Friday, February 26, 2010

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா!

ரோர்க்கை முன்னிலைப் படுத்தி எழுதிய போன இடுகையில் டோமினிக் குறித்த அறைகுறை அறிமுகம் மிகவும் உறுத்திற்று. காரணம் புத்தகத்தில் அவளுடைய பாத்திரத்தின் ஆதிக்கம் ரோர்க்கிற்கு சற்றும் குறைந்ததல்ல. ஒரு விதத்தில் ரோர்க்கின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் கிரியா ஊக்கி அவளின் பாத்திரம் என்றே சொல்லலாம்.

ரோர்க்கையும் டொமினிக்கையும் பிரித்துச் சொல்ல முடியாமல் இழைத்து இழைத்து படு லாவகமாக வெளிக்காட்டியிருப்பார் ராண்ட். இருவரையும் சேர்த்தே முழுமையாக்கும் விதத்தில் பாத்திர அமைப்பு பிரமிக்கவைக்கும். இத்தகைய பிரமிப்புக்கு காரணம் என்ன? டொமினிக்கின் பாத்திரம் புத்தகம் முழுதும் விரவியிருந்தாலும், ஒரு சில பகுதிகள் போதும் அவளை ஓரளவு புரிந்து கொள்ள.

அவளின் சுய அறிமுகம் இதோ:

//ஒருவர் உண்மையில் தனக்கு அனுமதிக்கக் கூடிய ஒரே விருப்பத்தை மட்டுமே நான் அனுமதித்துக் கொள்கிறேன். சுதந்திரம், ஆல்வா, சுதந்திரம்.

இதனை சுதந்திரம் என்றா சொல்கிறாய்?

எதையும் கேட்காதிருப்பது. எதையும் எதிர்பாராமல் இருப்பது. எதன் மீதும் சார்ந்திராமல் இருப்பது.

ஒரு வேளை நீ விரும்பிய ஒன்றைக் கண்டால்?

நான் தேடமாட்டேன். அதைக் காண விழையமாட்டேன். அது உங்களுடைய அழகான உலகத்தின் ஒரு அங்கமாக இருக்கும். அதை நான்  உங்களோடு பங்கிட்டுக் கொள்ள வேண்டியிருக்கலாம்--அதைச் செய்யமாட்டேன். உனக்குத் தெரியுமா? நான் எனக்கு மிகவும் பிடித்த ஒரு சிறந்த நூலை திரும்பத் தொடக்கூட மாட்டேன். அதனை படித்த மற்றவர்களின் பார்வை குறித்த எண்ணமும் அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பதும் எனக்கு மிக வேதனையைத் தரும். அம்மாதிரியான சிறந்த ஒன்று  இம்மாதிரியான மனிதர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கல்ல. .

டோமினிக், எதன் மீதும் இம்மாதிரியான ஓர் தீவிர உணர்ச்சி அசாதாரணம்.

என்னால் அப்படித்தான் உணர முடியும். அல்லது உணர்ச்சியற்று இருக்கலாம்.

 எனக்கு ஆண்களின் நிர்வாணச் சிலை மிகவும் பிடிக்கும் என்பதை அறிவாயா ஆல்வா? அப்படி பார்க்காதே. சிலை என்று சொன்னேன். குறிப்பாக ஒன்று என்னிடமிருந்தது. அதை ஹீலியோசின் சிலை என்று சொல்வார்கள். அதை ஐரோப்பாவின் ஒரு தொல்காட்சியகத்திலிருந்து பெற்றேன். அதை பெறுவதற்கு பெரும்பாடு பட வேண்டியிருந்தது--அது விற்பனைக்கு இருந்ததல்ல. அதன் மீது எனக்கு சொல்லவொணாக் காதல் என நினைக்கிறேன் ஆல்வா. அதனை வீட்டிற்குக் கொண்டு வந்தேன்.

எங்கே இருக்கிறது அது? ஒரு மாறுதலுக்காவது உனக்குப் பிடித்ததை பார்க்க விரும்புகிறேன்.

அது உடைந்துவிட்டது.

உடைந்து விட்டதா? அத்தகைய ஒரு தொல்பொருளா? எப்படி உடைந்தது?

நான் உடைத்துவிட்டேன்?

எப்படி?

மேலிருந்து தூக்கி எறிந்தேன். கீழே கான்கிரீட் தரை.

உனக்கு முழுப் பைத்தியமா? ஏன்?

வேறு யாரும் எப்போதும் அதைப் பார்க்கக் கூடாது என்பதற்காக....//


இதுதான் அவள். இத்தகையதோர் உன்னதச் சிற்பமோ, புத்தகமோ சுதந்திரம் மறுக்கும் இவ்வுலகம், இந்தச் சமுதாயம் பெற ஏற்றதில்லை என்ற வேகம் கொண்டவள்.

