சீனு மாமா ஆயிரத்தில் ஒருத்தர். அதாவது நீங்கள் பார்த்திருக்கக் கூடியவர்களில் ஒருவர். அநேகமாக இதை வாசிக்கும்போது பரிச்சயமானவர்போல் தோன்றும் என்பது உறுதி. சீனு மாமாவுடனான என் அறிமுகமே தடாலடிதான். ஸஸ்பென்ஸ் அக்கவுண்ட்ஸ் போஸ்டிங் முடித்து ரெகன்ஸிலியேஷன் முடித்து அரையாண்டு நிலுவை ஸ்டேட்மெண்ட் அனுப்பியாக வேண்டும். என்கள் செக்ஷன் ஆஃபீசர் சிக் ஆகிவிட கட்டுமானப் பிரிவிலிருந்து வந்த ஹெட்க்ளார்க் சீனுமாமா தானே முடி சூடிக் கொண்டார். அது ஒரு வெட்டி வேலைதான் எனினும் கர்ம சிரத்தையாக வருஷவாரியாக பிரித்துப் போட்டுதான் பழக்கம். ‘இது ஒரு மயிரு வேலைன்னு கெடந்து சாகிறான். இங்க கொண்டுவாடா’ என்று பத்து நிமிஷத்தில் பழைய ஸ்டேட்மெண்டில் குத்துமதிப்பாக மாற்றி டேலி செய்து அனுப்பிவிட்டு அமர்த்தலாக ‘கெக்கெக்கே’ என்று சிரித்தார்.
சீனுமாமா ஷோக் பேர்வழி. அரை இஞ்சுக்கு திட்டு திட்டானாலும் பரவாயில்லை என்று வேர்வையில் அப்பிய பவுடர். சமயத்தில் ரோஸ் பவுடர் கூட அடித்துக் கொண்டு வருவார். ஐந்தடி மூன்றங்குல உயரம். கட்டை குட்டையான கையும் காலும். விரலுக்கு முன்னோ குதிகாலுக்கு பின்னோ நீட்டிக் கொண்டிருக்கும் செருப்பு. அது அளவாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஃபாரின் சரக்காக இருக்க வேண்டும். பவுடர் வாசனையை தூக்கியடிக்கும் செண்ட் வாடை. சமயத்தில் ஆஃப்டர் ஷேவ் ஸ்ப்ரேகூட அடித்துக் கொண்டு வருவார். முன் வழுக்கையும் சேர்த்துத் தந்த அகலமான நெற்றியில் லேசான பவுடர் தாண்டிய வீபூதியோடு பளிச்சென பேஸ் வைத்து வட்டமாக வைத்த குங்குமம். கழுத்தில் மைனர் செயின். அது தெரியவேண்டுமென்பதற்காக போடாமல் விட்ட பித்தான். வார்த்தைக்கு வார்த்தை ங்கோத்தாவும் சிவசிவாவும் வித்தியாசமின்றி வரும். வெற்றிலை போட்ட சிவந்த உதடுகள். போண்டா மூக்கும் முட்டைக் கண்களும் எப்போதும் தரித்திருக்கும் சிரிப்பும் ஒரு ஜாலியான பேர்வழி என்று காட்டிக் கொடுக்கும்.
எனக்கு சக்லேஸ்பூருக்கும் அவருக்கு பெங்களூர் கண்டோன்மெண்டுக்கும் ஒரே நேரத்தில் ப்ரோமோஷன். ‘த்தா 25 வருஷம் ரயில்வேல குப்ப கொட்டின எனக்கும் ரயில்னா என்னன்னே தெரியாத 5 வருஷம் சர்வீஸ் ஆன உனக்கும் ஒரே நேரத்துல ப்ரமோஷனா? என்ன திருத்தினானுவளோ?’என்று சலித்தாலும் ப்ரொமோஷனில் சற்றும் மகிழ்ச்சியற்றிருந்தது நாங்கள் இருவர்தான் எனச் சொல்லலாம். ரிட்டயர் ஆகிற வயசில என்னைக் கொண்டு போய் வெளியூரில் போட்டாளே என்று அவர் புலம்பலோடு இருந்தால் அது நியாயம். சின்னப்பையன் உனக்கென்னடா கேடு என்று என்னையும் சீண்டுவார்.
