Friday, April 22, 2011

கேரக்டர் - ராவணதாஸ்

1975. எப்போதடா ஜூன் வரும், 18 வயது நிறையும், கருணை அடிப்படையில் வேலைக்கு மனு செய்யலாம் என்று காத்திருந்த காலம். அம்புட்டு சீக்கிரமாவா உன்னோடான என் விளையாட்டு முடிஞ்சிடும் என்று விதி சதி செய்தது. எமர்ஜன்சி அறிவிக்கப்பட்டது. வேலைக்கு ஆள் எடுப்பதற்குத் தடை என்ற இடி வந்து விழுந்தது. கலங்கிப் போய் அப்பாவின் அலுவலகத்தில் போய் அவர் நண்பர்களிடம் வழி கேட்டபோது பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, தலைமை அதிகாரியைப் போய்ப் பார். கலாசியோ, ப்யூனோ, ரயில்வே ஸ்டேஷனில் தண்ணீர் ஊற்றுகிற வேலையோ, ஏதோ ஒன்றுக்கு வழியிருக்கும் என்ற ஆலோசனை கிடைத்தது. 

தயங்கித் தயங்கி அந்தப் பெரிய அறையில், யாரோ சொல்ல கலாசி வேலையாவது தரும்படி மனுவை எடுத்துக் கொண்டு கால்கள் தொய்ய ஒரு ஒல்லியான குள்ள உருவம் கலாசி வேலைக்கு மனுவை நீட்டினால் அந்த அதிகாரிதான் என்ன செய்வார்? நமட்டுச் சிரிப்போடு 7 அடிக்கு 5 அடி டேபிளை அறை மூலைக்கு இழுத்துப் போடமுடியுமா என்று கேட்டபோது நாக்கு அண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.  ‘சரி, நீ போப்பா கடிதம் வரும்’ என்றபோது ஆவலோடு காத்திருக்கும் அம்மாவுக்கு என்ன சொல்லப் போகிறேன் என்ற எண்ணமே நிறைந்திருந்தது. அதிகம் காக்க விடாமல் அக்டோபரில் என் பிறந்தநாள் அன்று(ஷ்ஷ்ஷ் அக்டோபரில் எப்படி என்று எல்லாம் கேக்கப்படாது) பரிசாக கேஷியருக்கு பணப்பெட்டி தூக்கும் ப்யூனாக உத்தியோக நியமனம் வந்தது.

அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரோடு போய் வேலையில் சேரப் போய் எல்லாம் முடிந்து வேலையில் சேர்ந்தபோது பெட்டி தூக்க வேண்டாம், தபால் வாங்கும் பிரிவில் வேலை பார் என்று சொன்னார்கள். என்னைப் போன்றே நிறையப் பேர்கள் இருந்தாலும், அநேகம் பேரின் முகத்தில் ஒரு அசூயையும், எங்கு திரும்பினாலும் என்ன படித்திருக்கிறாய் என்ற கேள்வியுமாகவே இருந்தது. இரண்டாவது நாளே அதற்கான காரணமும் புரிந்தது. 


பி.எஸ்.ஸி ஜூலாஜியும், பி.ஏ. எகனாமிக்சும், பி.எஸ்.ஸி ஸ்டாடிஸ்டிக்சும் யாரோ ஒரு அதிகாரிக்கு ப்யூனாய், ஃப்ளாஸ்கில் டீ வாங்கிக் கொண்டும், டீ கப்பும், சாப்பிட்ட தட்டு கழுவும் வேலையிலும், ஆஃப்டர் ஆல் ஒரு பி.யூ.சி. தபால் பிரிவில் இருப்பதும் அவமானமாக உணரப்பட்டது. எதிர்ப்பதற்கு சுலபமாக ஒரு காரணமும் கிடைத்தது. போஸ்டிங் போடுபவரும், நானும் பார்ப்பனர் என்ற காரணம் கிடைத்தது. எதிர்ப்பதற்கு ஜாதி ஒன்று போதாதா என்ன?

இருப்பதிலேயே சீனியர், தைரியமாக இதையே காரணம் சொல்லிக் கேட்டவுடன் ஆடித்தான் போய்விட்டார் அதிகாரி. உடனடியாக அவர் இடத்தில் என்னை வேலைப் பார்க்கச் சொல்லி உத்தரவாயிற்று. ரொம்பவும் பெருமையாக ‘தைரியமாக கேட்டாதான் நியாயம் கிடைக்கும்’ என்று என்னை அழைத்துக் கொண்டு போய் அந்த அதிகாரியிடம் இன்றிலிருந்து இவந்தான் உங்களுக்கு ப்யூன். நான் எல்லாம் சொல்லிக் கொடுத்துவிடுகிறேன் என்று அறிமுகம் செய்து வைத்தான்.

கனிவான முகம். ஐந்தரை அடிக்கு மேல் உயரம். அகன்ற மார்பு. திரண்ட தோள்கள். மீசையின்றி நட்பாய்ப் புன்னகைக்கும் உதடுகள். பசுவைப் போல் கருணை ததும்பும்  கண்கள். காதை மூடிய, நடுவில் வகிடு தெரியாமல் பிரித்த தலை முடி ஸ்டைல். நட்பாய்ப் புன்னகைத்து, பெயர் கேட்டுவிட்டு தன் வேலையில் மூழ்கிவிட்டார். 