ரோர்க் அவளைப் போலவே சுதந்திர வேட்கை கொண்டவன். கனவைச் சுமப்பவன். அதை அனுபவிக்கத் தெரியாத உலகத்துக்கு தன்னை , தன் கனவை அர்ப்பணிக்க நினைப்பவன். அவனையோ இந்த உலகத்தையோ தன்னால் ஒன்றும் செய்ய முடியாத போது உணர்ச்சியற்றுத்தான் போகிறாள்.அவனை இந்த உலகம் வாழவிடாது, அவன் கனவை செயலாக்க விடாது அதனால் அவன் நொறுங்கிப் போக நேரிடும். அதைக் காணும் சக்தி அவளுக்கில்லை. அவனுக்குப் புரியவைப்பது இயலுமா?

கெஞ்சுகிறாள். இந்த உலகம் உன்னை வாழவிடாது. வா! திருமணம் செய்து கொள்ளலாம். எங்காவது கிராமத்தில் தனியாக இருக்கலாம். ஏதோ வேலை செய்து பிழைக்கலாம். உனக்குச் சமைத்துப் போடுகிறேன். மனைவியாக இருக்கிறேன். நீ தோற்பதை என்னால் பார்க்க முடியாது என்று. அவனா கேட்பான். மற்றவர்களால் அழிவதை விட நானே உனக்குப் புரிய வைக்கிறேன் என்று சொல்லி விட்டே செய்கிறாள். எத்தனை தடையுண்டோ அத்தனையும் செய்கிறாள்.

அத்தனையும் மீறி வெல்வது ரோர்க் மட்டுமேயல்ல. டொமினிக்கும். அவர்களின் காதலும்.

எத்தனையோ புதினங்கள் படித்திருப்பீர்கள். திரைப்படங்கள் பார்த்திருப்பீர்கள். இது மாதிரி ஒரு காதல் நிகழ்வு படித்திருக்கவோ பார்த்திருக்கவோ முடியாது எனக் கருதுகிறேன். அலாதியாக, தொடக்கமின்றி, எப்போதோ அவர்களுக்குள் இருந்த உறவு மீண்டும் தொடர்வது போன்ற ஒரு நிகழ்வு அது. ஒவ்வொரு எழுத்தும் நிகழ்வைக் கண்முன் காட்டும் அற்புதம் அது.

//// ரோர்க் அவளை நேராக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்களுக்கிடையேயான புரிதல் ஆளுமைப்படுத்தும் அந்தரங்கமானதாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் இருவரும் ஒரு வார்த்தை பேசவில்லை. அவனுடன் பேசியதன் மூலம் அதை அவள் உடைத்தாள்.

‘ஏன் என்னை எப்பொழுதும் உற்றுப் பார்க்கிறாய்?’ என வெடுக்கெனக் கேட்டாள்.

அவள் வார்த்தைகள் எப்பொழுதும் ஈடுபாடின்மையைப் பிரதிபலிக்க உதவும் எனக் கருதியிருந்தாள். அவர்களுக்கு புரிந்த ஒன்றைக் குறிப்பிடக் கூடிய எந்த ஒன்றையும் குறிப்பிடாமல் தவிர்த்தாள். ஒரு கணம் அவன் அவளைப் பார்த்தபடி அமைதியாயிருந்தான். அவன் பதிலளிக்காமல் இருந்துவிடுவானோ , அமைதியாய் இருப்பதன் மூலமே எங்கே தெளிவாக இந்தக் கேள்விக்கு பதில் அவசியமில்லை எனச் சொல்லிவிடுவானோ எனக் கலவரமானாள். ஆனால் அவன் பதில் சொன்னான்:

“நீங்கள் எதற்காக என்னை உற்றுப் பார்க்கிறீர்களோ அதே காரணத்துக்காகத்தான்”

“நீ எதைப்பற்றிப் பேசுகிறாய் என்பது புரியவில்லை”

“உங்களுக்குப் புரியாவிடில் இதைவிட ஆச்சரியமாகவும் இத்தனை கோபமின்றியும் இருப்பீர்கள் மிஸ். ஃப்ராங்கன்” //


அவர்களுக்கிடையேயான முதல் உறவு வன்புணர்ச்சியாக அமைகிறது. வன்புணர்வாக என்ற வார்த்தை அதற்குப் பொருந்தாது. ராண்டே இதைச் சொல்கிறார்.   “அது வன்புணர்வாயின், அதற்கான அழைப்பு அவளே கொடுத்ததென்று”.

//அது அளவற்ற அன்பின் சின்னமாக மிக மென்மையாக அல்லது வெறுப்பின் அடையாளமாக அவமதிப்பையும் வெற்றியையும் குறிப்பதாக
ப் புரியக்கூடிய ஒரு செயலாகும். ஆனால் அதை அவன் ஏளனமாக நிகழ்த்தினான். அன்பின் அடையாளமாக அல்ல. ஒரு புனிதத்தைக் கலைப்பதாக. அதுவே அமைதியாக அவளைச் சமர்ப்பிக்கச் செய்தது. அவனிடமிருந்து மென்மையான ஒரு வெளிப்பாடு இருந்திருப்பின் -- அவள் தன் உடலுக்கு என்ன நிகழ்கிறதென்ற ப்ரக்ஞையற்றவளாக உணர்ச்சியற்று இருந்திருப்பாள். அவளின் எஜமானன் கேவலமாக ஆணவத்துடன் அவளை ஆக்கிரமித்துக் கொள்வது போன்றதான அந்த பரவசமே அவளின் விழைவாயிருந்தது.

