Sunday, May 13, 2012

கேரக்டர்: கன்னீப்பா

சொல்வனத்தில் வெளிவந்த ரோமாக்கள் குறித்தான கட்டுரையைத் தொடர்ந்து தென்றல்’ஸ் ப்ளஸ்ஸில் ஜிப்சிக்கள் குறித்தான விவாதம் படித்துக் கொண்டிருந்தபோது தமிழ்நாட்டு ஜிப்சிகள் குறித்தும் பேசப்பட்டது. என் பள்ளி நாட்களில் ஏறக்குறைய 8 வருடம் அவர்களை அவதானித்திருக்கிறேன். விடுமுறையில் பெரியம்மா வீட்டிற்கோ மாமா வீட்டிற்கோ செல்லும்போதெல்லாம் அவர்கள் ஊரைத் தவிர ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் மட்டுமே. வண்டி ப்ளாட்ஃபார்மில் நுழையுமுன்னே சிற்றெறும்புக் கூட்டங்களாகச் சிதறி ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாக ஓடிப் பதப்படுத்திய அணில் விற்கும் குறத்திகள். சின்னப் பலகையில் பாய்ந்தேரத் தயார் நிலையில் சற்றும் அழகு கெடாத அணிலின் குண்டுமணிக் கண்ணில் எப்படி உயிர் கொண்டுவரமுடியும்? ‘சாம்யோ! ரண்ட்ரூப்பா சாம்யோவில் ஆரம்பித்து வண்டி புறப்படும்போது கூடவே ஓடி வர்ருப்பா குடுசாம்யோவில்’ முடியும் பேரம். முன் தோள் ஒன்று புடைக்க ஒரு கால் முன்வைத்து, பின்னங்கால் இரண்டும் சற்றே மடிய இரை பிடிக்கும் பார்வையோடு பதுங்கி நிற்கும் பதப்படுத்திய நரியின் கோலிக் கண்ணில் அத்தனை கள்ளம் எப்படி வைத்தான் ‘பத்ருப்பா குடு சாமி! காலீல கண்ணு முய்ச்சா லச்சுமி சாமி என்றும், சத்யமா நம்பு சாமி! நரிக்கொம்பு சாமி! ராசி சாமி! அஞ்ச்ரூப்பா குடு சாமி’ என்று கெஞ்சும் அந்தக் குறவன்? அயனாவரம் ரயில்வேக்காலனி குறவர்கள் ஏன் அணில் விற்பதில்லை? கிளிக்குஞ்சும், மைனாக் குஞ்சும் மட்டும், சமைப்பதற்கு கொளுத்திய டயர் கம்பியில் அவர்களே பின்னி, அலுமினிய பெயிண்ட் அடைத்த கூடையில் வைத்து விற்பது ஏன்?

நாய் கடித்துக் குதறி குற்றுயிராய் குப்பைத்தொட்டியில் முடங்கிய நோஞ்சான் பூனைக்குட்டியை புதையல் மாதிரி அள்ளி எடுத்து தெருக்குழாயில் குளிப்பாட்டி, காயத்துக்கு தினத்தந்தி பேப்பர் கிழித்து ஒட்டி, டால்டா டப்பாவில் நேற்று இரவு முறை வைத்து வீதிகளில் ராப்பிச்சம்மா என்று வாங்கிய வெங்காய சாம்பார்,ரசம்,கறிக்குழம்பு,மீன் குழம்பு எல்லாம் ஒன்றாகக் கொட்டிக் கலந்து அதிலிருந்து ஒரு துண்டு மீனோ கறியோ பகிர்ந்து   கொழுகொழுவென்று வளர்த்த அந்தப் பூனையை மடியில் வைத்து ஒரு கையால் தடவிக் கொண்டே மறுகையால் கூராகச் சீவப்பட்ட மூங்கிலை அதன் ப்ருஷ்டத்தில் ஒரே சொருகாகச் சொருகி டயர் கொளுத்திய ரப்பரில் சுட்டு கும்பலாக உட்கார்ந்து பிய்த்துத் தின்ன எப்படி மனம் வரும்?