இந்த வயசுலயாவது பொண்டாட்டி புடுங்கல் இல்லாம போய்த் தொலையலாம்ல. என்னை மாதிரி பிஞ்சுங்கள வெளிய அனுப்பி கொல்றாளே என்று நான் பதில் கொடுப்பேன். இத்தனைக்கும் வெள்ளிக் கிழமை மதியம் பர்மிஷன் சொல்லிவிட்டு ப்ருந்தாவனில் வந்து வெள்ளி, சனி, ஞாயிறு இருந்து ஞாயிறு இரவு கிளம்பலாம் வாராவாரம். எனக்கோ மாதம் ஒரு முறை வருவதே 2 வேளை இருக்க முடியாத கடுப்பு. ஸ்டேஷன் அருகே ரெஸ்ட் ஹவுசில் படுக்கை. படுக்கையின் கீழ் சூட் கேசில் அந்த வாரத்துக்கான துணிமணி. டூட்டியில் நான் பெங்களூர் வரும் நாட்களில் அதே ரெஸ்ட் ஹவுசில் தங்கலாம். காலை 4 மணிக்கு ஆரம்பிக்கும் புலம்பல். நாலு மணிக்கெல்லாம் மணக்க மணக்க காஃபியோடதான் எழுப்புவா என் பொண்டாட்டி, என்னைப் போய் என்று வாயில் வராத வசவோடு எல்லாரையும் எழுப்பிவிடுவார். வாட்ச்மேனுக்கு 2ரூ கொடுத்து கிடைத்த டேக்ஸா வென்னீரில் குளிக்கும்போதும் வேலை செய்யாத கெய்சரையும், ஜாஃபர் ஷெரீஃப்(ரயில்வே அமைச்சரையும்) அர்ச்சனை செய்வார்.
ஒரு வழியாக ஆறுமணிக்கு வரும் கேன் பால் காஃபியை வாந்தி எடுக்காத குறையாய்க் குடித்து முடித்து பேப்பர் பார்த்து வேகு வேகென்று கிளம்பி இந்தியா காஃபி ஹவுசில் இட்லியோ, காராபாத்தோ அடித்த பிறகே பழைய சீனு திரும்புவார். பெரிய மருமகன் ஏதோ எம்பஸியில் வேலை என்ற கித்தாய்ப்பு. பெரிய மகன் வேற்று இனத்துப் பெண்ணை திருமணம் செய்தான் என்று வீட்டு விலக்கம். சின்னப் பையன் கெட்டிக்காரன் என்ற பாசம். சின்ன மகள் காதலில் சிறு சிக்கல் என்று கவலையும் சந்தோஷமுமாய் ஒரு நேரத்தில் என் வாயில் சனி விளையாடியது.
சக்லேஷ்பூர் அருகே புத்தூர் சுப்ரமணியா கோவிலில் மதிய பூசைக்கு நின்றால் பூசை முடிந்ததும் மனக்குறைக்கு பரிகாரம் என்று சொல்வார்கள் என்று சொல்லிவிட்டேன். மனைவி மகளோடு கிளம்பி வந்து இறங்கிவிட்டார். ராமன் நாயர் கடையில் மொத்தமே 25 அல்லது 30 தோசை வியாபாரம் ஆனால் போதும். அன்று வாடிக்கையாளர்களுக்கு தோசையில்லாமல் சப்பாத்தி போட வேண்டியதாகிவிட்டது. அதுவும் காணாமல் அரைக்கிலோ ரவை உப்புமாவும் திருப்தியாக சாப்பிட்டபின் சுப்பிரமணியா கிளம்பிப் போனார்கள்.
மாலை திரும்புகையில் வழியனுப்ப ஸ்டேஷனில் பார்த்தபோது ஒரு தந்தையாய் கண்கலங்கி, ஆச்சரியம்டா! ப்ரசாதம் குடுக்கும்போதே பொண்ணு கல்யாணம் நினைச்சாமாதிரி நடக்கும்னு சொல்லிட்டான், என்று கை பிடித்துக் கொண்டார். அதே மாதிரி திருமணம் தடைகடந்து நிச்சயமானவுடன் எனக்கு பெரிய பையன் இருந்தும் இல்லை. நீங்கள்ளாம்தான் வரணும் என்று அழைத்தபோதும் ஒரு வித்தியாசமான சீனுவானார்.