அதன் பிறகு அவனால் கூடக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியாத தாங்கவொணாப் பரவசத்துடன் அவன் உடல் நடுங்குவதை உணர்ந்தாள். இதை அவனுக்கு கொடுத்தவள் அவளே, அது அவளுள்ளிருந்தே கிடைத்தது, அவள் உடலிலிருந்து என்பதை அறிந்தவள், உதட்டைக் கடித்துக் கொண்டாள். அவன் அவளுக்கு என்ன உணர்த்த எண்ணினானோ அதை உணர்ந்தவளானாள்.

வேண்டுமென்றே நடந்த கண்ணியமற்ற செயலையும் தாண்டி, வன்முறைக்கப்பாற்பட்ட புரிதலோடு, அவர்கள் ஒருவரோடொருவர் ஐக்கியமாயினர்; அவன் அவளை அத்துணை முக்கியமாகக் கருதாவிடில் அவளை அவ்வாறு அடைந்திருக்க மாட்டான், அவளும் அவனை அத்துணை விரும்பாவிடில் இப்படிப் போராடியிருக்கமாட்டாள். மீண்டும் நடக்கமுடியாதது அந்த உன்னதம். அவர்கள் இருவருமே இதை உணர்ந்திருப்பதை அறிந்திருந்தார்கள். //

அவள் தன்னைத் தரவில்லை. அவன் எடுத்துக் கொண்டான். அவனை அவள் ஆக்கிரமித்துக் கொண்டாள். இரண்டு ஆன்மாக்களின் சங்கமம் அது. இதுவா கற்பழிப்பு? இதுவா வன்புணர்வு? மிக உன்னதமான வார்த்தைக்கப்பாற்பட்ட இரண்டு உள்ளங்களின் தேடலும் சங்கமுமல்லவா?

அவள் மீது அளவற்ற காதலிருந்தும், அவனுடைய சுயத்தை மதிக்கும், தன் வாழ்க்கை தன்னுடையது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருக்கும் அவனை என்ன செய்ய முடியும்? எவ்வளவு அழகாக டோமினிக்கின் கதாபாத்திரம் உருமாற்றம் பெறுகிறது. ரோர்க்கிடம் அவள் சொல்கிறாள்:


//நான் உன்னை வெறுக்கிறேன் என்பது உனக்குத் தெரியும் ரோர்க். நீ எப்படி இருக்கிறாயோ அதற்காக, நான் உன்னை விரும்புகிறேனே அதற்காக, உன்னை விரும்பாமல் இருக்க முடியவில்லையே அதற்காக -- உன்னோடு போராடப் போகிறேன் ரோர்க் -- உன்னை அழிக்கப் போகிறேன் -- நான் ஒரு யாசிக்கும் மிருகமெனக் கூறினேனே அதே அமைதியான மனத்துடன் கூறுகிறேன் இதை.  நான் நம்புவதற்கு எதுவும் இல்லாவிடினும் இதற்காக பிரார்த்திக்க யாரும் இல்லையெனினும் உன்னை அழிக்க இயலக்கூடாது எனப் பிரார்த்திக்கப் போகிறேன். நீ எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் நான் தடையாயிருப்பேன். உனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் உன்னிடமிருந்து பறிப்பேன். உன்னை வருத்தக் கூடிய ஒரே வழியான நீ நேசிக்கும் உன் தொழில் மூலமாகவே உன்னை வருத்துவேன் ரோர்க். உன்னை பட்டினி போடுவேன். உன்னால் அடைய முடியாதவை மூலம் உன்னைத் திணறடிப்பேன்.  இன்று உனக்கு அந்த வருத்தத்தைத் தந்தேன் ரோர்க். அதற்காகவே உன்னோடு இன்றிறவைக் கழிக்க வந்தேன். உன்னை வெல்லும் ஒவ்வொரு இரவும் நான் வருவேன் ரோர்க்--நீ என்னை எடுத்துக் கொள்ள சம்மதிப்பேன். என் காதலனாக அல்ல ரோர்க். என் எதிரியாக! என் வெற்றியை வீழ்த்தும் எதிரியாக.//
 

பிறகு

//ரோர்க்! ஏன் அந்த குவாரியில் வேலைக்குச் சேர்ந்தாய் ரோர்க்?

உனக்குத் தெரியும்.

ஆம். வேறு யாராயினும் ஒரு கட்டிடக் கலைஞனிடம் வேலைக்குச் சேர்ந்திருப்பார்கள்.

அப்படி இருந்திருந்தால் என்னை நீ அழிக்க நினைத்திருக்க மாட்டாய்.

உனக்கு அது புரிந்ததா ரோர்க்?

ஆம். அசையாமல் அப்படியே இரு. அது இப்போது அவசியமில்லை.

என்ரைட்டின் வீடு நியூயார்க்கிலேயே அழகான வீடு என்பது உனக்குத் தெரியுமில்லையா ரோர்க்?

அதை நீயும் அறிவாய் என்பது எனக்குத் தெரியும் டோமினிக்.

நீ மிக அழகாய் இருக்கிறாய் டோமினிக்.

சொல்லாதே!

நீ மிக அழகானவள்..