மருந்துக் கடையில் துவளத் துவள இடுப்பில் குறுக்காக தூளி மாதிரி கந்தல் துணியில் கிடக்கும் குழந்தையைக் காட்டி, எட்டணாவை நீட்டி ’புள்ளக்கி கண்ணு தொர்க்காத ஜொரம் சாமி! நோவால்ஜின் குடு சாமி என்றோ, பத்ருப்பா சில்ற குடுசாமி என்றோ கெஞ்சும் குறத்தியை பெரிய கழியோடு ஏன் கடைக்காரர் விரட்டுகிறார்?

எல்லாம் விட ஐம்பதுக்கும் குறையாத ஆணும், பெண்ணும், குழந்தையுமான கூட்டத்தில் ஆண்களெல்லாம் ‘கன்னீப்பாவாகவும்’ பெண்களெல்லாம் ‘கன்னீமா’வாகவும் இருக்க யாரோ ஒரு கன்னீப்பாவோ கன்னீமாவோ கூப்பிடும்போது எப்படி சரியான கன்னீமாவோ கன்னீப்பாவோ புரியாத பாஷையில் பதில் சொல்கிறார்கள்?

ஐந்தாம் வகுப்பிலிருந்து பதினொன்றாம் வகுப்புவரை அயனாவரம் ஜாயிண்ட் ஆஃபீஸ் ஓரம், பள்ளிக்கூட மைதான நிழலில் என்று இவர்களை அவதானிப்பதே பெரிதும் படித்த படிப்பு எனலாம். ஏழாவது வகுப்பு படிக்கும்போது பதினொண்ணாம் வகுப்பு அண்ணன்மார் சொல்லிக் கொடுத்தபடி கும்பலாக போய் குறத்திகளின் எதிரில் மூக்கைச் சொரிந்தால் ‘போசடிகெ, மாதர்சோத்’ என்ற இன்ன பிறவு வசவுகளுக்கான காரணம் பதினொன்றாம் வகுப்புக்குப் சென்றபோது புரிந்து கோபம், பயம், வெட்கம், அருவெறுப்பு என்று கலவையான உணர்ச்சிகளுக்கு ஆளானது சரிதானா?

நாலணாவுக்கு தம்பிடி குறையாது என்று லோலோ என்று கத்தும் கன்னீமா, பிச்சைக்காரியின் குழந்தை கழுத்தில் கருகுமணி போட்டுவிட்டு கொஞ்சுவாள். பேறு வீடுகளில் பேரம் பேசாமல் குழந்தைக்கு கருப்பு வளவியும், கருப்பும் வெளுப்புமான மணிகோத்த கால் கயிரும் கொடுப்பாள். குடலேற்றம் கண்டு துடிக்கும் குழந்தையை இரண்டுகாலை விரலிடுக்கில் பிடித்து தூளி மாதிரி மூன்று வீச்சு வீசி சிரிக்கச் சிரிக்கத் திரும்பத் தருவாள். கையில் நிற்காமல் துடிக்கும் குழந்தையை பார்த்த மாத்திரம் எங்கோ சுளுக்கென்று முறத்தில் இட்டு புடைக்கும் மாயத்தில் அது ‘ஙே’ என்று இளிக்கும். கொஞ்சம் போல சோறோ, குழம்போ, இரண்டு வெற்றிலையோ, ஒரு இணுக்கு கட்டைப் புகையிலையோ கொடுத்தால் போதும். நரம்புச் சிலந்தி எடுத்துக் கொளுத்தி புதுத்துண்டும், கிழிந்த சட்டையும், கவுளி வெத்தலையில் வைத்துக் கொடுத்த 5ரூ தட்சணையோடு ஒரு ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்து முடித்த சர்ஜனின் களைப்போடும் பெருமிதத்தோடும் ‘வ்ர்ரேஞ்சாமி’ என்று போகும் கன்னீப்பா கிழவன் அடுத்த அரைமணியில் ஏழாம் நம்பர் சாராயக் கடையில் ஏற்றிக் கொண்டு கன்னீமாவோடு கோவணம் அவிழ மல்லுக் கட்டுவான். கன்னீமாக்கு கொடுக்காமல் மொத்தமும் குடித்த குடிக்கு சண்டை.