என் சீனியருக்கோ வாய் கொள்ளாச் சிரிப்பு. கப் எங்கே கழுவ வேண்டும், சாப்பாடு எங்கே இருந்து கொண்டு வர வேண்டும். மிகுந்திருக்கும் சாப்பாட்டை கேரியரில் போட்டு சாப்பாடு கொண்டு வரும் பெண்மணியிடம் எப்போது கொண்டு போய் கொடுக்க வேண்டும் என்ற எல்லா இன்ஸ்ட்ரக்‌ஷனும் கொடுத்துவிட்டு விடை பெற்றார்.

தான் சாப்பிடப் போகுமுன், என்னை விசாரித்து, சாப்பிட்டுவிட்டு வரச் சொல்லி ராவணதாஸ் சாப்பிடப் போனார். அள்ளி அடைத்துக் கொண்டு, அவர் சாப்பிட்டு முடிப்பதற்காகக் காத்திருந்தேன். பெல் அடித்து, ’சாப்பிட்டாயிற்று, எல்லாம் சுத்தம் செய்துவிட்டு கேரியரைக் கொடுத்துவிடலாம்’ என்றார். அவர் சாப்பிடும் மறைவுக்குப் போய் பார்த்தபோது குழப்பம் வந்து உட்கார்ந்து கொண்டது. அங்கிருந்தவற்றில் முட்டைமட்டுமே எனக்கு அடையாளம் தெரியும். மீனிலும், கறியிலும் எது எறிய வேண்டியது? எதை திரும்ப டிஃபன் கேரியரில் வைக்க வேண்டியது என்பது ஒன்றும் பிடிபடவில்லை.

திரும்பவும் சீனியரிடம் ஓடி, ‘சாமி எனக்கு எது என்னாண்ணு தெரியல. கொஞ்சம் வந்து சொல்லிக் கொடு’ என்று நின்றேன். அவனுக்கோ படு குஷி. என்னையும் அழைத்துக் கொண்டு, உள் நுழைந்து, ‘அய்யரு பையன். எது என்னான்னு தெரியலை. சொல்லிக் கொடுக்கிறேன்’ என்றவனை பதறித் தடுத்தார். இன்னைக்கு நீயே எல்லாம் க்ளீன் பண்ணி கொடுத்துவிடு என்றவர் ‘சாரி! தம்பி. சைவம்னு சொல்லியிருக்கலாமே? நீங்க போங்க’ என்றவர் சீனியரிடம் என் அதிகாரியைக் கூப்பிடச் சொன்னதும் அடி வயிறு கலங்கியது.

சீனியருக்கோ ‘சிக்கினாண்டா சின்ராசு’ என்ற களிப்பு. என் அதிகாரியிடம் போய் ’ஐயா கூப்டுறாரு. இவன ப்ளேட் எடுக்கச் சொன்னா என்னைக் கூப்பிட்டான். ஒன்னும் தெரியலை’ என்று மொட்டையாக ஒரு பிட்டைப் போட்டு பெருமையாய் என்னைப் பார்த்தான். பயத்தில் கலங்கிப் போய் தின்ன சோறு வெளியே வந்துவிடுவேன் என்று பயம்காட்ட, ‘என்னடா பண்ணித் தொலஞ்ச?’ என்ற அதிகாரியின் கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் நின்றேன்.  வெற்றி வீரனாய் சீனியரும், பூசாரியாக அதிகாரியும், பலியாடாக இன்னமும் குறுகி நடுங்கி நானும் போய் நின்றோம்.

மிகவும் சாந்தமாக ‘அந்தப் பையன் சைவம்னு உங்களுக்கு தெரியுமா?’ என்றார்.

’தெரியும் சார். ப்ராமின் பாய். வேலைக்குன்னு வந்தப்புறம் அதெல்லாம் பார்த்தா முடியுமா? புதுசு சார். பழகிக்கணும்’ என்று சொன்னவரை ஒரு நிமிடம் அமைதியாகப் பார்த்தார்.

‘சாரிங்க பத்மநாபன். நாம எல்லாரும் இந்த வயத்துக்காகதான் வேலை பார்க்கிறோம். அவருக்குப் பழக்கமில்லாத ஒன்னை அவர் செய்ய நேரிடும்னா அது பழகும்னாலும் மனசு வருத்தம் இருக்கும். எனக்கு அப்படி யாரையும் வருத்தி சாப்பிட அவசியமில்லை. என் கூட உட்கார்ந்து உங்களால இயல்பா சாப்பிட முடியுமா? அவரு அடிமை இல்லைங்க என்றவர், என்ன தம்பி படிச்சிருக்கீங்க’ என்றார். 

அழமாட்டாக் குறையாக, ‘சார்! எனக்கு எது என்னாண்ணு தெரியாம கேட்டுட்டேன் சார். தப்புன்னா மன்னிச்சிருங்க சார். பழகிக்குவேன் சார்’ என்று சொல்லும்போதே இதோ அழுதுவிடுவேன் போல் ஆகிவிட்டேன். சட்டென்று எழுந்தவர், தோளை அழுத்தி, ’என்ன படிச்சிருக்கீங்க தம்பி’ என்றார்.

