அலை அலையாய் ஜெல் போட்டு வாரினாற்போல் ஹேர் ஸ்டைல். மடிப்புக் கலையாத உடைகள். நேர்த்தியாக டக் செய்து கண்ணியமாக இருப்பார். நுனி நாக்கில் சரளமான ஆங்கிலம். கொஞ்சம் ஃப்ரெஞ்ச், ஜெர்மன்,ஹிந்தி பேசுவார். படித்தது ஒன்பதாம் வகுப்பு. தந்தையார் மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தவர். நல்ல உத்தியோகம். ஒரு பெண்ணும் பையனும் உண்டு.
அலுவலகத்தில் வேலை மட்டும் செய்யமாட்டார். முந்தைய இடுகையில் பையன் அடிக்க வந்தான் என்று அழுதவரை நினைவிருக்கும். அவரின் கீழ் பணி புரிந்தபோது ஒரு நாள் அவரை, அலுவலகத்தில் ஓட ஓட விரட்டி அடித்தவன். காரணம், தினமும் கையெழுத்துப் போட்டுவிட்டு வேலை செய்யாமல், சீட்டிலும் இல்லாமல் இருப்பதற்கான காரணம் கேட்ட சார்ஜ் மெமோ.
மதியம் 4 மணிக்கு மேல், கண்ணெல்லாம் சிவந்து, தள்ளாடி, அலுவலக வளாகத்தில் விழுந்து கிடப்பார். யாராவது தெரிந்தவர்கள் பாவம் பார்த்து ரிக்ஷாவில் ஏற்றி அனுப்பி வைப்பார்கள். அடுத்த நாள் காலை பார்க்கும்போது அவரா இவர் எனத் தோன்றும். தினமும் குடிக்க காசு வேண்டுமே?
சிம்பிள்! செண்ட்ரல் ஸ்டேஷனுக்குள் வளைய வருவார். யாராவது வெளிநாட்டவர்கள் இருப்பார்கள். மெதுவே போய் பேச்சுக் கொடுத்து, டிக்கட் வாங்கும் முறை, அதற்கான கன்செஷன் என்று ஏதோ கதை சொல்லி, அதற்கு அலுவலகம் வாருங்கள், ஒரு விண்ணப்பம் நிரப்பிக் கொடுத்து, பாஸ்போர்ட் காண்பித்தால் குறிப்பெழுதிக் கொடுப்பார்கள். 5 டாலர் கட்டணம், அல்லது 10 டாலர் கட்டணம் என்று ஏதோ சொல்லி அழைத்து வருவார்.
உருவத்தையும், பண்பான சரளமான பேச்சையும் கேட்டால் வெள்ளையனில் மட்டும் கேனையன் இல்லாமலா போய் விடுவான்? அலுவலகமோ கோவில் மாதிரி 4 வெளி வாசல், எண்ணற்ற உள்வாசல் கொண்டது. வெளிநாட்டுப் பயணிகள் என்று ஒரு போர்ட் போட்டு தகவலுக்காக ஒரு சோஃபா இருக்கும். அங்கே அமர்த்தி, வெள்ளைத் தாளில் தானே எழுதி, கையெழுத்து வாங்கி, பாஸ்போர்ட் மற்றும் ஐந்தோ பத்தோ டாலருடன், இதோ வருகிறேன் என்று கூறி ஒரு புறம் நுழைந்து மறுபுறம் போய்விடுவார்.
மணிக்கணக்கில் காத்திருந்து, மிரண்டு போய் விசாரித்தால் அப்படி எதுவுமில்லை என்பது தெரியவரும். பணம் போனால் பரவாயில்லை பாஸ்போர்ட் கதி என்ன என்று கலங்கி நிற்பவர்களுக்கு ஆறுதலாக, வழி கூறி, பக்கத்திலிருக்கும் போஸ்டல் சார்ட்டிங் ஆஃபீஸில் போய் கேளுங்கள். அங்கு போஸ்ட் பாக்ஸில் போட்டுவிட்டு போயிருப்பான். யாரும் வராவிட்டால் அவர்கள் எம்பஸியில் சேர்த்துவிடுவார்கள் என்று அனுப்புவார்கள்.