தினமும் பார்த்துப் பார்த்து எந்தக் கன்னீமாவுக்கு எந்தக் கன்னிப்பா புருஷன், எந்தக் கன்னீமா மகள், எந்தக் கன்னிப்பா மகன், எந்தக் கன்னிமா அத்தை, சித்தி போன்ற உறவுகள் புரிந்தது. வாரம் ஒருமுறை செங்கல் அடுப்பில் அலுமினிய டேக்ஸா ஏறுகையில் இன்னைக்கு எந்தப் பூனைக்கு ஆயுசு முடியும் என்று பெட் கட்டும் அளவு புரிந்து வைத்திருந்தோம். கருக்கலில் பால் வாங்கிக் கொண்டு வருகையில் கன்னீப்பா கிழவன் காக்கா அடிக்கத் தயாரானால் அன்றைக்கு வீட்டில் திட்டுதான். பால் வண்டி லேட்டு என்று சொல்லிவிடலாம். அதற்காக ‘கன்னீப்பா கிழவன்’ காக்கா அடிக்கும் காட்சியை விட முடியுமா என்ன?

விரலளவு அடிக்கணுவில் ஆரம்பித்து சிறுத்துக் கொண்டே வந்து மெலிதாக முடியும் முனையில் சின்னக் கோலிக் குண்டு அளவு தார் உருட்டி வைத்திருப்பான். டால்டா டப்பாவிலிருந்து இரண்டுகை சோறு விசுறுவான். ‘க்ராவோவ்வ்வ்வ்வ்க்ரா’ என்று ஒரு குரலுக்கு இருபது முப்பது காக்கைகள் வந்திறங்கும். மறைவிலிருந்தபடியே அந்த மூங்கிலின் வீச்சுக்கு பத்து காகமாவது சுருண்டு விழும். பாய்ந்து அள்ளிப் பிடித்து றெக்கை முறுக்கி வலைக்கூடையில் வைக்க ஆரம்பிக்க வொர்க்‌ஷாப் ஆட்கள் எனக்கு உனக்கு என்று போட்டியிடுவார்கள். அந்த ஒரு வீச்சுதான். கிடைத்தவர்களுக்கு சந்தோஷம். கிடைக்காதவர்களுக்கு வருத்தம். ஏதேதோ வியாதிக்கு ரத்தம் கறி என்று மருத்துவப் பக்குவம் வேறு இலவசம்.

காலையில் எட்டரைக்கெல்லாம் தொழில் பார்க்கக் கிளம்பி விடுவார்கள். மைடப்பா, சாந்து புட்டி, பாசி மணி, ஊசி மணி, கருப்பு வளவி, திருஷ்டி மணி, ப்ளாஸ்டிக் மோதிரம், ப்ளாஸ்டிக் வாச், சீப்பு இதர சாமான்களோடு. ரிட்டையரான பெருசுகளும், அன்றைக்கு சமைக்கும் ஒன்றிரண்டு குடும்பங்களும் மட்டும் இருக்கும். எட்டாவது முழுப்பரிட்சை முடியும்போதுதான் அந்தக் கன்னிம்மா சிறுமி படுத்திருப்பதைப் பார்க்க நேர்ந்தது. வலது கை முழுதும் ரத்தக் களறியாய்க் கொப்புளங்கள். ஓயாது அழுகை. என்னமோ எண்ணெய் போடுவாள் ஒரு கிழவி. முழுப்பரிட்சை முடிந்து திரும்பவும் பள்ளிக்குச் சென்றபோது பார்த்தால் பேரதிர்ச்சி. கையில் சதை என்பதே இல்லை. மஞ்சளும் சிவப்புமாய் எலும்பும், சதையுமாய் அரை மயக்க நிலையில் கிடப்பாள். எல்லாரும் போனதும் ‘கன்னீப்பா கிழவன்’ வீதியோர வெள்ளை கருப்பு கல்லைக் கழுவுவான். ஏதோ இலைகள், கொடிகள், மஞ்சள் கிழங்கு அதைத் தட்ட உடைந்து போன ஒரு குழவி. அதில் அரைத்து ஏதோ எண்ணெயில் வதக்கி ஆற வைத்து அவள் கையில் பற்றுப் போட்டு வலியில் அவள் கதற, அவளை அடக்க இவன் கத்த என்று ஒரு கூட்டம் சேர்ந்துவிடும்.