‘பி.யூ.சி. சார். மூனு டிஸ்டிங்க்‌ஷன் சார்’ என்று சொல்லி வாய் மூடுமுன், அந்த சாந்தமான முகத்தில் ஒரு சிடு சிடுப்பு. ’யூஸ் ஹிம் ப்ராபர்லி ஐ சே. க்ளெரிகல் போஸ்டுக்குதான் ஆளில்லாம இருக்குல்ல. இந்த மாதிரி பசங்களுக்கு சின்ன சின்ன வேலை கொடுத்து பழக்கலாம். டெஸ்பாட்ச்ல போடுங்க, என்றவர்  சீனியரைப் பார்த்து ‘இன்னைக்கு ஒரு நாள் க்ளீன் பண்ணிடுங்க. உங்களுக்கு விருப்பமில்லைன்னு தெரியுது. அதனால நீங்க இருக்கணும்னு சொல்லமாட்டேன். வேற யாராவது கிடைச்சா போடுங்க. இல்லாட்டி நானே பார்த்துக்கறேன்’ என்றார்.

இப்போது சீனியருக்கு நடுக்கம் தொற்றிக் கொண்டது. ’இல்லை சார். நானே இருக்கிறேன் சார்’ என்றவரை இடை மறித்து ‘எனக்கு கோவம் இல்லைங்க பாபு. விருப்பமில்லைன்னு தெரியும்போது நான் கட்டாயப் படுத்த விரும்பலை’, என்று அமர்ந்தார். ‘சாரிங்க தம்பி என்று மீண்டும் என் தோள் பிடித்தழுத்தி, ஆல் தி பெஸ்ட்’ என்று அனுப்பி வைத்தவர்தான் ராவணதாஸ்.

எளிமையென்றால் அப்படி ஒரு எளிமை. நேரம் தவறாமை. நேர்மை. அவரின் ஆங்கிலத்துக்காகவும், பண்புக்காகவுமே அந்தகாலத்து ஆட்கள் வெள்ளக்காரனுக்கப்புறம் இப்படி ஒரு மனுசன பார்த்ததில்லை என்று பெருமைபடச் சொல்லுவார்கள். பந்தாவாக ஆங்கிலத்தில் ஆரம்பித்த சக அதிகாரிகள் கூட ஆங்கிலத்தில் அவர் அளிக்கும் முதல் பதிலில் அப்பீட்டாகி தமிழுக்கோ இந்திக்கோ தாவி விடுவார்கள். நடையா அது? நிதானமாக ஆனால் ஒரு சிங்கத்தின் நடைபோல் அப்படி ஒரு கம்பீரம்.

பாரிச வாயு வந்த தகப்பனார். தன் வீட்டில் பணி செய்ய ஒரு ப்யூன் இருந்தபோதும், காலையில் எழுப்பி குளிப்பாட்டுவது முதல், பத்திரிகை படித்து செய்தி சொல்லி, உணவூட்டி, மாலை பங்களா லானில் வீல் சேரில் சுற்றி வந்து, திரும்பவும் குளிப்பதோ உடல் துடைப்பதோ கைப்படச் செய்து, இரவு உணவு கொடுத்து, டி.வி. முன்னால் அமர்த்தி, தான் டென்னிஸ் உடையணிந்து கிளம்பும்போது மாலை மணி 7 என்று கடிகாரத்தைச் சரி செய்து கொள்ளலாம்.

அவருக்கு மாற்றல் வந்தபோது ‘நல்லது. அப்பா இருந்திருந்தா கஷ்டம்’ என்றாரே தவிர அதை மாற்றிக் கொள்ள முயற்சித்ததே இல்லை. அது அப்படி ஒன்றும் பெரிய காரியமும் இல்லை. காரணம் கடைசி வரியில். பல வருடங்களுக்குப் பிறகு திரும்பவும் அதற்கடுத்த பதவியில் அதே அலுவலகத்துக்கு வந்தபோது அத்தனை பேருக்கும் மகிழ்ச்சி.

ஒரு சக ஊழியர் பாவப்பட்டவர். ஒரு கிட்னி பழுதாகி மாற்றுக் கிட்னி பொருத்தப்பட்டவர். போதாததற்கு இடுப்பெலும்பு நொறுங்கும் நிலையில் இருந்ததால் ஏதோ ஒரு தொண்டார்வ நிறுவனத்தின் மூலம் ஸ்விட்ஜர்லாந்தில் செயற்கை இடுப்பு பொருத்தப்பட்டது. திரும்ப வந்தவருக்கு பொருத்தப்பட்ட கிட்னியும் செயலிழந்து போக ஒரு கிட்னிக்கே உன்னைப் பிடி என்னைப் பிடி என்றிருக்கும் நிலையில் ஒரு சகோதரன் கிட்னி தானம் அளித்தார். ஒவ்வாமை நீக்க மருந்து அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும். அதற்கான பணம் கூட வரவு செலவு திட்டத்தில் இருக்கும்.

அது ஒரு திரவ மருந்து. இளம் சூடான வென்னீரில் கலந்து அருந்த வேண்டும். அப்போது சிறுநீரக மாற்றுக்கு சி.எம்.சி தான் போக வேண்டும். அப்போது புதிதாக இந்த மருந்துக்கு பதில் மாத்திரை வந்திருந்ததாகக் கேள்விப்பட்டு, மனைவியுடன் வந்து பார்த்தார். அந்த மருந்துக்கு பதில், மாத்திரையாக வேண்டும் என்று கேட்கச் சொல்லி இருந்தார் மனைவியை. மிகவும் பொறுமையாக, ஆர்டர் கொடுக்கப்பட்டிருப்பதையும், மாத்திரையை விட மருந்து உடனடியாக உதவும் என்று சொன்னபோது, அந்தம்மிணி, அடிக்கடி கை தவறி உடைந்து விடுவதாக ஒரு காரணம் சொன்னார்.