ரோர்க். நான்..நான் உன்னை அழிக்கத்தான் போகிறேன் ரோர்க்!

அப்படியில்லாவிடில் நான் உன்னை விரும்புவேன் என்றா நினைக்கிறாய்?

ரோர்க்! நான் செய்வதெல்லாம் இவ்வளவு திறமையான உன்னை ஒரு கல்குவாரியில் கல்லுடைக்க விட்டதே இந்த உலகம். அதை உனக்குப் புரிய வைக்கத்தான்.

எனக்குத் தெரியும்.//


பிரமிப்பாயில்லை? ரத்தமும் சதையுமாய் இப்படி ஒருத்தியைப் பார்க்க வேண்டும் போல் இல்லை? என்ன ஒரு புரிதல்? என்ன ஒரு சுதந்திரம்? என்ன ஒரு தன்னம்பிக்கை?

(திரைப்படத்தில் இவ்விரு காட்சிகளும். கேரி கூப்பரும் பேட்ரிஷியா நீலும். அவர்களின் முதல் சந்திப்பில் டோமினிக்கின் கண்களைப் பாருங்கள். என்ன அருமையான வெளிப்பாடு)


                                                                                                                              (தொடரும்)
 நன்றி: எழுத ஊக்குவித்த பதிவர் பைத்தியக்காரன் (திரு. சிவராமன்) அவர்களுக்கு

Thursday, February 18, 2010

விட்டு விடுதலையாகிப் பறந்ததோர் சிட்டுக் குருவி...

என்ன வேண்டும்? எரிந்து விழுந்தார் கேமரான்.

உங்களிடம் வேலை செய்ய விரும்புகிறேன் என்றான் ரோர்க். குரல் என்னவோ ‘உங்களிடம் வேலை செய்ய விரும்புகிறேன்’  என ஒலித்தாலும், த்வனி ‘உங்களிடம் வேலை செய்யப்போகிறேன்’ என உணர்த்தியது.

அப்படியா? மிகப் பெரிய, சிறந்த கட்டிடக் கலைஞர்கள் உன்னை ஏற்கவில்லையா?

நான் யாரையும் தேடிப் போகவில்லை.

இதற்கு முன் எங்கு வேலை செய்தாய்?

இது தான் தொடக்கம்.

என்ன படித்திருக்கிறாய்.

மூன்று வருடங்கள் ஸ்டாண்டனில் படித்தேன்.

ஓ! தங்களுக்கு படிப்பை முடிக்க சோம்பலாயிருந்ததோ?

இல்லை. நான் வெளியேற்றப்பட்டேன்.

க்ரேட்! கேமரோன் டெஸ்கை ஓங்கி அறைந்தபடி சிரித்தார். அருமை.! ஸ்டாண்டன் என்ற பேன் கூட்டுக்கு உதாவாக்கரையான நீ ஹென்றி கேமரோனுக்கு வேலை செய்யப் போகிறாயா? உருப்படாதவர்களுக்கான இடம் இதுவென முடிவு செய்தாயா? எதற்காக உதைத்து எறியப் பட்டாய்? குடி? பெண்? எது?

இவை! என்றபடி தன்னுடைய வரை படங்களை நீட்டினான்.

.....

இந்தக் கட்டிடத்தைப் பார். முட்டாளே! இப்படி ஒரு கற்பனையை வைத்துக் கொண்டு அதை எப்படி செயல்படுத்துவதெனத் தெரியவில்லை உனக்கு! மிக மிக அற்புதமான  ஒன்றை கண்டெடுத்து அதை இப்படியா பாழடிப்பாய்? நீ  கற்பதற்கு எவ்வளவு இருக்கிறது தெரியுமா?

தெரியும். அதற்காகத்தான் இங்கு நிற்கிறேன்.

இதைப் பார்! உன் வயதில் நான் இதைச் செய்திருக்கக் கூடாதாவெனத் தோன்றுகிறது. ஆனால் நீ ஏன் இப்படிக் கெடுத்து வைத்திருக்கிறாய்? நான் இதை வைத்துக் கொண்டு என்ன செய்வேன் தெரியுமா? பார்! உன் படிக்கட்டுகளை விட்டொழி! புகைப் போக்கியைத் தகர்த்தெறி! இதற்கான அடித்தளம் போடும்போது.....

வெகு நேரம் பேசினார் கேமரோன். எரிந்து விழுந்தார். ஒரு படமும் திருப்திப் படுத்தவில்லை. ஆயினும் ரோர்க் அந்தப் படங்களைக் குறித்தான பேச்சு அதிலுள்ளவை என்னமோ ஏற்கனவே கட்டுமானத்தில் இருப்பதைப் போல் பேசப்படுவதை உணர்ந்தான்.

அப்படிப் பார்க்காதே என்னை! வேறே எதையும் பார்க்க முடியாதா உன்னால்? ஏன் கட்டிடக் கலைஞனாக விழைந்தாய்?
அப்போது எனக்குத் தெரியவில்லை. ஒரு வேளை எனக்கு கடவுள் நம்பிக்கையில்லாததால் இருக்கலாம்.

அர்த்தமுடன் பேசு!

