும்.

தவித்துத் தவித்து ‘சாரி மாமி! எனக்கு வேற வழி தெரியலை. என் கடமை எனக்கிருக்கில்லையா? ரூலை மறைக்க முடியாது. அதே நேரம் எனக்குத் தெரியும் என்றும் சொல்லமாட்டேன். வேறு யாருக்கும் வேலை பெறவில்லை என்று ஒரு சர்டிஃபிகேட் இருந்தால் கண்ணை மூடிக் கொள்கிறேன். இல்லையென்றால் ஒரு கேஸ் போட்டு மேஜர் மகளுக்கு வேலை கொடுத்தால் என் பென்ஷனில் எப்படிப் பிடிக்கலாம் என்று வாதாடலாம்’ என்று சொன்னபோது, கொஞ்சமும் சுணங்காமல், ‘புரியறதுடா கோந்தே. இனிமே கேஸ் போட்டு எப்போ வரும் அது? விதின்னு இருக்க வேண்டியதுதான்’ என்று தளர்ந்து போனபோது என் மேல் எனக்கே கோபம் வந்தது.

வேண்டிய யாருக்கோ உதவுவதற்கு, கொடுக்கக் கூடாது என்று கேஸ் போட்டு வென்ற அரசாங்கம், கருணை அடிப்படையில் வேலை கொடுத்திருந்தாலும் அகவிலைப்படி கொடுக்கலாம் என்று பல்டி அடித்து ஆர்டர் வந்தபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உடனடியாக அவர் மகளை அழைத்து அவரை வரவழைத்து, அப்ளிகேஷன் வாங்கி உத்தரவைக் கொடுத்தபோது அதே வாஞ்சையுடன் ‘நன்னாருப்பேடா கோந்தே. எத்தனையோ வேலை நடுவில இதப் பண்ணிக் கொடுத்தியே’ என்று வாழ்த்திவளை என்ன சொல்ல?

ஆயிற்று பதினைந்து வருடங்களுக்கு மேல். இப்போது மருத்துவப்படி நிறுத்தி விட்டார்கள் என்று மனு கொண்டு வந்திருந்தாள். கொடுத்திருக்கேன். நிறைய வேலை இருக்காம். ரெண்டு வாரம் கழித்து வரச் சொன்னார்கள். உன்னைப் பார்த்துட்டு போலாம்னு வந்தேன். பையனுக்கு கலியாணம் ஆயிடுத்து. ஒன் கொழந்தேள் என்ன பண்றா என்று பேசிக் கொண்டிருந்தார். அவருக்கே தெரியாமல், ப்யூன் மூலம் சிட்டை எழுதி அனுப்பி, ஆர்டர் காப்பியைக் கொடுத்தபோது கண்கள் விரிய எப்படிடா கோந்தே என்ற போது, ஒரு பிராயச்சித்தம் செய்த நிம்மதி.