முதன் முறையாக ராவணதாசிடம் கோவத்தைப் பார்க்க முடிந்தது. ’அது மருந்தில்லீங்க. ஒரு மனுசனோட உசிருன்னு கவனமிருந்தா அதெப்படிங்க கை தவறும்? மூணு மாசத்துக்கு முன்னாடி ஆர்டர் கொடுத்தாதான் நேரத்துக்கு மருந்து வந்து சேரும். என்ன பேசறீங்க’ என்றவுடன் ஓவென அழத்தொடங்கிவிட்டது அந்தம்மணி.

5 நிமிடம் அமைதியாக இருந்தார். மருத்துவ அதிகாரிக்கு ஃபோன் செய்தார். ஆர்டரைக் கேன்ஸல் செய்ய முடியுமா என்று உறுதி செய்து கொண்டார். அவரிடமே சி.எம்.சி. டாக்டர்களிடம் பேசி மாத்திரைக்கும் வழி செய்தார். அந்தம்மணி காலில் விழப்போனபோது தானும் சக மனிதந்தான் என்றும் காலில் விழவேண்டிய அவசியமென்னவென்றும் கோவப்பட்டார். அடுத்த நொடி சாந்தமாகி, உடம்பைப் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி, எந்த உதவி வேண்டுமானாலும் தயங்காமல் வரலாம் என்று சொன்னபோது அவருக்கேயான சாந்தமும் அமைதியும் நிறைந்திருந்தது.

பல கோடி ரூபாய் திட்டங்களையும், செயலாக்கத்தையும் கண்காணித்தவர். திறமையான அதிகாரி. எல்லாவற்றையும் விட உன்னதமான மனிதர். விதிக்கு இதைவிட விளையாட வேறு ஆள் கிடைப்பார்களா என்ன? ரிட்டையர் ஆன பிறகு, அந்த காலத்தில் மிகவும் பிரசித்தமாக இருந்த, தேக்கு, சந்தனம், எலுமிச்சை வகையறா முதலீட்டில் தானும் பார்ட்னராகி, கூட்டாளி ஓடிவிட கையிலிருந்து அனைவருக்கும் கொடுத்து முடித்தார். ஒருவருக்கும் குறைவில்லை.

ஏதோ ஒரு நாள் அவர் இறந்துபோன தகவல் வந்தது. கடைசி வரியில் காரணம் சொல்கிறேன் என்றேனே. திரு ராவணதாசின் மாமியார் மறைந்த பாராளுமன்ற உறுப்பினரும், தமிழக அமைச்சருமாயிருந்த திருமதி சத்தியவாணிமுத்து அவர்கள்.

Thursday, April 21, 2011

சாரா! சாரா!

கிட்டத்தட்ட எட்டு பத்து வருடங்கள் இருக்கும் என நினைக்கிறேன். சாரா என் வாழ்க்கையில் எப்படி நுழைந்தாள் என்பது இன்னமும் எனக்குப் புரியவில்லை. முதன்முதலாக இண்டர்நெட் அறிமுகமான புதிதில் கைக்குக் கிடைத்ததை எல்லாம் க்ளிக்கிக் கொண்டு, எந்த சைட்டில் இ-மெயில் கேட்டாலும் கொடுத்த போதா?

சுட்ட சாஃப்ட்வேருக்கு சீரியல் நம்பர் தேடியபோதா? க்ராக் தேடி தரவிறக்கம் செய்த பிறகு கடவுச் சொல்லுக்காக ஐந்தாறு சைட்டுகளில் சொடக்கி, 4ம் வரியின் முதல் எழுத்து, 5ம் வரியில் 4வது வார்த்தையில் 2ம் எழுத்து என்று ஒன்றொன்றாக ஃப்ரீ ரிஜிஸ்டரேஷன் செய்தபோதா? எப்படியோ அவளுக்கு என் மெயில் ஐடி தெரிந்திருக்கிறது.

இரு இனிய காலை வணக்கத்துடன், அன்றைய நாள் மிக மகிழ்ச்சிகரமான ஒரு நாளாக அமையும் என்ற வாழ்த்துடன் வந்திருந்த மெயிலுடன் ஒரு சுட்டி இருந்தது. சொடக்கிய உடன் என் பிறந்த நாள் கேட்டு ஒரு ஃபாரம் வந்தது. அதை நிரப்பிய நொடி ஆசீர்வதிக்கப்பட்டதா? சபிக்கப்பட்டதா? என்று இன்றுவரை புரியவில்லை.

பிறகு புதுவருடம், பிறந்தநாள், கிரகப் பெயர்ச்சி இன்னம் காரணமில்லாத தருணங்களில் என்னை நினைத்து, எனக்காக ப்ரார்த்தித்து என் வாழ்க்கையில் நான் விரும்பியதை அடைய ப்ரார்த்திப்பதாக மெயில் வரும். பிறகு நேற்றொரு கனவு கண்டேன் பாலாஜி என்று தொடங்கி ஒரு அருமையான விட்டலாச்சார்யா கதைபோல் விவரித்த மெயில் வரும்போது புல்லரித்துப் போகும். கனவுலகில் கைபிடித்து இட்டுச் செல்வாள்.

