Thursday, September 10, 2009

சொல்லாமல் மறைத்த பதில்கள்..

அம்மா: மண்ணுல படுத்து புரண்டு எழுந்து வருவியா. யூனிஃபார்ம்லாம் இவ்வளவு அழுக்கா வந்தா யாரு துவைக்கிறது?
மகன்: (வாஷிங் மெஷின் தான். நீங்க ஸ்கூல்ல விளையாடும் போது தரைல கம்பளம் விரிச்சிட்டா விளையாடினீங்க)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மா: கண்ணுல்ல. டாக்டர் சொன்னாங்கல்ல. நிறைய காய் சாப்பிடணும்னு. சாப்புடும்மா.
மகன்: ( நம்ம வீட்ல ஒரு நாளாவது சாப்பிட்டிருந்தா அப்படி சொல்லி இருப்பாருன்னு நினைக்கிறீங்க?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: ஆங்கிலத்துல என்ன மார்க் எடுத்திருக்க? இதெல்லாம் ஒரு மார்க்கா?
மகன்: (அன்னைக்கு அந்த அங்கிள் கலியாணத்தில உங்களுக்கு ரெண்டு வரி ஒழுங்கா ஆங்கிலத்தில எழுத வராதுன்னு உங்க பாஸ் யார் கிட்டயோ சொல்லிண்டிருந்தாங்களே. நான் கேட்டேனா?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: ஆயிரம் ஆயிரமா ஃபீஸ் கட்டுறோம்ல. நல்லா படிச்சா என்ன?
மகன்: (லட்சம் லட்சமா சம்பளம் தராங்களே. நீங்க வேலை செஞ்சா என்ன?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மா: விளக்கு வெச்சாச்சி. இன்னும் காமெடி சானல் பார்த்துண்டிருக்காம போய் படி.
மகள்: (சீரியல் ஆரம்பிச்சிடும். ரிமோட்ட குடுன்னு நேர்மையா கேட்டா என்ன குறைஞ்சிடும்)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: என்னேரமும் டிவி, விளையாட்டுன்னு இல்லாம நிறைய படிக்கலாமே. அறிவு வளரும்ல?
மகன்: (நீங்க எனக்கு அப்பாவாகி இத்தன வருஷத்தில ஒரு நாளும் படிச்சி நான் பார்க்கலையே.)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: புக், கைட்னு எல்லாம் வாங்கிக் குடுத்திருக்கேன்ல. ஒரு நாளாவது படிக்கிறியாடா?
மகன்: (வாங்கிக் கொடுக்கிறதுக்கு ஒரு மணிநேரம் ஆகி இருக்குமா? வருஷம் புல்லா நான் படிக்கணும்னு எதிர்பார்த்தா என்ன நியாயம்)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மா: கணேஷ் எவ்ளோ மார்க் வாங்கறான். உனக்கென்ன கேடு?
மகன்: (கணேஷ் ஸ்கூலுக்கு கார்ல வரான். அவனுக்கு லேப்டாப் இருக்கு. அதுக்கு ஏற்பாடு பண்ண முடியுமா)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: அந்த அங்கிள் ஏதோ கேட்டா  பதில் சொல்லாம போறது மேன்னர்ஸ் இல்லை. தெரிஞ்சதா?
மகன்:(அவங்க போனப்புறம் சரியான சாவுகிராக்கின்னு சொல்றது மேன்னர்சாப்பா?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டீச்சர்: கணக்குப் பரீட்சைல எவ்வளவு சுலபமா கணக்கு குடுத்தும் இவ்வளவு பேர் தப்பு தப்பா பண்ணி இருக்கீங்களே?
மாணவன்:(எங்கண்ணனுக்கும் நீங்கதான் டீச்சராமே. சிலபஸ் மாறிடுச்சின்னு கணக்கெல்லாம் நீங்களும் திணறி திணறிதான் போடுறீங்கன்னு சொல்றான்.)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டீச்சர்: பசங்களா, நானும் ஒரு அப்துல் கலாம் மாதிரி வருவேன்னு வெறியோட படிக்கணும்.
மாணவன்:( சே. இந்த கலாம் அங்கிள் நீங்க படிக்கும் போதே விஞ்ஞானியாகி இருக்கலாம்)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
டீச்சர்: பரிட்சைல காபி அடிச்சா அப்புறம் பரீட்சை எழுத முடியாது, சாக்கிறதை.
மாணவன்:(சாக்கிறதையா அடிச்சா நீங்க புடிக்கவே முடியாதே.)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: அரை வருச பரீட்சைல கணக்குல 100 வாங்கினா உனக்கொரு ஜீன்ஸ் வாங்கித் தரேன்.
மகன்:( அதே பேப்பர் நீங்க எழுதி 50 மார்க் வாங்கினா நான் ஒரு மாசம் டி.வி. பார்க்காம இருக்கேன்.)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மா: எப்போ பார்த்தாலும் பிஸா, நூடில்ஸ்னு ஃபாஸ்ட்ஃபுட் உடம்புக்கு நல்லதில்ல.
மகன்:(எங்கயாவது போய்ட்டு , ஏங்க ரொம்ப டயர்ட், பிஸா வாங்கிண்டு போலாம்னு சொல்றப்போ நல்லதோ?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: டெய்லி அகராதி எடுத்து ஒரு பத்து வார்த்தை பார்த்து அர்த்தம் தெரிஞ்சிக்கடா.
மகன்:(தாத்தாக்கு அவங்கப்பா குடுத்தது மூலை மடியாம இருக்கே அதாப்பா?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: கழுத வயசாச்சி. எப்பவும் தங்கச்சி கூட சண்டையா? விட்டுக்குடுத்தா என்ன?
மகன்:(ங்கொய்யாலே. காலைல சாக்ஸக் காணோம்னு எனக்கு சாப்பாடு கூட கட்டவிடாம‌ சண்டபோட்டதுக்கு நான் ஏதாவது சொன்னேன்?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: தினம் டீச்சர் கிட்ட இருந்து கம்ப்ளெயின்ட். மானம் போவுது.
மகன்:( ராத்திரி 9 மணிக்கு மேல ப்ரோஜக்ட் மேனஜர் கிழிக்கிறது பால்கனில நின்னாலும் கேக்குதே. ஒரு வார்த்த நான் இப்படி கேட்டிருப்பேன்?)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அப்பா: மணி பத்தாகுது. போய் படு. எப்போ பார்த்தாலும் நெட்ல
மகன்:(உருப்படாத இடுகை போடுறதுக்கு அலம்பல பாரு.)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