நான் இந்தப் பூமியைக் காதலிக்கிறேன். இதை மட்டுமே காதலிக்கிறேன். இதன் உருவம் எனக்குப் பிடிக்கவில்லை. அதை மாற்ற விழைகிறேன்.

யாருக்காக?

எனக்காக?

என்ன வயது உனக்கு?

இருபத்தியிரண்டு.

இதையெல்லாம் எப்போது கேட்டாய்?

கேட்கவில்லை! 

இருபத்தியிரண்டு வயது இளைஞன் இப்படிப் பேசமாட்டான். நீ அசாதாரணமானவன்.

 இருக்கலாம்.

 இதை நான் பாராட்டாகச் சொல்லவில்லை!

 நானும் அப்படி எடுத்துக் கொள்ளவில்லை.

    ...

எவ்வளவு பணமிருக்கிறது கையில்?

பதினேழு டாலர் முப்பது செண்ட்.

நாசமாய்ப் போக! நாசமாய்ப் போக நீ! நான் உன்னை இங்கு வரச் சொன்னேனா! எனக்கு ட்ராஃப்ட்ஸ்மேன் தேவையில்லை! இங்கு வரைய ஏதுமில்லை! எனக்கும் இங்கிருப்பவர்களுக்கும் அரசு உதவியின்றி பிழைப்பதே பெரும்பாடு. இப்படி ஓர் கனவுலகில் வாழ்பவனைப் பட்டினிபோட எனக்கென்ன தலைஎழுத்தா? இந்தப் பொறுப்பு எனக்கு வேண்டாம். இந்த எழவையெல்லாம் நான் மீண்டும் பார்ப்பேன் என நினைத்ததேயில்லை. இதெல்லாம் மூட்டைகட்டி வெகு நாளாகிவிட்டது. இருக்கிற மடையர்களை வைத்துக் கொண்டு ஏதொ பிழைப்பு ஓடுகிறது. இது போதும் எனக்கு.

இங்கு ஏன் வந்தாய்? அழிந்து போகவா? உன்னைப் பாழடித்துக் கொள்ள முடிவு செய்துவிட்டாய் இல்லையா? உனக்கே அது நன்றாகத் தெரியுமில்லையா? அதற்கு நான் உதவுகிறேன். எனக்கு உன்னைப் பார்க்கவே பிடிக்கவில்லை. எனக்கு உன்னைப் பிடிக்கவில்லை. எனக்கு உன் முகம் பிடிக்கவில்லை. கொஞ்சமும் வெட்கமற்ற தற்பெருமைக்காரன் நீ. வெட்கமற்ற பிடிவாதக்காரன் நீ! உன் மீது அபாரமான நம்பிக்கை உனக்கு.

இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னால் என்றால் உன் முகத்தில் குத்தியிருப்பேன். நாளை காலை ஒன்பது மணிக்கு வேலைக்கு வருகிறாய்.

சரி என எழுந்தான் ரோர்க்.

வாரத்துக்கு 15 டாலர். அவ்வளவுதான் தருவேன்.

சரி!

நீ ஒரு வடிகட்டின முட்டாள்! நீ வேறு யாரிடமாவது போயிருக்க வேண்டும். போனாயோ கொன்றுவிடுவேன் உன்னை. உன் பெயரென்ன?

ஹோவர்ட் ரோர்க்.

லேட்டாக வந்தால் வேலையிருக்காது!

 சரி!

தன் படங்களை எடுக்க கை நீட்டினான் ரோர்க். தொடாதே அதை என்று அலறினார் கேமரோன். நீ போகலாம் என்றார்.
    ...

ரோர்க் எனக்கு அறிமுகமானது முப்பது வருடங்களுக்கு முன்னால். புத்தகத்தின் முதல் வரியில் அறிமுகமான நொடியில் வளர்ந்து வளர்ந்து விசுவரூபமாய் மனதில் நிறைந்து போனான். அன்றாட வாழ்வில் இது நான், இது என் வாழ்க்கை, இது எனக்கானது, இது என் விருப்பம், இதை எதற்காகவும் யாருக்காகவும் நான் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற செருக்கோடு நெஞ்சு நிமிர்த்தி முழுமையாய் வாழும் சிலரை பார்க்கும்போதும், அப்படியின்றி தன் அடையாளம் தொலைத்து வாழும் நம் போன்றோரை அவ்வப்போது நினைக்கையிலும் ஒரு ஓரம் கைகட்டி நின்று மனதுள் இவன் சிரிப்பான்.

பெரிமேசனும், ஜேம்ஸ் ஹாட்லி சேசும், அலிஸ்டர் மக்ளீனும் படித்துக் கொண்டிருந்த என்னை இவனுக்கு அறிமுகம் செய்தார் அலுவலகத்தில் லைப்ரரியன்.

த ஃபௌண்டன் ஹெட். அய்ன் ராண்டின் புதினம். 1943ல் வெளியானது. வெளியாகுமுன் 12 பதிப்பகத்தாரால் நிராகரிக்கப்பட்டது. ஆர்ச்சிபால்ட் ஓக்டன் என்ற எடிட்டர் தன் அலுவலகத்துக்கு  தந்தியடித்தார். ‘இந்தப் புத்தகம் உங்களுக்கானதல்ல எனக் கருதுவீர்களேயானல் நானும் உங்களுக்கான எடிட்டர் அல்ல’வென. 