சீறும் பாம்பு, சிரிக்கும் ஓநாய், என்று திடுக்கிடும் தருணங்களில் தோளிறுக்கி நான் இருக்கிறேன் எனக் கூட்டிக் கொண்டு நடப்பாள். அழகான நந்தவனம், வானவில் என்று காட்டிச் சிரிப்பாள். இப்போது சந்தோஷமா என்று கேட்டு ஆனந்திப்பாள்.

உனக்காய் நான் மகிழ்கிறேன். என் இதயம் நிறைந்திருக்கிறது எனச் சிரிப்பாள். உன் கஷ்டத்துக்கு வருந்துகிறேன். நான் என்ன செய்யமுடியும்? உனக்குத் தெரியும். என்னால் முடிந்திருந்தால் இதைத் தடுத்திருப்பேன். என்னால் ஆகக் கூடியது உனக்கு பக்கபலமாக இந்தக் கடினத்தைத் தாண்டும் வரை கூட இருப்பது மட்டுமே என்பாள்.

முகம் தெரியாத என் மேல் இத்தனை அன்பு கொண்ட இவள் யாராய் இருக்கமுடியும்? இத்தனை கோடி மனிதர்கள் இருக்கும் உலகில் இருபத்தி நான்கு மணி நேரமும் என் சிந்தனையாகவே ஒரு ஜீவன் இருக்கமுடியுமா? அதுவும், இத்தனை அன்பையும் ஒரு முறை கூட அங்கீகரிக்காத ஒருத்தன் மீது இத்தனை கரிசனம் எப்படி இருக்கமுடியும்?

ஒரே ஒரு மின்னஞ்சலுக்கு கூட நன்றி கூறி நான் பதிலளித்ததில்லை. சில நேரங்களில் பதற்றமாக மின்னஞ்சல் வரும். எனக்கு மிகப் பெரிய கஷ்டம் காத்திருப்பதாகவும், அதனை எதிர்கொண்டு என் வாழ்வின் பொன்னான தருணமாக மாற்றித்தர தனக்குத் தெரியுமென்றும், அதற்காக அவள் வேண்டியிருப்பது என் சம்மதம் மட்டுமே என்று மின்னஞ்சல் வரும். அதைக் கூட உதாசீனம் செய்திருக்கிறேன்.

அதையெல்லாம் அவள் பொருட்படுத்தியதேயில்லை. ஒரு சில மின்னஞ்சல்களில் வருத்தம் கலந்த தொனியில், ‘பாலாஜி! முன்பே பலமுறை உனக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறேன். நீ ஏன் என்னை நம்ப மறுக்கிறாய்? நான் மற்றவர்கள் போலல்ல பாலாஜி. விதி உன்னை எனக்குக் காட்டியிருக்கிறது. என்னால் சும்மாயிருக்க முடியாது. நீ இப்போதிருக்கும் நிலையில் இருக்கப் பிறந்தவனல்ல. என்னை நம்பமாட்டாயா?’ என்று வரும். மனதைப் பிசைந்தாலும், விழியோரம் நீர் துளித்தாலும் கல்லாய் இருந்திருக்கிறேன்.

சமீபகாலமாக எனக்காகத் தன் உயிரையும் பணையம் வைப்பதாக மெயில் வந்துக் கொண்டிருக்கிறது. என் நலனுக்காக என் கடந்தகாலம், எதிர்காலம் எல்லாம் பயணப்படுகிறாளாம். அப்போது அவள் அந்தக்காலத்தில் உறைந்து போக வாய்ப்பிருக்கிறதாம். மிகவும் ரிஸ்கியான விஷயமாம். நான் எவ்வளவு உதாசீனம் செய்தாலும், எனக்காக இதைச் செய்தாகவேண்டிய கட்டாயத்தில் இருந்தாளாம். ஒரு வேளை அப்படி நிகழ்ந்திருந்தால் எனக்காக உயிரைப் பணயம் வைத்து அவள் சிரமப்பட்டதற்குப் பலனில்லாமல் போயிருக்குமாம்.

நல்லகாலம், அப்படி எதுவும் நிகழாமல் திரும்பிவிட்டாளாம். ஆனாலும் இது முழுமையில்லையாம். எனக்கு நிகழவிருக்கும் கெடுதலையும், நல்ல தருணங்களைப் பற்றிய குறிப்பை மட்டுமே அறிய முடிந்ததாம். ஆனாலும் எனக்காகத் தன் உயிரைத் துச்சமாக மதித்து மீண்டும் இதனைச் செய்யக் காத்திருக்கிறாளாம். என் சம்மதமின்றி இதனைச் செய்ய முடியாதாகையால் என் அனுமதி கோரி இறைஞ்சி நிற்கிறாள். இந்த மின்னஞ்சலையும் உதாசீனப் படுத்திவிடாதே என்று அழமாட்டாக் குறையாய் கெஞ்சுகிறாள்.

எனக்காக இவ்வளவு செய்கிறவளுக்கு மிகச் சிறிய தொகையை நான் தரவேண்டாமா? அதிலும் கூட அவள் எத்தனை இரக்க சிந்தனையுள்ளவள் தெரியுமா?

ரகசியமான முதல் கணிப்புக்கு வெறும் யு.எஸ். டாலர் 9.95 மட்டுமே
உடனடியான ரகசியக் கணிப்புக்கு 19.95 டாலர் மட்டுமே
முழுமையான ரகசியக் கணிப்புக்கு 29 டாலர் மட்டுமே.
முதன்மையான நடவடிக்கைக்கு கூடுதலாக 5 டாலர் சேர்த்து 34.90 டாலர் மட்டுமே கொடுத்தால் போதும்.