‘காக்கா கிழவன்’ என்று பேர்தானே தவிர நரைத்தாலும் தலை கொள்ளாத முடியும் குடுமியும் எங்கிருந்தோ வித்தியாசமான தேன் கலர் சருமமும், வழக்கமான தூசும், டயர்கரியுமற்ற உருவம். நல்ல உயரம். கையில் மார்பில் கிளி, கன்னமா (கன்னீம்மா) பெயர், ஒரு வாளைச் சுற்றிப் படர்ந்த இரண்டு பாம்புகள், நெற்றியில் மூன்று புள்ளிகள் என்று பச்சை குத்தியிருப்பான். கரண்டை கரண்டையாக காலும் கையும் ஒட்டிய வயிறும் கிண்ணென்றிருக்கும். கையில் வாட்ச் இல்லாத ஸ்ட்ராப் மட்டும். எல்லா விரலிலும் ஸ்டீல் அல்லது செம்பு மோதிரம். நரிப்பல் கோர்த்த பவளமணி. எம்.ஜி.ஆர் படம் வைத்த ரெக்ஸின் பர்ஸ். பல வண்ண ஒட்டுப் போட்ட ரெக்ஸின் பை. அதற்குள் ப்ளையர், மணிகள், மணி கோர்க்கும் அலுமினிய செம்பு கம்பிகள்.  எப்போதும் புதிதாக இருக்கும் சிவப்பு அரணாக் கயிற்றில் அழுக்குக் கோவணம். வெற்றிலை குதப்பிய வாய். கொச்சைத் தமிழில் எம்.ஜி.ஆர் படப்பாட்டு. சாயந்திரமானால் சாராயம், கன்னீமாவோடு பஞ்சாயத்து.

அந்தப் பெண்ணுக்கு வைத்தியம் என்பதாலோ அல்லது ஆஃபீஸ் வாசலிலே கடையும் போடுவதாலோ காக்காக் கிழவன் வேறெங்கும் போவதில்லை. நாளாக நாளாக அந்தப் பெண்ணின் புண் ஆறுவதாகவும் தெரியவில்லை. அந்தக் கிழவனின் வைத்தியமும் நிற்கவில்லை. ஒன்பதாவது பரீட்சை முடிந்தபோது அந்தச் சிறுமி பிழைக்காது என்ற நிலையில் கிடந்தாள். விடுமுறை முடிந்து வந்தபோது காயங்கள் முற்றிலும் ஆறி செம்புண்ணாக உரித்த கோழி நிறத்தில் இருந்தது கை. சிரிப்பும் சுளிப்புமாக கிழவனுக்கு ஒத்தாசை செய்து கொண்டு தூசும் அழுக்குமாக இருப்பாள். எப்படியோ பள்ளி முடிந்து போகும்போது கன்னீமா வளர்ந்துவிட்டிருந்தாள். அந்தக் கூட்டமும் குறைந்து விட்டிருந்தது. பின்பு படிப்பு முடிந்து வேலை என்றோடி அவர்களை அவதானிக்கும் வாய்ப்பே அற்றுப் போனது.

ஐந்தாறு வருட இடைவெளி இருக்கும். ஆஃபீஸ் முடிந்து கேரேஜ் ஸ்டேஷனில் இறங்கி ஜாயிண்ட் ஆஃபீஸ் வழியாக வரும்போது பழைய இடத்தில் ஒரு பெண்ணும் ஒரு கிழவனும். அந்த தேன் நிறம் சட்டென்று பார்க்க வைத்தது. மடிப்பு மடிப்பாக தடித்து கிடந்ததது தேகம். காது சுருங்கி, மூக்கிருந்த அடையாளமாக இரண்டு ஓட்டைகள், உதடற்ற பற்கள், விரலற்ற இரண்டு உள்ளங்கைகளில் அழுந்தப் பிடித்த அலுமினிய டம்ப்ளர். ஊதிக் கூட குடிக்க முடியாததால் சூடாக இருந்ததாலோ என்னவோ விரலற்ற கால்களுக்கிடையில் டம்ப்ளரை இறுக்கியபடி இரண்டு உள்ளங்கைககளாலும் ஆரஞ்சு சைசில் இருந்த ஒரு கல்லை எடுத்து அடுப்பில் கிளறிக் கொண்டிருந்தவளின் முதுகில் வீசினான். எழுந்து வந்து டம்ப்ளரில் இருந்ததை ஆற்றிக் கொடுத்துப் போனாள். சாப்பிட்ட பிறகு ஒரு கம்பியை வளைத்து பீடியை சொருகி, அடுப்புக் கங்கில் கொளுத்திக் கொடுத்தாள். இரண்டு உள்ளங்கையிலும் பிடித்து பல்லில் கடித்து கைகொண்டு பொத்தி எப்படியோ உறிஞ்சி புகைத்தபடி திரும்பியவன் நிமிர்ந்தான். இமைகளும் சுருங்கி பிதுங்கிய வெண்ணிறக் கோளமாக கண்கள். மெதுவே கை பிடித்து அழைத்துப் போய் கால்வாயோரம் போன கன்னீமாவின் கழுத்தில் கருகமணி.