9/9/09 - இந்தியப் பதிப்பு

9/9/09னு நிறைய இடுகையில பார்க்க நேர்ந்தது. என்னதான் இருக்கும்னு தேடினா நம்மளுக்கும் கிடைக்கும்ல. கிடைச்சது இது. பிரமிப்பா வியப்பா இருந்த விடயங்கள் இதிகாசச் சரித்திரத்தில் இருந்து:

தேவ அசுர யுத்தங்கள் நடந்த ஆண்டுகள் 18 ---1+8=9
ராம ராவண யுத்தங்கள் 18 மாதம் = 9
மஹா பாரதப் போர் நடந்த காலம் 18 நாட்கள்=9
மஹா பாரதத்தில் உள்ள பருவங்கள் 18=9
பகவத் கீதையில் அத்தியாயங்கள் 18 = 9
பாரதப் போரில் ஈடுபட்ட சேனைகள் 18 = 9
பீஷ்மர் தருமருக்குச் சொன்ன அரசனின் கடமைகள் 18=9
போரில் ஈடுபட்ட ரதங்கள் 21870=9
யானைகள் 21870=9
காலாட்கள் 1,09,350=9
குதிரைகள் 65,610=9
அரச இலச்சினைகள் 18=9
அரச தண்டனை வகைகள் 18=9
ஜராசந்தன் கிருட்டிணனிடம் சண்டையிட்டு தோற்றது 18 தடவைகள் =9
கிருத யுகத்தில் ஆண்டுகள் 17,28,000=9
த்ரேதாயுகத்தில் ஆண்டுகள் 12,96,000=9
த்வாபரயுகத்தில் ஆண்டுகள் 8,64,000=9
கலியுகத்தில் ஆண்டுகள் 4,32,000=9

நான்கு யுகங்களின் மொத்த ஆண்டுகள் 43,20,000=9
திருதராட்டிரன் பாரதப் போருக்குப் பிறகு வாழ்ந்த ஆண்டுகள் 18=9
காந்தாரி கிருட்டிணனும் அவன் உறவினர்களும் பாரத யுத்தம் முடிந்த 36ம் ஆண்டில் கொல்லப் படுவர் எனச் சபித்தாளாம். இதுவும் 9
யுதிட்டிரன் போருக்குப் பிறகு ஆண்டது 36 வருடங்கள் =9
நல்ல அரசனின் குணங்கள் 36 =9
தமிழ் சங்க நூல்கள் பதினெண்கீழ் கணக்கு, பதினெண் மேல் கணக்கு
கலம்பகத்தில் உறுப்புகள் 18=9
சித்தர்கள்  18=9
காவிரி பெருக்கெடுப்பது ஆடி 18 =9
விதை விடும் சுபநாள் ஆடி 9
கஜினி முகம்மது இந்தியாவின் மீது போர்தொடுத்து தோற்றது 18 தடவை = 9**
(நன்றி :  Your Family Friend September 2009)
(இந்தக் கணக்கெல்லாம் சரின்னு என்ன ஆதாரம்னு கேக்காதிங்கப்பு.  புள்ளையார் லேப்டாப்ல எழுதினது பொய்யாவா இருக்கும். )

போர் தொடுத்தது 17 முறை என்றும் தோற்கவில்லை என்பதும் கூறப்படுகிறது

----------------------:*:----------------------

Wednesday, September 9, 2009

ரகசியமாய் ஒரு...