திருமணமண்டபத்துக்குப் போனபோது ஒரு தோளில் பூசணியும், மறுகையில் புடலங்காயும் தூக்கிக் கொண்டு தளர்நடையோடு வந்தவரை, மகள் சம்மந்தி வீட்டில் அழைக்கவில்லை என்று கோவப் படுகிறார்கள் என்று எதிர் கொண்டாள். சாமி வந்துவிட்டது. ‘அவன் கெடக்காண்டி மயிரு. எம் பொண்ணுக்குதான் கலியாணமா? அவன் பிள்ளைக்கு இல்லையாமா? நான் அழைக்கலன்னா வரமாட்டானா? போடா மயிறுன்னு வேற யாருக்காவது கட்டிக் கொடுப்பேன்’ என்று எகிற மகள் அழத் தொடங்கினாள். கவுண்டர் பெட்ரோமேக்ஸேதான் வேணுமா என்று கேட்டதுபோல், ‘ஏண்டி அழுது தொலையற? அவனேதான் வேணுமா?’ இஞ்ச காய் வாங்க கூட ஆளில்லாம ஒத்தையா அலையறேன் இவனுக்கு அழைப்பு வேறே என்றவரை தள்ளிக் கொண்டு போய் ஃபோனில் சமாதானம் செய்ய வைத்தோம்.
திருமணம் முடிந்த மாலை ரிசப்ஷனுக்கு முன் மதியம் காஃபி, மிக்ஸருக்கு எங்கள் எல்லாரையும் தள்ளிக் கொண்டு போனார். மாமா சம்பந்தியை கூப்பிடுய்யா. அப்புறம் அதுக்கும் பிரச்சினை என்றேன். நீ போடா மயிரு. தாலி கட்டியாச்சு, இனிமே அவன் தின்னா என்ன தின்னாட்டி என்ன என்று அலறியவருக்கு கண்ணை காண்பித்தேன். முன் வரிசை டேபிளில் சம்மந்தி ‘ஙே’ என்று விழித்தட்படி வாங்கோ என்று வழிந்தார்.
வாராவாரம் பெங்களூர் போய் வருவதென்றால் முடியுமா. ஒரு பாஸை வைத்துக் கொண்டு டி.டி.இ.இடம் சலாம் போட்டு, காலி பர்த்தில் படுத்து மல்டிபிள் ஜர்னியில்தான் காலம் ஓடும். வழக்கமாக ஏர்காடில் போய் ஜோலார்பேட்டையில் ஐலண்ட் எக்ஸ்பிரஸில் போவது வசதி. ஒரு போதாத நாளில் என்னோடு வருகிறேன் என பெங்களூர் மெயிலில் ஏறி, சலாம் போட்டு பெர்த் வாங்கியாகிவிட்டது. டி.டி.இ. கையெழுத்து போடு என்றதும் கோவம் வந்துவிட்டது சாருக்கு. வழக்கம் போல ரிடயர் ஆகிற வயசில் என்று எகிற அவர் ‘நீ போடாட்டி நான் போடுவேன்’ என்று மிரட்டிவிட்டார்.
வந்ததே கோவம் நம்மாளுக்கு. ‘போய்யாங். பெரிய ரிசர்வ் பேங்க் கவர்னரு. கையெழுத்து போடுவாராம்ல. உன் வண்டியே வேணாம் போய்யா’ என்று என்னையும் இழுத்துக் கொண்டு இறங்கி ஏற்காடு எக்ஸ்பிரசுக்கு நடையைக் கட்டினார். ‘ஏன் சார்! கையெழுத்து தானே போட சொன்னான். தேதியா போட சொன்னான்? பெரிய புடுங்கி மாதிரி எகிறிட்டீரு? இப்ப நான் போய் சேர நாளை சாயந்திரமாகிவிடும்’ என்றேன். ‘ஹி ஹி..ஆமாம்ல. கையெழுத்து போட்டு தொலைஞ்சிருக்கலாமே. சரி விடு’ என்று சொல்லி சொல்லி சிரிக்கிறவரை என்ன செய்ய?