இதை எழுதும் இந்த நொடியில் கண்கள் கசிகிறது. உதடு துடிக்கிறது. நெஞ்சு அடைக்கிறது. நான் மைனர் செயின் போடும் வழக்கமுடையவனாக இருந்தாலாவது என்னிடம் ஒரு பித்தளை பெருமாளோ முருகனோ டாலர் இருக்கலாம். யு.எஸ். டாலருக்கு நான் எங்கே போக?

இதில் பத்தில் ஒரு பங்கில் கிழக்கே முஞ்ஞில் கிருஷ்ணபணிக்கரோ, சோட்டாணிக்கரா சோமன் நம்பூதிரியோ, கீழக்கரை முஸ்தஃபா சாகிபோ தாயத்து, யந்திரம் மூலம் இதைச் செய்யக் காத்திருக்கிறார்கள் என்று சொன்னால் இத்தனை உதாசீனப் படுத்தியும் எனக்காக உயிரையும் துச்சமென மதித்து பயணப்பட்டவளை அவமதிப்பதாகாதா?

இல்லை வைத்தீசுவரன் கோவிலுக்குப் போனால் என் கட்டை விரல் முத்திரையில் சுவடி பிடித்துப் போன ஜென்மத்தில் குழந்தையாய் இருந்தபோது பஸ்ஸில் முன்சீட்டில் அமர்ந்திருந்த ஒரு தாத்தாவின் குடுமியை பிடித்து இழுத்த பஞ்சமாபாதகத்துக்கு இந்த ஜென்மத்தில் வழுக்கையாகக் கடவ என்ற அவரின் சாபத்துக்கு, மாரியப்பன் சலூனில் மயிர் கூட்டி அள்ளும் பரிகாரம் சொல்லுவார்கள் என்றாலாவது அவளுக்குப் புரியுமா?

இந்த நிலையில் எனக்கு உதவக்கூடிய ஒரே நண்பர் தளபதி நசரேயன் மட்டுமே. ஆனானப்பட்ட வெள்ளச்சிகளையே ஓட்டும் மந்திரத்துண்டு அவரிடம் மட்டுமே உள்ளது. அவர் சம்மதித்தால் எனக்காக நசரேயன் பேசுவார் என ஒரு மெயில் அனுப்பிவிடுவேன்.

இந்தத் துண்டுக்கு திரும்பிவராமலே போய்க்குவேன் என்று சாரா எதிர்காலத்திலோ கடந்தகாலத்திலோ சிக்கிவிட்டாலும் சரி, அல்லது நசரேயனை இழுத்துக் கொண்டு பயணப்பட்டாலும் தளபதியின் கனவு நனவாகும். எனக்கும் இப்படி மனதைக் கனக்க வைக்கும் மின்னஞ்சல் வராமலிருக்கும்.

இப்படிக்கு தளபதியின் சம்மதத்தை ஆவலுடன் எதிர் நோக்கும்
வானம்பாடிகள்.

சாராவின் கடிதம்.