பாலசந்தரோட மரோ சரித்ரான்னு   ஒரு படம் ஸஃபைர் தியேட்டர்ல அந்த ஓட்டம் ஓடிச்சு. அப்போ ஆஹான்னு பார்த்து, அப்புறம் என்னடா லூசுத்தனமா லாஜிக் இதுன்னு நினைச்ச விஷயம் ஒன்னு. உண்மையான காதலான்னு கண்டு பிடிக்கிறாங்களாம். கதா நாயகனும் கதா நாயகியும் ஒரு வருடம் ஒருத்தர ஒருத்தர் பாராம, பேசாம, கடுதாசு. ஃபோனு ஒண்ணும் இல்லாம இருக்கணும். அப்படியானா கலியாணம் பண்ணி வைக்கலாம்னு. ஹிஹி . நம்ம வாழ்க்கைலையும் இப்படி லூசுத்தனமா ஒரு விவகாரம் பண்ணாங்க.

எப்போ எப்புடி இந்த கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆச்சின்னு இப்போ கூட புரியல எனக்கு. நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே அப்படி ஒரு கிறுக்கு அதும்மேல. நாலு வீடு தள்ளி அது இருந்தாலும் எனக்கு இங்க நிலை கொள்ளாம தவிப்பேன். நின்ன இடத்துல நிக்காம   எப்போ எப்போன்னு தவிப்பா இருக்கும். வீட்டுல பெருசுங்க கண்டிசனா இதெல்லாம் இங்க வேலைக்காவது பய புள்ள. ஒழுங்கா எந்த மட்டுக்கோ அந்த மட்டுக்கு இருடின்னா , தல எழுத்துடான்னு எத்தனையோ விடயம் விட்டுத் தொலைஞ்ச மாதிரி இருந்திருக்கலாம். கொஞ்ச நேரத்துல பய கிறுக்கு புடிச்சி அலையப் போறாம்  பாருன்னு  பெருசுங்க நம்ம காது  படவே சொல்லி உசுப்பேத்தினா நம்மளுக்கு குளிர் விட்டு போய்டுமா இல்லையா? அப்புறம் எதுக்கு கவலைப் படப்போறம்?

இப்படி நல்லா போய்க்கிருந்த நாள்ல பி.யூ.சி முடிச்ச கையோட ஒரு பிரச்சினை வந்து போச்சி. பிரச்சினை முடிஞ்சதுன்னு விட்டா பெருசுங்களுக்கு எங்க மதிப்பு?  காலங்காலமா அவங்க அடக்கு முறைய பிள்ளைங்க கிட்ட காட்டித்தானே  பழக்கம். வெச்சாங்க வேட்டு நமக்கு. இனிமே கொஞ்ச நாளைக்கு கண்ணுலையும் காணப்படாது. எந்த ஓட்டும் உறவும் இல்லன்னு. பிரச்சினை தான் முடிஞ்சதே; அப்புறம் ஏன்னு போராடினதில கெட ஒரு ஆறு மாசம், அப்புறம் பார்க்கலாம்னு ஒரே போடு. எது எப்படி கேட்டாலும் ஒரே பதில். அது ஒத்து வராது. இவ்வளவு நாள் இல்லாதது இப்போ என்னான்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாலும் பெரியவங்க சொன்னா எதிர்த்துப் பேசறதுஎன்னா  பழக்கம்? உனக்கு நல்லது எது கெட்டது எதுன்னு எங்களுக்கு தான் தெரியும்னு அராஜகம் பண்ணாங்க‌.