ஒரு வழியாக வனவாசம் முடிந்து இருவரும் சற்றேறத் தாழ ஒரே நேரம் ஒரே அலுவலகத்தில் சேர்ந்தோம். மனுசனுக்கு ஹைட்ராஸில் பிரச்சினை. எத்தனை மருத்துவ வசதி இருந்தும் காலை கிளப்பிக் கொண்டு நடக்கத் தயாரே ஒழிய ஆபரேஷன் செய்தால் பிழைக்க மாட்டோமென்று பயம். பந்தாவுக்கு சில்ட் பீர் அடிப்பதும், அடுத்த அரை மணியில் குளிர்க் காய்ச்சலில் ‘அய்யோ நான் போறேன்’ என்ற அனத்தலும் வேடிக்கை + வாடிக்கை.
அலுவலக பரீட்சை முடிந்த சில மாதங்களில் டில்லியில் இருக்கும் மகளைப் பார்க்கப் போகிற சாக்கில், எனக்கு அவனைத் தெரியும் இவனைத் தெரியும் நான் பாஸ் போட வைக்கிறேன் என்று நம்பர் வாங்கிக் கொண்டு போவார். பாஸானவர்களெல்லாம் இவர் சொல்லி பாஸான கணக்கு. ஃபெயிலானவர்கள் ஒன்னுமே செய்ய முடியாத அளவுக்கு மோசமாக எழுதி இருப்பதாக அளப்பு. ‘மாமா நிஜம்மா சொல்லு. உன்ன போர்ட் ஆஃபீஸ்ல உள்ள விடுவானா’ என்றால், ‘ப்ச்ச! பூனைய மடியில கட்டினா மாதிரி நீ வந்து சேர்ந்தியா எனக்கு’ என்று சிரிப்பார்.
சகட்டு மேனிக்கு பர்மிஷன், 12 மணிக்கு வந்து ட்ரெயின் லேட் என்றாலும் அட்டண்டன்ஸ், டார்கட் இருக்கும்போது லீவ் கேட்டாலும் மேக்கப் போட்ட ஸ்டேட்மெண்ட் என்று எல்லாருக்கும் நல்லாராயிருந்து ரிடயரான போது குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதது அந்த மைனர். நாங்களுமே.
-:{}:-
9 comments:
வழக்கம் போலவே அருமை!எங்க கேரக்ட்டர்ல்லாம் எப்ப ச...
by 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
வழக்கம் போலவே அருமை!
எங்க கேரக்ட்டர்ல்லாம் எப்ப சார் வரும்? :))
5:38 AM (18 hours ago)
அப்புறம் சக்லேஷ்பூர் எங்க இருக்கு..?
by karuna4321
5:38 AM (18 hours ago)
சுவாரஸ்யமான மனிதர்கள்...சுவராஸ்யமான நிகழ்வுகள்.....
by karuna4321
சுவாரஸ்யமான மனிதர்கள்...
சுவராஸ்யமான நிகழ்வுகள்....
விவரணைகளில் தெரிக்கும் யதார்த்தம்..
நல்லாருக்குங்கண்ணே....
5:38 AM (18 hours ago)
சீக்கிரமே புத்தக தொகுப்பாக எதிர்பார்க்கிறோம் :)
by சிநேகிதன் அக்பர்
5:38 AM (18 hours ago)
ஒரு கார்ட்டூனிஸ்ட்டோட காரிக்கேச்சருக்கு சற்றும் சள...
by சுந்தர்ஜி
ஒரு கார்ட்டூனிஸ்ட்டோட காரிக்கேச்சருக்கு சற்றும் சளைத்ததல்ல உங்களின் கேரக்டர் ஸ்டடி.
மிக நுண்மையான அகமும் புறமும் தொட்டுச் செல்கிறது உங்கள் எழுத்து.