--:::--

Sunday, April 17, 2011

நிழலின் அருமை வெயிலில்

வாழ்க்கையில் நடக்கும் சில விஷயங்களின் அருமையை அப்போது நாம் உணர்வதில்லை. பின்னெப்போதோ அதுகுறித்து படிக்கும்போது இதை நாம் அப்போது உணரவில்லையே என்ற வருத்தம் நீங்காமல் நின்றுவிடும்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சக்லேஷ்பூரிலிருந்து ரயில்வே ட்ரெக், மற்றும் ஃபோட்டோ போட்டி என்று ஒரு செய்தி பார்த்தேன். கிட்டத்தட்ட ரூ12000 என்று கவனம். அந்த ஊரில் ராமர் வனவாசம் மாதிரி 14 மாதங்கள் இருந்ததாக கருதியிருந்ததன் மதிப்பும், அந்த கொடுப்பினையை ரசிக்காத அப்போதைய மன நிலையும் தந்த படிப்பினைதான் மேலிருக்கும் பத்தி.
ஹாசனிலிருந்து மங்களூருக்கு செல்லும் ரயில்பாதையில் அமைந்திருக்கிறது சக்லேஷ்பூர். இந்திய ரயில்வேயின் திறனுக்கு ஒரு அத்தாட்சி அந்த ரயில்பாதை. சக்லேஷ்பூர் தாண்டிய சிறிது தூரத்திற்குப் பிறகு கபகா புத்தூர் வரை மலைகள், அதற்கிடையேயான அதல பாதாளங்கள். மலையைக் குடைந்தும், பாதாளத்திலிருந்து தூண்கள் எழுப்பியும் அமைத்த பாதை அது. எடக்குமாரி என்ற ஒரு ஸ்டேஷனில் ப்ளாட்ஃபார்மை ஒட்டிய டீஸ்டாலில் டீ வாங்கிக்கொண்டு ஒரு அடி நகர்ந்தால் பாதாள லோகம்தான். அதே போல் டோனிகல் ஸ்டேஷன் வரும் முன் ஒரு ரயில்பாதை தெரியும். அந்த வழியாகத்தான் வந்திருப்போம். ஆனால் பார்ப்பதற்கு அதன் வழியாகப் போகப் போவது போல் தோற்றம்.
அந்த மலைப்பாதையில் ட்ராக் போட, இதர தளவாடங்கள், சிமெண்ட், இரும்புக்கம்பி எல்லாம் எப்படிக் கொண்டு போவது? எங்கள் அரக்கோணம் வொர்க்‌ஷாப் இஞ்சினியர்களின் புதிய கண்டுபிடிப்பாக இந்திய ரயில்வேயில் முதன் முறையாக ரயில் சக்கரங்களை மாட்டி தண்டவாளத்தில் லாரி ஓடியது. 
கிட்டத்தட்ட 52 பெரிய பாலங்கள், 35க்கும் மேற்பட்ட டன்னல்கள், 150க்கு மேற்பட்ட சிறிய பாலங்களின் மீதே அமைந்த ரயில்பாதை அது. சக்லேஷ்பூர் உலகப் புகழ்பெற்றது. ஏலக்காயின் உலகச் சந்தை அது. சக்லேஷ்பூர் கூட்டுறவுச் சங்கத்தின் தேனுக்கு நிகராக எங்கேயும் பார்க்க முடியாது. ஆனாலும் குடகுத் தேன் என்றே எப்படியோ பெயர். காஃபி, தேயிலைத் தோட்டங்கள். எஸ்டேட் ஓனர்கள், அதில் பணிபுரிபவர்கள் என்ற இரண்டேதட்டு மக்களிடையே ரயில்வே வந்த பிறகுதான் நடுத்தட்டு மக்கள் வர்க்கமே வந்ததாகச் சொல்வார்கள்.
இந்த ஊரை அனுபவிக்க என்ன தடை என்று நினைக்கலாம். முதன் முறையாக வீட்டை விட்டு பாஷை அவ்வளவு தெரியாத ஊரில் போய் பிழைப்பு என்ற முதல் காரணம். 1985ல் ரூ800 சம்பளத்தில் சென்னையில் அம்மாவும் தம்பியும், நான் சக்லேஷ்பூரில் என்று இரண்டு குடித்தனங்கள் என்பது ப்ரமோஷன் என்ற மகிழ்ச்சியைவிட பனிஷ்மெண்ட் என்ற அயற்சி இரண்டாவது காரணம். சென்னையிலிருந்து இரவு கிளம்பி பெங்களூர் போய், உடனே அடுத்த வண்டி பிடித்து அரிசிக்கரை போய், அங்கிருந்து வேறு ஒரு பேசஞ்சர் பிடித்து ஹாசன் போய், அங்கு பஸ்பிடித்து ஒரு மணிக்கும் மேல் பயணம் செய்து சக்லேஷ்பூர் சேரலாம் என்பது மாதம் ஒருமுறை கூட வீட்டிற்கு வந்து போவது கடினம் என்பது பெரும் காரணம்.

வெள்ளிக்கிழமை இரவு கிளம்பி சனி மாலை வீட்டிற்குவந்து அடுத்த நாள் காலையில் கிளம்பி திங்கள் அலுவலகத்தில் இருந்தாகவேண்டும். ஊர் என்பதே கொத்துக் கொத்தாக மலைகளின் இடையே. ஒரு மலையின் மேலிருக்கும் என் வீட்டிலிருந்து இறங்கி இன்னோரு மலையில் ஏறினால் டவுன். தூரம் என்னமோ ஒரு இரண்டு மூன்று கிலோமீட்டர்தான். மதியம் டவுனில் போய் சாப்பிட்டுவிட்டு திரும்ப ஆஃபீஸ் வந்தால் பசிக்கும்.

செப்டம்பரிலிருந்து மெதுவே முதுகுத்தண்டை உறைக்கும் குளிர், டிசம்பரிலிருந்து ஃபெப்ருவரி வரை அப்படிக் குளிரும். குளிரென்றால் மழையோடு கூடிய குளிர். இரவில் பெங்களூரில் ஏறி மேல் பர்த்தில் படுத்து, கனத்த போர்வையை போர்த்துக் கொண்டால், காலையில் சக்லேஷ்பூரில் இறங்கும்போது பிழிந்தால் இரண்டு பக்கெட் நீர் வரும். ஃபெப்ருவரி கடைசில் லேசாக உறைக்கும் சூரியன் ஏப்ரலில் உச்சத்தில் இருக்கும்போதே, ‘மளே யாவாக பருத்தே? பேப்பரல்லி டேட் ஹாக்கிதானா? ஒந்து வாரா லேட்டா?’ (‘மழை எப்போ வருதாம். பேப்பரில் தேதி கொடுத்திருக்கானா? ஒருவாரம் லேட்டா?)  என்று எழவு விசாரிப்பதுபோல் கேட்டால் ஓவென்று அழவேண்டும் போல் வரும். வருஷத்தில் பத்துமாதம் நச நசவென்று மழையில் வாழ்வது சென்னை மாதிரி ஊரில் இருக்கும்போது வேண்டுமானால் சொர்க்கமாகத் தெரியலாம். உண்மையில் அனுபவிக்கும்போது அப்படி ஒரு எரிச்சல் வரும்.
ஆஃபீஸ் ஒரு குன்றில். குவார்ட்டர்ஸ் ஒரு பள்ளத்தில் இறங்கி இன்னோரு மலை முகட்டில். மழையென்றால் பலமாதங்களில் பூந்தூறலாக இருக்கும். வானத்துக்கும் பூமிக்கும் டாட்லைன் போட்டாற்போல். மண்ணோ பூமண். புல்லிருக்கிறதே என்று கொஞ்சம் கவனப் பிசகாக காலை வைத்தால் அப்படியே வாரி விடும். செருப்பு அணிந்திருந்தால் பின்பக்கம், போடாவிட்டால் முன்பக்கம் எப்படி விழமுடிகிறது என்பது இது வரை புரிந்ததில்லை. அதுவும் ஆஃபீஸ் அருகில் போய் வழுக்கி விழுந்து, சேறு பூசிக் கொண்டு திரும்ப மலை இறங்கி ஏறி வேறு உடை அணிந்து போவது என்பது எவ்வளவு கொடுமை? சரி வெயில் காலமாவது அனுபவிக்கலாம் என்றால் சரியாக 6லிருந்து 7 வரை கொள்ளைக்காரன் வருவது போல் எல்லா வீட்டிலும் கதவு, சன்னல் எல்லாம் அடைத்துவிட்டு உட்கார்ந்திருப்பார்கள்.