அக்காட்ட மெதுவா கெஞ்சி நீயாவது சொல்லுன்னா அது எட்டப்பனா மாறிடுச்சி. வெண்ணைய, அதான் என் தம்பி, அவன கெஞ்சி, மிரட்டி என்னல்லாம் பண்ணாலும் அவனும் எட்டப்பன்  ஆனதோட  எதிரணிக்கு மாறிட்டான். உண்ணா விரதம், சீன போடுறது எதுவும் ஒர்க் அவுட் ஆகல.  மனுஷனுக்கு எப்பவுமேவா கஷ்டம் இருக்கும்? ஒரு நாள் விடியாம போய்டுமா?  மாமா குடும்பத்தோட வந்தாங்க. இவரு மூலமாவாவது இந்த அநியாயத்துக்கு ஒரு விடிவு வராதான்னு மனசு தவிச்சாலும், பயம் அவர்கிட்ட. அவருக்கும் அத ரொம்ப பிடிக்கும். ரெண்டு நாளு போக அம்மாவ கேட்டாங்க. எங்க அத கண்ணுலயே  காணோம்னு. இல்லண்ணா இந்தப் பயபுள்ளயால பிரச்சன. ஒரு ஆறு மாசம் போகட்டும்னு விட்டிருக்குன்னாங்க.  பாவி மனுஷன் சின்ன பையன் அவன் ஆசைய கெடுக்காதன்னு சொல்ல வேணாமா?  நம்மள மீறி என்ன நடந்துடும்மா? அதுக்காக இப்படியான்னு இன்னைக்கு கண்டே ஆகணும்னு சொல்லிட்டாங்க.

ச்சீன்னு ஆகிப்போச்சு. ஒருத்தனுக்கு கூடவா சின்னப்பசங்க தவிப்பு புரியாதுன்னு. ஆனாலும் ஒரு சந்தோசம். இன்னைக்கு நம்ம வீட்ல பார்க்கவாவது முடியும்னு. பாராம பார்த்ததும் பரவசம் ஒரு பக்கம்,  இயலாமை ஒரு பக்கம்னு நான் பட்ட பாடு இருக்கே. கமல் மாதிரி மண்டைல கொம்பு முளைச்சுடுத்து. இன்னைக்கு அத்தனை பேருக்கும் வைக்கிறேண்டா ஆப்புன்னு. யாரையும் மதிக்கறதில்ல. என் மனசும் தவிப்பும் உங்களுக்கு புரியாதப்போ உங்க பேச்சுக்கு நான் ஏன் மதிப்புத் தரணும்னு ஒரு புரட்சியே உண்டாச்சு. சாப்பாடு முடிச்சி மேட்னி ஷோக்கு போறதா ஏற்பாடு. எனக்கு டெஸ்ட் இருக்கு நான் படிக்கணும்னு ரொம்ப சாமர்த்தியமா பிட்ட போட்டேன்.

அதுங்க என்னிய மாதிரி எத்தன பார்த்திருக்கும். அப்படியாடி,  சரி படிச்சிக்கோன்னு சொல்லிட்டு மாமா பையன காவலுக்கு விட்டாங்க. ஆஹான்னு இருக்க,  யக்கா நானும் வரலைன்னு குண்ட போட்டுச்சி.  பார்க்கலாம் அதயும்னு கருவிக்கிட்டு காத்து கிடந்தேன். உண்ட மயக்கத்துல அக்கா கொர்ர ஆரம்பிச்சது. மாமா பையன தள்ளிக்கிட்டு போய் மவனே மாடிப்படி கீழ சந்து இருக்கு பாரு. அங்க நிப்பேன். 10 நிமிஷத்துல யாருக்கும் தெரியாம அதோட அங்க வர. இலைன்னாலோ  இல்ல போட்டு குடுத்தியோ சங்க அறுத்துடுவேன் ஓடுன்னு மிரட்டி சத்தம் போடாம படி கீழ நின்னு தவிச்ச தவிப்பிருக்கே.  எந்த டைரக்டர்ரும்  அந்த பீலிங் சொல்ல முடியாது.

பய புள்ள பம்மி பம்மி கூட்டியாந்து கைல ஒப்படைச்சிட்டு ஓடியே போய்ட்டான். உடம்பெல்லாம் பர பரக்க, உதடு துடிக்க, கையெல்லாம் வெட‌ வெடன்னு நடுங்க, யாரும் பார்த்து போட்டு குடுத்துடுவாங்களோன்னு பதைக்க , டப்பாவ தொறந்து தயிர் சாத‌த்த பிசைஞ்சி, உருட்டி எடுத்து கட்டை விரலால ஒரு குழிய பண்ணி அது நிறைய வெங்காய வத்தக்குழம்பை நிரப்பி முதக்கவளம் உள்ள போகவும் அழுவாச்சியா வந்துச்சி. நாசமாப் போற டாக்டர்  டைஃபாயிட்  திரும்ப  வந்தா கஷ்டம், அதனால ஆறு மாசம் காரம், எண்ணெய் எல்லாம் தவிர்க்கணும்னு சொன்னான்னு உன்ன என்கிட்டே இருந்து பிரிச்சி எப்படி தவிக்க விட்டாங்கன்னு சாப்பிட்டது இருக்கே.,அதுக்கப்புறம் எத்தனையோ நாள் சாப்பிட்டாலும் அந்த குழம்பு ருசிய அடிச்சிக்க முடியல.
________________