சபாஷ் பாலாண்ணா.இன்னிக்கு மட்டும் ரெண்டு தடவை படிச்சுட்டேன்.
5:38 AM (18 hours ago)
பல இடங்களில் வெடித்தி சிரிக்க வைக்கிறார் சீனு மாமா...
by இராமசாமி
பல இடங்களில் வெடித்தி சிரிக்க வைக்கிறார் சீனு மாமா.. நன்றி பாலா சார் :)
5:38 AM (18 hours ago)
ரொம்ப சுவாரசியமான மனிதராக இருக்கிறாரே.
by Chitra
5:38 AM (18 hours ago)
நாலு ஆண்டுகளுக்கு ஒரு வேலை...ம்ம்... அந்த நெடுநாள்...
by பழமைபேசி
நாலு ஆண்டுகளுக்கு ஒரு வேலை...ம்ம்... அந்த நெடுநாள் பிணைப்பு எங்களுக்கு லேது!! :-o(
May 12, 2011 (yesterday)
சிலர் அப்படித்தான்.. தடாலடியாய் பேசுவதும் உள்ளுக்...
by ரிஷபன்
சிலர் அப்படித்தான்..
தடாலடியாய் பேசுவதும் உள்ளுக்குள் ஒரு வெண்ணை உருகிக் கொண்டிருப்பதும்..
மனசில் ஒட்டிக் கொள்கிற கேரக்டர்
May 12, 2011 (yesterday)
சீனு மாமாவின் சில் பியர் வீரம், குபீர் சிரிப்பை வர...
by கே.ஆர்.பி.செந்தில்
சீனு மாமாவின் சில் பியர் வீரம், குபீர் சிரிப்பை வரவழைத்தது...
May 12, 2011 (yesterday)
இப்ப அந்த சீனு மாமா எங்கே இருக்காரு?
by Lakshmi
May 12, 2011 (yesterday)
//எல்லாருக்கும் நல்லாராயிருந்து ரிடயரான போது குழந்...
by பெசொவி
//எல்லாருக்கும் நல்லாராயிருந்து ரிடயரான போது குழந்தை மாதிரி தேம்பித் தேம்பி அழுதது அந்த மைனர். நாங்களுமே//
உண்மைதான்.................நல்ல பாஸ் ரிடையர் ஆகும்போது மனசுக்கு கஷ்டம்தான்!
May 12, 2011 (yesterday)
//ராமன் நாயர் கடையில் மொத்தமே 25 அல்லது 30 தோசை வி...
by பெசொவி
//ராமன் நாயர் கடையில் மொத்தமே 25 அல்லது 30 தோசை வியாபாரம் ஆனால் போதும். அன்று வாடிக்கையாளர்களுக்கு தோசையில்லாமல் சப்பாத்தி போட வேண்டியதாகிவிட்டது. அதுவும் காணாமல் அரைக்கிலோ ரவை உப்புமாவும் திருப்தியாக சாப்பிட்டபின்//
ha...ha...ha....!
bala sir rocks!
///// ‘ஹி ஹி..ஆமாம்ல. கையெழுத்து போட்டு தொலைஞ்சிருக்கலாமே. சரி விடு’ என்று சொல்லி சொல்லி சிரிக்கிறவரை என்ன செய்ய?/////
ஆமாம் இல்லையா அல்லது இல்லை ஆமாமா ? குழப்பமாயிருக்கங்க...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் மலர் விழியை கண்டிங்களா ?
அருமை
நீங்கள் சொன்னது சரி...எங்கேயோ சந்தித்த நட்பு நினைவுகள்..சீனு மாமாவுடன் அருகில் இருந்து பழகிய மாதிரி உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள்.
கேரக்டர்களுக்கு மெருகூட்டுவது உங்க வர்ணிப்பு. அருமை சார்.
செம கலகல பார்ட்டி சாரி மைனர்....
சில இடங்கள்ல நெகிழ்ச்சி...
நானும் ஒரு எட்டு சக்லேஷ்பூர் போவணும்...
சீக்கிரம் கேரக்டர் முதல் தொகுதியை வெளியிடுங்கண்ணே!
அனைவருக்கும் நன்றி:)
Post a Comment