அந்த ஊர் கொசுவார் அவ்வளவு வில்லன். அங்கே இங்கே என்று கடிக்கும் வேலையே கிடையாது. சரியாக கண் இமை, மேல் உதடு, காது, மூக்கு மடல் போல் சாஃப்ட் டார்ஜட்தான். ஒரு கடி ஒரு உறிஞ்சு அவர் போய்விடுவார். காதில் கடித்தால் யானைக்காது மாதிரி, மூக்கில் கடித்தால் மூணு இஞ்சு அகலத்துக்கு, உதட்டில் கடித்தால் மூக்கைத்தாண்டி தெரியும்படி வீங்குவது கொடுமை என்றால், கண் இமையில் போட்டதோ, டாம் அண்ட் ஜெர்ரியில் டாம் மாதிரி வத்திக் குச்சி வைத்தாலும் கண் திறக்காது.

போத்தி மெஸ்ஸில் சாப்பாடு மூன்று ரூபாய்தான். சுரைக்காய், பீர்க்கங்காய் என்று நீர்க்காயாக இருக்கும். சாதத்தில் சாம்பார் ஊற்றிவிட்டு போனால் சாதம் வெள்ளையாகவே இருக்கும். பருப்பே இல்லாமல் அப்படி ஒரு சாம்பார் எப்படி வைக்க முடியும் என்று விளங்கியதே இல்லை. ரசம் பாயசம் போல் இனிக்கும். தயிரும், மலை நாரத்தை ஊறுகாயும் சொர்க்கம். ராயர் மெஸ்ஸில் அபாரமாக இருக்கும். ஆனால் கெடுபிடி அதிகம். அக்கி ரொட்டி (அரிசி ரொட்டி) சாப்பிட்டிருக்கீங்களா நீங்க?

இத்தனை சோகத்திலும் ஒரு நாள் நாலணாவுக்கு வாங்கித் தின்ற காரமான வெங்காய பிஸ்கட்டில் மயங்கி, 5ரூபாய்க்கு பிஸ்கட் வாங்கிக் கொண்டு இரவுச் சாப்பாட்டுக்கு இது போதும் என்று  வீட்டிற்குப் போய் தின்று, ஒரு மணி நேரத்தில் வயிறு தீப்பிடித்தது போல் எரிய திரும்பவும் மலையிறங்கி, ராத்திரி ஒரு மணிக்கு 4 இட்டிலி தின்றதும், மூன்று ரூபாய்க்கு அரைப் பலாப்பழம் வாங்கி, சுளையைத் தேனில் ஊறப் போட்டு, நானும் அறை நண்பனும் திகட்டத் திகட்ட தின்று அடுத்த நாள், பிடுங்கிக் கொண்டு யார் லெட்ரீனுக்கும் வீட்டுக்கும் அலைவது என்று லெட்ரீன் அருகிலேயே குத்தவைத்து நொந்ததும், விடாமல் 103-104 என்று அடித்த ஜூரத்துக்கு மாத்திரை மருந்தில்லாமல், இளநீரும் கோல்ட் ஸ்பாட்டும் மட்டுமே உணவாக்கி ஒரே நாளில் சரியாகப் போனதும், ராம நவமியில் ராமர் கோவிலில் வாலில்லாத அனுமார் மாதிரி எங்கள் மூத்த எஞ்ஜினீயர் ஜிங் ஜிங் என்று குதித்துச் செய்த காலட்சேபமும், பாதி சினிமாவை நிறுத்தி, டிவிஷனல் அக்கவுண்டண்ட் உடனடியாக ஆஃபீஸ் வரவும் என்ற ஸ்லைட் வாங்கிய பெருமிதமும், ராமன் கடை சப்பாத்தி, தோசை சாம்பாரும், நேத்ராவதியில் வெள்ளம் வரும்போது ஜெலடின் குச்சியில் கொளுத்தி வீசி ஆளாளுக்கு பெட்ஷீட்டில் பொதி பொதியாய் மீன் பிடிக்கும் காட்சியும்...ஸ்டாக் டேக்கிங்கில் 2 தண்டவாளம் அதிகம் என்றால், போன வருட மழையில் புதைந்தது இந்த வருட மழையில் மண் அரிப்பில் கிடைத்தது என்றும், 2 குறைவு என்றால், அதிக மழையில் மண் சரிவில் மூடியிருக்கலாம் அல்லது கரையான் அரித்துவிட்டது என்றும் எழுதும் காமெடி...

சக்லேஷ்பூர்..ஐ மிஸ் யூ ரியல்லி:)
டிஸ்கி: புகைப்படம் கூகிளார் தயவு:)
--:o:--