வெளியான பின்னரோ 50 லட்சம் புத்தகங்களுக்கு மேல் விற்பனையானது. 1949ல் கேரி கூப்பர் நடிக்க திரைப்படமாக வெளியானது. பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டது. அறுபத்தேழு வருடங்களுக்குப் பின்னும் இன்னும் மீள் பதிப்பில் உள்ளது.

தன் வாழ்க்கை குறித்த தெளிந்த முடிவோடு, எத்தனை இடரிலும் சமுதாயச் சாக்கடையில் ஓர் புழுவாக மறுக்கும் ரோர்க், தன் தகுதி மீறி யாரோவாக ஆசைப்பட்டு, அது தன்னால் இயலாது என்பதை உணராத பீட்டர் கீட்டிங், தன் சுய முன்னேற்றத்துக்காக மற்றவரை அழிக்கவும் தயங்காத எல்ஸ்வொர்த் டூஹே என்ற கலை விமரிசகன், ஏழ்மையிலிருந்து பெரும் பணக்காரனாகி, பத்திரிகை அதிபரான வைனண்ட், கலாச்சார விலங்கையுடைத்து இயற்கையோடியைந்த நவீன கட்டிடக் கலையின் முன்னோடியாக கேமரோன் இவர்களைச் சுற்றிப் பிணைந்த கதை.

ரோர்க்கினுடையதைப் போன்ற அதி உன்னதமான படைப்புகள் அதைப் போற்றத் தெரியாத சமுதாயத்துக்கு அளிக்கப்படக்கூடாது என்பதில் தெளிவாயிருக்கும் டோமினிக், அத்தகையதோர் உன்னதமான புரிதல் கொண்ட சமுதாயம் கிட்டாதென்பதால்,  ரோர்க்கைப் போன்ற உன்னதங்களை ஒதுக்கி கீட்டிங் போன்றவர்களைப் பாராட்டும் யதார்த்த உலகுக்கு முற்று முழுதாகத் தன்னை அர்ப்பணிக்கிறாள்.

கீட்டிங்கிடம் வலியச் சென்று திருமணம் செய்ய சம்மதித்த நொடியிலிருந்து மனமுவந்து அவனுக்குத் தன்னை அர்ப்பணிக்கிறாள். ரோர்க்குக்கு எதிராக அவனுடைய வாடிக்கையளர்களையும் கீட்டிங்கின்பால் ஈர்க்கிறாள்.  புகழுக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்ட கணவனுக்காக அவன் விருப்பப்படி வைனாண்டுடன் உறவு கொள்ள சம்மதிக்கும் டோமினிக்கை, கீட்டிங்கின் வாயடைத்து, டைவர்ஸ் பெற வைத்து வைனாட் திருமணம் செய்துக் கொள்கிறான். காலப்போக்கில் சிறிது சிறிதாக ரோர்க்கைப் போல் தனக்கான மதிப்புணர்ந்த டோமினிக் சமுதாயப் போலி முகங்களை புறக்கணித்து ரோர்க்கின் மனைவியாகிறாள்.

கலாச்சாரம் என்ற கருப்புக் கண்ணாடியணிந்து படித்தாலும், அய்ன் ராண்டின் எழுத்தில் டோமினிக்கை ஒரு மாற்றுக் கூட கம்மியாக  நினைக்கத் தோன்றாது. மாறாக தனக்கென உண்டான அனைத்தையும் விட்டுக் கொடுத்து, யாருக்கோவாக வாழத் தொடங்கிய ஒரு அப்பாவிப் பெண் மெது மெதுவாக தன்னை உணரும் மாற்றம் அவள் மீதான மதிப்பை வானளாவ உயர்த்தும்.

1968ல் இந்தப் புத்தக ஆசிரியர் திருமதி அய்ன் ரேண்ட் சொன்னது இது! இன்றளவும் இது நிலைத்திருப்பதிலிருந்தே எத்தகைய தொலை நோக்கு உடையவர் அவர் என்பது விளங்கும்.

‘ஒவ்வொரு தலை முறையிலும் மிகச் சிலரே மனிதனின் முறையான உயர்வை உணரவும் அதை அடையவும் செய்கிறார்கள் என்பதும் ஏனையவர்கள் அதற்கு துரோகம் செய்கிறார்கள் என்பதும் முக்கியமல்ல. அந்தச் சிறுபான்மையினரே இந்த உலகத்தை நடத்துகிறார்கள். வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் தருகிறார்கள்.’

அந்த ஒரு சிலரை மட்டுமே நான் சந்திக்க விழைகிறேன். இதரர்களைப் பற்றி எனக்கு எந்த அக்கரையும் இல்லை. எனக்கோ இந்தப் புத்தகத்துக்கோ அவர்கள் துரோகம் செய்யவில்லை. தன்னுடைய ஆன்மாவிற்கு துரோகம் செய்கிறார்கள்’

இந்தியப் பதிப்பு என்று சாணிப் பேப்பரானாலும் 150ரூக்கு லேண்ட்மார்க்கிலும், ஹிக்கின்பாதம்ஸிலும் கிடைக்கிறது. படிக்கத் தொடங்கினால் நாம் என்னவாக இருக்கிறோம்? ஏன் ரோர்க்காக இல்லை? என நம்மை நமக்கு உணர்த்தும் என்பது நிச்சயம்.