திடீரென வந்தது போலவே திடீரென ஓரிரு மாதங்களில் காணாமல் போனார்கள். கும்பலிலிருந்து எப்படி இவர்கள் மட்டும் பிரிந்து வந்தார்கள்? ஒரு வேளை அந்தப் பெண்ணை மணந்ததால் ஒதுக்கி வைத்துவிட்டார்களா? புற்று வைத்த கையை இலை தழையால் குணமாக்கியவனுக்கு பெருநோய்க்கு மருந்தில்லையா? திடீரென எப்படிக் காணாமல் போனார்கள். ஒரு வேளை காக்கா கிழவன் இறந்திருக்கக் கூடுமோ? இதை எழுதும்போது கூட அன்றெழுந்த இந்தக் கேள்விகளுக்கு பதிலில்லை. அப்புறம் அவர்கள் எவரையும் பார்க்கவும் முடியவில்லை.

10 comments:

Romeoboy said...

பாலா சார் .. சூப்பரா எழுதி இருக்கீங்க அதும் , ரொம்ப நாள் கழிச்சி அந்த கிழவனை பார்த்த பொழுது அவன் நிலைமையை சொல்லி இருக்கீங்க பாருங்க சான்சே இல்ல செமைய இருக்கு அந்த பத்தி :)

ஓலை said...

Yes. Naanum niraiya paarththirukken.
Arumai sir.

ஸ்ரீராம். said...

-நீண்ட நாளைக்குப் பின் உங்கள் எழுத்துகள்...
-பூனைக்குட்டி படிக்கும்போது 'பகீர்' என்கிறது.
-அவர்கள் பேசுவதை நீங்கள் எழுதியிருப்பதை உச்சரித்துப் படித்தால் அப்படியே ஒரிஜினலாக வருகிறது. நன்றாக நினைவில் நிறுத்தி ஸ்பெல் செய்துள்ளீர்கள்!
-நரம்புச் சிலந்தி? அவ்வளவு எளிதாகவா?
-அருமை.

Kumky said...

நல்லா ஆழமான அவதானிப்பு...மிகை தொகை எதுவும் இல்லாத நடை..
உங்களுடைய ஆழமான நினைவுத்திறனும், போகிற போக்கில் கவனித்திருக்கிற முழுமைத்தன்மையும்தான் மிகப்பெரிய ஆச்சரியங்கள் ஆசான்.

கே. பி. ஜனா... said...

நீண்ட காலத்துக்குப் பின் உங்கள் வருகை உவப்பை அளிக்கின்றது.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி சார்.

Mahi_Granny said...

பாடங்களுடன் இப்படிப்பட்ட மனிதர்களையும் படித்து இருக்கிறீர்கள். கரிசனம் கலந்த எழுத்து நடை உங்களுக்கு மட்டும் சாத்தியம் .

'பரிவை' சே.குமார் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் எழுத்து...
படிக்கும் போதே கட்டிப் போடுகிறது..
நரிக்குறவர் வாழ்க்கையை அழகாக படம்பிடித்து இருக்கிறீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

எப்படி சார் இப்படி நிதானித்துக் கவனித்து ஓரெழுத்து விடாமல் பதிவில் கொடுத்திருக்கிறீர்கள்..
அந்தக் கிழவனுக்கு என்ன ஆச்சோ என்ற கவலை பற்றிக் கொண்ட்து.

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃமருந்துக் கடையில் துவளத் துவள இடுப்பில் குறுக்காக தூளி மாதிரி கந்தல் துணியில் கிடக்கும் குழந்தையைக் ஃஃஃஃஃ

பல ஆழங்களை ஒற்றைப் பதிவில் உரைத்துள்ளீர்கள்... சகோதரம்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்