அடித்த பணத்தை ஹவாலா பார்டிகளிடம் மாற்றி நண்பர்களோடு குடித்து கும்மாளமடித்துவிட்டு வந்து விழுந்திருப்பார். ஒரு முறை விடுமுறை நாளில் முந்தைய நாள் வேட்டையில் குடித்தது போதாமல், அலுவலகத்தில் பழைய பேப்பர்கள் கட்டி வைத்திருந்தது கவனம் வர, நண்பரின் டாக்ஸியில் இன்னோரு கூட்டுக்காரனோடு வந்து குப்பை மூட்டைகளை ஏற்றியிருக்கிறார்.
செக்யூரிட்டி வந்து கேட்ட போது, தன்னுடைய அலுவலக அடையாள அட்டை, தன் அலுவலக குப்பைகள் எனக்காட்டி, அதற்காக நியமிக்கப் பட்ட அலுவலகத்தில் அதைப் போட எடுத்துச் செல்வதாக கூறியிருக்கிறார். போதாதகாலம், அன்று அந்த அலுவலகத்துக்கும் விடுமுறை என்பது மறந்துவிட்டிருந்தது. டாக்ஸியை சீஸ் செய்து, இவர்மேல் கேஸ் போட்டு இவரும் சஸ்பெண்ட் ஆனார்.
அசரவில்லை மனுஷன். முழு நேர ஃப்ராடும், முழு நேரக்குடியுமாக அலப்பறை செய்து கொண்டு, கேஸ் நாளில் பவ்யமாக அய்யா, நாங்கள் கடத்தியதாக சொன்ன பொருளின் மதிப்பீடு 150ரூ. பூந்தமல்லியில் ஒரு நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு வரும் வழியில், முந்திய நாள் விட்டுப்போன பையை எடுக்கப் போனபோது பொய்கேஸ் போட்டுவிட்டார்கள். டாக்ஸியில் மீட்டர் பாருங்கள். டாக்ஸி வாடகை 250க்கும் மேல் ஆகியிருந்தது. 150ரூ மதிப்புள்ள குப்பைக்கா 250ரூ செலவு செய்து டாக்ஸியில் வருவோம் என்று போட்ட போட்டில் வடை போச்சே ஆனது செக்யூரிட்டி.
காலம் இப்படியேவா போய்விடும்? ஏதோ ஒரு கேசில் மாட்டி வேலை போய், மனைவி குழந்தைகளையும் விட்டுப் போய்விட்டதாக ஒரு நாள் போதையில் அழுது புலம்பினார். ஒரு முறை கையில் காசிருந்த ஒரு நாளில் போதையில் குழந்தைகளை செங்கல்பட்டில் ஏதோ ஒரு அநாதை ஆசிரமத்தில் விட்டு கையிலிருந்த காசை கொடுத்துவிட்டு சென்னை திரும்பி விட்டாராம்.
போதை இறங்கிவிட அடுத்த வண்டியில் போய் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு காசையும் சண்டை போட்டு வாங்கிக் கொண்டு வந்து குழந்தைகளை ஸ்டேஷனில் நிராதரவாய் விட்டு விழுந்து கிடந்ததாக அவர் நண்பர் சொல்லிக் கொண்டிருந்தார்.
சில வருடங்கள் கழித்து அலுவலக கேண்டீனில் காலை உணவு, மதிய உணவு அருந்துபவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்க யாரோ ஒருவரிடம் போய், ரொம்ப பசிக்குது. அந்த மிச்சம் நான் சாப்பிடவா என்று கேட்பார். காசு கொடுத்தால், அவரிடம் நான் பிச்சை எடுக்கவில்லை, நட்பு உரிமையில்தான் கேட்டேன் என்று சண்டைக்கு போவார். அப்புறம் எங்கோ காணாமலே போனார்.