Monday, February 15, 2010

கொச்சுக் கொச்சு சந்தோஷங்கள்.


ம்ம். கொச்சுக் கொச்சு சந்தோஷங்களில் கொஞ்சமே மாத்ரம் வலியும் கூடிய ஒன்னாணு இது. ஆம். மனச்சுமையைக் கொட்டித் தீர்க்க என்று ஆரம்பித்து பின்னூட்டப் புயலிலும் ஓட்டு மின்னலிலும் அலக்கழிந்து ஒரு வருடம் நிறைந்தாகி விட்டது.

ஊக்கங்கள் தந்த உந்துதல், இடித்துரைத்த  இதங்கள், அதையும் தாண்டி என்னாச்சு சார்? இடுகையைக் காணோம் என்ற அக்கறையான விசாரிப்புகள் கொச்சு சந்தோஷத்தில் ஒன்றாயிடினும், ஒரு சிலரின் எழுத்தின் வேகமும் தாக்கமும் எழுதினா இப்படி எழுதணும்,. நானும் எழுதுறேன்னு எழுதி என்னவாகப் போகிறது என்ற தயக்கம் இருக்கத்தான் செய்கிறது.

இந்தக் கொச்சு சந்தோஷங்களைத் தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. திரும்பத் திரும்பச் சொன்னாலும் நன்றி பாராட்டத் திகட்டுமா என்ன? இந்த மகிழ்ச்சிக்கு காரணமான ப்ரியாவுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன்.


இனி அடுத்த கொசுவத்தி.

மாணவரணித்தலைவராக தி.கு.ஜ.மு.க.வில் பதவி கிடைத்ததிலிருந்து கட்சிப் பணிக்காக ஒதுங்கியிருந்த என்னை, முகிலப் பாண்டியர் (எளக்கிய அணித்தலைவர்..ஆமா! கலகலா கவிதைக்கு எதிர்கவுஜ 2 நாள்ள வரும்னு அறிவிப்பு என்னாச்சி தலைவரே!) தொடர் இடுகை எழுதி மாட்டிவைக்க முடிவு செய்துவிட்டார். அதிலும் கவனமிருப்பதை சொன்னால் போதும் என்ற உள்குத்து வைத்து என் மாணவரணிப் பதவியைத் தட்டிப் பறிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளதால், மீண்டும் களம் திரும்ப வேண்டிய கட்டாயம்.

பன்னிரண்டு வயது நிறையுமுன்னரே அப்பாவின் காரியத்துக்கு வந்திருந்த உறவுகள் அருகில் அழைத்து, இனி நீ குழந்தையில்லை. குடும்பத் தலைவன். கம்மனாட்டி வளர்த்த பிள்ளை கழுதைக் குட்டி என்ற பெயரெடுக்காமல் நல்ல பிள்ளையாக வளரவேண்டும் என்று சொன்ன போது டீனேஜுக்கான சுதந்திரம் அனைத்தும் பிடுங்கப்பட்டது புரியாத வயது.

படித்தது இரயில்வேத் தொழிளாளர்களுக்கான உதவி நிலைக் கல்விக் கூடம். கோ எஜுகேஷன் பள்ளிதான். எட்டாவது படித்தால்தான் ரயில்வேயில் வேலை வாங்கலாம் என்ற குறிக்கோளில் அனுப்பப்பட்ட பிள்ளைகள் அதிகம். பதினொன்றாம் வகுப்புக்கு பரிட்சைக்கும் S.S.L.C. புத்தகத்துக்கும் மட்டுமே பதினைந்து ரூபாய் ஃபீஸ் கட்டும் வசதி. அருகிலிருந்த இரண்டு பள்ளிகளில் இந்தப் பள்ளியில் ரவுடித்தனம் குறைவு என்பதாலும், அப்பாவின் அலுவலகத்துக்கு பின்புறம் என்பதும் காரணமாயிற்று.

பெரும்பான்மை மாணவ மணிகள் முரட்டுப் பெற்றோர்களின் முரட்டு வாரிசுகள் என்பதால் அவர்களைத் திருத்துவதை விட எங்களைப் போல் ஏப்பசாப்பைகளை காப்பாற்றி கரை சேர்ப்பதே ஆசிரியர்களுக்கு பெரும்பாடாய் ஆனது. ஆக பள்ளி என்பது சண்டியர்களுடனான சர்வைவலுக்கு ஓர் வழிகாட்டியாக அமைந்து போனது.

எட்டாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு முடிந்து ஒன்பதாவது வகுப்புக்குத் திரும்பிய போது பெரும்பாலான மாணவிகள் அக்காவாகவும் மாணவர்கள் அண்ணாவாகவும் வளர்ந்திருக்க காரணம் புரிந்திருக்கவில்லை. எட்டாம் வகுப்பில் டீச்சர் போர்டில் எழுதுகையில் குரங்கு மாதிரி டெஸ்க் மீதேறித் தாவும் சுகுணா ஒன்பதாம் வகுப்பில் தலை குனிந்து ஓரக்கண்ணால் ஜானகிராமனைப் பார்த்து உதடு சுழிப்பதைப் பார்க்க சிரிப்புதான் வந்தது.

பத்தாவது படிக்கையில் புதிதாக வந்த தமிழாசிரியர் தமிழ் விழாவுக்கு ஏற்பாடு செய்து, தலைமை விருந்தினராக ஒரு மடத்தலைவரை அழைத்திருந்தார். மார்பு முழுதும் சந்தனம் பூசி, மஞ்சள் உடையோடும் தலைப்பாகையோடும் சங்கத்தமிழ் அழகு சொல்லி, வீட்டிற்கு வரும் தலைவன் தன் குழந்தையைக் கொஞ்சத் தூக்க தலைவி பாய்ந்து வந்து பிடுங்கிக் கொண்டு, தலைவன் பரத்தையர் வீட்டிலிருந்து வருவதால் அவள் பூசிய சந்தனம் மார்பில் இருப்பதாகவும், அது குழந்தையின் கால் பட்டு அழிந்தால் அவள் சபிப்பாள் என்றும் விளக்கிக் கொண்டிருக்க, கூட்டத்தில் இருந்து ஒரு குரல், சாமி நீங்களும் அங்க இருந்தா வர்ரீங்க என்று எழுந்தது. அதுவே முதலும் கடைசியுமான இலக்கியக் கூட்டமானது.  

பதினோராம் வகுப்பு முடிய தினத்தந்தி பேப்பரில் ரிஸல்ட் பார்த்து (யாருக்குத் தெரியும் ரிஸல்ட் பார்ப்பது எப்படியென்று?) 72-74 என்றிருக்க பொங்கி எழுந்த கண்ணீருடன் நான் ஃபெயில் என்று திகைத்துப் போனேன். அம்மா பதைத்தபடி கட்டையில போறவனே என்னடா சொல்ற என்று அலற, ஆமாம்மா நல்லாதான் எழுதினேன். 72 பாஸ் 74 பாஸ் என் நம்பர் 73 காணோம் என்று விசும்பி, ஃபெயிலான பக்கத்து வீட்டு அண்ணன் வாங்கிப் பார்த்து 72லிருந்து 74 வரை பாஸ். நீயும் பாஸ் என்றால் நம்ப மாட்டாமல் பள்ளிக்கு ஓடி, பள்ளியில் இரண்டாமிடம் எனத் தெரிந்ததும் கொச்சு சந்தோஷம். (அவ்வ்வ்வ்வளவு பொது அறிவு)

எப்படியும் 18 வயது முடிய வேலைக்குப் போக வேண்டும். ஒரு வருடம் வீணாகாமல் பி.யூ.சி. படிக்கலாம் என்ற தெளிவுடன் டி.ஜி. வைணவக் கல்லூரியில் அட்மிஷன் கிடைக்க, இண்டர்வியூவிற்கு அரைக்கால் டவுசருடன் போய் அட்மிஷன் கிடைத்து, சின்னப் பையன், ட்ரவுசர் பாந்தமாதான் இருக்கும்மா. பேண்ட் இல்லை என்றால் வேட்டியுடந்தான் கல்லூரிக்கு வரவேண்டும் என்ற முதல்வரின் அறிவுறுத்தலில் முதன் முதலாக கரும்பச்சை, மற்றும் காப்பிப் பொடி (அழுக்குத் தெரியாமல்) காட்டன் பேண்ட் தைத்துப் போட்ட போது இன்னும் கொச்சு சந்தோஷம்.

பி.யூசி முடித்து வேலைக்கு காத்திருத்தலுக்கான அடுத்த ஒரு வருடம், பேப்பர் படிக்க மாநில கிளை நூலகத்தில் போய், கிடைத்தததைப் படித்து 12 மணிக்கு மூடும் நேரம் இறைந்து கிடந்த பேப்பர் எல்லாம் சீராக அடுக்கி வைத்துக் கிளம்புவதைக் கண்ட நூலகர் மெதுவே தன் மேசை எதிரில் அமர்ந்து படிக்க அனுமதித்தார். ஓரிரு மாதங்களில் அவர் வேலையாக வெளியே செல்ல நேரிடின், ரம்ஜான் நோன்பு காலத்தில் என்று முற்று முழுதாக நூலகப் பொறுப்பு என்னுடையதாயிற்று. பதின்ம வயதில் புத்தகங்களுடனான அந்த ஒரு வருடம் இன்று வரை தொடரும் மிகப் பெரிய கொச்சு சந்தோஷம்.

முத்தாய்ப்பாய் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா இவன் என்று சலித்துப் போய், ரயில்வேயில் அப்பாயின்மெண்ட் ஆர்டர் என் கையில் சேர்ந்த போது என் பிறந்த நாள் பரிசாக கொடுத்தது விதி.

கொசுவத்திக்கான என் அழைப்பு திரு கதிர், ஆரூரன் அவர்களுக்கு. (ஹெ ஹெ. கதிர்! சரக்கு இதோ! இடுகை எங்க?))